Friday 16 July 2010

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

“பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு” என்ற தலைப்பிட்ட பிரசுரத்தை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மக்களிடம் வினியோகம் செய்தது. கோவை செம்மொழி மாநாட்டை எதிர்த்த இந்தப் பிரச்சாரத்தை முடக்குவதற்காக
> ம.ஜ.இ.க வின் அமைப்பாளர் உள்ளிட்ட முன்னணியினர் கைது;
> செம்மொழி மாநாடு நுழைவாயிலில் பிரசுரத்தை வினியோகம் செய்த ஞானம் உள்ளிட்ட ஐவர் மீது கொலைவெறித் தாக்குதல்;
> சென்னையில் ம.ஜ.இ.க தலைமை அலுவலகம் சூறையாடல்;
> சுவரொட்டியை அச்சிட்ட அச்சகத்தினர் மீது வழக்கு;
> கோவையில் செம்மொழி மாநாட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்த ம.ஜ.இ.க வினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டுச் சொந்தக்காரருக்கு மிரட்டல்;
> செம்மொழி மாநாட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது;
> அ.இ.அ.தி.மு.க பழ கருப்பையா மீதும் தாக்குதல்;
> தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக ஆக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது;
இவ்வாறு செம்மொழி மாநாட்டை விமர்சிக்கும் உரிமையை பறிப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும். இந்தத் தாக்குதல் பாசிசத் தன்மை கொண்ட கொடூர தாக்குதலாகும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கும் கருணாநிதி ஆட்சி, ஆங்கிலம் இந்தி மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தமிழ் மொழியை ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக ஆக்கக் கோரியும் குரல்கொடுத்தோர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் தொடுத்தது ஏன்?

* இந்தி அல்லது ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த தேசிய மொழியையும் அங்கீகரிக்க, வளர்த்தெடுக்க மத்திய அரசு தயாராயில்லை. இதை எதிர்த்துப் போராட கருணாநிதியின் தமிழக அரசு தயாராயில்லை.
* மத்தியில் அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்ற இலட்சியங்களையெல்லாம் கருணாநிதியும் திராவிட இயக்கக் கட்சிகளும் இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
* இப்போது கருணாநிதிக்கு உள்ள அக்கறை எல்லாம் மத்திய அமைச்சரவையில் வலுவான துறைகளைக் கைப்பற்றுவது எப்படி? வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பவைதான்.

இந்த சந்தர்ப்பவாத, அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் கருணாநிதியின் அரசியல்தான் தமிழக அரசு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை வழி நடத்தும் அரசியல். எனவே செம்மொழி மாநாட்டை விமர்சிப்பது கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தி, அவரைத் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும் எனக் கருதியே கருணாநிதியின் அரசு செம்மொழி மாநாட்டை எதிர்ப்போர் மீது இந்த தாக்குதலைத் தொடுத்தது.

செம்மொழி மாநாடு கருணாநிதியின் உட்கிடக்கையை வெட்டவெளிச்சமாக்கி விட்டது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பழந்தமிழ்ப் பெருமைப் பேசி தமிழ் மக்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஆனால் இன்றைய தமிழின் அவலத்தை அதாவது கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற பழமையான செம்மொழிகள் மக்களால் பயன்படுத்தப் படாமல் செத்த மொழிகளானது போல் தமிழும் (ஆங்கில, இந்தி மொழிகளின் ஆதிக்கம் தொடர்ந்தால்) செத்தமொழிப் பட்டியலில் சேரும் அவலம் விரைவில் நிகழக்கூடும் என்ற அபாயத்தை செம்மொழி மாநாட்டால் மறைக்க முடியவில்லை.
ஈழத் தமிழ் மக்களின் மீதான இன ஒழிப்புப் போர் முடிவுக்கு வந்த பிறகும், ராஜபட்சே அரசு இன ஒழிப்பு பாசிச நடவடிக்கைகள் மூலம் தொடர்கிறது. ராஜபட்சே அரசின் பாசிச தாக்குதலை எதிர்ப்பதற்கு மாறாக, மன்மோகன்சிங் அரசு அத்துடன் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்த்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குரல் கொடுக்காதது செம்மொழி மாநாட்டின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டது.
இந்த செம்மொழி மாநாட்டின் மூலம் தனக்கு ஆதரவாக மக்களை திரட்ட வேண்டும் என்ற கருணாநிதியின் உட்கிடக்கை வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த மாநாட்டின் ஆரவார ஆட்டங்களைக் கண்டு தமிழர்கள் ஏமாறப் போவதில்லை.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! – பாவேந்தர்

ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தபோதே, இந்தியாவிலுள்ள மொழிகள் எல்லாம் மடிந்துபோய் அவற்றின் இடத்தில் ஆங்கிலம் நிலவிவருமென கருத்து இருந்துவந்தது. படிப்படியாக மெல்ல மெல்ல தமிழ்மொழி இனி செத்துப் போகும். ஐரோப்பிய மொழிகள் இந்த உலகில் உயர்வினை அடையும் என்ற கருத்து இருந்து வந்தது.
“எவ்வாறாயினும் நமது தாய்மொழி சாமானியத்தில் இறந்துவிடக் கூடியதன்று” என்று நம்பிக்கொண்டிருந்தனர் இந்திய தேசியவாதிகள். ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போன பிறகும் கூட, இந்தியா அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவ நாடான பிறகும் கூட, இந்திய அரசு கடைப்பிடித்து வந்த தேசிய இன ஒடுக்குமுறைகளாலும், அது கடைப்பிடித்து வந்த ஆட்சி மொழிக் கொள்கையாலும், ‘எவ்வாறாயினும் நமது தாய்மொழி சாமானியத்தில் இறந்து விடக்கூடியதன்று’ என்ற நம்பிக்கை வளர்வதற்கு மாறாக, தேய்ந்து கொண்டே வந்துள்ளது.
இந்திய அரசின் ஆட்சிமொழி, பயிற்று மொழிக் கொள்கையின் விளைவாக இன்று ஆங்கிலம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சிமொழியாக இருக்கின்றன. இன்று அரசின் அனைத்து துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. உயர்நீதி மன்றங்களில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே வழக்காட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 348வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளிமுதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. இச்சூழலை மாற்றாமல் – ஆங்கிலத்தை அகற்றாமல் – தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக மாற்ற முடியாது.
இந்திய அரசு கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிப்பதை எதிர்த்துப் போரிடுவதற்கு பதிலாக மாநில தரகு முதலாளியக் கட்சிகளும் திரவிடக் கட்சிகளும் கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும் என வலியுறுத்தின. திராவிடக் கட்சிகள் தமிழை ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சி செய்யவில்லை; மாறாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகவே இக்கட்சிகள் பாடுபட்டன. இதன் விளைவாக மத்திய ஆட்சிமொழியாக தமிழில்லை, மாநிலத்திலும் முழுமையான நிர்வாக மொழியாக இல்லை. நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக இல்லை. பயிற்றுமொழியாக தமிழ் இல்லாமல் போகும் அபாயம் எங்கும் எதிலும் ஆங்கிலம் என்ற நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழ்மொழிக்கு மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஆங்கிலம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இப்படியே சென்றால், கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற பழமையான செம்மொழிகள் மக்களால் பயன்படுத்தப் படாமல் செத்த மொழிகளானது போல் தமிழும் செத்தமொழி பட்டியலில் சேரும் அவலம் விரைவில் நிகழக் கூடிய அபாயம் இருக்கிறது.
மேலும், யுனெஸ்கோ நிறுவனம் செய்த ஆய்வின்படி 21ஆம் நூற்றாண்டு இறுதியில் உலகில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்று என்ற செய்தி வந்துள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் விளைவாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் உலக நாடுகளில் எல்லாம் வெகுவாக பரவிவருவதன் தொடர்ச்சியாக இம்மொழிகளின் அழிவை நாம் காணவேண்டும்.
தமிழ்மொழி செம்மொழி என்று அறிவித்து விடுவதால் தமிழ் வழக்கொழிந்த மொழியாக ஆவதைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. தமிழ் எல்லாத் துறைகளிலும் மக்களின் பயன்பாட்டு மொழியாக ஆக வேண்டும்; எல்லாத் துறைகளிலும் அதனை வளம்பெற செய்தல்வேண்டும். அதாவது, தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிப்பாட்டு மொழியாக ஆக்குவதன் மூலம்தான் தமிழ்மொழி வாழ்வியல் மொழியாக, வளரும் மொழியாக நிலைநின்று மங்காப் புகழ்பெற்ற மொழியாக ஆக்கமுடியும்.
இப்பணியை, ஏகாதிபத்திய உலகமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவராமலும், இன்று நாட்டில் நிலவும் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆட்சி அமைப்புக்குள்ளேயே சாதித்துவிட இயலாது.

எனவே இப்பணியை நிறைவேற்ற இந்த அரசுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசை நிறுவ உறுதிகொள்வோம்!
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் வெற்றிபெற மக்கள் ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம்!
புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களை ஒடுக்க கருணாநிதி அரசு போடும் பொய் வழக்குகளை முறியடிக்க தாராளமாக நிதி தாரீர்!

புரட்சிகர ஜனநாயக இயக்கத்தைக் கட்டியமைக்கப் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்:
* தமிழ்மொழியை செம்மொழி என அறிவித்துவிடுவதால் தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது!

* தமிழ்மொழியை ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வழிபாட்டுமொழி ஆக்கிட மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!

ஆதரவு தாரீர்!.................................................... நிதி தாரீர்!
= மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஜுலை , 2010
========= சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள் !=============
குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்