Friday 26 April 2013

சமரன் 2013 மே நாள் சூளுரை

மே நாளில் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

      அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது புதியகாலனி ஆதிக்கத்திற்காகத் தொடுத்துவரும் போர்கள்
உக்கிரம் அடைந்துவரும் ஒரு சூழலில்: ஒடுக்கப்பட்ட நாடுகளும் தேசிய இனங்களும் அதனை எதிர்த்து நடத்திவரும் விடுதலைப் புரட்சிகள்
எழுச்சிபெற்றுவரும் ஒரு சூழலில், இவ்வாண்டு மே நாள் இயக்கத்தை எதிர்கொண்டுள்ளோம்.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!

      அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிக்கத்திற்காக தனக்கு அடங்க மறுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர்களை
நடத்தி பொம்மை ஆட்சிகளை உருவாக்குவது தொடர்கிறது. தனது நட்பு நாடான பிரிட்டன் மற்றும் கூட்டாளிகளான நேட்டோ நாடுகளுடன் கூட்டணி
அமைத்துக்கொண்டு அத்தகைய கொடிய யுத்தங்களை அமெரிக்கா நடத்திவருகிறது.

      அமெரிக்க ஏகாதிபத்தியம், ‘பயங்கரவாதத்தை ஒழிப்பது’, ‘பேரழிவு ஆயுதங்களை அழிப்பது’ எனும்பேரால் ஆப்கனிலும், ஈராக்கிலும் பொம்மை
ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நட்பு நாடுகளான ஏமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளிலும்கூட அம்மக்களின்
எழுச்சியைப் பயன்படுத்திக்கொண்டு, ‘மனித உரிமைப் பாதுகாப்பு’, ‘சர்வாதிகார எதிர்ப்பு’ என்ற பேரால் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு
ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்தி தனது அடிவருடிகளைக் கொண்டு பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது.

      தற்போது ஈரான் மற்றும் வடகொரியாவின் மீது அணுஆயுதப் பூச்சாண்டிகாட்டி தாக்குதல் நடத்துவதற்கு தயாரிப்பு செய்துவருகிறது. உலகை ஆயிரம் முறை அழிக்கவல்ல அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள அமெரிக்கா ‘அணு ஆயுத ஒழிப்பு’ என்று பேசுவது ஒரு மோசடியேயாகும்.

      வடகொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய அணுயுத்த அச்சுறுத்தல் என்பது, வடகொரியாவில் பொம்மை ஆட்சியை
உருவாக்குவது; ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது; சீனாவை அடக்கி வைப்பது ஆகிய நோக்கங்களைக் கொண்டதாகும். அதே அடிப்படையில்தான் மனித உரிமை மீறல் என்ற பேரால் இலங்கையில் இனவெறி இராஜபட்சே கும்பலைப¢ பணியவைத்து இலங்கையை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரவும் இந்தியப் பெருங்கடலை அமெரிக்க இராணுவத் தளமாக பயன்படுத்தவும்தான் இந்திய அரசுடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஈழத் தமிழினத்தின் விடுதலைக்குத் துரோகம் இழைத்துவருகிறது.
ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்தியக் கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!

      இரு கொரியாவும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து போர்த் தயாரிப்பு செய்யும் அமெரிக்கா, இலங்கையின் இறையாண்மை
ஒருமைப்பாடு என்று கூறி ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, இன அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவைக் காப்பாற்றி
வருகிறது. அதன் ஒரே குறிக்கோள் இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை நிறுவி இந்தியப் பெருங்கடலை தமது யுத்தவெறிக்குத் தளமாகப் பயன்படுத்துவது, இலங்கையில் சீனாவின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவது என்பதேயாகும். அதற்காகவே இந்தியாவுடன் கூட்டணி அமைத்துச் செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு இந்தியா சேவை செய்யும், அதற்குக் கைமாறாக தென் ஆசியாவில் இந்தியாவின் துணை மேலாதிக்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கும். அதாவது இலங்கை மீதான இந்தியாவின் விரிவாதிக்க நலன்களை - இலங்கையின் முழுச் சந்தையையும் கைப்பற்றுவது என்ற இந்திய நலன்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்த அடிப்படையில்தான் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டுச்
சேர்ந்து ஐ.நா. மனித உரிமைத் தீர்மானத்தை இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாக நிறைவேற்றின. எனவே ஈழத் தமிழர்கள் இராஜபட்சே கும்பலை
மட்டுமல்ல, அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையையும் எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டும்தான் தமிழீழத்தை அமைக்க முடியும். அதற்கு நாம் அமெரிக்க-இந்திய கூட்டுச் சதிகளை எதிர்த்துப் போராடுவது மூலம் மட்டுமே ஈழத்தமிழர்களின்
விடுதலைக்கு ஆதரவளிக்க முடியும்.

இந்திய அரசின் தேசிய ஒடுக்குமுறைகளை எதிர்ப்போம்!

      இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களான தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்களுக்காக அண்டை நாடுகளில் தலையிட்டு தேசிய இன
ஒடுக்குமுறைகளில் ஈடுபடுவது மட்டுமல்லாது உள்நாட்டிலும் தேசிய இனங்களை ஒடுக்கி வருகிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்
கோரிக்கை இந்தியாவில் சட்டவிரோதமாக்கப் பட்டுள்ளது. காஷ்மீர், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களில் இராணுவ ஒடுக்குமுறைகளைக்
கட்டவிழ்த்துவிட்டு தேசிய ஒருமைப்பாடு என்று நியாயம் கற்பிக்கிறது. அத்துடன் இந்திய அரசு அனைத்து தேசிய இன மொழிகளையும், ஆட்சி
மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஏற்க மறுத்து இந்தி மொழி ஆதிக்கத்திற்கு சேவை செய்கிறது. இந்தி அல்லது ஆங்கிலமே அனைத்துத்
துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் தமிழகத்தின் பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டதால் தமிழக மீனவர்களின்
மீன்பிடிப்பு உரிமை பறிபோய்விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். எனவே தாய்மொழி தமிழ்மொழி
ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் படவும் கச்சத்தீவை மீட்கவும் அனைத்துத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்குப் போராடுவதும், காஷ்மீர்,
அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் அணிதிரளவேண்டும்.

அன்னிய மூலதனத்தின் ஆதிக்கமும் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனமும்!

      அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள் முன்வைத்த உலகமய, தாராளமயக் கொள்கைகள் உலகமுதலாளித்துவ
நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ள போதிலும் அதே கொள்கைகளைத் தீவிரமாக அமூல்படுத்துவதாக மன்மோகன் கும்பல் மானவெட்கமின்றி
கூறுகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே சுதந்திர வர்த்தகக் கொள்கைகளைக் கைவிட்டு
காப்புக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும்போது இந்தியாவின் கதவுகளை அன்னிய மூலதனத்திற்கு அகலத் திறந்துவிடுகிறது தேசத்துரோக
மன்மோகன் கும்பல்.

      உலக முதலாளித்துவ நெருக்கடி இந்தியாவைக் கடுமையாக பாதித்துள்ளது. ஏற்றுமதி வீழ்ச்சி, உற்பத்தி மந்தம், அன்னிய செலாவணி
பற்றாக்குறை என நாடு திவாலாகிவருகிறது. எனினும் மன்மோகன் கும்பல் ஆயுள்காப்பீடு, வேளாண் வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும்
திவாலாகிவிட்ட பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரைவார்க்கிறது. ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடிகளை இந்திய மக்கள் மீது திணிக்கிறது.

      அன்னிய மூலதனத்தின் வருகையால் தொழில், விவசாயம் அழிந்து தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், விவசாயிகள் தற்கொலைக்கும்
தள்ளப்படுகிறார்கள். பன்னாட்டுக் கம்பெனிகளும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடித்து கொழுத்துவருகின்றன.

      அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகளைக்கூட பன்னாட்டுக் கம்பெனிகள் மதிப்பதில்லை. தொழிலாளர்கள் சங்கம் சேருதல், கூட்டுப்பேரம் உள்ளிட்ட தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிராக பன்னாட்டு-உள்நாட்டு பெருமுதலாளிகள், காவல்துறை, அரசு நிர்வாகம் ஆகியவைக் கூட்டணி  அமைத்துக்கொண்டு தொழிலாளர்கள் மீது வன்முறைகளை ஏவிவருகின்றனர்.

      பொதுத்துறை நிறுவனங்கள், தனியார்துறை நிறுவனங்கள் அனைத்திலும் நிரந்தரத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு காண்டிராக்ட்
தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துகின்றனர். அவுட்சோர்சிங், காண்டிராக்ட் முறையின் கீழ் குறைந்தபட்ச ஊதியமோ, பணிப்பாதுகாப்போ
இல்லாததோடு வேலைநேரம் 12 மணி நேரத்துக்கு மேல் உயர்த்தப்பட்டு தொழிலாளர் கொத்தடிமைகள் போல் கசக்கிப் பிழியப்படுகின்றனர்.

      மறுபுறம் பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளும் கொள்ளை லாபம் அடைகின்றனர். தாராளமயக் கொள்கைகளால் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் செல்வங்கள் ராக்கட் வேகத்தில் அதிகரிக்கிறது. இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை (ரூ. 5,500 கோடி சொத்துள்ளவர்கள்) சென்ற ஆண்டு 48ஆக இருந்தது இந்த ஆண்டு 55ஆக உயர்ந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குகின்ற அரசும் காவல்துறையும் தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் முதலாளி முகேஷ் அம்பானிக்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வழங்குகிறது. இதன் மூலம் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசல்ல, கார்ப்பரேட் கும்பலின் சர்வாதிகார அரசு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. எனவே மன்மோகன் கும்பலின் காலம் கார்ப்பரேட்களுக்கு பொற்காலம். தொழிலாளி வர்க்கத்துக்கோ அது ஒரு கற்காலமாகவே அமைந்துள்ளது.

அந்நிய மூலதனத்தின் ஆதிக்கத்தாலும், மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு, சில்லரை வணிகம் அழிகின்றன!

      இந்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய காலனிய வேளாண் கொள்கைகள் வேளாண் துறையில் நிலச்சீர்த்திருத்தத்தை மறுத்து, நிலங்கள்
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு குழும விவசாயம் செய்வதற்காக தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து தனியார் கம்பெனிகளுக்கு விதி விலக்களித்து மன்மோகன் கும்பல் ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இந்திய நாட்டின் விளை நிலங்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு வேளாண்மைக்கும், கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் மலிவான விலைக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

      மறுபுறம் விவசாயிகளுக்கு மானியத்தை ஒழித்தல், வெளி நாடுகளிலிருந்து மலிவான விலையில் உணவுப் பொருட்களை இறக்குமதி
செய்வதற்கான தடைகளை அகற்றுதல் போன்ற காரணங்களால் விவசாயம் அழிந்து 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அத்துடன் தமிழகத்தில் 16 மணி நேரம் தொடர் மின்வெட்டு, ஆற்று நீர் உரிமை பறிபோதல் போன்ற காரணங்களும் சேர்ந்து கொண்டு தமிழகமே
வறட்சிப் பிரதேசமாக மாறியுள்ளது. விவசாயிகளின் துயரத்தை வெளியிட வார்த்தைகளே இல்லை.

      சில்லரை வணிகத்தை அன்னிய மூலதனத்திற்குத் திறந்துவிடுவதால் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என வர்த்தக அமைச்சர்
கூறுகிறார். ஆனால் பல கோடி சிறுவணிகர்களின் வேலையை அது பறிக்கும் என்பதை மூடிமறைக்கிறார். பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்கள்
ஏகபோகக் கொள்முதல் செய்வது, அடாவடியாக விலைகளைக் குறைப்பது, பணப் பட்டுவாடாவை தாமதப் படுத்துவது ஆகியவற்றின் மூலம்
விவசாயிகளும் சிறு குறுதொழில் புரிகின்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களும் இதனால் பாதிப்படைவார்கள். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு
வணிகர்களையும் தற்கொலைக்குத் தள்ளும்.

      அந்நிய மூலதனத்திற்கு அனுமதி, தொடர் மின்வெட்டு, டீசல் மற்றும் ஜெனரேட்டர் மானியம் வழங்காதது, வங்கிக் கடன் கெடுபிடிகள், மத்திய
அரசின் பஞ்சு ஏற்றுமதிக் கொள்கையால் நூல்விலை உயர்வு போன்ற காரணங்களால் சிறு குறுத் தொழில்களும், நெசவுத் தொழிலும் நலிந்து விட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களில் இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள 60 லட்சம் பேர்களின் வாழ்க்கை கேள்விக்
குறியாகியுள்ளது. 60 லட்சம் பேர் பங்கேற்கக்கூடிய உள்நாட்டுத் தொழில்துறைக்கு மின்சாரம் வழங்காமல் வெறும் 1.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகிறது. கேட்டால் போட்டி நிறைந்த உலகில் அந்நிய முதலீட்டை
கவர்வது தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்று தமிழக அரசு கூறுகிறது. சுதேசியத்தை அழித்து விதேசியத்துக்கு வக்காலத்து வாங்குகிறது. இவ்வாறு
தாரளமயமாக்கல் கொள்கைகளால் “விதேசியம் ஒளிர்கிறது, சுதேசியம் இருள்கிறது”.

      ஜெயலலிதா அரசாங்கம் தமிழகத்தில் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து
ரூ.20,000 கோடி வறட்சித் திட்டச் செலவு என்று அறிவித்துள்ளது. ஆனால் ரூ.2000 கோடிகூட நிதி ஒதுக்கமுடியவில்லை. நிதி வேண்டி மத்திய
அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால் மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பலோ நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி
மக்களுக்கு வழங்கும் மானியத்தை வெட்டி வருகிறது. எரிவாயு உருளை மானியத்தையும் வெட்டியதோடு டீசல், பெட்ரோல் விலைகளை உயர்த்தி
மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது. ஆதார் அட்டைமூலம் பொது விநியோகத்தையும்  ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.
இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் தாராளமயக் கொள்கைகள் ஆளும் வர்க்கங்களுக்கு சொர்க்கத்தையும் மக்களுக்கு
நரகத்தையும் கொண்டுவந்துள்ளது. ஜெயலலிதா அரசாங்கம் 110 விதிகளின்கீழ் அறிக்கை வாசிப்பதாலோ, மின்வெட்டுக்கு கருணாநிதியைக் காரணம் காட்டுவதாலோ, வறட்சியை மூடிமறைக்க இலட்சங்களை காட்டுவதாலோ, போதிய நிதி இன்றி வறட்சித்திட்டம் அறிவிப்பதாலோ தமிழக மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது. எனவே அந்நிய மூலதன ஆதிக்கத்தை எதிர்த்தும், ஜெயா அரசின் மாய்மாலங்களில் ஏமாறாமல் மத்திய மாநில எதிர்த்தும் தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்காகவும் வறட்சி நிவாரணத்திற்காகவும் தமிழ் மக்கள் போராடுவது ஒன்றுதான் வழியாகும்.

சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!

      இந்திய நாட்டில் நிலவும் முதலாளித்துவத்துக்கு முந்தைய அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே சாதி தீண்டாமைக் கொடுமைகள்
புரையோடிக் கிடப்பதற்கான காரணமாக உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில் தீர்மானிப்பது, அகமணமுறை, படிநிலை முறையில் பிறப்பால்
உயர்வு தாழ்வு என்ற சாதியமுறை தொடர்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது உரிமை மறுப்பு, ஜனநாயக உரிமை மறுப்பு, தனிச்சேரி முறைகள்
போன்ற தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்கின்றன. ஆனால் அண்மைக்காலங்களில் இராமதாசு தலைமையில் 50க்கும் மேற்பட்ட சாதிவெறி அமைப்பினர் ஒன்றுகூடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கலவரத்தை நடத்துகின்றனர். வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீக்கவேண்டும்; காதல் திருமணங்களை எதிர்த்து சட்டத்திருத்தம் வேண்டும்; தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடுகளை இரத்து செய்யவேண்டும் என்று கூறி சாதி, தீண்டாமைக்கு ஆதரவாக இயக்கம் நடத்துகின்றனர். சாதிக் கலவரங்கள் மூலம் தமிழகத்தை கற்காலத்திற்கு இட்டுச்செல்ல துடிக்கின்றனர். கிராமப்புற ஆதிக்கத்தை நிலை நாட்டவும், தாழ்த்தப்பட்ட மக்கள்மீது பண்ணை அடிமைமுறையைத் திணிக்கவும், சாதிவெறியைத் தூண்டி வாக்குவங்கியை உருவாக்கவுமே சாதிக் கலவரங்கள் நடத்தப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கான தலித் அமைப்புகள் சாதி, தீண்டாமையை எதிர்த்து, சாதிவெறியர்களை எதிர்த்து அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் ஒரு பொதுவான சாதி ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஒன்றுபடுத்தத் தவறிவிட்டன. எனவே சாதிக் கலவரங்களை எதிர்த்தும் சாதி தீண்டாமையை ஒழிக்கவும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் அணி திரளவேண்டும்.

      எனவே இம் மே நாளில் தேச விடுதலைக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள
வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.

* ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!

* இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும், தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!

தாய்மொழி, தமிழ்மொழியை ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

* தமிழர் நலன்காக்க, மீனவர் உரிமை காக்க கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!

* பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கான நிரந்தர வேலை ஒழிப்பு, ஒப்பந்தக் கூலிமுறை, வேலை நேரம் அதிகரிப்பு போன்ற கொத்தடிமை முறைகளை எதிர்த்துப் போராடுவோம்!

* தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவோம்!

* புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

*சாதிவாத அரசியலை எதிர்ப்போம்! சாதி, தீண்டாமையை ஒழிக்கப் போராடுவோம்!

* அந்நிய மூலதன ஆதிக்கத்தாலும் தொடரும் மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு சில்லரை வர்த்தகம் அழிவதை எதிர்த்துப் போராடுவோம்!

* தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!

*தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டு முழுமையான நிவாரணம் வழங்காததை எதிர்த்துப் போராடுவோம்!

* உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

 
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

மே 1, 2013

No comments:

Post a Comment