Friday 5 June 2015

ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றதை எதிர்ப்போம்!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு முதலமைச்சராகவும் பதவி ஏற்றுவிட்டார். 18 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்கா, ஊழல் அரசியல்வாதிகள் அச்சப்படும் அளவுக்கு - ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கினார்.

ஆனால், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியோ, இதற்கு நேர் எதிராக ஜெயலலிதாவின் வருமானம் பற்றிய
கூட்டல் கணக்கில் மோசடி செய்து ஊதிப்பெருக்கிக் காட்டி, அவருடைய வீடு உள்ளிட்ட அசையா சொத்துக்களின் மதிப்பைக் குறைத்துக் காட்டி, மொத்த
வருமானத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பின் மதிப்பு 8.12 சதவீதம்தான் என்று கூறி, ஊழலை நியாயப்படுத்தி ஜெயலலிதா உள்ளிட்ட
நால்வரையும் விடுதலை செய்துள்ளார். ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் கொடுந்தீர்ப்பை வழங்கி நீதிதேவதையையே சோரம் போகச் செய்துவிட்டார்.  

1991-96ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பெற்ற பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வருமானமாகக் கணக்கிட்டும்; ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வங்கிகளில் வாங்கிய கடன்களை வருமானமாகக் கணக்கிட்டும் ஜெயலலிதாவின் வருமானத்தை
அதிகரித்துக் காட்டினார் குமாரசாமி. அதே சமயம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ரூ.75 கோடி செலவு என கின்னஸ் அமைப்பு
கணக்கிட்டிருந்ததை ரூ.28 லட்சமாகக் குறைத்தும், ஜெயலலிதாவின் அசையா சொத்துக்களின் மதிப்பை பன்மடங்கு குறைத்துக் காட்டியும் 197
இடங்களில் 3,000 ஏக்கர் நிலம் வாங்கிக் குவித்ததை நியாயப்படுத்தியும் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக வெறும் 8.12 சதவீதம்தான் சொத்துக்
குவித்துள்ளார்; அது சட்டப்படி குற்றமல்ல என்கிறார் குமாரசாமி. அதற்கு வருமானத்துக்கு அதிகமாக அரசு ஊழியர்கள் 10 சதவீதம் சொத்து வைத்திருப்பது தவறு இல்லை என்ற காலாவதியாகிப்போன உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், 20 சதவீதம் வரை இவ்வாறு சொத்து வைத்துக் கொள்ளலாம்
என்ற ஆந்திர அரசின் சுற்றறிக்கையையும் ஆதாரம் காட்டி ஜெயலலிதாவை விடுதலை செய்ததை நியாயப்படுத்தியுள்ளார்.

இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நிலைப் பாட்டையும் மீறி இது ஒரு அரசியல் பழிவாங்கல் என குமாரசாமி கூறுகிறார். சுருங்கக் கூறினால், தான் ஒரு அப்பாவி தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குமூலத்தையே தீர்ப்பாக வாசித்துவிட்டார். இந்தத் தீர்ப்பின்படி பார்த்தால் 2ஜி, நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட எந்தவொரு ஊழலையும் நியாயப்படுத்தலாம். மாபெரும் ஊழல் பேர்வழிகள் தப்பித்துவிடலாம்.

விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு மட்டுமல்ல, இது ஒரு அரசியல் தீர்ப்பு!

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு நீதிநெறிமுறைகளுக்கு எதிராகவே நடந்தது. தண்டனை பெற்ற ஜெயலலிதாவே தனக்கு எதிராக வாதிடவேண்டிய
அரசு வழக்கறிஞர் யார் என்பதை தீர்மானித்தார். அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது சட்டப்படித் தவறு என்று கூறிய மூன்று
நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கை மறு விசாரணை செய்யத் தேவையில்லை என்று மறுத்தது, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு தன் தரப்பு நியாயத்தை வைத்து வாதாட வாய்ப்புக் கொடுக்காமல், ஒரு நாள் அவகாசத்தில் எழுத்துப்பூர்வ பதிலை மட்டுமே சமர்ப்பிக்க அனுமதித்தது.

இவ்வாறு உச்சநீதிமன்றமே இயற்கை நீதிக்கு எதிராக குற்றவாளிகளுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதற்குப் பின்னால்
பலமோசடிகள் பொதிந்துள்ளன.

வாங்கிய காசு ஜீரணமாகாமல் வாந்தி எடுத்த தீர்ப்பு என்பற்கு குமாரசாமி தீர்ப்பின் ஆவணமே சாட்சியாக மாறியதுதான் இவ்வழக்கின் வேடிக்கையும்
வினோதமுமாகும்.

இத்தீர்ப்பில் ஜெயலலிதா தரப்பு வங்கிகளில் வாங்கியக் கடன்களின் கூட்டுத்தொகையை ரூ.10.5 கோடி என்பதற்கு பதிலாக 24 கோடி என ரூ.13.5 கோடியை தவறாகக் கூட்டிக் காட்டியதால்தான் ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டுள்ளார். எனவே அந்தக் கணக்கை நேர் செய்தாலே
ஜெயலலிதா 76 சதவீதம் சொத்துக் குவித்தவர் என்றாகி தண்டனை உறுதிப்படுத்தப்படுவார். எனவேதான் இந்த மோசமான தீர்ப்பை எதிர்த்து
மேல்முறையீடு செய்யவேண்டும். தீர்ப்புக்குத் தடை வாங்கவேண்டும். அந்தத் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கக் கூடாது
என்கிறோம்.

அவ்வாறு பதவி ஏற்றது மேல்முறையீட்டைச் சீர்குலைக்கவே பயன்படும்.

நீதிபதி குமாரசாமி கூறுவது போல ஜெயலலிதாவைப் பழிவாங்குவதற்காக போடப்பட்ட வழக்கு அல்ல இது. மேலும் இவ்வழக்கை அவதூறு வழக்காகக்
கருதமுடியாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானதுமாகும். மேலும் 91-96 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா மீது போடப்பட்ட பல ஊழல் வழக்குகளில் எந்த ஒரு வழக்கிலும் தான் நிரபராதி என்று நிரூபித்து அவர் விடுதலை அடையவில்லை. 2001ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானவுடன் கலர் டி.வி ஊழல், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் ஊழல், நிலக்கரிபேர ஊழல், ஸ்பிக் ஊழல், திராட்சைத் தோட்டம் வாங்கியதில் முறைகேடு, டாமின் நிறுவன ஊழல் போன்ற பல வழக்குகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் சாட்சிகளைப் பிறழ்சாட்சிகளாக மாற்றியும், நீதிபதிகளை மிரட்டியும்தான் விடுதலை அடைந்தார். டான்சி நிலத்தை அபகரித்துக்கொண்ட வழக்கில் உச்சநீதி மன்றம் அவரை விடுவித்து அளித்த தீர்ப்பே அவர் ஒரு ஊழல் பெருச்சாளி என்பதற்கான ஆதாரமாகும். “ஜெயலலிதா தன் மனசாட்சிக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அவர் டான்சி நிலத்தை ஒப்படைப்பது மூலம் பிராயச்சித்தம் தேடவேண்டும்” என்று மன்னிப்புக் கொடுத்ததால்தான் அவ்வழக்கில் விடுதலை ஆனார். எனவே ஜெயலலிதா எவ்விதத்தில் பார்த்தாலும் அப்பாவி அல்ல. அவர் ஒரு ஊழல் பெருச்சாளியே.

எனவேதான், ஊழலை ஒழிப்பதற்கும் நீதியைக் காக்க மேல் முறையீடு செய்யவும், ஜெயலலிதா பதவி ஏற்றதைத் தடை செய்ய வேண்டும் எனவும் கோருகிறோம்.

ஜெயாவின் விடுதலை ஒரு அரசியல் தீர்ப்பே

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்குக் காரணம் பண பலத்தைக் கொண்டு நீதிமன்றங்களை விலைக்கு வாங்கியது
மட்டுமல்ல; மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. செய்துகொண்ட அரசியல் உடன்படிக்கையே விடுதலைக்கான முக்கிய காரணமாகும்.

மோடிகும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து வளர்ச்சி என்ற பேரால் அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்வதில் மன்மோகன் ஆட்சியைவிடவும்
மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுவருகிறது. கார்ப்பரேட் நலன்களுக்காக நிலம் கையகப்படுத்தல் சட்டம், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும்
சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களை நிறைவேற்றத் துடிக்கிறது. இத்தகைய மக்கள் விரோத, தேசவிரோதச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அக்கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.

இத்தகைய சூழலில்தான் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தண்டனைப் பெற்ற குற்றவாளி ஜெயலலிதாவைச் சந்தித்தார். அப்போது மாநிலங்களவையில் அ.தி.மு.க. பா.ஜ.க. வுக்கு ஒத்துழைப்பது என்பதை வெளிப்படையாகவும், பெங்களூரு வழக்கில் ஜெயாவை விடுவிப்பது என்பதை மறைமுகமாகவும் உடன்பாடு செய்துகொண்டனர். இதனடிப் படையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்ததற்கும் ஜெயலலிதா விடுதலைக்கும் தொடர்புண்டு.

ஊழல் ஒழிப்புப் பேசும் மோடிக்கும், ஊழல் பெருச்சாளியான லேடிக்கும் கூட்டணி உருவானது. இவ்வாறு பா.ஜ.க.-அ.தி.மு.க. பாசிசக் கூட்டணியின் விளைவுதான் ஜெயலலிதாவின் விடுதலை. இவ்வாறு இந்துத்துவ பாசிசத்தின் அரவணைப்போடு, விவசாயிகளின் பிணங்களின் மீது மிதந்து சென்றுதான் ஜெயலலிதா அரியணை ஏறியுள்ளார்.

ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் கருவியே நீதிமன்றங்கள்

அரசாங்கப் பதவியிலிருக்கும் எந்த ஒரு உயர் பொறுப்பில் உள்ள அரசியல் வாதியையும் ஊழலுக்காகவோ அல்லது வருமானத்திற்கு அதிகமாகச்
சொத்துக்களைக் குவித்திருப்பதற்காகவோ அவரை குற்றவாளி யாக்கி சிறையிலடைப்பது இயலாத காரியம் என்பதைத்தான் ஜெயலலிதாவின்
விடுதலை காட்டுகிறது.

நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் சுயேட்சையான அமைப்பு அல்ல அது ஆளூம் வர்க்கங்களின் கருவியே என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது. ஆளும் வர்க்கங்களுக்கு புதிய காலனிய சேவைசெய்யும் மோடி அரசாங்கத்தை நிலை நிறுத்தவே உச்ச நீதிமன்றம் மோடிகும்பலின் ஆலோசனைகளை ஏற்று சட்டவிதிகளை மீறி ஜெயலலிதாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது.

ஜெயலலிதா இவ்வழக்கில் தப்பித்துக்கொள்ள 18 ஆண்டுகள் உச்சநீதிமன்றம் துணைபோனது. ஆனால் தண்டனை அளித்த 21 நாட்களிலேயே பிணை
வழங்கியது. மேல் முறையீட்டு வழக்கை மூன்று மாதத்திலேயே முடித்து விடுதலையையும் உச்சநீதிமன்றம் உத்திரவாதப் படுத்திவிட்டது.
ஜெயலலிதா மட்டுமல்ல, லல்லு பிரசாத்யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்றாலும் மேல்முறையீடு செய்து பிணையில் உள்ளார். மேலும் ஜெயலலிதா தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்க ராஜுவுக்கு 7 ஆண்டு தண்டனையை நிறுத்திவைத்து பிணை வழங்கியது ஆந்திர நீதிமன்றம். திரைப்பட நடிகர் சல்மான் கான் குடித்துவிட்டு கார் ஓட்டி ஒரு ஏழையைக் கொன்றதற்காக விதிக்கப்பட்ட 5 ஆண்டு தண்டனையை 3 மணி நேரத்தில் தடைசெய்து பிணை வழங்கியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம். ஓம்பிரகாஷ் சவுதாலா மட்டுமே சிறையிலுள்ளார். இவ்வாறு ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமாக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

ஆனால் ஏழை எளிய மக்கள் நாடு முழுவதும் விசாரணைக் கைதிகளாக 2.8 லட்சம் பேர் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேர் ஒடுக்கப்பட்ட-மக்கள்- பிரிவை சேர்ந்தவர்களாவர். அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட பிரிவுகளின் கீழ் அதிகபட்ச தண்டனைக் காலத்தை விடவும் அதிக காலத்தை சிறையிலேயே கழித்துவருகின்றனர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும், ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவும்
நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதை ஜெயலலிதாவின் விடுதலை மீண்டும் நிரூபித்துள்ளது.

எனவே ஆளும் வர்க்க ஊழல் குற்றவாளிகளையும், கொலைக் காரர்களையும் தண்டிப்பது என்பது மக்கள் நீதிமன்றங்கள் அமைப்பதன் மூலம் மட்டுமே
சாத்தியம். அதற்கான மக்கள் போராட்டங்களே இதற்கு தீர்வுகாணும்.

எனினும் அத்தகைய போராட்டங்களின் ஒரு பகுதியாக இத்தகைய அநீதியான
தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்வது அவசியமாகும்.

மேல் முறையீடு செய்ய அனைவருக்கும் உரிமை வேண்டும்

ஜெயலலிதா வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, “இத்தீர்ப்பில் ஜெயலலிதா பெற்ற கடன்களை கணக்கிட்டுக் காட்டுவதில் கூட்டுத்தொகை
பிழையாகி இருக்கிறது. அதனை சரியாகக் கணக்கிட்டால் நால்வரையும் வழக்கிலிருந்து விடுவித்திருக்க முடியாது. இவ்வழக்கில் கர்நாடக
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல அடிப்படைத் தவறுகள் இருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாங்கிய கடன், கட்டிட மதிப்பீடு, சுதாகரனின்
திருமண செலவுகள் ஆகியவற்றை மதிப்பிட்ட விதம் சட்ட விரோதமாக இருக்கிறது. இவ்வழக்கில் கூட்டுச்சதி, பினாமி சட்டத்துக்கு எதிரான
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியாததால்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதனை இரத்துச் செய்தது தொடர்பாக நீதிபதி குமாரசாமி போதிய விளக்கம் அளிக்கவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மேல் முறையீட்டிற்குத் தகுதியானது” என்று கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியோ இவ்வழக்கிற்கும் கர்நாடக அரசிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. கர்நாடகா மேல்முறையீடு செய்ய வேண்டிய தேவை
இல்லை என தமது கடமையை முழுதாக கைகழுவி விட்டது. காங்கிரஸ் கட்சி மறைமுகமாக ஜெயலலிதாவுடன் அரசியல் பேரம் பேசுகிறது. ஊழல்
திமிங்கிலமான காங்கிரஸ் கட்சி ஊழல் வழக்கில் அரசியல்வாதி ஒருவர் தண்டனைக்குள்ளாவதை எப்படி ஏற்கும்.

இவ்வழக்கு உண்மையில் தமிழக அரசாங்கத்தால்தான் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகிவிட்டதால் தன் மீதான வழக்கில் அவர் எப்படி மேல்முறையீடு செய்வார் என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. தமிழக எதிர்க்கட்சிகளோ கர்நாடக அரசாங்கத்திடம்
மேல்முறையீடு செய்ய வேண்டுமெனக் கோருகின்றன. ஆனால் கர்நாடக அரசு மௌனம் சாதிப்பதால் தே.மு.தி.க மேல் முறையீடு செய்துள்ளது. தி.மு.க மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் 2ஜி வழக்கில் மாட்டியுள்ள தி.மு.க எப்படி இவ்வழக்கை நடத்தும் என்பது கேள்விக்குறி
மட்டுமல்ல, தார்மீக ரீதியில் முரண்கள் அடங்கியே உள்ளன. எனவேதான் அநியாயமான தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான உரிமை
அனைத்து மக்களுக்கும் வேண்டும் எனக்கோருகிறோம். அதற்கான செலவை அரசாங்கமே ஏற்கவேண்டும் எனவும் கோருகிறோம்.

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் உரிமை

நீதியை விமர்சிக்கலாம், ஆனால் நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். நீதிபதி குன்ஹாவை இழிவுபடுத்திய அ.தி.மு.க.வினர்,
குமாரசாமியை விமர்சித்தால் சிறையில் அடைப்போம் என மிரட்டுகின்றனர்.

உண்மை நிலை என்ன? ஊழலுக்கு எதிராக இன்னமும் சில நீதிபதிகள்
அக்கறையோடு செயல்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால் நீதிபதிகளிலேயே 20 சதவீதம் பேர் ஊழலில் திளைக்கிறார்கள் என்பதும், கற்பழிப்பு உள்ளிட்ட பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதும் பல்வேறு விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஜெயலலிதா மீதான இவ்வழக்கின் சூத்திரதாரியான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத் மற்றும் குமாரசாமி போன்றவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதற்கான ஆதாரத்தை முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வெளியிட்டுள்ளார். உலகிலேயே ஊழல் மூலம் அதிகமாக கொள்ளையடித்து வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவில் நீதித்துறையின் இலட்சணம் இதுதான். ஊழல் பெரிச்சாளிகளையும், கருப்புப் பண திமிங்கிலங்களையும் தப்பவைக்கும் நீதிபதிகள் விமர்சனத்துக்கு உரியவர்களே. எனவே நீதிபதிகளை விமர்சிப்பதற்கு மட்டுமல்ல, நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும் மக்களுக்கு உரிமை வேண்டும். அதுவே இத்தகைய மோசடித் தீர்ப்புகளுக்கு முடிவுகட்டும்.

ஊழலை ஒழிக்க `மக்கள் நீதி மன்றங்கள்` அமைக்கப் போராடுவோம்

இன்று நாட்டில் நடக்கும் ஊழல் வழக்குகள் அனைத்திலும் லஞ்சம் வாங்கிய ஜெயலலிதா போன்ற அமைச்சர்கள், அதிகாரிகள் மீது மட்டுமே வழக்குத்
தொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு லஞ்சம் கொடுத்த பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகள் மீது வழக்குத் தொடுத்து நடவடிக்கை
எடுப்பதில்லை. இன்றைய புதிய காலனிய காலக்கட்டத்தில் நிதி மூலதனம் அதாவது பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டுத் தரகுமுதலாளிகள் ஆகியோர்  அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் லஞ்சம் கொடுத்து முறைகேடான அல்லது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஆதாயம் அடைவதற்கு அரசு
எந்திரத்தை விலைக்கு வாங்குவதற்குக் கொடுக்கப்படும் கையூட்டே ஊழல் ஆகும். இதுவே இன்று நாட்டை சீரழிக்கின்ற மாபெரும் ஊழலுக்கு ஊற்றுக்கண் ஆகும். எனவே லஞ்சம் வாங்குபவர்களை மட்டுமல்ல லஞ்சம் கொடுக்கின்ற ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்குச் சேவைச் செய்யும் நீதிமன்றங்களை எதிர்த்துப் புரட்சியின் மூலம் மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கக் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் புரட்சிப் பாதையில் அணிதிரள புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்.

    ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றதை எதிர்ப்போம்!
    நீதிக்கு எதிரான பா.ஜ.க.-அ.தி.மு.க. பாசிசக் கூட்டணியின் சதியே ஜெயாவின் விடுதலை!
      ஆளும் வர்க்கங்களின் கருவிதான் நீதிமன்றம் என்பதை மீண்டும் ஒரு முறை இத்தீர்ப்பு நிரூபிக்கிறது!
      ஊழலை ஒழிக்க நீதியைக் காக்க ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றதை தடை செய்யப் போராடுவோம்!
      அநீதியானத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் தடை கோரவும் அனைவருக்கும் உரிமை வேண்டும்!
      நீதிபதிகளை தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும்!
      ஏகாதிபத்தியவாதிகளுக்கும், தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கும் சேவை செய்யும் நீதி மன்றங்களை எதிர்த்து, `மக்கள் நீதிமன்றங்கள்` 
அமைக்கப் புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

No comments:

Post a Comment