Thursday, 1 September 2011

ஊழல் ஒழிப்பு மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் சோனியா, மன்மோகன் ஆட்சியை எதிர்ப்போம்!



*  புதிய காலனிய ஆட்சிமுறையைப் பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்கு கொடுக்கும் விலையே ஊழல்!

*  ஊழலுக்கு ஊற்றுக்கண்ணான உலகமய, தனியார்மய கொள்கைகளைக் கைவிடு!  ஊழல் செய்யும் பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!

*  நிதிமூலதனத்திற்கும், தரகுமூலதனத்திற்கும் சேவை செய்யும் சட்டங்களை எதிர்ப்போம்! தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப் போராடுவோம்!

*  ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது!

*  கதர்ச் சட்டைகளின் ஊழலைக்காட்டி, காவிச்சட்டைகள் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் நாடகங்களைக் கண்டு ஏமாறாதீர்!

*  ஆளும் ‘கதரும்’ பாசிசமே! எதிர்க்கும் ‘காவி’யும் பாசிசமே!

*  ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!

*  ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

======= மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ========= 02-09-2011

3 comments:

  1. விவாதகன்,

    மேற்கண்ட முழக்கம் சரியாகவும் மார்க்சிய லெனினிய வழிப்பட்டதாகவும் இருக்கிறது. அதை வழிமொழிந்து என்னுடைய சில கருத்தாக...

    அன்னாவினை எப்படிப்பார்ப்பது. லஞ்சத்தை எப்படிப்பார்ப்பது. அன்னாவின் பிரச்சினையில் லஞ்சம் என்பது என்ன?
    அன்னா ஒரு ஜனநாயகவாதியா.

    அவர் ஒரு தனிமனிதரும் அல்ல. அவர் பல்வேறு என்.ஜி.ஓக்களின் பிரதிநிதி. அவருக்கு என்ன வேலை, அல்லது அவர்களைப் போன்றவர்களுக்கு இங்கே என்ன வேலை. திடீர் என்று நாட்டுப்பற்று பொங்கி வருவதற்கான காரணம் என்ன. உண்மையில் அவர் லஞ்சத்தை எதித்துத்தான் போராடினாரா யாரின் பிரதிநிதியாக.

    அன்னா அமெரிக்க நாட்டினது, பன்னாட்டு நிறுவனங்களதும் பிரதிநிதியாய் தன் செயல்களத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஏன்?

    இன்று உலகம் முழுவதும் அங்குள்ள ஜனநாயகமற்ற ஆட்சியை எதிர்த்து மக்கள் கிளந்தெழுந்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் ஏதாவதொரு நாட்டில் கலகம் நிகழ்ந்துகொண்டிருப்பதை செய்திகளில் பார்க்கலாம். அவர்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தை கோருகிறார்கள். ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடைவதற்கு அந்த ஆளும் மையங்களை எதிர்த்து மக்கள் போராடினானல் அதற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் கூட்டுவைத்துக்கொண்டு காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் இப்படி எழுந்து போராடும்போது அவைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்ற பிரச்சனை அச்சம் அந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு உண்டு. ஆகையால் அப்படி எழும் போராட்டங்களை தமக்கு எதிராகவும் தமது மூலதனத்திற்கு எந்த விதத்திலும் பாதிக்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் தந்திரங்களை கையாள்கிறது. அதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரிட்டிஷ் காரரை வைத்து எப்படி காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தொடங்கி அதையே அதிகாரமாற்றமாக நிகழ்த்தி ஏகாதிபத்தியங்கள் இந்தியாவில் மூலதனத்தை தக்கவைத்துகொண்டார்களோ, அதேபோல் அப்படி கிளர்ந்தெழும் நாடுகளிலும், அதற்கு வாய்ப்புள்ள நாடுகளிலும் தமக்கு தோதான அமைப்புகளை நிறுவவேண்டிய அவசியம் ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான தகவல்கள் இன்று நாளிதழ்களில் நிறைய வந்துக்கொண்டிருக்கிறது.

    ஆகையால், அவர்கள் நிதி கொடுத்து போராட அதற்கான என்.ஜி.ஓ,க்களை ஏற்படுத்தி வருகிறார்கள். 400 பேருக்கு ஒரு என்.ஜி.ஓ வீதம் இந்தியாவில் உருவாக்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதான் அமெரிக்கா வகுத்துள்ள திட்டமும் கூட.

    தொடரும்...

    ReplyDelete
  2. விவாதகன்,
    (2)
    அடுத்தது, ஏகாதிபத்தியத்தின் நலனை ஒரு நாடு மீறுமானால், அல்லது பணிந்துபோக சிறிதளவு சிந்தனை செய்தாலே உடனே என்.ஜி.ஓ.க்களை வைத்து திரட்டி பணிய வைக்க முயற்சிசெய்யும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அமெரிக்கா தன் நலனிலிருந்து ஒரு திட்டத்தை கொண்டுவந்தால், ரஷ்யாவோ, ஜெர்மனியோ, பிரான்சோ தன் சார்பான என்.ஜி.ஓ.க்களை வைத்து போராட்டம் நடத்தி தடுக்க முயற்சி செய்கிறது. ரஷ்யா ஒரு திட்டத்தை இந்தியாவில் தன் நலனுக்காக கொண்டுவந்தால் மற்ற ஏகாதிபத்திய நாடுகளின் என்.ஜி.ஓ.க்களை வைத்து தடுக்க முயற்சி செய்யும். இதுதான் அனைகளை எதிர்த்த போராட்டம், அணு ஒப்பந்தத்தில் நடந்த போராட்டம், கூடங்குளம் போராட்டத்தில் கூட அப்படி இருக்குமோ என்று அரசாங்கமே கூறுகிறது. அந்தளவுக்கு என்.ஜி.ஓ க்கள் கூட பல்வேறு ஏகாதிபத்தியங்களின் அடியொற்றி அவரவர்களின் நலனிலிருந்து இயக்க முயற்சி செய்யும். ஆனால் எந்த காலத்திலும் நம்மை சுயமாக முன்னேற விடாது இவைகள்.

    சரி ஊழல் விசயத்துக்கு வருவோம். இன்று கார்ப்பரேட் ஊழல் என்று கூறுகிறார்கள். அது ஒரு கம்பெனி நடத்தும் ஊழலா. இல்லை அவை ஏகாதிபத்தியங்கள் தங்கள் மூலதனத்தை உள்ளே கடை விரிக்க பரப்ப அவரவர்கள் சக்திக்கு ஊழல் மூலமாக வருகிறார்கள். இந்த நாட்டை மூலதனத்தின் மூலமாக காலனியாக்க முயற்சி செய்கிறார்கள். இது தான் இன்று பிரதானமாக முக்கியமாக கவனிக்கபட வேண்டியதாகும். இதற்கு இணையாக இங்குள்ள பெரும் நிறுவனங்கள் ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா போன்ற ஏகாதிபத்தியத்தினை சார்ந்த நிறுவனங்கள் இங்குள்ள மூலப்பொருளை கொள்ளை அடிக்க, ஒட்டு மொத்த செல்வ வளங்களையும், உற்பத்தி லாபத்தையும் வளர்த்துக்கொள்ள இந்த அரசாங்கத்தினையே லஞ்சத்தின் மூலம் கட்டுப்படுத்தித்தான் சாதிக்கிறது. இதைத்தான் டாடா பகிரங்கமாக இன்றைய உலகமய போட்டியின் காலகட்டத்தில் (2ஜி போல்) நெருக்கடி தந்தால் நாம் உலக அளவில் போட்டி போடமுடியாது என்று சொல்கிறார்.

    இதை உண்மையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கூகி வான் தியாங்கோ அவர்களின் ஆப்ரிக்க நாவலான சிலுவையில் தொங்கும் சாத்தானையும் கொஞ்சம் படிப்பது உயிரோட்டமாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

    ஆக ஏகாதிபத்தியம் இந்த நாட்டை கொள்ளையடிப்பதற்கும், இங்குள்ள பெரும் நிறுவனங்களை நம் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து அந்நிய ஏகாதிபத்திய நாட்டிற்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்தும் முறையே இந்த லஞ்சமாகும். இது நெல்லுக்கு பாயும்போது புல்லுக்கும் கொஞ்சம் பாயும் என்று சொல்வது போல, அந்த அரசு அதிகார மையத்தில் சேவகம் செய்யும் அனைவருக்கும் லஞ்சம் சென்று சேருகிறது. இதில் மக்கள் நேரடியாக கொடுக்கும் லஞ்சம் உடனடியாக உணருகிறார்கள். மற்றவை அரசியல் ரீதியாக மக்களுக்கு உணர்த்தும்போதுதான் புரிந்துகொள்கிறார்கள். இந்த முறையைதான் அரசை கட்டுப்படுத்த ஆளும் வர்க்கங்கள் கையாளும் முறை என்பதை புரிய வைக்க வேண்டும்.

    தொடரும்...

    ReplyDelete
  3. (3)
    இப்போது அன்னா அசாரேவிற்கு வருவோம். இவர் அரசு அதிகார மையம் வாங்கும் லஞ்சத்தையும், அரசியல்வாதிகள் வாங்கும் லஞ்சத்தையும் பேசுகிறார். ஆனால் ஏகாதிபத்திங்கள் தங்கள் நாட்டின் மூலதனத்தை இங்கே கொட்டி இங்குள்ள மூலப்பொருளையும், செல்வ வளங்களையும், மலிவான உழைப்பினையும், இறுதியாக மிகப் பெரிய அளவில் மூலதனத்தையும் கொள்ளையடித்து போக கொடுக்கும் லஞ்சத்தை பற்றி பேசத் தயாரில்லை. அவர்களை இந்த சட்டத்தில் சேர்க்க தயாரில்லை.

    உள்நாட்டில் இருக்கும் இயற்கைவளங்களையும், உற்பத்தியையும், இதரவைகளையும் மிக குறைந்த விலையில் லஞ்சத்தை கொடுத்து பெற்று அதை மிக அதிகமான விலைக்கு நம் மக்களுக்கு கொடுத்து மிகப் பெரிய கொள்ளையடிக்கும் இந்த பெரும் நிறுவனங்களை இந்தச் சட்டத்தில் சேர்க்கச் சொல்லவில்லை.

    இப்படி லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் இவர்களை தண்டிக்க கோர இந்த சட்டத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது யாரும் திரும்பிப் பார்த்திரக் கூடாது. இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதைக் கூட சொல்வதற்கு இடமில்லை.

    அவர் ஏதோ ஒரு படியில் காலடி வைத்திருக்கிறார் என்று நினைத்தோமானால் நாம் தான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த முட்டாளாக இருக்கமுடியும். ஏனென்றால் அப்படி இங்கே மூலதனத்தை இறக்கி கொள்ளையடித்து கொண்டுபோகும் ஃபோர்ட் பவுண்டேசன், ராக்பில்லர் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்துதான் அவர் நிதி உதவி பெற்று இந்த இயக்கத்தையே நடத்துகிறார். இப்படி அவர்களால், அல்லது அவர்களின் அடிவருடிகளால் நடத்தப் பெறும் ஊடக நிறுவனங்கள்தான் அதற்கு விளம்பரம் செய்யும். அப்போதுதான் ஆபத்தில்லாம ஏகாதிபத்தியங்களால் பயனம் செய்ய முடியும். இங்குதான் அருந்ததி ராயும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு என்ன வழியில் போராடினார் என்பதையே மையமாக பேசுகிறார். எதற்காக போராடவேண்டும் என்று அவர் பேசத் தயாரில்லை. இவரும் ஏன் ஏகாதிபத்தியங்கள் அன்னா அசாரேவிற்கு பணம் கொடுத்து இந்த இயக்கத்தை நடத்தச் சொல்கிறது என்று கூறத் தயாரில்லை. இவையனைத்தும் தெரிந்தும் அதற்கு எதிராக இயக்கம் எதுவும் நடத்த தயாரில்லை. அதற்கும் மேலாக மக்கள் தங்கள் இயலாமையால் போராடி தீர்க்க முடியும் என்று நம்பிக்கை இல்லாத நிலையில் வேறு வழியில்லாம லஞ்சம் கொடுத்து சாவதை வைத்து வக்காலத்து வாங்குகிறார்.

    மக்கள் போராடக்கூடாது? இறுதியாக இந்த கேள்விதான் எல்லா ஊசலாட்டங்களுக்கும் மையம். மக்கள்தான் இந்த எல்லா லஞ்சத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு கிராமத்திலோ, மாநிலத்திலோ லஞ்சத்தை எதிர்த்து தனித்தனியாக போராடிக்கொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி தன்னியல்பான போராட்டத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டமாக புரட்சிகர கட்சிகள் பின்னால் திரட்டி போராட வைக்க எப்போது சாதிக்கிறோமோ அப்போதுதான் சிறிய அளவில் கூட முன்னேற முடியும். அதற்காக மக்களை உணர்வு ரீதியாக பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு மையமான ஊழலால் ஏகாதிபத்தியம் எப்படி காலனியாக்குகிறது என்பதும், எப்படி இங்குள்ள பெரும் நிறுவனங்கள் அவர்களுக்கு சேவை செய்து கொள்ளையடிக்கிறது என்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

    வெறும் பொருளாதாரவாதமாக கார்பரேட் நிறுவனங்கள் என்று கூறி கம்பெனிதான் எல்லாம் என்று சொல்லி ஏகாதிபத்தியத்தையும், பெரும் முதலாளிகளையும், அதற்கு பங்காளியாக இருக்கும் பண்ணை உடமையாளர்களையும் மறைக்கக் கூடாது. இது நாட்டை அடிமைப் படுத்தும் பிரச்சினை, நாட்டை ஜனநாயகப் படுத்தவேண்டியப் பிரச்சினை. எல்லாவற்றையும் உடைத்து உடைத்து தனித்தனியான விசயமாக பார்த்தால் தோல்வியும், அதனால் விரக்தியும் மட்டுமே மிஞ்சும்.

    விடுதலையிலும், ஜனநாயகத்திலும் எந்தளவுக்கு முன்னேறுகிறோமோ அந்தளவுக்கு அதன் பகுதியாக இருக்கிற அத்தனை விசயத்தினையும் அடித்து நொறுக்கி நமக்கானதை பெற்றுக்கொண்டே செல்ல முடியும். அல்லது எப்படி பெறுவது என்ற நம்பிக்கையை பெறமுடியும். முழுமையை நோக்கி மக்களை நகர்த்த வேண்டும். அதற்குத்தான் ஊழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை கையிலெடுக்க வேண்டும். இது சீர்திருத்தப் பிரச்சனையல்ல. ஒர அரசையே ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற பிரச்சினை. இதைதான் மையப் பிரச்சினை என்று கூறுகிறோம். லஞ்சத்தை ஒழிப்பது என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது, இங்குள்ள பெரும் நிறுவனங்களுக்கெதிரானது, அதிகாரவர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கு எதிரானது, பண்ணை உடமையாளருக்கு எதிரானது, ஆகையால்தான் இவர்களை ஒழிப்பதற்கு எப்பொழுது போராடிகிறோமோ, இவர்களை எந்தளவுக்கு பலவீனமாக்குகிறோமோ, வெற்றிகொள்கிறோமோ அந்தளவுக்குத்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும், அதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகாண முடியும்.
    ***

    ReplyDelete