Tuesday 7 August 2012

ஈழத்தமிழ்த் தேசிய இன அழிப்பை தொடரும் இராஜபட்சே-மன்மோகன் கூட்டணியை முறியடிப்போம்!


ஈழத்தமிழ்த் தேசிய இன அழிப்பை தொடரும் இராஜபட்சே-மன்மோகன் கூட்டணியை முறியடிப்போம்!

மன்மோகன் கும்பலே!
இலங்கையுடனான இராணுவம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்துசெய்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கு!

தமிழக மீனவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கை இராணுவத்தின் மீது இராணுவ நடவடிக்கை எடு!

கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!

ஈழத்தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திக்கும் ஒபாமாவின் ஆணையை முறியடிப்போம்!

இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திக்கும் ஒபாமாவின் ஆணையை முறியடிப்போம்!

மன்மோகன் கும்பலே சில்லரை வணிகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்து விடாதே!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தேசபக்திகொண்ட ஜனநாயகவாதிகளே!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 16ஆம் தேதி இந்திய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தை அமெரிக்கக் கம்பெனிகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கூறினார்” வெளிப்படையாக சில்லரை வர்த்தகம் என்று கூறினாலும் பாதுகாப்புத்துறை, பென்சன் திட்டம், காப்பீட்டுத்துறைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் முழுவதுமாக திறந்துவிட வேண்டும், அதற்கானத் தடைகளை முழுவதுமாக அகற்றவேண்டும் என்பதே ஒபாமாவின் கோரிக்கையாகும்.

அமெரிக்காவின் அடிவருடியான மன்மோகன், சோனியா கும்பல் இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவிற்கு விரைவாக திறந்துவிடவில்லை என்பதால்தான், இதற்கும் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் “டைம்ஸ்” பத்திரிக்கை மன்மோகன்சிங்கை செயல்படாத பிரதமர் என்றும், தகுதியற்ற பிரதமர் என்றும் விமர்சித்து கட்டுரை எழுதியது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது ஒபாமா “அந்நிய முதலீடுகளுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இந்தியா நீக்கவேண்டும், அமெரிக்காவின் கூட்டாளியாக இந்தியா தொடரவேண்டுமானால் அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவிற்கு திறந்துவிட வேண்டும்” என்று ஆணையிடுகிறார். இந்திய அரசை நிர்ப்பந்தம் செய்து மிரட்டுகிறார்.

அந்நிய முதலீட்டிற்கான கட்டுப்பாடுகளை அகற்றி சில்லரை வர்த்தகத்தை திறந்துவிடுவதன் மூலம் இருநாடுகளும் பயன் அடையும், வேலைவாய்ப்பு பெருகும் என்று ஒபாமா கூறுகிறார். ஆனால் இந்தியாவிற்கு அவுட்சோர்சிங் மூலம் வேலைவாய்பை அளித்துவரும் அமெரிக்கக் கம்பெனிகள் மீது வரியை அதிகமாக்குவதன் மூலமும், அமெரிக்காவிற்கு வேலைதேடி செல்கின்றவர்களின் விசா மீது கடும் நிபந்தனைகள் விதிப்பதன் மூலமும் ஒபாமா இந்தியர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கிறார். இந்தியர்களின் நலன்கள் பற்றி ஒபாமா பேசுவது ஓநாய், ஆட்டுக்குட்டிக்கு பரிந்து பேசுவது போன்றதுதான். எனவே ஒபாமா மிரட்டலுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரளவேண்டியது அவசியமானது.

சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு, இந்தியா முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் முழுவதையும் தளர்த்தி அந்நிய முதலீட்டிற்கு கதவு திறந்துவிட வேண்டும் என்று ஒபாமா அந்தப் பேட்டியில் கூறுகிறார். அதே சமயம் இன்று உலகளவில் தொடர்ந்து நீடித்துவரும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிதான் இந்திய பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்திவரும் புதியகாலனிய உலகமய, தனியார்மயக் கொள்கைகள்தான் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம். ஒபாமாவின் ஆணையை ஏற்று தீவிரமாக செயல்படுத்துவது தற்கொலைக்கு சமமானது.

2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைத் தொடர்ந்து உருவான பொருளாதார மந்தம், கடந்த 5 ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் தொடர்கிறது. இந்தப் பொருளாதார மந்தம் மாபெரும் நெருக்கடியாக மாறிவருகிறது. ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பு நாடுகள் இதில் கடுமையாக பாதித்துள்ளன. கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி மட்டுமல்லாது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியும் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனின் வளர்ச்சி பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. அமெரிக்காவிலோ அதன் தற்காலிக மீட்சியான 3 சதவீதத்திலிருந்து (---- ) 1.94 சதவீதமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் நெருக்கடிகளை சீனா, இந்தியா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தையைக் கொண்டு தீர்க்கமுடியும் என்ற உலகமுதலாளித்துவ வாதிகளின் கனவு கலைந்து போனது. உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு தோள்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்நாடுகள் மேற்கத்திய நாடுகளின் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்ட சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்தியோ 7.6 சதவீதமாகவும், 9 சதவீதம் வளர்ச்சியை எட்டிய இந்தியா இவ்வாண்டு ஒட்டுமொத்த உற்பத்தி 6.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. இவ்வாண்டு மார்ச் மாதம் பிரான்சில் கூடிய ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு இன்றைய முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாமல் கலைந்து போனது. முதலாளித்துவத்தின் கீழ் இனி வளர்ச்சி என்பதே கனவாகிபோனது.

தீர்வு காணமுடியாத முதலாளித்துவ பொது நெருக்கடி என்ற புதைசேற்றில் மூழ்கிவரும் அமெரிக்காவிற்கு தோள் கொடுக்கும் துரோகத்தை மன்மோகன் கும்பல் செய்துவருகிறது. ஜி-20 மாநாட்டில் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் நெருக்கடியைத் தீர்க்க ரூ.53,000 கோடி உதவி செய்வதாக மன்மோகன் அறிவித்தார். மேலும் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பேரில் அனைத்துத் துறைகளையும் திறந்துவிட திட்டமிட்டு வருகிறது.

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்காவின் வால்மார்ட், பெஸ்ட் பை, பிரான்சின் கேரிபோர், பிரிட்டனின் டெஸ்கோ போன்ற பல்வேறு நாடுகளைச் சார்ந்த பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியாவின் ரூ.25 லட்சம் கோடி மதிப்புள்ள சில்லரை வணிகச் சந்தையைக் கைப்பற்ற வெறிபிடித்து அலைகின்றன. இந்தியச் சந்தையை திறந்துவிட நிர்ப்பந்திக்க வால்மார்ட் நிறுவனம் அமெரிக்க நாட்டு எம்.பி.களுக்கு 15 லட்சம் டாலர் செலவழித்துள்ளது. மேலும் இத்தகைய பன்னாட்டுக் கம்பெனிகளோடு பங்காளிகளாக செயல்பட்டு இந்திய சில்லரை வணிகத்தை கபளீகரம் செய்வதற்கு டாட்டா, அம்பானி, பிர்லா போன்ற தரகுமுதலாளித்துவ நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன.

வால்மார்ட் கம்பெனியின் ஆண்டு வருமானம் ரூ. 25 லட்சம் கோடியாகும். 27 நாடுகளில் 69 வேறுபட்ட பெயர்களில் கடைபரப்பி இயங்கி வருகிறது. இதில் 20 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். வால்மார்ட் வளாகத்தில் 60,000 பொருட்கள் விற்பனை செய்கின்றனர். சூப்பர் சென்டர்களில் அது 1,20,000 பொருள்களை விற்பனை செய்கிறது. வால்மார்ட் நுழைந்த பின் உள்ளூர் வியாபாரிகளுக்கு வேலையோ, வியாபாரமோ இருக்கப்போவதில்லை.

தற்போது இந்தியாவில் 400 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சில்லரை வணிகத்தில் 44 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர். வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் வருகையால் பணியாளர்களின் எண்ணிக்கை 20 மடங்கு குறைந்து போகும் என்று கூறப்படுகிறது. உலகமய, தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக வேளாண்மை பாதிக்கப்பட்டு நகர்புறங்களில் சிறுவணிகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வேலையின்மையும், வாழ்வாதாரங்களும் கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு இந்தியாவின் சில்லரை வணிகத்தைச் சார்ந்து வாழும் சுமார் 20 கோடி மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுவிடும்.

சில்லரை வணிகத்தில் பன்னாட்டு கம்பெனிகளை அனுமதிப்பதால் சிறுதொழில்கள், கைவினைத் தொழில்கள் பாதிக்கப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் நிறுவனங்களில் விற்கும் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், வீட்டு சாமான்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் போன்றவைகளை விலை குறைவாகக் கிடைக்கும் நாடுகளிலிருந்து வாங்கும். அதன் விளைவாக இந்தியாவின் சிறு தொழில்கள் பாதிக்கப்படுவதோடு இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்படுவர்.

விவசாயத் துறையில் பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் நிதி வலிமை, உள்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள் கொண்டு ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும். இடைத்தரகர்களை ஒழித்து பொருட்கள் கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும் ஏகபோகத்தை நிலைநாட்டிக்கொள்ளும். இதன் விளைவாக ஒரு புறம் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அதிக விலைக்கு நுகர்வோருக்கு விற்கும். இவ்வாறு விவசாயிகள் கொத்தடிமைகளாக்கப்பட்டு சீரழிக்கப்படுவர். ஏற்கனவே உலகமய, தனியார்மயக் கொள்கைகளால் 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டுவருகின்றனர். அது இனி மென்மேலும் அதிகரிக்கும். மேலும் பணப் பயிர் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நாட்டின் உணவுத் தானிய உற்பத்தி அழிந்து போகும். உணவுத் தேவைக்கு அமெரிக்காவிடம் கையேந்தும் நிலை ஏற்படும்.

இவ்வாறு சில்லரை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளை திறந்து விடுவதால் வணிகர்கள், சிறு வீத உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் என பலகோடி பேர்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படும். விவசாயிகள் மத்தியில் நிலவிவரும் தற்கொலைகள் நாடு தழுவியதாக மாறும். வறுமையும், பட்டினிச் சாவுகளும், தற்கொலைகளும் நிறைந்த ஒரு சுடுகாடாக இந்தியா மாறும்.

மன்மோகன் கும்பல் சில்லரை வணிகம் மட்டுமல்லாது, பென்சன் திட்டத்தையும், காப்பீட்டுத் துறைகளையும் திறந்துவிடுவதால் திவாலாகிவிட்ட ஏகாதிபத்திய பன்னாட்டு நிதிநிறுவனங்கள் இந்தியாவின் நிதிவளங்களை சூறையாடும். பாதுகாப்புத்துறையை அமெரிக்கக் கம்பெனிகளுக்கு திறந்து விடுவதால் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், கேள்வி முறையின்றி அத்துறையில் அமெரிக்க கம்பெனிகள் கொள்ளையடிக்க வழிவகுக்கப்படும்.

அமெரிக்க அடிவருடியான சோனியா மன்மோகன் கும்பல் இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்து வருகிறது. அமெரிக்கவுடனான இருதரப்பு அரசியல் பொருளாதார உடன்படிக்கைகளின் மூலமும் உலகமயக் கொள்கைகளை செயல்படுத்துவதின் மூலமும் இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக்கி வருகிறது. அமெரிக்காவின் கோரிக்கைகளை இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பேரில் செயல்படுத்தத் துடிக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதமே சில்லரை வணிகத்தை அமெரிக்க கம்பெனிகளுக்கு திறந்துவிடும் சட்டத்¬க் கொண்டு வந்தது. நாடு தழுவிய அளவிலான வணிகர்களின் வரலாறு காணாத வேலை நிறுத்தத்தின் காரணமாகவும், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பாலும், எதிர்க் கட்சிகளின் போராட்டத்தாலும் அந்த முடிவை செயல்படுத்துவதை தள்ளிப்போட்டது. தற்போது ஒபாமாவின் மிரட்டலுக்கு அடிபணிந்து சில்லரை வணிகத்தை திறந்துவிட சதிதிட்டம் தீட்டுகிறது.

அண்மையில் அந்நிய முதலீடுகள் தொடர்பான இலண்டன் மாநாட்டில் பங்கேற்றபின் இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்சர்மா கூறியது: “சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து அரசியல் கட்சிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். பல மாநில முதல்வர்கள் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவளித்துள்ளனர். இடது சரிகளும், பாஜகவும் எதிர்க்கின்றன” என்றும்; “அந்நிய நேரடி முதலீடு அனுமதி குறித்து தகுந்த நேரத்தில் அரசியல் முடிவெடுப்போம், கருத்தொற்றுமைக்காக காத்திருந்தால், அதை எப்போதும் செயல்படுத்த முடியாமல் போய்விடும்” என்றும் கூறினார். இதன் மூலம் சோனியா மன்மோகன் கும்பல் எதேச்சதிகாரமான முறையில் நாட்டின் அனைத்துத் துறைகளையும் குறிப்பாக சில்லரை வணிகத்தை திறந்துவிடும் துரோகத்திற்கு தயாராகிவிட்டது என்பது தெளிவாகிவிட்டது.

பா.ஜ.கட்சி மற்றும் மாநில அளவிலான தரகுமுதலாளித்துவக் கட்சிகள் சிலவும், திருத்தல்வாத கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இதை எதிர்க்கின்றன. பதவியிலிருக்கும் போது பா.ஜ.க இந்த கொள்கையை ஆதரித்தது. ஆனால் தற்போது அது எதிர்க்கிறது. இக்கட்சிகளை முழுவதுமாக நம்பிவிடமுடியாது. தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்காக்கும் இக்கட்சிகளால் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடமுடியாது. எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் புரட்சிகர சக்திகளும் ஒன்றுபட்டு போராடுவது அவசியமாகும்.

சோனியா மன்மோகன் கும்பல் அனைத்துத் துறைகளையும் திறந்துவிட்டு நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாகவும்; அமெரிக்காவின் வேட்டைக் காடாகவும் மாற்றுவதை அனைத்து மக்களும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே முறியடிக்க முடியும். அந்த அடிப்படையில் உடனடியாக சில்லரை வணிகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்துவிடுவதை எதிர்த்த வணிகர்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். அதற்கு கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அனைவரும் அணிதிரள்வோம் என அறைகூவி அழைக்கின்றோம்.

இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திக்கும் ஒபாமாவின் ஆணையை முறியடிப்போம்!

மன்மோகன் கும்பலே சில்லரை வணிகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்து விடாதே!

நாட்டை நெருக்கடியில் ஆழ்த்தும் உலகமயம், தாராளமயம் , தனியார்மயக் கொள்கைகளை கைவிடு!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் -  தமிழ்நாடு- ஆகஸ்ட் 2012