Saturday, 21 September 2019

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(3)


கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்

முன்னுரை-பகுதி 3

குருச்சேவின் திருத்தல்வாதமும் கோர்பச்சேவின் கலைப்புவாதமும்



ருஷ்யாவில் குருச்சேவின் திருத்தல்வாதமானது கோர்பச்சேவின் கலைப்புவாதமாக முடிவுற்றது. குருச்சேவின் திருத்தல்வாதம் ரஷ்யாவில் நடைமுறைப்  படுத்தப்பட்டதால் அங்கு சோஷலிச ஆட்சி ஒழித்துக்கட்டப்பட்டது. முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்தது. நவீனத் திருத்தல்வாதிகள் அரசியல் ரீதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தனர்.
     பின்பு பிரஷ்னேவ் காலத்தில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக மாறி உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போட்டிபோட்டு பனிப்போரில் ஈடுபட்டது.  அதனால் சோவியத் சமூக எகாதிபத்தியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியின்  தொடர்ச்சியாக கோர்பச்சேவ் கலைப்புவாதத்தைக் கொண்டு வந்தார். கோர்பச்சேவ் கும்பல் “கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றும் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது” என்றும் வரலாறு முடிந்துவிட்டது (end of history) என்றும் பிரச்சாரம் செய்தது. அரசு முதலாளித்துவத்திற்குப் பதிலாக மரபுவழியிலான தனி உடமை முதலாளித்துவத்தைக் கொண்டுவந்தது. ரஷ்ய ஒன்றியும் கலைக்கப்பட்டது.

விஞ்ஞான சோஷலிசம் என்ற ஒன்றில்லை, ஆனால் கற்பனா சோஷலிசம் மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற சோஷலிச மட்டுமே உள்ளது. சமூக அக்கறையைவிட தனிநபர் பேராசையே சமூக சமநிலையையும் (equilibrium) முன்னேற்றத்தையும் உருவாக்குகின்றன; வரலாறு முடிந்துவிட்டது, வரலாறு முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு (liberal democracy) அப்பால் செல்லாது; ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சிகர சகாப்தமும் முடிந்துவிட்டது; புதிய தாராளமய, உலகமயமாதலே உலக முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழியாகும். தேசிய விடுதலை, ஜனநாயகம் மற்றும் சோஷலிசத்திற்கான மக்களின் போராட்டங்கள் பயனற்றது என்ற கருத்து பரப்பப்பட்டது.

இவ்வாறு கோர்ப்பச்சேவும் எல்சினும் குருச்சேவின் திருத்தல்வாதத்தை அதனுடைய இறுதி நிலைக்கு உந்தித்தள்ளி, கலைப்புவாதக் கொள்கைகளை அமல்படுத்தினர் - ரஷ்ய ஒன்றியம் சிதறுண்டுபோனது. வெளிப்படையான தனியுடைமை முதலாளிய ஏகாதிபத்தியம் நிறுவப்பட்டது. எனவே ரஷ்யாவிலும் பிற ஐரோப்பிய  நாடுகளிலும் கம்யூனிஸ்டுக் கட்சி கலைக்கப்பட்டன. அத்துடன் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் கம்யூனிஸ்டுக் கட்சிகளைக் கலைப்பதற்கு திட்டமிட்டது.

  கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதன் அவசியம் பற்றி கோர்பச்சேவ் துருக்கியின் அங்காரா நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் அளித்த பேட்டியில் கூறுவதாவது:
“ என்னுடைய உள்ளார்ந்த நோக்கம், இறுதி லட்சியம் கம்யூனிசத்தை கலைத்துவிடுவது (ஒழித்துக்கட்டுவது). ஏனெனில் கம்யூனிசமானது அனைத்து மக்களின் மீதும் சர்வாதிகாரத்தைச் செலுத்துகிறது. எனக்குத் தெரியும் இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்த வேண்டுமானால் ரஷ்யநாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் படைத்த இடத்திற்கு நான் செல்ல வேண்டும். ஆகவே எனது மனைவி அத்தகைய  உயர்ந்த அதிகாரம் படைத்த பொறுப்பிற்கு நான் செல்லவேண்டும் என்று அவசரப்படுத்தினார். நான் உண்மையில் மேற்கு உலக நாடுகளோடு தொடர்பு கொண்டு பல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப எனது மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டேன். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் சோஷலிசக் குடியரசு அமைப்பின் அனைத்து இயந்திரங்களையும் அழிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். மேலும் இதே காரியத்தை மற்ற சோஷலிச நாடுகளிலும் ஏற்படுத்த வேண்டும்  என்றும் தீர்மானித்தேன். எனது கண்ணோட்டமானது சமூக ஜனநாயகப் பாதையாகும். இதன் மூலம் மட்டுமே உலகிலுள்ள அனைத்து மக்களும் பயன்பெறுவர். இதனைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.” 
 
மேலும் அதே பேட்டியில் கூறும்போது:
 “... ரஷ்யா உடைந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேனா? என்று பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் இதற்காக வருத்தப்படவில்லை. ஏனெனில் ரஷ்யாவில் மட்டுமல்லாது அனைத்து சோஷலிச நாடுகளிலும் கம்யூனிசத்தை அழிப்பதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் நான் ஏற்கனவே செய்து முடித்துவிட்டேன். நான் அழவில்லை. ஏனெனில் ஐரோப்பா முழுவதும் கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எனது உள்ளார்ந்த இறுதி இலட்சியத்தை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டேன்.  ஆனால் நீங்கள் ஒன்றைப்  புரிந்துகொள்ள வேண்டும். ஆசியாவிலும் கம்யூனிசத்தை ஒழிப்பதன் மூலமாகத்தான் உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்த முடியும்.” என்று கூறினார்.

நவீனத் திரிபுவாத குருச்சேவ் கும்பல் அன்று அமெரிக்க ஏகதிபத்தியத்தோடு உறவு கொண்டுதான் ரஷ்யாவில் சோஷலிசத்தை அழித்து முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்தது.  கோர்பச்சேவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியுடன்தான் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை மட்டுமல்ல உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளை  அழிப்பதற்கு திட்டமிட்டுச் செயல்பட்டார் என்பதை வாக்குமூலமாகவே வெளிப்படுத்திவிட்டார்.  அமெரிக்காவின் தலைமையில் உள்ள ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச ஏகபோக மூலதனம் ஆகியவற்றின் விளைபொருளே நவீன திரிபுவாதமும் கலைப்புவாதமும் ஆகும். நவீன திரிபுவாதிகளும் கலைப்புவாதிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பகடைக்காய்களாக செயல்படுவதோடு, புரட்சியை எதிர்ப்பதில் அதன் அடிமைச் சேவகர்களாகவே உள்ளனர்.

நவீன திருத்தல்வாதத்தின் எழுச்சி மற்றும் சோஷலிச நாடுகளில் முதலாளித்துவம் முழுவதுமாக மீட்கப்பட்டப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உலகம் முழுவதும் திணித்துவரும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற புதியகாலனிய தாராளக் கொள்கைகள் உழைக்கும் மக்களை ஒடுக்குவதும் சுரண்டுவதும் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமடைந்து வருகின்றன.  ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகள் முதலாளித்துவ நெருக்கடியைத் தீர்க்கவிலலை. அக்கொள்கைகள் படுதோல்வி அடைந்துவிட்டன. உலகப் பொருளாதார நெருக்கடி மென்மேலும் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்கள் உலகம் முழுவதும் எழுச்சி பெற்று வருகின்றன. அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிகத்திற்காக இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் ஈராக், லிபியா, எகிப்து மற்றும் சிரியா போன்ற அரபு நாடுகளில் உருவாக்கியுள்ள பொம்மை ஆட்சிகளை எதிர்த்தும் மக்கள் எழுச்சியுடன் போராடிவருகிறார்கள். இத்தகைய மக்களின் எழுச்சி புரட்சியாக மாறிவிடும் என்று ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுகின்றனர். எனவே இத்தகைய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அழித்துவிடவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். அதற்கு நவீன திரிபுவாதிகள், கலைப்புவாதிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர்.

ஏகாதிபத்திய முதலாளித்துவக் கும்பலகள் பலவகைப்பட்டக் கருவிகளைக் கொண்டு (கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள், வெகுஜன ஊடகங்கள், தேர்தல் நடவடிக்கைகள், அறிவாளி குழாம்கள், கோட்பாட்டு உருவாக்க நிறுவனங்கள், கார்ப்பரேட் காருண்ய நிறுவனங்கள் (Ford, Rockefeller Foundation, Bill gates Foundation), மத நிறுவனங்கள் புத்துயிர்ப்புப் பெற்றுவரும் பாட்டாளிவர்க்க புரட்சிகர சித்தாந்தங்களையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் சோஷலிசத்திற்கு ஆதரவாகவும் மக்கள் மத்தியில் தோன்றிவரும் எழுச்சிகளையும் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளை அழித்துவிடவோ அல்லது அதனிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒன்றை வைக்கவோ முயற்சி செய்கின்றனர்.

இவ்வாறு ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க எகாதிபத்தியவாதிகளின் ஆதரவோடு கோர்பச்சேவின் கலைப்புவாதம் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஊடுருவி பெரும் தாக்கத்தையும் பிளவுகளையும் கொண்டு வந்தது. அதன் பாதிப்புகள் இந்தியாவிலும் கடுமையாக பிரதிபலித்தது.

இந்தியாவில் கலைப்புவாதம்

மேற்கண்ட சூழ்நிலைமகளின் கீழ்தான் இந்தியாவில் தோன்றிய திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதப் போக்குகளை ஆய்வு செய்யவேண்டும். இந்தியாவில் ஏற்கனவே நவீன திரிபுவாதிகள் கம்யூனிஸ்ட் கட்சியை வெளிப்படையாகமாற்றி ஆளும் வர்க்கங்களின் தொங்குசதையாக மாற்றி விட்டனர். தற்போது மா.லெ. புரட்சிகரக் குழுக்களைச் சீரழிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கோர்பச்சேவ் கும்பலின் கலைப்புவாதத்தின் தொடர்ச்சியாகவே அந்தோணிசாமி மார்க்ஸ் தலைமையிலான பு.ப.இ.கும்பல் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றும் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்றும், வரலாறு முடிந்துவிட்டது என்றும்  பிரச்சாரம் செய்தது. ரஷ்யாவைத் தொடர்ந்து சீனாவிலும் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியைக் காரணம் காட்டி தனது கலைப்புவாதக் கருத்துக்களை மெல்ல மெல்ல கொண்டுவந்தது. கம்யூனிசத்திற்கு எதிராக கடும் தாக்குதல்களை நடத்தியது. கட்சியைப் பிளவுபடுத்தி வெளியேறியது. நிறப்பிரிகை மற்றும் மக்கள் கல்வி இயக்கத்தைத் துவங்கி கலைப்புவாதக் கருத்துக்களைப் பரப்பியது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தவறு என்றும், பாட்டாளி வர்க்கத் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல் வாதத்தையும் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும் மறுத்ததோடு பாட்டளிவர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர்.

 ஆரம்பத்தில் அவர்கள் மார்க்சியத்தின் குறை நிறைகளை இட்டு நிரப்புவது என்று பேசினர். மார்க்சியம் முழுவதும் தவறு என்று பேசவில்லை. மார்க்சியத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்று அவர்கள் கூறியபோதிலும், மார்க்சியத்தின் தத்துவ அடிப்படையை பலவீனப்படுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள். மார்க்சிஸ்ட் என்ற முகமூடியுடன் நடமாடுவதை நிறுத்தவில்லை. கட்சியின் சாதாரண உறுப்பினர்களை ஏமாற்றுவதற்காகவே அவர்கள் இத்தகைய “விமர்சனங்களை” மேற் கொண்டனர். பின்னர் படிப்படியாக மார்க்சிய விரோதக் கலைப்புவாதக் கருத்துக்களை  முன்வைத்தனர்.

அந்தோணி மார்க்ஸ் கும்பல் மார்க்சியத்தை எதிர்த்து ஃபூக்கோ, தெரிதா, ஃப்ராய்டு போன்றவர்களின் பின்நவீனத்துவக் கருத்துக்களை முன்வைத்தது. பின் நவீனத்துவத்துடன் பொருட்களை அறியமுடியாது என்ற அறியவொண்ணாவாதத்தையும் முன்வைத்தது. பின்நவீனத்துவத்தின் கட்டுடைத்தலின் சாரம் பின்வருமாறு கருத்தொருமிப்பா கூடவே கூடாது. அது வன்முறை அதிகாரத்திற்கே வழிவகுக்கும். அது ஆதிக்கத்திற்கு ஆதரவான கருத்தொருமிப்பானாலும் சரி, எதிரான கருத்தொருமிப்பானாலும் சரி, எதுவுமே வேண்டாம்.பகுத்தறிவே பயங்கரம். இந்தப் பகுத்தறிவால் வந்ததே அத்தனைக் கேடுகளும். தர்க்கமே வன்முறை. இந்தத் தர்க்கத்தினால் வந்ததே அத்தனைத் தொல்லைகளும். அறிவியலே வேண்டாம். இந்த அறிவியலால் நேர்ந்ததே அத்தனை இடர்ப்பாடுகளும். ஆகவே இது எதுவும் வேண்டாம். விதியொழுங்குகளா வேண்டவே வேண்டாம். அது ஆதிக்கம் ஏற்படுத்தும் விதியொழுங்கானாலும் சரி, எந்த விதியொழுங்குமே வேண்டாம். விதியே அதிகாரம்தான். அறிவா வேண்டாம். அறிவியலா வேண்டாம். அதுமட்டுமல்ல அறிவுக்கோ அறிதலுக்கோ எந்தப் பொதுத்தன்மையும் கிடையாது. அவரவர்கள் கண்டதே அறிவு. அறிவோ அறிதலோ எல்லாம் அவரவர்க்கு தனித்தனி.சமூகத்தின் மையச்சக்திகள் இருக்கிறார்களே, வரலாற்றின் உந்து சக்திகள், வரலாற்றை உருவாக்குகிற சக்திகள் அவற்றை ஒன்று திரட்ட வேண்டாமா? அவர்களை வைத்துதானே ஆதிக்கத்தை எதிர்க்கமுடியும். வேண்டாம், அவர்களைத் திரட்டுவது இன்னொரு வன்முறை அமைப்பையே உருவாக்கும். சரி, உதிரிகளையாவது திரட்டலாமா?. கூடாது எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.சரி, அறிவு வேண்டாம், தருக்கம் வேண்டாம், கருத்தொருமிப்பு வேண்டாம், விதியொழுங்கு வேண்டாம், அறிவியல் வேண்டாம் அப்புறமெந்த நோக்கில் எதைவைத்து அமைப்புக் கட்டுவது என்றால் அமைப்பும் வேண்டாம். காரணம் அமைப்பு என்பதே அதிகாரமுடையது, ஆதிக்கத்தன்மை உடையது. அது ஆதிக்கத்தை ஆதரிக்கிற அமைப்பாயிருந்தாலும் சரி எதிர்க்கிற அமைப்பாயிருந்தாலும் சரி, அது வேண்டவே வேண்டாம்.தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ள ஒரே ஆயுதம் அமைப்பு மட்டுமே, அது சார்ந்த ஒற்றுமை மட்டுமே. அதுவும் வேண்டாம் என்றால், வேறு எதை வைத்துத்தான் ஆதிக்கத்தை எதிர்ப்பது? . சும்மா தனித்தனியாக எதிர்த்துக் கொண்டிருப்பதா? அப்படி எதிர்த்தால் ஆதிக்கம் எல்லோரையும் அழித்துவிடாதா என்றால் அதனாலென்ன செத்துத் தொலையுங்கள், வாழ்ந்து என்ன வாரிக் கொள்ளப் போகிறீர்களென்கிறது பின் நவீனத்துவம்.
இதுதான் பின் நவீனத்துவ அரசியலின் சாரம். 

பொதுவாக தத்துவங்கள் மனிதன் வாழ வழிகாட்டும் என்று சொல்வார்கள். ஆனால் பின்நவீனத்துவம் சாக வழிகாட்டும் தத்துவமாக இருக்கிறது என்பதே உண்மை.
பின்நவீனத்துவம் கட்டுடைத்தல் என்பதன் பேரால் எல்லாவற்றையும் கலைத்துபோட்டு மாற்று என எதையுமே உருவாக்காமல் விடுவது, வெறுமையை ஏற்படுத்த முயல்வது. இத்துடன் புதிதாக உருவாகும் எதையும் இதே கட்டுடைத்தல் என்கிற அணுகு முறையால் கலைத்துப்போட்டு மாற்று எதுவும் உருவாகவிடாமல் தடுப்பது. இதில் இரண்டாவது காரியத்தை மட்டுமே செய்துவருகிறது பின்நவீனத்துவம்.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் அ. மார்க்ஸ் கும்பல் கட்டுடைத்தல் என்ற பேரில் சோஷலிசத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் கலைப்பதை நியாயப் படுத்தி கலைப்பு வாதத்தின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைக்கும் வேலையைச் செய்தது. 
   
பொருட்களின் சாரம், மொத்தத்துவம் போன்ற கருத்தாக்கங்களை பின் நவீனத்துவம் மறுத்தது. மொத்தத்துவம் என்பது எதேச்சதிகாரத்துக்கே வழிவகுக்கும் என்பதால் சிதறுண்டபோதலை ஆதரித்தது. மொத்தத்துவம், பொதுமைப்படுத்துதல் தரப் படுத்துதல் என்பதெல்லாம் தனித்துவமான அடையாளங்களை அழித்தொழிக்கும் வன்முறைகள் என்பதால் சிறு குழுக்கள், தனித்துவங்கள், தல அளவிலான செயல்பாடுகள் ஆகியவற்றை வரவேற்றதுடன் மொத்தத்துவத்தை அதாவது பேருரு அரசியலை எதிர்ப்பது என்ற பேரில் சோஷலிசத்தை எதிர்த்து சிற்றுரு அரசியலான “தலித்தியம், பெண்ணியத்தை” முன்வைத்தனர்.

கட்டுடைத்தலை குடும்பத்திற்கும் விரிவுபடுத்தியது அ.மார்க்ஸ் கும்பல். குடும்பமே அதிகார நிறுவனம், குடும்பத்தை உடைப்பதன் மூலமே பெண்விடுதலை என்று பேசியது. ஆணாதிக்கத்தை எதிர்த்து யோனி மையாவாதம் பேசி வரைமுறையற்ற பாலுறவை முன்வைத்தது. பாலியல்சீரழிவுகளையும் ஓரினச் சேர்க்கையையும் குடிப்பழக்கத்தையும் அறிமுகப்படுத்தி புரட்சி இயக்கத்தில் செயல்பட்ட இளைஞர்களை 90களில் சீரழித்தனர். மக்களிடம் செல்வாக்கு செலுத்திய தமிழ்த் தேசிய உணர்வு, ஈழ விடுதலை ஆதரவு, கம்யூனிச ஆதரவு என அனைத்துக்கும் எதிராக அ.மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

ஈழ விடுதலைப் போரின் இறுதிக் காலத்தில் அ.மார்க்ஸ் போன்றவர்கள் இழைத்த துரோகம் மோசமானது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது இவர், இசுலாமியர் மீது புலிகள் தாக்குதல் நடத்திய பழைய கதைகளை மேடைகள் தோறும் பேசினார். இதன் மூலம் இசுலாமியர்களை ஈழப் போராட்டத்தின் மீது வெறுப்படையச் செய்ய முயன்றார். இலங்கை, இந்திய அரசுகளின் இன அழிப்புப் போருக்குத் துணைபோனார். இங்கு தலித்துகள் மீது கரிசனம் காட்டுவதாகக் கூறும் இவர், ஈழத்தில் கொல்லப் பட்ட தலித்துகள் குறித்து கவலையே படவில்லை.

சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவில் செயல்படும் சிறீலங்கா டெமாக்ரடிக் ஃபாரம் (SLDP), லிட்டில் எய்ட் போன்ற தன்னார்வக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் சுசீந்திரன்,சுகன்,ஷோபா சக்தி உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள். இவர்கள் ஈழ விடுதலைப் போருக்கு எதிராகப் பரப்பும் கருத்துக்களை தமிழகத்தில் பரப்பும் வேலையைத்தான் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றோர் செய்கிறார்கள். ஈழ இனப் படுகொலைக்குத் துணைபோன இவர்கள்தான் இன்றளவும் மனித உரிமை ஆர்வலர்களாக அறியப்படுகிறார்கள்.

நிறவாதம், சாதியம், மத அடிப்படைவாதம், பெண்ணடிமைத்தனம், சுற்றுபுறச் சூழல் அழிவு, தேசிய இனப் பிரச்சினை போன்றவைகளுக்கான தீர்வாக வர்க்கப் பார்வையற்ற நிலைப்பாடுகளை முன்வைத்தனர். வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய-லெனினிய அடிப்படை போதனைகளை எதிர்த்தனர்.

மார்க்சியத்துக்கு மாற்றாக பெரியாரியத்தையும் அம்பேத்காரியத்தையும் நிறுத்தினர். வர்க்கப் போராட்டத்திற்குப் பதிலாக தலித்தியத்தையும் அடையாள அரசியலையும் முன்வைத்தனர். இவ்வாறு கம்யூனிஸ்ட்  கட்சியை ஒழிப்பதற்கும், எதிர்ப் புரட்சிகர இயக்கத்தைக் கட்டியமைக்கவும் இவர்கள் கட்சியை பிளவுபடுத்தி வெளியேறினர். ஆனால் தலித் அரசியல் பேசி அவர்களே இறுதியில் கட்டுடைந்து பிளவுபட்டனர்.
அந்தோணிசாமி மார்க்ஸ் கும்பலின் கலைப்புவாதக் கருத்துக்களின் செல்வாக்குக்கு கட்சியிலுள்ள, குறிப்பாக புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் இருந்த குட்டிமுதலாளித்துவ அறிவாளிகள் இரையானார்கள். மார்க்சியத்தின் மீதும் புரட்சியின் மீதும் நம்பிக்கை இழந்து கட்சியை விட்டு வெளியேறினார்கள்.
அந்தோணி மார்க்சும் அக்கும்பலைச் சார்ந்தவர்களும் அந்நிய நிதி உதவி பெற்ற தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் ஏகாதிபத்திய நிதி ஆதரவுடன் - ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஏகாதிபத்தியவாதிகள் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு வெளியீடுகளை உடனுக்குடன் கொண்டு வந்தனர். அந்தோணிசாமி மார்க்ஸ் கும்பலைச் சார்ந்தவர்கள் ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் தமது தன்னார்வக் குழுவைச் சேர்ந்த பலரை இணைத்து பெரும் நிதி தளத்துடன் இலங்கையிலும் இந்தியாவிலும் செயல்படத் துவங்கினர். ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன்  கோவை சிவா மூலம் விடியல் பதிப்பகத்தைத் துவங்கி பாட்டளிவர்க்க இயக்கத்திற்குள் ஊடுருவி சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டனர்.

சித்தானந்தம் கும்பல், ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்கும்  அந்தோணிசாமி மார்க்ஸ், விடியல் சிவா போன்றவர்களின் உதவியோடும், பல்வேறு ஏகாதிபத்தியத் தொண்டு நிறவனங்கள் நடத்தும் புத்தக நிறுவனங்களின் உதவியோடும் சேலத்தில் அகிலம் புத்தகக் கடையைத் திறந்தது. முற்போக்குப் புத்தகங்களை விற்பது எனும் பேரில் அம்பேத்காரிய,பெரியாரியக் கருத்துக்களையும் அடையாள அரசியல் கருத்துக்களையும் பிரச்சாரம் செய்யும் நோக்கத்துடனேயே அகிலம் புத்தகக் கடை திறக்கப்பட்டது. அதன் மூலம் கட்சிக்குள் அந்நிய சக்திகள் ஊடுருவ திட்டமிட்டு அக்கடை திறக்கப்பட்டது. அதை எதிர்த்து கட்சி முழுவதும் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் அவ்வாறு கடைதிறந்தது கலைப்புவாதம்தான் என ஒத்துக்கொண்ட சித்தானந்தம் முறையாக சுயவிமர்சனம் செய்துகொள்ள மறுத்து போலீசில் சரணடைந்து கட்சியைப் பிளவுபடுத்தினார். இத்தகைய கலைப்புவாதக் கருத்துகளுக்கு ஒத்து ஊதித்தான் சேலம் செல்வராசுவும் சின்னுவும் கட்சியைவிட்டு வெளியேறினர்.

தமிழ்வாணனும் ஏலகிரி ராமனும் சித்தானந்தம் வெளியேறும் வரை கலைப்புவாதத்தை எதிர்த்தப் போராட்டமே முதன்மையானது என்று ஏற்றுக்கொண்டனர். சித்தானந்தம் வெளியேறிய பிறகு கலைப்புவாதத்தை எதிர்த்த போராடத்தைக் கைவிட்டதோடு  தங்களது பாலியல்சீரழிவு மற்றும் பிழைப்புவாதப் போக்குகளுக்கு சுயவிமர்சனமாக வர மறுத்து கட்சியைவிட்டு வெளியேறினர். ஆனால் வெளியேறிய பின்பு கலைப்புவாதி சித்தானந்தனுடன் கூட்டுச் சேர்ந்தனர். தமிழ்வாணனோ இந்தியாவில் நிலப் பிரபுத்துவமே இல்லை என்றும் ஆசிய உற்பத்திமுறை என்றும் கூறி தொண்டு நிறுவனங்களின் கலைப்புவாத அரசியலை முன்வைக்கிறார். ராமனோ 88-ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தின்போது 70- திட்டம் சரியா தப்பா என்று சொல்லத் தெரியாது என்று சொன்னவர். இன்று ஸ்டாலினையும் மாவோவையும் ஏற்கமுடியாது என்று கூறிக்கொண்டு திரிகிறார்.

இறுதியாக தஞ்சை குணாளன் கட்சியைவிட்டு வெளியேறி கலைப்புவாதிகளிடம் சரணடைந்துள்ளார். கலைப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் தான்தான் தளபதியாக செயல்பட்டேன் என்று உரிமை கோரினார். ஆனால் இரகசியக் கட்சி மற்றும் முழுநேர ஊழியர் கோட்பாட்டை ஏற்கமறுத்து பெயரளவுக்கு இரகசியம் பெயரளவுக்கு முழுநேர ஊழியராக இருந்து கொண்டு தமது குடும்பத்தின் நலன்களை முதன்மைப் படுத்திச் செயல்பட்டார்.  உள்ளடக்கத்தைக் கைவிட்டு வடிவத்தைக் கொண்டு கட்சி மாநாடு கூட்டுவது, கொள்கைக் கோட்பாடுகளின்றி நபர்களை தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமே சிறப்புக்கூட்டம் கூட்டுவதன் மூலம் தலைமையைக் கைப்பற்றி கட்சியை வலது சந்தர்ப்பவாதத்திற்குள் இழுத்துச் சென்று சீரழிப்பதுடன் கலைப்புவாத ஊடுருவலுக்கும் திறந்துவிட திட்டம் போட்டார். அவரது திட்டம் நிறைவேறாததால் அமைப்பைவிட்டு வெளியேறினார். கலைப்புவாதத்தை எதிர்த்த போராட்டத்தின் தளபதி என உரிமை கோரியவர் அந்தக் கலைப்புவாதத்திற்கே பலியானார்.

இவ்வாறு கலைப்புவாதிகளும் பிழைப்புவாதிகளும் சேர்ந்துதான் கனுசன்யால் கட்சியின் தமிழ் மாநிலக் கமிட்டியை உருவாக்கியுள்ளனர். கனுசன்யால் கட்சியின் பொருளாதாரவாதம் தொழிற்சங்கவாதம் மற்றும் பாரளுமன்றவாதம் எனும் வலது  சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளும், கட்சி ஐக்கியம் பற்றிய பிரச்சினையில் கோட்பாடற்ற ஐக்கியம் போன்ற சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளும், வெளிப்படையான கட்சி என்ற கலைப்புவாத நிலைப்பாடும் இத்தகைய கலைப்புவாதிகளும் பிழைப்புவாதிகளும்  அடைக்கலம் புகுவதற்கு வசதியாக இருக்கிறது. எனவே சந்தர்ப்பவாதமாக இவர்கள் உருவாக்கியுள்ள கனுசன்யாலின் மா.லெ.கட்சி, கட்சிக்குள்ளோ கட்சிகளுக்கிடையிலோ ஒற்றுமையைக் கொண்டுவராது. மாறாக பிளவுகளையே கொண்டுவரும்.

கலைப்புவாதத்தை முறியடிப்போம்

சர்வதேசப் பொதுவுடமை இயக்க வரலாற்றைப் பரிசீலிக்கும் போது ரஷ்யா, சீனாவிலுள்ள சோஷலிச அரசுகள் வீழ்த்தப்பட்டு பலம்வாய்ந்த ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைப்பதில் ஏகாதிபத்தியவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள பலம் குன்றிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுக்களைக் கலைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்தியாவில் போலி முதலாளித்துவ நாடாளுமன்றமுறை (நிறுவியிருப்பது) - ஏகாதிபத்தியத்துடனும் நிலப் பிரவத்துவத்துடனும் ஆயிரம் வழிகளில் பின்னிப் பிணைந்துள்ள (போலிப் பாராளுமன்ற முறை) நிறுவியிருப்பது திரிபுவாதமும் கலைப்புவாதமும் விரிவடைவதற்குக் கூடுதலான உதவியை வழங்கியுள்ளது. திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் புரட்சியாளர்கள் தோற்கடிக்காவிட்டால் இந்த நாட்டில் புரட்சி பல ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடப்படும்.

ஆயுத பலத்தோடு மக்கள் செல்வாக்குப் பெற்ற சில மா.லெ.குழுக்களைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ.) இன்னமும் கட்டப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. குழுக்கள் மட்டுமே நீடிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பலம்வாய்ந்த கட்சிகளையே கலைப்பதில் வெற்றி பெற்ற ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களைக் கலைப்பதற்கு எந்த அளவிற்குச் செயல்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்ளத் தவறுகின்ற எந்த ஒரு குழுவும் கலைப்புவாதத்திற்குப் பலியாகி அழிவதைத் தவிர வேறுவழியில்லை.  எனவே கலைப்புவாதமே இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் முன்னுள்ள மாபெரும் சவாலாகும். அந்தச் சவாலை எதிர்கொண்டு நவீன திரிபுவாதத்தையும்  கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணியில் திரளுவது அனைத்து மார்க்சிய லெனினியவாதிகளின் முதன்மையான கடமையாகும்.

இப்படிக்கு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 
(மார்க்சிஸ்ட்----லெனினிஸ்ட்) மக்கள்யுத்தம் - போல்ஷ்விக், 
தமிழ் மாநில குழு

குறிப்பு:
கனுசன்யால் கட்சி குறித்த இந்த விமர்சன ஆவணம், கட்சி முழுவதும் விவாதிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்று மாநிலக்குழுவின் முன்னுரையோடு வெளியிடப்படுகிறது.
___________________
முன்னுரை முற்றும்.
(தொடர்க)
நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர் (1)

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர் (2)
_____________________
நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(3)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளுக்கான வரலாற்று ரீதியான காரணங்கள்.
(தொடரும்)


No comments:

Post a Comment