Thursday 19 September 2019

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர் (2)


கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்
முன்னுரை-பகுதி 2
================
கலைப்பு வாதம் என்பது என்ன?

கருத்தியல் முனையில் கலைப்புவாதம் என்பது
மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகள் மீதும் -
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப்
பொருள்முதல்வாதத்தின் மீதும் - தாக்குதல் தொடுப்பதாகும்.
மார்க்சியத்தை வளப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு மார்க்சியத்தின்
அடிப்படையான சித்தாந்தங்களில் (கோட்பாடுகளில்), சிலவற்றை ஒழித்துக்கட்ட
முயல்வதும்; மார்க்சியம் குறையுள்ளதாகக் கூறி அதை நிறைவு செய்வதற்கு மார்க்சியத் தத்துவ ஞானத்துடன் ‘கான்ட்’ தத்துவஞானம் மற்றும் பிற கருத்துமுதல்வாதப் பிற்போக்கு தத்துவஞானங்களைக் கலப்பதன் மூலம் நிறைவு செய்யவேண்டும் என்றும்; மார்க்சியத் தத்துவ ஞானத்திற்கும் அதனுடன் வேறுபட்டுள்ள எதிரெதிரான தத்துவஞானத்திற்கும் இடையில் ஏதாவது ஒரு பொது உடன்பாட்டுக் கூறு ஒன்றைக் காண்பதும்; அவ்வாறு பல்வேறு எண்ண-கருத்து-முதல்வாதத் தத்துவங்களைக் கலப்பதன் மூலம் மாயாவாத
இறையியல் தத்துவத்துக்கு மார்க்சியத்தை மாற்றியமைத்துக்
கொள்வதும் ஆகிய அனைத்தும் கலைப்புவாதமாகும்.

மார்க்சியத்தின் குறையை நிறைவு செய்யும் பொருட்டு கருத்து
முதல்வாதத்தைக் கலப்பதன் அவசியத்தைக் காட்டுவதற்காக
முன்கொணரப்பட்ட எல்லாக் ‘காரணங்களும்’ அடிப்படையற்றவை
என்பதை `மார்க்சியத்தின் அடிப்படைகள்` என்ற நூலில் பிளக்கானவ் எடுத்துக்காட்டினார்.

மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகள் மீது அதாவது
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மீதும், வரலாற்றை விஞ்
ஞான ரீதியாக ஆராய்ந்து கண்ட அடிப்படையான மார்க்சிய
சித்தாந்தங்-கோட்பாடு - கள் மீதும் அவர்கள் தாக்குதல் தொடுத்ததை லெனின் கடுமையாக எதிர்த்தார். ரஷ்யாவில் 1905 புரட்சியின் தோல்விக்குப் பிறகு ரஷ்யாவில் கலைப்புவாதம் தலைதூக்கியது.

கலைப்புவாதத்தை எதிர்த்த போராட்டம் பற்றி லெனின்
பின்வருமாறு கூறுகிறார்.

கலைப்புவாதம் என்பது தத்துவ ரீதியாக ஓடுகாலித்தனத்துடன்
சம்பந்தப்பட்டது. கட்சியின் செயல் திட்டங்கள்,
தந்திரோபாயங்களைத் துறந்துவிடுவதுடன் சம்பந்தப்பட்டது.
சந்தர்ப்பவாதத்துடன் சம்பந்தப்பட்டது. கட்சி அமைப்புத்துறையில், கலைப்புவாதத்தின் சாரம் தலைமறைவு இயக்கத்தைத் துறந்துவிடுதல் - அதைக்கலைத்துவிடுதல், எப்படியாவது அதற்குப் பதிலாக சட்டப்படியாக இயங்கும் அரூபமான ஒரு குழுவை நிர்மாணித்தல்.எந்தவிலையைக் கொடுத்தாகிலும் - கட்சியின் செயல்திட்டங்கள், தந்திரோபாயங்கள், மரபுகள் ஆகியவற்றை விலையாகக் கொடுத்தாவது - வெளிப்படையான, கட்டுப்பாடற்ற முறையில் செயல்படும் ஒரு குழுவாக மாற்றியமைக்கும் ஒரு முயற்சிதான் கலைப்புவாதம். கலைப்புவாதத்தின் உள்ளார்ந்த பொருள் என்பது உழைக்கும் வர்க்கத்தின் சுதந்திரத்தையே அழித்தல். முதலாளித்துவ சிந்தனைகள் வாயிலாக உழைக்கும் வர்க்க சிந்தனையை அழித்துவிடுதல் ஆகும். தலைமறைவு வேலைகளை எதிர்ப்பதும், வெளிப்படையான கட்சியாக மாற்றியமைக்கும் முயற்சியும் பாட்டாளிவர்க்க கட்சியை சீர்குலைப்பதுமாகும்.

சமூக ஜனநாயக (பாட்டாளி வர்க்க) இயக்கங்களின் வரலாற்றுக்
காலப்போக்கில், அதுவும் முதலாளித்துவ எதிர்ப்புரட்சிக்
காலகட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தின் மேல் முதலாளித்துவத்
தாக்கங்களின் வெளிப்பாடாக பின்வருவன மேலோங்கி எழும் என
லெனின் கூறுகிறார்:

“சட்டவிரோதமான சமூக ஜனநாயகக் கட்சியை துறத்தல், அக்கட்சியின் பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும்
சிதைத்தல், சமூக ஜனநாயக முழக்கங்களின் அழுத்தத்தைக்
குறைக்கும் முயற்சி” ஆகியவையே கலைப்புவாதத்திற்கும்,
அதனால் கட்சியில் தோன்றும் நெருக்கடிகளுக்குமான முக்கிய
காரணங்களாகும் என்கிறார் லெனின்.

இதற்கு முக்கியமான காரணகர்த்தாக்கள் உறுதியற்ற ஊசலாடும்
தன்மையுடைய அறிவு ஜீவிகளும், குட்டி முதலாளித்துவ சக்திகளும்
ஆவர். இந்தச் சக்திகள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி விரைவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உழைக்கும் வர்க்க இயக்கத்தில் சேர்ந்துவிடுகின்றனர். ஆனால் இவர்களால் எதிர்ப்புரட்சிக் காலக்கட்டத்தைக் ‘தாங்கிக்’ கொள்ள முடிவதில்லை.

இந்த மாதிரியான நபர்களின் உறுதியற்ற தன்மை சித்தாந்த
ரீதியிலும், செயல்தந்திர ரீதியிலும் கட்சி அமைப்புக்குள்ளும்
வெளிப்படுகின்றன. இயல்பாகவே தலைமறைவுச் செயல்களை
எதிர்ப்பது என்பது புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்ப்பது என்று
பொருள்படும். இவர்கள் (தரகு) முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவச்
சர்வாதிகார ஆட்சி அமைப்பின் கீழ் சீர்திருத்தங்கள் செய்துவிட
முடியும் என்ற கேடுகெட்ட கருத்துடையவர்கள்.

நம்முடைய செயல்தந்திரங்கள் வேறானவை. நாம் ஒவ்வொரு
சீர்திருத்தத்தையும், ஒவ்வொரு சட்டப்பூர்வ அமைப்பையும்
உபயோகப்படுத்துகின்றோம். ஆனால் அவற்றை மக்களிடையே
புரட்சிகர உணர்வுகளைப் பரப்பவும் புரட்சிகரப் போராட்டத்தை
நடத்தவும் உபயோகிக்கிறோம். இதுவரையில் அரசியல் சுதந்திரம்
என்பதையே அறியாத ஒரு நாட்டில் இந்த நடைமுறை நமக்கு
நேரடியான முக்கியத்துவம் உடையதாகும். மார்க்சியவாதிகள்,
கலைப்புவாதம் என்பது தொழிலாளிகளிடையே முதலாளித்துவத்
தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியே என்பதை உழைக்கும்
வர்க்கத்துக்கு உணர்த்துவார்கள்.

கலைப்புவாதம் பற்றிய மேற்கண்ட மார்க்சிய லெனினிய
வரையறைகளிலிருந்து கலைப்புவாதப் போக்குகளை பின்வருமாறு
தொகுத்துக் கூறலாம்.

1) தத்துவத் துறையில் கலைப்புவாதம்: 

மார்க்சிய லெனினியதத்துவத்தைச் செழுமைப் படுத்துவது அல்லது மார்க்சியத்தின் போதாக்குறயை இட்டு நிரப்புவது எனும் பேரில், இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும் பதிலாக எண்ண-கருத்து முதல்வாதத்தை முன்வைப்பது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களை - எண்ணமுதல்வாதக் கருத்துக்களை மார்க்சியத்துடன் கலப்பது. மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம் என்று பேசி மார்க்சியத்தின் ஆன்மாவை அழிப்பது.

2) திட்டத்துறையில் கலைப்புவாதம்: 

அரசியல் துறையில், ஏகாதிபத்தியம் - பாட்டளிவர்க்க புரட்சிகர சகாப்தம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் பொருந்தாது என்று கூறி அதீத ஏகாதிபத்தியம் என்ற காவுத்ஸ்கி நிலைபாட்டை முன்வைப்பது. ஏகாதிபத்தியங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. உலக மறுபங்கீட்டீற்கான போர் இல்லை என்று கூறி திட்டத்தையும் போர்த்தந்திரங்களையும் துறப்பது. பாட்டாளிவர்க்க இயக்கத்தின் குறிக்கோள்களைச் சீர்குலைப்பது.

3) செயல் தந்திரத்துறையில் கலைப்பு வாதம்: 

இலக்கு அற்ற தன்னியல்பு செயல் தந்திரத்தை முன் வைப்பது. ஒரு புரட்சியின் கட்டம் முழுவதும் பொதுத் திட்டம் மாறாமல் இருக்கும்போதே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மாறும்போது சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பான திட்டத்தை முன்வைத்து மக்களைத் திரட்ட மறுப்பது. அத்துடன் இந்தியா போன்ற அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாட்டில், ஏற்றத்தாழ்வான சமூகப் பொருளாதாரம் நிலவுகின்ற ஒரு நாட்டில், புரட்சிகர சூழ்நிலைமைகளும் ஏற்றத்தாழ்வாகவே இருக்கும் எனவே இது போன்ற நாடுகளில், முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தியது போன்ற செயல்தந்திரத்தைச் செயல்படுத்த முடியாது என்பதை மறுப்பது.
மாறாக நாடாளுமன்ற வழி முறைகள் மூலமே மாற்றம் கொண்டு
வந்துவிடமுடியும் என்ற நாடாளுமன்றவாதத்தை முன்வைத்து
கட்சியை நடாளுமன்றவாதக் கட்சியாக மாற்றிவிடுவது.

4) அமைப்புத்துறையில் கலைப்புவாதம்:

அமைப்புத்துறையில் கலைப்புவாதத்தின் சாரம் கட்சிக்குள் இருவழிப் போராட்டம், ஜனநாயக மத்தியத்துவத்தை மறுப்பது; தலைமறைவுக் கட்சியைத் துறந்துவிடுதல் - அதைக் கலைத்துவிடுதல். எப்படியாவது அதற்குப் பதிலாக சட்டப்படியாக இயங்கும் அரூபமான ஒரு குழுவை நிர்மாணித்தல். அதாவது கம்யூனிஸ்டுக் கட்சியை ஒரு வெளிப்படையான முதலாளித்துவக் கட்சியாக மாற்றிவிடுதல். இவை அனைத்தும் கலைப்புவாதமே ஆகும்.

இன்றைய கலைப்புவாதம் என்பது கோர்பச்சேவ் கலைப்பு
வாதத்துடன் சம்பந்தப் பட்டதாகும். பிற்போக்குத் தாக்குதல்கள்,
நெருக்கடிகள் மற்றும் பின்னடைவுக் காலங்களில் திரிபுவாதம்
மற்றும் கலைப்புவாதப் போக்குகள் தலைதூக்குகிறது என்றார்
லெனின். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு சோவியத்
ரஷ்யாவில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பயன்படுத்திக்
கொண்டு ஸ்டாலினின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது
என்ற பேரில் குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ மீட்சியைக்
கொண்டுவந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் கோர்பச்சேவ் கும்பல் கலைப்புவாதத்தைக் கொண்டுவந்தது.
___
குருச்சேவின் திருத்தல்வாதமும்
கோர்பச்சேவின் கலைப்புவாதமும்
(தொடர்க)

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(1)

No comments:

Post a Comment