Thursday 7 February 2019

தோழர் ஏ.எம்.கே கழக நினைவேந்தல்-அணிதிரள்வோம்!

இந்திய பாட்டாளிவர்க்கப் புரட்சியின் விடிவெள்ளி, 
தோழர் ஏ.எம்.கே - அவர்களின் நினைவேந்தலுக்கு அணிதிரள்வோம்!!

இடம் : செங்கல்பட்டு, நகராட்சி திருமண மண்டபம்

நாள்  03.03.2019, ஞாயிறு, மாலை 3.00 மணி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
 

இந்திய போல்சுவிக் புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே.அவர்கள்  
நக்சல்பாரிப் புரட்சி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், இ.க.க. (மா.லெ) (ம.யு) போல்ஷிவிக் கட்சியின் செயலாளருமான தோழர் ஏ.எம்.கே. என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் அவர்கள் கடந்த 2018 நவம்பர்-25 அன்று, தனது 84-வது வயது வரை வாழ்நாள் புரட்சியாளராக வாழ்ந்து வீர மரணம் அடைந்தார்.

தோழர் ஏ.எம்.கே. வேலூர் மாவட்டம், ஆற்காடு ஒன்றியம், ஆனைமல்லூர் கிராமத்தில் ஒரு பணக்கார விவசாயக் குடும்பத்தில் திரு. மருது-இரத்தினம்மாள் தம்பதியருக்கு மூத்தமகனாகப் பிறந்தார்.

பள்ளிப் பருவத்தில் மாணவராக இருந்தபோதே நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை எதிர்த்தார். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் சாதி, தீண்டாமை வர்ணாசிரமக் கொள்கைகளை பெரியாரின் வழியில் எதிர்த்துப் போராடினார். அதே காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் தோழர்களின் அறிமுகம் கிடைத்தது. பெரியாரிய பார்ப்பனிய எதிர்ப்பு, சாதிய சீர்திருத்தம் எக்காலத்திலும் நிலவுடைமை ஆதிக்கத்தை ஒழிக்காது, சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு காணாது என்பதை உணர்ந்தார். வர்க்கப் போராட்டமே அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதை புரிந்து கொண்டார். இந்திய நாட்டின் புதிய ஜனநாயகப் புரட்சியை முடித்து பொதுவுடைமை சமுதாயம் படைப்பதை தனது இலட்சியமாக ஏற்று 17வது வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார்.

போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கம் கட்டுதல்:

மேற்படிப்புக்காக சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து மதராஸ் மாணவர் (MSU) சங்கத்தைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். மாணவர்களின் அன்றாட நலன்களுக்காகப் போராடும் அமைப்பாக மட்டும் மாணவர் அமைப்பு இருக்கக் கூடாது. அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் எனக் கருதினார். கட்சியின் முடிவு இல்லாமலே அன்று இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். அவர் இந்தித் திணிப்பை எதிர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடினார். திமுக-வின் இருமொழிக்கொள்கை மோசடியை அம்பலப்படுத்தினார். ஒரு மொழிக்கொள்கையின் அடிப்படையில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தில் முதன்முதலில் முன்வைத்தது அவர்தான்.

சட்டப்படிப்பு முடிந்தவுடன் வழக்கறிஞர் தொழிலை வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளவில்லை. வர்க்கப்போராட்ட மேடையாக நீதி மன்றங்களை மாற்ற வேண்டும் என்பதற்காக மேற்கொண்டார். ஆனால் அவர் மிக விரைவாகவே வழக்கறிஞர் தொழிலைத் தூக்கியெறிந்துவிட்டு வர்க்கப் போராட்டத்திற்கு தயாராகி தொழிலாளர் இயக்கத்தைக் கட்ட முழு நேரப் போராளியாக மாறினார்.

அன்று ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் மோகன் குமாரமங்கலம் தலைமையிலான தொழிற்சங்கம் காங்கிரஸ் ஆதரவு, சட்டவாதம், நிர்வாக ஆதரவு நிலை எடுத்து இயங்கியது. இத்தகைய நிலையில்தான் தோழர் ஏ.எம்.கே. தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும், வாழ்நிலை மேம்பாட்டிற்காகவும் போர்க்குணமிக்கப் போராட்டங்களைக் கட்டி அமைத்தார். இதன் மூலம் தொழிற்சங்கப் போராட்டம் தொழிலாளர் களுக்கான சோஷலிசத்தின் பயிற்சிப் பள்ளியாக அமைய வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் செயல்பட்டார். அவரது தலைமையின் கீழ் தோழர்கள் குசேலர், கோவை ஈஸ்வரன், பி.வி.சீனிவாசன் மற்றும் சென்னை மேயராக இருந்த ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அவருடன் இணைந்து பணியாற்றினர்.

டன்லப், டி.ஐ.சைக்கிள், டி.வி.எஸ் மற்றும் டபிள்யூ.எஸ் போன்ற தொழிற்சாலைகளில் நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து, ரௌடிகளை வைத்து மிரட்டுவதை எதிர்த்து தொழிலாளர்கள் தெருச்சண்டைகள் நடத்தினர். ஆளும் வர்க்கங்களின் வன்முறைக்கு எதிராக தொழிலாளர்கள் தற்காப்பிற்கான வன்முறையால் எதிர்கொண்டனர். “இங்கேயும் ஒரு நக்சல்பாரி” போராட்டம் என்றும் வன்முறை என்றும் கூறி காங்கிரஸ் அரசாங்கம் அடக்குமுறைகளை ஏவியது. ஆனால் அடக்குமுறைகளை மீறி தொழிலாளர் இயக்கம் வெற்றி பெற்றது. ஆனால் இத்தகைய தன்னியல்பான போராட்டங்களை முறையான அரசியல் அதிகாரத்திற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டுமானால் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தேவை என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

கட்சி கட்டும் பணிகள்:

இத்தகைய ஒரு சூழலில்தான் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து மாவோவின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி “மாபெரும் விவாதத்தை” நடத்தி உலகம் முழுவதும் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க உதவியது. டாங்கே தலைமையை எதிர்த்து புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவோம் என்று பேசிய சி.பி.எம். தலைவர்கள் மையவாத நிலையை எடுத்தனர். அத்தகைய மையவாத நிலைபாட்டை எதிர்த்து 1967இல் தமிழ் நாட்டைச் சேர்ந்த தோழர்கள் எல்.அப்பு, ஏ.எம்.கே உள்ளிட்டு இந்தியா முழுவதிலும் உள்ள புரட்சியாளர்கள் தோழர் சாரு மஜூம்தார் தலைமையில் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவினர். 1970 இல் இ.க.க. (மா.லெ) கட்சி உருவாக்கப்பட்டது.

திரிபுவாதம்-நவீன திரிபுவாதத்தை எதிர்த்தும், பாராளுமன்றவாத அமைதிவழிப் பாதையை எதிர்த்தும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆயுதப் போராட்டப் பாதையை அக்கட்சி முன்வைத்து புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைத்தது. ஆனால் மக்கள் திரள்வழியை புறக்கணித்து, அழித்தொழிப்பு வழி என்ற இடது தீவிரவாத வழியாலும், இந்திய அரசின் கொடிய அடக்குமுறைகளாலும் புரட்சி தோல்வி அடைந்தது. 
தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஒரு சில ஆண்டுகளிலேயே கட்சி சிதறுண்டுபோனது. தோழர் ஏ.எம்.கே. காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார். சிறையில் பல வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களை நடத்தி கைதிகளுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்.

மிசா சட்டம் நீங்கிய பிறகு விடுதலை அடைந்த தோழர் ஏ.எம்.கே:

மூன்றாகப் பிளவுபட்டு போன குழுக்களில் கூட்டக் குழுவாக இயங்கிவந்த குழுவோடு சேர்ந்தார். உடனடியாக ஆந்திராவில் இயங்கிவந்த கொண்டபள்ளி சீதாராமையா இயக்கத்துடன் இணைந்து இ.க.க.(மா.லெ) மக்கள் யுத்தம் என்ற அகில இந்தியக் கட்சியை கட்டினார். அக்கட்சியின் தலைமையில் வட ஆற்காடு, தர்மபுரியில் தேவாரம் தலைமையிலான போலீஸ் படையினர் நக்சல் வேட்டை என்ற பேரில் நடத்திய படுகொலைகளை மீறி இயக்கத்தை காப்பாற்றினார். சமரன் பத்திரிகை மூலம் தத்துவ, அரசியல் பிரச்சாரத்தை நடத்தினார்.

ஆனால் அக்கட்சியின் தலைமையில் மக்கள் இயக்கம் பல்கி பெருகினாலும் அக்கட்சி கடைபிடித்த போர்க்குணமிக்க பொருளாதாரவாதம் மற்றும் அழித்தொழிப்பு என்ற இரு வகை தன்னியல்பை இணைத்த அரசியல் வழி, இயக்கத்தை ஒரு முட்டுச் சந்தில் நிறுத்தியது. அதிலிருந்து மீள்வதற்காக “இந்திய புரட்சியின் போர்த்தந்திரம் செயல்தந்திரம்” என்ற ஆவணத்தை தோழர் ஏ.எம்.கே. தலைமையில் மையக்குழு பெரும்பான்மையினர் வைத்தபோது கொண்டபள்ளி சீதாராமையா இருவழிப் போராட்டத்தை மறுத்து கட்சியை மேலிருந்து பிளவுபடுத்தினார். மேலிருந்து திணிக்கப்பட்ட அந்தப் பிளவு அகில இந்திய அளவிலும் 
தமிழகத்திலும் கடுமையானப் பாதிப்புகளைக் கொண்டு வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினர் தோழர் ஏ.எம்.கே. வழியை ஏற்று தனிக் குழுவாக போல்ஷ்விக் கட்சி என்ற பேரில் செயல்பட்டனர்.

போல்ஸ்விக் கட்சி உதயமும் கலைப்புவாத எதிர்ப்புப் போராட்டமும்:

1990 களில் உலக அளவிலும், நாடு அளவிலும் இரண்டு பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. 

ஒன்று, சோவியத் யூனியனின் சிதைவு மற்றும் சீனாவில் முதலாளித்துவ மீட்சியின் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் புதிய காலனிய புதிய தாராளக் கொள்கைகளின் தாக்குதல். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்காக அது நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்கள்.

இரண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியமும் கோர்பச்சேவ் கும்பலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அழிக்க கட்டவிழ்த்துவிட்ட கலைப்புவாதம்.

தோழர் ஏ.எம்.கே அவர்கள் இவ்விரண்டு மாற்றங்களையும் கணக்கில் கொண்டு வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில், மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தில் ஊன்றி நின்று ஒரு சரியான போர்த்தந்திர செயல்தந்திர வழியை முன்வைத்து இயக்கத்தை வழிநடத்தினார். சர்வதேச அளவில் ஏற்பட்ட கலைப்புவாதப் போக்குகளை ஆய்வு செய்து தத்துவ, அரசியல், அமைப்பு ரீதியில் எதிர்த்துப் போராடினார். அமைப்பை நிலைநிறுத்தினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் உலக மேலாதிக்கத்திற்கான ஆக்கிரமிப்புப் போர்களை எதிர்த்து மக்களை அணிதிரட்டியது; 
அண்மைக்காலங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ரஷ்ய சீன ஏகாதிபதியவாதிகளுக்கும் உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போர் துவங்கிவிட்டதை எடுத்துக் காட்டி அநீதிப் போர்களை எதிர்த்து மக்களை அணிதிரட்டியது; 
இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கப் போர்களுக்கு இந்தியாவை இளையபங்காளியாக மாற்றும் அணுசக்தி மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் போட்டதை எதிர்த்து
போராடியது; 
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த உலகமய தனியார்மய தாராளமயம் எனும் புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தி, இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதை எதிர்த்து தொடர்ந்து இயக்கம் நடத்தியது; 
இந்திய அரசாங்கம் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருந்து, நடத்திவரும் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும், விரிவாதிக்கக் கொள்கைகளையும் எதிர்த்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடியது; குறிப்பாக ஈழத் தமிழினத்தின் தனிநாடு அமைத்துக் கொள்வதற்கு எதிராக சிங்கள இனவெறி அரசோடு இந்தியா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கூட்டு சேர்ந்து இன அழிப்புப் போர் நடத்தியதை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது; 
நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை எதிர்த்தும், குறிப்பாக இன்றைய கார்ப்பரேட் விவசாயக் கொள்கைகளை எதிர்த்து நிலச்சீர்திருத்தத்திற்காகப் போராடியது; நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானமான சாதிய முறைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து சாதி ஒழிப்பை முன்னிறுத்தியும் தொடர்ந்து இயக்கம் நடத்தியது; சாதி, தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை சாதிவாத இயக்கமாக மாற்றும் அடையாள அரசியலை எதிர்த்து அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டு, அரை நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தை முன்வைத்து போராடியது; 
இந்திய நாட்டில் கட்டியமைக்கப்படும் பாசிசமான காங்கிரசின் பெருந்தேசிய வெறி பாசிசத்தையும், பாஜகவின் இந்துமதவாத பாசிசத்தையும் `இந்திய பாசிசத்தின் இரு முகங்கள்` என்று வரையறுத்தது; இன்றையப் பாசிசம் என்பது நிதி மூலதனக் கும்பலின் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்குச் சேவை செய்யும் கார்ப்பரேட் பாசிசம் என்று வரையறுத்தது; காங்கிரஸ், பா.ஜ.க இரு கட்சிகளையும் எதிர்த்து பாசிச எதிர்ப்பு இயக்கம் கட்ட முயற்சி எடுத்துவருவது என்ற செயல் தந்திரங்கள் தோழர் ஏ.எம்.கே அவர்களால் முன்வைக்கப்பட்ட சரியான மார்க்சிய லெனினிய செயல்தந்திரங்களாகும்.
இத்தகைய செயல்தந்திரங்கள் மக்களைப் பெரிதும் இயக்கத்தை நோக்கி இழுத்தது. ஆனாலும் மக்களை அணிதிரட்ட முடியாமல் இயக்கம் பின்னடைவை சந்திப்பதற்கு ஏகாதிபத்தியவாதிகள் தொடுத்து வரும் கலைப்புவாதத் தாக்குதல்களே காரணம் ஆகும்.

90-களில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் கோர்பச்சேவ் கும்பலும் உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் அமார்க்ஸ் கும்பல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் கலைப்புவாதக் கருத்துக்களை முன்வைத்து பாட்டாளி வர்க்க இயக்கத்தை சீர்குலைத்து வருகிறது. பாட்டாளிவர்க்க இயக்கத்தின் தத்துவமான வரலாற்றியல், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை நிராகரிப்பது; மார்க்சியத்துக்கு எதிராக பெரியாரியத்தையும், அம்பேத்கரியத்தையும் நிறுத்துவது; ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக காலனி மற்றும் புதிய காலனியத்திற்கு ஆதரவான கருத்துக்களைப் பரப்புவது; தேசிய இனம், சாதியம் பற்றிய பிரச்சினையில் பின்நவீனத்துவ, தலித்திய, பெண்ணிய மற்றும் கட்டுடைத்தல் கருத்துக்களைப் பரப்புவது; வர்க்கப் போராட்டங் களுக்கு மாறாக அடையாள அரசியலை முன்வைப்பது என்ற கலைப்புவாத அரசியலைக் கொண்டு கட்சியைப் பிளவுபடுத்தி வருகின்றனர்.

இன்றைய எதிர்ப்புரட்சி கோலோச்சும் காலத்தில், கடந்த காலத்தில் புரட்சியாளர்களாக இருந்தவர்கள் பலர் புரட்சியின் மீதும் மார்க்சிய- லெனினியத்தின் மீதும் நம்பிக்கை இழந்து, குட்டிமுதலாளித்துவ 
சிந்தனையாளர்களாக தங்களது குடும்ப நலனை முன்னிறுத்தி திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதத்திற்குப் பலியாகி சீரழிந்துள்ளனர். அந்த உண்மையை மூடி மறைத்து அனைத்திற்கும் தோழர் ஏ.எம்.கே மீது குற்றம் சுமத்துகின்றனர். தங்களது சீரழிவுகளை மூடி மறைக்க முயற்சித்துத் தோல்வி அடைகின்றனர்.

எனவே பாட்டாளி வர்க்க தத்துவமாம் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் ஒளியில், ஒப்பற்ற புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே-இன் வழியில் கலைப்புவாத, பிளவுவாதப் போக்குகளை முறியடித்து; ஏகாதிபத்திய அடிமைத்தனத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் சபதமேற்க அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

*மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் ஒளியில்
ஏ.எம்.கே. வழியில்
புதிய ஜனநாயகப் புரட்சியினை முன்னெடுப்போம்!

*ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்திற்குச்
சேவை செய்யும் கலைப்புவாதக் கருத்துகளை 
முறியடித்து புரட்சிகர இயக்கத்தைப் பாதுகாப்போம்!

=============================
தோழர் ஏ.எம்.கே அவர்களின்
நினைவேந்தலுக்கு அணிதிரள்வோம்!!

இடம் : செங்கல்பட்டு, நகராட்சி திருமண மண்டபம்

நாள் : 03.03.2019, ஞாயிறு, மாலை 3.00 மணி

வரவேற்புரை: தோழர் கார்த்திகேயன், ம.ஜ.இ.க., செங்கல்பட்டு

தலைமை: தோழர் ஸ்டாலின், மாநில அமைப்பாளர், ம.ஜ.இ.க.

தலைமைத் தோழர் ஏ.எம்.கே. உருவப் படத்தினை திறந்துவைப்பவர்
தோழர் தேன்பழனி, ம.ஜ.இ.க., தர்மபுரி

ஏ.எம்.கே.இன் நினைவேந்தல் நூல் வெளியீடு

நூல் வெளியிடுபவர்: தோழர் குணாளன், 
ம.ஜ.இ.க. வேலூர் மாவட்ட அமைப்பாளர்
நூல் பெறுபவர்: தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

நினைவேந்தல் உரைகள்

தோழர் இரா.சம்பத், 
துணைத் தலைவர், உழைக்கும் மக்கள் மாமன்றம்

தோழர் தியாகு,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் குணாளன்,
மாநில செயலாளர், இ.க.க. (மா.லெ)

தோழர் NGR பிரசாத்,
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

தோழர் சங்கரசுப்பு,
மக்கள் வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

தோழர் தங்கமணி, பாப்பாநாடு, தஞ்சை

தோழர் ராகவன்,
வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

திருமதி மஞ்சுளா, தோழர் ஏ.எம்.கே. மகள், வேலூர்

தோழர் சோழ நம்பியார், 
ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்

தோழர் செந்தமிழ் குமரன்,
அமைப்புச் செயலாளர், தமிழ்த் தேச மக்கள் கட்சி

தோழர் மனோகரன், சமரன் வெளியீட்டகம்

தோழர் சோமு, ம.ஜ.இ.க.,
சேலம்-ஈரோடு-நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்

தோழர் குணாளன், 
ம.ஜ.இ.க., வேலூர் மாவட்ட அமைப்பாளர்

தோழர் மணி, ம.ஜ.இ.க., சென்னை

தோழர் மாயக்கண்ணன், 
ம.ஜ.இ.க., தர்மபுரி மாவட்ட அமைப்பாளர்

தோழர் இரணதீபன், 
ம.ஜ.இ.க., தஞ்சை மாவட்ட அமைப்பாளர்

தோழர் சண்முகம், ம.ஜ.இ.க.,
கடலூர்-விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்

தோழர் பூபதி, ம.ஜ.இ.க., கோவை

தோழர் குமார், ம.ஜ.இ.க., திருச்சி

தோழர் வெண்ணிலா, ம.ஜ.இ.க., சென்னை

தோழர் சேல் முருகன், 
வழக்கறிஞர், ம.ஜ.இ.க., அரக்கோணம்

நன்றியுரை: தோழர் ஆதிசிவன், ம.ஜ.இ.க.,
சென்னை-செங்கை மாவட்ட அமைப்பாளர்

மக்கள் கலை மன்ற கலை நிகழச்சி நடைபெறும்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம். தமிழ்நாடு

தொடர்புக்கு: தோழர் ஸ்டாலின் (மாநில அமைப்பாளர்), 3/20, அண்ணா தெரு, மேட்டுக் குப்பம், வானகரம், சென்னை-98 செல்: 8903847800

பெப்ரவரி-2019

அனைவரும் வருக!                                                                          ஆதரவு தருக!                                                                                                          
----------------------------------------------------



No comments:

Post a Comment