Sunday 20 October 2019

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(6)

கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும் 
கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்

3

கனுசன்யாலின் ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்.

1. சி.பி.ஐ (எம்.எல்)-லில் ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும் சி.பி.ஐ. (எம்.எல்.)ன் இடது தீவிரவாத வழியில் கட்சி பல குழுக்களாக சிதறுண்ட பிறகு 1972-க்குப் பின்னால் சிதறுண்ட புரட்சியாளர்கள் குழுக்களை ஒன்றுபடுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அவை பின்வருமாறு.

i) சத்யநாராயண் சிங், சிவக்குமார் மிஸ்ரா, குருபக்சிங், அசிம் சட்டர்ஜி ஆகியோர் எடுத்த முயற்சி;
ii) சுனிதிகுமார் கோஷ், கொண்டப்பள்ளி சீதாராமையா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட தேசிய அமைப்புக் கமிட்டி;
iii) சத்யநாராயண் சிங், சந்திரபுல்லா ரெட்டி உருவாக்கிய மத்திய கமிட்டி;
iv) சத்யநாராயண் சிங், சந்தோஷ்ராணா, பாஸ்கர் நந்தி ஆகியோர் உருவாக்கிய ஐக்கியம்;
v) தேவலப்பள்ளி வெங்கடேஸ்வர ராவ், மோனிக் குஹா உருவாக்கிய ஒருங்கிணைப்பு மையம்;
vi) கேரளா வேணு உருவாக்கிய மத்திய ஒருங்கிணைப்பு கமிட்டி;
vii) கொண்டபள்ளி சீதாராமையா தலைமையில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்த்து அமைக்கப்பட்ட மக்கள் யுத்தக் குழு;
viii) கனுசன்யால், அசிம் சட்டர்ஜி முயற்சியில் ஆறு குழுக்கள், ஒன்பது குழுக்கள் இணைந்தன என்ற அறிவிப்புகள்;
ix) சத்யநாராயண் சிங் 13 குழுக்களைக் கொண்டு வெளியிட்ட கூட்டு அறிக்கை;
x) சந்திரபுல்லா ரெட்டி, வினோத் மிஸ்ரா இணைந்து உருவாக்கிய கூட்டுக்கமிட்டி.

மேற்கண்டவாறு பல்வேறு ஐக்கியத்திற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இவ்வாறு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன?

அ) திட்டப் பிரச்சினையில் சமூக அமைப்பின் தன்மை பற்றியும், புரட்சியின் பாதை நீண்ட யுத்தம் பற்றிய கோட்பாடுகளிலும், சீனா சோசலிச நாடா, முதலாளித்துவ நாடா ஆகிய பிரச்சினைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்.

ஆ) நடைமுறைப் பிரச்சினையில் போர்க்குணமிக்க பொருளாதாரப் போராட்டமே வர்க்கப் போராட்டம் என்ற நிலைப்பாடுகளும், தேர்தலில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற நிலைப்பாடுகளிலும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் பிளவுகளாக மாறுகின்றன.
நாம் பங்கேற்ற மக்கள் யுத்தக் குழு பிளவுப்பட்டதற்கான காரணம், அதன் ஐக்கியத்திலேயே உள்ளது. மக்கள் யுத்தக் குழு 1970 - திட்டத்தை ஏற்றதோடு அன்றாட நலன்களுக்கான பொருளாதாரப் போராட்டங்களையே ஆயுதப் போராட்டமாக மாற்றுவது என்ற போர்க்குணம்மிக்க பொருளாதாரப் போராட்டங்கள் என்ற தன்னியல்பு செயல்தந்திரத்தின் அடிப்படையில்தான் ஒன்றிணைந்தது. பின்னர் மத்தியக் கமிட்டியில் இருந்த பெரும்பான்மையான தோழர்கள் கட்சியின் வழி தன்னியல்பானது என்றும், போர்க்குணம்மிக்க பொருளாதாரவாதம் என்றும் விமர்சித்து திட்டவகை செயல்தந்திரத்தின் அடிப்படையில் அறிக்கையை முன்வைத்தனர். திட்டம் பற்றியும், போர்தந்திரம் செயல்தந்திரம் பற்றியும் பெரும்பான்மையினர் ஒரு ஆவணத்தை முன்வைத்தனர். ஆனால் இந்த ஆவணத்தை கொண்டபள்ளி சீதாராமையா தலைமையிலான மத்தியக்கமிட்டி ஏற்க மறுத்ததோடு கட்சியை மேலிருந்து பிளவுபடுத்தியது. இவ்வாறு போர்தந்திர செயல்தந்திரப் பிரச்சினகளில் ஏற்பட்ட முரண்பாடுகளால் மக்கள் யுத்தக் குழு பிளவுபட்டது.

2. கனுசன்யாலின் ஐக்கியத்திற்கான முயற்சிகள்

கனுசன்யால் தனது வலது சந்தர்ப்பவாத வழியிலிருந்து ஒரு அகில இந்திய கட்சியை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 1979-ல் சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு கனுசன்யால் மேற்கொண்ட ஐக்கியத்திற்கான முயற்சிகள் பற்றி கனுசன்யால் கலங்கரை விளக்கம் என்ற கட்டுரையில் சுபோத் மித்ரா பின்வருமாறு கூறுகிறார்:

“1979-ல் சிறையிலிருந்து வெளிவந்தபிறகு கனுசன்யால் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை இணைப்பதற்கு முயற்சிகள் எடுத்தார். அதன் முதற்படியாக 1981-ல் ஒ.சி.சி.ஆர். (Organisation Committee for Communist Revolutionaries) உருவாக்குவதில் முடிந்தது.

அகில இந்திய அளவில் கேரளாவின் கே.பி.ஆர்., எம்.கிருஷ்ணப்பா மற்றும் சத்யநாராயண் சின்ஹா ஆகியோருடன் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கினார். ஆனால் அது நீடிக்கவில்லை. அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

பின்னர் கனுசன்யால் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட ஒ.சி.சி.ஆர். (OCCR), சுபோத் மித்ராவால் தலைமைதாங்கப்பட்ட யு.சி.சி.ஆர்.ஐ (எம்.எல்.) UCCRI (ML), உமாதர் சிங் தலைமையிலான சி.ஒ.சி. சி.பி.ஐ. (எம்.எல்.) COC CPI (ML), கைமூராங்கே, எம்.எச்.கிருஷ்ணப்பாவால் தலைமைதாங்கப்பட்ட ஐ.சி.பி. (ICP)  மற்றும் சபுஜ்சென் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆகியவை ஒன்றிணைவது என்று முடிவு செய்தன. 1985,மே-24ல் நடந்த ஐக்கியத்திற்கான மாநாட்டில் கனுசன்யாலை பொதுச் செயலாளராகக் கொண்டு சி.ஒ.ஐ.(எம்.எல்.) COI (ML) உருவாக்கப்பட்டது.

பின்னர் 2003-ல் மூன்று அகில இந்தியக் குழுக்களான சி.ஒ.ஐ (எம்.எல்), சி.பி.ஐ.யு (எம்.எல்.) மற்றும் சி.பி.ஐ (எம்.எல்.) ஐக்கியம் ஆகியவை ஒன்றிணைந்து கனுசன்யால் தலைமையில் சி.பி.ஐ (எம்.எல்.) உருவானது. அதே நேரத்தில் கேரளாவை ஆதாரமாகக் கொண்ட கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலான சி.பி.ஐ (எம்.எல்.) செங்கொடி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தன.

பேச்சுவார்த்தையின் இறுதியில் 2005-ல் விஜயவாடா ஐக்கிய மாநாட்டில் சி.பி.ஐ (எம்.எல்)-ம், சி.பி.ஐ.(எம்.எல்) செங்கொடியும் இணைந்து கனுசன்யால் தலைமையில் சி.பி.ஐ. (எம்.எல்.) உருவானது” என்று கூறுகிறார்.

ஆனால் அந்தக் கட்சி 2009ல் மூன்றாக உடைந்தது. கனுசன்யால் தலைமையிலான சி.பி.ஐ (எம்.எல்.), கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலான சி.பி.ஐ.(எம்.எல்.) என இரண்டாகப் பிளவுபட்டது மட்டுமல்ல கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலான செங்கொடி குழுவின் கேரளப் பிரிவு ஜெயக்குமார் தலைமையில் தனியாகப் பிரிந்து இயங்க ஆரம்பித்தது.

சி.பி.ஐ.(எம்.எல்.) கட்சி உருவானது பற்றியும், அவர்கள் எந்த அடிப்படையில் ஐக்கியப்பட்டார்கள் என்பதையும் அக்கட்சியின் ‘கம்யூனிஸ்ட்’ பத்திரிகையில் பின்வருமாறு கூறுகின்றனர்:
கட்சித் திட்டம் குறித்த வரையறைகள், கட்சி அமைப்பு விதிகள், அரசியல் தீர்மானம் குறித்து இரண்டு அமைப்புகளின் கூட்டுக் கமிட்டியின் நீண்ட விவாதத்தின் மூலம் ஒரே அமைப்பாக மாறுவது என்பதை ஒற்றுமை மாநாடு ஏற்றுக்கொண்டது. ஆனால் நான்கு முக்கியப் பிரச்சினைகளில் அதாவது 1967-முதல் 1972-வரையிலான கட்சியின் வரலாறு பற்றிய மதிப்பீடு, இந்திய அரசின் பண்பு, முதன்மை முரண்பாடு மற்றும் புரட்சியின் பாதை போன்ற பிரச்சினைகளில் ஒத்தக் கருத்தை எட்ட முடியவில்லை. இந்த நான்கு அடிப்படையான பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டாலும் அவைகளை ஐக்கியத் தீர்மானம் மற்றும் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையிலான புரட்சிகர நடைமுறையில் முன்னேறுவதன் மூலமாகத் தீர்க்க முடியும் என்ற தொலை நோக்குப் பார்வையிலிருந்து துணிந்து முடிவெடுத்ததாகக் கூறுகின்றனர்.
மேலும் அடிப்படைப் பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துக்களை விவாதித்து தீர்வுகண்டு ஒற்றுமை காண்பதற்குப் பதிலாக முரண்பாட்டுடன் ஐக்கியப்பட்டதை பின்வருமாறு நியாயப்படுத்துகின்றனர். சி.பி.ஐ.(எம்.எல்.)-ன் சிறப்பு மாநாட்டிற்காக இராமச்சந்திரன் குழுவினர் முன்வைத்த ஆவணத்தில் இந்த ஐக்கியம் பற்றி பின்வருமாறு நியாயப்படுத்தப்படுகிறது :

“ஒரு புறத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை தீவிரப்படுத்திக்கொண்டும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு யுத்ததந்திர ரீதியான அடிமைத்தனத்தை பலப்படுத்துகின்ற ஒப்பந்தத்தில் கையப்பமிட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கத்திற்கு சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணி முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தது. இது சோசலிச பொய் கோஷத்தின் கீழ் ஆளும் வர்க்கக் கொள்கைகளுக்கு முற்றாக சீரழிந்து போனதை அம்பலப்படுத்தியது. சி.பி.எம். லிபரேசன் குழுவானது வலது சந்தர்ப்பவாத நிலைக்கு வேகமாக விலகிச் சென்றது. இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த “காலனிய ஒழிப்பு” கொள்கைகளானது இத்தகைய நாடுகள் (இந்தியா போன்ற) ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்துவிட்டதாகவும், சோசலிசப் புரட்சியின் கட்டத்தில் இருக்கக்கூடிய முதலாளித்துவ நாடுகளாக விளக்கம் கொடுத்து வந்த விளிம்பு நிலைக் குழுக்கள் சீர்திருத்தத்திற்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சித்தாந்தத்திற்கும் சென்று சிதைந்து போனது. “எதிர்ப்பு வழியை” அடிப்படையாகக் கொண்ட நீண்ட மக்கள் யுத்தத்தை பரிந்துரைத்த சி.பி.ஐ (எம்.எல்.) புதிய ஜனநாயகம் போன்ற அமைப்புகள்”எதிர்ப்புப் போராட்டத்தை” வளர்ப்பதோ அல்லது வெகுஜன வழியை வளர்ப்பதோ கடினமானது இல்லை என்று கண்டனர். அவ்வமைப்புகள் குறுங்குழுவாத நிலைகளுக்கும், வலது விலகல்களுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தனர். மறு புறத்தில் சி.பி.ஐ (எம்.எல்) மக்கள் யுத்தமானது சி.பி.ஐ (எம்.எல்.) கட்சி ஒற்றுமையுடனும், பிறகு எம்.சி.சி. யுடனும் இணைந்து சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தை உருவாக்கியது. வெறும் படைக்குழு நடவடிக்கைகளாகக் குறுக்கிக்கொண்டது. இவ்வாறு இந்த அமைப்புகளில் எதுவும் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற, ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கிற மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு நாடுதழுவிய வெகுஜன இயக்கங்கள் மற்றும் எழுச்சிகளை எடுத்துச் செல்லும் நிலையில் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் ஐக்கியப்பட்ட சி.பி.ஐ.(எம்.எல்.)-ன் உருவாக்கத்தை நோக்கி இட்டுச் சென்ற விஜயவாடா ஒற்றுமை மாநாடானது ஒரு இனக்குறிப்பான முன்னோடி நடவடிக்கையாகும் என்று கூறுகிறது. அதுவும் மா.லெ. சக்திகள் ஒற்றுமை குறித்து பிடிகொடுக்காமல் தப்பித்துக் கொள்ளும் இன்றைய சூழலில் அடிப்படைப் பிரச்சினைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் ஒன்றுபடுவது என்ற முடிவு துணிச்சலானது என்று கூறினர். கோட்பாடற்ற ஐக்கியத்தை நியாயப்படுத்தினர்.
அடிப்படை நிலைப்பாடுகளில் உடன்பாடு இல்லாமல் ஐக்கியப்படுவது என்பது சந்தர்ப்பவாதம் என்பதும், அது பிளவில்தான் முடியும் என்பதும் இவ்விரு அமைப்புகளும் அறியாததல்ல. அத்துடன் அது ஒன்றும் புதிய முயற்சியோ அல்லது துணிச்சலான முடிவோ அல்ல. ஏற்கனவே சி.ஆர்.சி. செங்கொடியிலிருந்து தோழர் ரவூப் வெளியேற்றப்பட்டபோது, செங்கொடி அமைப்பின் அடிப்படை நிலைப்பாடுகளை கேள்வி எழுப்புகிறார் என்ற காரணத்திற்காகத்தான் அவரை வெளியேற்றியது. எந்த நிலைப்பாடுகளைச் சொல்லி 1998-ல் ரவூஃப் வெளியேற்றப்பட்டாரோ அதே நிலைப்பாடுகளை உடைய கனுசன்யால் கட்சியுடன் 2005-ல் ஐக்கியப்பட்டது கேடுகெட்ட சந்தர்ப்பவாதமே ஒழிய துணிச்சலான நடவடிக்கை அல்ல. இந்த சந்தர்ப்பவாதத்தை மூடி மறைப்பதற்காகத்தான் மேற்கண்டவாறு சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அணிகளை ஏமாற்றினர்.

3. சி.ஆர்.சி. யிலிருந்து ரவூஃப் வெளியேற்றப்படுவதற்கான காரணம்

1979-ல் ஆந்திராவின் எ.பி.ஆர்.ஒ.சி (கிறிஸிளிசி)-யும், கேரள மாநிலக் கமிட்டியும் இணைந்து கீழ்க்கண்ட நிலைப்பாடுகளின் அடிப்படையில் சி.ஆர்.சி (சிஸிசி) என்ற பேரில் அமைப்பு உருவாக்கப்பட்டது.

i) மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் மிகப்பெரிய படிப்பினைகளை உள்ளடக்கிய மாவோ சிந்தனையை உயர்த்திப்பிடிப்பது.

ii) சீனாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய, வர்க்க ஒத்துழைப்புக் கொள்கை கொண்ட மூன்றுலகக் கோட்பாட்டை முன்வைத்த எதிர்ப்புரட்சியாளர் டெங்சியோபிங் கும்பலை எதிர்ப்பது.

iii) சர்வதேசக் கம்யூனிச இயக்கத்திற்கு துரோகம் இழைத்த புதிய டிராட்ஸ்கிய அல்பேனிய தலைமையை எதிர்ப்பது.

iv) சாருவின் பாட்டாளிவர்க்க புரட்சிகர வழியை உயர்த்திப்பிடிப்பது.

v) ஆயுதப் போராட்டத்தை முதன்மையான போராட்ட வடிவமாக நடைமுறைப்படுத்துதல், பிற போராட்ட வடிவங்கள் அனைத்தும் அப்போராட்டத்தை நிறைவு செய்வதாக இருக்கவேண்டும்.
ஆனால் மேற்கண்ட ஏற்கப்பட்ட நிலைப்பாடுகளுக்கு எதிராக சி.ஆர்.சி. செங்கொடி வலது சந்தர்ப்பவாதத்தை நோக்கி செல்கிறது என்று கூறி பின்னாளில் ஆந்திராவைச் சேர்ந்த தோழர் ரவூஃப் உட்கட்சிப் போராட்டத்தைத் துவக்கினார். சி.ஆர்.சி. நிலைப்பாட்டின் மீது தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

அவை பின்வருமாறு:

அ) அரசியலதிகாரத்தைப் பகுதிபகுதியாகக் கைப்பற்றுவது என்ற நீண்ட யுத்தப் பாதையை கைவிட்டுவிட்டது.
ஆ) முதன்மையான முரண்பாட்டை தீர்மானிக்க மறுத்தது.
இ) ஆயுதப் போராட்டம் மற்றும் மக்கள் படை அமைப்பதற்கான செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது.
ஈ) தேர்தல் புறக்கணிப்பை ஆரம்பத்திலிருந்தே கைவிட்டு தேர்தல் பங்கேற்பை வலியுறுத்தியது.
உ) தேசிய இனப்பிரச்சினை குறித்த திட்டம் இல்லாதது.
போன்ற கேள்விகளை எழுப்பினார்.
முதன்மை முரண்பாடான நிலப்பிரபுத்துவத்திற்குப் பரந்துபட்ட மக்களுக்குமான முரண்பாட்டைக் கைவிடுவது குறித்தும், இரகசியக் கட்சி மற்றும் தலைமறைவு அமைப்பை கைவிடுதல் பற்றி எந்தவிதமான ஆவணமோ, விவாதமோ இல்லை. மற்றொரு வகையில் அனைத்துப் போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவது என்ற பேரில் தேர்தலில் பங்குபெறத் தீர்மானித்துவிட்டது. சி.ஆர்.சி. தலைமையானது மென்மேலும் வலது போக்கிற்குள் மூழ்கி விட்டது என்று விமர்சித்தார். சி.ஆர்.சி. தலைமையானது இவ்வாறு 1979-ன் கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறி உட்கட்சி போராட்டத்தை துவக்கினார்.

4) சி.ஆர்.சி.-யிலிருந்து ரவூஃப் வெளியேற்றப்படுதல்

கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலானவர்கள் ரவூஃப் மீது பின்வரும் விமர்சனங்களை வைத்தனர். அனைத்துப் பிரச்சினையிலும் ரவூஃப் மற்றும் ஆந்திர குழுவினர் மாறுபட்ட தத்துவ அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தனர். அமைப்பு தனது தத்துவ-அரசியல் அமைப்பு வழியை தொடர்ச்சியாக வளர்த்துக்கொண்டு வந்தாலும், அரசியலமைப்பு மத்தியத்துவத்தை படிப்படியாக சாதித்து வந்தாலும் ஆந்திராவில் அமைப்புச் செயல்பாடுகளை அதிகரிக்க அமைப்பால் முன்வைக்கப்பட்ட மையப் பிரச்சினைகளிலும் அமைப்பைப் பலப்படுத்தும் பணிகளிலும் தனது ஈடுபாட்டைக் காட்ட மறுத்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்தியாவின் சமூகப் - பொருளியல் வளர்ச்சி பற்றிய ஸ்தூலமான ஆய்வு, 1982முதல் மாநாட்டைத் தொடர்ந்து சி.ஆர்.சி. யால் மேற்கொள்ளப்பட்டது; இக்கட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட புதிய காலனிய மாற்றங்களை விளக்கும் பொருட்டு அகில இந்தியப் பொருளாதார ஆய்வு முன்வைக்கப்பட்டபோது, மற்றும் இப்பிரச்சனைகள் குறித்த விவாதிக்க 1984ல் அகில இந்திய ஆய்வு முகாம் திட்டமிடப்பட்டபோது, இந்த வேறுபாடுகள் மேலும் தெளிவாக வெளிப்பட்டன. அனால் ரவூஃப்“இருவழிப் போராட்டம்” என்ற பெயரில் தற்போது தனது தத்துவ அரசியல் அமைப்பு நிலைப்பாடுகளையே எந்திரத்தனமாக கடந்தகாலத்தில் அவர் தொடர்ந்து செய்ததைப் போலவே மீண்டும் செய்கிறார்.
1997-நான்காவது அகில இந்திய மாநாட்டில் கட்சி அமைப்பு, கட்சித் திட்டம் மற்றும் சர்வதேச வழியிலும், பாட்டாளிவர்க்க கட்சியாக மாற்றியமைப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னோக்கிய வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதை ரவூஃப் அங்கீகரிக்க மறுக்கிறார். மேலும் மறுசீரமைப்பு வேலைகள் துவங்கிய காலத்திலிருந்து முன்வைத்துவரும் தனது நிலைப்பாடுகளையே வைக்கிறார் என குற்றம் சுமத்தினர். அதாவது இந்தியா புதிய காலனிய நாடு என்றும், முதன்மை முரண்பாடு நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமானது அல்ல என்ற நிலைப்பாட்டையும், நீண்ட யுத்தப்பாதை என்ற புரட்சிப்பாதை பொருந்தாது, வெளிப்படையான கட்சி என்ற அவர்களுடைய நிலைப்பாடுகளுக்கு எதிராக பழைய தனது நிலைப்பாடுகளையே வைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினர். இவ்வாறு இக்காலக் கட்டத்தின் செக்டேரியனிச விலகல்களிலிருந்து எந்த ஒரு சீரமைப்பிற்கும் எதிராக”மதிற்சுவர் எழுப்புகிறார்” என்று குற்றம் சுமத்தியது. அதாவது இந்தியா அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்பதையும், நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாடு பிரதான முரண்பாடு என்பதையும், நீண்ட மக்கள் யுத்தபாதை என்ற நிலைப்பாட்டையும் செக்டேரியனிசம் என்று கூறி சி.ஆர்.சி.யிலிருந்து ரவூஃப்பை இராமச்சந்திரன் குழுவினர் வெளியேற்றினர். ஆனால் 2005-ல் அதே நிலைப்பாடுகளைக் கொண்ட கனுசன்யால் தலைமையிலான சி.பி.ஐ (எம்.எல்.) உடன் ஐக்கியப்பட்டது துணிச்சலான முடிவு என்பது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல அது ஒரு மோசடியுமாகும்.

5) சி.பி.ஐ. (எம்.எல்) பிளவுக்கான காரணம்

சி.பி.ஐ(எம்.எல்.) பிளவுபடுவதற்கான காரணத்தை அக்கட்சியின் சிறப்பு மாநாட்டிற்காக செங்கொடி அமைப்பின் சார்பாக கே.என்.ராமச்சந்திரனால் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்பு அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
கனுசன்யால் தலைமையிலான சி.பி.ஐ(எம்.எல்.)-2003 தலைமையானது சாருமஜூம்தாரை வெறுத்த போதிலும் யாந்திரீகமாக நீண்ட மக்கள் யுத்த பாதை என்கிற சீனப்பாதையை பற்றிக் கொண்டிருந்தனர். மேலும் அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு என்கிற அணுகுமுறையின் விளைவாக பகுதிபகுதியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற கருத்திலேயும் இருந்தனர். அதாவது இந்திய அரசின் பண்பு, முதன்மை முரண்பாடு, புரட்சியின் பாதை பற்றிய தங்களுடைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துகிறது.

மேலும் கனுசன்யால் தலைமையிலான முந்தைய சி.பி.ஐ (எம்.எல்.)-2003 தரப்பினரும், ராமச்சந்திரன் தலைமையிலான செங்கொடி தரப்பினரும் இந்திய அரசின் பண்பு, முதன்மை முரண்பாடு, புரட்சியின் பாதை குறித்த தத்தமது நிலைப்பாடுகளை ஆவணங்களாக முன்வைத்து 2009-நவம்பருக்குள் மாநாடு நடத்தித் தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது. முந்தைய சி.பி.ஐ.(எம்.எல்.) செங்கொடியின் கண்ணோட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்திய நகல்களின் ஒரு பிரதி மட்டுமே வரையறுத்த காலத்திற்குள் வைக்கப்பட்டது. அதாவது புதியகாலனி, நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மையான முரண்பாடு என்பதற்கு மறுப்பு, நீண்ட யுத்தப் பாதைக்கு மறுப்பு அடிப்படையில் அந்த அறிக்கை முன்வைக்கப்பட்டது. இறுதியாக டிசம்பர் 2008-ல் சுபோத் மித்ரா, விஸ்வம் போன்றவர்களின் நகல் அறிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதாவது அரைக்காலனி அரை நிலப்பிரபுத்துவம், நீண்ட யுத்த பாதை, நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்ற அடிப்படையில் இந்த அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு நகல் அறிக்கைகளும் வேறுபட்ட நிலைப்பாடுகளை முன்வைப்பதால் ஒரு கூட்டு ஆவணத்தை வைக்கமுடியாத நிலை உருவானது. முந்தைய செங்கொடி தரப்பினர் அனைத்து ஆவணங்களையும் “வழிகாட்டியில்” வெளியிட்டு இருவழிப் போராட்டத்தின் மூலம் விவாதம் நடத்தி தீர்வுகாணவேண்டும். மாநாட்டிற்கான தயாரிப்பு செய்ய வேண்டும் என்றும் அதன் போக்கில் கூட்டு நகல்களுக்கான சாத்தியப்பாடு கோரப்பட முடியும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் முந்தைய மத்தியக் கமிட்டியின் தீர்மானத்தின் அடிப்படையிலான இந்தப் பிரேரணைகள் முந்தைய சி.பி.ஐ (எம்.எல்.)2003-ஐ சேர்ந்த மத்தியக் கமிட்டி உறுப்பினர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்த நகல்கள் அவர்களுடைய கண்ணோட்டத்தின் பிரகாரம் ஒற்றுமை மாநாட்டின் வழிக்கு எதிராகச் சென்றதனால் அவைகள் வெளியிடப்பட முடியாது மற்றும் அவைகளை மறுபடியும் நகல் எடுக்கக் கோரப்பட முடியாதென்ற நிலைப்பாட்டை எடுத்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் கனுசன்யால் எந்த சமரசமும் இந்நகல்கள் சம்பந்தமாக சாத்தியமில்லை ஆதலால் நட்பு ரீதியாக பிரிந்து போகலாம் என்று ஃபேக்ஸ் மூலம் பதிலளித்தார். இதன் தொடர்ச்சியாக அக்கட்சி பிளவுபட்டது.

இவ்வாறு சி.பி.ஐ.(எம்.எல்.) கட்சி என்பது இந்தியப் புரட்சி குறித்த அடிப்படை நிலைப்பாடுகளில் எதிரெதிரான மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டவர்கள் ஒன்றிணைந்த காரணத்தால்தான் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் துவங்கின. இந்த அடிப்படை முரண்பாடுகளின் காரணமாகத்தான் தொழிற்சங்கங்களை ஒரே அமைப்பாக்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பது; அரசியல் பிரச்சாரங்கள், பாராளுமன்றப் பேரணிகளில் கூட ஒன்றுபட்ட செயல்பாட்டிற்கு ஒத்துழைக்க மறுத்தல், தேர்தலில் பங்கேற்பதற்கு ஒத்துழைக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்தது, சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதையும், பிற அமைப்புகளோடு ஒற்றுமைக்கான முயற்சிகளை சந்தேகத்துடன் பார்ப்பது என ஒரு பிரச்சினையிலும் கூட இணைந்து செயல்பட முடியாமல் போனது.

தொகுத்துக் கூறினால் கனுசன்யால் எடுத்த ஐக்கியத்திற்கான முயற்சிகள் என்பது படுதோல்வி அடைந்துவிட்டன. கனுசன்யாலின் கோட்பாடற்ற ஐக்கியம் என்ற சந்தர்ப்பவாதத்தின் காரணமாகவே இரண்டு ஐக்கியம் மூன்று பிளவுகள் என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் கோட்பாடற்ற ஐக்கியம், அடிப்படை நிலைப்பாடுகளில் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை ஒரே அமைப்பில் கொண்டுவருவது என்பது சந்தர்ப்பவாதம்மட்டுமல்ல அது ஒரு கதம்பவாதமுமாகும். சந்தர்ப்பவாதமும், கதம்பவாதமும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை ஒன்றுபடுத்தப் பயன்படாது. மென்மேலும் பிளவுகளுக்கே வழிவகுக்கும்.

கோட்பாடற்ற ஐக்கியம், கொள்கைகளை விட்டுக்கொடுத்து ஐக்கியம் என்பது பிளவுக்கே வழிவகுக்கும் என்பதை மார்க்ஸ், எங்கல்ஸ் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு எழுதிய பின்வரும் கடிதம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

“1875-ல் சமூக ஜனநாயகக் கட்சி, கொள்கையை விட்டுக்கொடுத்து, லசாவியர்களோடு கூட்டுச் சேர்ந்ததையும், அதன் விளைவாக உருவான”கோத்தா”வேலைத் திட்டத்தையும் மார்க்சும், எங்கல்சும் விமர்சித்தார்கள். இந்த ஒற்றுமை ‘மிக அதிக விலைகொடுத்து பெறப்பட்டது’ என்றும், “கோத்தா வேலைத்திட்டம் கட்சியை நிலைகுலையச் செய்யும் ஆட்சேபனைக்குரிய திட்டம்” என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். எங்கல்ஸ், “இது ஜெர்மன் சோசலிசப் பாட்டாளிவர்க்கம் முழுவதும் லசாவியர்கள் முன் மண்டியிடும் செயல் ஆகும்” என்றார். “இந்த அடிப்படையில் உருவாகும் ஒற்றுமை ஒரு வருடம் கூட நிலைக்காது என நான் நம்புகிறேன்” என்றும் அவர் கூறினார்.

மார்க்ஸ் கோத்தா வேலைத் திட்டத்தை விமர்சனம் செய்தபோது மார்க்சிய வாதிகளுக்கு “கோட்பாடுகள் பற்றிய விசயங்களில் எவ்வித ஊசலாட்டமும் இருக்கக் கூடாது” என்ற புகழ்மிக்க கோட்பாட்டை முன்வைத்தார்.

மேற்கண்ட மார்க்ஸ், எங்கல்சின் கோட்பாடற்ற ஐக்கியம் பற்றிய விமர்சனம் கே.என்.ராமச்சந்திரன் மற்றும் கனுசன்யால் குழுவினருக்கும் பொருந்தக் கூடியதே. அரசியல் நிலைப்பாட்டில் வலது சந்தர்ப்பவாதம், கட்சி ஐக்கியம் பற்றிய பிரச்சினையில் கோட்பாடற்ற சந்தர்ப்பவாதம் மற்றும் கதம்பவாதம் ஆகிய இவர்களின் நிலைப்பாடுகள்தான் ஐக்கியத்திற்கான முயற்சிகள் அனைத்தும் பிளவுகளாக மாறுவதற்கு காரணங்களாகும். கோட்பாடற்ற ஐக்கியத்தின் மூலம் சோர்ந்து கிடக்கும் அணிகளை ஐக்கியம் பற்றி பேசி ஏமாற்றவும், ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு ஆள்பிடிக்கும் நோக்கத்தில்தான் இவர்கள் ஐக்கியம் பற்றிய பிரச்சினையைக் கையாள்கிறார்கள். அரசியல் தத்துவப் போராட்டத்தை சிறுமைப்படுத்துகிறார்கள்.

ஒரு கட்சியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனுசன்யால் கட்சிக்கு சித்தாந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தலைமைதாங்குகிற பணியை புறக்கணித்து அவருடைய கிராமத்தில் இருந்துகொண்டு ஒரு சிறிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கு வழிகாட்டுகிற பல பத்தாண்டு நீண்ட நடைமுறையோடு ஒட்டிக் கொண்டிருந்தார் என்ற ராமச்சந்திரன் குழுவினரின் விமர்சனமும்; 5-வது மாநாட்டு ஆவணங்களின் வெளிச்சத்தில் கனுசன்யால் குழுவுடனான ஐக்கியம் பற்றிய வினாவிற்கான விபரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கே.என்.ராமச்சந்திரன் அவர்களின் பிளவுவாத நிலைப்பாட்டின் அரசியல் ஓட்டாண்டித்தனம் தெரியும் என்ற செங்கொடியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் ஜெயக்குமாரின் விமர்சனமும் இவர்களின் தலைமை முறையை புரிந்துகொள்ளப் போதுமானது.

6. கனுசன்யாலின் சந்தர்ப்பவாத வழியில் தமிழகத்தில் சி.பி.ஐ (எம்.எல்.) உருவாக்கம்

கனுசன்யால் கடைப்பிடித்த வலது சந்தர்ப்பவாத வழியும், கோட்பாடற்ற ஐக்கியத்திற்கான முயற்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. ஆனால் இந்த அனுபவத்திற்குப் பின்னரும் கூட அக்கட்சி எந்தப் பாடத்தையும் கற்கவில்லை. தமிழகத்தில் அதே பொருளாதாரவாத, தொழிற்சங்கவாத மற்றும் பாராளுமன்றவாத வழியில் கோட்பாடற்ற சந்தர்ப்பவாத, கதம்பவாத அடிப்படையில் கட்சியை கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. கொள்கை கோட்பாடற்ற உதிரி விந்தை வேந்தனை தலைவராகவும், பச்சோந்தி ஈஸ்வரனை தரகராகவும் கொண்டு நமது அமைப்பிலிருந்து வெளியேறிய கலைப்புவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இணைத்துக் கொண்டு கட்சி கட்டுவது என்பது கோட்பாடற்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமேயாகும். கனுசன்யால் குழுவினர் முன்வைக்கும் பொருளாதாரவாதம், தொழிற்சங்கவாதம், பாராளுமன்ற வாதம் போன்ற நிலைப்பாடுகளுடன் இவர்கள் முழுமையான உடன்பாடு கொண்டவர்கள் அல்ல. இப்படி முரண்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டு கட்சி கட்டுவதைத்தான் கோட்பாடற்ற ஐக்கியம் என்றும் கூறுகிறோம்.

நமது அமைப்பிலிருந்து வெளியேறிய கலைப்புவாதிகளையும், பிழைப்பு வாதிகளையும் அவர்கள் எதனடிப்படையில் இணைத்துக்கொண்டார்கள் என்று அவர்கள் கூறவில்லை. இவர்களும் எதனடிப்படையில் இணைந்தார்கள் என்று எந்த அறிக்கையையும் வெளியிடவுமில்லை. கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாததால் வெளியேறினோம் என்று கூறுகிறார்கள். உண்மையில் இவர்கள் ஜனநாயகத்தின் போர்வையில் தங்களது கலைப்புவாத மற்றும் பிழைப்புவாதப் போக்குகளை மூடி மறைத்துக் கொள்ளுகின்றனர்.

1988-சிறப்புக்கூட்டம் முடிவடைந்த பிறகு சோவியத் சமூக ஏகாதிபத்தியம் சிதறுண்டு போனது. இந்தக் கலைப்புவாதப் போக்கு அமைப்பில் கடுமையான அதிருப்தியையும், சோர்வையும் ஏற்படுத்தியது. பத்திரிகைக் குழுவில் ஆசிரியர் பொறுப்பிலிருந்தவர் நம்பிக்கை இழந்து கட்சியை விட்டு வெளியேறினார்.

அதே சமயம் அந்தோணிசாமி மார்க்ஸ் கும்பல் கட்சியை பிளவுபடுத்தி வெளியேறி நிறப்பிரிகை, மக்கள் கல்வி இயக்கங்களைத் துவக்கி கலைப்புவாத கருத்துகளை பிரச்சாரம் செய்தது. மார்க்சியம் பொய்த்துவிட்டது கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று கட்சியின் மீது தாக்குதல் நடத்தியது. புதிய இடது, பின் நவீனத்துவக் கருத்துகளை முன்வைத்தது.
 அம்பேத்காரிய, பெரியாரிய கருத்துகளுடன் அடையாள அரசியலை முன்வைத்து கட்சி மீது தாக்குதல் தொடுத்தது. கோவை சிவா மூலம் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விடியல் பதிப்பகம் துவங்கி கட்சிக்குள் ஊடுருவ முயற்சிசெய்தது.
சித்தானந்தன் கலைப்புவாதத்திற்கு பலியாகி கோவை சிவாவின் உதவியோடும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் கலைப்புவாத நோக்கத்தோடு சேலத்தில் அகிலம் புத்தகக் கடையை திறந்தார். தொண்டு நிறுவனங்களின் கலைப்புவாத அரசியலையும், அம்பேத்காரிய பெரியாரிய கருத்துகளையும் பிரச்சாரம் செய்யும் நோக்கத்துடன்தான் அக்கடை திறக்கப்பட்டது. அதை அனுமதிக்க மறுத்ததால் எதிரியிடம் சரணடைந்து அமைப்பைவிட்டு வெளியேறினார். சேலம் செல்வராஜ் இந்தக் கலைப்புவாதத்திற்கு ஒத்தூதி வெளியேறினார்.

கட்சி செயலாளர் பொறுப்பில் இருந்த தமிழ்வாணன் ஆரம்பத்திலிருந்தே தனது பாலியல் சீரழிவின் காரணமாக எல்லாவிதமான பிற்போக்கான கருத்துகளையும் எதிர்த்துப் போராட முடியாமல் மௌனியாகிக் கிடந்தார். அமைப்பில் உருவான எல்லா சீரழிவுகளுடனும் கைகோர்த்து செயல்பட்டார். தன் மீதான பாலியல் சீரழிவுகளுக்கு சுயவிமர்சனமாக வரமறுத்து அமைப்பை விட்டு வெளியேறினார். கலைப்புவாதிகளோடு கரம் கோர்த்தார்.

மாநில குழு உறுப்பினர்களான ஏலகிரி இராமனும் பாரதியும் 88-சிறப்புக்கூட்டத்திற்கு முன்பே 70-திட்டம் அடிப்படையில் சரியில்லை என்றவாதத்தை முன்வைத்தனர். பெரும்பான்மையினர் முன் வைத்த போர்தந்திர செயல் தந்திர ஆவணங்களை விவாதிப்பதற்கும் மறுத்தனர். மாற்று நிலைப்பாடு இருந்தால் எழுதி வையுங்கள் என்று கோரியபோது இராமனைப் பொறுத்தவரை எழுத்துப் பூர்வமாக எதையும் வைக்கத் தயாரில்லை. அதற்கு அவர் கூறிய காரணம், நீங்கள் அந்த ஆவணங்களைத் தயாரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் அதேபோல்தான் எனக்கும் அவாளவு காலம் தேவைப்படுகிறது என்று வாதிட்டார். மேலும் திட்டம் இதுவரை போதிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.
சித்தாந்த அரசியல் அடிப்படையில் திட்டம் தயாரிப்பதற்கான பயிற்சி பெறுவதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்பது உண்மை. ஆனால் கட்சியின் எல்லா உறுப்பினர்களும் திட்டத்தை வரைவதற்கோ, விளக்கம் கொடுப்பதற்கோ ஆற்றலைப் பெறுவதற்கு சாத்தியமில்லை. அத்துடன் ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கான தகுதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதானே தவிர திட்டத்தை வரையும் அளவுக்கு சித்தாந்த வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. எல்லா உறுப்பினர்களும் திட்டத்தை வரைவதற்கான தகுதி பெற்ற பிறகுதான் கட்சியின் திட்டத்தை விவாதித்து தீர்வுகாண்பது என்பது கற்பனாவாதமே. அது நடைமுறை சாத்தியமானது அல்ல.
இருப்பினும் பிடிவாதமாக இராமன் அந்த நிலைப்பாட்டையே மேற்கொண்டிருந்தார். இதுநாள்வரை கட்சி அணிகள் வரையில் திட்டம் போதிக்கப்படாததன் காரணமாக, அதுபற்றி போதனை கொடுத்து தீர்வுகாண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து கட்சியின் 88 ஆம் ஆண்டு சிறப்புக்கூட்டம் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட கட்சி உறுப்பினராக இருக்கலாம் என்றும் ஜனநாயக மத்தியத்துவத்தை வரம்புக்குட்படுத்துவது என்றும் தீர்மானித்தது. ஆனால் ஏலகிரி இராமனோ சில மாதங்கள் கழிந்த பின்பு திட்டம் அடிப்படையில் சரி என்பதை தான் உணர்ந்து விட்டதாக கூறினார். தற்போது கட்சியைவிட்டு வெளியேறியபின் போல்ஷ்விக் கட்சிக்கு திட்டம் இல்லை என்று சந்தர்ப்பவாதமாகப் பிரச்சாரம் செய்கிறார்.

 மேலும் இராமன், கட்சித் தோழர்களிடம் அமைப்புக்குத் தெரியாமல் பணம் வசூல் செய்து நிலம் வாங்கி விவசாயம் செய்தார். கட்சியின் முழுநேர ஊழியர் என்று கூறிக்கொண்டு கட்சி வேலையைச் செய்யாமல், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குமேல் தான் வாங்கிய நிலத்தில் தனக்காக உழைத்தார், இத்தகைய பிழைப்புவாதத்திற்கு சுயவிமர்சனமாக வரமறுத்து அமைப்பைவிட்டு வெளியேறினார்.

குணாளன் கட்சித் தோழர் ஒருவரிடமிருந்து எட்டு சவரன் நகையை கறந்து தனது மகளுக்கு வரதட்சிணை கொடுத்து நடத்திய பிற்போக்குத் திருமணத்தையே புரட்சிகரத் திருமணம் என்று கூறி அணிகளை ஏமாற்றினார். அதற்கு சுயவிமர்சனம் செய்துகொள்ள மறுத்தார். குட்டிமுதலாளித்துவ அராஜக வழியில் அமைப்பைக் கைப்பற்றுவதற்கான பதவி வெறி தலைக்கேறி தன்னை செயலாளராக்க மாநாடு நடத்தவேண்டும் என்று கூறினார். நபரை மாற்றுவதற்கு மாநாடு நடத்த முடியாது, கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில்தான் மாநாடு நடத்த வேண்டும் என்ற அமைப்பின் முடிவை ஏற்கமறுத்தார். அவரைப் பொறுத்தவரை தனது பிழைப்புவாத நலன்களிலிருந்து பெயரளவுக்கு முழுநேர ஊழியர்களைக் கொண்ட, பெயரளவுக்கு இரகசியமான, ஒரு குட்டிமுதலாளித்துவக் கட்சியை கட்டியமைப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவருடைய இத்தகைய நிலைப்பாட்டை ஏற்க மறுத்ததால் அமைப்பில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அமைப்பைவிட்டு வெளியேறினார். தற்போது தான் விரும்பியதுபோலவே ஒரு கட்சியை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

வில்கிருஷ்ணன் கொள்கைக் கோட்பாடுகள் மீது நம்பிக்கை இழந்து கோஷ்டிவாதத்திற்கு பலியாகி வெளியேறினார். குண்டலப்பட்டி சின்னசாமி போலீஸ் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு கோடிகளை சம்பாதித்தவர். சேலம் சின்னுவோ கந்துவட்டி தொழிலில் காசுபார்த்தவர். இப்படி இவர்கள் அனைவரும் கலைப்புவாதக் கருத்துகளுக்கு இரையாகி புரட்சியின் மீது நம்பிக்கை இழந்து தாங்கள் செய்த தவறுகளுக்கு சுயவிமர்சனமாகவும் வரமறுத்து அமைப்பில் ஜனநாயகம் இல்லை என்று கூறி வெளியேறினார்கள். இவர்கள் ஒரே நிலைப்பாடோ, கொண்ட கொள்கைக்கு விசுவாசமோ இல்லாதவர்கள்.

இவ்வாறு அமைப்பைவிட்டு வெளியேறிய கலைப்புவாதிகளும், பிழைப்புவாதிகளும் தனிமைப்பட்டுக் கிடந்தனர். பின்பு பச்சோந்தி ஈஸ்வரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளிலிருந்து வெளியேறிய ஓடுகாலிகளைக் கொண்ட 11 அமைப்புகளை 18 முறை கூட்டி ஐக்கியப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அதற்குப் பிறகுதான் ஆந்திராவின் விசுவம், தமிழகத்தின் விந்தை வேந்தன், பச்சோந்தி ஈஸ்வரன் கும்பல் இவர்களை இணைத்து சி.பி.ஐ. (எம்.எல்.)-ன் தமிழ் மாநில கமிட்டியை உருவாக்கியுள்ளனர்.

இவர்கள் மா.லெ. அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்தோ, அல்லது ஒரு அரசியல் வழியின் அடிப்படையிலோ ஒரே கட்சியாக இணையவில்லை. அதே போல் இவர்களுக்கிடையில் முழுமையான அரசியல் ஒற்றுமையும் இல்லை. இவர்கள் எந்த அரசியல் நிலைப்பாட்டிற்கும் விசுவாசமானவர்களும் இல்லை. இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு, எல்லாத் தவறுகளையும் மூடி மறைத்துவிட்டு, தங்களுடைய பிழைப்புவாதத்தை மூடிமறைத்துவிட்டு, தங்களுடைய பழைய தவறுகளைப் பற்றி யாரும் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். நமது அமைப்பிலிருந்து வெளியேறிப்போன கலைப்புவாதிகளும், பிழைப்புவாதிகளும் தாங்கள் ஏதோ ஒரு கட்சியை கட்டிவிட்டதாக கதைக்கின்றனர். ஆனால் இது பற்றி அந்த அமைப்பின் தலைவர் விந்தை வேந்தன் கூறும்போது “அரசியல் அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளேன்” என்று கூறினார். உண்மையில் அதுதான் நடந்துள்ளது.

இவ்வாறு அடிப்படை நிலைப்பாடுகளில் ஒற்றுமையின்றி, அரசியல் வழியிலும் உடன்பாடின்றி, கொள்கை இலட்சியங்களில் விசுவாசமில்லாத கலைப்புவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் கொண்டு கட்சிகட்டுவது ஒரு கோட்பாடற்ற சந்தர்ப்பவாத ஐக்கியமே. கனுசன்யால் கட்சியினர் கட்டியமைக்கும் இத்தகைய கட்சி உடனடியான பிளவுகளுக்கே கொண்டு செல்லும். இவ்வாறு கனுசன்யால் கட்சியினர் ஐக்கியத்தின் பேரால் பிளவுகளைத்தான் முன்வைக்கின்றனர்.
----------------------
தொடரும்: நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(7)
இ.க.க (மா.லெ) (ம.யு) போல்ஷ்விக் கட்சிக்கு திட்டம் இல்லை என்ற பிரச்சாரம் குறித்து

முன்னைய தொடர்களுக்கு; சமரன் தொடர் (1)

No comments:

Post a Comment