மே நாள் உலகப் பாட்டாளிவர்க்கத்தின் போர் நாளாகும். இன்று உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியானது வரலாறு காணாத அளவிற்கு தீவிரப்பட்டுவரும் ஒரு சூழலில்; ஏகாதிபத்தியவாதிகள் தங்களது நெருக்கடிளின் சுமைகளை சொந்த நாட்டு மக்கள்மீதும், மூன்றாம் உலக நாட்டு மக்கள்மீதும் சுமத்துகிற ஒரு சூழலில்; ஏகாதிபத்தியவாதிகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது உலக மேலாதிக்கத்திற்காக யுத்தத் தயாரிப்புகளைச் செய்யும் ஒரு சூழலில்; ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் தாசர்களின் நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீதும், மூன்றாம் உலக நாடுகள்மீதும் திணிப்பதை எதிர்த்தும், யுத்தத்தயாரிப்புகளை எதிர்த்தும், சோசலிசத்திற்கும், தேசிய விடுதலைப் புரட்சிக்குமான போராட்டத்தில்
உலகப்பாட்டாளிகளும், மூன்றாம் உலக நாட்டு மக்களும் புதிய சாதனைகளை படைக்கும் ஒரு சூழலில் இம் மே நாளை சந்திக்கின்றோம்.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி:
உலக முதலாளித்துவத்திற்கு உந்து சக்தியாகத் திகழும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பெரும் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் மூடப்பட்டுவருகின்றன. அந்நாட்டில் நிதித்துறை நெருக்கடி அனைத்துத்துறையும் தழுவிய நெருக்கடியாக மாறிவிட்டது. 1970களில் ஏற்பட்ட முதலாளித்துவப் பொது நெருக்கடியின் தொடர்ச்சியே இன்றைய நெருக்கடியாகும். 80ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ரீகனும், பிரிட்டன் பிரதமர் தாட்சரும் நெருக்கடியிலிருந்து முதலாளித்துவ வர்க்கங்களை மீட்பதற்கு தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தினர். தனியார்மயம்-தாராளமயம் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளை மீட்கவல்ல மாமருந்து அல்ல. மாறாக நெருக்கடி மென்மேலும் தீவிரம் அடைந்து ஏகாதிபத்தியவாதிகளை புதை மணலில் ஆழ்த்துகின்ற ஆலகால விஷம்தான் என்பது தற்போது நிரூபணமாகிவிட்டது.
தாராளமய-தனியார்மயக் கொள்கைகள்தான் வரலாறு காணாத முதலாளித்துவ நெருக்கடிக்குக் காரணமாகும்.
ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தியானது கடும் வீழ்ச்சியை சந்திக்கிறது. அது வேலையின்மையைப் பெருக்கி, வாங்கும் சக்தியை குறைத்து, உள்நாட்டுச் சந்தையை சுருங்கச் செய்கிறது. இது வர்த்தகத்தில் வீழ்ச்சியை கொண்டுபோகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அண்மையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள ஆய்வின்படி அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) , (- 2.6 )சதவீதம் எனவும், ஐரோப்பா,(- 3.2 )சதவீதம், ஜப்பான்,(- 5.0) சதவீதம், ஆசியா,(- 0.7) சதவீதம் என எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் வேலையின்மை 8.5 சதவீதமாக உயர்ந்துவிட்டது. வர்த்தகப்
பற்றாக்குறையானது ஆண்டிற்கு 1 லட்சம் கோடியாகும். அமெரிக்காவின் டாலர் வீழ்ச்சியடைந்து உலக நாணயம் என்ற அந்தஸ்த்தை இழந்துவிட்டது. மேற்கண்ட நெருக்கடியானது உலக அளவிலான ஒட்டுமொத்த உற்பத்தி வீழ்ச்சியையும், அந்நிய வர்த்தகத்தையும் சீரழித்து உலக முதலாளித்துவ நெருக்கடியை ஆழப்படுத்திவருகிறது.
மிகு உற்பத்தி நெருக்கடி:
அமெரிக்காவின் நிதித்துறையில் செயற்பட்ட மோசடிகள்தான் நெருக்கடிக்குக் காரணம் என்று முதலாளித்துவவாதிகள் கூறுகின்றனர். ஆனால் இது உண்மையான காரணம் அல்ல. உண்மையான காரணம், முதலாளித்துவப் பொருள் உற்பத்தியின் மிகு உற்பத்தியேயாகும். கூலியைக் குறைத்து, நவீன உற்பத்திமுறையை தொடர்ந்து புகுத்தி பொருள் உற்பத்தியை அபரிமிதமாக பெருக்கி குவிப்பதும், வறுமையையும், வேலையின்மையையும் அதிகரிப்பதும் பொருட்கள் விற்காமல் தேங்கிக்கிடப்பதுமே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகும்.
இன்று உலக அளவில் மோட்டார் வாகனத்துறையில் ஆண்டிற்கு 94 மில்லியன் வாகனங்கள் தயாரிக்க முடியும். ஆனால் 34 மில்லியன் வாகனங்கள் மட்டுமே விற்கின்றன. அதேபோலத்தான மின் மற்றும் மின்னனுப் பொருட்களும், நுகர்பொருட்களும் உற்பத்தி செய்து விற்காமல் மிகை உற்பத்தியாய் தேங்கிக் கிடக்கின்றன. உணவு தானிய உற்பத்தியும் கூட ஏகாதிபத்திய நாடுகளில் மணல் மேடுகள் போல் குவிந்துகிடக்கின்றன. மறுபுறம் உலகின் மக்கள் தொகையில் பாதிப்பேர் ஒரு நாளைக்கு இரண்டு-அமெரிக்க- டாலர்கள்- வருமானம் கூட இன்றி வறுமையில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். ஆக இன்று உலகம் மிகு உற்பத்தி நெருக்கடியை சந்திக்கிறது.
நெருக்கடிகளின் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகிறது:
முதலாளித்துவ மிகு உற்பத்தியின் நெருக்கடியை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிற ஏகாதிபத்தியவாதிகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களின் மீதும், மூன்றாம் உலக நாட்டுமக்கள் மீதும் திணிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து ஆளும் வர்க்கங்களை பாதுகாக்க பகாசுர நிதி நிறுவனங்களுக்கும், பன்னாட்டுக்கம்பெனிகளுக்கும் ஒபாமா அரசு 720 மில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்குகிறது. தனியார்மயம்தான் தீர்வு என்றவர்கள் இன்று தனியார் நிறுவனங்களை அரசின் நிதி கொண்டு முட்டுக் கொடுக்கின்றனர். அந்தச் சுமைகளை
மக்களின் மீது சுமத்துகின்றனர்.
தங்கள் நாட்டு முதலாளிகளைக் காப்பதற்கு, தாராளமயக் கொள்கைகளை கடைபிடிக்கக் கோரி மூன்றாம் உலக நாடுகளை நிர்ப்பந்திக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியவாதிகள், அதே வேளையில் தங்கள் நாடுகளில் காப்புக்கொள்கைகளை கடைபிடிக்கின்றனர். அமெரிக்காவின் ஒபாமா தமது நாட்டுத் திவாலாகிப்போன நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவி
செய்யும்போது அந்நிறுவனங்கள் தங்களது வேலைகளை வெளி நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். தமது நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களின் மீது கட்டுப்பாடுகளையும், அதிக வரிவிதிப்புகளையும் செய்து காப்புக்கொள்கைகளைக் கடைபிடிக்கிறார். அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் இதே காப்புக்கொள்கைகளை
கடைப்பிடித்துக்கொண்டே மூன்றாம் உலக நாடுகளின் மீது தங்களது நெருக்கடிகளைத் திணிக்கின்றனர்.
மேலும் காப்புக்கொள்கைகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டியையும் தீவிரப்படுத்துகின்றன. அமெரிக்காவின் டாலரின் ஆதிக்கத்தை பிற ஏகாதிபத்திய நாடுகளும், சீனாவும் ஏற்க மறுக்கின்றன. அமெரிக்காவின் அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை எதிர்த்து பிற ஏகாதிபத்திய நாடுகள் போட்டி போடுவது அதிகரிக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வலிமையைக் கொண்டு ஈடுகட்ட முனைகிறது. தமக்கு அடங்க மறுக்கும் மூன்றாம் உலக நாடுகளை பயங்கரவாத நாடுகள் எனக் கூறி அந்நாடுகள் மீது ஆட்சிக்கவிழ்ப்பு- ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்துகிறது. ஈராக், ஆப்கான் அடுத்து வடகொரியாவை மிரட்டுகிறது. ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்பு
அமெரிக்காவின் நெருக்கடியைத் தீவிரமாக்கியதே தவிர தீர்க்கவில்லை. தற்போது ஒபாமா ஆட்சி சீனாவோடும், ரசியாவோடும் சமரசம் பேசுகிறது. நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்காவை மீட்டு மீண்டும் போருக்குத் தயாரிப்பதே ஒபாமாவின் சமரசப் பேச்சு நாடகங்களின் நோக்கமாகும். எனவே அமெரிக்காவின் யுத்திகளை எதிர்த்தும், ஈராக் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறக்கோரியும், அமெரிக்கா உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவியுள்ள இராணுவத்தளங்களை கலைக்கக் கோரியும் உலகப் பாட்டாளிகள் ஓர் அணியில் திரண்டு கோர வேண்டும்.
ஏகாதிபத்திய நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவது உலக அளவில் வர்க்கப்போராட்டத்தின் வளர்ச்சியை தீவிரமாக்கி வருகிறது. உலக பாட்டாளிவர்க்கத்திற்கு புரட்சிகர வாய்ப்புகள் உருவாக வழிவகுக்கிறது. முதலாளித்துவ சர்வாதிகாரமா அல்லது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமா ?; முதலாளித்துவ சுரண்டலுக்கும், அரசியல் பொருளாதார அடிமைத்தனத்திற்கும் முடிவுகட்டுவதா; காலனிய நுகத்தடியும் ஏகாதிபத்திய யுத்தமுமா அல்லது அமைதி மற்றும் மக்களுக்கிடையில் சகோதரத்துவ உறவுகளா ?; முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அராஜகமுமா அல்லது அராஜகமும் நெருக்கடியும் அல்லாத சோசலிசப் பொருளாதாரமா? என்பதுதான் அத்தகைய வாய்ப்புக்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இந்தியா:
தாராளமய-தனியார்மயக் கொள்கைகளை இந்திய அரசு 90ஆம் ஆண்டுகளிலிருந்து செயல்படுத்தி நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றி வருகிறது. தற்போது மன்மோகன், சோனியாக் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்டுள்ள இராணுவ ஒப்பந்தமும், அணுசக்தி ஒப்பந்தமும், இந்திய இராணுவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் ஒரு அடியாட்படையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகள் அமெரிக்காவின் அயலுறவுக்கொள்கைகளுக்கு சேவை செய்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் "பயங்கரவாத எதிர்ப்புப்போர்" எனும் பேரில் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களை இந்திய அரசு ஆதரிக்கிறது. ஈராக், ஆப்கன் மீதான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ஆதரவளிக்கிறது. இலங்கையில் நடக்கும் ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக ராஜபட்சே கும்பலுக்கு ஆதரவளிக்கிறது. விடுதலைப்புலிகள்
பயங்கரவாதத்தை எதிர்ப்பது எனும் பேரில் இலங்கை அரசுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் செய்கிறது. எனவே ஈழவிடுதலைக்கு எதிரான அமெரிக்க, இந்திய, இலங்கைக் கூட்டணியை முறியடிக்க தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஈழவிடுதலைப்போரை ஆதரிக்க வேண்டும்.
ஏகாதிபத்திய நெருக்கடிகள் இந்தியாவின் மீது திணிப்பு:
90ஆம் ஆண்டுகளிலிருந்து இந்திய அரசு செயல்படுத்தி வரும் ஏகாதிபத்திய உலகமய-தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றியதுடன் உள்நாட்டுத் தொழிலையும், வேளாண்மையையும் அழித்துவிட்டது. அந்நிய முதலீடுகளைச் சார்ந்த, ஏற்றுமதியைச்சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே ஊக்கமளிக்கப்பட்டது.
தற்போது உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகு உற்பத்தி நெருக்கடியால் இந்த கொள்கை இந்தியாவை சீரழித்துக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கவைத்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 9 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. 80களில் 12 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி உலகமயக் கொள்கைகளை செயற்படுத்தியபின் தற்போது 5.5 சதவீதமாக சரிந்துவிட்டது. வேளாண்துறையோ 4.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. பங்குச்சந்தையின் வீழ்ச்சியால் கடந்த
ஆறுமாத காலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்ப எடுத்துச்சென்றுவிட்டதால், இந்திய முதலீட்டாளர்கள் 37.6 பில்லியன் டாலர்கள் நட்டம் அடைந்துள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் 35சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2007 - 08 ஆம் ஆண்டு முதல் மூன்றுமாத காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து அந்நிய செலாவணிக் கையிருப்பு மட்டும் 10.7 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது.
மன்மோகன் கும்பல் இத்தகைய நெருக்கடிக் காலத்திலும்கூட, நிதித்துறையை அமெரிக்க நிறுவனங்களுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் இந்திய நிதிச்சந்தையை கொள்ளையடிக்க திறந்துவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடி என்பதை மன்மோகன் கும்பல் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது. முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து ஆளும் வர்க்கங்களை மீட்க அரசாங்கம் தரகுப்பெருமுதலாளித்துவக் கும்பல்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கடனை அதிகரித்து வருகிறது. வட்டி விகிதத்தையும், வரியையும் குறைத்து சலுகைகளை
வாரி வழங்குகிறது. ஆனால் நெருக்கடியின் சுமைகளை மட்டும் மக்கள் மீது திணிக்கிறது.
முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக ஏற்றுமதி வீழ்ச்சியின் காரணமாக ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறையில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆபரணத்தங்கம் செய்யும் தொழிலில் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மோட்டார்வாகனம், உதிரிப்பாகங்கள் தயாரிப்பு மற்றும் போக்குவரத்து துறைகளில் மட்டும் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வேளாண்மைத்துறையில் பன்னாட்டுக் கம்பெனிகளை அனுமதித்தது, ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்கள் இறக்குமதி, உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி, விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் மூழ்கியது போன்ற காரணங்கள் மூலம் வேளாண்மை அழிந்துவிட்டது. அதைச்சார்ந்த தொழில்களும் அழிந்துவிட்டன. கிராமப்புற வேலையிண்மை
பலகோடியைத் தாண்டிவிட்டன. இவ்வாறு வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, கல்வி-மருத்துவம்-சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்க அரசு மறுப்பது- மேலும் இத்துறைகளை வணிகமயமாக்குவது என்று நெருக்கடிகளின் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன.
எனவே நம்நாடு சந்தித்துக்கொண்டிருக்கிற முதலாளித்துவப் பொது நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரே வழி அந்நிய சார்புப்பாதையை தூக்கியெறிந்து, சுயசார்புப்பாதையைக் கடைப்பிடிப்பதே ஆகும்.
பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனத்தையும், உள்நாட்டுத்தரகு முதலாளித்துவத்தின் நிலங்களையும் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்குவது, நிலப்பிரபுக்கள், மடங்கள், கோயில்களின் நிலங்களை பறித்தெடுத்து புரட்சிகரமான முறையில் நிலச்சீர்த்திருத்தம் செய்வது, அந்நிய வர்த்தகத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது, வேளாண்துறைக்கு மானியத்தை வழங்குவது, வேளாண்மைக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது. உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் சிறு நடுத்தரத்தொழில்களுக்கு அரசாங்கக் கடன்கள் மற்றும் இதர உதவிகளை செய்வது, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அரசாங்கம் வழங்குவது, இத்தகைய ஒரு சுயசார்புத்திட்டம்தான் நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்கவும், உள்நாட்டுமக்களின் நலன்களைக்காக்கவும் உகந்த திட்டமாகும். மாறாக மன்மோகன்-சோனியாக் கும்பலின் பாதை நாட்டை சுடுகாடாக மாற்றும் தேசத்துரோகப் பாதையேயாகும்.
இந்தியா பாசிசமயமாக்கபடுகிறது:
மத்தியில் ஆளும் மன்மோகன்-சோனியாக் கும்பல் ஏகாதிபத்தியவாதிகளின் நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதோடு நெருக்கடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒழிக்க அந்நாடுகளின் ஜனநாயக உரிமைகளையும் மறுத்து இந்திய அரசை மென்மேலும் பாசிசமயமாக்கி வருகிறது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது, வேலை நிறுத்த உரிமையைப் பறிப்பது, தொழிற்சங்க உரிமைகளை பறிப்பது, விவசாயிகளின் போராட்டத்தை நசுக்கி - புரட்சிகரத் தலைவர்களை போலி மோதல்களில் சுட்டுத்தள்ளுவது, போராடும் தேசிய இனங்களின் மீது இராணுவத்தாக்குதலை கட்டவிழ்த்து விடுவது என ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகிறது.
இந்திய அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து தேசிய இனங்களின் சிறைக்கூடமாகத் திகழ்கிறது. கடந்த 60 ஆண்டு காலமாக காஷ்மீரை வல்லிணைப்பாக இணைத்துகொண்டு, அவர்களின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக் கோரிக்கையை மறுத்து அம்மக்களை இராணுவம் தொடர்ந்து ஒடுக்கிவருகிறது. பீகார், அசாம், வடகிழக்கு மாகாணங்கள் மீது இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்கின்றன. இதனால் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தனி நபர் பயங்கரவாதம் வெடிக்கிறது. இந்திய அரசு அதையே காரணம் காட்டி தடா, பொடா போன்ற ஆள்தூக்கிச்சட்டங்களை கொண்டுவந்து, ஜனநாயகத்துக்காகப் போராடும் மக்களின் மீது தாக்குதலைத் தொடுக்கிறது. தற்போது மன்மோகன் கும்பல் 1967ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்தச்சட்டத்தை திருத்தியுள்ளது. இது தடா சட்டத்தைப்போன்றே ஒரு கடுமையான பாசிச சட்டத்திருத்தமேயாகும்.இந்திய நாடாளுமன்றம், மக்களின் மீது பாசிசத்தாக்குதல் அடங்கிய சட்டங்களை திணிக்கிறது என்று சொன்னால், இந்திய அரசியல் சட்டமோ சட்டத்தை செயல்படுத்தும் IAS, IPS அதிகாரிகளுக்கு தனி உரிமை வழங்குவதன் மூலம் மக்கள் மீது பொய்வழக்குப்போட்டு பழிவாங்குவதை உத்திரவாதப்படுத்துகிறது. கடந்த காலத்தில் தடா, பொடா போன்ற சட்டங்களின்கீழ் பதிவு செய்த மொத்த வழக்குகளில் 90 சதவீதம் பொய்வழக்குகளே என்று நீதிமன்றம் தணிக்கை செய்தது. பல ஆயிரம் நிரபராதிகள், பல ஆண்டுகள் சிறையிலடைத்து சித்தரவதை செய்யப்பட்டனர். IAS, IPS அதிகாரிகள் குற்றமிழைத்தால் அவர்க்ளை சட்டத்தின் முன் நிறுத்த முடியாது. கிரிமினல் சட்ட 197வது பிரிவு அவர்களுக்கு அந்தத் தனி உரிமையை வழங்கியுள்ளது. எனவே இத்தகைய சட்டம். ஒழிக்கப்பட்டால்தான் பொய்வழக்குப்போட்டு மக்களை அடக்கும் காவல்துறையின் அராஜகத்தை முறியடிக்க முடியும்.
சாதித்தீண்டாமைக்கு எதிராக இந்திய அரசியல் சட்டம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
அண்மைக்காலங்களில் மகராஷ்டிராவின் கைலார்ஞ்சி முதல் தமிழகத்தின் உத்தபுரம் வரை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய உயர்சாதி ஆதிக்க வெறியர்கள் தண்டிக்கப்படவில்லை. மாயாவதி ஆட்சியிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
'வன்கொடுமைச் சட்டங்களை' காவல்துறை பயன்படுத்துவதே மிகமிகக் குறைவு. எனவே தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாய ஒடுக்குமுறையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதுதான் சாதித்தீண்டாமைக் கொடுமைக்கு முடிவுகட்டும்.
ஆளும் தரகுப்பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்காக்கும் காங்கிரசும், பாஜகாவும் இந்திய பாசிசத்தின் இரு முகங்களேயாகும்.
நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதிலும், இந்திய அரசை பாசிச மயமாக்குவதிலும் இரு கட்சிகளும் போட்டிப்போடுகின்றன. இவ்விருகட்சிகளும் நிலப்பிரபுத்துவத்தையும், சாதியத்தையும் பாதுகாக்கின்ற கட்சிகள் தான். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொடா சட்டத்தைக் கொண்டு வருவதாக கூறுகிறது. 'தேசிய ஒருமைப்பாடு' பேசி காங்கிரசும், 'இந்துத்துவா' பேசி பாஜகவும் பாசிச ஆட்சிமுறைக்கு அடித்தளமிடுகின்றன. திமுக, அதிமுக போன்ற மாநிலக் கட்சிகள் மாறி, மாறி இக்கட்சிகளுடன் கூட்டுவைத்து பாசிசத்திற்கு சேவை செய்யும் கட்சிகளாகவே உள்ளன.
எனவே, முதலாளித்துவ நெருக்கடியை மக்கள் மீது சுமத்துவதை எதிர்த்தும்; நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்கவும்; பாசிசத்திற்கு முடிவு கட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும் போலிப்பாராளுமன்ற ஆட்சிமுறையைத் தூக்கியெறிந்து “சோவியத் வடிவ ஆட்சிமுறையை” கட்டி அமைக்க வேண்டும். அதற்குத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தேசபக்தர்கள் அனைவரும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள இம்மே நாளில் அறைகூவி அழைக்கின்றோம்.
உலக முதலாளித்துவப் பொது நெருக்கடிக்குக் காரணமான தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளை முறியடிப்போம்.!
ஏகாதிபத்தியங்களின் நெருக்கடிச் சுமையை ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் மக்கள் மீதும் சுமத்துவதை எதிர்ப்போம்!
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் யுத்தச் சதிகளை முறியடிப்போம்!அமெரிக்க ஏகாதிபத்தியமே!
ஈராக், ஆப்கனிலிருந்து வெளியேறு!
வடகொரியாவையும், ஈரானையும் மிரட்டாதே!
அந்நிய நாடுகளில் அமைத்துள்ள தளங்களைக் கலை! படைகளைத் திரும்பப்பெறு!
தமிழீழ விடுதலைப் போரை நசுக்கும் - அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளின் பாசிச யுத்தத்தை எதிர்ப்போம்!
இந்திய அரசே!
காஷ்மீர் மீதான யுத்தத்தை நிறுத்து!
கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வுகாண்!
தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்திய அரசுக்கு மாற்றாக - பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய இனக் கூட்டாட்சி மக்கள் குடியரசுக்காகப் போராடுவோம்!
இந்திய அரசே!
அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களை இரத்துச் செய்!
பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனங்களைப் பறிமுதல் செய்!
அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் அளிக்கும் உதவிகளை நிறுத்து!
தேசியத் தொழில்களுக்கும் வேளாண்மைக்கும் பாதுகாப்புக் கொடு!
தொழிலாளர்கள் மீது சுமத்தும் வேலைப்பளு, ஆட்குறைப்பு, ஆலை மூடல் நடவடிக்கைகளை நிறுத்து!
தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளைப் பறிக்காதே!
நெருக்கடியிலிருந்து மீளவும் - உள்நாட்டுச் சந்தையைப் பெருக்கவும் நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
வன்கொடுமைக்கெதிராக தாழ்த்தப்பட்டவர்கள் தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தும் உரிமை கொடு!
ஆளும் வர்க்கங்களை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற சேவை செய்யும், 'இந்துத்துவா', 'ஒருமைப்பாடு' பாசிசங்களை முறியடிப்போம்!
போலிப் பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு மாற்றாக 'சோவியத்வடிவ' மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!
* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்!
* மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை வெல்க!!
No comments:
Post a Comment