Tuesday 24 September 2013

தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்! ஜெயா அரசே, 144 தடையை உடனே நீக்கு!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

       ஜெயலலிதா அரசாங்கம் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக் காலமாக 144 தடை விதித்து மக்கள் மீது போலீஸ் ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சாதிக் கலவரங்களை தடுப்பது என்ற பேரால் 144
தடை நியாயப் படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தடையின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டியவர்கள் மீதோ, கலவரத்தை நடத்தியவர்கள் மீதோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவே இல்லை. உண்மையானக் குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை. மாறாக இத்தடையை தாழ்த்தப்பட்ட மக்களையும், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களையும், எதிர்க் கட்சியினரையும் அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். இளவரசனின் இறுதி ஊர்வலத்தை நடத்தவும், அதில் தலைவர்கள் பங்கேற்பதையும் கூட தடை செய்தனர்.

       சாதி ரீதியாக ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வித்தியாசம் இன்றி 144 தடைவிதிப்பது என்று கூறுவதும், சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதற்கு மாறாக - சாதித் தீண்டாமைக்கு எதிரான ஜனநாயக இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும், ஒடுக்குபவர்களுக்கு துணைபோவது தவிர வேறொன்றுமில்லை. 144 தடை மூலம் இன்று தர்மபுரி மாவட்டம் “ம்” என்றால் சிறைவாசம், “ஏன்” என்றால் வனவாசம் என மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டுவருகிறது.

       அண்மையில் தர்மபுரியை அடுத்த கொண்டம்பட்டியில் ஜெயராமன் என்ற கூலி விவசாயி வேறொரு உயர்சாதியைச் சார்ந்தவரின் நிலத்தில் வேலை செய்யும்போது - அங்கே தவறான மின் இணைப்பின் காரணமாக - மின்சாரம் தாக்கி அகால மரணமடைந்துவிட்டார். அந்த மரணம் அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் என்று வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று கொண்டம்பட்டி மக்கள் பிணத்தை எடுக்கவிடாமல் மறியல் போராட்டம் நடத்தினர். அதற்குப் பழிவாங்கும் விதமாக, காவல்துறையினர் நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து இருட்டாக்கிவிட்டு அவ்வூரில் புகுந்து அம்மக்கள் மீது தடியடி நடத்தி பொய் வழக்கில் கைதுசெய்து சிறையிலடைத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலை தடுத்தார் என்ற காரணத்துக்காக அவ்வூரைச் சார்ந்த சி.ஆர்.பி.எப். இல் பணிபுரியும் மாதையனை அடித்து காலை உடைத்து சிறையிலடைத்தனர். பின்னர் அவர் மாவோயிஸ்டு ஆதரவாளர் என்று பொய் கூறி அவர் வேலைக்கும் உலைவைக்கும் கொடுமையை புரிந்துள்ளனர்.

       கொண்டம்பட்டியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சுவரொட்டி ஒட்டியது. உடனே காவல் துறையினர் ம.ஜ.இ.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் மீதும், பிரசுரம் அச்சடித்துக் கொடுத்த அச்சக உரிமையாளர் மீதும் செப்டம்பர் 12 தியாகிகள் நினைவு நாள் பிரசுரத்தை வைத்து 124A சட்டத்தின் கீழ் இராஜதுரோக குற்றம் சுமத்தி கைது செய்தது. அத்துடன் நாயக்கன் கொட்டாயில் செப்டம்பர் 12 அன்று நக்சல்பாரிப் புரட்சித் தியாகிகள் அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவிக்க மாநில அமைப்பாளர் ஞானம் தலைமையில் சென்ற 13 ம.ஜ.இ.க. தோழர்கள் உள்ளிட்டு 19 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. ஜெயா ஆட்சியில் காவல் துறையினரின் அடக்குமுறைகளை எதிர்ப்பதும், தியாகிகளின் சிலைக்கு மாலை அணிவிப்பதும் கூட இராஜதுரோகக் குற்றமாகி விட்டது. இத்தகைய சாதாரண ஜனநாயக உரிமையைக் கூட 144 தடையைக் காட்டிப் பறிக்கிறது.

       ஜெயா அரசு 144 தடையை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்குகிறது. தமிழகத்தையே 144ன் கீழ் ஆட்சி செய்யத் துடிக்கிறது. தர்மபுரி கலவரத்திற்குப் பின் இராமதாசு கும்பல் மகாபலிபுர சித்திரைத்
திருவிழா வன்னிய இளைஞர் மாநாட்டின்போது மரக்காணத்தில் நடத்திய சாதிவெறித் தாக்குதலைக் காரணம் காட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடையை அமல்படுத்தியது. தற்போது பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜையின் போது 144 தடைவிதித்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கெடுபிடிகளைத் தீவிரமாக்கியது. ஆனால் தேவர் குரு பூஜையை தமிழக அரசே அரசு விழாவாக நடத்துகிறது.

அண்மையில் உயர்நீதிமன்றம் இதுபோன்ற சாதி மோதல்களை உருவாக்கும் குரு பூஜைகளை தடைசெய்யவேண்டும் என்றும், அதற்குப் பதிலாக தலைவர்கள் சாதி வெறிக்கு எதிராக சமூக அமைதிக்காக பணியாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசு தேவர்  குரு பூஜையை மட்டும் அரசு விழாவாக நடத்துவது ஏன்? இமானுவேல் சேகரனின் குருபூஜையை அரசு விழாவாக மாற்ற மறுப்பதேன்? தாழ்த்தப்பட்ட மக்களை குற்றவாளிகளாகக் காட்டத்தானே? மேலும் 144 தடையைக் காரணம் காட்டி சாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களை தடைவிதிப்பது சாதிவெறிக்குத் தீனிபோடுவது இல்லையா? எனவே ஜெயா அரசின் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

       இன்று மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திவரும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளால், அமெரிக்காவின் புதிய காலனியாக நாட்டை மாற்றும் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிக்கின்றன. அதற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போர்க்கோலம் பூண்டுவருகின்றனர்.

       இத்தகைய அரசுக்கெதிரான மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவும், மக்களைப் பிளவுபடுத்தவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு வங்கிகளை உருவாக்கும் விதமாகவும் மக்களை சாதி, மத, இன மோதல்களில் தள்ளிவிடுகின்றன. உ.பி.இல் மதக் கலவரம், ஆந்திராவில் மொழிவாரி மாநிலத்தை உடைத்து ஒரே இனத்திற்குள்ளேயே மோதல்கள், தமிழகத்தில் சாதிக் கலவரம் என மக்களை மோதவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சிகளை மத்திய, மாநில அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் கட்சிகளும் செயல்படுத்தி வருகின்றன. பின்னர் அதையே காரணம் காட்டி அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மக்களை ஒடுக்குகின்றனர். உழைக்கும் மக்களை சாதி, மத, இன மோதல்களில் ஈடுபடுத்தும் சாதிவாத, மதவாதத்தை எதிர்த்தும் மத்திய மாநில அரசுகள் கட்டவிழ்த்துவிடும் அரசுபயங்கரவாதத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்கள் ஓரணியில் திரள்வது மிகமிக அவசியமான தருணம் இது.

       தமிழகத்தை ஆளும் ஜெயலலிதாவோ கருணாநிதியின் சர்வாதிகாரத்திற்கு மாற்றாக ஜனநாயக ஆட்சியை வழங்குவேன் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறினார். இன்று 144, 124A, சட்டங்களின் மூலம் ஒரு சர்வாதிகார போலீஸ் ஆட்சியை நடத்திவருகிறார். எனவே ஜெயலலிதா அரசாங்கத்தின் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களும், உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஒன்றுபட்டுப் போராட அறைகூவி அழைக்கிறோம்.

 * சாதிக் கலவரத்தின் பேரால் அரசியல் ஜனநாயக உரிமையை பறிக்கும்
144 தடையைத் திரும்பப் பெறு!

*  சாதிக் கலவரம் செய்வோர் மீது நடவடிக்கை எடு!
144 தடை மூலம் மக்களை ஒடுக்காதே!

 * 144இன் கீழ் கொண்டம்பட்டியில் போலீஸ் அடக்குமுறையை எதிர்ப்பது –
தியாகிகள் சிலைக்கு மாலை அணிவிப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா?

*124A வழக்கைத் திரும்பப் பெறு! கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்!

 * ஜெயா அரசே! 144, 124A சட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தை போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றாதே!

* ஜெயா ஆட்சியின் போலீஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2013
================

No comments:

Post a Comment