Thursday 13 December 2012

இந்திய அரசே! காவேரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல்படுத்து!

இந்திய அரசே! காவேரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல்படுத்து!


* தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கும் கருநாடக அரசைக் கலை!
 
* பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கு!
 
* உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கு!
 
*தமிழக மக்களே, காவிரி நீர் உரிமைக்காகப் போராடுவோம்!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு - டிசம்பர் 2012

தர்மபுரியில் சாதி வெறியை எதிர்த்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி `மங்கம்மா`வுக்கு எமது அஞ்சலி!


 
 
தர்மபுரியில் சாதி வெறியை எதிர்த்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி `மங்கம்மா`வுக்கு எமது அஞ்சலி!
* சாதி வெறித் தாக்குதலுக்குள்ளான நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி, மக்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்!
 
* சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியினரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்
என முழங்குவோம்!
 
* தமிழகத்தில் சாதிவெறியை எதிர்த்து ,அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
                    மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் -          தமிழ்நாடு      -                    டிசம்பர் 2012

Sunday 2 December 2012

தர்மபுரியில் கழகத்தின் சமதர்ம ஆர்ப்பாட்டம்

பா.ம.க.வைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா, மதியழகன், சரவணன், சின்னசாமி, சி.வி.மாது ஆகியோரின் தலைமையில் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வன்னியர்கள் பிணத்தை எடுத்துக்கொண்டு நத்தம் காலனிக்கு சென்று கலவரத்தைத் தொடங்கினர். பின்னர் திருப்பத்தூர் மெயின் ரோட்டில் பிணத்தை வைத்து மறியல் செய்து வன்னிய மக்களை சாதிவெறியூட்டி மூன்று கிராமங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் இடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுவீசி தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டில் உள்ள டி.வி., கிரைண்டர், கட்டில் போன்ற பொருட்களை வெளியே எடுத்துவந்து கொளுத்தியுள்ளனர். தங்கம், வெள்ளி மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள், புத்தகங்கள் சைக்கிள்கள் அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்கள் கடந்த ஒரு தலைமுறைக்கு மேல் சேமித்து வைத்திருந்த அனைத்து உடைமைகளும் அழிக்கப்பட்டு அம்மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல் மாற்றப்பட்டுள்ளனர்.
 




சாதிக்கலவரத்திற்கு தமிழக அரசு துணைபோகிறது

தருமபுரி காவல் துறையினர் தெரிந்தே இந்தக் கலவரத்தை அனுமதித்துள்ளனர். குருவின் பேச்சும், நாய்க்கன்கொட்டாய் சாதியப் பஞ்சாயத்து முடிவுகளும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதாகும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நடக்க இருந்த சாதிக்கலவரத்தை தடுத்திருக்க முடியும். மேலும் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தாலும் கூட கூட்டம் கலைந்திருக்கும் அதையும் செய்யவில்லை. ஆனால் கலவரத்தை ஒரு புறம் அனுமதித்துவிட்டு, மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்தாக்குதல் நடத்திவிடாது தடுத்து நிறுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களின் உடைமை இழப்புக்கு நட்ட ஈடு தருகிறோம் என்று கூறி அவர்களை அடக்கி வைத்தனர். மேலும் கலவரத்தை தூண்டியவர்களை, திட்டமிட்டுக் கொடுத்தவர்கள் என முக்கியமானவர்களை இன்னமும் வன்கொடுமை சட்டப்படிக் கைது செய்யவே இல்லை. தற்போது நடந்த முடிந்த சம்பவங்களுக்கு கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்துகின்றனர். எனவேதான் சாதிவெறியர்களை எதிர்த்து தருமபுரியில் ம.ஜ.இ.க ஒட்டிய சுவரொட்டியை காவல்துறையினர் கிழித்தார்கள். நத்தம் கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யச் செல்லும்போது தடை ஏற்படுத்தி ம.ஜ.இ.க தோழர்கள் 20 பேரை கைது செய்தனர். இந்தக் கலவரம் பற்றி ஆய்வு செய்த அனைத்துக் குழுக்களின் அறிக்கையும் இது ஒரு திட்டமிட்டச் சாதிக் கலவரம்தான் என்று கூறுவதோடு காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
 



பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள ஆதிக்க சக்திகளே சாதிக்கலவரத்திற்குக் காரணம்
1947 அரசியல் அதிகார மாற்றத்திற்குப் பிறகு இநதிய அரசு நிலப்பிரப்புத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டே அந்நிய மூலதனத்தைச் சார்ந்து நின்று தரகு முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையிலேயே பயணம் செய்கிறது. நிலச்சீர்திருத்தத்தின் மூலம் உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கப்படுவதற்கு பதிலாக நேரடி குத்தகைதாரர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மேல்தட்டுப் பிரிவினருக்கே நிலம் வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்படவே இல்லை. பசுமைப் புரட்சித் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப் புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் புதிய நிலப்பிரபுத்துவ மற்றும் பணக்கார விவசாய வர்க்கம் ஒன்று உருவாகி உள்ளது. அந்த வர்க்கம் குத்தகை, வட்டி, வாரம், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு கிராமப்புற ஆளும் வர்க்கங்களாக உருவெடுத்துள்ளது. அது பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியிலேயே கடுமையான வர்க்க முரண்பாடுகளை உருவாக்கியுள்ளன. அந்த ஆளும் வர்க்கங்கள் மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடுகின்றன. தமது சாதியிலேயே அதிகரித்துவரும் வர்க்க முரண்பாடுகளை மூடிமறைக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டுவதன் மூலமும் ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்குகின்றனர். அந்த நோக்கத்திற்காகத்தான் சாதிக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
 



சாதிக்கலவரம் பரவும் அபாயம்!

தர்மபுரி கலவரத்திற்குப் பிறகும் கூட பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர்கள் அடுத்தடுத்த சாதிக்கலவரங்களுக்கு தயார் செய்கின்றனர். இந்தக் கலவரம் முடிவு அல்ல ஆரம்பம்தான் என்று சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் அணிதிரள முயற்சி எடுக்கின்றனர்.கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் மணிகண்டன் கூறும்போது “வன்கொடுமை, கலப்புத் திருமணம், நில உரிமை மீட்பு என்றெல்லாம் சொல்லி பெரும்பாலான மக்கள் மீது அநீதி இழைக்கப்படுகிறது. திராவிடர் கழகத்தின் மாணவரணி செயலாளராக இருந்தவர் கோவை செழியன். அவரே தனது இறுதி காலத்தில் திராவிடம்தான் மக்களை சீரழிக்கிறது என்று உணர்ந்து தலித் அல்லாதோர் பேரவையை உருவாக்கினார். எனவே இப்போது தலித்துகளை கார்னர் செய்வதற்கல்ல... தலித் அல்லாதவர்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளோம். காடுவெட்டி குரு உள்ளிட்ட மற்ற சமுதாயத் தலைவர்களோடு பேசியுள்ளோம். விரைவில் இந்தியா முழுதும் உள்ள தலித் அல்லாத சாதித்தலைவர்களை கூட்டி மாநாடு நடத்துவோம்” என்று சாதிவெறியை வெளிப்படுத்தியுள்ளனர். தருமபுரி கலவரத்திற்கு காரணம் பா.ம.க அல்ல என்றும், தலித்துக்களால் பாதிக்கப்பட்ட அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து நடத்தியது என்று ராமதாசு கூறியதற்கு பலன் உடனே கிடைத்துவிட்டது. இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உயர்சாதி ஆதிக்க சக்திகள் பெரும் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துகின்றன.
 



சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கு புதிய வழி
தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புகள் மற்றும் பல்வேறு உண்மை அறியும் குழுக்கள் அனைத்தும் சாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த உண்மை குற்றாவாளிகளை கைது செய்வது, சட்டங்களை கடுமையாக்குவது, தனிப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் நட்ட ஈடும் கேட்பது போன்ற கோரிக்கைகளையே முன்வைக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டங்களும், சிறப்புத் திட்டங்களும் சாதி, தீண்டாமையை ஒழிக்கபோவதில்லை. சாதிக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதுமில்லை.
 சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாக இருப்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், அரசியல் மற்றும் பண்பாடுமேயாகும். அதாவது அகமணமுறை, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலைமுறை, பரம்பரைச் சடங்குகள், தீண்டாமை, தீண்டாதவருக்கு பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பேயாகும். இவை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மேற்கட்டுமானமே யாகும். இவற்றிற்கு அடித்தளமாக இருக்கும் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதே அதற்குத் தீர்வாகும். இந்திய அரசு தரகுமுதலாளித்துவ, நிலப்பிரத்துவ ஆளும் வர்க்கங்களை பாதுகாக்கின்ற அரசாகும். எனவே இந்திய அரசை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் தூக்கியெறிவது ஒன்றுதான் சாதி, தீண்டாமைக்கும் சாதிக் கலவரங்களுக்கும் முற்றுபுள்ளி வைக்கும்.
பிரசுரிப்பு Admin