நக்சல்பாரி எழுச்சியும் மா.லெ. கட்சியும்
1. சி.பி.ஐ (எம்.எல்) உருவாக்கம்.
சி.பி.எம். கட்சிக்குள் போராடிய புரட்சியாளர்கள் நவீன திரிபுவாதத்திற்கு எதிராகவும், அக்கட்சி வர்க்கப் போராட்டத்திற்கு இழைத்த துரோகத்திற்கு எதிராகவும் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டுவதற்குப் போராடினர். அவ்வாறு போராடிய புரட்சியாளர்கள் பலகுழுக்களாக இருந்து போராடினார்கள். சாருமஜூம்தார் தலைமையிலான குழு, எம்.சி.சி குழு, நாகிரெட்டி குழு போன்ற பல குழுக்களாக இருந்து போராடினர். கனுசன்யால் சி.பி.ஐ (எம்.எல்) - கட்சிக்குள்ளேயே இருந்து மாறுபட்ட நிலை எடுத்தார்.
புரட்சிகரப் போராட்டத்தைத் தொடரும் விதமாக 1967-ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு புரட்சியாளர்கள் அறைகூவல் விட்டனர். ஆனால் சி.பி.ஐ (எம்)-கட்சி, காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பது என்ற பெயரில் ஓடுகாலியான சி.பி.ஐ. கட்சி மற்றும் பிற பிற்போக்கு முதலாளித்துவக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்தது. தேர்தலுக்குப் பின்பு மே.வங்கத்திலும், கேராளாவிலும் சி.பி.ஐ (எம்) தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன் மூலம் அக்கட்சி பாராளுமன்றப் பாதை, வர்க்க சமரசப் பாதை என்று தனது பாதையை மாற்றிக்கொண்டது. மே.வங்கத்திலும் கேரளாவிலும் அமைந்த சி.பி.ஐ.(எம்) தலைமையிலான அரசாங்கங்கள் இவர்கள் தலைமையிலான அகில இந்திய”கிசான் சபா” என்ற விவசாய சங்கத்தின் கோரிக்கையான நிலச்சீர்திருத்தக் கொள்கைகளைக் கூட நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டன. சி.பி.ஐ (எம்) ஆட்சியாளர்கள் உழுபவனுக்கே நிலம் சொந்தம் போன்ற நிலச்சீர்திருத்தக் கோரிக்கைகளை கைவிடுமாறு நிர்ப்பந்தித்தனர்.
7-வது காங்கிரசிற்கு பிறகு சி.பி.ஐ.(எம்) கட்சிக்குள்ளேயே இருந்த பொதுவுடமைப் புரட்சியாளர்கள் சி.பி.எம்.இன் துரோகத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினர். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் மற்றும் பிற மிகவும் முக்கியமான பிரச்சினைகளை (நிலத்தைக் கைப்பற்றுதல், அறுவடையைக் கைப்பற்றுதல் போன்றவை) அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் போராட்டத்தை விவசாயப் புரட்சியை நோக்கிக் கொண்டுச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். நில உச்சவரம்புச் சட்டப்படி உபரி நிலங்களைப் பறிமுதல்செய்வது மற்றும் விநியோகம் செய்வது, நிலம் உழுபவனுக்கே சொந்தம் என்ற அணுகுமுறையோடு நிலச்சீர்திருத்தத்தை புரட்சிகரமாக்குவது என்ற கோரிக்கையை முன்வைத்தும் சி.பி.ஐ.எம். கட்சிக்குள் இருந்த பொதுவுடமைப் புரட்சியாளர்கள் 1967- மே மாதத்தில் வடக்கு வங்காளத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நக்சல்பாரி எழுச்சியை நடத்தினர். அவ்வெழுச்சியானது சி.பி.ஐ.எம். அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டது.
சி.பி.ஐ.(எம்)-ன் நவீன திரிபுவாதத்தை எதிர்த்தும், மா.லெ. சிந்தனையின் அடிப்படையில் கட்சியைக் கட்டுவதற்கும் சி.பி.ஐ.(எம்)-குள் இருந்த புரட்சியாளர்கள் முதலில் விவசாயிகளின் புரட்சிகர அமைப்பை உருவாக்கினர். பிறகு விரைவிலேயே புரட்சியாளர்களை உள்ளடக்கிய அகில இந்திய ஒருங்கிணைப்புக் கமிட்டி விவசாயப் புரட்சியைத் தொடர்ந்தது.
சி.பி.ஐ.(எம்) தலைமையிலான கூட்டணி ஆட்சியின் துரோகத்தை எதிர்த்து அகில இந்திய புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு விவசாயப் புரட்சியை நிறைவேற்ற அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான, ஆயுதப் போராட்டத்தை நடத்த அழைப்புவிடுத்தது. நாடு முழுக்க நக்சல்பாரி போராட்டங்களை ஏற்படுத்துவதற்கான அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவலைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் சீறீகாகுளம், மே. வங்கத்தில் தேப்ரா-சோபிபல்லப்பூர், பீகாரில் முசாகிரி, உ.பி.யில் தராய் பிராந்தியம், தமிழகத்தில் தருமபுரி, வட ஆற்காடு-தஞ்சை-தென் ஆற்காடு என விவசாயிகளின் பேரெழுச்சிகள் வளர்ந்தன. நாடு முழுவதும் விவசாயப் புரட்சிக்கான அந்த ஆயுதப் போராட்டம்தான் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று அழைக்கப்பட்ட நக்சல்பாரிப் பேரெழுச்சியாகும். இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் இந்தப் புரட்சி எழுச்சியில் இணைந்தனர்.
ஆனால் வெகுஜனவழி மற்றும் மக்களின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு எதிரான தனிநபர் அழித்தொழிப்பு வழியை ஏற்றுக்கொண்டதினாலும், அனைத்து வர்க்க அல்லது வெகுஜன அமைப்புகளைப் புறக்கணித்ததாலும், கெரில்லாப் போராட்டமே ஒரே போராட்ட வடிவமாக ஏற்றுக் கொண்டதினாலும் ஏற்பட்ட இடது குறுங்குழுவாத வழி காரணமாக கட்சி உருவாக்கத்தால் ஏற்பட்ட உற்சாகமானது மிகவேகமாக மங்கித் தேய ஆரம்பித்தது. இதன் விளைவாகவும் 1971-72-ல் நிகழ்ந்த அரசு இயந்திரம் மற்றும் தரகு சக்திகளின் தீவிரத் தாக்குதலின் காரணமாகவும் புரட்சிகர இயக்கமானது கடுமையான பின்னடைவுக்கு உள்ளானது. சி.பி.ஐ (எம்.எல்) ஆனது பலதரப்பட்ட குழுக்களாகச் சிதறுண்டு போனது.
நக்சல்பாரிப் பேரெழுச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இடது தீவிரவாதம் இருந்தது எனினும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது மாநாட்டிற்குப் பிறகு லின்பியோவின் இடது தீவிரவாத வழியின் தொடர்ச்சியாகவே இங்கும் அழித்தொழிப்பு ஒன்றே ஒரே போராட்ட வழியாக செயல்படுத்தப்பட்டது. லின்பியோவின் “மக்கள் யுத்தத்தின் வெற்றி நீடூழி வாழ்க”என்ற அறிக்கையிலும், 1969-ஆம் ஆண்டு மாநாட்டிற்கான அவரது அறிக்கையில் உருவகப்படுத்திக் காட்டியிருந்த “புதிய சகாப்தத்தின் தோற்றம்”, “ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சி”, “உலகு தழுவிய சோசலிசத்தின் வெற்றி (!)”, “மாசேதுங் சிந்தனையே இன்றைய சகாப்தத்தின் மார்க்சியம்-லெனினியம்” ஆகிய வரையறுப்புகள்தான் துணிச்சல் வாதத்திற்கும், சாகசவாதத்திற்கும், அழித்தொழிப்பு ஒன்றே போராட்டவடிவமாக முன்வைப்பதற்கும் வழிவகுத்தது. இத்தகைய இடது தீவிரவாதப் போக்கின் காரணமாக கட்சி பல்வேறு முரண்பாடுகளுக்கும், பிளவுகளுக்கும் உள்ளானது. இத்தகைய சூழலில்தான் கட்சிக்குள் இரண்டு வழிக்கான போராட்டம் துவங்குகியது.
2. இரண்டு பாதை
கனுசன்யால் தந்துள்ள விபரங்களிலிருந்து நக்சல்பாரிப் போராட்டத்தைப் பற்றி ஆரம்பத்திலிருந்தே இரண்டு விதமான புரிதல்கள் இருந்தன என்று தெரிகிறது. ஒன்று சாருமஜூம்தாரின் வழி, மற்றொன்று கனுசன்யாலால் முன்வைக்கப்பட்ட வழி. ஆனால் இவ்வாறு இரண்டுவிதமான வழிகள் இருந்தது பற்றி அகில இந்திய புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு தோழர்களுக்குத் தெரியாது என்று கனுசன்யால் கூறுகிறார்.
சாரு மஜூம்தாரின் வழி
சாரு மஜூம்தார் 1965-67 ஆகிய ஆண்டுகளில் எட்டு ஆவணங்களின் மூலம் மா.லெ. கட்சியைக் கட்டுவதற்கான நிலைப்பாடுகளை முன்வைத்தார். அந்த எட்டு ஆவணங்களின் சாரம் என்ன?
சாரு மஜூம்தார் தனது எட்டு ஆவணங்களில் நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
- தான் எழுதிய ஆவணங்களில் நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போரை அறிவித்த அவர் மார்க்சிய-லெனினியத்தின் வளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாசேதுங் சிந்தனையை ஏற்றுக்கொண்டார்;
- திரிபுவாத சோவியத் ஒன்றியத்தை ஏகாதிபத்தியத்தின் கூட்டாளி என்று வர்ணித்த அவர், புரட்சிகர வன்முறை மூலமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப்போராட்டம் மூலமாகவும் மட்டுமே சுரண்டல் ஒடுக்குமுறை நிறைந்த நிலவுகின்ற அமைப்பைத் தூக்கியெறிய முடியும் என்பதை வலியுறுத்தினார்.
- இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்காகக் கட்சியை புரட்சிகரக் கட்சியாக மறுகட்டமைப்புச் செய்யவேண்டும் என்று கூறினார்.
- கட்சியை இரகசியக் கட்சியாகக் கட்டியமைக்க முயற்சிகளை மேற்கொண்டார்.
- விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் போன்ற வெகுதிரள் அமைப்புகளின் செயல்பாடுகளிலும் நடைமுறையிலும் உள்ள பொருளாதாரவாதம் தோற்கடிக்கப் படவேண்டும் என்றார்.
- அமைதியான பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக விவசாயிகளின் எந்த ஒரு அடிப்படைப் பிரச்சினையையும் தீர்க்கமுடியாது என்றார்.
- விவசாயப் புரட்சியில் ஏழை, நிலமற்ற விவசாயிகளின் தலைமைக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கும், தொழிலாளி-விவசாயி கூட்டின் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ் புரட்சிகர வர்க்கங்களைக் கொண்ட ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்குமான தேவைக்கு அவர் அழுத்தம் கொடுத்தார்.
- இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் உரிமையான பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அவர் ஆதரித்தார்.
அவருடைய எட்டுக் கட்டுரைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தைக் குறித்தன எனினும் அவை பல்வேறு தவறான கருத்துக்களிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. இடது தீவிரவாத வழியைச் செயல்படுத்தியது; கட்சி, மக்கள்படை, ஐக்கிய முன்னணி என்ற மூன்று மந்திரகோல் குறித்த தவறான வழிமுறைகளை முன்வைத்தது; சீனத் தலைவரே நமது தலைவர் என்ற முழக்கம்; சில தளப்பிரதேசங்கள் உருவாக்கிய பின்பே ஐக்கிய முன்னணி என்ற நிலைப்பாடு; எதிரியின் இரத்தத்தில் கை தோய்த்தவர்களே கட்சி உறுப்பினர் என்ற கோட்பாடு; விவசாயத் திட்டம் இல்லாததுடன், விவசாயப் புரட்சிக்கான அழுத்தத்தை தராமல் அழித்தொழிப்பு வழியை மாற்றாக முன்வைத்தது; வெகுஜன அமைப்புகளையும், போராட்டங்களையும் புறக்கணித்தது; தலைமைக்கான வாரிசுரிமை கோரியது போன்ற பல்வேறு தவறான வழிமுறைகளை முன்வைத்தார்.
நக்சல்பாரி எழுச்சிக்கு முன்பும், அதன் பிறகு சிலகாலம் வரையிலும் சாருமஜூம்தார் முன்வைத்த அழித்தொழிப்பு செயல் தந்திரங்களைப் பொறுத்தமட்டில் அவை கற்பனைகளாக மட்டுமே இருந்தன. சில வர்க்க எதிரிகள் அழித்தொழிக்கப்பட்டு மற்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டால் ஒரு பகுதியோ அல்லது ஒரு கிராமமோ விடுதலைப் பிரதேசமாக மாறிவிடும் என்று எண்ணுவது எதார்த்தத்திற்கு பொருத்தமானது அல்ல. அவ்வாறு நடந்தால் அரசின் ஆயுதப்படைகள் புரட்சிகர விவசாயிகளை நசுக்குவதற்காக அந்தப் பகுதிக்கு துரிதமாக அனுப்பி வைக்கப்படும். எதிரியின் அரசுக்குச் சொந்தமான ஆயுதப்படைகளுக்கு தீர்மானகரமான தோல்விகளை ஏற்படுத்தும்போது மட்டுமே ஒரு பகுதி விடுதலைப் பிரதேசமாக மாறமுடியும். சாரு மஜூம்தார் கற்பனை செய்ததுபோல விடுவிக்கப்பட்ட தளப்பகுதி கட்டப்படுவது சாத்தியமான ஒன்றோ அல்லது எளிதான ஒன்றோ அல்ல.
சாருமஜூம்தாரால் முன்வைக்கப்பட்ட அழித்தொழிப்பு வழி என்ற இடது தீவிரவாத வழி கட்சிக்கு பெரும் தோல்வியைக் கொண்டுவந்தது. இத்தகைய இடது தீவிரவாத வழி அமைப்புக்குள் தீர்க்கமுடியாத முரண்பாடுகளையும் பிளவுகளையும் கொண்டுவந்தது. சருமஜும்தாரின் இத்தகைய இடது தீவிரவாத வழி எதிர்த்துப் போராட வேண்டிய ஒன்றேயாகும்.
இத்தகைய தனிநபர் பயங்கரவாத வழி குறித்தும் அதை எதிர்த்துப் போராடவேண்டிய அவசியம் பற்றியும் “பொருளாதார பயங்கரவாதமும் - தொழிலாளர் இயக்கமும்” என்ற கட்டுரையில் தோழர் ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார்.
“தொழிலாளர்கள், தங்களின் முதலாளிகளுடன் மோதலில் ஈடுபட்டிருந்த வேளையில் -இயந்திரங்களை உடைத்து நொறுக்கியதும், தொழிற்சாலைகளுக்குத் தீயிட்டுக் கொளுத்தியதுமான காலம் ஒன்றிருந்தது. இயந்திரங்கள்தான் வறுமைக்கான காரணம்! தொழிற்சாலைகள்தான் ஒடுக்குமுறையின் தலைமைப் பீடம்! ஆகவே உடைத்து நொறுக்கு, அவற்றை எரித்துச் சாம்பலாக்கு!” தொழிலாளர்கள் அக்காலக்கட்டத்தில் சொன்னது இது. அந்தக் காலக்கட்டம் அமைப்பு ரீதியற்ற அராஜகவாத கலகக்கார மோதல்களின் கட்டம்.
இத்தகைய தீயிட்டுக் கொளுத்துவதிலும், உடைத்து நொறுக்குவதிலும் நம்பிகையிழந்து, பிரம்மைகள் தகர்ந்து போன நிலையிலிருந்து தொழிலாளர்கள் “மேலதிக வன்முறை வடிவங்களை” சுவீகரித்துக்கொண்டதான வேறு சம்பவங்களையும் நாம் அறிவோம். இயக்குநர்கள், மேலாளர்கள், மேஸ்திரிகள் போன்றவர்களை கொல்லுவதும் பிறவும். எல்லா இயந்திரங்களையும் எல்லா தொழிற்சாலைகளையும் நாசப்படுத்துவது என்பது இயலாத காரியம். அதோடு கூட அவ்வாறு செய்வது தொழிலாளர்களின் நலனுக்கு உகந்ததல்ல. ஆனால் மேலாளர்களை அச்சத்தில் ஆழ்த்துவது என்பது எப்போதுமே முடியக்கூடியது. தீவிரவாதத்தின் மூலம் அவர்களின் பலத்தை அடித்து நொறுக்குவதும் இயலக் கூடியதே. ஆகவே, அவர்களை அடித்து உதை, அவர்களைக் கடுமையாக அச்சுறுத்து.” தொழிலாளர்கள் இந்தக் காலக்கட்டத்தில் சொன்னது இது.பொருளாதாரப் போராட்டத்திலிருந்து வேர்பிடித்து, வளர்ந்த தனிநபர் தீவிரவாத மோதல்களின் காலம் இது. தொழிலாளர் இயக்கமானது மேற்கண்ட இவ்விரண்டு போராட்ட வடிவங்களையுமே கூர்மையாக விமர்சித்ததுடன் அவற்றை கடந்தகால நிகழ்வாக ஆக்கிவிட்டது.
இது புரிந்துகொள்ளப்படக் கூடியதே. தொழிற்சாலைகள்தான் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கான தலைமைப் பீடம்; இந்தச் சுரண்டல் நீடிப்பதற்கு இயந்திரங்களே இன்னும் முதலாளிகளுக்கு உதவுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் இயந்திரமும், தொழிற்சாலையும்தான் தம்மளவிலேயே வறுமைக்கான அடிப்படைக் காரணிகள் என்று இதற்கு பொருள் இல்லை. அதற்கு நேர்மாறாக தொழிற்சாலைகளும், இயந்திரங்களுமே துல்லியமான முறையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியக் கூடியனவாக பாட்டாளியை ஆக்கக் கூடியவை. வறுமையைத் துடைத்தெறியவும், எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு அழித்தெறியவும் இயலச் செய்பவை. தனிநபர்களாயிருக்கும் முதலாளிகளிடமிருந்து வருகிற தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் மக்களுடைய உடைமைகளாக பொதுச் சொத்துக்களாக மாற்றியமைப்பதுதான் இப்போதுதேவைப்படுவதெல்லாம்!
இதற்கு மாறாக இயந்திரங்களையும் - தொழிற்சாலைகளையும் இரயில்வேக்களையும் நாசப்படுத்தவும் - எரிக்கவும் நாம் தயாராகி செயல்படத் தொடங்கினால், நமது வாழ்க்கை என்னவாகும்? துயரம் தரும் வறண்ட பாலைவனத்தில் வாழ்வது போலாகிவிடும் என்பதுடன், தொழிலாளர்கள்தான் தங்களது வாழ்வாதாரங்களை முதலில் இழக்கப் போகிறவர் -களாகவும் இருப்பார்கள்.
தெள்ளத் தெளிவாக இயந்திரங்களையும், தொழிற்சாலைகளையும் நாம் ஒரு போதும் நாசப்படுத்தக் கூடாது; ஆனால் வாய்ப்பு வரும்போது அவற்றை நாம் நமது உடைமைகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே வறுமையை ஒழிக்க தீவிரமாக போராடுபவர்கள் நாம் எனும் பட்சத்தில் அவ்விதம் செய்தே தீரவேண்டும். இந்தக் காரணத்தினால்தான், அராஜகவாத-கலகக்கார மோதல்களை தொழிலாளர்களின் இயக்கம் நிராகரிக்கிறது.
முதலாளிகளை அச்சுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் வரையில், பொருளாதார பயங்கரவாதத்திற்கும் கூட ஒரு “நியாயப்படுத்தல்” இருக்கவே செய்கிறது. ஆனால், இது மிகக் குறுகிய காலத்திற்கே நிலைத்து நிற்கும். இதன் ஆயுட்காலம் மிகக்குறைவு என்னும் பட்சத்தில், இத்தகைய அச்சுறுத்தலின் பயன்தான் என்ன? பொருளாதார பயங்கரவாதத்தை எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கையிலெடுக்க முடியாது என்ற ஒரே ஒரு உண்மையிலிருந்து மட்டுமே, இந்த அச்சுறுத்தலின் ஆயுட்காலம் மிகக் குறைவு என்பது தெளிவாகும். இது முதலாவது அம்சம்.
இரண்டாவது அம்சம், நாம் நமக்குப் பின்னால் ஒரு வலிமை மிக்க பெருந்திரள் தொழிலாளர்கள் அமைப்பினைக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பெருந்திரள் அமைப்பு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு எல்லாக் காலங்களிலும் தயாராக இருக்கக்கூடிய ஒன்று. அத்துடன், நாம் ஏற்கெனவே வென்றெடுத்துள்ள சலுகைகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் கூடியது அது. இத்தகைய ஒரு அமைப்பினை நமக்குப்பின்னால் அணிதிரட்டி நிறுத்தாதபோது - முதாளிகளுக்கு ஏற்படக்கூடிய மிக குறுகிய கால அச்சத்தினாலும், அந்த அச்சத்தின் காரணமாக அந்த வர்க்கத்திடமிருந்து விடுவிக்கப்படக்கூடிய ஒரு சில சலுகைகளாலும் என்ன பயன். அதற்கு மாறாக, பொருளாதார பயங்கரவாதம், மேற்கண்ட தன்மையிலான ஓர் அமைப்பு வேண்டுமென்கிற தொழிலாளர்களின் விருப்பத்தையே கொன்றுவிடுகிறது. ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்கிற உள்ளார்ந்த தாக்கத்தையே உறிஞ்சிக் காலிசெய்து விடுகிறது. ஏனெனில் அவர்களுக்காக செயல்பட பயங்கரவாத “கதாநாயகர்களை” அவர்கள் பெற்றிருக்கிறார்கள். தொழிலாளர்கள் நடுவே சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பண்பை நாம் வளர்க்க வேண்டுமா? தொழிலாளர்கள் நடுவே ஒன்றுபட்டு நிற்பதற்கான ஒற்றுமை வேட்கையை வளர்க்க வேண்டுமா? நாம் இரண்டையும் நிச்சயமாக செய்தே தீரவேண்டும். ஆனால், தொழிலாளர்கள் மத்தியில் இந்த இரண்டு வேட்கைகளையுமே கொன்றுவிடக் கூடிய பொருளாதார பயங்கரவாதத்தை நாம் மேற்கொள்ளலாமா?
இல்லை, தோழர்களே தனிநபர் ரீதியிலான இரகசியத் தன்மைவாய்ந்த வன்முறை நடவடிக்கைகளின் மூலம் முதலாளிகளை பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவது நமது கொள்கைகளுக்கே விரோதமானது. இத்தகைய “காரியங்களை” மோசமான பயங்கரவாத சக்திகளுக்கென்று ஒதுக்கிவிடுவோம்” என்று ஸ்டாலின் இடது தீவிரவாதப் போக்குகளை விமர்சனம் செய்தார்.
ஸ்டாலின் சுட்டிக்காட்டியது போல தோழர் சாருமஜும்தார் முன்வைத்த நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பது என்ற தனிநபர் பயங்கரவாதச் செயல் என்பது வர்க்கப் போராட்ட உணர்வை வெளிப்படுத்தவில்லை. வர்க்கக் குரோத உணர்வையே வெளிப்படுத்தியது. அது மக்களுக்காகப் போராடக் கூடிய ஒரு சில கதாநாயகர்களை உருவாக்கியது. ஆனால் எந்நேரமும் மக்கள் உரிமைகளுக்காகப் போராடக் கூடிய, மக்கள் உரிமகளைப் பாதுகாக்கக் கூடிய வெகுஜன அமைப்புகளைக் கட்டியமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியது. அத்தகைய இடது தீவிரவாதப் பாதை என்பது இயக்கத்திற்கு மிகப் பெரும் பாதிப்புகளைக் கொண்டுவந்தது. எனவே சாருமஜூம்தாரின் இடது தீவிரவாதப் பாதை எதிர்த்துப் போராட வேண்டிய ஒன்றேயாகும். ஆனால் சாருமஜூம்தாரின் இடது தீவிரவாத வழியை எதிர்துப் போராடுவது என்ற பேரில், அவர் முன்வைத்த எட்டு ஆவணங்களில் உள்ள சாதகமான அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு செல்வது என்பது பல்வேறு திரிபுகளுக்கே வழிவகுக்கும்.
கனுசன்யால் வழி
சாருமஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் மட்டுமே நக்சல்பாரியை உருவாக்கியதாக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் நக்சல்பாரி எழுச்சிக்கும் சாருவின் எட்டு ஆவணங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கனுசன்யால் கூறுகிறார். அந்த எட்டு ஆவணங்களின் மூலத்தைப் பற்றியும், அதன் வாழ்க்கை பற்றியும் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழு மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) உடன் தொடர்புடைய 90-சதவீதம் தோழர்களுக்குத் தெரியாது என்றும் கூறுகிறார். ‘நக்சல்பாரி இன்னமும் கூடுதலாக’ என்ற கட்டுரையில் நக்சல்பாரிப் பேரெழுச்சி பற்றிய தனது நிலைப்பாட்டை கனுசன்யால் முன்வைத்துள்ளார்.
நக்சல்பாரி பேரெழுச்சி 1967-ல் திடீரென்று ஏற்பட்டது அல்ல அது தன்னியல்பான இயக்கமும் அல்ல என்று கனுசன்யால் கூறுகிறார். 1951-ல் தொடங்கி 1967-ஆம் ஆண்டுவரையிலான நக்சல்பாரி வரலாறு என்பது நீண்டகால வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று கூறுகிறார். அதை 5 கட்டமாக விளக்குகிறார்.
அதன் சாரம் வருமாறு:
விவசாயிகளும், தொழிலாளர்களும் தங்களுக்கான வர்க்க அமைப்புகளைத் தனித்தனியாக அமைத்துக்கொள்ளுதல்; விவசாயிகள், தொழிலாளர்கள் அமைப்புகள் ஒன்றுபட்டு கூட்டாக வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுவது, அவர்களுக்கிடையில் நெருக்கமான கூட்டணி அமைத்துக்கொள்ளுதல்; விவசாயிகளும், தோட்டத் தொழிலாளர்களும் தேயிலை முதலாளிகளுக்கு எதிராக நடத்தும் போனசுக்கான போராட்டமே அரசியல் போராட்டமாக மாறுகிறது; நிலத்திற்கும் அறுவடையை கைப்பற்றுவதற்கும், போனசுக்குமான போராட்டங்களையே ஆயுதப் போராட்டமாக வளர்த்தெடுப்பது; பொருளாதாரப் போராட்டங்கள் ஒருகட்டம் அது வளர்ந்து ஆயுதப் போராட்டக்கட்டத்திற்கு மாறும் என்பது; விவசாயப்புரட்சி அரசியலை பிரச்சாரம் செய்வது அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்றது புரட்சி எழுச்சிக்கு பயன்பட்டது என்ற நிலைப்பாடுகளையே வர்க்கப் போராட்டம் என்றும், அதுவே நக்சல்பாரி எழுச்சி என்றும் கனுசன்யால் கூறுகிறார்.
தொகுத்துக் கூறினால், சாரு மஜூம்தாரின் இடது தீவிரவாதத்தை எதிர்ப்பது என்று கூறி கனுசன்யால் முன்வைக்கும் வர்க்கப் போராட்டப் பாதையைப் பின்வருமாறு கூறலாம்.
விவசாயிகளும், தொழிலாளர்களும், தனித்தனியாக வர்க்க அமைப்பைக் கட்டிக்கொள்வது; நிலத்திற்காகவும், அறுவடையைக் கைப்பற்றுவதற்காகவும், போனசுக்காகவும் இரண்டு அமைப்புகளும் கூட்டாக போராடுவது; போனசுக்கான போராட்டமே அரசியல் போராட்டமாக மாறும் என்பது; நிலத்திற்கான போராட்டத்தையே ஆயுதப் போராட்டமாக மாற்றுவது; அத்தகைய போராட்டங்களின் ஊடாகவே விவாயப்புரட்சி அரசியலை பிரச்சாரம் செய்வது என்பதையே வர்க்கப் போராட்டம் என்றும் நக்சல்பாரி எழுச்சி என்றும் கனுசன்யால் கூறுவது என்பது பொருளாதாரவாதம், தொழிற்சங்கவாதமேயாகும். அத்துடன் பொருளாதாரவாதம் தொழிற்சங்கவாதத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்பது என்ற பாராளுமன்றப் பாதையை கனுசன்யால் முன்வைப்பது என்பது அப்பட்டமான வலது சந்தர்ப்பவாதமேயாகும்.
இவ்வாறு வரையறுப்பதால் அன்றாட மற்றும் பகுதி நலன்களுக்கான போராட்டங்களையும், அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பிரச்சினைகள் மீதான போராட்டங்களையும் நடத்துவதையோ; விவசாயத் திட்டத்தையும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ‘ஆயுதப் போராட்ட அரசியலை’ பிரச்சாரம் செய்யவே கூடாது என்று நாம் கூறவில்லை. மாறாக இவை அவசியமானவையே. ஆனால் இந்த முறையிலேயே இவற்றின் மூலமாகவே பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் உணர்வை ஏற்படுத்தவோ, இப்போராட்டங்களையே அரசியல் அதிகாரத்துக்கான ஆயுதப் போராட்டங்களாக வளர்த்தெடுக்கவோ முடியாது என்று மட்டுமே சொல்கிறோம்.
நக்சல்பாரி எழுச்சிக்கும் சாருமஜும்தாருக்கும் சம்பந்தம் இல்லை என்று சனுசன்யால் பின்வருமாறு கூறுகிறார்.
1966-ல் சிறையிலிருந்து விடுதலையான தோழர்களும் கனுசன்யாலும் சாருமஜூம்தாருடன் எட்டு ஆவணங்கள் பற்றி விவாதித்தனர். அவருடன் நடந்த விவாதங்களின் போது மூலவுத்தி குறித்த பிரச்சினைகளில் (போர்த்தந்திரம்) அவருடன் உடன்படுவதாகவும், ஆனால் செயலுத்தி (செயல்தந்திரம்) தொடர்பான சில பிரச்சினைகளில் மாறுபட்ட நிலையை எடுத்தனர். அதாவது அழித்தொழிப்பு வழியை எதிர்த்து வெகுஜனப் போராட்டங்களுக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்ற நிலை எடுத்தனர். எனினும் இதில் உடன்பாடு ஏற்படாததால் இரண்டு தரப்பினரும் தங்களது வழியின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளில் தனித்தனியாகச் செயல்படுவது என உடன்பாடு கண்டனர்.
சாரு மஜூம்தாரின் பாதை அதாவது அழித்தொழிப்புப் பாதை மிக விரைவிலேயே தோல்வி அடைந்துவிட்டது என்றும், தன்னால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகள்தான் நக்சல்பாரி எழுச்சியை உருவாக்கியது என்றும் உரிமை கொண்டாடுகிறார்.
ஆரமபத்தில் நக்சல்பாரி எழுச்சி பற்றி எழுதிய கட்டுரையில் நக்சல்பாரி எழுச்சி அரசியலதிகாரத்திற்கான ஆயுதப் போராட்ட எழுச்சி என்று எழுதும்போது, தான் ` ஹூனான் உழவர் அறிக்கை`யில் இருந்ததைப் போன்றே அதில் உள்ள எல்லா அம்சங்களும் நக்சல்பாரி பேரெழுச்சியில் இருந்ததாக மிகை மதிப்பீட்டின் அடிப்படையில் தவறாக எழுதிவிட்டதாகவும் அதற்கு சாருமஜூம்தாரின் தலையீடுதான் காரணம் என்றும் பின் நாளில் கனுசன்யால் குறிப்பிடுகிறார். அவரது கருத்துப்படி நக்சல்பாரி எழுச்சி என்பது பொருளாதாரப் போராட்டங்களுக்கான அதாவது நிலத்திற்கான ஆயுதப் போராட்டம்தான். அது அரசியல் அதிகாரத்திற்கான ஆயுதப் போராட்டம் அல்ல என்பதே கனுசன்யாலின் நிலைப்பாடாகும். அதாவது பொருளாதாரப் பொராட்டத்திற்கான ஆயுதப் போராட்டமே கனுசன்யால் முன்வைக்கும் வர்க்கப் போராட்டமாகும்.
கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கப் போராட்டம் பற்றி எத்தகைய கோட்பாடுகளைக் கொண்டுள்ளனர் என லெனின் குறிப்பிடும்போது 1852-ல் இப் பிரச்சினையை மார்க்ஸ் எடுத்துரைத்ததை எடுத்துக்காட்டி தனது அரசும் புரட்சியும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
மார்க்ஸ் இப்பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது கூறுவதாவது:
“என்னைப் பொறுத்தவரை, தற்போதைய சமுதாயத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ, அவற்றிற்கிடையே போராட்டம் நடைபெறுவதையோ, கண்டுபிடித்த பெருமை என்னைச் சாராது. எனக்கு நெடுங்காலம் முன்னதாகவே முதலாளித்துவ வரலாற்றியலாளர்கள் இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சியையும், முதலாளித்துவப் பொருளியலாளர்கள் வர்க்கங்களுடைய பொருளாதார அமைப்பியலையும் விவரித்திருந்தனர். நான் செய்ததில் புதியது என்னவெனில் பின்வருவனவற்றை நிரூபித்ததுதான்:
1) வர்க்கங்கள் இருப்பது, பொருள் உற்பத்தியினது வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் (Historishe Entwicklungsphasen der Production) மட்டுமே இணைந்ததாகும்,
2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்கிறது,
3) இந்தச் சர்வாதிகாரம் எல்லா வர்க்கங்களும் ஒழிக்கப்படுவதற்கும், வர்க்கமல்லாத சமுதாயத்திற்குமான இடைக்கால கட்டமே ஆகும்.”
மார்க்சின் மேற்கண்ட கோட்பாடுகளை எடுத்துக்காட்டிய லெனின் மேலும் அதுபற்றி பின்வருமாறு விளக்குகிறார்:
முதலாவதாக, தமது போதனைக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னேறிய ஆழ்ந்த சிந்தனையாளர்களுடைய போதனை -களுக்குமுள்ள பிரதான அடிப்படை வேறுபாட்டையும், இரண்டாவதாக, அரசு பற்றிய தமது போதனையின் சாரப் பொருளையும் மார்க்ஸ் இச்சொற்களிலே தெட்டத்தெளிவாய் எடுத்துரைத்துவிடுகிறார்.
வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனையிலுள்ள பிரதான கூறாகுமென அடிக்கடி கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இது தவறு. இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப்படுகிறது.
எப்படியென்றால், வர்க்கப் போராட்டத் தத்துவம் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாய் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய தத்துவமே. வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சியவாதி களாகிவிடுவதில்லை. இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலாளித்துவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்டத் தத்துவத்துக்கு அப்பால் செல்லாது இருத்துவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய் குறுக்குவதுமே ஆகும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல் இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பாகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார். மார்க்சியவாதிக்கும் சாதாரண குட்டி (மற்றும் பெரு) முதலாளித்துவவாதிக்கும் இடையிலுள்ள மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்துகொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்துப் பார்க்க உரைகல்லாய் அமைவது இதுவே. எனவே கனுசன்யால் முன்வைக்கும் அரசியலதிகாரத்திற்கல்லாத பொருளாதார வாதம், தொழிற்சங்கவாதப் போராட்டங்களையே ஆயுதப் போராட்டம் என்பதுடன் பாராளுமன்றவாதத்தை இணைத்து அதையே வர்க்கப் போராட்டம் என்று கூறுவது முதலாளித்துவ வரம்புக்குட்பட்ட, முதலாளித்துவ வர்க்கங்களுக்கு ஏற்புடைய வர்க்கப் போராட்டமே ஆகும்.
மேலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்நிலை அபிவிருத்திக்கான போராட்டங்களையும், பகுதி நலன்களுக்கான போராட்டங்களையும் புறக்கணிப்பது போன்ற இடது தீவிரவாதப் போக்குகளை எதிர்த்துப் போராடிய லெனின், இத்தகைய அன்றாட நலன்களுக்கான தன்னியல்பான, கருநிலையான வர்க்கப் போராட்டங்களின் மூலமாகவே அரசியல் அதிகாரத்திற்கான புரட்சிகரப் போராட்டங்களைக் கொண்டுவர முடியும் என்ற வலது சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்துப் போராடினார். பொருளாதாரப் போராட்டங்களையும், வெகுஜனப் போராட்டங்களையும் புறக்கணிப்பதை எதிர்த்துப் பொருளாதாரப் போராட்டங்களின் அவசியம் பற்றியும் தொழிற்சங்கங்களின் அவசியம் பற்றியும் லெனின் ‘வேலை நிறுத்தம்’ பற்றிய தனது கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:
தொழிற்சாலைகளும், உபகரணங்களும் நிலமும் மிகச்சிறு எண்ணிக்கையிலான முதலாளிகளுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும் உடைமையாக இருக்கும் ஒரு சமூக அமைப்பே முதலாளித்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் மிகப்பெருமளவிலான மக்களுக்கு உடைமைகள் ஏதுமில்லை; அல்லது மிகச்சிறு அளவிலான உடைமைகளே உள்ளன. எனவே இம்மக்கள் திரள் தங்கள் உழைப்புச் சக்தியை விற்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, தொழிலாளர் என அழைக்கப்படுகின்றனர். நிலவுடைமையாளர்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் தொழிலாளர்களைக் கூலிக்கு அமர்த்தி பல்வேறு விதமான உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றைச் சந்தையில் விற்கின்றனர். மேலும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினர்களும் உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்சக் கூலியை மட்டுமே தருகின்றனர். இந்தப் பணத்திற்கு மேல் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் எல்லா மதிப்பும் முதலாளிகளின் பைகளுக்குள் இலாபம் என்ற வடிவில் போய்ச் சேருகிறது. எனவே முதலாளித்துவப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பிறரால் ஒப்பந்தத்திற்கு அமர்த்தப்பட்டு மற்றவர்களுக்காக கூலிக்கு உழைப்பவர்களாகவே உள்ளனர்; அவர்கள் தங்களுக்காக உழைப்பவர்கள் அல்ல. எனவே இந்த அமைப்பில் முதலாளிகள் எப்போதும் கூலியை குறைப்பதற்கு முயற்சி செய்பவர்களாகவே இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. அவர்கள் எவ்வளவு குறைவாக கூலி கொடுக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக லாபமடைவார்கள். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினர் பிச்சைக்காரர்கள் போலல்லாமல் மற்ற மக்களைப் போலவே போதுமான முழு உணவு உட்கொள்ளவும், நல்ல வீட்டில் வசிக்கவும், நல்ல ஆடைகளை உடுத்தவும் தேவையான அளவில் இயன்றவரை அதிகக் கூலியை பெறமுயற்சி செய்வர். எனவே முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடைவிடாது போராட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்; முதலாளி தனக்குப் பிடித்தமான யாரையும் கூலிக்கு அமர்த்திக் கொள்ளச் சுதந்திரம் பெற்றவர். எனவே அவர் எப்போதும் குறைந்த கூலிக்கு வேலை செய்பவரையே தெரிவு செய்வார். தொழிலாளிக்கு தன் உழைப்பை விற்க எந்த முதலாளியையும் தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு. எனவே அவர் தன் உழைப்புக்கு யார் அதிகக் கூலி தருவார்களோ அவர்களையே தேடிச் செல்வார். ஒரு தொழிலாளி கிராமப்புறத்தில் வேலை செய்தாலும் அல்லது நகர்ப்புறத்தில் வேலை செய்தாலும் தன் உழைப்பை பண்ணையாருக்கோ அல்லது தொழிற்சாலை முதலாளிக்கோ யாருக்கு விற்றாலும் அவர் எப்போதும் தன் எஜமானனுடன் பேரம் பேசுகிறார். கூலி விஷயத்தில் சண்டையிடுகிறார்.
ஆனால் ஒரு தொழிலாளியால் தனிப்பட்ட முறையில் இந்தப் போராட்டத்தை நடத்த இயலுமா? தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மேலும் மேலும் விவசாயிகள் பஞ்சைகளாக மாறி கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஓடிவருகின்றனர். நிலப்பிரபுக்களும், தொழிற்சாலை அதிபர்களும் புதிய இயந்திரங்களைப் புகுத்தி தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கின்றனர். நகரங்களில் வேலையில்லாப் பட்டாளம் அதிகரித்துவரும் அதேவேளையில் கிராமப்புறங்களில் பஞ்சைகள், பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பசியிலும், பட்டினியிலும் தள்ளப்படுகின்ற மக்கள் தங்கள் கூலியை மேலும் மேலும் குறைத்துக் கொள்ளவும் தயாராகின்றனர். இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் தங்கள் எஜமானர்களை எதிர்த்துத் தனியாகப் போரிடுவது என்பது இயலாத ஒன்று. தொழிலாளர்கள் அதிகக் கூலியை கேட்டாலோ, அல்லது கூலி வெட்டுக்கு சம்மதிக்க மறுத்தாலோ முதலாளி அவர்களை வெளியே போ என்று கையைக் காட்டுகிறான். பசியிலும், பட்டினியிலும் வாடி தொழிற்சாலை வாயிற்புறங்களில் காத்துக்கிடக்கும் எண்ணற்ற மக்கள் கூட்டத்தைக் காட்டி இன்னும் குறைந்த கூலி கொடுத்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஓடி வருவார்கள் என்று கூறுகிறான்.
மக்களின் வாழ்நிலை இந்த அளவுக்கு வறுமைக்கும் பேரழிவுக்கும் ஆளாகி நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வேலையில்லாப் பட்டாளம் நிரந்தரமாய் பெருகி வீதியெங்கும் ஓடிச்சாகும் இந்த நிலையில், பெரும் முதலாளிகள் குறுகிய காலத்தில் கொள்ளை லாபமடிக்கும் இந்த வேளையில், சிறு உடமையாளர்கள் பெரும் கோடீஸ்வரர்களால் நசுக்கப்பட்டு தூக்கி வீசியெறியப்படும் காலத்தில் இந்தக் கொடிய வலிமை கொண்ட முதலாளிக்கு எதிரில் தனியரு தொழிலாளி எந்தவித வலிமையும் அற்று அநாதரவாக நிற்கிறான். இந்த நிலைதான் முதலாளிகள் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களை கூலி அடிமைகளாக மரணப் படுகுழிக்குள் முழுமையாகப் பிடித்துத்தள்ள வழி செய்கிறது.
தங்கள் எஜமானர்களின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்க முடியாமல் உள்ள நிலைமைகளிலும், தங்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைப் போராடிப் பெறமுடியாத நிலைமைகளிலும் உள்ள உழைப்பாளி மக்களின் மீதான ஒடுக்குமுறை அடிமை முறையிலும் பண்ணையடிமை முறையிலும் இருந்ததைக் காட்டிலும் பயங்கரமானதாக உள்ளது.
எனவே தங்கள் வாழ்க்கை மோசமான கடைகோடி நிலைமைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க தொழிலாளர்கள் போராடியே தீரவேண்டியுள்ளது. மூலதனத்தின் ஒடுக்குமுறைகளால் தங்கள் வாழ்க்கை மிதித்து நசுக்கப்படும் போது தனித்தனி நபர்களாக தாங்கள் முற்றிலும் சக்தியற்றவர்களாக பலவீனர்களாக இருப்பதைக் காணும் தொழிலாளர்கள் தங்கள் எஜமானர்களை எதிர்த்துக் கூட்டாகக் கலகம் செய்யத் தொடங்குகின்றனர். இவ்வாறாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. ஆரம்பக் கட்டங்களில் தாங்கள் அடைய முயல்வது எது என்பதைப் பற்றிய புரிதல் தொழிலாளர்கள் மத்தியில் அடிக்கடி காணப்படுவதில்லை. தங்கள் நடவடிக்கைகள் எதை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது உணர்வுப்பூர்வமாக அறியப்பட்டிருப்பதில்லை. அவர்கள் இயந்திரங்களை அடித்து நொறுக்குகிறார்கள் அல்லது தொழிற்சாலையை அழிக்கிறார்கள். அவர்கள் வெறுமனே தொழிற்சாலை உரிமையாளருக்கு தங்கள் கோபத்தை வெளிக்காட்ட விரும்புகிறார்கள். தாங்கமுடியாத வாழ்நிலைமைகளிலிருந்து வெளியேற, தங்கள் கூட்டுப் பலத்தால் முயற்சி செய்து பார்க்கிறார்கள். தங்கள் வாழ்க்கை ஏன் இந்த அளவிற்கு நம்பிக்கையற்றுப் போயிருக்கிறது என்பதைப் பற்றியோ, இதிலிருந்து விடுபட எதை நோக்கி பயணப்படவேண்டும் என்பதைப் பற்றியோ அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு தொழிலாளி முதலாளியின் முன் முழுவதும் சக்தியற்றவராக இருக்கும்போது தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக கூட்டாகப் போராட வேண்டியது அவசியம் என்பது வெளிப்படை. முதலாளிகள் கூலியைக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டியும், அதிகக் கூலிக்காகவும் அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். முதலாளித்துவ உற்பத்திமுறை நிலவுகின்ற ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் என்பது நடைமுறை உண்மையாகும்.
எனவே லெனின் மேலே கூறியுள்ளது போல விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களின் உடனடி நலன்களுக்கான போராட்டங்கள் மிகவும் அவசியமானதும், அதற்கு அமைப்புரீதியில் அணிதிரள்வதும் போராடுவதும் அவசியம் என்பதை கம்யூனிஸ்ட்கள் ஏற்றுச் செயல்படவேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். அதே சமயம் இத்தகைய தன்னியல்பான போராட்டங்கள் மட்டுமே அவர்களுக்கு விடிவைப் பெற்றுத்தராது என்றும் லெனின் கூறுகிறார்.
தன்னளவில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயிகளின் பொருளாதாரப் போராட்டங்கள், முதலாளித்துவ வர்க்கங்களை எதிர்த்த தொழிலாளர் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் கிளர்ச்சிகள் மட்டுமே விடிவைத் தராது என்பதை லெனின் அதே கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:
“..... எனவே வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களிடையே ஒற்றுமையின் அவசியத்தை போதிக்கிறது; முதலாளிகளை எதிர்த்துப் போராடவேண்டுமானல் அது தாங்கள் ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம் என்பதைக் காட்டுகிறது; தொழிற்சாலை உரிமையாளர்களின் மொத்தக் கூட்டத்தை எதிர்த்தும் எதேச்சதிகார குண்டாந்தடி அரசாங்கத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போரிடவேண்டும் என்கிற அறிவை அது தொழிலாளிகளுக்குப் போதிக்கிறது. இந்தக் காரணத்தால்தான் பொதுவுடமையாளர்கள் வேலை நிறுத்தங்களை “போர்க்கலைப் பயிற்சிப்பள்ளி” என்று அழைக்கிறார்கள். உழைத்து உருக்குலையும் மக்கள் கூட்டத்தையும், அனைத்து மக்களையும் அரசாங்க அடக்குமுறை நுகத்தடியிலிருந்தும் மூலதன கொடூர நுகத்தடியிலிருந்தும் விடுதலை பெறச்செய்ய தொழிலாளர்கள் தங்களுடைய எதிரிகளுடன் எவ்வாறு போரிடவேண்டும் என்பதை இந்தப் பள்ளியில்தான் கற்கிறார்கள்.
இந்தப் “போர்க்கலைப் பள்ளியையே” உண்மையான போர் என்று கருதிவிடலாகாது. தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தங்கள் மிகப்பரவலாக விரிவடையும் போது சில தொழிலாளர்கள் - அவர்களில் சில சோசலிஸ்டுகளும் அடங்குவர் - தொழிலாளர் வர்க்கம் தன் நடவடிக்கைகளை வேலைநிறுத்தப் போராட்டம், போராட்ட நிதி, போராட்ட ஆதரவு குழுக்கள் என்பனவற்றுடன் மட்டுமே நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று நம்புகிறார்கள். வேலைநிறுத்தப் போராட்டங்களால் மட்டுமே தொழிலாளி வர்க்கத்தின் வாழ்நிலையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முன்னேற்றங்கள் சாத்தியம், ஏன் வர்க்க விடுதலையே கூட கைகூடலாம் என்றும் நம்புகின்றனர். மிகச்சிறிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டங்களில் கூட வெளிப்படும் தொழிலாளர்களின் ஒற்றுமையின் பலத்தைப் பார்க்கின்ற அவர்கள் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு ஒரு நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தை அறிவித்து அதை ஒழுங்கமைத்தால் மட்டுமே போதும் முதலாளிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் தான் வேண்டுவது அனைத்தையும் பெற்றுவிடமுடியும் என்று நினைக்கின்றனர். தொழிலாளிவர்க்கம் அதன் ஆரம்ப நிலைகளிலும் தொழிலாளர்கள் போதிய அனுபவமற்றவர்களாக உள்ள வேறுபல அயல்நாடுகளிலுள்ள தொழிலாளர்களும் இதே விதமான கருத்தைக் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கருத்தாகும். வேலைநிறுத்தங்கள் உழைக்கும் வர்க்க விடுதலைக்கு ஒரு பாதை. இதுதான் ஒரே பாதை என்பது தவறு. வர்க்க விடுதலைக்கான மற்ற போராட்டப் பாதைகள் மீது போதிய கவனம் செலுத்தாமல் போனால் தொழிலாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் வெற்றியும் பின் தள்ளிப்போகும்.
கனுசன்யால் முன்வைக்கும் வர்க்கப் போராட்டப் பாதை என்பது மேலே லெனின் சுட்டிக்காட்டியபடி ஒரே பாதையாகும்; அது தொழிற்சங்க வகைப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட போராட்டங்களேயாகும். தொழிற் துறையிலும், வேளாண்துறையிலும் நேர் எதிரெதிர் வர்க்கங்கள் மோதிக் கொள்ளும் உடனடிப் பொருளாதார நலன்களுக்கான போராட்டம் எவ்வளவுதான் எழுச்சியாகப் போராடினாலும் அது தன்னியல்பு போராட்டமே. எனவே தன்னியல்பான போராட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் தொழிற்சங்க உணர்வைத்தான் பெறமுடியும். தொழிலாளர்கள் சமூக ஜனநாயக உணர்வைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற நூலில் லெனின் பின்வருமாறு விடையளிக்கிறார்.
விவசாயிகளின் நிலத்திற்கான போராட்டம் மற்றும் அறுவடையைக் கைப்பற்றுவதற்கான போராட்டம்; விவசாயிகள் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கூட்டாக போனஸ் போன்ற பொருளாதாரப் போராட்டங்களையே ஆயுதப் போராட்டமாக நடத்துவதையே, அதாவது தன்னியல்பான இத்தகைய போராட்டங்களே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகரமான போராட்டமாக மாறும் என்ற கனுசன்யால் போன்றவர்களின் கருத்தை லெனின் மறுக்கிறார். அவ்வாறு மறுத்து தன்னியல்பு பற்றியும், தன்னியல்பான போராட்டங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமாக ஒருபோதும் மாறாது என்பதையும்; தொழிலாளர்களுக்கு அரசியல் உணர்வை வெளியிலிருந்துதான் கொண்டுவர இயலும் என்பதையும் லெனின் பின்வருமாறு விளக்குகிறார்.
என்ன செய்யவேண்டும் என்ற நூலில் மக்களின் தன்னியல்பும், சமூக ஜனநாயகவாதிகளின் உணர்வும் என்ற தலைப்பில் லெனின் கூறுவதாவது.
“ருஷ்யாவில் 1870களிலும், 1860களிலும் (பத்தொன்பதாவது நூற்றாண்டின் முதற்பகுதியிலும் கூட) வேலைநிறுத்தங்கள் நடந்தன. அவற்றைத் தொடர்ந்து “தன்னியல்பாக” இயந்திரங்களை உடைப்பது போன்றவையும் நடந்தன. இந்தக் கலவரங்களோடு ஒப்பிட்டால் 1890களின் வேலைநிறுத்தங்கள் கூட “உணர்வுப் பூர்வமானவையாக” வர்ணிக்கப்படக் கூடும். அந்தளவுக்கு அவை அக்காலத்தில் சாதித்த முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
1890களின் வேலைநிறுத்தங்கள் எவ்வளவோ பெரிதான உணர்வின் மின்வெட்டுகளை வெளிப்படுத்தின. திட்டவட்டமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சரியான நேரம் பார்த்து வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. வேறு பகுதிகளிலிருந்து அறியப்பெற்ற வழக்குகளும், எடுத்துக்காட்டுகளும் விவாதிக்கப்பட்டன என்றவாறு.
கலவரங்கள் வெறுமே ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பாக இருந்தன. ஆனால் முறைமையுள்ள வேலை நிறுத்தங்கள் கரு வடிவத்தில் மட்டுமே உள்ள வர்க்கப்போராட்டத்தைக் காட்டின. தம்மளவில் இவ்வேலைநிறுத்தங்கள் வெறுமே தொழிற்சங்கப் போராட்டங்களே. இன்னமும் சமூக ஜனநாயகப் போராட்டங்களாக இல்லை. அவை தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் மூண்டுவரும் பகைமைகளைக் குறித்தன. ஆனால் தற்கால அரசியல் சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தமது நலன்களுக்கும் இடையே சமரசப்படுத்த முடியாத பகைமை இருப்பதை தொழிலாளிகள் உணர்ந்திருக்கவில்லை. உணரமுடியவில்லை - அதாவது அவர்களின் உணர்வு இன்னமும் சமூக ஜனநாயகவாத உணர்வாக இல்லை.
இந்த அர்த்தத்திலே 1860களின் கலவரங்களோடு ஒப்பிடும்போது மாபெரும் முன்னெற்றத்தைக் குறித்தபோதும் அவை வெறுமே ஒரு தன்னியல்பான இயக்கமாகவே இருந்துவிட்டன.
தொழிலாளர்களிடையே சமூக ஜனநாயகவாத உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளிவர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாக தொழிற்சங்க உணர்வைமட்டுமே அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது முதலியனவற்றின் அவசியத்தைப் பற்றிய துணிபை மட்டுமே வளர்த்துக்கொள்ள முடிந்தது என்று எல்லா நாடுகளின் வரலாறும் புலப்படுத்துகிறது. அரசியல் உணர்வை தன்னியல்பு முற்றாக ஆட்கொண்டுவிட்டது - சமூக ஜனநாயகவாதிகள் தன்னியல்பு.
ஒரு ரூபிளுக்கு கூடுதலாக ஒரு கோபக் கிடைப்பது எந்த சோஷலிசத்தையோ, அரசியலையோவிட மேல். தொழிலாளர்கள் “தாம் போராடுவது ஏதோ ஒரு தலைமுறைக்காக அல்ல. தமக்காகவும், தமது குழந்தைகளுக்காகவும் போராடுகிறோம் என்று உணர்ந்து போராடவேண்டும்!” என்கிற வாதங்களில் இழுத்துச் செல்லப்பட்ட தன்னியல்பு.
பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தன்னியல்பின் பால் உள்ள எல்லா வழிபாடும், உணர்வுபூர்வமான அம்சத்தின் “பாத்திரத்தை சிறுமைப்படுத்துவது அனைத்தும், சமூக ஜனநாயகவாதத்தின் பாத்திரத்தைச் சிறுமைபடுத்துவதும் - அப்படிச் செய்கிறவன் விரும்புகிறானோ இல்லையோ - தொழிலாளர்கள் மீது முதலாளிவர்க்க சித்தாந்தத்தின் செல்வாக்கைப் பலப்படுத்துவதாகவே பொருள்.
தொழிலாளர்களின் சுதந்திரமான, எளிமையான தொழிலாளர் இயக்கம் தாமாகவே தமக்குரிய ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் என்று நினைக்கின்றனர். ஆனால் இது ஒரு ஆழ்ந்த தவறு. முதலாளித்துவ வளர்ச்சி, பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையை உயர்த்த உயர்த்த, பாட்டாளிவர்க்கம் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட மென்மேலும் தகுதி பெறுகிறது. “சோஷலிசத்தின் சாத்தியப்பாட்டையும், அவசியத்தையும்” பாட்டாளிவர்க்கம் உணர்ந்துகொள்கிறது. இது சம்பந்தமாக, சோஷலிஸ்டு உணர்வு பாட்டாளிவர்க்கப் போராட்டத்தின் அவசியமான நேரடியான விளைவு என்று தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்.
தத்துவம் என்ற வகையில் சோஷலிசம் - பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் போலவே - தற்காலப் பொருளாதார உறவு முறைகளில் வேர்கொண்டிருப்பதும், அந்த வர்க்கப் போராட்டத்தைப் போலவே அதுவும் முதலாளித்துவம் படைத்த வறுமையையும் மக்களின் துன்ப துயரங்களையும் எதிர்க்கும் போராட்டத்திலிருந்து வெளித்தோன்றுகிறதும் உண்மைதான். ஆனால், சோஷலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம்பக்கமாக உதிக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் உதிக்கின்றன. நவீன சோஷலிஸ்ட் உணர்வு, ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில் மட்டுமே உதிக்கமுடியும். உண்மையாகச் சொன்னால் (எடுத்துக்காட்டாக சொல்கிறோம்) தற்காலப் பொருளாதார விஞ்ஞானம் சோஷலிஸ்டு உற்பத்திக்கு நிபந்தனையாகும். எவ்வளவு விருப்பம் இருந்தபோதிலும் சரி, தொழிலாளி வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்கால சமுதாய நிகழ்வு போக்கிலிருந்தே உதிக்கின்றன.
விஞ்ஞானத்தை எடுத்துச்செல்லும் ஊர்தி பாட்டாளிவர்க்கமல்ல. முதலாளித்துவ வர்க்கப் போக்குள்ள படிப்பாளிப் பகுதியே (காவுத்ஸ்கி கொட்டை எழுத்தில் போட்டது). இந்தப் பகுதி தனித்தனி உறுப்பினர்களின் சிந்தையிலேதான் நவீன கால சோசலிசம் தோற்றம் எடுத்தது. அவர்கள்தாம் மேலான அறிவுவளர்ச்சி பெற்ற தொழிலாளிகளிடம் அதைக் கொண்டுபோனார்கள். இவர்கள் தம் முறைக்கு பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் நிலைமைகள் அனுமதிக்கும் அளவுக்கு அதைப் புகுத்தினர்.
எனவே, சோஷலிஸ்டு உணர்வு எனப்பட்டது, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்துக்கு வெளியிலிருந்து புகுத்தப்படுகின்ற ஒன்றாகும். உள்ளிருந்து தன்னியல்பாகத் தோன்றிய ஒன்றல்ல.
தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியல் உணர்வு வெளியிலிருந்து மட்டுமே - அதாவது பொருளாதாரப் போராட்டத்திற்கு அப்பால் வெளியிலிருந்துதான், தொழிலாளிகள், முதலாளிகள் இடையேயுள்ள உறவுகளின் துறைக்கப்பால் வெளியிலிருந்துதான் - கொண்டுவரமுடியும். அரசுபாலும் அரசாங்கத்தின்பாலும் எல்லா வர்க்கங்களுக்கும் மக்கட்பகுதிகளுக்கும் உள்ள உறவு முறைகளின் துறையிலிருந்து மட்டுமே, எல்லா வர்க்கங்களுக்கும் இடையிலுள்ள பரஸ்பர உறவுமுறைகளின் துறையிலிருந்து மட்டுமே இந்த அறிவைப் பெறுவது அவசியம்.
மேற்கண்ட லெனினுடைய கோட்பாடுகளிலிருந்து புரிந்து கொள்வது என்னவெனில்:
விவசாயிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் இடையிலுள்ள உறவுத்துறைகளில் எழும் தன்னியல்பான பிரச்சினைகள் மீதும், பொருளாதார நலன்களுக்காக நிலப்பிரபுக்களையும் அரசாங்கத்தையும் எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்தையும்; தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையிலுள்ள உறவுத்துறைகளிலிருந்து எழும் பிரச்சினைகளுக்காகவும், பொருளாதார நலன்களுக்காகவும் முதலாளிகளையும் அரசாங்கத்தையும் எதிர்த்த தொழிலாளர்களின் போராட்டத்தையும்; இதைப் போன்றே மாணவர், நடுத்தர வர்க்கத்தினர் இன்னும் பிறரும் தொழில் துறையில் தமக்கு நேரெதிரான வர்க்கத்தையும் அரசையும் எதிர்த்துப் பகுதி நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் நடத்தும் மேற்கூறப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் தன்னியல்பான, பொருளாதாரப் போராட்டங்களேயாகும். இப்போராட்டங்கள் எவ்வளவு முறைமையுள்ள, திட்டமிட்டவையாக இருந்தாலும் இவை அனைத்தும் தன்னியல்பானவையே.
கனுசன்யால் கூறுவதைப் போல இத்தகைய தன்னியல்பான பொருளாதாரப் போராட்டங்களில் விவசாயிகளை ஈடுபடச் செய்வதன் மூலம், விவசாயிகளின் நிலத்திற்கான மற்றும் அறுவடையைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தின் மூலம்; தொழிலாளர்களின் போனசுக்காக நடத்தப்படுகின்ற போராட்டங்களின் மூலம் புரட்சிகர அரசியல் உணர்வைக் கொண்டுவந்துவிட முடியும் என்பதோ; இத்தகைய பொருளாதார வகைப்பட்ட போராட்டங்களின் ஊடாகவே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியலையும், விவசாயப் புரட்சித் திட்டத்தையும் பிரச்சாரம் செய்வதுடன் சட்டவரம்பை மீறியும், ஆயுதப்போராட்டத்துடன் இணைத்து இத்தகைய தன்னியல்பான பொருளாதாரப் போராட்டங்கள் நடத்தப்படுவதால் புரட்சிகர அரசியல் உணர்வை கொண்டுவந்துவிட முடியும் என்று கூறுவது தன்னியல்பை வழிபடுவதேயாகும். நக்சல்பாரி எழுச்சி என்று கனுசன்யால் கூறுகின்ற போராட்டங்கள் எவ்வளவு உச்சபட்சமாக நடத்தப்பட்டிருந்தாலும் அது திட்டவகை செயல்தந்திரத்தோடு, அரசியல் நடத்தை வழியோடு இணைக்கப்படாவிட்டால் அது தன்னியல்பிலிருந்து மீளாது. எனவே பாட்டாளிவர்க்கக் கட்சிக்கு திட்டவகை செயல்தந்திரமும், அரசியல் நடத்தை வழியும் அவசியமாகும்.
3. அரசியல் நடத்தை வழி
ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நாடு தழுவிய அளவிலும், அனைத்து வர்க்கங்களையும் பாதிக்கக்கூடிய சமூக அரசியல் பொருளாதார பிரச்சினைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதின் முலம் அத்தருணத்தில் எழும் பிரதானமான போக்கை அறிவதும், அப்பிரதான போக்கு குறித்துப் பாட்டாளி வர்க்கக் கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் கண்ணோட்டத்தையும், அப்பிரதான போக்கின்பால் சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்கள் மேற்கொள்ளும் நிலைப்பாட்டையும், அதன் விளைவாகப் பகைவர் முகாமிலும், நமது முகாமிலும் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப அத்தருணத்திற்கு பொருத்தமாக நேரடிச் சேமிப்புச் சக்திகளையும், மறைமுகச் சேமிப்புச் சக்திகளையும் எவ்வாறு பாட்டாளி வர்க்கக் கட்சி பயன்படுத்துவது என்பதைக் குறித்தும் - அதாவது அத்தருணத்தில் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பது குறித்தும்; பிரதான எதிரிக்கு எதிராக இடைநிலை வர்க்கங்களையும், சக்திகளையும் வென்றெடுப்பதையும், சமரசச் சக்திகளைத் தனிமைப்படுத்தி அவர்களைச் செயலிழக்கச் செய்வது குறித்தும் கோட்பாட்டு ரீதியில் வரையறை செய்தல் கட்சியின் அரசியல் நடத்தை வழியில் அடங்கும்.
அ) அரசியல் நடத்தை வழியை சரியான ஒன்றாக வகுத்துக்கொள்ள வேண்டுமானால் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி கீழ்க்காணும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
i) பாட்டாளி வர்க்கக் கட்சி தனது அரசியல் நடத்தை வழியைச் சரியாக வகுத்துக் கொள்ள வேண்டுமானால் அது அரசியல் யுத்த தந்திரத்தை, அதாவது யுத்ததந்திர பொது திசை வழியையும், யுத்ததந்திரத் திட்டத்தையும் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும்; அதற்குச் சேவை செய்ய வேண்டும். இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கட்டத்தில் முதலாளித்துவத்தின் பாத்திரம் மிகச் சிக்கலானதாகவுள்ளது. ஒரு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாட்டில் உள்ள தேசிய முதலாளித்துவம் என்ற முறையில் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள தேசிய முதலாளித்துவம் இரட்டைத் தன்மை கொண்டதாக இருக்கின்றது. ஆகையால் தேசிய முதலாளித்துவம் சில காலக்கட்டங்களில் புரட்சியில் பங்குகொள்ளக்கூடியதாகவும், வேறு சில காலக்கட்டங்களில் எதிர்ப் புரட்சி அணிகளில் சேரக் கூடியதாகவும் இருக்கின்றது. அத்துடன் வரலாற்று ரீதியான நிலைமைகளின் காரணமாக இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள தேசிய முதலாளித்துவ வலதுசாரிப் பகுதியினர் சிலகாலக்கட்டங்களில் நேரடிச் சேமிப்புச் சக்திகளைத் தம் பின்னால் திரட்டிக் கொண்டு புரட்சியைச் சீர்குலைப்பதாகவும் இருக்கின்றது. ஆகையால் தேசிய முதலாளித்துவத்துடன் ஐக்கிய முன்னணிப் பிரச்சினை என்பது வர்க்க சமரச சக்தி என்ற முறையில் அதனைத் தனிமைப்படுத்தும் பிரச்சினையும் எழுகின்றது. எனவே பாட்டாளிவர்க்கக் கட்சி ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் சூழ்நிலைமையைப் பற்றிய மதிப்பீட்டின் அடிப்படையில் தேசிய முதலாளித்துவத்துடன் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டுமா? ஒரு ஐக்கிய முன்னணி அதனுடன் கட்டப்பட்டிருந்தால் அதை முறித்துக் கொள்ள வேண்டுமா? அல்லது வர்க்க சமரசப்பாதையை மேற்கொண்டு நேரடிச் சேமிப்புச் சக்திகளை தன் பின் திரட்டிக்கொண்டு புரட்சிக்குத் தீங்கு விளைவிக்குமானால் அதைத் தனிமைப்படுத்திச் செயலழிக்கச் செய்ய வேண்டுமா? என்பதை தீர்மானிப்பது அத்தருணத்தில் கட்சி தனது அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்வதில் அடிப்படையான அம்சமாகும். கட்சி தனது அரசியல் நடத்தை வழியை சரியான ஒன்றாக வகுத்துக் கொள்ள வேண்டுமானால் இப்பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கு அது அரசியல் யுத்ததந்திரத்தினால் வழிகாட்டப்பட வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்மானிப்பதில் அது யுத்ததந்திரத்தை வழிகாட்டியாகக் கொள்ளாவிட்டால் அந்த அரசியல் நடத்தை வழி ஒரு சந்தர்ப்பவாத வழியாக அமைந்துவிடும்.
ii) தரகு முதலாளித்துவம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் இலக்காகவோ - எதிரியாகவோ இருக்கின்றது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புரட்சியின் பிரதான தாக்குதல் ஒரு ஏகாதிபத்திய வல்லரசையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து திருப்பப்பட்டிருக்கும் போது பிற ஏகாதிபத்தியத்தின் தரகர்கள் பிரதான எதிரியை எதிர்த்த போராட்டத்தில் பாட்டாளிவர்க்கத்துடன ஒரு ஐக்கிய முன்னணியில் பங்குகொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. எனவே பாட்டாளி வர்க்கக் கட்சி ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் சூழ்நிலைமையின் அடிப்படையில் அக்காலக்கட்டத்தில் புரட்சியின் பிரதான தாக்குதல் ஒரு ஏகாதிபத்திய வல்லரசையும் அதனுடைய கூட்டாளிகளுக்கும், எதிராகத் திருப்ப நேரிடும்போது, பிற ஏகாதிபத்தியத்தின் தரகர்களுடன் ஒரு ஐக்கியமுன்னணியைக் கட்ட வேண்டுமா? அல்லது எத்தகைய உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அத்தருணத்தில் கட்சி தனது அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்வதில் உள்ள அடிப்படையான அம்சமாகும். எனவே இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் அரசியல் நடத்தை வழி யுத்ததந்திரத்தை தனது வழிகாட்டியாகக் கொள்ளாவிட்டால் அது சந்தர்ப்பவாதத்தில் முடியும்; ஒரு சரியான அரசியல் நடத்தை வழியை வகுத்துக் கொள்ள இயலாது.
மேலும் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சி, தேசிய விடுதலை மற்றும் ஜனநாயகப் புரட்சி ஆகிய இரு கடமைகளை ஒரு சேரப் பெற்றிருக்கிறது. தேசிய விடுதலை என்பதில்கூட பல தேசிய இனங்களைக்கொண்ட ஒரு அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதனால், நாட்டை அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்தல், பல தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றாக இருப்பதால் அனைத்துத் தேசிய இனங்களின் சமத்துவம் - தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுதல் என்று இரு அம்சங்கள் அடங்கியுள்ளன. எனவே தேசிய விடுதலை, ஜனநாயகப் புரட்சி ஆகிய இரண்டிற்கும் இடையிலான உறவை புரட்சியின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப சரியாகக் கையாள வேண்டியதும் அதிமுக்கியமான பிரச்சினையாகவும் இருக்கின்றது. ஆகையால் கட்சியானது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடத்தை வழியை வகுத்துக் கொள்ளும்போது மேற்கூறப்பட்ட பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கு அரசியல் யுத்தந்திரத்தைத் தனது வழிகாட்டியாகக் கொள்ளாவிட்டால் அது சந்தர்ப்பவாத வழியாக அமைந்துவிடும்.
இத்தகைய சிக்கல்கள் நிறைந்த நிலைமைகளின் காரணமாக, கட்சியனாது ஓரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் சூழ்நிலைமைகளுக்கேற்ப ஒரு சரியான அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்வதற்கு அது அரசியல் யுத்த தந்திரத்தினால் வழிகாட்டப்பட வேண்டும் என்பதும், அதைப் பிறழாமல் கட்சி கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் முக்கியமான பிரச்சினையாகும்.
iii) கட்சியானது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் சூழ்நிலைமைக்கேற்ற ஒரு சரியான அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்ள வேண்டுமானால் அது நீண்ட மக்கள் யுத்தப்பாதையின் - இராணுவ யுத்ததந்திர செயல்தந்திர விதிகளையும் கோட்பாடுகளையும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளாவிட்டால் கட்சியின் அரசியல் நடத்தை வழி ஒரு சந்தர்ப்பவாத வழியாக அமைந்து விடும். பகைவர்கள் முகாமிலுள்ள முரண்பாடுகளும், பிளவுகளும், மோதல்களும் யுத்தமாக (ஆயுத மோதல்களாக) இல்லாமல் அரசியல் போராட்டமாகவே இருப்பதுவும் ஆயுதந்தாங்கிய எதிர்ப்புரட்சியை எதிர்த்து ஆயுதம் தாங்கிய புரட்சி போராடுதல் என்ற அம்சம் இந்தியப் புரட்சியில் ஒரு விசேசமானதும் சாதகமானதுமான அம்சமாக இன்னும் தோன்றாமல் இருப்பதும் மையப்படுத்தப்பட்ட அரசும், போலிப் பாரளுமன்ற ஆட்சிமுறையும் இருப்பதும்; சீனமக்கள் ஜனநாயகப்புரட்சி 1924-1927 ஆண்டுகளின் புரட்சியைக் கடந்து சென்றதைப் போன்று ஒரு புரட்சியை நமது மக்கள் ஜனநாயகப் புரட்சி கடந்து செல்லாமல் இருப்பதும் ஆகிய விசேசமான நிலைமைகள் நமது ஜனநாயகப் புரட்சியில் உள்ளன. இந்த விசேஷமான நிலைமைகளின் காரணமாக அரசியல் போராட்டத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இடையிலான உறவை சரியாக கையாளுதல் என்ற ஒரு தனித்தன்மை வாய்ந்த அம்சம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியில் உள்ளது. எனவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்தந்திரம் அரசியல் போராட்டத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இடையிலான உறவை சரியாகக் கையாளவேண்டிய பிரச்சினையைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. ஆகையால் கட்சி ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேற்கொள்ளவேண்டிய அரசயில் நடத்தைவழியைத் தீர்மானிக்கும்போது மக்கள் யுத்தப் பாதையின் இராணுவ யுத்ததந்திர செயல்தந்திர விதிகளையும், கோட்பாடுகளையும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
iv) ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைமையை மதிப்பீடு செய்து தனது அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்ளும்போது அத்தருணத்தில் எவை வர்க்க சமரச சக்திகளாக இருக்கின்றன என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானிக்கவேண்டும். நேரடிச் சேமிப்புச் சக்திகளைத் தன் பின் திரட்டிக்கொண்டு எதிரிகளுடன் சமரசம் செய்துகொள்வதின் மூலம் புரட்சியைச் சீர்குலைக்கும் வர்க்க சமரசச் சக்திகளை தனிமைப்படுத்துவதையும், அவ்வாறு அவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் சேமிப்புச் சக்திகளைத் தன்பக்கம் வென்றெடுப்பதை அரசியல் நடத்தை வழி உத்திரவாதம் செய்யவேண்டும். சமரசச் சக்திகளைத் தனிமைப்படுத்தி நேரடிச் சேமிப்புச் சக்திகளை வென்றெடுக்காமல் முன்னணியை மட்டும் தீர்மானகரமான மோதலில் ஈடுபடச் செய்வோமானால் புரட்சிக்கு தீங்கே விளையும். ஆகையால், சமரசச் சக்திகளின் பின்னாலுள்ள பரந்துபட்ட மக்களை வென்றெடுத்துப் பிரதான எதிரிக்கு எதிராக நிறுத்துவதை அரசியல் நடத்தை வழி உத்திரவாதம் செய்யவேண்டும். சமரசச் சக்திகளின் நடவடிக்கைகளையும், போராட்ட வடிவங்களையும் விமர்சனம் செய்தால் மட்டும் போதாது. அவர்கள் வைக்கும் திட்டத்திற்கு மாறாக ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்து அதை நிறைவேற்றுவதற்காக போராடுவதன் மூலமே நாம் அவர்களைத் தனிமைப்படுத்த முடியும். ஆகையால் அரசியல் நடத்தை வழி இதை உத்திரவாதம் செய்வதாக அமையவேண்டும்.
v) எதிரியின் முகாமிலும், நமது முகாமிலும் ஏற்படும் மாறுதல்களை - புரட்சிகரச் சக்திகளின் அணி சேர்க்ககையிலும் அதைப் போன்றே எதிர்ப்புரட்சிகர சக்திகளின் அணி சேர்க்கையிலும் ஏற்படும் மாறுதல்களைச் சரியாக மதிப்பீடு செய்து, எல்லா நேரடி மறைமுகச் சேமிப்புச் சக்திகளையும் தவறாமல் பயன்படுத்துவதை அரசியல் நடத்தை வழி உத்திரவாதம் செய்யவேண்டும்.
vi) ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சூழ்நிலையை மதிப்பீடு செய்து, அத்தருணத்தில் பிரதான எதிரியை எதிர்த்து சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்கள் மேற்கொள்ளும் நிலைப்பாட்டைப் பொறுத்து, பிரதான எதிரியை எதிர்த்து உண்மையாகப் போரிட முன்வரும் வர்க்கங்களுடன் பாட்டாளி வர்க்கக் கட்சி ஒரு ஐக்கிய முன்னணியைக் கூட்டியமைக்கும்படி நிலைமைகள் கோருமானல், கட்சி ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைக்கும்போதும், ஐக்கிய முன்னணி ஒன்று கட்டியமைக்கப்பட்ட பின் அந்த ஐக்கிய முன்னணிக்குள்ளும் இருவகை விலகல்களை எதிர்த்து கட்சி ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, பிரதான எதிரியை எதிர்த்த போராட்டத்தில் கலந்துகொண்டு, பாட்டாளி வர்க்கக் கட்சியுடன் ஒன்றுபட்டுப் போராட முன்வரும் முதலாளித்துவ வர்க்கப் பிரிவினருடன் பாட்டாளி வர்க்கக் கட்சி ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி அதை இயன்ற அளவிற்கு நிலைநிறுத்தும் கொள்கையையோ, அதன் சாத்தியப்பாட்டையோ நிராகரிப்பது, இடது சந்தர்ப்பவாதமாகும். பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான திட்டத்தை ஐக்கிய முன்னணியில் பங்குகொள்ளும் முதலாளித்துவப் பிரிவினர் முன்வைக்கும் திட்டத்தின் மட்டத்திற்கு தாழ்த்த முயல்வது தத்துவ, அரசியல் துறைகளில் அவர்களை எதிர்த்துப் போராடவேண்டியதன் அவசியத்தை மறுப்பது - ஐக்கிய முன்னணிக்குள்ளும் முதலாளித்துவ பிரிவினரை எதிர்த்து நடத்தப்படவேண்டிய இரத்தம் சித்தாப் போராட்டத்தின் அவசியத்தை மறுப்பது; இது வலது சந்தர்ப்பவாதமாகும். இந்த இரு விலகல்களை எதிர்த்த போராட்டத்தை அரசியல் நடத்தை வழி உத்திரவாம் செய்ய வேண்டும்.
ஆ) குறிப்பான திட்டம்
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியது ஒரு குறிப்பான திட்டம்.
கட்சியின் அரசியல் நடத்தை வழியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வர்க்கச் சக்திகளின் அணிசேர்க்கைக்கு ஏற்ப புரட்சிகரச் சக்திகளின் அணிசேர்க்கையிலும், எதிர்ப்புரட்சிகரச் சக்திகளின் அணி சேர்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, பிரதான எதிரியை எதிர்த்துப் போரிடும் சக்திகளின் நலன்களைக் கருதி உடனடிக் கோரிக்கைகள் அடங்கிய ஒரு குறிப்பான திட்டம் பாட்டாளி வர்க்கக் கட்சியினால் முன்வைக்கப்படவேண்டும்.
இக்குறிப்பான திட்டம் கட்சியின் குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் (மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தின் அடிப்படையில்) அமைய வேண்டும். இக்குறிப்பான திட்டம் கட்சியின் குறைந்தபட்சத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அதை நிறைவேற்றும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட வேண்டும். அக்காலக்கட்டத்திற்கு உகந்த சில அரசியல் சமூகப் பொருளாதாரத் துறைகளில் உடனடிக் கோரிக்கைகள் அடங்கியது. அக்காலக்கட்டத்தின் அரசியல் நடத்தை வழிக்கேற்ப, விவசாயிகளின் விவசாயத் திட்டத்தின் ஒரு பகுதியையோ அல்லது ழுமுமையையோ இந்த குறிப்பான திட்டம் கட்டாயமாக உள்ளடக்கியிருக்க வேண்டும். பிரதான எதிரியைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் நம்முடன் ஐக்கிய முன்னணியில் பங்குகொள்ள முன்வரும் வர்க்கங்களுக்கு, குறிப்பாக ஆளும் வர்க்கங்களில் ஒரு பிரிவு ஐக்கிய முன்னணியில் பங்குக்கொள்ள முன்வருமானால் அவற்றிற்கும் சில சலுகைகளைத் தரும் வகையில் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும். எதிரிகளுக்குள்ளே உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், பலருடன் ஐக்கியப்படுவதற்கும், ஒருநேரத்தில் சிலரை எதிர்த்தும் எதிரிகளைத் தனித்தனியாக ஒழித்துக்கட்டவும் மாவோ வகுத்துத் தந்த செயல்தந்திர நெறிமுறைகளைச் சரியாகக் கையாளும் நோக்கத்தின்படி குறிப்பான திட்டம் அமையவேண்டும்.
குறிப்பான திட்டம் பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்வதாக அமைய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு உகந்ததாக வகுக்கப்படும் கட்சியின் அரசியல் நடத்தை வழியும், அதனடிப்படையில் அமைந்த குறிப்பான திட்டமும் தொலைநோக்குடையதாக இருக்க வேண்டும், நீண்ட புரட்சியில் அடுத்துவரும் காலக்கட்டத்திற்குத் தேவையான நிலைமைகளை இந்தக் காலக்கட்டத்திற்குள் தோற்றுவிப்பதாக அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு உகந்த அரசியல் நடத்தை வழிக்கு ஏற்றவாறு வகுக்கப்படும் குறிப்பான திட்டம், அந்த அரசியல் நடத்தை வழிக்கேற்ப அரசியல் அதிகாரத்திற்கான தீர்வை அந்த குறிப்பான திட்டம் வகுக்க வேண்டும். அத்தருணத்திலுள்ள எதிரிகளிடமிருந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் அல்லது ஏற்கெனவே உள்ள அரசு இயந்திரத்தின் மூலமோ அல்லது அதனிடம் கோரிக்கைகளாக முன்வைத்து நிறைவேற்றக்கூடியதாகவோ ஒரு குறிப்பான திட்டம் அமையக்கூடாது. போலிப்பாராளுமன்ற ஆட்சிமுறை இருப்பதனாலும், ஒழுங்கமைக்கப் பட்ட திருத்தல்வாதக் கட்சிகளின் பிரச்சாரத்தினாலும் இந்த அரசு அமைப்பு முறைக்குள் ஒரு குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் என்ற மாயை தோற்றுவிக்கப்படும். ஆகையால் இந்த அரசு முறை பயனற்றது. இதன்மூலம் ஒரு குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது இயலாது. இந்தக் குறிப்பான திட்டம் நிறைவேற்றப்படவேண்டுமானால் இந்த அரசுமுறை துடைத்தெறியப்பட வேண்டும் என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும்.
ஆளும் வர்க்கங்களும் சமரசச் சக்திகளும் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரத் திட்டங்களுக்கு மாற்றாக பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் உகந்த குறிப்பான திட்டங்களை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்காகப் போராடுவதன் மூலமாகத்தான், மக்களை அவர்களின் செல்வாக்கிலிருந்தும், தலைமையிலிருந்தும் வென்றெடுக்க முடியும். இவ்வாறு ஒரு குறிப்பான திட்டத்தையும், அரசியல் முழக்கங்களையும் முன்வைக்காமல், ஒவ்வொரு மக்கட் பகுதியினரும், வர்க்கமும் தத்தம் பகுதி நலனுக்கான போராட்டங்களையும், பொருளாதாரப் போராட்டங்களையும் நடத்திக்கொண்டிருக்கும்போதே ஒரு பொதுவான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் (புரட்சிகர) அரசியலைப் பிரச்சாரத்தைச் செய்வதன் மூலம் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், வர்க்கங்களையும் ஒன்றுபடுத்த முடியாது. மக்களுக்குப் புரட்சிகர அரசியல் உணர்வைக் கொண்டுவர முடியாது. அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் திரட்டவும் முடியாது. இத்தகைய இயக்கங்கள் பொருளாதாரவாதத்திற்கும், தன்னியல்பிற்கும் தலைவணங்கியே தீரும். மக்களை ஆளும் வர்க்கக் கட்சிகள், சமரசக் கட்சிகள், திருத்தல்வாதக் கட்சிகள் ஆகியவற்றின் செல்வாக்கிலிருந்து மீட்காது. ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொரு காலக்கட்டத்தில் நிலவும் பருண்மையான சூழ்நிலைக்கு உகந்த அரசியல் நடத்தை வழியின் அடிப்படையில் அமைந்த குறிப்பான திட்டத்தையும், அரசியல் முழக்கத்தையும் முன்வைத்து அவற்றை நிறைவேற்றப் போராடுவதன் மூலமாகத்தான் பாட்டாளி வர்க்கம் சமுதாயத்திலுள்ள அனைத்து மக்கள் பிரிவினரோடு திட்டமிட்ட முறைப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு விரிவுபடுத்த முடியும்; அவர்கள் அனைவரையும் புரட்சிகரப் பேராட்டங்களுக்குத் திரட்ட முடியும்.
இ) முழக்கங்களும் ஆணையும்
ஒரு பாட்டாளி வர்க்க கட்சி தனது போராட்டத்தின் நோக்கங்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் முறைப் படுத்துவதே முழக்கம் எனப்படும்.
போராட்டத்தின் வெவ்வேறு குறிக்கோள்களுக்கு ஏற்ப முழக்கங்கள் மாறுபடும். முழக்கங்கள் ஒரு முழு வரலாற்றுக் கட்டத்தை தழுவியதாகவோ அல்லது வரலாற்றுக் கட்டத்துக்குள் தனித்தனி காலக்கட்டத்தைத் தழுவியதாகவோ அல்லது நிகழ்ச்சிகளை மட்டும் தழுவியதாகவோ அமையலாம்.
எல்லாப் புரட்சிகளின் பிரதானமான பிரச்சினை அரசு அதிகாரப் பிரச்சினையே ஆகும் என்றார் லெனின். புரட்சியின் ஒரு வரலாற்றுக் கட்டத்தில் எந்த வர்க்கத்தின் கைகளில் அல்லது எந்த வர்க்கங்களின் கைகளில் அதிகாரம் குவிந்திருக்கிறது; எந்த வர்க்கம் அல்லது எந்த வர்க்கங்கள் தூக்கியெறியப்பட வேண்டியவை; எந்த வர்க்கம் அல்லது எந்த வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அக்குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் புரட்சியின் பிரதானமான பிரச்சினையாகும்.
புரட்சியின் வரலாற்றுக் கட்டம் முழுவதையும் தழுவியது கட்சியின் யுத்ததந்திர முழக்கம். ஆகையால் யுத்ததந்திர முழக்கம் மேற்கூறப்பட்ட லெனின் ஆய்வுரையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எனவே, ஒரு யுத்ததந்திர முழக்கம் சரியான ஒன்றாக இருக்கவேண்டுமானால் அது அந்நாட்டில் அக்கட்டத்தில் உள்ள சமூகப் பொருளாதாரப் படிவத்தைப் பற்றியும், அச்சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கச் சக்திகளைப் பற்றியும் ஒரு மார்க்சிய-லெனினிய முறையிலமைந்த ஆய்வின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கவேண்டும். இது வர்க்கப்போராட்டமுறையில் புரட்சிகரச் சக்திகளை பிரித்து ஒதுக்குவதற்கு உகந்த ஒரு சரியான திட்டத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்; புரட்சியை வெற்றி பெறச் செய்வதற்கும், புதிய வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்துக்கு பரந்துபட்ட மக்களைப் போர் முனைக்கு கொண்டுவந்து நிறுத்துவதற்கு இன்றியமையாததாக இருக்கக்கூடிய ஒரு பரந்த, சக்தி வாய்ந்த அரசியல்படையை பரந்துபட்ட மக்களிடமிருந்து கட்டியமைப்பதற்குத் துணை புரிய வேண்டும்.
சுருங்கக்கூறின், புரட்சியின் ஒரு வரலாற்றுக்கட்டம் முழுவதும் நிலவும் வர்க்க அணி சேர்க்கைக்கு ஏற்றவாறு அதாவது எதிரியின் மீது பாட்டாளி வர்க்க இயக்கம் தாக்குதலைத் தொடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய பொதுப்பாதைக்கும் (திசை வழிக்கும்), அதற்கு இசைவாக வரையப்படும் யுத்தந்திர திட்டத்திற்கும் ஏற்றவாறு அவ்வரலாற்றுக் கட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட குறிக்கோளை நோக்கிப் பாட்டாளி வர்க்க இயக்கத்தை நடத்திச் செல்லும் பொருட்டு பாட்டாளி வர்க்கக் கட்சியால் முன் வைக்கப்படும் முழக்கம் ஒரு யுத்ததந்திர முழக்கம் எனப்படும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கட்டத்துக்குள் புரட்சியின் அடிப்படையான சாராம்சமான தன்மைகள் மாறாமல் இருப்பினும், நாட்டில் நிலவும் சூழ்நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எதிரியின் முகாமிலும் பாட்டாளி வர்க்க முகாமிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் பாட்டாளி வர்க்கத்தின் உடனடிச் செயல்பாட்டிற்கான நிலைமைகளிலும், நோக்கங்களிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகின்றன. இச்சூழ்நிலையில் நிலவும் வர்க்க அணிசேர்க்கைக்கு ஏற்ப, கட்சியின் அரசியல் நடத்தை வழியின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க இயக்கப் போராட்டத்தின் நோக்கங்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் முறைப் படுத்துவதற்காக வைக்கப்படும் முழக்கம் ஒரு செயல்தந்திர முழக்கம் எனப்படும்.
சூழ்நிலையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படும்போது, வர்க்க அணி சேர்க்கையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படும்போது, அச்சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு புதிய செயல்தந்திர முழக்கம் வைக்கப்படும்.
செயல்தந்திர காலக்கட்டத்திற்குள் ஏற்படும் திருப்பங்கள் அல்லது பெரிய நிகழ்சிகளுக்குத் தகுந்தமுறையில், புரட்சி இயக்க வெள்ளத்தின் ஏற்றம் அல்லது இறக்கத்திற்கு ஏற்றவாறு வைக்கப்படும் முழக்கங்கள் நடவடிக்கை முழக்கங்கள் எனப்படும். செயல்தந்திர முழக்கத்தை நிறைவேற்றும் பொருட்டும், கட்சியின் அரசியல் நடத்தை வழியும், செயல்தந்திர முழக்கமும் சரியானது என்று மக்கள் தங்கள் சொந்த அரசியல் அனுபவத்தின் மூலம் உணரச் செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை முழக்கங்கள் வைக்கப்படுகின்றன.
எனவே போராட்டத்தின் நோக்கங்கள், அவை உடனடி நோக்கங்களாகவோ அல்லது தொலைவான எதிர்காலத்திய நோக்கங்களாவோ இருப்பதற்கேற்ப மேற்கூறப்பட்ட முழக்கங்கள் மாறுபட்டவையாக இருக்கின்றன.
வரலாற்று வளர்ச்சிக்கு ஏற்றவகையில் செயல்தந்திர (அடிப்படை) அரசியல் முழக்கங்களை முன்வைப்பதன் மூலம், இந்தச் செயல்தந்திர அரசியல் முழக்கங்களை உண்மையில் நடைமுறையில் நிறைவேற்றும் பொருட்டு செயல்தந்திரக் காலப்பகுதிக்குள் ஏற்படும் திருப்பங்களுக்கும் பெரிய நிகழ்ச்சிகளுக்கும் தகுந்த முறையிலும் புரட்சி அலை ஏற்றம் அல்லது இறக்கத்திற்கு ஏற்றவாறும் நடவடிக்கை முழக்கங்களை முன்வைப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கமானது தனது கட்சியின் மூலம் நாட்டிலுள்ள எல்லா புரட்சிகர வர்க்கங்களுக்கும் மக்கள் பிரிவினருக்கும் அரசியல் தலைமையை வழங்குகின்றது.
இப்படிப்பட்ட குறிப்பான நோக்கங்கள் இல்லை என்றால் அரசியல் தலைமை என்பதற்கு இடமே இல்லை.
பரந்துபட்ட மக்களின் அரசியல் கல்விக்குப் பிரச்சாரமும், கிளர்ச்சியும் மட்டும் போதாது. அரசியல் கல்வியைப் பெற மக்களுக்குச் சொந்த அரசியல் அனுபவமும் தேவைப்படுகின்றது. கட்சியின் முழக்கத்தை மக்களுக்கான முழக்கமாக மாற்றுவதற்கும், அவர்களைப் போராட்ட அரங்கிற்குக் கொண்டு சென்று நிறுத்துவதற்கும், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த அரசியல் அனுபவத்தின் வாயிலாகக் கட்சியின் அடிப்படை அரசியல் முழக்கத்தின் சரியான தன்மையை உணர்ந்து கொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை முழக்கங்கள் வைக்கப்படுகின்றன.
செயல்தந்திர நடவடிக்கைகளில் முக்கியமானது மக்களை வழிநடத்துவதற்கான சரியான முழக்கங்களையும் ஆணையையும் தருவதாகும். இம்முழக்கங்களும் ஆணையும் யுத்ததந்திர, செயல்தந்திர முழக்கங்களும் ஒன்றல்ல; இவை இருவகைப் பட்டவையாகும்.
யுத்ததந்திர, செயல்தந்திர முழக்கங்கள் ஒன்று ஒரு வரலாற்றுக் கட்டம் முழுவதற்கும் உரியது; மற்றொன்று அவ்வரலாற்றுக் கட்டத்துக்குள் தனித்தனி காலக்கட்டங்களுக்கு உரியது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நிலவும் வர்க்க சக்திகளின் அணி சேர்க்கைக்கு ஏற்றவாறு அமையும் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கங்களைக் குறிக்கின்றன. ஆனால் ஒரு காலப்பகுதியின் நோக்கமாக அமையும் ஒரு குறிப்பிட்ட முழக்கத்தை (யுத்த தந்திர முழக்கத்தை அல்லது செயல்தந்திர முழக்கத்தை) அமல்படுத்தும்போது அம்முழக்கத்தைப் புறவயமான நிலைமைகளுக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு ஒரு பிரச்சார முழக்கமாக, ஒரு கிளர்ச்சி முழக்கமாக, ஒரு செயல்முழக்கமாக இறுதியில் ஒரு ஆணையாக மாற்றுதல் என்பது இயக்கம் வளர்ச்சியடையும் கட்டங்களையும், பாய்ச்சலையும் குறிக்கின்றது. சுருங்கக்கூறின் முழக்கங்கள் இரண்டுவகைப்படும். இரண்டு வகைப்பட்ட முழக்கங்களையும் சேர்த்து ஒன்றெனக் கருதி விடக்கூடாது. ஒரு காலப்பகுதிக்கென பாட்டாளி வர்க்கத்தின் நோக்கங்களாக அமையும் (யுத்தநத்திர, செயல்தந்திர முழக்கங்கள்) முதல்வகைப்பட்டதையும், இம்முழக்கங்களில் ஏதாவது ஒன்றை அமல்படுத்தும்போது இயக்கம் அடையும் வளர்ச்சியின் கட்டங்களையும், பாய்ச்சலையும் குறிக்கின்ற இரண்டாவது வகைப்பட்ட முழக்கங்களையும், ஆணையையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். ஒரு பிரச்சார முழக்கத்தின் நோக்கம் மிகவும் உறுதியான மற்றும் திடமான போராட்டக்குழுக்களையும், நபர்களையும் வென்றெடுப்பதாகும். அதாவது மக்களின் முன்னேறிய பகுதியினரை ஒழுங்கமைப்பது இக்கட்டத்தில் நமது நோக்கமாக இருக்கின்றது.
ஒரு கிளர்ச்சி முழக்கத்தின் நோக்கம் பரந்துபட்ட உழைப்பாளி மக்கள் திரளினரை வென்றெடுப்பதாகும். இயக்கம் ஒரு வெகுஜனத் தன்மையை அடையச் செய்வது இக்கட்டத்தில் நமது நோக்கமாகும்.
ஒரு செயல்முழக்கத்தின் நோக்கம் எதிரியின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு பரந்துபட்ட மக்களைத் தூண்டுவதும், மக்களை நடவடிக்கைகளில் இறங்கும்படி தூண்டுவதுமாகும்.
ஒரு கட்சியின் ஆணை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக கட்சியின் நேரடியான அறைகூவல் ஆகும். இந்த அறைகூவலானது மக்கள் திரளினரின் தேவைகளைச் சரியாகவும், பொருத்தமாகவும் முறைப்படுத்தப்பட்டு இருக்குமேயானால் பரந்துபட்ட மக்களால் அது மேற்கொள்ளப்பட்டு விடும். இதற்குக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
பொதுவாகப் பிரச்சார முழக்கத்திலிருந்து துவங்கி படிப்படியாகச் செயல் முழக்கத்திற்கும், செயல்முழக்கத்திலிருந்து திட்டவட்டமான ஆணை பிறப்பிக்கும் கட்டத்துக்கு மாறிச்செல்வது கட்சியின் பணியாகும்.
இவ்வாறு முழக்கத்தை மாற்றிச்சொல்லும்போது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை காலம் கனிவதற்கு முன்னர் அதை ஒரு நடவடிக்கை முழக்கமாக மாற்றக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்வதற்குத் தேவையான நிலைமை இன்னும் தோன்றாதிருக்கும் போது பாட்டாளி வர்க்க இயக்கம் எடுக்கும் நடவடிக்கை அதன் சக்திகள் தோல்வியடைவதில் போய் முடியும்.
நெருக்கடி நேரங்களில் நடுத்தரவர்க்கத்தினரிடம் ஊசலாட்டம் காணப்படலாம். செயல்முழக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட ஆணையையும் மாற்றவோ, தள்ளிப்போடவோ நேரிடும். ஆனால் இதற்காக கிளர்ச்சி முழக்கத்தைக் கைவிடக்கூடாது.
சூழ்நிலையை ஒவ்வொரு தருணத்திலும் சரியாகப் பரிசீலித்து திறமையாக தக்க தருணத்தில் கிளர்ச்சி முழக்கங்களைச் செயல் முழக்கங்களாகவும், செயல் முழக்கங்களை ஆணைகளாகவும் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றியமைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், சூழ்நிலைமை மாறினால், எந்தவொரு முழக்கத்தையும் அது ஜனரஞ்சகமானதாக இருந்தபோதிலும், காலம் கனிந்திருந்தபோதிலும் அதை நிறைவேற்றுவது சரியல்ல என்ற நிலைமை ஏற்பட்டிருந்தால், அதைச் செயல்படுத்துவதை ரத்துச் செய்வதற்குத் தேவையான வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதும் கூட கட்சியின் கடமையாகும். சிலசமயம் எதிரி விரித்துள்ள வலையில் விழாமல் அணிகளைக் காப்பாற்றுவதற்காக எந்தவொரு தீர்மானிக்கப்பட்ட முழக்கத்தையோ அல்லது ஆணையையோ அதற்கான காலம் கனிந்திருந்தபோதிலும்கூட உடனடியாக ரத்துச் செய்ய வேண்டிய தேவையை அல்லது மாற்றியமைக்கவேண்டிய தேவையை கட்சி எதிர்கொள்ள வேண்டியதும் உண்டு. அல்லது ஒரு ஆணையை நிறைவேற்றுவதை மேலும் ஒரு சாதகமான தருணத்திற்கு ஒத்திப்போட வேண்டிய தேவையையும் கட்சி எதிர்கொள்ள வேண்டிய சமயமும் உண்டு.
பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புறவயமான அம்சத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, அகவயமான அம்சத்தை நெறிமுறைப்படுத்தும் பொருட்டு அதைச் சரியாகக் கையாள்வதற்கென ஒரு முழு வரலாற்றுக் கட்டத்தையும் தழுவக்கூடியதாகவுள்ள யுத்ததந்திர முழக்கத்தையும், அவ்வரலாற்றுக் கட்டத்திற்குள் தனித்தனி கால கட்டங்களுக்குரிய செயல்தந்திர முழக்கங்களையும் முன்வைப்பதும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பழைய முழக்கங்களுக்கு பதிலாகப் புதிய முழக்கங்களை முன் வைப்பதும், இம்முழக்கங்களில் எதுவொன்றையும் அமல்படுதும்போது அதை ஒரு கட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிச்சென்று இறுதியில் அதை ஆணையாக மாற்றுவதும்; அடிப்படை லட்சியங்களுடன் உடனடிக் குறிக்கோளை இணைக்கும் பொருட்டு பிரச்சார முழக்கங்களுடன் நடவடிக்கை முழக்கங்களைத் திறமையுடன் இணைப்பதும் ஆகியவை கட்சித் தலைமையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும். இத்தகைய மர்க்சிய லெனினிய மாவோ வழியிலான போர்தந்திரம் செயல் தந்திரத்தை இ.க.க.(மா.லெ) கடைபிடிக்கவில்லை.
தொகுத்துக் கூறினால் சாருமஜூம்தார் முன்வைத்த வழியானது வெகுஜன இயக்கங்களையும், போராட்டங்களையும் புறக்கணித்து அழித்தொழிப்பு ஒன்றேவழி, ஒரே போராட்ட வடிவம் என்பது இடது தீவிரவாத வழியேயாகும். அது எதிர்த்துப் போராட வேண்டிய ஒன்றேயாகும். அதேபோல் சாரு மஜூம்தாரின் இடது தீவிரவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் கனுசன்யால் முன்வைக்கும் பொருளாதாரவாத, தொழிற்சங்கவாத, பாராளுமன்றவாத வழி மற்றும் வெளிப்படையான கட்சி என்பது ஒரு வலது சந்தர்ப்பவாத வழியாகும். சாரு மஜூம்தாரின் இடது தீவிரவாத வழியும், கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத வழியும் தன்னியல்பின் இரண்டு முனைகளேயாகும். எனவே இவ்விரண்டு தன்னியல்புகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க முடியும். அத்தகைய ஒரு புரட்சிகர கட்சி சரியான திட்டம், போர்தந்திரம், செயல் தந்திரம், அரசியல் நடத்தை வழி ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய முறைகளை இ.க.க.(மா.லெ) கடைபிடிக்கவில்லை என்பதைப் பார்த்தோம். இ.க.க.(மா.லெ) கட்டியமைக்கப்பட்ட முறைகள் பற்றி இனி காண்போம்.
4. இ.க.க (மா.லெ) கட்டிய முறை பற்றி
1967-ல் நக்சல்பாரியில் ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஒரு பேரெழுச்சியாகும். இத்தகைய ஒரு பேரெழுச்சியே கட்சியை கட்டுவதற்கான தத்துவ, அரசியல், அமைப்புக் கோட்பாடுகளை முன்வைக்க முடியாது. ஒரு கட்சியை கட்டியமைக்க முடியாது. அவ்வாறு நக்சல்பாரிப் பேரெழுச்சியே கட்சியைக் கட்டும் என்று கூறுவது ஒரு அனுபவவாதமேயாகும். நக்சல்பாரி எழுச்சியே கட்சியைக் கட்டியது என்ற நிலைப்பாட்டைத்தான் கனுசன்யால் முன்வைக்கிறார்.
உண்மையில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவும், அதற்குப் பின்னர் வந்த மா.லெ. கட்சியும்தான் கட்சிகட்டும் பணியை மேற்கொண்டது. 1970-ல் கட்சி கட்டுவதற்கான ஒரு திட்டத்தை முன்வைத்தது. அது தீர்த்துவைத்த தத்துவ அரசியல் நிலைப்பாடுகளைப் பின்வருமாறு கூறலாம்.
i) இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் புரையோடிப் போயிருந்த திரிபுவாதத்தை எதிர்த்து அரசியல் தத்துவ ரீதியாக போராட்டம் நடத்தி அதனை முறியடித்தது.
ii) மாவோ சிந்தனையை உயர்த்திப்பிடித்தது - அதை சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழிகாட்டியாக இன்றைய கட்டத்தின் மார்க்சிய-லெனினியமாக ஏற்றுக்கொண்டு இந்தியப் புரட்சியின் வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியம்-லெனினியம்-மாவோ சிந்தனையைப் பிரகடனம் செய்தது.
iii) இந்திய சமூக அமைப்பை அரைக்காலனிய, அரைநிலவுடைமை அமைப்பென்று கணித்து, இந்தியப் புரட்சியின் கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சி என்றும் வரையறை செய்தது. இந்திய சமுதாயத்தில் நிலவும் அடிப்படை முரண்பாடுகள் மற்றும் முதன்மை முரண்பாட்டை சரியாக கணித்தது. இந்தியப் புரட்சியின் இலக்குகளாக நிலவுடைமை, தரகுமுதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகிய நான்கு மலைகளைத் தூக்கியெறிய வேண்டுமென வரையறுத்தது. அதை எதிர்ப்பதற்கான போர்தந்திரத்தை புரட்சியின் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதைச் சரியாகத் தீர்மானித்தது.
iv) அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ இந்தியாவின் புரட்சிக்குத் தடையாக உள்ள பாராளுமன்றப் பாதையை புறக்கணித்ததுடன், அதற்குப் பதிலாக புரட்சிகரமான ஆயுதந்தாங்கிய விவசாயப்புரட்சிப் பாதையை முன்வைத்தது. குருச்சேவின் இந்திய வாரிசுகள் சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம்.-மும் முன்வைத்த “அமைதிவழி மாற்றத்திற்கு” மாறாக நீண்டகால மக்கள் யுத்தப் பாதையை முன்வைத்து இந்திய மக்களின் விடுதலைக்கான பாதை இது ஒன்று மட்டும்தான் என்பதைத் திட்டவட்டமாக பிரகடனம் செய்தது. மக்கள் படையை கட்டுவதற்கான பொது விதிகளைத் தீர்மானித்தது.
v) சர்வதேசக் கம்யூனிச இயக்கத்தில் திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு அதற்கு எதிராகப் போராடியது. சீனத்தில் முதலாளித்துவப் பாதையாளர்களுக்கு எதிராகவும் பண்பாட்டுப் புரட்சியை உயர்த்திப் பிடித்தது. சர்வதேச ரீதியிலும், இந்தியாவிலும் திரிபுவாதமே பிரதான அபாயம் என்பதைப் பிரகடனம் செய்தது.
vi) திரிபுவாத, சட்டவாதப் போக்கான வெளிப்படையான கட்சி என்ற நிலையை மாற்றி இரகசியக் கட்சி அமைப்பை நிறுவ முயற்சித்தது.
vii) இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் பிரச்சினைக்கு பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைதான் தீர்வு என்று சரியாக வலியுறுத்தியது.
மேற்கண்டவாறு இ.க.க. (மா.லெ) 1970-ல் தனது வேலைத்திட்டத்தை முன்வைத்தது.
5. கட்சி கட்டுவதில் கனுசன்யாலின் பங்கு
கனுசன்யால் மா.லெ. கட்சி கட்டுவதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்கிறார். கனுசன்யால் சீனாவிலிருந்த போது இந்தியாவில் அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் கூட்டமைப்பு 1967- நவம்பரில் உருவாக்கப்பட்டது. இந்த வளர்ச்சி பற்றி தோழர் கனுசன்யால் அறிந்திருக்கவில்லை என்று கூறுகிறார். சீனாவில் இருந்து திரும்பிய உடன் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறையில் ஓராண்டு கழிந்து வெளிவந்த பிறகு சி.பி.ஐ. (எம்.எல்) உருவாக்கப்பட்டதை கல்கத்தாவில் மே-1ம் தேதி கனுசன்யால் அறிவித்தார். சி.பி.ஐ. (எம்.எல்) உருவான காலக்கட்டத்தில் அகில இந்திய கம்யூனிசப் புரட்சியாளர்கள் குழுவின் உள்ளேயும் வெளியேயும் வேறுபாடுகளும் கடுமையான விவாதங்களும் நடைபெற்று வந்தது. இது கனுசன்யாலுக்கும் மற்ற நக்சல்பாரி தோழர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை. சி.பி.ஐ (எம்.எல்) சாருமஜும்தாருடைய பாதையை ஏற்றது. இந்தப் பாதை கனுசன்யாலால் தலைமை தாங்கப்பட்ட நக்சல்பாரிபோராட்ட இயக்கத்தினால் முன்பே ஒதுக்கித் தள்ளப்பட்டது.
கனுசன்யால் அரசியல்வழி பற்றிப் பேசுகிறாரே ஒழிய திட்டம்பற்றி எதுவும் பேசவில்லை. அத்துடன் அரசியல்வழி பற்றிய பிரச்சினையிலும் கூட தமது நிலைப்பாட்டை முன்வைத்துப் போராடவும் இல்லை. ஒருங்கிணைப்புக் குழுவிலும் இ.க.க (மா.லெ) மத்தியக் கமிட்டி உறுப்பினராக அவர் இருந்தார் என்பது மட்டுமல்ல, இ.க.க (மா.லெ.) கட்சி அமைக்கப்பட்டதை அவர்தான் பிரகடனப்படுத்தினார். இவ்வாறு கட்சிக்குள் மௌனமாக இருந்துவிட்டு கட்சி கட்டுவதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவது கனுசன்யாலின் சந்தர்ப்பவாதத்தைதான் காட்டுகிறது.
கனுசன்யாலிடம் இருந்த பொருளாதாரவாதம் மற்றும் வலது சந்தர்ப்பவாதம் தான் சாரு மஜூம்தாரை எதிர்த்து கட்சிக்குள் தனது நிலையை வைத்துப் போராடாமல் மௌனமாக இருக்கச் செய்தது. கனுசன்யால் தனது இத்தகைய போக்குப் பற்றி தனது சுயவிமர்சனத்தில் பின்வருமாறு கூறியுள்ளதாக “கனுசன்யால் பொதுவுடைமை இயக்கத்தின் கலங்கரை விளக்கம்” என்ற கட்டுரையில் சுபோத் மித்ரா கூறுகிறார்:
“ஆனாலும் கனுசன்யால் இந்தப் பாதையை (சாருவின் இடது தீவிரப் பாதையை) எதிர்த்துத் தொடர்ச்சியான விடாப்பிடியான வழியில் போராடவில்லை. தலைமை தாங்குபவர் மற்றும் வழிநடத்துபவர்கள் பற்றி மார்க்சிய விரோதக் கருத்துக்களை கனுசன்யால் கொண்டிருந்தார். கனுசன்யால் தோழர் சாருமஜூம்தாரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல தருணங்களில் எதிர்த்தவர். ஆனாலுங்கூட மா.லெ. கட்சியின் உருவாக்கத்தின் போது சாருமஜூம்தாரின் பங்கைப் பற்றிய விஷயத்தில் அவர் மிகமோசமான மார்க்சிய விரோத நிலையை எடுத்தார். சாரு மஜூம்தாரின் பாதைக்கு ஆதரவு தெரிவித்தும், அதைப் பரந்த அளவில் வெவ்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்ததையும் கவனித்த கனுசன்யால் அந்தக் காலக்கட்டத்தில் பொறுத்திருந்து பார்ப்பது என்ற நிலையை எடுத்தார். இது கனுசன்யால் உண்மையில் மார்க்சியத்தைக் கைவிட்டுவிட்டதையும், அனுபவ வாதத்திற்கு அடிபணிந்து போனதையும், மிக மோசமான வடிவில் தாராளவாதத்தை நடைமுறைபடுத்தியதையும் காட்டியது. 1969-ஆம் ஆண்டில் கட்சி உருவாக்கத்தின் போதும் 1970-ஆம் ஆண்டு கட்சிக் காங்கிரசின் போதும் கனுசன்யால் அமைதிகாத்தது சாரு மஜூம்தாரின் பாதைக்கு மறைமுகமாக ஆதரவளித்துதான்” என்று கூறுகிறார்.
நக்சல்பாரி எழுச்சியின் தோல்விக்குப் பிறகு கட்சி அணிகளுக்கு கனுசன்யாலும் 6 மத்தியக் கமிட்டி உறுப்பினர்களும் சேர்ந்து 1970-க்குப் பின்பு சிறையிலிருந்து கட்சி அணிகளுக்கு ஒரு வெளிப்படையான கடிதத்தை எழுதினர். அந்தக் கடிதத்தில் திட்டம் பற்றி எந்தவித நிலைப்பாட்டையும் முன்வைக்காமல் சாருவின் இடது தீவிரவாத வழியை எதிர்த்துப் போராட அழைப்பு விடப்பட்டது. அந்தக் கடிதம் 4 பிரச்சினைகளை முன்வைத்து எழுதப்பட்டது.
i) சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1970-நவம்பரில் நமது விடுதலைப் புரட்சி குறித்து முன்வைத்த ஆலோசனைகளை சாருமஜூம்தாரும், மத்தியக் கமிட்டியும் ஏற்று சுயவிமர்சனமாக வரவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை மத்தியக் கமிட்டியும், சாருமஜூம்தாரும் அணிகளுக்கு சுற்றுக்கு விடவுமில்லை. இந்த ஆலோசனைகளிலிருந்து அவர்கள் பாடம் கற்கவுமில்லை. உட்கட்சி விவாதத்திற்கும் தயாரில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிய பழைய கேடு கெட்ட முறைகளே தற்போதும் கடைப்பிடிக்கப்பட்டது.
ii) சாருமஜூம்தாரும், இ.க.க.(மா.லெ) மத்தியக் கமிட்டியும் நமது விவசாயப் புரட்சியின் வசந்தத்தின் இடி முழக்கம் என்ற பிரசித்திப் பெற்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பாதையிலிருந்து முழுவதுமாக விலகிச் சென்றுவிட்டனர். இடது தீவிரவாத வழியைச் செயல்படுத்தி கட்சிக்குப் பெரும் தோல்வியைக் கொண்டுவந்துள்ளனர். எனவே இந்த வழிக்கு சாருமஜூம்தாரும் மத்தியக் கமிட்டியும் பொறுப்பேற்க வேண்டும். அதிலும் இதற்கு முதன்மையான பொறுப்பு சாருமஜூம்தாரே ஆவார்.
iii) நாங்கள் எந்த ஒரு குழுவோ அல்லது கோஷ்டியோ அல்ல என்பதைப் பிரகடனப்படுத்துகிறோம்.
iv) மாவோ சிந்தனையின் மீது நம்பிக்கையுள்ள - கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் உள்ள தோழர்களோடு பகைமையற்ற உறவுகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு கனுசன்யால் இ.க.க (மா.லெ) கட்சியை எதிர்த்து, தனது வலது சந்தர்ப்பவாத வழியில் அகில இந்திய அளவில் ஒரு மாற்றுக் கட்சியை கட்டுவதற்கு அழைப்பு விடுத்தார்.
அதனடிப்படையில்தான் கட்சிக்கு உள்ளே உள்ள புரட்சியாளர்களைக் கொண்டும் வெளியிலுள்ள குழுக்களுடனும் ஐக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
தொடரும்: நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(6)
கனுசல்யாவின் ஐக்கியத்திற்கான முயற்சிகளும்பிளவுகளும்.
-------------
முன்னைய தொடர்களுக்கு; சமரன் தொடர் (1)