புரட்சித் தியாகிகளின் தர்மபுரி செஞ்சிலை |
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!
செப்-12 - 1980, புரட்சித் தோழர் பாலன் கொல்லப்பட்ட நாள். அந்நாளை இந்தியத் திருநாட்டின் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகப் போராடி உயிர்நீத்த அனைத்துப் புரட்சித் தியாகிகளின் கனவுகளை நனவாக்கச் சூளுரைக்கும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம்.
இவ்வாண்டு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும், புதிய காலனியாதிக்கத்திற்கும் சேவை செய்து, நாட்டில் இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.
அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்ப்போம்
சோவியத் சமூக ஏகாதிபத்திய வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய அரசு கூட்டு சேரா கொள்கையை கைவிட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கும், இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகளை இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்துத்துவ மோடி ஆட்சியோ அதே கொள்கைகளை மிகவும் மூர்க்கத்தனமாக அமல்படுத்தி வருகிறது.
மோடிகும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அமெரிக்கா சென்ற இந்திய இராணுவ அமைச்சர் மனோகர் பரிக் அமெரிக்காவுடன் “இராணுவத் தளவாடங்கள் பரிமாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்” கையொப்பமிட்டார். இதன் மூலம் அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நட்புநாடாக இந்தியா மாறி விட்டதாக அறிவித்துள்ளது. அதாவது “சர்வதேச அளவில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு இரண்டு நாடுகளும் உறுதி பூண்டுள்ளதாக” கூறுவதன் மூலம், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான இராணுவக் கூட்டணியின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்திற்குச் சவாலாக உள்ள சீனாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஜப்பானின் இராணுவக் கூட்டணியில் இந்தியாவை இணைப்பது என்ற அமெரிக்காவின் திட்டத்திற்கு மறைமுகமாக மோடிகும்பல் இணங்கி விட்டதற்கான அறிகுறியாகவே தெரிகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்போக்கு உருவாகும் நிலையை உருவாக்கி தென்னாசியாவில் போர்ப் பதற்றத்தை உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் போர்த்தளவாடங்களை விற்பது உள்ளிட்ட இந்தியப் பொருளாதாரத்தை இராணுவப் பொருளாதாரமாக மாற்றுவதுடன் அமெரிக்க கம்பெனிகள் பல ஆயிரம் கோடிகள் இலாபம் ஈட்டவும் மோடி ஆட்சி துணைபோகிறது. எனவே அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற போராடுவதே இப்பிராந்தியத்தின் அமைதிக்கு வழியாகும்.
புதிய தாராளக் கொள்கைகளும் இந்திய மக்களின் துயரமும்
இந்திய அரசு கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தி வரும் புதிய தாராளக் கொள்கைகள் நாட்டை ஓட்டாண்டியாக்கி வருகிறது. இத்தகைய நாசகாரக் கொள்கைகளை மோடி ஆட்சி மூர்க்கத்தனமாக அமல்படுத்தி வருகிறது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை இரயில்வே, பாதுகாப்பு, வங்கிகள், போக்குவரத்து, சுரங்கம் என அனைத்துத் துறைகளிலும் நூறு சதவீதம் அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டுள்ளது. இயற்கை மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையிடுவதற்கான பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றிவிட்டது.
விண்ணை முட்டும் விலை உயர்வுகள், வேலையின்மை பெருகிக் கொண்டே செல்லுதல், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு மக்கள் மீது பொருளாதார நெருக்கடியின் சுமைகள் சுமத்தப்படுகின்றன.
தொழிலாளர்களின் ஊதியம் 1982-83 ஆம் ஆண்டுகளில் தொழிற்துறை முதலீட்டில் 30 சதவீதமாக இருந்தது, 2012-13 ஆம் ஆண்டில் வெறும் 12.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. தொடர்ந்து கூலி குறைந்து கொண்டே போகிறது. ஆனால் முதலாளிகளின் இலாபச் சதவீதமோ அதே காலப்பகுதியில் 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்ந்துவிட்டது. தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ உயர்ந்து கொண்டே போகிறது. எட்டு மணிநேர வேலை நாள் 12 மணி நேர வேலை நாளாக மாறிவிட்டது. அரசாங்கத்தில் பணிபுரியும் அங்கன்வாடி, சத்துணவு, மதிய உணவுத் திட்டப் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் என்ற பேரால் உழைப்பு சுரண்டல் பெருகுகிறது.
அடிமைகளாய், அத்துக் கூலிகளாய், அடுத்த வேளை உணவுக்கே என்ன செய்வது என்று தவிக்கும் அன்றாடங் காய்ச்சிகளாய் வெந்ததைத் தின்று வாழும் 93 சதவீத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டம் கொண்டுவர மோடி ஆட்சி மறுக்கிறது. ஆனால் அந்நிய முதலீட்டைக் கவர்வது என்ற பேரில் இருக்கும் உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக மாற்றி வருகிறது. ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் தொழிற்சாலைச் சட்டம், தொழிலாளர் சட்டம் என 44 சட்டங்களை 5 ஆகக் குறைத்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டது.
மேலும், பாரம்பரியமான கைத்தறி, விசைத்தறி, முந்திரி, கயிறு, கைவினைப் பொருட்கள் போன்ற சிறு குறு தொழில்களும், சில்லறை வணிகம் போன்றவையும் அரசாங்கத்தின் கொள்கைகளால் அழிந்து பல கோடி பேர் வேலையிழந்து வீதிகளில் திரிகின்றனர்.
வேளாண்மைத் துறையில் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களை அனுமதித்து வேளாண்மைக் குழுமமயத்தை மோடி கும்பல் தீவிரப்படுத்துகிறது. நில உச்சவரம்பைத் தளர்த்தி மான்சாண்டோ, ராக்பெல்லர், கார்கில், ரிலையன்ஸ், டாட்டா, ஐடிசி போன்ற அமெரிக்கப் பகாசுரக் கம்பெனிகளும் உள்நாட்டு நிறுவனங்களும் 1000 ஏக்கர் பெரும் பண்ணைகள் அமைப்பது தொடர்கிறது. வேளாண் உற்பத்தி, ஆராய்ச்சி, வர்த்தகம் அனைத்திலும் அமெரிக்கக் கம்பெனிகள் தங்களது ஆதிக்கத்தை நிறுவி வருகின்றன. காலை முதல் இரவு வரை நம் பசிக்காகவும், வாய் ருசிக்காகவும், ஆற்றல் பெறவும், நோய் தடுப்பு பெறவும் நாம் சாப்பிடும் உணவாகட்டும் அல்லது ஊக்க உணவாகட்டும் அனைத்தும் அந்நிய நாட்டு பிடியில் சிக்கிக்கொண்டுவிட்டன. நாம் எதை விதைக்க வேண்டும், எதை உண்ண வேண்டும் என்பதை அமெரிக்கக் கம்பெனிகளே தீர்மானிக்கின்றன.
ஆனால், இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் நம்பி இருக்கும் விவசாயத்திற்கும், அதற்கு உதவும் பாசனத்திற்கும், விதைப் பண்ணைக்கும், உரத் தொழிலுக்கும் அரசு முதலீட்டை, மானியத்தை படிப்படியாகக் குறைத்து, தனியார்மயத்தை அனுமதித்து விவசாயிகளின் உற்பத்திச் செலவை அதிகரிக்கச் செய்து, அதே நேரத்தில் உள்நாட்டில் பயிராகும் விளைபொருட்களை ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவான விலைக்கு தங்குதடையின்றி இறக்குமதி செய்து கொட்டிக் குவித்ததனால் உள்நாட்டு விவசாயிகள் போட்டி போட முடியாமல் நஷ்டமடைந்து கடனாளியாக மாறுகின்றனர். கந்துவட்டி, வங்கிக் கடன் தொல்லை தாங்காமல் கடந்த 15 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். புதிய காலனிய கார்ப்பரேட் விவசாயக் கொள்கைகள் விவசாயிகளின் தூக்குக் கயிறாக மாறியுள்ளது.
அடுத்து மோடியின் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்த போதிலும்கூட அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, பால் போன்றவற்றின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த விலையுயர்வுகள் எல்லாம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டதாகும். அந்நிய நாட்டு நிறுவனங்களும், வர்த்தகச் சூதாடிகளும் (ஆன்லைன் வர்த்தகம்) பொருட்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு ஊகவாணிபம் செய்ய மோடி கும்பல் அனுமதித்ததுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும். மோடி ஆட்சியில் அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் வர்த்தகச் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டன. ஆனால் ஏழை-எளிய மக்களுக்கோ சத்துணவுப் பற்றாக்குறை, பட்டினி சாவுகள்தான் பரிசாகக் கிடைத்துள்ளன.
சமூக நலத்திட்டங்களுக்கு மூடுவிழா
அரசாங்கத்தின் நிதி பற்றாக் குறையை கட்டுக்குள் வைப்பது என்ற பேரில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சமூக நலத்திட்டங்களை தனியார்மயமாக்கி வணிகமயமாகுவதை மோடி கும்பல் தீவிரப்படுத்துகிறது.
மோடி ஆட்சி கல்விக்கான நிதியை, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கவேண்டும் என்ற கோத்தாரி கமிஷனின் கோரிக்கையை ஏற்கத் தயாரில்லை. இவ்வாண்டு வெறும் 3.4 சதவீதம்தான் ஒதுக்கியுள்ளது. உயர்கல்வி மட்டுமல்ல, பள்ளிக் கல்வியையும் முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டது.
அண்மையில் மோடி கும்பல் முன்வைத்துள்ள புதிய கல்விக் கொள்கை என்பது உயர்கல்வியை பன்னாட்டு பல்கலைக் கழகங்களிடம் ஒப்படைத்துவிட்டு, பள்ளிக் கல்வியைத் தனியார் மயம் வணிகமயமாக்குவதுடன் காவிமயமாக்கும் திட்டமேயாகும்.
தேச ஒற்றுமையைக் காப்பது என்ற பேரில் பள்ளிக் கல்வியை மத்தியப் பட்டியலுக்கு கொண்டு சென்று நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் எனும் பாசிசத் திட்டம்; எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி என்பதை நான்காம் வகுப்பு என மாற்றி ஏழை-எளிய மாணவர்களை பள்ளியைவிட்டு விரட்டியடிப்பது; திறன் மேம்பாடு என்று கூறி 9 ஆம் வகுப்பிலேயே தொழிற்பயிற்சி அளித்து ஏழை மாணவர்களை வேலைக்கு அனுப்புவது, குழந்தைத் தொழிலாளர் முறையை உருவாக்குவதுடன் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி கிட்டாமல் ஆக்குவது; தேசிய அளவில் பள்ளிகளுக்கு தரச் சான்று அளிப்பது என்ற பேரால் அரசுப் பள்ளிகளை மூடிவிடுவது; மதிய உணவுத் திட்டத்திலிருந்து அரசு விலகிக் கொண்டு தனியார் தர்ம ஸ்தாபனங்களை அனுமதித்ததன் மூலம் தனியார் மயத்தைத் திணிப்பது; உயர்கல்வி நிறுவனங்களை இனி அரசு துவங்குவதில்லை மாறாக வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிடம் ஒப்படைத்துவிடுவது; இறுதியாக இந்தியக் கலாச்சாரத்தைப் போதிப்பது என்ற பேரில் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணிப்பது, வேதக் கல்வியை வழங்குவது என்று கல்வியைக் காவிமயமாக்குவது. சுருக்கமாகக் கூறினால் குருகுலக் கல்வியைத் திணிப்பதே.
அன்று, மெக்காலேக்கு தேவைப்பட்டது உடலால் இந்தியனாக உள்ளத்தால் பிரிட்டிஷாருக்கு கணக்குப்பிள்ளைகளை உருவாக்கும் கல்வி; நேற்று, ராஜீவ்காந்திக்கு தேவைப்பட்டது பில்கேட்சுக்கு வேலையாட்களை உருவாக்குவது; இன்று, மோடிக்கு தேவைப்படுவது உள்ளத்தால் இந்து மதவெறியும், உடலால் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கொத்தடிமை வேலை செய்ய, குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கும் குருகுலக் கல்வி அவ்வளவுதான்.
மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடனேயே நிதிப் பற்றாக் குறையை குறைப்பது என்ற பேரில், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 20 சதவீதம் குறைப்பதாக முடிவுசெய்தது. 2015-16 ஆம் ஆண்டிற்கான சுகாதாரம், குடும்ப நலம் இரண்டுக்கும் சேர்த்து ரூ.5000 கோடிதான் கூடுதலாக ஒதுக்கியது. தேசியச் சுகாதார நிறுவனத்தின் குறைந்தபட்ச மதிப்பீட்டின்படி இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களுக்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் 2.5 சதவீதம், அதாவது தற்போதைய ஒதுக்கீடான ரூ.37,061 கோடியிலிருந்து இருமடங்கு ரூ.74,122 கோடி ஒதுக்கிடு செய்யவேண்டும். ஆனால் கிராமப்புற சுகாதாரத்திற்கு நிதியைக் குறைத்து காப்பீட்டுத் திட்டத்தைப் பரவலாக்கி தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு வழிவகுக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பிணத்தை எடுத்துப்போக ஊர்தியின்றி தோளில் சுமக்கும் கொடுமை நாட்டில் பெருகும் அவலம். அத்துடன் உயிர்காக்கும் 343 மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டை 74 மருந்துகளுக்கு எனக் குறைத்ததை மோடி கும்பல் ஏற்றுக்கொள்கிறது, இதன் மூலம் பன்னாட்டு கம்பெனிகள் உயிர்காக்கும் மருந்துகளின் விலைளை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. ஏழைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் எட்டாக்கனியாகி நோயால் மாள்கின்றனர்.
இவ்வாறு மோடி கும்பல் புதியதாராளக் கொள்கைகளை அமல்படுத்தி தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரின் மீதும் கொடிய தாக்குதலை தொடுத்து வருகிறது. அது நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை உருவாக்கி குறைந்த காலத்திலேயே மோடி கும்பல் செல்வாக்கிழந்துவிட்டது. மோடி கும்பலின் தேசவிரோதக், மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அலையலையாகப் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். மோடி கும்பலோ இத்தகைய மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும், பிளவுபடுத்தி திசைதிருப்பவும் ஆர்.எஸ்.எஸ் காவிக் காடையர்கள் மூலம் இந்து மதவெறிக் கலவரங்களை நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடுகிறது.
அன்று அத்வானி தலைமையில் பாபர்மசூதி இடிப்பின் மூலம் இந்துமதக் கலவரத்தை தூண்டிய பா.ஜ.க, இன்று மோடி தலைமையில் “பசு பாதுகாப்பு” என்ற பேரில் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், இசுலாமிய மற்றும் கிறித்துவ சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகவும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். குஜராத்தில் உனா நகரில் தலித்துகள் மீது நடந்த தாக்குதல் போல அம்மாநிலத்தில் ஆண்டுக்கு 1500 தாக்குதல்கள் நடக்கின்றன. உத்திரப் பிரதேசத்தில் 8000 தாக்குதல்கள் நடக்கின்றன. நாடு முழுவதும் தலித்துகள் மீதும் இசுலாமியர்கள் மீதும் காவிக் கும்பல் நடத்தும் இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சம உரிமை மறுப்பு, வழிபாட்டு உரிமை மறுப்பு, பொது உரிமை மறுப்பு மற்றும் ஆணவக் கொலைகள் என தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. இந்து மதவெறியர்களும் சாதி வெறியர்களும் கூட்டுச்சேர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இந்துத்துவப் பாசிசம் சிறுபான்மை மதத்தினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக மட்டும் இத்தகைய தாக்குதல்களை நடத்தவில்லை. இந்து ராஷ்டிரம் என்ற பேரில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் மீதும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீதும் தாக்குதல் நடத்துவதாகும். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதத்தை பிற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பதுமாகும்.
இந்திய அரசு தேசிய சுயநிர்ணயத்திற்கான போராட்டங்களை பிரிவினை வாதம் என்று கூறி இராணுவத் தாக்குதல்கள் மூலம் ஒடுக்குகிறது. அதற்கு இந்துத்துவப் பாசிசம் தத்துவத்தை வழங்குகிறது. இந்திய அரசு, காஷ்மீர் இணைப்பின் போது அம்மக்களுக்கு அளித்த கருத்துக் கணிப்பு நடத்தி தனிநாடு அமைப்பது பற்றி முடிவெடுப்பது என்ற வாக்குறுதியை மறுத்துவிட்டது. அரசியல் சட்டம் 370 வழங்கிய சிறப்பு அந்தஸ்தையும் படிப்படியாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது. இராணுவத்தின் துணைகொண்டு பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. தற்போது 50 நாட்கள் ஊரடங்கு அறிவித்தும் கூட அம்மக்களின் போராட்டம் ஓயவில்லை. மோடி ஆட்சியோ அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் தீர்வு என்று கூறி அரசு வன்முறை மூலம் தீர்வு காண முயல்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட வடகிழக்கு மக்களின் தேசியக் கோரிக்கையை அடக்க இராணுவத்திற்கு எல்லையில்லா அதிகாரத்தை (சிறப்பு இராணுவ அதிகாரச் சட்டம்) வழங்கி, அம்மக்கள் மீது சட்டவிரோதமாகப் போலி மோதல் கொலைகளையும், கற்பழிப்புகளையும் அரங்கேற்றி வருகிறது. ஒரு ராணுவ ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அத்தகைய கருப்புச் சட்டதை திரும்பப் பெறவேண்டும். காஷ்மீரிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெற்று கருத்துக் கணிப்பு நடத்துவது ஒன்றுதான் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாகும்.
எனவே இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதை எதிர்த்தும், இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் போராடுவது நாட்டு மக்களின் முதன்மையான கடமையாக மாறிவிட்டது. இன்றைய இந்துத்துவப் பாசிசம் என்பது புதிய காலனியத்திற்குச் சேவை செய்யும் ஒரு கார்ப்பரேட் பாசிசமாகும். எனவே மோடி கும்பல் அமல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்ப்பதிலிருந்து அதன் மதவெறிப் பாசிசத்தை பிரிக்கமுடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தையும் இணைத்துப் போராடுவது ஒன்றுதான் பாசிசத்தை வெல்லுவதற்கான ஒரே வழியாகும்.
காங்கிரசின் சமரசம்
நாடாளுமன்ற எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சி என்றும் எனவே காங்கிரஸ் கட்சியோடு கூட்டு சேர்ந்து இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்துப் போராடினால்தான் வெல்லமுடியும் என்று சிலர் அண்மைக் காலங்களில் பேசி வருகின்றனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் மத்தியில் ஆளும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கட்சிகளேயாகும். காங்கிரஸ் கட்சியோ புதிய தாராளக் கொள்கைகளைத் துவங்கி வைத்த கட்சியாகும். அமெரிக்காவுடனான இந்திய அரசின் யுத்ததந்திரக் கூட்டணியை போட்டி போட்டுக்கொண்டு அமல்படுத்தும் கட்சியாகும். அத்துடன் அண்மைக் காலங்களில் ஜி.எஸ்.டி. சட்டம் உட்பட மோடி அரசு செயல்படுத்தும் புதிய தாராளக் கொள்கைகளுக்கும், காஷ்மீர் உள்ளிட்ட தேசிய ஒடுக்குமுறைகளைக்கும் வெளிப்படையாக ஆதரவு கொடுத்து கூடிக் குலாவுகிறது. இந்த துரோகத்துக்கெல்லாம் உரிமை கோருகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சியல்ல. மாறாக அது இந்து மதவாதத்தை காரியவாதமாகப் பயன்படுத்துகிறது. “இந்துத்துவமே மதச் சார்பின்மைக்கு மிகச் சக்தி வாய்ந்த பாதுகாவலன்” என்று அக்கட்சி தீர்மானமே போட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் இந்து மதவாதத்தைப் பயன்படுத்தி ஒடுக்குவதிலும், பஞ்சாபில் சீக்கிய மதவாதத்தைத் தூண்டி பிந்தரன்வாலேவை வளர்த்து, பொற்கோவிலில் புளூஸ்டார் இராணுவ நடவடிக்கை எடுத்து, பின்னர் அதே மதவெறிக்கு இந்திராகாந்தி பலியானது, 1992-ல் பாபர் மசூதி இடிப்பிற்கு துணைபோனது, பின்பு பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்தது. எனவே காங்கிரசு கட்சியும் மதவாதத்தைப் பயன்படுத்தும் கட்சிதான். சாதி, தீண்டாமை ஒழிப்பு பிரச்சினையிலும் அக்கட்சி ஒரு சந்தர்ப்பவாத நிலைபாட்டையே எடுக்கிறது. இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்குபெறுவது என்பது ஒரு மோசடியேயாகும். எனவே காங்கிரஸ் கட்சியை தனிமைப் படுத்துவதன் மூலம் மட்டுமே இந்துத்துவப் பாசிசத்தை வெல்லமுடியும்.
திராவிடக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம்
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வோ, அல்லது வலிமையான எதிர்க் கட்சியாக உருவாகியுள்ள தி.மு.க-வோ இரண்டு கட்சிகளுமே அமெரிக்காவின் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை அமல் படுத்துவதிலும், அந்நிய மூலதனத்தின் வேட்டைக்காடாக தமிழகத்தை மாற்றுவதிலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதிலும் போட்டிபோடும் கட்சிகள்தான். தமிழ் நாட்டு மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளான நதிநீர்ப் பிரச்சினையோ, கல்வியை மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்லும் பிரச்சினையோ, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்புப் பிரச்சினையோ அல்லது டாஸ்மாக்கை மூடும் பிரச்சினையோ எந்த ஒரு பிரச்சினையிலும் இக்கட்சிகள் ஒன்றுபட்டு போராடத் தயாரில்லை. இப்பிரச்சினைகளை எழுப்பக் கூடாது என்பதில் இக்கட்சிகள் திரைமறைவில் உடன்பாடு கொண்டுள்ளனர். ஆனால், சட்டசபையில் இரு கட்சிகளின் தலைவர்களை ஒருமையில் பேசுவது என்றப் பிரச்சினையைக் காட்டி வெளிநடப்பு செய்வது அல்லது வெளியேற்றுவது என இக்கட்சிகள் மக்களை திசை திருப்புகின்றன. ஜெயலலிதாவோ எல்லாவிதமான ஜனநாயக நெறிமுறைகளையும் அழித்து இலவசத் திட்டங்கள் என்ற மாயையில் மக்களை ஆழ்த்தி, டாஸ்மாக் போதையில் ஆழ்த்தி ஆட்சியில் தொடரலாம் எனக் கனவுகாண்கிறார். இது கனவுகள் கலையும் காலம்.
எனவே, இந்துத்துவ மோடி ஆட்சி அமெரிக்காவின் புதியகாலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், இந்து மதவெறிப் பாசிசத்தை எதிர்த்தும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தேசபக்த ஜனநாயகச் சக்திகள் ஒன்றுபட்டு ஒரு மக்கள் அணியை கட்டியமைக்க அணிதிரள்வோம் என இந்தத் தியாகிகள் நினைவு நாளில் அறை கூவி அழைக்கிறோம்.
* அந்நிய மூலதனத்திற்கும், அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்துத்துவப் பாசிசம்!
* உலக மேலாதிக்க அமெரிக்காவின் “இளைய பங்காளி”, இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
* இந்துத்துவப் பாசிச ஆட்சியுடன் “கூடிக்குலாவும்” பாசிச காங்கிரசை தனிமைப்படுத்துவோம்!
* அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே அந்நிய மூலதனத்திற்கும், இந்துத்துவப் பாசிசத்திற்கும் துணைபோகும் கட்சிகளே!
* ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு மக்கள் அணியைக் கட்டுவோம்!
* வங்கிகள், காப்பீடு, இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!
* கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் அரசின் பொறுப்பை கைவிட்டு வணிகமயமாக்குவதை எதிர்த்து முறியடிப்போம்!
* புதிய காலனிய “கார்ப்பரேட்” வேளாண்மைக் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
* தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
* காஷ்மீரில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து! படைகளை திரும்பப் பெறு!
* சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!
* ஆங்கில, இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்ப்போம்!
* தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்கப் போராடுவோம்!
* மத, சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவோம்! சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு.
செப்டம்பர். 2016
No comments:
Post a Comment