Sunday 29 September 2019

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(4)

கனுசன்யாலின்
வலது சந்தர்ப்பவாத நிலைப்பாடும்
கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளுக்கான வரலாற்று ரீதியான காரணங்கள்.
இ.க.க. ( மா.லெ ) -வை சார்ந்த கனுசன்யால்,  
“சாருமஜும்தாரும் இ.க.க ( மா.லெ ) மத்தியக் கமிட்டியும் இடது தீவிரவாத வழியைச் செயல்படுத்தி கட்சிக்கு பெரும் தோல்வியைக் கொண்டு வந்தனர்”   என்றும், “கட்சியில் தோன்றிய பிளவுகளுக்கெல்லாம் சாருமஜும்தாரே காரணம்“ என்றும் கூறி தனது வலது சந்தர்ப்பவாத வழியை முன் வைத்தார். அதே வழியில் மா.லெ குழுக்களின் ஐக்கியத்திற்கான முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அத்தகைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 
தற்போது “பச்சோந்தி” கோவை ஈஸ்வரன் தலைமையில் நம்மிடம் இருந்து ஓடிப்போன கலைப்புவாதிகளையும் பிழைப்புவாதிகளையும்,ஓடுகாலிகளையும் வைத்துக்கொண்டு கனுசன்யால் கட்சியின் தமிழ் மாநிலக் கமிட்டியை உருவாக்கியுள்ளனர். கனுசன்யால் போன்ற சிறந்த தலைவரை நாம் இருட்டடிப்பு செய்துவிட்டதாக நம் மீது குற்றம் சுமத்துகின்றனர். மேலும் தாம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டோம், அகில இந்திய கட்சியைக் கட்டிவிட்டோம் என்று கூறி அணிகளைக் குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். 
கனுசன்யால் வழி மற்றும் அவர் எடுத்த ஐக்கியத்திற்கான முயற்சிகளின் தோல்விக்கான காரணங்களை ஆய்வுசெய்வதற்கு முன்னர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றியுள்ள பிளவுகள் குறித்த வரலாற்று ரீதியிலான காரணங்களைக் காண்போம்.
( 1 )
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளுக்கான
வரலாற்று ரீதியான காரணங்கள்

1) சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் பிளவு

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தில்
அக்கட்சியின் தலைவர் குருச்சேவ் தாக்கல்செய்த அறிக்கையில்
மார்க்சிய-லெனினியத்தை நிராகரிக்கும் விதமாக சில கோட்பாட்டு வரையறைகளை முன்வைத்தார்.

அனைத்து மக்களுக்குமான கட்சி, அனைத்து மக்களுக்குமான
அரசு ஆகிய முழக்கங்களோடு, கட்சி என்பது பாட்டாளிவர்க்கத்தின்
முன்னணிப்படை மற்றும் சுரண்டும் வர்க்கத்தின் மீதான பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் போன்ற கோட்பாடுகள் கைவிடப்பட்டன.
ஒடுக்கும் வர்க்கமான ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக புரட்சிகரமான போரை மேற்கொள்ளாமல் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியமல்ல என்ற மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை
குருசேவ் நிராகரித்தார். தற்போதுள்ள சூழலில் “பாராளுமன்றவாத
வழிகளைப் பயன்படுத்தி அமைதியான வழியில் சோசலிசத்தை
நோக்கி முன்னேறுவது சாத்தியம்தான்” என்று கூறினார்.

ஏகாதிபத்தியம் உள்ளவரை போர் தவிர்க்க முடியாதது என்ற
மார்க்சிய-லெனினிய வரையறையை குருச்சேவ் தலைமையிலான
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு நிராகரித்தது.
இன்றைய சகாப்தம் ஏகாதிபத்திய மற்றும் பாட்டாளிவர்க்கப்
புரட்சிகளது சகாப்தம் என்ற கருத்தாக்கங்களை நிராகரித்ததன் மூலம் சரணாகதிக்குப் பலியாகி மார்க்சியத்தைத் திருத்தும் வகையில் சமாதானப்பூர்வமான மாற்றம், சமாதான சகவாழ்வு, அமைதிவழிப் போட்டி என்ற கோட்பாடுகளை அது அறிமுகப்படுத்தியது. இந்த நவீன திருத்தல்வாதக் கோட்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் வலது சந்தர்ப்பவாதத்தைப் பலப்படுத்தியது.

குருச்சேவின் நவீன திருத்தல்வாதத்திற்கு மாறாக மார்க்சிய-
லெனினியத்தை பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை
எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு சீன
கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது. குருசேவ்வின் திரிபுவாதக்
கோட்பாட்டை நிராகரித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு
கூறியது.

“சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும்
பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது
என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது
மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவது
ஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசு
அதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும்.
அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள்
உள்ளன. புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின்
ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள்
தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.
இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமான
சொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.” லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது “மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச்செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்” திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.

மாவோவின் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி போரைத்
தடுப்பதற்கான சாத்தியமான கூறுகளைப் பொருத்தமட்டில்,
`ஏகாதிபத்தியப் போர்களும் தலையீடுகளும் தவிர்க்க இயலாததாகும்` என்ற லெனினியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது. போருக்கு எதிராகப் போர்தொடுப்பதன் மூலமாகவும், மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறையை ஒழிப்பதன் மூலமாகவும் போரை ஒழித்துவிட முடியும் என்று கூறி குருச்சேவ்வின் திருத்தல்வாதத்தை மறுதலித்தது. மார்க்சிய-லெனினியத்தைப் பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு
மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை
ஏற்றது.

1960 மார்ச் 30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி
வெளியிட்ட கடிதமும், அதற்குப் பதிலளித்து சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் “ஜூன்-14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமை
இயக்கத்தின் பொதுவழி பற்றிய முன்வரைவு” என்ற கடிதமும்
உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுக்குக் காரணமாயிற்று.
இந்த முன்வரைவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஒன்பது
விமர்சனங்களை முன்வைத்தது. இந்த ஆவணங்கள்தான் “மாபெரும் விவாத ஆவணங்கள்” என்று அறியப்படுகின்றன.

“ஏகாதிபத்தியம் பலமிழந்துவிட்டது, காலனிய முறை
முடிவுக்கு வந்து விட்டது” என்ற ஒரு புதிய முடிவுக்கு சோவியத்
கம்யூனிஸ்ட் கட்சி வந்துவிட்டது. குருசேவ் தலைமையிலான
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைபாட்டிலிருந்துதான்
சமாதான சகவாழ்வு, ஏகாதிபத்தியவாதிகளுடன் சமாதான வழி-
யிலான போட்டி, சமாதானமாக சோஷலிசத்திற்கு மாறுவது என்ற
குருசேவ்வின் திரிபுவாதம் தலையெடுத்தது. சர்வதேச கம்யூனிஸ்ட்
இயக்கம் சோவியத் திருத்தல்வாதத்திற்கு எதிராக சமரசமின்றிப்
போராட வேண்டிய நிலைவந்தது. ஆனால் சோவியத் ரஷ்யாவில்
திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில்
கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல்
வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும்
கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங்
தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு
எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட்
இயக்கம் பிளவுகளை சந்தித்தது.

2) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு

இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின்
திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956-ல் கேரளாவில்
உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது
பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது
பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று
போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம்
குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் மார்க்சிய -
லெனினியத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இருபதாவது
பேராயத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் வரவேற்றார். அதில்
அவர் கூறியதாவது:

“இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின்
வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன.
தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும்,
வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும்
முன்னெப்போதையும்விட இயக்கத்தை விரைவாக எடுத்துச்
செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய
கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.

அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தைப் பின்பற்றிய பெரும்பாலான
சி.பி.ஐ. தலைவர்கள் எப்போதும் மார்க்சியவாதிகளாகவும்
இருந்ததில்லை, கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததில்லை. இப்போது
அவர்களுக்கு நவீன திரிபுவாதத்தை அரவணைப்பது குறித்தும்,
மார்க்சிய-லெனினியத்தைக் கைவிடுவது குறித்தும் கூரைகளின்
மீதேறிக் கூவுவதற்கான வாய்ப்புக் கிட்டியது.

பாலக்காடு பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல்
தீர்மானம் இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டது என்பதை
பின் வருமாறு கூறியது:
“அமைதியையும், சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கான இறையாண்மை கொண்ட சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவெடுத்த நிகழ்ச்சியானது உலகில் பெரும் முக்கியத்துவம்வாய்ந்த கூறாக விளங்குகிறது” .
சி.பி.ஐ -யின் சிறப்புப் பேராயம் ஒன்று ஏப்ரல் 1958-ல்
அமிர்தசரசில் கூடியது. கட்சியின் அமைப்பு விதிகளில் பின்வரும்
நிலைபாடு சேர்க்கப்பட்டது: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது
அமைதியான வழிகளில் முழுமையான ஜனநாயகத்தையும்
சோசலிசத்தையும் அமைப்பதற்குப் பாடுபடும்” என்று அந்தத்
திருத்தம் கூறியது.

சி.பி.ஐ-யைகட்சியானது “மார்க்சிய-லெனினியத்தின்
அடிப்படைக் கோட்பாடுகளால்” வழிநடத்தப்படுவதாக பேராயம்
கூறியது. உண்மையில் அக்கட்சியோ நவீன திரிபுவாதத்திற்கு
ஆதரவான நிலையை எடுத்தது. அதனுடைய முன்னேற்றத்தைத்
தடுக்கும் “தடைக்கற்களாக” கருதி மார்க்சிய-லெனினிய
கோட்பாடுகளை நிராகரித்தது. கேரளாவிலும் இன்னும் பிற
மாநிலங்களிலும் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. அவர்களுக்கு
தெலுங்கானா அல்ல; கேரளாதான் முன்மாதிரியாக விளங்கியது.

நேருவின் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்க 60-ஆயிரம் துருப்புக்களைக் குவித்தது. கொடூரமான அடக்கு- முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கடுமையான அடக்குமுறை -களைக் கையாள்வதால் மட்டுமே சாதிக்க முடியும் என
எண்ணிக் கொண்டிருந்த பலருக்கு, முதன்முதலாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வினியோகம் செய்திருந்த கம்யூனிஸ்ட்களின் மக்கள் செல்வாக்கை இந்திய இராணுவத்தின் அனைத்துத் துருப்புக்களாலும், எறிகணை வாகனங்களாலும் துடைத்தெறிய முடியவில்லை.

நேருவின் துருப்புகளாலும், எறிகணை வாகனங்களாலும்
சாதிக்க இயலாதவற்றை சி.பி.ஐ-யின் தலைமை நிறைவேற்றியது.
தெலுங்கானாவிற்கு ஆதரவாக நகர்ப்புற பகுதிகளிலும் கிராமப்புறப்பகுதிகளிலும் முதலில் ஆதரவு தளத்தைக் கட்டியெழுப்பி, பின்னர் இதுபோன்ற பல தெலுங்கானாக்களை உருவாக்குவதற்காக மக்களுக்கு எழுச்சியூட்டி, அவர்களை ஒருங்கிணைப்பதற்கான பணியை பொறுமையுடன் மேற்கொள்வதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் உடன்பாடு எட்டப்பட்ட பிறகு தெலுங்கானா போராட்டத்தை விலக்கிக்கொள்வது என
ஜுன் - 1951 தொடக்கத்தில் சி.பி.ஐ.யின் மையக்குழு தீர்மானித்தது.

“தெலுங்கானா போர்” நேரு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காகத்
தொடங்கப்பட்ட போராட்டமோ அல்லது தொடர்கின்ற
போராட்டமோ அல்ல. மாறாக நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஒழிப்பதற்கான போராட்டமாகவே நடைபெற்றது என்று நேரு அரசாங்கத்துக்கு மையக்குழு உறுதியளித்தது. மையக்குழுவின் சார்பாகவும், சி.பி.ஐ. மாநிலக் குழுவின் சார்பாகவும் அக்டோபர்-23,1951-அன்று ஏ.கே.கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அவ்வறிக்கையானது 
“அனைத்துப் போராட்டநடவடிக்கைகளையும்
நிறுத்துமாறும் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில்
ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி அவர்களைத் தீவிரமாக
பங்கேற்கச் செய்து காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்குமாறும்
தெலுங்கானா விவசாயிகளையும், போராளிகளையும் கேட்டுக்
கொண்டது”. 
காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவுசெய்வதற்கு முன்பாக கோபாலன் கூறியதாவது:
 “கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியதுபோல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசுஅதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல”.
சி.பி.ஐ. கட்சியானது 1951- மத்தியில் பிரதிநிதிகள் அடங்கிய
குழு ஒன்றை நேருவிடம் பேசுவதற்கு அனுப்பிவைத்தது.
அக்குழுவின் நோக்கம் “கட்சியானது புரட்சிகர வழியை
கைவிட்டுவிட்டது என்றும், நேருவின் அயலுறவுக் கொள்கையில்
உள்ள முற்போக்கான கூறுகளை ஆதரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்வது என்றும் - அமைதிவழி பாராளுமன்றத்தின் மூலம் மாற்றம், அமைதி வழிப் புரட்சி என்ற திருத்தல்வாத நிலையை எடுத்துள்ளது என்பதை அறிவிப்பதுதான்.

3) சி.பி.எம் - க்குள் புரட்சியாளர்களின் போராட்டம்

சி.பி.ஐ-யின் திருத்தல்வாதத்தை எதிர்த்து சி.பி.ஐ.யிலிருந்து
பிளவுப்பட்ட பின்பும் கூட சி.பி.ஐ(எம்) தலைமை குருச்சேவின்
நவீன திருத்தல்வாதம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க
மறுத்தது. மாபெரும் விவாதம் பற்றிய முடிவை 1968-ல் நடைபெற
உள்ள சிறப்பு மாநாட்டில் எடுப்பதாகக் கூறி தள்ளிப்போட்டது.
ஆனால் இக்கட்சி சோவியத் திருத்தல்வாதத்திற்கு அடிப்படையில்
எதிரான ஒன்று அல்ல என்பது 1968-ல் பர்துவான் சிறப்புக் கூட்டத்தில் நிரூபணமானது.

சி.பி.ஐ (எம்) கட்சியின் தலைமையானது உண்மையில் ஒரு
மையவாத நிலைப்பாட்டை எடுத்தது. இது வலது பாதையிலிருந்து
அடிப்படையில் வேறான ஒன்று அல்ல. சி.பி.ஐ. போலவே
இந்தியா தேசிய சுதந்திரம் பெற்றுவிட்டது என்ற நிலையை
எடுத்தது. இதற்காக இந்தியா அரசியல் ரீதியாக சுதந்திரமானது,
ஆனால் பொருளாதார ரீதியாக சார்புடையது என்ற புதுமையான
வாதத்தை முன்வைத்தது.

சி.பி.ஐ(எம்)-இன் கட்சித் திட்டம் கூறியதாவது: 

“அமைதியான வழிகளின் ஊடாக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்காகவும் சோசலிச மாற்றத்தை அடைவதற்காகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்தை துறப்பதற்குத் தாமாகவே முன்வரமாட்டார்கள். அவர்கள் மக்களின் விருப்பத்தை நிராகரிப்பதற்கு - சட்டம் ஒழுங்கைக் குலைப்பதன்
மூலமாகவும், வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன்
மூலமாகவும் பின்னடைவை ஏற்படுத்துவதற்கும் முயற்சிப்பார்கள்.
எனவே புரட்சிகர சக்திகள் விழிப்புடன் இருப்பதும், நாட்டின்
அரசியலில் ஏற்படும் திடீர் திருப்பங்களை நேர்கொள்வதற்கு
ஏற்றவகையில் தங்களுடைய பணியினை ஒருமுகப்படுத்துவதும்
அவசியமான ஒன்றாக விளங்குகிறது.”என்று கூறியது. 

இவ்வாறுஅது அமைதிவழிப் பாதையை முன்வைத்தது. இதையே சி.பி.எம்.கட்சி வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது என நேரு அரசாங்கம் குற்றம் சுமத்தியது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், ``தங்களுடைய கட்சித்
திட்டத்தின் 113-வது பிரிவும், ஏறத்தாழ இதே காலகட்டத்தில்
பம்பாயில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் (டாங்கே வாதிகளின்)
ஏழாவது பேராயத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டத்தின் 99-
வது மற்றும் 102-வது பிரிவுகளும் ஒன்று போலவே இருந்ததோடு,
அவ்விரண்டு திட்டங்களில் இடம் பெறுள்ள “சொற்றொடர்களும்,
பத்திகளும்” ஏறத்தாழ ஒன்றுபோலவே இருந்துங்கூட,
இந்தியாவின் அந்நாளைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா மார்க்சிஸ்டுகள் வன்முறைப் பாதையைக் கடைப்பிடிக்கிறார்கள்” என்ற “கீழ்த்தரமான அவதூறை” பரப்புவதற்கு முயற்சிக்கிறார்கள் என நந்தாவுக்கு எழுதப்பட்ட கடிதம் என்ற தலைப்பில் சி.பி.ஐ.(எம்) தலைமைக்குழு உறுப்பினரான பசவப்புன்னையா புலம்பினார்.

முன்னதாக, சி.பி.ஐ (எம்)-வன்முறைப் புரட்சிக்கான தயாரிப்பை
மேற்கொள்ளும் என்ற தவறான புரிதலைக் கொண்டிருந்த
குல்சாரிலால் நந்தாவின் எண்ணைத்தை மாற்றுவதற்காக
கட்சிப் பேராயம் நிறைவு பெற்றவுடன் குல்சாரிலால் நந்தாவை
சந்திப்பதற்காகக் கட்சியின் பொதுச் செயலாளர் சுந்தரய்யா
புது தில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். நந்தாவைச் சந்தித்த
சுந்தரய்யா தாங்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற முழக்கத்தை
மட்டுமே வைத்திருப்பதாகவும், தங்களுடைய கட்சி “சட்ட
ரீதியாகவும், வெளிப்படையாகவும்தான் செயல்படும்” என்றும்
அவரிடம் உறுதிமொழி அளித்தார். தாங்கள் ஆயுதப் போராட்டம்
போன்ற எந்த ஒரு போராட்டத்தைக் குறித்தும் சிந்தித்தும் கூட
பார்த்ததில்லை என்று சுந்தரய்யா கூறினார். “இந்திய அரசால்
வழங்கப்பட்டுள்ள அனைத்து “ஜனநாயக உரிமைகளையும்” (! )
நிராகரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு தாங்கள் ஒன்றும்
குழந்தைகள் அல்ல” என்றார் அவர்.

தெலுங்கானா வகைப்பட்ட போராட்டத்தைக் கட்டி அமைப்பதற்காக, தலைமறைவாக இயங்குவதற்கான தயாரிப்புகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுத்தார். தெலுங்கானாவின் ஆயுதந்தாங்கிய விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சி.பி.ஐ.யின் நிலையையே சி.பி.ஐ ( எம் )-உம் எடுத்தது. அதாவது தெலுங்கானா போராட்டம் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல நிலத்திற்கான போரட்டமே என்ற வரையறையையே மேற்கொண்டது.

தொகுத்துக் கூறினால்:
அமைதிவழி மாற்றம், ஆயுதப் புரட்சிஅல்ல! நிலத்திற்கான போராட்டம், அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல! 
என்ற நிலைப்பாட்டைத்தான் சி.பி.ஐ ( எம் )-கட்சி எடுத்தது.
இவ்வாறு சி.பி.ஐ ( எம் ) கட்சி மையவாத நிலைப்பாட்டிலிருந்து
திரிபுவாதத்திலும் வலது சந்தர்ப்பவாதத்திலும் மூழ்கியது. இத்தகைய நிலையில்தான் சி.பி.ஐ ( எம் )-க்குள் இருந்த புரட்சியாளர்கள் சி.பி.ஐ ( எம் )இன் திரிபுவாத நிலைபாட்டை எதிர்த்தும் வர்க்க சமரசப்பாதையை எதிர்த்தும் கட்சிக்குள் கிளர்ச்சி செய்தனர்.
___
2. நக்சல்பாரி எழுச்சியும் மா.லெ. கட்சியும்
(தொடரும்)
----------)
தொடர்ச்சிகளுக்கு:
நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்
-சமரன் தொடர் 1

No comments:

Post a Comment