Thursday 29 January 2015

இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் இந்தியாவை புதிய காலனியாக்கும் முயற்சியே!


இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் இந்தியாவை புதிய காலனியாக்கும் முயற்சியே!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு, அமெரிக்கா தனது ராணுவக் கொள்கையின் அடிப்படையில் எடுத்துள்ள முதல் நடவடிக்கை இந்திய-அமெரிக்க பாதுகாப்பு வரைவு ஒப்பந்தமாகும்; அதனுடைய இரண்டாவது நடவடிக்கை ஜார்ஜ்புஷ்-மன்மோகன்சிங் கூட்டறிக்கை ஆகும். அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்புக்கு அமெரிக்கா அளிக்க முன்வந்துள்ள விலைதான் இந்தியாவிற்குத் தேவையான அணுசக்தி தொழில்நுட்ப தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிகள். அமெரிக்கா தனது நீண்டகால யுத்ததந்திர நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த ராணுவ ஒப்பந்தத்தை இந்தியா மீது திணித்துள்ளது. இந்திய அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் இரகசியமாக இந்த ஒப்பந்தத்தை செய்துகொண்டதின் மூலம் மான வெட்கமின்றி தேசத்துரோக செயலில் இறங்கியுள்ளது. 

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைவு ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவுக்கு அடிபணியச் செய்யும் ஒப்பந்தமாகும். இந்த வரைவு ஒப்பந்தம் செயல் வடிவம் பெற்றால், இந்தியா தனது அரைகுறை இறையாண்மையையும் இழந்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள ஒரு நாடாக மாற்றப்பட்டுவிடும். மேலும் அது அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கும் ஆசியாவில் அதன் ராணுவ யுத்ததந்திர நோக்கங்களுக்கும் சேவை செய்யக் கூடிய ஒரு கருவியாக இந்தியாவை மாற்றிவிடும்.

பயங்கரவாதத்தை ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது ஆக்கிரமிப்பு யுத்தங்களைத் தொடுத்துள்ளதின் மூலம் எதை சாதிக்க விரும்புகிறதோ, அதையே இந்தியா விஷயத்தில் இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் இந்த ராணுவ ஒப்பந்தத்தின் மூலம் சாதிக்க முயல்கிறது.

அணு ஆற்றலைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ள வடகொரியா, ஈரான், லிபியா ஆகியவற்றை “போக்கிரி அரசுகள்” என்று கூறி அவற்றை தாக்கி அழிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் யுத்த வெறியன் புஷ், இந்தியாவை அமெரிக்காவுக்கு அடிபணிய செய்யும் ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன், இந்தியாவை “முன்னேறிய நவீன அணு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள பொறுப்பான நாடு” என பாராட்டுகின்றான்.
அமெரிக்காவுக்கும் பிற்போக்கு இந்திய தரகு முதலாளித்துவ அரசுக்கும் இடையில் அரசியல் யுத்ததந்திர பிரச்சனைகளில் அடிப்படையான வேறுபாடுகள் இருந்து வந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தின் கீழ் “ஒற்றை துருவ உலகம்” என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ரசியா, சீனா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் “பலதுருவ உலகம்” என்ற கொள்கையை ஆதரித்து வந்தது. சர்வதேச மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைதான் மைய நிறுவனம் என்ற கொள்கையை ரசியா, சீனா மற்றும் பிரான்சு ஆகியவற்றுடன் இந்திய அரசும் ஆதரித்து வந்தது. ஆனால் அமெரிக்காவோ ஐ.நாவை புறக்கணித்து விட்டு தனது விருப்பக் கூட்டாளிகளுடன் சர்வதேச விவகாரங்களில் ராணுவ ரீதியில் தலையிடும் கொள்கையை அமல் படுத்தி வருகிறது. ஐ.நாவை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் கொள்கையாக இருக்கும் போது அமெரிக்காவோ ஐ.நா சீர்திருத்தத்தை ஆதரிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மேற்கூறப்பட்ட அடிப்படையான வேறுபாடுகளை மூடிமறைத்து விட்டு அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதின் மூலம் சூழ்நிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை என்ன?
அதன் அடிப்படை தனிப்பண்பு அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை தனது நவீன காலனியாக்க விரும்புவதாகும். 
1947ல் அதிகாரம் இந்திய தரகு பெருமுதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கைகளுக்கு மாற்றப்பட்டதிலிருந்தே, இந்தியா சில ஏகாதிபத்திய வல்லரசுகள் கூட்டாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு அரைக்காலனி நாடாக இருந்து வருகிறது.

துவக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம், பின்னர் 1970ம் ஆண்டுகளிலிருந்து 1980களின் முற்பாதி வரையிலும் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும், இந்தியாவை தமது நவீன காலனியாக மாற்றுவதற்கு வெறித்தனமாக முயற்சித்தன.

ஆனால் இரண்டு மேல்நிலை வல்லரசுகளில் எது ஒன்றும் இந்தியாவை தனது நவீன காலனியாக்க முடியவில்லை. இந்திய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தாலும், ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கிடையேயுள்ள குறிப்பாக சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயுள்ள மோதல்களாலும் இந்திய அரசு ஒரு அரை சுயாதீன - பி-ர் (ஒரு அரையாதின- ) அந்தஸ்தை கொண்டிருக்கக் கூடியதா (யுள்ளது)க இருந்தது.
1971ம் ஆண்டு இந்தோ சோவியத் ராணுவ (பாதுகாப்பு) ஒப்பந்தம் மூலமாக சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை நோக்கி சாய்வதானது உறுதிப்படுத்தப்பட்டது.

மற்ற ஏகாதிபத்திய வாதிகளுடன் ஒப்பிடும்போது, இந்திய அரசின் மீது அதிகமான அரசியல் கட்டுப்பாட்டை சோவியத் யூனியன் பெற்றதற்கு பின்வருவனவற்றை காரணங்களாக சொல்லலாம்:

பொருளாதாரத் துறையில்: அரசுத் துறையில் நுழைவதில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு இருந்த தயக்கம்; அரசியல் துறையில்: இந்திய ஆளும் வர்க்கங்களின் விரிவாதிக்க நோக்கங்களை ஆதரிக்க அதற்கு இருந்த விருப்பமின்மை ஆகியவற்றின் விளைவாக இவை இரண்டையும் செய்த சோவியத் ஒன்றியத்தின் ஆதரவு நிலைக்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் போய்ச்சேர்ந்தன.

ஆனால் சோவியத் யூனியனில் சமூக ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியால், 1980களில் கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்ததுபோல இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது சோவியத் ஒன்றியத்தின் பிடி(யை) விரைவாக தளரச் செய்தன. இந்திய ஆளும் வர்க்கங்கள் தொழில் நுட்பம், மூலதனப் பொருட்கள், கடன்கள் மற்றும் இதர மூலதன வருகைக்கு பிற ஏகாதிபத்திய மூலங்களை தேட ஆரம்பித்தனர். சோவியத் ஒன்றியத்தின் - சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை உணர்ந்து கொண்ட இந்திய ஆளும் வர்க்கங்கள் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களை நோக்கி நகர ஆரம்பித்தன. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் ராஜீவ் அரசாங்கமானது இஸ்ரேலுடன் உறவுகளை மேம்படுத்தியது. ராஜீவ் ஆட்சிக்கு பின்னர் வந்த வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் ஆகியோரது அரசாங்கங்களும் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து பொருளாதாரத் துறையில் புதிய காட்(GATT) ஒப்பந்தத்தை ஆதரித்ததுடன் எ.எஸ்.எல்.வி (ASLV) மற்றும் அக்கினி ஆகிய ஏவுகணைகள் ஏவுவதை நிறுத்திவைத்தனர். அமெரிக்காவின் பி-52 இரகசிய குண்டு வீச்சு விமானங்கள் ஈராக்கின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு செல்லும் முன் இந்தியாவில் பெட்ரோல் நிரப்பிச் செல்ல திருட்டுத்தனமாக சந்திரசேகர் அரசாங்கம் அனுமதித்தது.

 சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தகர்ந்த பிறகு, அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் புஷ் புதிய உலக ஒழுங்கமைப்பை அறிவித்த பிறகு, சர்வதேச அளவில் நடைபெற்ற மாற்றங்களின் வேகத்தை வெளிப்படுத்தும் விதத்தில், இந்தியாவிலும் 1991ல் ஜூனில் நரசிம்மராவ் அரசாங்கம் பொறுப்பேற்றபின் - அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியும் மாற்றங்கள் வேகம் பெற்றன. 

அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தம், அணு ஆயுதமற்ற மண்டல ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்தம், ரசியாவிலிருந்து ராக்கட் தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வதற்கான இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (ISRO) மீது தடை விதித்தல், பி.எஸ்.எல்.வி (PSLV) மற்றும்  ஜி.எஸ்.எல்.வி (GSLV)  போன்ற விண்வெளி திட்டங்களை நிறுத்தி வைக்க தீவிரமாக நிர்ப்பந்தித்தல் இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் இந்தியாவில் தமது போட்டியாளர் மீது தாக்குதல் நடத்தினார்கள்; இந்திய ஆளும் வர்க்கங்களை தமது ஆணைக்கு அடிபணியச் செய்தனர். இந்தியாவில் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ராணுவ மற்றும் வெளியுறவுத் துறைகளில் இந்தியாவை தமது உலக யுத்தத்திற்கு சேவை செய்யும் படியான கொள்கைகளை மேற்கொள்ளும் படி இந்திய அரசை நிர்ப்பந்தித்தனர்.

இந்திய, அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு என்பது 1992 ஜனவரியில் நரசிம்மராவ் கும்பல் ஆட்சிக்கு வந்தப்போது துவங்கியது. இந்திய - அமெரிக்க  ராணுவ நிர்வாக வழிகாட்டும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரு நாட்டுக் கப்பற் படைகளுக்கிடையே வழிகாட்டும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. 1992ல் இரு நாட்டுக் கப்பற் படைகளும் கூட்டாக பயிற்சியில் ஈடுப்பட்டன. இதைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு இருநாட்டு விமானப்படைகளுக்கிடையே கூட்டு வழிகாட்டும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1995ம் ஆண்டு அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளுக்காக நரசிம்மராவ் அரசு முதல் முறையாக இந்திய - அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. இந்த ஒத்துழைப்பு உடன்பாடுதான் முதன்முதலில் இந்தியப் படையின் அதிகாரிகள் அமெரிக்காவிற்கு சென்று பயிற்சியில் பங்கேற்க வழிசெய்தது.

பாரதிய ஜனதா கட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு, இத்தகைய ராணுவ ஒத்துழைப்பை மிக முக்கிய “கேந்திரக் கூட்டணி” என்று பிரகடனம் செய்தது. இந்தியாவின் வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக யுத்தத்தந்திர நலன்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

1998ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்தது, எனினும் அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பா.ஜ.க அரசு தொடர்ந்து தீவிரமாக முயற்சித்தது. இதற்காக அமெரிக்க பாதுகாப்பு படைகளுடன் கூட்டுப் பயிற்சிகளை தொடர்ச்சியாக நடத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய யுத்ததந்திர கொள்கைகளை இந்தியாவின் நடைமுறை ராணுவ கொள்கைகளாக மாற்றுவதற்காக 2001ல் பாதுகாப்புக் கொள்கைக் குழு (Defence Policy Group) அமைக்கப்பட்டது. அமெரிக்கப் பாதுகாப்பு படைகளுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது. இரண்டு நாடுகளின் முப்படை பிரிவுகள் (தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய ஒவ்வொன்றும்) கூட்டாக இயங்குவதற்காக ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இயங்கும் குழுக்கள் (Stearing Groups) அமைக்கப்பட்டன. கூட்டு நடவடிக்கைகள் தீவிரமாக வளர்ச்சியடைந்தன.

 இக்காலத்தில்தான் அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ (FBI) ன் அலுவலகத்தை புது டில்லியில் அமைக்க பா.ஜ.க அரசு அனுமதித்தது. புஷ் அறிவித்த ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை பா.ஜ.க அரசு வரவேற்றது. “மலாக்கா ஜலசந்தி” வழியாகச் சென்ற அமெரிக்க கப்பல்களுக்கு, இந்திய கப்பல் படை பாதுகாப்பு அளிக்க ஒப்புக்கொண்டது. 2002ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் உளவுப்பிரிவு “இந்திய அமெரிக்க ரணுவ உறவு: சில எதிர்பார்ப்புகளும் தொலை நோக்கும்” என்ற அறிக்கையை தயாரித்திருக்கிறது. இந்த அறிக்கை இந்தியாவிடம் அமெரிக்கா என்ன எதிர்ப்பார்க்கிறது என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறது. அந்த ஆவணம் அளித்துள்ள ஆலோசனையின் படி அமெரிக்காவின் ராணுவ நோக்கங்களை செயல்படுத்த ஒரு வேலை பிரிவினைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைப் பிரிவினையின்படி நேரடி ராணுவ நடவடிக்கைகளை-  ஆக்கிரமிப்புகளை அமெரிக்க ராணுவம் தானே முன் நின்று நடத்தும். உலகளவில் செய்யப்பட வேண்டிய வேறு ‘சின்ன சின்ன’ வேலைகள் இருக்கின்றன. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளில் அமைதி காக்கும் நடவடிக்கைகள், அதிக மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச்செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுதல்; பேரிடர் நிவாரண  வேலைகளை நிறைவேற்றுதல்; அணு ஆயுதங்கள் கடத்திச் செல்லப்படுகின்றனவா என்று கப்பல்களை வழிமறித்துச் சோதனை இடுதல்; கடல் வழி பாதுகாப்பு போன்ற ‘சின்ன சின்ன’ வேலைகள் இருக்கின்றன. இத்தகைய ‘சின்ன சின்ன’ வேலை செய்வதற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் திறமை வாய்ந்த ராணுவக் கூட்டணி அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. ஆசிய பிராந்தியத்திற்காக அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ள திறமை வாய்ந்த கூட்டாளிதான் இந்தியா. இது அந்த ஆவணத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இத்தகைய ‘சின்ன’ பணிகளை செய்வதற்கு கூட்டாளி வேண்டும். அப்போதுதான் தாக்குதல் தொடுக்கும் போர் நடவடிக்கைகளில் அமெரிக்கா கவனம் குவிக்கலாம் என்று அவ்வறிக்கை கூறுகிறது. ஆக்கிரமிப்பு போர் நடத்தி ஒரு நாட்டைப் பிடித்த பிறகு அங்கு நிலை கொள்வதற்காக அமைதி காக்கும் பணி, தேடுதல் பணி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் போலீசு வேலைகளில் இந்திய படைகளை இறக்கி விடுவதே இதன் நோக்கமாகும்.

இராணுவ விவகாரங்களின் மட்டத்தில் இருநாடுகளின் இத்தகையதொரு ஒருங்கிணைப்பின் விளைவுகளில் ஒன்று நமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா செல்வாக்கு செலுத்துவதாகும்.

அமெரிக்காவுடன் ராணுவ கூட்டு வைத்துக்கொள்ளும் ஒரு நாட்டில் அமெரிக்கப் படைப்பிரிவு இருத்தல், கூட்டு திட்டமிடுதல், கூட்டுப் பயிற்சி அல்லது அதீத ராணுவ உதவி; இவையனைத்தும் கூட்டுச்சேரும் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டிற்கு உத்திரவாதம் செய்கிறதென்று அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் 1970ம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த செல்வாக்கை, உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகள் பிரதானமாக ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டையும் எதிர்த்து அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு ஆதரவாக மாற்றப்பட்டன. பொருளாதார ரீதியில் போட்டியிடும் திறன் மற்றும் நிதி அளவுகோல்களுக்கு எதிராக, அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகள் இந்தியச் சந்தையைச் கைப்பற்றுவதற்கும் பயன்படுத்துகின்றன. உண்மையில், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான பொருளாதார போட்டியிலும்கூட, அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய அரசின் மீதுள்ள யுத்ததந்திர மற்றும் அரசியல் செல்வாக்கின்மீது முதன்மையாக சார்ந்திருக்கிறது. அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியம் பிரதானமாக பொருளாதார ஏற்பாடுகளைச் (Economic Mechanism)  சார்ந்திருக்கிறது.

என்ரான் விஷயத்திலிருந்து அண்மையில் இந்திய ஏர்லைன்ஸ்களுக்கான இரண்டு பில்லியன் டாலர் ஆகாய விமான ஆர்டர் வரை பொருளாதார நிலை மற்றும் சந்தை சாமர்த்தியமும் அமெரிக்க கம்பனிகளுக்கு  அனுகூலமான (edge) நிலைமைகளைத் தரவில்லை. அதற்கு மாறாக இந்திய அரசின் மீது யுத்ததந்திர ரீதியான அதிகார வலிமையால் ஏற்பட்ட செல்வாக்குத்தான் இந்த நிலைமையை தந்தது.

மேலும் தனது இராணுவக் கொள்கையை அமெரிக்கா பின்வருமாறு பிரகடனம் செய்துள்ளது: 

உலகின் மிகப் பெரிய பொருளாதார - இராணுவ வல்லரசு அமெரிக்கா. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் வகையில் நாங்கள் செயல்படுவோம். வேறு எந்த நாடும் பொருளாதார ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ எங்களுக்கு நிகராக வளர நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம். நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் அமெரிக்காவின் மேலாண்மைக்குச் சவாலாக ஐரோப்பிய ஒன்றியமும், ஜப்பானும் வந்துவிட்ட நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அரசியல் மற்றும் இராணுவ மேலாண்மையைக் கொண்டு தனது உலக மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது என்பது அமெரிக்காவின் யுத்ததந்திரக் கொள்கையாக இருக்கிறது.
அமெரிக்க முதலாளித்துவம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மோசமான நெருக்கடியிலிருந்து விடுபட புஷ் இந்த புவிப் பரப்பு முழுவதையும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர திட்டமிட்டு செயலாற்றிவருகிறார். அதற்காக உலக அளவிலான யுத்தத்திற்கு தயாரிப்புகள் செய்துவருகிறார்.

தன்னுடைய ஏகபோக ஆதிக்கத்திற்கு தடைகளாக உருவாகும் வல்லமை கொண்ட நாடுகளாக புஷ் நிர்வாகம் கருதுவது ஐரோப்பிய யூனியனையும் ஐப்பானையும் மட்டுமல்ல ரஷ்யா, சீனா போன்ற நாடுகளையும் அது எதிரிகளாக பார்க்கிறது. தன்னுடைய ஆதிக்கப் பரப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஆற்றல் உள்ள எதிரிகளை முன் கூட்டியே தாக்கி அழிக்கும் போருக்கான மிக விரிவான போர்த் தந்த்திரங்களை அது வகுத்துக் கொண்டுள்ளது.

“தீயசக்திகள் கூட்டு” அல்லது “கொடுங்கோல் ஆட்சியின் புறக்காவல் நிலையங்கள்” என்று பெயரிட்டு வடகொரியா, கியூபா, பைலோரஸ் குடியரசு, ஈரான், சிரியா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளையும் அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியாத பிற நாடுகளையும் வெளிப்படையாக மிரட்டி வருகிறது.

“பயங்கரவாதத்தை ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது என்ற போர்வையில்” ஏற்கனவே ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது. இது போதாதென்று அமெரிக்க வல்லரசு ஈரானையும், வடகொரியாவையும் தாக்கி அழிக்கத் தருணம் பார்க்கிறது.

இவ்வாறு அமெரிக்கா யுத்தத்திற்கு தயாரிப்புகள் செய்துவரும் சூழலில்தான் இந்தியாவை அமெரிக்காவுக்கு அடிபணியச் செய்யும் ராணுவ ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கான போரில் இந்தியாவும் இப்போது பிணைக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க இந்திய ராணுவ ஒப்பந்தத்தை நாம் பரிசீலனை செய்யவேண்டும்.

அமெரிக்க-இந்திய ராணுவ ஒப்பந்தம்

அமெரிக்க-இந்திய ராணுவ ஒப்பந்தத்தின் முதல் பத்தி, இரு நாடுகளும் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம், ஜனநாயக நிறுவனங்கள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாக கூறுகிறது. மன்மோகன்சிங் - ஜார்ஜ் புஷ் கூட்டறிக்கையில், இருவரும் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை மேம்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடவும் இணைந்து செயலாற்றப் போவதாகவும் கூறியுள்ளது. இரு நாடுகளும் மூன்றாவது நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது என்ற பெயரில் “உலகளாவிய ஜனநாயகத்திற்கான முன்முயற்சி” என்ற திட்டத்தை அறிவித்துள்ளனர். அமெரிக்கா மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவின் ஆதாரங்கள் (மூலப் பொருள்கள்) வளமாக உள்ள நாடுகளின் மீது ‘மேற்கத்திய பாணி’ ஜனநாயகம் என்ற போர்வையில் தனது பொம்மை ஆட்சிகளைத் திணிக்க முயல்கிறது. ஜனநாயகம் என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி, அமெரிக்கா கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் மாஸ்கோவின் செல்வாக்கின் அஸ்திவாரத்தை அழித்துவிட்டு, அப்பிரதேசங்களை தனது செல்வாக்கு மண்டலத்துக்குள் கொண்டுவர முயல்கிறது. மாஸ்கோ, பீஜிங் போன்ற தலை நகரங்களில் ‘ஜனநாயகம்’ என்ற சொல் அவற்றின் அரசாங்கங்களை நிலைகுலையச் செய்யக்கூடிய வார்த்தையாக ஆகிவிட்டது.இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் எதற்காக அச்சப்படுகிறார்கள் என்றால், ஜார்ஜியாவிலும், உக்ரோனிலும் நிகழ்ந்த ‘ரோஸ்’ மற்றும் ‘ஆரஞ்’ (orange) புரட்சிகளைப் போன்ற வாஷிங்டன் மேற்பார்வையில் நடைபெற்ற ‘ஜனநாயகப் புரட்சிகள்’ இன்னும் அதிகமாக நடைபெறுமோ என்று அச்சப்படுகிறார்கள். ‘இப்புரட்சிகள்’ அந்நாடுகளில் வாஷிங்டன் தாசர்களின் அரசாங்கங்களை பதவியில் அமர்த்தியுள்ளது. ஒரு ஆக்கிரமிப்பு போரின் மூலமாகவோ அல்லது அதிரடி ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மூலமாகவோ தன் கைக்கூலிகளை பதவியில் அமர்த்துவது தனது கைப்பாவைகளின் (பொம்மைகளின்) ஆட்சியை அமைப்பது ஆகியவற்றின் மூலம் “ஜனநாயகத்தை” பரப்புகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொது நலன் என்று ஒன்று உண்டா?

அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற விஷயங்களில் உலகளாவிய ராணுவ நடவடிக்கைகளில் கூட்டாக செயல்படுவது என்று ராணுவ ஒப்பந்தம் கூறுகிறது. பொதுநலனுக்கு ஏற்றவை எவை என்ற பட்டியலையும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது:

1. பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பது (நிலைநாட்டுவது)
2. பயங்கரவாதத்தை ஒழிப்பது
3. பேரழிவு அயுதங்களை ஒழிப்பது
4. நிலம், ஆகாயம் மற்றும் கடல் வழி சுதந்திர வர்த்தகத்தைப் பாதுக்காக்க கூட்டாக செயல்படுவது
5. இருநாட்டு பாதுகாப்பு படைகளும் பொதுவான நலன் சார்ந்த விஷயத்தில் பலநாட்டு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது ஒன்றாக இணைந்து செயல்படுவது.

இந்த ராணுவ ஒப்பந்தம் கூறுவது போல் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொது நலன் என்று ஒன்று உண்டா?
அமெரிக்காவின் நலன் என்ன?
அமெரிக்காவின், அதன் ராணுவத்தின் குறிக்கோள் தனது எதிரிகளை நொறுக்கி கச்சாப் பொருட்களுக்கான ஆதரங்களையும், சந்தைகளையும் கைப்பற்றுவதுதான். அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் பொருளாதார ‘உதவி’யின் மூலமாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளைத் தங்கள் பொருட்களின் விற்பனைக்கான சந்தையாகவும், கச்சாப் பொருட்களைப் பெறுவதற்கான ஆதாரமாகவும், தங்களது மூலதன ஏற்றுமதிக்கான வாசலாகவும் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதற்கும், இந்நாடுகளின் மீது ராணுவ, பொருளாதார, கலாச்சார ஆக்கிரமிப்புத் தொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகளின் சபையை அமெரிக்கா ஒரு கருவியாக பயன்படுத்தி வந்தது. இப்போது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் காரணமாக ஐ.நா சபையைப் பயன்படுத்த முடியாத நிலையில், ஐ.நாவின் அனுமதியின்றி ஒருதலைப் பட்ச ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நாடுகளில் ‘சமாதான’ முறைகளிலான தங்களுடைய அடிவருடிகளின் ஆட்சியைத் தொடரமுடியவில்லையெனில் ராணுவ ஆட்சி கவிழ்ப்புகளைச் செய்து ஆட்சிகளை மாற்றுகிறது; சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுகிறது அல்லது நேரடியான ராணுவத் தலையீட்டையோ, ஆக்கிரமிப்பையோ நடத்துகிறார்கள். பிற ஏகாதிபத்தியங்களின் காலனிகளையும், செல்வாக்கு மண்டலங்களையும் பறித்துக் கொள்ள கடுமையாக முயன்றுவருகிறது அமெரிக்கா. தங்கள் எதிரிகளை முன்கூட்டியே தாக்கி அழிக்கும் போருக்கான மிக விரிவான போர்தந்திரங்களை அது வகுத்துக் கொண்டுள்ளது. ‘தீய சக்திகளின் கூட்டு’ அல்லது கொடுங்கோல் ஆட்சியின் புறக்காவல் நிலையங்கள் என்று பெயரிட்டு தனக்கு அடிபணிய மறுக்கும் நாடுகளை வெளிப்படையாக மிரட்டுகிறது.

எனவே, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பொதுநலன் ஏதுமில்லை; மூன்றாம் உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பொது நலன்கள் இல்லை. ஆகவே, அமெரிக்கா இந்தியாவை பிற ஆசிய நாடுகளுக்கு எதிராக அடியாளாகப் பயன்படுத்த முயல்கிறது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களில் இந்தியப் படையை கூலிப் படையாகவும், பலிகடாக்களாகவும் பயன்படுத்துவதற்கு இந்த ராணுவ ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இது இந்த ராணுவ ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.

பயங்கரவாதத்தை ஒழிக்கப்போவதாக பாதுகாப்பு ஒப்பந்தம் கூறுகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது என்ற போர்வையில் ஏற்கனவே ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கூறும் இருநாடுகளுக்கு பொது நலன் என்ற சொற்றொடருக்கு உண்மையான பொருள் என்ன என்பதை, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று சொல்லி ஈராக் மீது அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்த போது புஷ் கொடுத்த பின்வரும் விளக்கத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்; “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் நீங்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து நில்லுங்கள் - அப்படி இல்லை என்றால் நீங்கள் பயங்கரவாதத்துக்கு  ஆதரவாளர்களாக கருதப்படுவீர்கள்.” தனக்கு அடிபணிய மறுக்கும் ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு அதனிடத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் பொம்மையாட்சி அமைக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் இந்த நலன்களை அனைத்து நாடுகளும் நிபந்தனையின்றி ஏற்கவேண்டும். இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களுடைய இந்திய அடிவருடிகளும் கூறும் இரு நாடுகளின் பொது நலன் என்பதின் பொருள்.

அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அரசு பயங்கரவாதமும், பிற நாடுகளின் இறையாண்மை மீதான அதன் தாக்குதல்களுமே, மிகக் கடுமையான அடிப்படை வாதத்தை தூண்டிவிடுகின்றன என்பதே இன்றைய சரவதேச பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாகும். ஈராக் நகரங்களில் பெரும் திரளானோர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள், ஊனமுற்றோர் அல்லது முதியோர் என்ற பாகுபாடின்றி, விதிவிலக்கின்றி அனைவரையும் அமெரிக்க ராணுவத்தினர் கொன்றுகுவித்து வருகின்றனர். ஈராக்கில் குடிமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன; குடிநீர், சுகாதாரம், மின்சாரம் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டு மாநகர் மற்றும் நகரங்களின் உள்கட்டுமான வசதிகள் நாசமாக்கப்பட்டன. ஈராக்கில் மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் வெளிக் கிளம்பி அமெரிக்கப் படையினரை நிலை குலையச் செய்து வருகின்றனர். இந்த அநீதி யுத்தத்தை எதிர்த்து தங்களின் தாய்நாட்டின் விடுதலைக்காக போராடுவோரை ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் இந்திய அடிவருடிகளும் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கின்றனர். தங்களின் தாய் நாட்டையும் தங்களின் எண்ணை வளங்களையும் கைப்பற்றும் ஆக்கிரமிப்பாளரை எதிர்த்த மக்களின் போராட்டங்களை ஒழிப்பதுதான் பயங்கரவாதத்தை ஒழிப்பது என ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய காலனியாதிக்க தாசர்களும் கூறுகின்றனர்.

அயல் நாடுகளில் மறைமுக நடவடிக்கைகள் அல்லது ‘நிழல் யுத்தங்களில்’ அமெரிக்க ஆயுதப் படைகள் ஈடுபடுகின்றன. “ஆட்சி மாற்றம்” அல்லது அரசாங்கங்களை பயமுறுத்துவது போன்ற அரசியல் நோக்கங்களுக்கு சேவை செய்வதற்காக அரசு தலைவர்கள்  மற்றும் அரசியல் தலைவர்களைக் கொலை செய்வது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டதுதான் மறைமுக நடவடிக்கைகள் அல்லது ‘நிழல் யுத்தங்கள்’ எனப்படுபவையாகும்.

வேறுவிதமாகச் சொன்னால் அமெரிக்கப் படைகளை, அயல் நாட்டின் அரசியல் அரங்கிலும் அதனுடைய உள்நாட்டு விவகாரங்களிலும் மறைமுகமாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாகும். (சதித்தனமாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாகும்). அமெரிக்க முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள், தரைப்படைத் தளபதிகள், விமானப்படைத் தலைவர் ஆகியோர் ரகசிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோராக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே சர்வதேச குற்றவியல் வழக்கு மன்றம் மற்றும் ஜெனிவா கன்வென்ஷன்(Convention) முடிவுகள் ஆகியவற்றிலிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாக உத்ததரவால் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிகள் மற்றும் கூட்டு நிகழ்ச்சிகளும், இருநாட்டு படைகளும் பல நாட்டு ராணுவ நடவடிக்கைகளில் கூட்டாளியாக செயல்படுதல் போன்ற ராணுவத்துக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உறவு இந்திய படையினருக்கு “மறைமுக நடவடிக்கைகள்” அல்லது “நிழல் யுத்தங்களில்” ஈடுபடுதல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான பயிற்சியாகவே முடியும்.

இத்தகைய அரசு பயங்கரவாதம் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை - ஏற்கனவே இந்திய அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஒடுக்கும் எதேச்சாதிகார அரசாகவும், மேல்சாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களையும் பழங்குடியினரையும் ஒடுக்கும் அரசாகவும், சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக ஒடுக்குமுறையில் ஈடுபடும் அரசாகவும் இருக்கும் சூழலில் - முழுவதுமாக சீர்குலைக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதற்கே வழிவகுக்கும்.

உண்மையில், அமெரிக்க ராணுவ யுத்த தந்திர மறைமுக நடவடிக்கை கோட்பாடு பின்பற்றப் படுமானால், இந்திய அரசு அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்துக்குச் சேவை செய்யக்கூடிய இந்து மதவெறி பயங்கரவாத , இந்திப் பேரினவாத அரசாக மாற்றப்படக் கூடும்.

மேலும் இந்த ராணுவ ஒப்பந்தத்தில் இருநாட்டு பாதுகாப்புப் படைகளும் தங்களது பொது நலன்சார்ந்த விஷயத்தில் பலநாட்டு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது ஒன்றாக இணைந்து செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் அனுமதியில்லாமலே ஒரு மூன்றாவது நாட்டில் தன் இஷ்டம்போல் போர் தொடுக்கலாம் என்ற அமெரிக்காவின் கண்ணோட்டத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுவிட்டது; மற்றும் அமெரிக்க ராணுவத்தின் யுத்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பல நாடுகள் படையில் இந்தியா பங்குகொள்வது என்பது அந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இந்திய படை அமெரிக்காவின் அடியாட்கள் படையாக செயல்பட ஒப்புக்கொண்டது என்பதாகும். இதற்கு உதாரணம், ஈராக்கில் நடந்த தாக்குதலில் பங்கேற்ற பலநாடுகள் படையின் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பிறநாட்டு படைகள் அடியாட்கள் படைகளாக செயல்பட்டன என்பதாகும்.

இந்த ராணுவ ஒப்பந்தத்தில் நிலம், ஆகாயம் மற்றும் கடல்வழிகளில் நடக்கும் சுதந்திர வர்த்தகத்தை பாதுகாக்க கூட்டாக செயல்படுவது என்று கூறப்பட்டுள்ளது. ஆசிய பாதுகாப்பு மாநாட்டில், மலாக்கா ஜலசந்தியைப் பாதுகாப்பதில் அந்த கடல் பகுதி நாடுகள் மட்டுமல்லாமல் பிறநாடுகளின் கடற்படைகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ரம்ஸ் பீல்டு கூறினார். மலாக்கா ஜலசந்தியைச் சேர்ந்த மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் சம்மதமும் பங்குகொள்ளுதலும் இல்லாமல், இந்த கடல் வழி பிராந்தியத்தில் இந்திய கடற்படை அமெரிக்கப் படையுடன் கடல் கொள்ளைக்கு எதிரான கூட்டுப் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்தியாவின் நலன்களுக்கு உகந்தது அல்ல; ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கு மேலும் உதவும் கொள்கையாகும். அமெரிக்கா வலியுறுத்திவரும் கடற்பகுதி பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகளை மலாக்கா ஜலசந்தி பிராந்திய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. மலேசிய துணைப் பிரதமர் நஜீப் ரசாக் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார்: எங்களது பிராந்திய கடல்வழி பாதுகாப்புக்கு வேறு நாட்டுக் கடற்படைகளை அனுமதிக்க முடியாது. இந்த கடல் வழிப்பாதையின்  பாதுகாப்பை கடற்பகுதியில் அமைந்துள்ள நாடுகளே பராமரிக்கும். மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகள் சமரசத்துக்கு இடமில்லை என்று மலேசிய நாட்டு துணைப் பிரதமர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
எந்தவொரு கப்பலாவது பேரழிவு ஆயுதங்கள் இருக்கும் என்று ஐயம் ஏற்பட்டால் அந்தக் கப்பலைக்கூட தடுத்து நிறுத்தி சோதனைகள் செய்யவேண்டும் என்பது, பிற இறையாண்மையுடைய அரசுகளின் பிரதேசங்களில் அமெரிக்க ராணுவத்தின் முற்றும் பொய்யான நோக்கங்களுக்காக செயல்படுவது மட்டுமல்ல, அது இப்பிரதேசத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு சேவை செய்வதாகும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

தங்கள் கடல் வழி பாதுகாப்பை கூட்டாக உறுதிப்படுத்துவது என்று ஏசியன் (ASEAN) சங்கத்தின் உறுப்பு நாடுகள் கூறுகின்றன. அந்த பிராந்தியத்தில் கடல்வழி வாணிபத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஒத்துழைப்பது ஆசிய அரசுகளின் பிரத்தியேக உரிமையாகும். கூட்டு ரோந்து பணிகளில் இந்தியாவை உட்படுத்துவது என்ற அமெரிக்காவின் திட்டம். இந்தியாவை PSI (Proliferation SECURITY Initiative) க்குள் இழுத்துக் கொள்வதற்கான சதித் திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். ஏற்கெனவே ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் PSI திட்டத்தை ஆதரிக்கின்றன.

(ஆக) இந்த திட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்துக்கு சேவை செய்யும் திட்டமாகும்.

மூலம்: (மக்கள் புரட்சி -கட்சி இதழ்- ஆகஸ்ட்-செப்ரெம்பர் 2005)   இணைய பதிப்பு நன்றி: செந்தளம்

தொடரும்... 

Saturday 24 January 2015

கழகப் பிரசுரம்:ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே ஜனநாயகவாதிகளே!
           =============================================================
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, இந்துத்துவ பாசிச மோடியின் அழைப்பை ஏற்று இவ்வாண்டு குடியரசு தினவிழா (26 ஜனவரி 2015)சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுகிறார்.
 சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திக்கு குறுநில மன்னன் அளிக்கும் விருந்தைப்போல் தலைநகரமே வெள்ளை மாளிகையாக மாற்றப்பட்டு விழிபிதுங்கி நிற்கிறது.
 2012-ல் இரண்டாம் எலிசபெத் ராணியை வரவேற்க அரசு அலுவலகங்களில் ’சுதந்திர’ தினக் கொண்டாட்டங்களை கைவிட்டது மன்மோகன் கும்பலின் காங்கிரஸ் ஆட்சி. ‘குடியரசு’ தினத்தன்று எஜமானன் ஒபாமாவை மலர்ப் பல்லக்கில் சுமந்து வருவதன் மூலம் புதியகாலனிய சேவையில் மன்மோகன் கும்பலையும் விஞ்சிவிட்டது மோடிகும்பல்.
         ================================================================

ஒபாமாவின் இந்திய வருகை மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாகும்.

ஒன்று: அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர்த்து இந்தியாவை தனது கூட்டணிக்குள் கொண்டுவருவது;

இரண்டு: அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது;

மூன்று: இந்திய நாட்டின் நிதித்துறை, பாதுகாப்புத் துறை, அணுசக்தித் துறை போன்ற அனைத்துத் துறைகளையும் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திப்பது;

இத்துடன் இந்துத்துவ மதவெறிப் பாசிச அமைப்புகளுக்கு ஊக்கம் அளித்தல். (போன்றவைகளே அவை.) 

அமெரிக்காவின் சரிவும் - சீனாவின் வளர்ச்சியும்

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கா தனது உலக மேலாதிக்க ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பைக் கட்டியமைப்பதில் படுதோல்வி அடைந்துள்ளது. பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரால் தமக்கு அடிபணியாத நாடுகள் (ஆப்கன், ஈராக்) மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது.

தனது ஆதரவு நாடுகளிலும் கூட (எகிப்து, லிபியா, ஏமன்) அந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான மக்களின் கலகங்களைப் பயன்படுத்திக் கொண்டு ‘ஜனநாயகம்’, ‘மனித உரிமை’ என்ற பேரால் ஆட்சிக் கவிழ்ப்பு செய்து பொம்மை ஆட்சியை உருவாக்கியது. ரஷியாவிலிருந்து பிரிந்து வந்த சின்னஞ்சிறு நாடுகளில் பலவண்ணப் புரட்சிகள் நடத்தி ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டது. எனினும் ஆப்கனிலும், ஈராக்கிலும் தாலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளின் எழுச்சிகளின் விளைவாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர் நீட்டித்துக் கொண்டே செல்கிறது. ஈரான், சிரியா போன்ற நாடுகளில் அமெரிக்காவின் கனவு பலிக்கவில்லை. இதற்கெல்லாம் தடையாக உள்ள ரஷியா மீது உக்ரைன் பிரச்சினையைக் காட்டி பொருளாதாரத் தடையை விதித்தது. ஆனால், கொடிய ஆக்கிரமிப்புப் போரும், பொருளாதாரத் தடைகளும் அமெரிக்க ஏகாதிபத்தையே திருப்பித் தாக்கியுள்ளன.

2008ல் அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடி மென்மேலும் ஆழமடைந்து வருகிறது. இன்று அமெரிக்கா, வரலாற்றில் முன்னுதாரணமே இல்லாத அளவிற்கு பெரும் கடனில் மூழ்கி உள்ளது. 2013ல் 16 டிரில்லியன் டாலர்களாக இருந்தது 2014-ல் 17 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துவிட்டது. அதாவது ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர் என அமெரிக்கக் கடன் அதிகரித்து வருகிறது. இத்தகைய கடன் சுமைகள் டாலரை சர்வதேச நாணயமாக நிலை நிறுத்துவதன் மூலம் உலக மக்களின் தலையில் அமெரிக்காவால் சுமத்தப்பட்டு வந்தது. ஆனால் ரஷியா, சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க நோக்கங்களை சிதைத்து வருகிறது.

இன்று ஏகாதிபத்திய சக்திகளின் சமநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக அளவிலான ஒட்டுமொத்த உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு 1950களில் 50 சதவீதமாக இருந்தது 1980களில் 24 சதவீதம் என சரிபாதியாக வீழ்ச்சியடைந்தது. அது தற்போது 17.1 சதவீதமாக மேலும் சரிந்துவிட்டது. ஆனால் சீனாவின் பங்கு 14.9 சதவீதமாக உயர்ந்தது மட்டுமல்ல 2017-ல் அது அமெரிக்காவை விஞ்சிவிடும் என்ற நிலையில் உள்ளது. அத்துடன் சீனா சோசலிசத்திற்கு துரோகமிழைத்து முதலாளித்துவத்துக்கு மாறியதோடு கடந்த முப்பது ஆண்டுகளாக 10 சதவீத தொடர் வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ‘பிரிக்ஸ்’ (BRICS) நாடுகள் உலக உற்பத்தியில் 30 சதவீதத்தையும் தாண்டிவிட்டன.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.எம்.எப்., உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றுக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் தனிவங்கியை உருவாக்கியுள்ளன. சீனா தனது யுவான் நாணயத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ரென்பின்’ என்ற சர்வதேச நாணயப் பரிவர்த்தனைக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது. ரஷ்யா, சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளுடனும், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுடனும் டாலரை தவிர்த்து தனது சொந்த நாணயத்தின் மூலமே வர்த்தகத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் சீனா, பெருமளவில் தங்கத்தை வாங்கி ‘ரென்பின்’ மயமாக்கத்தின் மூலம் ஷாங்காயை மையமாகக் கொண்டு ஒரு மூலதனச் சந்தையை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது.

சீனாவின் இத்தகைய வளர்ச்சிப் போக்கு தனது மேலாதிக்க நலன்களுக்குக் குழிபறிக்கும் செயல் என அமெரிக்கா கருதுகிறது. எனவே சீனாவை அடக்கி வைப்பதன் அவசியத்திலிருந்து ஆசிய-பசிபிக் திட்டத்தின் அடிப்படையில் ஆசியாவில் தனது இராணுவத்தைக் குவித்துவருகிறது.

ஆசிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் ஆசிய பசிபிக் திட்டம்

அமெரிக்க ஏகாதிபத்தியம் பசிபிக் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (Trans Pacific Partnership - TPP) உருவாக்குவதன் மூலமும்; ஆசிய பசிபிக் பகுதியில் தனது இராணுவ வலிமையை கூட்டுவதன் மூலமும் தனது மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்துவரும் சீனாவை தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளது. பசிபிக் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு என்ற பேரால் சீனா நீங்கலாக ஜப்பானை இணைத்துக்கொண்டு 11 நாடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. அதில் இந்தியா நேரடியாக பங்கேற்க முடியாவிட்டாலும் இருதரப்பு உடன்படிக்கை மூலம் இந்தியாவுடன் தனது வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது.

மேலும் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை மத்திய கிழக்கிலிருந்து ஆசிய மையத்திற்கு மாற்றுகிறது. அமெரிக்காவின் கப்பற்படை, விமானப்படைகளின் 60 சதவீதத்தை ஆசிய பசிபிக் பகுதியில் குவித்து வருகிறது. இப்பிரதேசத்தில் அமெரிக்காவின் இராணுவக் கூட்டுக்களை நீட்டிப்பது, அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது, இப்பிராந்தியத்தில் இராணுவ பயிற்சிகள் மேற்கொள்வது என்று ஆசியாவை ஒரு போர்க்களமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது. ஏகாதிபத்திய வாதிகளின் போட்டியின் விளைவாக ஆசியாவை போர்மேகம் சூழ்ந்துவருகிறது.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும் ரஷிய, சீன ஏகாதிபத்திய வாதிகளுக்கும் இடையிலான போட்டி உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியேயாகும். ரஷியா சீனா போன்ற நாடுகள் தற்காப்புக்காக அல்ல உலக மறுபங்கீட்டிற்காகவே போராடுகின்றன. எனவே உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்கான இவ்விரு அணிகள¤ல் எந்த ஒரு அணியின் பக்கமும் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட நாடுகளும் அணிசேர முடியாது. ஆனால் இந்துத்துவ மோடி கும்பலோ கூட்டுசேராக் கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அணியில் சேருவதற்கு தயாராக உள்ளது. அதனடிப்படையில் தான் மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தம்

இவ்வொப்பந்தமானது, அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்திற்காக சீனாவுக்கு எதிராக இந்தியாவை பயன்படுத்துவது; பயங்கரவாத எதிர்ப்பு என்ற பேரால் உலக மேலாதிக்கதிற்காக அமெரிக்கா தொடுக்கின்ற ஆக்கிரமிப்புப் போர்களுக்கு இந்தியா ஆதரவளிப்பது; பேரழிவு ஆயுதங்களைத் தடுப்பது என்ற பேரில் சர்வதேசக் கடல் எல்லையில் மூன்றாவது நாட்டுக் கப்பலை அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா சோதனையிடுவது; ஆசிய பசிபிக் கடல் எல்லையில் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் இராணுவக் கப்பல்களுக்கு இந்தியா காவல்காப்பது; இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஆயுதத் தளவாடங்களை கொள்முதல் செய்வது போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும். சுருங்கச் சொன்னால் இந்திய இராணுவம் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி இராணுவமாக மாறவேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சாரம். இந்த ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்ற மோடி கும்பலின் முடிவு அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் என்ற தேர்காலில் இந்தியாவை பிணைப்பதே யாகும். இது இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இந்தியாவின் மீதான அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கம்

அமெரிக்க ஒபாமா இந்திய வருகையின் போது நிதித்துறை, பாதுகாப்புத் துறை, அறிவுசார் சொத்துரிமை (IPR), விவசாயம், வர்த்தகம், பசுமைத் தொழில்நுட்பம், அணுமின்சக்தி மற்றும் விண்வெளி போன்ற அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவின் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்க இருக்கிறன.

ஏற்கனவே மோடி அரசாங்கம் “வளர்ச்சி”, “இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக” மாற்றுவது என்ற ஜனரஞ்சகமான முழக்கங்களின் மூலம் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்கு இந்தியாவைத் திறந்துவிடுகிறது. நாடாளுமன்ற அங்கீகாரம் இல்லாமலேயே காப்பீடு, நிதித்துறை, பாதுகாப்பத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கும்; நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கும்; விவசாய விளைநிலங்களை அபகரித்து சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கும் அவசரச் சட்டத்தின் மூலம் அனுமதி அளித்துவிட்டது. மேலும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தை திருத்துவதோடு மருந்து தயாரிப்பிலும், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதிலும் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து விட்டது. இவ்வாறு ஆளும் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்க நலன்களிலிருந்து அனைத்துத் துறைகளையும் அமெரிக்க முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிட்டு நாட்டை சுடுகாடாக மாற்றிவருகிறது.

மேலும் அமெரிக்காவின் அணுமின் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் அமைக்க இருக்கும் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அந்த விபத்துக்கான நட்ட ஈட்டை வழங்க வேண்டும் என்பதை மறுத்து வருகின்றன. இந்தியாவின் அணு உலை விபத்து சட்டத்தின் 17(b) பிரிவை முழுமையாக நீக்க வேண்டும் என ஒபாமாவின் வருகையின்போது நிர்ப்பந்தம் கொடுக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே போபால் விஷவாயு விபத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்ததற்கே அமெரிக்க நிறுவனமோ, அரசாங்கமோ இழப்பீடு எதுவும் வழங்காமல் ஏமாற்றியது. தற்போது அணு உலை விஷயத்தில் ஏமாற்றுவதையே சட்டமாக்க நிர்ப்பந்தம் செய்கிறது. “அணு உலை என்றாலே ஆபத்து”, “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடவேண்டும்” என கூக்குரலிட்ட உதயகுமார் கும்பல் அமெரிக்காவின் அடாவடித் தனத்தை மௌனமாக அங்கீகரிக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் தொண்டு நிறுவனங்களின் துரோகம் அம்பலப்பட்டுவிட்டது.

இவ்வாறு ஒபாமாவின் இந்திய வருகை, அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தை திணித்து இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனி என்ற நுகத்தடியில் பூட்டுகிறது. மோடி கும்பலோ வளர்ச்சி என்று பேசி அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கும், இந்தியாவைப் புதியகாலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்கிறது. இந்தத் துரோகத்தை மூடி மறைக்க  இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறது. மக்களை மத ரீதியாக மோதவிட்டு, பிளவுபடுத்திப் புதிய காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்கிறது. இந்து மதவாத ஆர்.எஸ்.எஸ். காவி கூட்டம் இந்திய அரசாங்கத்தில் கோலோச்சுகின்றன.

இந்துத்துவப் பாசிச சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் ஒபாமா வருகை

செந்தளம்
இந்தியா இந்துக்களின் நாடு என்றும், கிறிஸ்தவ இசுலாமிய சிறுபான்மை மதத்தினரும் கம்யூனிஸ்டுகளும் தேசபக்தி இல்லாதவர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தேசபக்திக்கு விளக்கம் கொடுக்கின்றன. ஆனால் அமெரிக்க கிறிஸ்துவ ஒபாமாவையும் அமெரிக்க முதலாளிகளையும் ராமனுக்கு இணையாக போற்றி வரவேற்கின்றன. அமெரிக்க நிதி உதவி பெற்று தாய் நாட்டுக்குத் துரோகம் இழைக்கின்றன. மக்களின் “முதன்மை” எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய புதியகாலனி ஆதிக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்கு உதவுமென்ற கண்ணோட்டத்துடன் உருவாக்கி வளர்ந்துவரும் பெரும் எண்ணிக்கையிலான இறை அருளாளர்களாலும் அவர்களின் அமைப்புகளாலும் விரைந்து பல்கிப் பெருகிவரும்  இவர்களின் நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் நிழற்குடையாக இருந்து உதவி வருவது அதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்.

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற இந்துத்துவ அமைப்புகளுடன் மறைமுகமாக உறவுகளுடைய சிறிய, நடுத்தர அளவிலான நூற்றுக்கணக்கான அமைப்புகளுடன் இராமகிருஷ்ணா மிஷன், சின்மயா மிஷன், மாதா அமிர்தானந்தாமயி அறக்கட்டளை, சாய்பாபாவின் பெரும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இந்து மதவாத நிறுவனங்கள் அமெரிக்காவிடம் இருந்து ஏராளமாக நிதி உதவி பெறுகின்றன. இந்துத்துவச் சக்திகளின் உழைக்கும் வர்க்க எதிர்ப்பு, ஏகாதிபத்திய அடிமைத்தனம் உள்ளிட்ட அரசியல் ஆழ்மனக் குரலுடன் தன்னார்வ போர்வையில் உலாவந்து கொண்டிருக்கும் எண்ணற்ற இந்து அமைப்புகள் அமெரிக்க ஆதரவு திசையில் பயணித்துக் கொண்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். இன் பிதா மகனான கோல்வால்கரின் கனவும் இதுதான்.

எனவே இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாகவும், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவைசெய்யும் ஒரு எடுபிடி நாடாகவும் மாற்றியமைக்க வருகைதரும் ஒபாமாவின் இந்திய பயணத்தையும், ஒபாமா - மோடி கும்பலின் கூட்டுச் சதி திட்டங்களையும் எதிர்த்து கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஜனநாயக சக்திகளும் தேசபக்தர்களும் ஓர் அணயில் திரள அறைகூவி அழைக்கிறோம்.

 * அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
 * ஜனநாயகத்தின் பேரால், மேலாதிக்கத்திற்குப் பணிய மறுக்கும் அரசுகளைக் கவிழ்ப்பதை எதிர்த்துப் போராடுவோம்!
* ஆசிய-பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஒபாமாவின் கனவைத் தகர்ப்போம்!
* புதிய தாராளக் கொள்கைகள் மூலம் இந்தியத் துணைக் கண்டத்தை புதிய காலனியாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
 * ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா - இந்துத்துவப் பாசிச மோடி கூட்டணியை முறியடிப்போம்!

        மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் 
ஜனவரி 2015

Tuesday 20 January 2015

இந்திய மண்ணில் ஒபாமா காலடி, கழகம் போர்க்கொடி- சேலம் அரங்கக் கூட்டக் காட்சிகள்

இந்திய மண்ணில் ஒபாமா காலடி, கழகம் போர்க்கொடி- 

சேலம் அரங்கக் கூட்டக் காட்சிகள்!









   மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் 
                                                                         சேலம்-தர்மபுரி-வேலூர் மாவட்டங்கள்

Saturday 10 January 2015

ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!



ஒபாமா வருகையின் நோக்கம்:

அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் சரிந்துவரும் நிலையில், தனக்குப் போட்டியாக சீனா வளர்ந்து வரும் சூழ்நிலையில், சீனாவை எதிர்த்து அமெரிக்கத் தலைமையில் ஆசிய-பசிபிக் இராணுவ, பொருளாதாரக் கூட்டமைப்பில் பங்குகொள்ள இந்தியாவை இணங்க வைப்பது.

அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்காக இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்த இந்திய அரசை நிர்ப்பந்திப்பது.

அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் பத்து ஆண்டுகள் தொடர்வதற்கு உத்தரவாதப்படுத்துவது.

இராணுவத் தளவாட உற்பத்தியில் அமெரிக்கப் பன்னாட்டு கம்பெனிகளின் ஏகபோகத்தை உத்தரவாதப்படுத்துவது.

அமெரிக்க அணு உலை முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டத்தை நீக்க வற்புறுத்துவது.

இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகளுக்கு அமெரிக்க முதலாளிகள் நிதி உதவி வழங்குவது மூலம், மோடி கும்பலின் கரங்களை வலுப்படுத்துவது.

ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பேரால் அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் அரசுகளை கவிழ்த்தல், மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு ஆதரவளிக்க இந்திய அரசை இணங்க வைப்பது.

இத்தகைய அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு இந்திய அரசை நிர்ப்பந்திக்கவே ஒபாமாவின் வருகை.

எனவே கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கின்றோம்!

* அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
* ஜனநாயகத்தின் பேரால்,மேலாதிக்கத்திற்குப் பணிய மறுக்கும் அரசுகளைக் கவிழ்ப்பதை எதிர்த்துப் போராடுவோம்!
*ஆசிய-பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஒபாமாவின் கனவைத் தகர்ப்போம்!
* புதிய தாராளக் கொள்கைகளின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தை புதிய காலனியாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
* ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா – இந்துத்துவப் பாசிச மோடி கூட்டணியை முறியடிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு         ஜனவரி          2015