Wednesday, 19 July 2017

கழகம் - புதிய காலனிய `ஜி.எஸ்.ரி` வரியை முறியடிப்போம்!


                              ஜூலை                                                                                             2017

Sunday, 16 July 2017

இந்துத்துவ பாசிச மோடி அரசே,இறைச்சிக்கான மாடு ஒட்டகம் விற்பனை தடைச் சட்டத்தைத் திரும்பப்பெறு!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!

இந்துத்துவ பாசிச மோடி அரசு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு மனிதவதைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. “கால்நடை விதிகள் ஒழுங்காற்று சட்டம்-2017” எனும் இச்சட்டப்படி பசுக்கள், காளை, எருமை மற்றும் ஒட்டகங்களை இறைச்சிக்காக சந்தையில் விற்கவும், வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இளம் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வரக்கூடாது. கால் நடைச் சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் கால்நடைகள் இறைச்சிக்காக விற்கவோ வாங்கவோ வரவில்லை என ஒப்புதல் அளிக்க வேண்டும். கால்நடை விற்பவர், தான் ஒரு விவசாயிதான் என்பதற்கான ஆவணங்களை வைத்திருக்கவேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது நேரடியாக மாட்டிறைச்சி உண்பதற்கு தடை விதிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக அதற்குத் தடை விதிப்பதே ஆகும்.

இச்சட்டம் ஒருபுறம் கால்நடைகளின் விற்பனையை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு தோல்தொழிலை நம்பியுள்ள பல லட்சக்கணக்கானோரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடுகிறது. மறுபுறம் பசு புனிதம் என்று கூறி ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலின் இந்துத்துவ ஒற்றைக் கலாச்சாரத்தை இசுலாமியர் உள்ளிட்டு சிறுபான்மை மதத்தினர் மற்றும் தலித் மக்கள் மீது திணிப்பதாகும். ஒருவர் எதை உண்ணவேண்டும், எதை உடுத்தவேண்டும், எதைப் பேசவேண்டும் என அரசே தீர்மானிப்பது பாசிசத்தின் வெளிப்பாடாகும். மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏகாதிபத்திய புதியகாலனிய புதியதாராளக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமல்படுத்துகிறது. அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை திசைதிருப்ப இந்துத்துவ பாசிசத்தை ஏவிவருகிறது. பசுவதை தடைச்சட்டம், பொதுசிவில் சட்டம், லவ்ஜிகாத் தடை என பல்வேறு பாசிச சட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், மனித உரிமைகளுக்கு எதிரானதும் இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரானதாகும். இந்திய அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவு, வேளாண்மை தொழில் முன்னேற்றத்திற்காக பசுக்களையும் காளைகளையும் பாதுகாக்க வேண்டும் என கூறுகிறது. ஆனால், அச்சட்டம் பயன்படாத பசு மற்றும் காளைகளைக் கொல்வதை குற்றமாக்கவில்லை. 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதைச் சட்டத்தின்படி மத வழிபாடுகளில் கால் நடைகளை பலியிடுவதும், உணவுக்காக கொல்லப்படுவதும் விதிவிலக்காகும். அத்துடன் விலங்குகள் வதை சட்டம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மோடி அரசோ, சட்ட விரோதமாக எதேச்சதிகார முறையில் மாநில அரசுகளை கலந்துகொள்ளாமல் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் அரசியல் சாசானப்படி செல்லாது.

கார்ப்பரேட் நலன்காக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் சட்டம்

இந்தச் சட்டம் உள் நாட்டு இறைச்சி விற்பனைக்குத்தான் தடை விதிக்கிறது. ஆனால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை. அதாவது உரிமம் பெறாத உள்நாட்டு கசாப்புக் கடைகளை மூடிவிடுவது. உரிமம் பெற்று மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது எனும் மோடி கும்பலின் அறிவிப்பு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மாட்டுக் கறி ஏற்றுமதியை ஒப்படைப்பதாகும். நாடு தழுவிய அளவில் அரசே நடத்திவரும் ஆட்டுத்தொட்டி, தனியார் நடத்துகின்ற இறைச்சிக் கூடங்களுக்கு மூடுவிழா நடத்துவதுதான் உண்மையான நோக்கமாகும். இதனால், மாடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், இறைச்சி மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையான தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள், வர்த்தகர்கள், கால் நடைகளை கொண்டு செல்லும் வாகன தொழிலில் ஈடுபடுபவர்கள் என பல கோடி பேர் வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்படுவர். தோல் பொருள் ஏற்றுமதி கழகத்தின் அறிக்கைப்படி நாடுமுழுவதும் சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். இதில் பெரும்பான்மையினர் தலித் மக்களேயாவர். தமிழகத்தில் ஆம்பூர், வாணியம்பாடி,வேலூர் மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இத்தொழில் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பர். செல்லாக்காசு அறிவிப்பை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் மீது மோடி கும்பல் தொடுத்துள்ள மற்றுமொரு தாக்குதல் இது.  உண்மையில் இது மக்களுக்கு சுகாதாரமான இறைச்சி வழங்குவது எனும் பெயரால், இறைச்சி வணிகம் முழுவதையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் தந்திரமேயாகும். 

'கோமாதாவைக்’ கொன்று டாலர்களாக்கும் இந்துத்துவ கார்ப்பரேட்டுகள்

 ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினரின் பசுபாதுகாப்பு என்ற முழக்கம் ஒரு கபட நாடகம்தான். உண்மையில் பா.ஜ.க-வை சார்ந்தவர்களும், அவர்களின் நண்பர்களும் முஸ்லிம் பெயர்களில் கம்பெனிகளைத் துவங்கி பசு உள்ளிட்ட மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். மோடியின் “கோமாதா” அரசு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஆறாவது இடத்திலிருந்த இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்தியுள்ளது. பசுவதையில் உலகின் நம்பர் ஒன் நாடக இந்தியாவை மாற்றிய பெருமை மோடியைத்தான்சேரும். அல்கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட், விரிஸி, கிளிஙி, அல்நூர் மற்றும் ஸ்டாண்டார்ட் எக்ஸ்போர்ட் போன்ற இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு, முறையே சபர்வால், சுனில்கபூர், மதன், அரோரா, சுனில்தத், கமல்வர்மா போன்ற இந்துமதத்தைச் சார்ந்த கார்ப்பரேட் முதலாளிகளால் நடத்தப்படும் நிறுவனங்கள்தான் இறைச்சி ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆசியுடன் செயல்படும் நிறுவனங்கள் ஆகும்.

2013-14 நாடாளுமன்றத் தேர்தலில் கார்பரேட் கும்பல் பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து மோடியை பிரதமராக்கின. மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு ரூபாய் 2.5 கோடி தேர்தல் நிதி கொடுத்துள்ளன. தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கார்ப்பரேட்டுகள் நலன்களுக்காக சட்டம் கொண்டுவந்து, மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார் மோடி. மேலும், இத்தகைய சட்டங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது மட்டுமல்ல, தங்களது இந்துராஷ்ட்டிரக் கொள்கைகளை நிறைவேற்ற நடத்தும் மத சாதிவெறி கலகங்களை சட்டபூர்வமாக்கிக் கொள்கின்றன. கார்ப்பரேட்டுக்கள் ஊதும் மகுடிக்கு ஆடும் நச்சுப் பாம்புகள்தான் சங்பரிவாரங்கள். சொல்லிலே பசு பாதுகாப்பு. செயலிலே பசு கறி ஏற்றுமதி. இதுவே சங்பரிவாரங்களின் உண்மை முகம்.

நாடுமுழுதும் ‘பசு காப்பாளர்களின்’ கொலைவெறித் தாக்குதல்கள்

மோடிக் கும்பல்  ஆட்சிக்கு வந்த பிறகு உணவுக்குத் தடை, புத்தகங்களுக்குத் தடை,திரைப்படங்களுக்குத் தடை, பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தக் கருத்துக்களை எழுதும் எழுத்தாளர்களை கொலை செய்வது போன்ற பாசிச தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பாஜக ஆளும் மாநில அரசுகளின் கீழ், “பசு பாதுகாப்பாளர்கள்”(cow vigilantes) என தம்மைத்தாமே அறிவித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.கொலைகார குண்டர்படை, தமது இந்துத்துவ அரசியல் பண்பாட்டை இஸ்லாமியர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிப்பதற்கு சட்டவிரோத கொலைவெறித் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. மத, சாதி கலவரங்களை நடத்துகின்றன.
2015ல் உ.பி.யில் ஆட்டுகறி வைத்திருந்த அக்லாக் எனும் இஸ்லாமியரை, மாட்டுக்கறி வைத்திருந்ததாக சங்பரிவார் கும்பல் கொலை செய்தது. மார்ச் 2016ல் ஜார்கண்டில் இரண்டு இஸ்லாமிய கால்நடை வர்த்தகர்கள் இக்கும்பலால் தூக்கில் தொங்கவிடப் பட்டார்கள். அதே ஆண்டு ஜூலை மாதம் குஜராத்தின் ஊனான் மாவட்டத்தில் செத்த மாட்டின் (பசு) தோலை உரித்ததற்காக தாழ்த்தப்பட்டவர்கள் ஏழு பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது இந்த குண்டர்படை. ராஜஸ்தானில் ஏப்ரல் 2017ல் பசுவை ஏற்றிச் சென்றார் என பெலுகான் எனும் இசுலாமியர் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானார். அண்மையில் கூட, டெல்லியில் ஜூனைத் எனும் 19-வயதே நிரம்பிய இளைஞரை மாட்டுக்கறி தின்பவன்தானே என்று இழிவு படுத்தி துடிக்க துடிக்க கத்தியால் குத்தி கொன்றுள்ளது இந்த கொலைக்கார கும்பல். நாட்டின் புனித விலங்கு என பசுவை அடையாளப்படுத்தி, சட்ட விரோதமாக யாரை வேண்டுமானாலும் கொல்ல இந்த குண்டர் படை அலைகிறது. நாடு முழுதும் இக்கும்பலின் சட்டவிரோத கொலைகளும் சூறையாடல்களும் அதிகரித்து வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-ன் பசுகாப்பாளர்கள் எனும் இக்கொலைகார கும்பல் மாடுகளை விற்பனைக்கு கொண்டு செல்பவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்கள், கொலைகள், சூறையாடல்களின் பின்னால் பொருளாதார நலன்கள் அடங்கியுள்ளன. இந்துத்துவ இறைச்சி கார்ப்பரேட்டுகளுக்கு போட்டியாளர்களை ஒழிப்பதுதான் அவர்களின் நோக்கமாகும்.

மோடியோ இக்கொலைகளை கண்டிக்க மறுக்கிறார். பாஜகவும் , பாஜக ஆளும் மாநில அரசுகளும் இந்த கொலைக்கார கும்பலுக்கு ஆதரவு தருகின்றன. பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் பசுவை துன்புறுத்துவோரை தூக்கில் போடவேண்டும் என பகிரங்கமாகவே அச்சுறுத்துகிறார். குஜராத் முதல்வரோ மாட்டைக் கொல்வதும் மனிதனைக் கொல்வதும் ஒன்றே என்று கூறுகிறார். ராஜஸ்தான் மாநில மந்திரியும், அம்மாநில காவல்துறை தலைவரும் பெலுகானை கொன்ற கொலைக்காரர்களை அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை என்று கூறி பாதுக்காக்கின்றனர். மாடுகளைக் கொல்வது மனிதரைக் கொல்வதை விட பெரும் குற்றம் என்று கூறி மனிதர்களை வதை செய்வதை நியாயப்படுத்துகின்றனர். யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் சட்டத்தின் முன்பு குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். யார் கொலைக்காரர்களோ அவர்கள் சட்டத்தால் பாதுக்கப் படுகிறார்கள். சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவதே சட்டமாக்கப்பட்டு வருகின்றது. பாஜக மந்திரிகள் வழங்கிவரும் மேற்கண்ட சட்டவிரோத தீர்ப்புகள், சட்டத்தையே கேவலப்படுத்துகிறது. கொலைகாரர்களுக்கு அரசாங்கம் அளித்து வரும் ஆதரவு , கொலைக்கார கும்பல் சட்டத்தையே தன் கையில் எடுத்துக்கொள்ளும் தைரியத்தை தந்துள்ளது. நாடுமுழுவதும் இக்கும்பல் கொலைவெறி தாக்குதலை தீவிரப்படுத்துகின்றன. இந்தப் பாசிச படுகொலைகள் அனைத்தும் பசு புனிதம் என்ற பெயரால் நடத்தப்படுகின்றன.

பசு புனிதம் எனும் மோசடி

ஆரம்ப காலத்தில் இருந்தே இந்துக்கள் பசுவை புனிதமாக கருதி வணங்கிவந்தார்கள் எனவும், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை இஸ்லாமியர்கள்தான் துவக்கி வைத்தார்கள் எனவும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் குற்றம் சுமத்துகிறது. இது உண்மைதானா? பார்ப்பனர்கள் பசுவைக் கொன்று தின்றார்கள் என்பதற்கான ஆதாரத்தை வரலாற்று ஆய்வாளர் திரு டி.என்.ஜா இந்தக் கூற்றை மறுத்து பின்வருமாறு கூறுகிறார்.

“வேத காலங்களில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. அசுவமேத யாகத்தின் முடிவில் 21 பசுக்கள் பலியிடப்பட்டன. மகாபாரதத்தில் தினமும் இரண்டாயிரம் பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு விநியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுகிறது. மனுஸ்மிருதி, (கிமு 200-கிபி 200) பட்டினியில் இருந்து தப்பிக்க மாட்டு இறைச்சி மற்றும் நாய் இறைச்சியை சாப்பிட்ட பார்ப்பனர்கள் பற்றிய ஆதாரங்களைத் தருகின்றது”. மேலும், 19ஆம் நூற்றாண்டில் கூட, சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கி இருந்தபோது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. உண்மையில் இன்றும் கூட மாட்டிறைச்சியை உலகில் அதிகமாக கிறித்துவர்களும், ஹீப்ருக்களும்தான் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இஸ்லாமியர்களும் தாழ்த்தப் பட்டவர்களும்தான் அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும் பொய் பேசுகிறது. பசு புனிதம் என்று கூறி இந்துமத பார்ப்பனிய மேலாதிக்கத்தை இசுலாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் திணிக்கிறது.

பசுவதை தடைச் சட்டத்தையும், இறைச்சி விற்பனைக்கான தடைச் சட்டத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!

ஆர்.எஸ்.எஸ் கும்பல் கூறுவது போல பசு புனிதமானதும் அல்ல. அல்லது அக்கும்பல் பசு நலனுக்காக போராடுகிறோம் என்பதும் உண்மையல்ல. அருணாச்சலப் பிரதேசம், கோவாவிலும், மேகாலயாவிலும் பா.ஜ-கட்சியே இச்சட்டத்தை எதிர்க்கிறது. அவர்களுக்குள்ளேயே கடும் முரண்பாடுகள் நிலவுகிறது. உண்மையில் பாஜகவும், சங்பரிவாரங்களும் காரப்பரேட் நலன்களுக்காத்தான் போராடுகிறார்கள். ஆனால் அதை மூடிமறைத்து பசுவின் பேரால் தங்கள் இந்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்த இசுலாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் பாசிச தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
50ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியல் சட்டம் எழுதும்போது, இந்திய வேளாண்துறையின் வளர்ச்சிக்காகவே, பசு காளைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், இன்று எந்திரமயமாக்கல் வளர்ச்சி அடைந்துள்ளதன் காரணமாக மாடுகள் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது பெருமளவில் குறைந்துவிட்டது. எனவே இன்று மாடுகள் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் மட்டுமே தேவைபடுகிறது.

மாடுகளை கொல்வதைத் தடைசெய்வதால் மாட்டுவளம் பெருகும் என்ற சங்பர்வாரங்களின் வாதம் ஒரு மோசடியேயாகும். மாறாக இறைச்சிக்காக மாடுகள் வளர்ப்பதை அனுமதிக்கும்போதுதான் மாட்டு வளம் பெருகும் என்பதே உலகின் பல நாடுகளின் அனுபவமாகும். பசுவதை தடை அமலில் உள்ள மகராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தீனி கிடைக்காமல் பல ஆயிரம் மாடுகள் வீதிகளிலும் கோசாலைகளிலும் எலும்பும் தோலுமாய் மாறி மாண்டுவருகின்றன. ஒரு புறம் தீனிகிடைக்காமல் மாடுகள் மாள்வதால் புரதச் சத்து வீணாகி சுற்றுச்சூழலையும் மறுபுறம் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக அதாவது பல லட்சம் பச்சிளம் குழந்தைகளும் சிறார்களும் புரதச்சத்தின்றி இறக்கின்றன. இறைச்சி தடைச்சட்டத்தால் மாட்டை விற்க முடியாத சூழல் ஏற்பட்டால், பெரும்பாலான விவசாயிகள் மாடு வளர்ப்பையே விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கனவே விவசாய வீழ்ச்சியால் தற்கொலைக்கு தள்ளப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் , இறைச்சிக்கும் பாலுக்கும் அன்னிய நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும். இதுவே ஆர் எஸ் எஸ் கும்பலின் உண்மையான குறிக்கோளும் ஆகும். மாடுகளும், மனிதர்களும் செழித்து வளர வேண்டுமானால் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கான தடைகளை உடைத்தெறியப்பட வேண்டும். சங் பரிவாரங்களின் சதிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது என்று மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அச்சட்டத்திற்கு தடைவிதித்து பின்வருமாறு உத்தரவிட்டது.

“இந்தியாவில் 1960-ல் கொண்டு வரப்பட்ட மத்திய விலங்குகள் வதை தடை சட்டத்தின் பின்புலத்தை பார்க்கும்போது மனுதாரர்கள் தரப்பு வாதத்தில் வலு இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. மத்திய அரசின் வாதத்தை முழுமையாக ஏற்க இயவில்லை. ஏனெனில் இந்த தடை, சட்டத்தின் மூலம் பிறப்பிக்கப்படவில்லை. நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க போதுமான அடிப்படை முகாந்திரம் உள்ளது.
விலங்குகள் வதை தடுப்பு மத்திய, மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியலில் (con-cur-rent) உள்ளது. அதே நேரத்தில் விலங்குகளை பலியிடுவது மாநில அரசின் தனிப்பட்டியலில் உள்ளது. இந்த பின்புலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட விதி மதசார்பற்ற நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டதா என்று பார்க்க வேண்டியதுள்ளது. மேலும் இந்தச் சட்டம் மத்திய, மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியல் இருப்பதையும் கவனிக்க வேண்டியதுள்ளது. இதனால் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டியது அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது” என உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற தடைய நீக்க வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
 
அதில் மதுரை நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மத்திய அரசு தனது உத்தரவை யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் திருத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் புதிய உத்தரவை அமல்படுத்த அண்மையில் தடை விதித்தது. சட்டம் தடை விதிக்கப்பட்டாலும் பா ஜ க ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பேரில் ஆர் எஸ் எஸ் காடையர்களின் தாகுதல்கள் தொடர்கின்றன.

அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, கோவா போன்ற பாஜக ஆளும் மாநில அரசுகளே இச்சட்டத்தை எதிர்க்கும்போது - தமிழகத்தை ஆளும் எடப்பாடி ஆட்சி மோடி கும்பல் கொண்டுவந்துள்ள இச்சட்டத்தை எதிர்க்க மறுக்கிறது. ஊழலில் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிய கிரிமினல் மாஃபியா அம்மா-வின் சீடர்களான ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தினகரன் கோஷ்டியினர் ஊழல் வழக்கிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இந்துத்துவ மோடி கும்பலின் எடுபிடியாக மாறி விட்டன. இந்துத்துவ பாசிச கும்பல் இசுலாமியர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறைகளையும் கண்டிக்கக் கூட தயாரில்லை. தங்களின் ஊழல் மலிந்த ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள, தமிழகத்தையும் தமிழக மக்களையும் இந்துமத வெறி பாசிச கும்பலுக்கு பலியிட தயார் ஆகிவிட்டது.

எனவே, மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விலங்குகள் வதைசட்டத்தை திரும்பப் பெற கோரி இச்சட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், இசுலாமிய கிறித்துவ மதச் சிறுபான்மையினர், தாழ்த்தபட்ட-பழங்குடி மக்கள், பால் உற்பத்தியாளர்கள், தோல்சார்ந்த சிறு வணிகர்கள், இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் திரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்.
 
இந்துத்துவப் பாசிச மோடி அரசே,
 
*இறைச்சிக்கான மாடு,ஒட்டகம் விற்பனை தடைச் சட்டத்தை திரும்பப் பெறு!
 
*கார்ப்பரேட் நலன்களைக் காக்கும், மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்                                                                                தமிழ்நாடு.
                                                                    10, ஜூலை -2017

Tuesday, 13 June 2017

கட்சித் தோழர் பச்சியப்பனுக்கு கழக மக்கள் சிவப்பு அஞ்சலி!

தோழர் பச்சியப்பன் மறைந்தார்.

வரின் இலட்சியம் மறையவில்லை. பாலக்கோடு - தமிழக உழைக்கும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது, அவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்! பச்சியப்பன்  வித்துடல் கூட, எங்கே புரட்சித் தீயை பற்ற வைத்து விடுமோ என்று அஞ்சி ஆளும் வர்க்கத்தின் நக்சல் ஒழிப்பு பிரிவு இரங்கல் நிகழ்ச்சியைக் கூட வேவு பார்த்தது, வெட்கக் கேடானது.

போலிச் சுதந்திரம், போலி ஜனநாயகத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்கு, நிலப்பிரபுத்துவ  ஒடுக்குமுறையை எதிர்த்து கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி், தன்னியல்புப் புரட்சி இயக்கத்தில் தன்னை இளம் வயதில்  இணைத்துக் கொண்டு போராடிய போர் வீரர் தோழர் பச்சியப்பன் .

புரட்சிகர இயக்கத்தை ஒடுக்க  தமிழக காவல்துறை தொடுத்த பல்வேறு விதமான அடக்கு முறைகளை எதிர்த்து கதிகலங்க வைத்த களப் போராளி பச்சியப்பன் .

1980 ஆம் ஆண்டுகளில் நக்சல் ஒழிப்பின் ஒரு பகுதியாக, காவல்துறை தோழர் பாலனைக் கைது செய்து  படுகொலை செய்த, பாலக்கோடு சீரியம்பட்டி பொதுக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் தோழர் பச்சியப்பன்.

நக்சல்பாரி இயக்கத்தின் நரோத்தினிய* - தன்னியல்புத் தனிநபர் பயங்கரவாதப் பாதையை, விமர்சன சுயவிமர்சனம் செய்து மார்க்சிய லெனினிய வழியிலே,இந்திய மக்கள் ஜனநாயகப்  புரட்சியினை நிறைவேற்றப் போராடும் ம.ஜ.இ.க வின் முன்னணி செயல்வீரர், பிரச்சாரப் பீரங்கி.

தோழர் பச்சியப்பன் கலைப்புவாதம், திருத்தல்வாதம் , தொழிற்சங்கவாதம் போன்ற பல்வேறு விதமான மார்க்சிய விரோத போக்குகளை எதிர்த்துப் போராடிய பாட்டாளி வர்க்க போர் வீரன்!

இவ்வாறு தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி விடைபெற்ற தோழர் பச்சியப்பனின் இறுதி ஊர்வலத்தில்  ம.ஜ.இ.க தோழர்கள்,கழக மக்கள்,உற்றார் உறவினர், நண்பர்கள் பெருந்திரளாக பங்கேற்று  சிவப்பு அஞ்சலி வீர வணக்கம் செலுத்தினர்.

தோழர் பச்சியப்பனின் இறுதி ஊர்வலக் காட்சிகள்;தோழர் பச்சியப்பன் நாமம் நீடூழி வாழ்க!
கழகப் பணி தொடர்க!
 
=========================== *
* நரோத்தியம்: ரசியப் புரட்சிகர இயக்கத்தில் 1860-70 ஆம் ஆண்டுகளிடையே தோன்றிய ஒரு குட்டி முதலாளித்துவப் போக்கு.நரோத்தியவாதிகள் எதேச்சாதிகார முறையை ஒழிக்கவும் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு கொடுக்கவும் விரும்பினார்கள்.அவர்கள் தம்மைத்தாமே சோசலிஸ்டுக்கள் என்று கருதினார்கள்.ஆனால் அவர்களது சோசலிசம் கற்பனாவாதமானது......மக்கள் என்பதற்கு ரசிய மொழியில் நரோத் என்பர்.இதனால் நரோத்தியவாதிகள் என்ற பெயர் பெற்றனர். 1880-90 ஆண்டுகளில் நரோத்தியவாதிகள் ஜாராட்சியுடன் சமரசம் செய்து கொள்ளும் பாதையில் இறங்கினர்.பணக்கார விவசாயிகளின் -குலாக்குகளின்- நலன்களைவெளியிட்டனர்.மார்க்சியத்தை எதிர்த்துப் போராடினர்.
( லெனின் தேர்வு நூல்கள் 12(4) பக்கம் 274-5)
 

Wednesday, 31 May 2017

`மோடி மாட்டு` - இறைச்சித் தடை, திரும்பப் பெறு-கழகம்

 
இந்துத்துவ பாசிச மோடி அரசே,

இறைச்சிக்கான மாடு, ஒட்டகம் விற்பனை சட்டத்தை திரும்பப் பெறு !

கார்ப்பேரேட் நலன்களை காக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை எதிர்த்து போராடுவோம் !
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு

Tuesday, 2 May 2017

கழக மே நாள் 2017 - பொதுக்கூட்ட உரை , ஊர்வலக் காட்சிகள்


 செங்கொடி ஏந்தி  கழகத்தின் மே தின  பொதுக்கூட்ட உரை
ஒலிப்பதிவு, ஊர்வலம் , முழக்கங்கள், ஒளிப்படக் காட்சிகள்

2017 கழக மே நாள் முழக்கங்கள்
கழக மே நாள் 2017 முழக்கங்களை ஓசை நய ஒலி வடிவில் செவி மடுக்க மேலுள்ள சித்திரத்தில் இரட்டை அழுத்தம் செய்க
 
https://m.facebook.com/story.php?story_fbid=617441591792232&id=100005791890379&pnref=story

தர்மபுரி -பாலக்கோடு

 
மேதினி போற்றும் மே நாள்!
                                 பாட்டாளி வர்க்கப் போர் நாள்!மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
                                                                வாழ்க! வாழ்க! வாழ்கவே! 
மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனை,
                                                             வெல்க! வெல்க! வெல்கவே!


 
அமெரிக்க டிரம்ப் கும்பலின் இனவெறிப் பாசிசம் முறியடிப்போம்!
மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்புகளை முறியடிப்போம்!


ஏகாதிபத்திய அமெரிக்காவின் டிரம்ப் கும்பலே, டிரம்ப் கும்பலே;
சிரியா மீது கை வைக்காதே!
வட கொரியா மீது கை வைக்காதே!

 
 மோடி அரசே! மோடி அரசே!
அமெரிக்க டிரம்ப் கும்பலின் இன வெறிப் பாசிசப் போக்கிற்கு
துணைபோகாதே! துணைபோகாதே!
 
அமெரிக்க டிரம்ப் கும்பலின் மூன்றாம் உலகப் போர் வெறிக்கு
துணை போகாதே! துணை போகாதே!
அனுமார் படையாய் மாறாதே!

 வேளாண்மை நெருக்கடிக்கும், விவசாயிகள் தற்கொலைக்கும்
காரணமான கொள்கைகளை,கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை
முறியடிப்போம்! முறியடிப்போம்!


உள்நாட்டு கார்ப்ப ரேட்டுகள் வாங்கிய கடன்கள், வாராக் கடன்களை
உடனடியாக வசூல் செய்! மோடி அரசே வசூல் செய்!
விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களனைத்தையும் ரத்து செய்!
மோடி அரசே ரத்து செய்!


காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க நடவடிக்கையெடு!
மோடி அரசே நடவடிக்கையெடு!
ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை
கைவிடுக! கைவிடுக! மோடி அரசே கைவிடுக!


சேலம்-மரவனேரி

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் பிள்ளையார் நகர் மரவனேரி சேலம் மே தின பொதுக் கூட்டத்திற்கு தோழர் சோமு சேலம்- நாமக்கல் மாவட்ட ம.ஜ.இ.க அமைப்பாளர் தலைமை தாங்கினார். தோழர்.பூபதி ம.ஜ.இ.க கோவை, தோழர் . பழனி ம.ஜ.இ.க . தோழர்.ஆறுமுகம் ம.ஜ.இ.க பெருந்துறை தோழர்கள் உரையாற்றினார்கள். தோழர்.முத்து ம.ஜ.இ.க பெருந்துறை நன்றியுரை ஆற்றினார்.

  
நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்து
மோடி அரசே செயல்படுத்து!


 
வங்கிகள், ஆயுள் காப்பீடு நெய் வேலி நிலக்கரிச் சுரங்கம்
சேலம் இரும்பாலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனம் அனைத்தையுமே தனியாருக்குத் தாரை வார்ப்பதை
அனுமதியோம்! அனுமதியோம்!தஞ்சை - பாபநாசம்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தஞ்சை மாவட்டம் சார்பில் தஞ்சை பாபநாசம் பேரூராட்சியில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தை தோழர் மகாலிங்கம் தலைமையேற்று நடத்தினார் . பொதுக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட அமைப்பாளர் தோழர்.ரணதீபன் தலைமை தாங்கினார்.  ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர் தோழர் ஞானம், தோழர் தெய்வசந்திரன் மற்றும் தோழர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.


கேசுவல் காண்டிராக்ட் அவுட் சோர்சிங் ஒப்பந்த கூலி முறைகளினை
ஒழித்துக்கட்டப் போராடுவோம்!

 
 
ரத்தம் சிந்தி இன்னுயிர் ஈந்து போராடிப் பெற்ற உரிமையினை
எட்டுமணி நேர வேலையுரிமையை பறிப்பதை
எதிர்த்துப் போராடுவோம்!


பன்னிரெண்டுமணி வேலை நாளை ஒழித்துகட்டப் போராடுவோம்!


சென்னை-செங்கல்பட்டு

 
முதலாளிகளின் நலன்களைக் காக்க தொழிலாளர் நலச் சட்டங்களை
திருத்தாதே! திருத்தாதே! மோடி கும்பலே திருத்தாதே!
 

உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தை கொத்தடிமை ஆக்குவதை
எதிர்த்து நின்று போராடுவோம்!

 
மால்கள் திறப்பதை அனுமதித்து ஆன்லைன் வர்த்தகம் அனுமதித்து
சில்லரை வணிகத் துறையினிலே கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள்
ஏகபோகமாய் கோலோச்ச
, சில்லரை வணிகத்தை மோடி கும்பல் காவு கொடுப்பதை எதிர்த்திடுவோம்!

 

ஆன்லைன் வர்த்தகம் தடைசெய்ய, போராடுவோம்! போராடுவோம்! 
கல்வி மருத்துவம் சுகாதார சமூக நலத் திட்டங்களை
வணிகமயம் ஆக்குவதை எதிர்த்து நின்று போராடுவோம்!
 
 
ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை முறியடிபோம்!
 

அன்னைத் தமிழையும் அனைத்து மொழியையும் ஆட்சி மொழியாய் பயிற்று மொழியாய் அரியணை ஏற்றப் போராடுவோம்!
ஆங்கிலம் இந்தி ஆதிக்கத்திற்கு கருவியாகச் செயல்படும்
மெட்ரிக்குலேசன் பள்ளிகளை இழுத்து மூடப் போராடுவோம்!
பொதுக் கல்வித் திட்டத்தை தாய் மொழி வழியில் அமல்படுத்த
போராடுவோம்! போராடுவோம்!

 
 
பாசிச மோடி கும்பலின் இந்துத்துவப் பாசிச
தேசியக் கொள்கையினை எதிர்த்து நின்று முறியடிப்போம்!
 
மோடி கும்பலே, மோடி கும்பலே!
 

காஷ்மீர் மக்கள் மீதான இனவெறிப் பாசிச யுத்தத்தை
உடனே நிறுத்து! உடனே நிறுத்து!

 

காஷ்மீர் மக்கள் மத்தியிலே கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை
உடனே நடத்து, உடனே நடத்து!

 
 
அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை
வென்றெடுக்கப் போராடுவோம்!
 
காவிக் காடையன் மோடி கும்பலின் இந்துமதவாதப் பாசிசத்தை,
சாதி வாதப் பாசிசத்தை எதிர்த்து நின்று முறியடிப்போம்!
 
நாட்டின் விடுதலை ஜனநாயகம் வென்றெடுத்து நிலைநாட்ட,
மக்கள் ஜனநாயக அரசமைக்க, புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! அணி திரள்வோம்!
 
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!
 
 

மே நாள் வாழ்க மே நாள் வாழ்க!  மேதினி போற்றும் மேநாள் வாழ்க!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு . 

Saturday, 29 April 2017

மே நாள் வாழ்க! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

கருத்தாலும் கரத்தாலும் உழைக்கின்ற உழைப்பாளி மக்களே...!!

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாளை மேதின தியாகிகளை நினைவுகூரும் நாளாக கடைப்பிடித்து வருகிறோம். இவ்வாண்டு மே-நாளில், அமெரிக்காவில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள டிரம்ப் கும்பல் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்தவும், நிதிமூலதன கார்பரேட் கும்பலை மீட்கவும் இனவெறி பாசிசத்தைக் கட்டியமைப்பதுடன் உலக மக்கள் மீது ஒரு மூன்றாம் உலகயுத்தத்தை திணித்து வருவதை எதிர்த்தும்; மோடி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும், நெருக்கடிகளின் சுமைகளை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது சுமத்துவதையும் எதிர்த்து, இந்துமதவெறி பாசிசத்தை எதிர்த்தும் போராட சூளுரை ஏற்பதே சர்வதேச, தேசியக் கடமையாகும்.

உலகப் பொருளாதார மந்தநிலை தொடர்கிறது

இன்றைய உலகம், பொருளாதார மற்றும் நிதிநெருக்கடியில் மூழ்கிக் கிடக்கிறது. 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.2 சதவீதமாக மிகவும் வீழ்ச்சியடைந்துவிட்டது. 2017-இல் அது 2.7 சதவீதமாக வளரும் என்ற எதிர்பார்ப்பும்கூட அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளால் அல்ல; இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தைகளை நம்பித்தான் கூறப்படுகிறது. ஆனால் பொருளாதார மந்தத்திலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் நிலவும் குழப்பம், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் உலகமயக் கொள்கைகளைக் கைவிட்டு காப்புக் கொள்கைகளுக்கு மாறுவது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியது போன்ற காரணங்களால் உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என ஐ.நா.வின் ஆய்வு எச்சரிக்கிறது.

பெரும் நிறுவனங்கள் திவாலாகிவருவது, அதீத லாபத்திற்கான ஊகமுதலீடுகள், ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறை மோசடிகள், பங்குச்சந்தை வீழ்ச்சி, நாடுகளின் கடன் அதிகரித்துக்கொண்டே செல்வது என முதலாளித்துவப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் நிலவும் இத்தகைய நெருக்கடிகளின் சுமைகள் உழைக்கும் மக்கள் மீது வரலாறு காணாத அளவிற்கு சுமத்தப்பட்டு வருகிறது. ஆலைகள் மூடல், லே-ஆப், ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, ஓய்வூதிய நிதியைச் சூறையாடுவது போன்ற வழிகளில் சுமத்தப்படுகிறது. ஆனால் உலக அளவில் மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்களின் கைகளில் 50 சதவீத மக்களின் ஒட்டுமொத்த சொத்துக்கு இணையான செல்வம் குவிகிறது. வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தாழ்வுகள் பெருகிவிட்டன. அது உலகின் அனைத்து முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தி வருகின்றன. உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதான ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்கள் மட்டுமல்ல ஏகாதிபத்தியவாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளும் தீவிரமடைகின்றன.

அமெரிக்க டிரம்ப் கும்பலின் இனவெறிப் பாசிசமும் மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தலும்

அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஏழைகள் மற்றும் பாட்டாளிகளின் நண்பனாகவும், மதவெறியைத் தூண்டிய கோடீஸ்வரர்களுக்கு எதிராகவும், போர் எதிர்ப்பு ஆதரவாளராகவும் தன்னைக் காட்டிக் கொண்டார் டிரம்ப். ஒபாமா நிர்வாகத்தால் “மறக்கப்பட்ட மக்களின்” குறைகளை போக்குவேன் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த டிரம்ப் “மறக்கப்பட்ட மக்களை” மறந்தார். ஒபாமா கொண்டுவந்த “ஒபாமா கேர்” எனும் சமூக சீர்திருத்தத் திட்டத்தை ஒழித்துக்கட்டி ஏழைகள் மற்றும் உழைப்பாளி மக்களின் முதுகில் குத்திவிட்டார். பங்குச் சந்தை சூதாடிகள், ரியல் எஸ்டேட் முதலைகள், இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடும் கார்பரேட்களின் நலன்களுக்காக உள்நாட்டு மக்கள் மீது இனவெறிப் பாசிசத்தை கட்டவிழ்த்து விடுவதோடு அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட சிரியா மற்றும் வட கொரியா மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் உலகப் போரைத் தூண்டுகிறது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது பற்றியோ, உலக வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றியோ. ஊக வாணிபத்தை ஒழித்து மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்தோ இன்றைய முதலாளித்துவ முறையில் எதுவும் செய்ய முடியாது என்பது டிரம்ப் கும்பலுக்கு தெரியும். எனவேதான் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்க வெள்ளை இன மக்களின் வாழ்வு பறிபோவதற்கும், வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கும் கறுப்பர்கள், இஸ்லாமியர்கள், இலத்தீன் அமெரிக்கர்கள், ஆசிய சமூகத்தினர் ஆகியோரே காரணம் என்று இனவெறியை ஊட்டியது.

தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டீவ் பென்னான் போன்ற தீவிர வலதுசாரி சித்தாந்தவாதிகளையும், இராணுவ ஜெனரல்களையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு இனவெறி, நிறவெறிப் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறது. மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு பெரும் சுவரை எழுப்புவது, 9 இஸ்லாமிய நாடுகள் மீது தடை விதிப்பது, இஸ்லாமிய தீவிரவாதத்தை குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதத்தை எதிர்ப்பது என்ற பேரில் இனவெறிப் பாசிசத்தை கட்டவிழ்த்துவிட்டு மக்களை மோத விடுகிறது.

நிறத்தின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தி கறுப்பர்கள் என்றாலே காட்டுமிராண்டிகள், போதைப் பொருள் கடத்துபவர்கள், கிரிமினல்கள், கற்பழிப்பு, கொலைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் வெள்ளையர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்றும் பாகுபடுத்தி கறுப்பர்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டுகிறது. நீக்ரோக்கள், இசுலாமியர்கள் மற்றும் ஆசியர்கள் அனைவரையும் கறுப்பர்களாகவே வகைப்படுத்துகின்றனர். இவர்களின் இரத்தத்தில் 1000-ஆம் ஆண்டுகளாக ஜனநாயக மரபணுவே கிடையாது, இவர்கள் அனைவரும் நாகரிகமற்றவர்கள் என்று கூறி இனவெறியைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவ்வாறு டிரம்ப் கும்பல் இனவெறிப் பாசிசத்தை ஊட்டி உள்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், ஐ.எஸ். அமைப்பை எதிர்ப்பது, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பேரில் சிரியா மற்றும் வடகொரியா மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் மீண்டும் ஒரு உலகப் போருக்கு, மூன்றாம் உலகப்போருக்கு தயாரிப்பு செய்கிறது. உலக மக்களை அச்சுறுத்துகிறது.

சிரியா, வடகொரியா மீதான போர் உலகப்போருக்கான தயாரிப்பே!

ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு சிரியாவின் விமானப்படைத் தளத்தின் மீது 60 ஏவுகணைத் தாக்குதலை நடத்த டிரம்ப் கும்பல் ஆணையிட்டது. உடனடியாக ரஷ்யா தனது படைகளை சிரியாவின் கடல் பகுதியில் குவித்தது. அத்துடன் அமெரிக்கா வடகொரியாவின் அணு ஆயுதத்தை ஒழிப்பது என்று கூறி தனது அணுஆயுத ஏவுகணைகள் தாங்கிய மூன்று போர்க் கப்பல்களை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்து அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

சிரியாவின் மனிதாபிமானமற்ற விஷவாயு தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையே சிரியா மீதான தாக்குதல் என்றும், வடகொரியா அணு ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கூறி தனது போர் நடவடிக்கைகளை நியாயப் படுத்துகிறது டிரம்ப் கும்பல். ஆனால் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி கூறும்போது “சிரியாவின் ஆசாத் ஆட்சி இருக்கும்வரை அமைதி இல்லை, சிரியாவில் ஆட்சி மாற்றமே அமெரிக்காவின் இலக்கு” என்று அறிவிக்கிறார்.

ஐ.எஸ். அமைப்பை தோற்கடிப்பது, சிரியாவின் மீதான ஈரானின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவது, இப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவது, அதற்கு சிரியாவில் தனது பொம்மை ஆட்சியை நிறுவுவது என்பதே அமெரிக்காவின் உண்மையான திட்டமாகும். சிரியா பிரச்சினையில் அமெரிக்கா, சவுதி அரேபியா, நேட்டோ போன்ற நாடுகள் ஒருபுறமும் - ரஷ்யா, ஈரான், லெபனானின் ஹிசுபுல்முஜாகிதீன் மறுபுறமும் அணி சேர்ந்து நிற்கின்றன.

மேலும் சிரியா மற்றும் வடகொரியா பற்றி அமெரிக்க அரசுத் துறைச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறும்போது, “சிரியா முதல் வடகொரியா வரையிலான பொறுக்கி அரசுகளை எதிர்த்து ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதே” என்றும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதத்தை ஒழிப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

ஆனால், வடகொரியாவோ “அமெரிக்காவின் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்புக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கத் தயார்” எஎன்றும், “இன்றைய கடுமையான சூழ்நிலைமைகளில் வடகொரியா தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதம் உள்ளிட்ட அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” என்றும் அறிவித்துள்ளது.


வடகொரிய பிரச்சினையில் - வடகொரியா, சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் உச்சபட்ச ராஜதந்திர ரீதியான கூட்டணியை அமைத்துள்ளன. மறுபுறம் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் அமைதி மற்றும் உடன்படிக்கைக்கான அணியை உருவாக்கியுள்ளன.

அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்திற்கு எதிராக உள்ள ரஷ்யா மற்றும் சீன ஏகாதிபத்தியவாதிகளைக் குறிவைத்து அந்நாடுகளுடனான மறைமுகமான மோதலை உச்சத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடுதான் அவைகளுக்கு மிகவும் நட்பு நாடுகளான சிரியா மற்றும் வடகொரியா மீது தாக்குதல் நடத்த திட்டமிடுகிறது.

இன்றையச் சூழலில் அமெரிக்கா தனது மேலாதிக்க நோக்கத்திற்காக சிரியா, வடகொரியா மீது நடத்தும் எந்த ஒரு தாக்குதலும் ஒரு பன்னாட்டு போராகவே அமையும். அது தவிர்க்க முடியாமல் ஒரு உலக யுத்தமாக மாறும். அத்துடன் அது அணு ஆயுதப் போராகவும் மாறும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. எனவே அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் துவங்கியுள்ள சிரியா மற்றும் வடகொரியா மீதான யுத்தத்தை எதிர்த்து உலக மக்கள் அணிதிரள வேண்டியது உடனடிக் கடமையாகும்.

அமெரிக்காவின் உலகமேலாதிக்கப் போருக்கு சேவை செய்யும் இளைய பங்காளியாக இந்திய அரசு

மோடி தலைமையிலான அரசு அமைந்தவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை புதுப்பிக்க முயற்சித்தது. மோடியின் அமெரிக்க விஜயத்தின்போது இராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்து ஒப்பந்தங்களை செய்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க இந்திய யுத்ததந்திர பங்காளி உறவுகள் வேகம் எடுத்தன. அத்துடன் சென்ற ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்றபோது அமெரிக்காவுடன் லாஜிஸ்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன் மூலம் மோடி கும்பல் இந்தியாவை அமெரிக்காவின் இரண்டாம் நிலைக் கூட்டாளியாக மாற்றிவிட்டது.

இவ்வொப்பந்தப்படி அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம். மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். அமெரிக்கப் போர்வீரர்கள் இந்தியாவில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவர். மேலும் அமெரிக்கா மூன்றாவது ஒரு நாட்டில் போர்த் தொடுப்பதற்கு இந்தியாவின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளும்.

அமெரிக்கா-இந்தியா இருநாடுகளுக்கும் பொதுவான இணைந்த யுத்ததந்திர கூட்டணி என்பதன் மூலம் ஆசியாவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை தடுத்து நிறுத்துவது, சீனாவைச் சுற்றிவளைப்பது என்ற அமெரிக்காவின் திட்டத்திற்கு இந்தியா ஒத்துழைப்பதற்கு தயாராகிவிட்டது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிகாரத்திற்கு வந்தபிறகு, சிரியாவிலும் வடகொரியாவிலும் போர் முயற்சி செய்து கொண்டிருக்கும் சூழலில், டெல்லிக்கு வருகை தந்த அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செயலாளர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் இராணுவத் துறையில் இந்தியாதான் அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாக இருக்கும் என்று அறிவித்ததன் மூலம் அதை நிரூபித்துவிட்டது. இவ்வாறு மோடி கும்பல் இந்தியா ஒரு கூட்டுசேரா நாடு என்பதை, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் இராணுவக் கூட்டாளியாக, இளைய பங்காளியாக மாற்றிவிட்டது. அமெரிக்க மாமனுக்கு “அனுமார் படையாக” இந்திய இராணுவத்தை மாற்றிவிட்டது.

மோடி கும்பல் இராணுவத் துறையில் மட்டுமல்ல, புதிய தாராளக் கொள்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் இந்திய நாட்டின் அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் திறந்துவிட்டு அமெரிக்காவின் புதியகாலனிய வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றிவருகிறது.

அனைத்துத் துறைகளையும் அந்நிய மூலதனத்திற்கு திறந்துவிடும் மோடி கும்பல்


இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் மோடி கும்பல் அந்நிய முதலீட்டு வாரியத்தை கலைப்பதாக அறிவித்துள்ளது. அவ்வாறு கலைப்பதன் மூலம் அந்நிய முதலீட்டிற்கு இருந்துவந்த அரைகுறைத் தடைகளையும் அகற்றிவிட்டது.


அந்நிய முதலீட்டாளர்களுக்கு நாட்டின் கதவுகளை அகலத் திறப்பது, வரிகளற்ற சொர்க்கபுரிகளிலிருந்து FDI, FII எனும் பேரில் கறுப்புப்பணம் முதலீடுகளாக (வெள்ளையாக) மாற்றுவதற்கான தடைகளை அகற்றுவது, டிஜிட்டல் முறைகளைப் புகுத்துவது, அரசு-தனியார்-பங்கேற்புத் (PPP) திட்டத்தை இரயில்வே உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் விரிவாக்குவது, பொதுத்துறை நிறுவனங்களை (நெய்வேலி நிலக்கரி, சேலம் இரும்பாலை போன்ற) தனியாருக்கு தாரைவார்ப்பது என பன்னாட்டு, உள்நாட்டு கார்பரேட்களின் மனம் குளிர மோடிகும்பல் புதிய தாராளக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துகிறது. அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துகிறது. ஆண்டுக்கு 20 மில்லியன் பேர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக மோடி கும்பலின் ரூ.500, 1000 செல்லாது திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு மேல் வேலை இழந்து தவிக்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக வேளாண்துறை நெருக்கடிகளுக்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் தீர்வுகாண மறுப்பதோடு தொழிலாளர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்துகிறது. கார்பரேட்களுக்கு சிறு, குறுந் தொழில்கள் மற்றும் சில்லறை வணிகத்தைக் காவுகொடுக்கிறது. அத்துடன் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியார்மயமாக்கி- வணிகமயமாக்கி பரந்துபட்ட மக்களை வாட்டிவதைக்கிறது.

தமிழக விவசாயிகளின் போராட்டத்தை நசுக்கும் மோடி அரசு

ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை சந்திக்க மறுத்து அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்து அடக்கத் துடிக்கிறது மோடி கும்பல். தன்னை சந்திக்க வந்த விவசாயிகளை சந்திக்க மறுத்து அம்மணமாக ஓடவிடுகிறார் மோடி. விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்வோம், விவசாயிகளுக்கு தங்களது உற்பத்தி செலவில் 50 சதவீதம் லாபம் கிடைக்க உத்திரவாதம் அளிப்போம் என வாக்குறுதி வழங்கி ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல் விவசாயிகளின் முதுகில் குத்துகிறது.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத ஒரு கொடிய வறட்சி தாண்டவமாடுகிறது. விவசாயிகள் குடிக்கவும் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். விவசாயம் அழிந்து 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன்தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிட்டனர். தமிழக அரசு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.39,675 கோடி நிதி உதவி கோரியது. ஆனால் மோடி அரசாங்கமோ வெறும் ரூ.1,700 கோடிதான் வழங்கியது. இத்தகைய சூழலில்தான் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வெள்ளம், வறட்சிக்கான நிதியை உடனே வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளின் பிரச்சினைகளையும் தீர்க்க ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற முடிவை கைவிடவேண்டும், வெள்ளம் வறட்சிக்கு தீர்வுகாண இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று கோரி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.

மோடி அரசாங்கம் விவசாயிகளின் கடனை ரத்து செய்யத் தயாரில்லை. ஆனால் அடானி, அம்பானி, மல்லையா போன்ற தரகுமுதலாளித்துவ கார்பரேட் முதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடனை கட்டமறுக்கும் வாராக்கடனை வசூலிக்கத் தயாரில்லை. மாறாக இவ்வாண்டு அத்தகைய கடன் ரூ.1,16,000 கோடியை திரும்ப வசூலிக்கக் கூடாது என போராடுகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னரோ கார்பரேட்களின் கடன்களை வசூல் செய்வதுபற்றிப் பேசாமல், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று கூறுகிறார். அதை கண்டிக்கவும் மோடி தயாரில்லை. விவசாயிகளின் துயர்துடைக்கவும் தயாரில்லை.

வேளாண்துறை நெருக்கடிக்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் கார்பரேட் வேளாண்கொள்கைகளே காரணம்

இன்றைய விவசாயிகளின் துன்ப துயரங்களுக்கு இயற்கையாக ஏற்படும் வெள்ளமோ, வறட்சியோ காரணமல்ல. வறட்சியும் தற்கொலைகளும் தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. நாடு முழுவதும் நல்லமழை பொழிந்த காலங்கள் உள்ளிட்டு மொத்தம் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். அவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் உண்மையில் மத்திய மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் கார்பரேட் வேளாண்கொள்கைகளே ஆகும்.

-  நிலச் சீர்திருத்தத்தை மறுத்து வேளாண்துறையில் பன்னாட்டு, உள்நாட்டு கார்பரேட்களை அனுமதித்து நிலக்குவியலுக்கு வழி வகுப்பதுடன் வேளாண் உற்பத்தி, வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் வணிகத்தில் ஏகபோகத்தை நிறுவுவது;
-    வேளாண் துறைக்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்து நீர்ப்பாசனம் உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களைக் கைவிடுதல்;
-    விவசாயிகளுக்கான மானியங்களை வெட்டியதன் விளைவாக உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வது;
-   வேளாண் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கான அளவு ரீதியான கட்டுப்பாடுகளை அகற்றியது, சுங்க வரிகளை ஒழித்ததன் காரணமாக ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவான விலையில் வேளாண் விளைபொருட்கள் இந்திய சந்தையில் கொட்டிக் குவிக்கப்பட்டது. உள்நாட்டு விவசாயிகள் போட்டி போடமுடியாமல் விளைபொருட்களின் விலை குறைந்து கொண்டே செல்வதால் உரிய விலைகிடைக்காமல் விவசாயத்தைவிட்டு வெளியேறுதல்;
-   ஆதாரவிலை கொடுத்து விவசாயிகளின் விளைபொருட்களை அரசாங்கம் கொள்முதல் செய்வதைக் கைவிடுவதோடு, நியாயவிலைக் கடைகளை சீரழிப்பதன் மூலம் விவசாயிகளையும் நுகர்வோர்களையும் சந்தை சக்திகளின் வர்த்தக சூதாட்டத்தில் பலியிடுவது.
மத்திய, மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டு வரும் மேற்கண்ட கார்பரேட் வேளாண் கொள்கைகள்தான் விவசாயிகள் கடனாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளக் காரணம். இக்கொள்கைகளை ஒழித்துக் கட்டாமல், கார்பரேட் நிறுவனங்களை விரட்டியடிக்காமல் வெறுமனே கடன் தள்ளுபடியால் மட்டும் விவசாயிகளின் துயரம் தீரப்போவதில்லை. எனவே கார்பரேட்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதுதான் விவசாயிகளின் விடியலுக்கு ஒரே வழியாகும்.

கொத்தடிமைகளாக மாற்றப்படும் தொழிலாளர்கள்

இந்திய அரசு கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகளால் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளும் தொழிற்சங்க உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. மோடி தலைமையிலான ஆட்சி வந்த பிறகு தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.

நிரந்தர வேலைமுறை ஒழிக்கப்பட்டு தற்காலிக மற்றும் காண்டிராக்ட் முறை பெருகி வருகிறது. இதன் விளைவாக அமைப்புசார் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் குறைந்தபட்ச சம்பளமோ, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பாதுகாப்போ பெறமுடியாமல் தவிக்கின்றனர்.

பொதுத்துறையில் 50 சதவீதம் பேரும், தனியார்துறையில் 70 சதவீதம் பேரும் காண்டிராக்ட் முறையில் கசக்கிப் பிழியப்படுகின்றனர். எட்டு மணி நேர வேலை நாள் என்பதெல்லாம் மலையேறி விட்டது. 12 மணி நேர வேலை என்பது பொதுப் போக்காக மாறிவிட்டது. ஐ.டி. துறையிலும் கூட தொழிற்சங்க உரிமைகளின்றி தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு அவுட் சோர்சிங் முறைகளில் எற்பட்டுவரும் மாற்றங்களினால் இந்திய ஐ.டி. துறைப் பணியாளர்கள் கேள்வி கேட்பாரின்றி வேலையிலிருந்து தூக்கி வீசியெறியப் படுகின்றனர். வாழ வழியின்றி நடுத்தெருவில் அலைகின்றனர்.

இத்தகைய சூழலில் கார்பரேட் நலன்களைக் காக்க மோடி கும்பல் தொழிலாளர்களின் வாழ்நிலைகள் மீது ஒரு கொடிய தாக்குதலை தொடுக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மோடி ஆட்சி தொழிலாளர் சட்டங்களையும் தொழிற்சாலைகள் சட்டங்களையும் திருத்தி வருகிறது. தற்போது இவை குறித்த 44 சட்டங்களைச் சுருக்கி 5 சட்டங்களாக மாற்றுகிறது. இச்சட்டத் திருத்தம் நிறைவேறினால் முதலாளிகள் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை அரசாங்கத்தைக் கேட்காமலே வீட்டுக்கு அனுப்பலாம். இவ்வாறு மோடி கும்பல் “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றுகிறது. கார்பரேட்களுக்கு குற்றேவல் புரிகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு மேதின தியாகிகள் எந்த நோக்கத்திற்காகப் போராடினார்களோ அது தகர்க்கப்பட்டு, அதே கொத்தடிமை நிலைமைக்கு தொழிலாளர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகமும் சில்லறை வர்த்தக அழிவும்
 இந்திய அரசாங்கம் ஏற்றுமதி, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் விளைவாக வெளிநாட்டு பொருட்கள் இந்திய சந்தையில் மலிவான விலையில் கொட்டிக் குவிக்கப்படுவதால் டெக்ஸ்டைல், கார்மென்ட்ஸ், ஆட்டோ உதிரி பாகங்கள் செய்யும் சிறு, குறுந்தொழில்களும், கைத்தொழில்களும், தேசியத் தொழில்களும் நலிவடைந்து பலகோடி பேர் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர். மோடி அரசின் செல்லாக்காசு அறிவிப்பால் இத்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு கம்பெனிகள் நுழைவதற்கு தடைகளை அகற்றியதால் ஏற்கனவே அமெரிக்காவின் வால்மார்ட், கோர்கர், கார்னெல் ஹெல்த், ஜெர்மனியின் மெட்ரோ, பிரான்சின் கேரிபோர், பிரிட்டனின் டெஸ்க்கோ போன்ற பன்னாட்டு கம்பெனிகள் சில்லறை வணிகத்தில் ஆதிக்கம் புரிகின்றன. மேலும் தற்போது மோடி கும்பல் இணைய வர்த்தகம், ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் சில்லறை வணிகத்தில் பிளிப்கார்ட், அமேசான், ஓலா, ஊபர் போன்ற பன்னாட்டு பகாசூர நிறுவனங்களை அனுமதித்து இந்திய நாட்டின் சில்லறை வணிகத்தை கார்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கிறது.

ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. 2010-ல் வெறும் 5 பில்லியன் டாலர்களாக இருந்த வியாபாரம் 2020-இல் 20 மடங்கு உயர்ந்து 100 பில்லியன் டாலர்களையும் தாண்டும் என மார்கன் ஸ்டான்லி மதிப்பிடுகிறது. ஆன்லைன் வர்த்தகம் செய்யும் கடைகள் 2015-ல் மொத்தம் 50 மில்லியனாக இருந்தவை, 2020-இல் 300 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015-ல் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட மிகப்பெரும் நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களின் விற்பனையானது (13.8 பில்லியன் டாலர்கள்), சாதாரண வர்த்தகத்தில் ஈடுபட்ட முதல் பத்து நிறுவனங்களின் விற்பனயைவிட (12.6 பில்லியன் டாலர்கள்) அதிகமாக ஆகியுள்ளது. அந்த அளவுக்கு ஆன்லைன் வர்த்தகம் மற்ற வர்த்தகத்தை ஓரம் கட்டுகிறது.

இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட், பிளிப்கார்ட், அமேசான், ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் சுற்றுலாவிற்கான வாகனங்கள் ஏற்பாடு, சில்லறை வணிகம், திருமணத் தரகு உள்ளிட்ட விளம்பரம், இணைய வங்கிப் பரிமாற்றம், டிஜிட்டல் வீடியோ, ஆடியோ பதிவிரக்கம் செய்தல் போன்ற சேவைகளில் ஈடுபடுகின்றன. இந்நிறுவனங்களின் பின்னால் இருந்து இவற்றை இயக்குவது பன்னாட்டு நிதி மூலதன கும்பல்களேயாகும். அவை இந்தியப் பொருளாதாரத்தை ஏகபோகமாக்கும் நோக்கத்துடன் வெறிகொண்டு அலைகின்றன. அன்று கிழக்கிந்தியக் கம்பெனிகள் வணிக நோக்கத்தில் வந்து நாட்டை அடிமைப்படுத்தின. அன்றைய வைசியராய்களைபோல் இன்று இந்திய பிரதமர் செயல்பட்டு நாட்டை அமெரிக்கப் பன்னாட்டு கார்பரேட்களின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறார். விளைவு 20 கோடி வணிகர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. சில்லறை வணிகம் மட்டுமல்ல நாட்டின் அனைத்துத் துறைகளும் அந்நியரின் கட்டுப்பாட்டிற்குள் சிக்குண்டு வருகிறது.

மாநில உரிமைகள் பறிப்பு

இந்திய அரசு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து தேசிய இனங்களின் சிறைக்கூடமாக திகழ்கிறது. நிர்வாக வசதிக்காக மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதுடன் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என அதிகாரம் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பங்கிடப்பட்டு அரசியல் சட்டம் பெயரளவுக்கு கூட்டாட்சி குடியரசு பற்றி பேசுகிறது. 90-களுக்குப் பிறகு புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்பு அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட மாநில உரிமைகளும் கூட நடைமுறையில் மத்திய அரசின் கைகளுக்கு செல்கின்றன.

இந்து மதவாத மோடி கும்பல் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவித்து ஒரு எதேச்சதிகார ஆட்சியைக் கட்டியமைக்கிறது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்களின் மீது ஒரு உள்நாட்டு யுத்தத்தை தொடுத்துள்ளது.

அண்மையில் மோடி அரசு இடஒதுக்கீட்டை மறுத்து கொண்டுவரும் சட்டங்கள், அனைவருக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்கள் வழங்குவது என்பதை ஏழைகளுக்கு மட்டும் என்று மாற்றுவது, மின்சாரத்துறையை உதய் திட்டத்தின் மூலம் முழுமையாக தனியார் மயமாக்கும் திட்டம், உயர் கல்வியில் மாணவர்களைச் சேர்க்க இந்திய அளவில் தகுதித் தேர்வு (NEET) என்பவை அனைத்தும் மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் குவிப்பதேயாகும்.

அத்துடன் தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைகளை உருவாக்குவதன் மூலம் மாநிலங்கள் வருவாய் ஈட்டுவதை மத்திய அரசு தடுக்கிறது. இதுவரை மாநிலங்களின் கைகளில் இருந்த வரிவிதிப்பு உரிமைகளையும் மத்திய அரசு பறித்துக் கொள்கிறது. இதையும் கூட மாநிலங்களவையில் விவாதிக்காமலே எதேச்சதிகார முறையிலேயே மோடி கும்பல் அமல்படுத்துகிறது. இனி மாநிலங்கள் ஆல்கஹால், பெட்ரோல் பொருட்கள் மீது மட்டுமே வரிவிதிக்க முடியும். இதன் காரணமாக கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கொண்டுவந்த பல வளர்ச்சித் திட்டங்களும் சமூகநலத் திட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். மோடி கும்பல் ஒரே நாடு, ஒரே வரி என்ற பேரில் புதியகாலனிய ஆதிக்கத்தை நாடு முழுவதும் சமச்சீராக்குகிறது.

இந்தி சமஸ்கிருத திணிப்பு

மோடி அரசு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து உயர்கல்வியில் வழக்கொழிந்து செத்தமொழியாகிவிட்ட சமஸ்கிருதத்தையும் இந்தி மொழியையும் திணித்துவருகிறது. மைல்கல்லில் ஆங்கிலத்தை நீக்கி இந்தியை எழுத ஆணையிட்டுள்ளது. தற்போது குடியரசுத் தலைவர் இந்தி மொழியை திணிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு 2011 ஆம் ஆண்டு அளித்த பரிந்துரைகளுக்கு இப்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

-      குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்தியில் பேசவோ எழுதவோ தெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் இந்தியில்தான் எழுதவேண்டும்;

-      அனைத்து இந்திய விமானங்களிலும் முதலில் இந்தி அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் அறிவிப்புகள் இருக்க வேண்டும்;

-    ஏர் இந்தியா விமானங்களிலும் பவன்கன்ஸ் ஹெலிகாப்டர்களிலும் பயண டிக்கட்களில் இந்தி பிரதானமாக இடம் பெற்றிருக்க வேண்டும்;

-      சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும். அதன்படி மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படக் கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும்.

என்ற சட்டத்தில் கையப்பம் இட்டுள்ளார். இதன் மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் செயலை மத்திய அரசு தீவிரப்படுத்துகிறது. பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்தி திணிப்பில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்பதையே சிதம்பரம் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் காட்டுகின்றன.

இந்திய அரசு, இந்தியாவில் பேசப்படும் பல்வேறு தேசிய மொழிகளை ஆட்சிமொழியாகவோ பயிற்று மொழியாகவோ ஏற்க மறுக்கிறது. இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக அரசியல் சட்டம் ஏற்கிறது. இந்தி பேசாத மக்கள் இந்தியை ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் நேருவின் வாக்குறுதியாகும். எனவேதான் இந்திய அரசு இந்தியை திணிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. திராவிடக் கட்சிகளோ நேருவின் வாக்குறுதியை நிறைவேற்று என்று சொல்வதன் மூலம் இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தையே முன்வைக்கின்றன. தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்கும் வரை ஆங்கிலம் தொடர வேண்டும் என்ற இக்கட்சிகளின் இருமொழிக் கொள்கை ஆங்கிலத்தையே வளர்த்துள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தையும் ஒழித்து பொதுக் கல்வியை, கட்டாயக் கல்வியை, இலவசக் கல்வியை தாய்மொழியில் வழங்கும்போது மட்டும்தான் இந்தி, ஆங்கில ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். எனவே தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும், அதாவது அனைத்து தாய்மொழிகளையும் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆக்குவதன் மூலமே இந்தி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டுமானால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவது ஒன்றுதான் வழியாகும்.

இந்திய அரசின் காஷ்மீர் யுத்தம்

காஷ்மீர் பற்றி எரிகிறது. சென்ற ஆண்டு செப்டம்பரில் 18 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்ட பின் ஒரு காஷ்மீர் போராளித் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியில் 90 க்கும் மேற்பட்ட மக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 100 நாட்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அதிலிருந்து இராணுவத்தின் எந்த ஒரு அத்து மீறலும் பெரும் கலவரங்களாக மாறுகின்றன. காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என காஷ்மீர் மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளில் காஷ்மீர் மக்கள் தங்களது சுதந்திரத்திற்காக இந்தியாவுடன் நடத்திய போரில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

1948 ஆம் ஆண்டு இந்தியாவுடன் வல்லிணைப்பு மூலம் காஷ்மீர் இணைக்கப்பட்டது. அம்மக்களின் விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்ப அரசியல் சட்டம் 370 மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கி ஏராளமான சலுகைகளை இந்திய அரசு வழங்கினாலும் காஷ்மீர் மக்கள் விடுதலையைத்தான் விரும்புகின்றனர். ஏற்கனவே இந்திய ஆளும் வர்க்கங்களும் அரசியல் கட்சிகளும் 370 சிறப்பு சட்டத்தையும் செல்லாக்காசாக்கிவிட்டன. இந்திய அரசு எந்த அரசியல் பிரச்சினையையும் இராணுவ ரீதியாகவே தீர்க்க விரும்புகிறது. இந்து மதவாத பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு இராணுவரீதியில் தீர்வு காணவே முடியாது. அரசியல் ரீதியில் தீர்வுகாண வேண்டுமானால், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி அம்மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தனியாக அரசமைத்துக் கொள்ள அனுமதிப்பதுதான் அமைதி வழியிலான தீர்வாகும். எனவே இந்திய அரசு இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று போராடுவது நமது கடமையாகும்.

புதியகாலனியத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிசம்

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது முதலே ‘வளர்ச்சி’, ‘முன்னேற்றம்’ “சப்கா சாத், சப்கா விகாஸ்” என்று முழங்கி புதிய காலனிய-புதியதாராளக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி கார்பரேட் சேவையில் இறங்கியது. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளில் அமர்ந்து கொண்டு தங்களது இந்து மதவெறிப் பாசிச நடவடிக்கைகளை முன்னெடுத்தன. மக்களை மதவாத அடிப்படையில் பிளவுபடுத்தின. மோடி அமல்படுத்தி வந்த தேச விரோத, மக்கள் விரோத கார்பரேட் ஆதரவு கொள்கைகளின் காரணமாக மோடியின் செல்வாக்கு ஒரு ஆண்டிற்குள்ளேயே மளமளவென சரிந்தது. பீகார் தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வியது.

அடுத்து வந்த 5 மாகாணத் தேர்தலில் தங்களது வெற்றியை தக்கவைத்துக் கொள்ள மோடி கும்பல் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை முதன்மைப் படுத்தியது. உத்தர பிரதேச தேர்தலில் லவ் ஜிகாத் எதிர்ப்பு, இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்து பெரும்பான்மை மதவெறியைத் தூண்டியும், பிராமண, ராஜ்புத், பனியா போன்ற பெரும்பான்மை சாதிவெறியைப் பயன்படுத்தியும் அதாவது மதவாத, சாதிவாதப் பிற்போக்கு பாசிச வெறியைத் தூண்டி அபரிமிதமான வெற்றியைப் பெற்றது. அத்துடன் உ.பி.யின் முதல்வராக இந்துமதவெறி சாமியாரும், மதவெறிக் கலவரத்தில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளியுமான ஆதித்ய யோகிநாத்தை நியமித்ததன் மூலம் மோடி கும்பல் 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை இந்து மதவாதத்தை முன்னிறுத்தி சந்திக்கத் தயாராகிவிட்டது.

பசுவதைத் தடுப்பு, மாட்டுக்கறி எதிர்ப்பு, இராமர் கோவில் கட்டுவது போன்ற இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை முன்னிருத்தி, இந்து மதவெறியைத் தூண்டி, நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது மட்டுமல்லாமல், வரும் 2022-ஆம் ஆண்டில் - சாவர்கர் இந்துராஷ்டிர கொள்கைகளைப் பிரகடனப்படுத்திய 100 ஆம் ஆண்டில் - “ஒரு புதிய இந்தியாவை” - இந்துராஷ்டிரம் படைப்பது என்ற கனவில் செயல் படுகின்றன பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும்.

குஜராத் அரசாங்கம் அண்மையில் மாட்டைக் கொல்பவர்களுக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்று பசுவதைத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மனிதனைக் கொல்வதும் மாட்டைக் கொல்வதும் சமமான குற்றமே என குஜராத் பா.ஜ.க அரசாங்கம் கூறுகிறது. மத்தியப்பிரதேச பாஜக அரசோ மாட்டைக் கொன்றால் மரணதண்டனை என்கிறது. மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இசுலாமியர்களும் தலித் மக்களும் நரவேட்டையாடப்படுகிறார்கள். இறைச்சி, தோல் பதனிடுதல், ஏற்றுமதி செய்தல் என இத்தொழிலில் இசுலாமியர்களும், தலித் மக்களும்தான் ஈடுபடுகிறார்கள். இப்புதிய சட்டத்தின்படி இவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோஹன் பகவத்தோ நாடு முழுவதிலும் பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். அத்துடன், மாட்டுக் காப்பாளர்களே! விவரமில்லாமல் நேரடியாக தாக்குதல் நடத்தி மாட்டிக் கொள்ளாதீர்கள், சட்டப்படியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என இந்து மதவெறியர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

மாட்டைக் கொல்வதற்கும் மனிதனைக் கொல்வதற்கும் ஒரே தண்டனை என்று கூறுகின்றனர். எனவே மாட்டைக் கொல்வதா? ஆர்.எஸ்.எஸ். காரனைக் கொல்வதா? எதைச் செய்தாலும் ஒரே தண்டனைதான் என மக்கள் முடிவுக்கு வருவார்களே என இந்த மரமண்டைகளுக்கு விளங்கவில்லை. மாட்டைப் பற்றியும், மனிதனைப் பற்றியும் எதுவும் தெரியாத மாட்டு மூத்திரத்தை மட்டுமே தெரிந்த மூடர்கூட்டம்தான் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டுவதற்கு நீதி மன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம் என அண்மையில் கருத்துரைத்தது “கட்டப் பஞ்சாயத்து” உச்சநீதிமன்றம். உடனே உ.பி. முதல்வர் ஆதித்ய யோகிநாத் ராமர் கோவில் கட்ட, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யத் தயார் என்று அறிக்கை விடுகிறார். இந்து மத வெறியர்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க விரும்புவது போலவும் இசுலாமியர்கள்தான் பேச்சு வார்த்தைக்கு வராமல் அராஜகம் செய்கிறார்கள் என்றும் குற்றம் சுமத்தி மீண்டும் ஒரு மதக் கலவரத்துக்கு தயாரிக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இராமர் கோவில் பிரச்சினையை கிளப்புவதன் மூலம் பெரும்பான்மை இந்து மக்களுக்கு மதவெறியை தூண்டி வாக்கு வங்கியை பலப்படுத்தி அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தயாராகிவிட்டது பாஜக கும்பல்.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் மீதும், நாடு முழுவதிலும் உள்ள பகுத்தறிவாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்துகின்றனர், கொலைகளும் செய்கின்றனர். கேரள மற்றும் மேற்குவங்க முதலமைச்சர்களின் தலைகளுக்கு கூட வெளிப்படையாகவே விலை வைக்கின்றனர். இவ்விஷயத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளையும் விஞ்சிவிட்டனர் இந்த இந்து தீவிரவாதிகள்.

ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இசுலாமியர், கிறிஸ்துவர், கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக அறிவித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அந்நியர்கள் என்கின்றனர். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே உடை என்ற அவர்களின் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு இவர்களையெல்லாம் அழிக்க வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்து செயல்படுகின்றனர். அவர்கள் சொல்லும் இந்து ராஜ்ஜியம் “அமெரிக்க மாமன் ராஜ்ஜியமே” ஆகும். அவர்கள் முசோலினியிடமிருந்து பாசிச அமைப்புமுறைகளைக் கற்றுள்ளனர். இட்லரிடமிருந்து பாசிச சித்தாந்தத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் இந்திய அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் மீதும், பகுத்தறிவின் மீதும், மனிதகுல நாகரிகத்தின் மீதும் கொடிய தாக்குதலைத் தொடுக்கின்றனர்.

 அமெரிக்காவில் டொனல்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் தீவிர வலதுசாரி பாசிசக் கும்பல்கள் அரசியலில் ஊக்கம் பெற்று வருகின்றன. இந்தியாவிலும் தீவிர வலதுசாரி ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள் பலம்பெற்று வருகின்றன. இன்றையச் சூழலில் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை உலக மக்கள் மீது சுமத்தவும், நெருக்கடியிலிருந்து அமெரிக்க கார்பரேட்களை காக்கவும் இனவெறிப் பாசிசத்தையும் உலகப்போருக்கான முயற்சிகளையும் டிரம்ப் கும்பல் செய்கிறது. இந்துத்துவ பாசிச மோடிகும்பலும் அதே நோக்கங்களுக்காகவே இந்து மதவெறிப் பாசிசத்தை கட்டியமைப்பதுடன் டிரம்ப்பின் போர்வெறிக்குத் துணை போகிறது. எனவே டிரம்பின் இனவெறிப் பாசிசத்தையும் உலகப்போர் முயற்சிகளையும், மோடிகும்பலின் இந்துத்துவப் பாசிசத்தையும் எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் விவசாயிகள் புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கீழ்க் கண்ட முழக்கங்களின் அடிப்படையில் போராட இம்மே நாளில் சூளுரைப்போம் என அறைகூவல் விடுக்கிறோம்.

மே நாளில் சூளுரைப்போம்!

அமெரிக்க டிரம்ப் கும்பலின் இனவெறிப் பாசிசத்தையும் மூன்றாம் உலகப் போர்த் தயாரிப்புகளையும் முறியடிப்போம்!
 
 மோடி அரசே! டிரம்ப் கும்பலின் இனவெறிப் பாசிசத்திற்கும் போர்வெறிக்கும் துணைபோகாதே!
 
வேளாண்மை நெருக்கடிக்கும் விவசாயிகள் தற்கொலைக்கும் காரணமான கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!
 
முதலாளிகள் நலன்களுக்கு தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!
 
 ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்!
 
மோடி கும்பலின் இந்து மதவாத, சாதிவாத பாசிசத்தை எதிர்த்து அணிதிரள்வோம்!
 
 மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
 
 உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Saturday, April 29, 2017