Sunday 25 November 2018

கட்சிப் பிரசுரம்:மா.லெ.புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே.விற்கு சிவப்பு அஞ்சலி


மார்க்சிய லெனினிய புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே.விற்கு சிவப்பு அஞ்சலி.

தோழர் ஏ.எம்.கே என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நக்சல்பாரி புரட்சித் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் 25-11-2018 அன்று அதிகாலை வீரமரணம் அடைந்தார்.1934 இல் பிறந்த தோழர் ஏ.எம்.கே தனது மாணவப் பருவத்திலேயே நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை எதிர்த்தும், சாதி தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு போராடினார். பின்பு சீர்திருத்தத்தால் சமூக மாற்றம் வராது, சாதிக் கொடுமைகள் ஒழியாது, வர்க்கப் போராட்டம் மூலமே இக் கொடுமைகளை ஒழிக்கமுடியும் என்று முடிவெடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து சட்டக் கல்லூரி மாணவராக இருந்த போதே, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கட்சியின் தவறான முடிவை மீறி முன்னின்று நடத்தினார்.இந்தி ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக மாணவர்களைத் திரட்டினார்.கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வழக்கறிஞர் தொழிலுக்குச் செல்லாமல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டார்.சட்டவாதத்தையும் தொழிற்சங்க வாதத்தையும் தூக்கி எறிந்து ஆசிய அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்க்குணமிக்க தொழிற்சங்க இயக்கத்தை சென்னையில் கட்டி அமைத்தார்.இவருடன் இணைந்து தொழிற்சங்க தலைவர் குலேசர்,சீனிவாசன், கோவை ஈஸ்வரன், மேயர் கிருஸ்ணமூர்த்தி போன்றவர்கள் இணைந்து பணியாற்றினர்.

ஸ்டாலினின் மறைவுக்குப் பின் குருச்சேவ் கும்பல் நவீன திருத்தல்வாதத்தை முன்வைத்து முதலாளித்துவ கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சிகளை சீரழித்தபோது இந்தியாவில் டாங்கே, அதனைத் தொடர்ந்து இ.எம்.எஸ்,ஜோதிபாசு போன்றோரின் திருத்தல்வாதத்தை எதிர்த்து மாஓவின் வழியில் இந்தியாவில் ஒரு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவப் பாடுபட்டார்.அகில இந்திய அளவில் சாரு மஜூம்தாருடனும், தமிழகத்தில் அப்புவுடனும் இணைந்து முன்னணித் தலைவராக இருந்து நக்சல்பாரிக் கட்சியைக் கட்டியெழுப்பினார்.கட்சியின் இடது தீவிரவாத வழி காரணாமாக தலைவர்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள்.புரட்சி தோல்வியடைந்தது.கட்சி சிதறுண்டது.தோழர் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தார்.சிறையிலும் கைதிகளின் உரிமைக்காகவும், எமெர்ஜென்சி கால சிறைக் கொடுமைகளை எதிர்த்தும் போராடி இந்திய சிறை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் பட ைத்தார். எமெர்ஜென்சி தடுப்புக்காவலில் கடைசியாக விடுதலை செய்யப்பட்டவர் இவர்தான்.

சிறையில் இருந்து விடுதலை அடைந்த பிறகு, சமரன் பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதார தத்துவ கட்டுரைகளை வெளியிட்டு தமிழகத்தில் புரட்சிகர பாத்திரத்தை மிகச் சிறப்பாக ஆற்றினார்.அது இன்றளவும் பேசக் கூடியதாக உள்ளது.இந்தியாவில் புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து அகில இந்திய கட்சிகட்டுவதில் முக்கியமான பங்கு வகித்தார்.கட்சிக்குள் போர்க்குணம் மிக்க பொருளாதார தன்னியல்பு வழியை எதிர்த்து லெனினிய வகைப்பட்ட அரசியல் வழியை முன்வைத்து கட்சியை சீரமைக்கப் போராடினார். ஆனால் கட்சி பிளவுபட்டது.போல்ஸ்விக் கட்சியை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்.

இந்தக் கட்டத்தில் 83 இலிருந்து ஈழத்தமிழர்களின் தனித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து, இந்திய விரிவாதிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து சமரசமின்றிப் போராடினார்.தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், இரு மொழி-மும் மொழிக் கொள்கைகளை எதிர்த்தும், ஒரு மொழி-தாய் மொழிக் கொள்கையை முதன் முதலில் இந்திய அளவில் மார்க்சிய லெனினிய வழியில் நிறுவினார்.

90 ஆம் ஆண்டுகளில் கோர்ப்பச்சேர்வ் கலைப்புவாதத்தால், ரசியா சிதறுண்டு போனது.சீனாவில் டெங் திருத்தல்வாதக் கும்பலால் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியை பயன்படுத்தி `கம்யூனிசம் தோற்றது` என்று கூறி ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சியத்தின் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர்.வர்க்கப் போராட்டமே தவறு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தவறு என்று ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களும், புதிய இடது, பின் நவீனத்துவக் 
கும்பலும், பெரியாரையும் அம்பேத்காரையும் பேசி, சாதி வாதத்தை முன் வைத்து புரட்சிகரக் கட்சியைப் பிளவுபடுத்தினர்.நான்கு பிளவுகளையும் கலைப்புவாதத்தையும் முறியடித்து, மார்க்சிய லெனினியத்தையும் சோசலிசத்தையும் புதிய ஜனநாயகப் புரட்சியையும் உயர்த்திப் பிடித்து பாட்டாளி வர்க்கக் கட்சியைப் பாதுகாத்த ஒரே புரட்சிகர தலைமையாக உயர்ந்து நின்றார் தோழர் ஏ.எம்.கே.50 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்து, தலைமறைவு ஸ்தாபனத்தின் அவசியத்திற்கு அடையாளமாக வாழ்ந்து காட்டியவர்.  

90 களுக்கு பிறகு இந்தியாவின் ஆளும் தரகுமுதலாளித்துவ கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து டங்கல் திட்டத்தையும் அதைத் தொடர்ந்து புதிய காலனிய, உலகமய,  தாராளமய, தனியார்மய, கொள்கைகளையும் அமூல்படுத்தி உலக முதலாளித்துவ நெருக்கடியை மக்கள் மேல் திணித்தனர்.டங்கல் திட்டம் அடிமைச் சாசனம் என்ற நிலைப்பாட்டை முன்வைத்து இந்தியாவில் முதன் முதலில் டங்கல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வழிகாட்டியவர் தோழர் தான்.உலகமயக் கொள்கைகளை எதிர்த்து வாழ்விழந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர்.போராடும் மக்களை ஒடுக்க அவர்களின் அரைகுறை ஜனநாயக உரிமைகளை பறித்து பாசிச தாக்குதல் தொடுத்து, மக்களைச் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மோத விடுகின்றனர். இத்தகைய பாசிசக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் காங்கிரசும் பா.ஜ.க வும் ஒன்றுதான்.இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களாக காங்கிரசும் பா.ஜ.க வும் திகழ்கின்றன என்பதை முன்வைத்து இந்தியாவில் சரியான பாசிச எதிர்ப்பு செயல்தந்திர அரசியல் வழியை முன்வைத்தார்.

தோழர் ஏ.எம்.கே.வழியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நில உடைமை எதிர்ப்பு, சாதி தீண்டாமை ஒழிப்பு, ஒரு மொழிக் கொள்கை, தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை போன்றவற்றை நிறைவேற்ற, புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க, தொண்டு நிறுவன ஊடுருவல் சதிகளை முறியடித்து, கட்சியைக் காப்போம், புரட்சிக்கு அணி திரள்வோம் என்று அறைகூவி அழைக்கின்றோம்.

தோழர் ஏ.எம்.கே வழியை உயர்த்திப் பிடிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!!

இ.க.க.(மா.லெ) மக்கள் யுத்தம் (போல்ஸ்விக்), தமிழ்நாடு.26-11-2018

26-11-2018

No comments:

Post a Comment