Tuesday, 24 September 2013

இந்திய அரசே, ஈழத் தமிழினத்தை ஒடுக்கும் மோசடிகளை மூடிமறைக்க, இராஜபட்சே கும்பல் நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!



இந்திய அரசே! ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கான 13-வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மோசடிகளை மூடிமறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!

சிங்கள இனவெறியன், இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல், இலங்கையில் போர்முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்தப் பிறகும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண மறுத்துவருகிறது. ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது. தற்போது திடீரென்று 13வது சட்டத்திருத்தச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, வடக்குமாகாணத் தேர்தலை நடத்தி ஜனநாயகம் வழங்குவது என்ற பேரில் ஈழத்தமிழினத்தின் மீதான இன ஒடுக்குமுறையை மூடி மறைப்பதுடன், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன்னை இன அழிப்புப் போர்க்குற்றத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது.

அண்மையில் இலங்கைக்குச் சென்ற ஐ.நா. மனித உரிமை கமிஷ்னர் நவனீதம் பிள்ளை, தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் பற்றியும்; போர் முடிந்தப் பிறகும் கூட அங்கு ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்படுவது குறித்தும் ஆட்சியை எதிர்ப்பவர்கள் பத்திரிக்கையாளர் உட்பட காணாமல் போவது தொடர்வது பற்றியும்; சிங்கள இனவெறி பாசிச ஆட்சியின் கொடூரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இதையெல்லாம் மூடிமறைத்து காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பலின் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளை மூடிமறைக்கும் கபட நாடகங்களுக்குத் துணைபோகிறது.

13வது சட்டத்திருத்தம் ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தவே

1987ஆம் ஆண்டு போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் விளைவாகத்தான் இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

 ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கவும், இலங்கை மீது இந்தியாவின் மேலாதிக்கத்தைத் திணிக்கவும், போடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் போடப்பட்ட ஒப்பந்தம் அல்ல. தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரித்துப் போடப்பட்ட ஒப்பந்தமும் அல்ல. தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டு இலங்கை அரசிற்குள்ளேயே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும், இல்லையேல் இந்திய அமைதிப் படை நேரடியாகத் தலையிட்டு ஈழப் போராளிகளை ஒடுக்குவதற்குத்தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வடக்கையும், கிழக்கையும் தமிழர் தாயகம் என்று ஒரே இன மாகாணமாக இணைத்து, இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த மாநிலத்திற்கு அதிகாரம் வழங்குவது என்ற அம்சங்களை உடையது என்று புகழப்பட்டது. தமிழர் பகுதிக்கு சுயாட்சி வழங்குவது என்றும் கூறப்பட்டது.

ஆனால் இவ்வொப்பந்தம் வடக்கு மாகாணத்தோடு கிழக்கு மாகாணத்தை
இணைப்பதா வேண்டாமா என்பதை கிழக்குப் பகுதி மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறியதன் மூலம் தமிழர் தாயகம் என்பதை மறுத்துவிட்டது. இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ்
பேசும் மக்களைக் கொண்ட இருமாநிலங்கள் அமைப்பது என்று கூறினாலும் அனைத்து அதிகாரங்களும் சிங்கள மத்திய அரசிடமே குவிந்துள்ளதை எதிர்க்கவில்லை இவ்வொப்பந்தம். தமிழ் மாகாண அரசாங்கத்திற்கு வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) போடுவதற்கும் கூட அதிகாரம் கிடையாது.

அந்த மாகாண அரசாங்கத்தின் முதலமைச்சராக இருந்த, இந்திய அரசின் கைக்கூலியான வரதராஜப் பெருமாள் இந்தியப்படை வெளியேறியபோது மாநில அதிகாரம் பற்றிக் கூறியது: “நான் இந்த மாகாணத்தின் முதலமைச்சர். ஆனால் என் அலுவலகத்துக்கு ஒரு கதிரை (நாற்காலி) வாங்குவதற்குக்கூட இலங்கை குடியரசுத் தலைவரின் இசைவையும், நிதியையும் பெறவேண்டியிருக்கிறது” என்று கூறினார்.

இராஜபட்சே கும்பல் அந்த 13வது சட்டத்திருத்தத்தையும் அப்படியே செயல்படுத்த முடியாது என்றும் அச்சட்டத்தை திருத்தப் போவதாகவும் கூறிவிட்டது. 2006-ஆம் ஆண்டே வடக்கையும், கிழக்கையும் இணைப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று இலங்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தமிழர் தாயகம் என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் சிங்களம், தமிழ் மாகாணம் என்று இரண்டு இன மாகாணம் என்பதையும் மறுத்து இலங்கையை எட்டு மாகாணங்களாகப் பிரித்ததன் மூலம் தமிழ் இனம் ஒரு இனம் என்பதையும் மறுத்துவிட்டது. மேலும் வடக்குப் பகுதி மாகாணத்திற்கு காவல் (பொலிஸ்), நிலம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு அதிகாரமும் வழங்க முடியாது என்றும், அவ்வாறு அதிகாரம் வழங்குவது தேசப்பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று கோத்தப்பய இராஜபட்சே அறிவித்துள்ளான்.

இவ்வாறு இராஜபட்சே கும்பல் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தையும் நீர்த்துப் போகச்செய்து ஈழத்தமிழர்கள் மீது இன ஒடுக்குமுறையை தொடர்கிறது.

1987ல் விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாக இருந்தபோது சிங்கள இன வெறியர்கள் சில்லறை திருத்தங்களை ஏற்றுக்கொண்டனர். தற்போது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டப் பிறகு அந்த சில்லறை சீர்திருத்தங்களையும் மறுத்து ஈழத் தமிழர்களை அடிமைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

ஆனால் 13வது சட்டத்திருத்தத்தை அப்படியே செயல்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று காங்கிரஸ் கட்சியினரும், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளும்,
இடது, வலது போலி கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் கூறுகின்றன. அவ்வாறு அச்சட்டத்தைத் திருத்தாமல் செயல்படுத்தினாலும் ஈழத் தமிழர் மக்கள் பிரச்சினைக்கு எள் முனை அளவு கூட அது தீர்வு வழங்கப்போவதில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசை பாதுகாப்பதற்கான  திட்டமே அது.
சிங்கள இனவெறி அரசின் அதிகார அடிப்படையை சிதைக்காமல், சட்டத்திருத்தம் எனும் பேரில் அந்த அதிகாரத்தை குறைக்காமல் அப்படியே வைத்திருக்கும் விட்டுக்கொடுத்தல் அது.

 ஆனால் புரட்சிகர மாறுதல் என்பது அதிகாரத்தின் அடிப்படையையே பறித்துவிடுகிறது. சீர்த்திருத்தவாதத் தேசிய இனத்திட்டம் ஆளும் தேசிய இனத்தின் விசேஷ உரிமைகள் அனைத்தையும் அகற்றுவதில்லை. அது பூரண சமத்துவத்தை ஏற்படுத்துவ தில்லை; தேசிய இன ஒடுக்குமுறையை அதன் எல்லா வடிவங்களிலும் அது ஒழிக்கவில்லை. “சுயநிர்வாகம்” பெற்ற ஒரு தேசிய இனம் “ஆளும்” தேசிய இனங்களுக்கு சமமான உரிமைகளைப் பெற்றிருக்காது. “வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றுதான் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வாகும்.

வடக்கு மாகாணத் தேர்தலும் இராணுவ மயமாக்கலும்

இராஜபட்சே கும்பல், தமிழர் பகுதிகளைக் கடும் இராணுவ மயமாக்குவதையும், சிங்கள மயமாக்குவதையும் மூடி மறைக்கவே வடக்கு மாகாணத் தேர்தல், ஜனநாயகம் என்று ஒரு மோசடி நாடகத்தை
அரங்கேற்றுகிறது. ஈழத் தமிழினத்தை முற்றாக அடிமைப்படுத்துவதற்கான சதித்திட்டமே வடக்குமாகாணத் தேர்தல்.வரலாறு காணாத அளவிற்கு இலங்கை இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் (1980) முப்படைகளும் சேர்ந்து மொத்தம் 30 ஆயிரம் இராணுவ வீரர்களைத்தான் கொண்டிருந்தது. இன்று அது 15 மடங்காக உயர்ந்து 4,50,000 வீரர்களைக் கொண்டதாக ஊதிப் பெருத்துள்ளது. இது தவிர சிவில் பாதுகாப்புப் படையில் 30,000 பேர், பாதுகாப்புப் படையில் 45,000 பேர், காவலர்கள் 85,128 என இலங்கை அரசு இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது. இலங்கை இராணுவம் என்பது பொதுவான இராணுவம் அல்ல, அது முழுக்க முழுக்க சிங்களர்களைக் கொண்ட சிங்கள இனவெறி இராணுவமாகும்.

மொத்த இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் 14 விழுக்காடு நிலப்பரப்பில் ஏறத்தாழ 60 விழுக்காடு சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்களும், பிற படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 1000ம் பேருக்கு 200 பேர் என (5 பேருக்கு ஒரு இராணுவம்) என்ற அடிப்படையில் இராணுவத்தினரை நிறுத்தி தமிழர்கள் அச்சுறுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அளவுக்கு உலகில் எந்த ஒரு நாட்டிலும் இராணுவம் குவிக்கப்படவில்லை.

அமெரிக்க இராணுவத் துறையின் சார்பாக, உலக அளவில் நடைபெற்ற 41 உள்நாட்டுப் போர்களைப் பற்றிய ஆய்வு கூறுவதாவது: “இத்தகைய உள்நாட்டுப் போர்களைக் வெற்றிகரமாக கையாள 1000 பேருக்கு 40-50
இராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவது போதுமானது” என்று கூறுகிறது.

 2007ல், ஈராக்கில் உச்சக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்தபோது கூட 1000க்கு 40 பேர்தான் நிறுத்தப்பட்டிருந்தனர். பிரான்சின் அல்ஜீரியப் போரில் 60 பேர் என்ற அளவிற்குத்தான் நிறுத்தியிருந்தது. ரஷ்யா செச்சன்யாவில் 150 பேர் என்ற அளவிற்கு நிறுத்தியிருந்தது. ஆனால் தமிழர் பகுதிகளில் போர் முடிந்த பிறகும் 1000க்கு 200 பேர் என்ற அளவிற்கு நிறுத்தியிருப்பது, தம் சொந்த நாட்டு மக்களின் மீதே காலனிய ஒடுக்குமுறையை சிங்கள அரசு தொடுத்துள்ளதைத் தான் காட்டுகிறது. சிங்களர்களின் காலனியாக ஈழத் தமிழர் பகுதி மாற்றப்பட்டுவருகிறது.

அத்துடன் தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றத்தை இராணுவத்தின் உதவியுடன் நடத்தி வருகின்றனர்.

தமிழர் பகுதி சிங்களமயமாக்கப்படுதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(TNA) உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி சிங்கள இராணுவம் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில் 7,000 சதுர கி.மீ பரப்பை
ஆக்கிரமித்துள்ளது. தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் தொடர்ச்சியான நிலப் பிரதேசத்தை அழிக்கின்றனர். மாற்றுக் கொள்கைக்கான மையம் மற்றும்
பன்னாட்டு நெருக்கடிக்குழு ,இந்த நிலப்பறிப்புகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது.

      “இராணுவம் தங்குவதற்காகவும், உயர்பாதுகாப்பு வலையங்களுக்காகவும் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அதற்கு சட்டப்படியான நட்ட ஈடுகள் தருவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியமர்த்தம் செய்வதுமில்லை. மேலும் இவ்வாறு பறித்த தமிழர் பகுதிகளில் இராணுவமே திட்டமிட்டு சிங்களர்களைக் குடியேற்றம் செய்கிறது.”

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையேயுள்ள வரலாற்று ரீதியான இணைப்பைத் துண்டிக்கிற வகையிலும், சிங்களப்
பகுதியான அனுராதபுர மாவட்டத்தோடு இணைந்திருக்கும் வகையிலும் “வெலிஓயா” என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கி அங்கே சிங்களக் குடியேற்றத்தை நடத்துகின்றனர்.

இவ்வாறு தமிழர் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்திருந்த மிகப்பெரிய மாவீரர் கல்லறை தகர்க்கப்பட்டு இன்று அந்த இடத்தில் 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இராஜபட்சே கும்பல் தமிழர் பகுதியை இராணுவமயமாக்கி ஈழத்தமிழினத்தை சிதைத்து சீரழிப்பதை மூடி மறைப்பதற்கும், தமிழினத்தை அடிமையாக்கவுமே வடக்கு மாகாணத் தேர்தல்!

இராணுவத்தை ஒரு பகுதி திரும்பப் பெறுதல் என்று ஜனநாயக நாடகமாடுகிறது. தமிழர்பகுதிகளில் உள்ள இராணுவத்தை முழுமையாக திரும்பப்பெறாமல், சிங்களமயமாக்குவதை தடுத்து நிறுத்தாமல் தேர்தல்
நடத்துவதால் தமிழர்களுக்கு ஜனநாயகம் கிடைக்காது. அடிமைத்தனமே மிஞ்சும். எனவே இனவெறிப் பாசிசத்தை நிலைநாட்ட நடக்கும் வடக்குமாகாணத் தேர்தலைப் புறக்கணித்து - தமிழ் ஈழத்திற்கான பொது
வாக்கெடுப்புக் கோரிக்கையை முன்னெடுப்பது தான் ஜனநாயகத்திற்கான ஒரே வழியாகும்.

காமன் வெல்த் மாநாடு

13-வது அரசியல் சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் என இராஜபட்சே கும்பல் “புனித” வேடம் போடுவதன் மூலம் 2013-ஆம் ஆண்டு காமன் வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டம்போட்டு செயல்படுகிறது.  அதன் மூலம் தனக்கு எதிரான இன அழிப்புப் போர்க்குற்றத்திலிருந்து தப்பித்துவிடலாம் என அது கனவுகாண்கிறது. ஆனால் இலங்கையில் நடந்த இறுதியுத்தம் “ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை” என்பதும், இராஜபட்சே கும்பல் சர்வதேச போர் நெறிகளை மீறி போர்க்குற்றம் புரிந்துள்ளது என்பதும் போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், என்ற “கத்தி” இராஜபட்சே கும்பல் தலைக்குமேல் தொங்கிக் கொண்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டங்கள், தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள், தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள், இலங்கையில் நடக்கும் மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட ஜ.நா மனித உரிமை கமிஷ்னர் இலங்கைக்குப் பயணம் செய்தது எல்லாம் இராஜபட்சே கும்பலுக்கு ஒரு நெருக்கடியைக் கொண்டு வந்துள்ளது. இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்று கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன. இந்தியாவின் தலையீட்டால் இங்கிலாந்து தன் எதிர்ப்பைக் கைவிட்டது. மற்ற இரு நாடுகளும் கலந்து கொள்வது இல்லை என அறிவித்துவிட்டன. சர்வதேச அளவில் தான் தனிமைப்படுவதை தடுத்து நிறுத்தவும், போர்க்குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவும் எப்படியாவது காமன் வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திவிட வேண்டும் என இராஜபட்சே கும்பல் துடிக்கிறது. இந்திய அரசும், காங்கிரசுக் கட்சியும் அதற்குத் துணைபோகின்றன.

எனவே தமிழக மக்களும், உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும்
இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பதை எதிர்த்து முறியடிக்க வேண்டும். போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலை தூக்கிலேற்றக் கோரும் இயக்கத்தையும், ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவளிப்பதைதயும் தொடரவேண்டும்.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பே தீர்வு

இலங்கை இன வெறி அரசின் கீழ் ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பது கிடைக்கப்போவதே இல்லை. மேலும் இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு நடத்தியது ஒரு இனப்படுகொலைதான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இனப்படுகொலைக்குள்ளான ஒரு தேசிய இனம், இன அழிப்பை நடத்திவரும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்பிற்குள் சேர்ந்து வாழவே வழியில்லை. இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனம் தனியாக பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வது ஒரு ஜனநாயக ரீதியான தீர்வாகும். இது உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு நீதியானக் கோட்பாடாகும்.

எனவேதான் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கை ஒன்றுதான் ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறுகிறோம். அதுவே ஈழத்தமிழர்களின் இலட்சியமாகும். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை
என்பது பேரம் பேசுகின்ற ஒரு பொருளல்ல.

அந்த இறுதி லட்சியத்தை அடையும் வரை இடைக்கால சீர்திருத்தம் என்பது ;

உடனடியாக தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் முற்றாக திரும்பப்பெற வேண்டும்; 

தமிழர் பகுதிகள் சிங்களமயமாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; 

ஈழத்தமிழர்களின் அரசியல் ஜனநாயக உரிமைகள் சிவில் நிர்வாகத்தில் தமிழ் மக்களின் பங்கு ஆகியவற்றுக்குப் போராடவேண்டும்; 

இத்தகைய ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக உலகத் தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட தேசங்களும் ஆதரவளிப்பது ஜனநாயகக் கடமையாகும்.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவின் துரோகம்

இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஈழத்தமிழின அழிப்புக்கான இறுதிப்போரை இராஜபட்சே கும்பலோடு கூட்டு சேர்ந்து நடத்தின. இராஜபட்சே கும்பலின் இனப் படுகொலையை மூடிமறைக்கவும், போர்க்
குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும் அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது.

தற்போது 13வது சட்டத்திருத்தம், வடக்குமாகாணத் தேர்தல் என்ற பேரில்
ஈழமண்ணில் இராணுவ மயமாக்கலுக்கும், சிங்கள மயமாக்கலுக்கும் துணைபோகிறது.

காமன் வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு இந்தியா முழு மூச்சுடன் செயல்படுகிறது அதன் மூலம் போர்க்குற்றவாளியை பாதுகாக்கிறது.

இரசிய, சீன ஏகாதிபத்திய அணி இலங்கையில் பலப்பட்டுவிடும் என்று கூறி அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்து இராஜபட்சே கும்பலை ஆதரிப்பதை நியாயப் படுத்துகிறது.

இவ்வாறு இரு ஏகாதிபத்திய அணிகளுக் கிடையில் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்கு நடக்கும் போட்டியில் ஈழத்தமிழினம் பலியிடப்படுவதை எதிர்த்துப் போராடுவது தமிழ் மக்களின் கடமையாகும்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சியான பா.ஜ.க-வும், ஈழம் பற்றியக் கொள்கையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையையே கடைபிடிக்கிறது. இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும், மகஇக போன்ற போலிப் புரட்சியாளர்களும் தனிநாடு கோரிக்கை சாத்தியமே இல்லை என்றும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் - இரு இன தொழிலாளர்களின் ஒன்றுபட்டப் போராட்டமே தீர்வு என்றும் கூறுகின்றன.

 ஈழத்தமிழர்கள் எப்போதுமே தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று கூறி தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையை மறுக்கின்றன. இதன் மூலம் சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோவதுடன்
போர்க்குற்றவாளி இராஜபட்சேவை பாதுகாக்கின்றன. அத்துடன் இந்திய விரிவாதிக்கத்திற்கும் துணைபோகின்றன.

திமுக, அதிமுக போன்றக்கட்சிகள் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்புதான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறிக்கொண்டே 13-வது சட்டத்திருத்தத்தை ஆதரிக்கின்றன. கருணாநிதி, மோடியின்
அமெரிக்க விசா விவகாரம் பற்றிப் பேசும்போது “திமுக-வைப் பொறுத்தவரை மத்திய அரசின் எந்த ஒரு வெளிநாட்டுக் கொள்கையிலும், அதன் உள்விவகாரங்களில் குறுக்கிடுவதில்லை என்பதை நான்
பலமுறை குறிப்பிட்டுள்ளேன்” என்று கூறுகிறார். இதன் மூலம் ஈழத் தமிழினத்தின் அழிப்பிற்கு துணைபோகும் இந்திய அரசின் நிலைபாட்டை எதிர்க்கமாட்டார் என்பதை வெளிப்படுத்திவிட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்புக்கு தீர்மானம் இயற்றுவதும், மறுபுறம் 13வது - சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்று கூறி இலங்கை, இந்திய அரசுகளின் சதித்திட்டத்திற்கு துணைபோவது என்ற நிலையையே மேற்கொண்டுள்ளார். இவ்விரு கட்சிகளும் பொது வாக்கெடுப்புக் கோரிக்கையில் உறுதியாக நிற்கப்போவதுமில்லை ஈழத்தமிழர் நலனுக்காக இறுதிவரை போராடப்போவதுமில்லை.

இலங்கையில் அனைத்துத் துறையிலும் இராணுவ மயமாக்கப்படுவதை கட்டுரை எழுதி அம்பலப்படுத்துகிறார் ஏகாதிபத்திய எடுபிடி அ.மார்க்ஸ். பின்நவீனத்துவவாதிகளும், புதிய இடதுகளும், இலங்கை அரசை சென்ற நூற்றாண்டுகளில் பாசிசம் என்றோ, இல்லை நேரடியான இராணுவ ஆட்சி என்றோ வகைப்படுத்த முடியாது. அதை எவ்வாறு வகைப்படுத்துவது என்று புரியவில்லை எனக் கூறுவதன் மூலம் சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கின்றனர். தமிழ் ஈழம் தனியாக பிரிவதுதான் தீர்வு என்பதை ஏற்க மறுக்கின்றனர்.

தற்போது தமிழக மாணவர்கள் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக அணி திரள்வதையும் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தையும் மூடி மறைத்து மதுரையில் “டாஸ்மாகை” எதிர்த்த உண்ணாவிரதத்தை தொண்டு நிறுவனங்கள் நடத்தி மாணவர்களை பிளவுபடுத்துகின்றன. ஏகாதிபத்தியக் கைக் கூலிகளும், இந்திய அரசின் எடுபிடிகளுமான தொண்டு நிறுவனங்கள் ஈழ ஆதரவு மாணவர் போராட்டத்தை திசை திருப்ப திட்டமிட்டு நடத்தும் நாடகம் இது.

சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு ஆதரவாகவும் இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராகவும் போராடுவது இந்திய மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் கடமையாகும்.

எனவே திராவிடக்கட்சிகளின் நாடகத்தை எதிர்த்தும், தொண்டு நிறுவனங்கள், அடையாள அரசியல்வாதிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தியும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு
ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரண்டு போராட அறைகூவி அழைக்கின்றோம்.

* இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் ஈழமக்களின் சுயநிர்ணய உரிமையை பறிக்கவும் சிங்களப் பேரினவாத அரசை நிலை நிறுத்தவுமே!

*சிங்களப் பேரினவாத ஆட்சியின் கீழ் நடத்தப்படும் வடக்கு மாகாணத் தேர்தல் அரசியல் அதிகாரம் வழங்க அல்ல! அடிமைப்படுத்தவே!

*இந்திய அரசே! இராஜபட்சே கும்பலின் இன அழிப்புப் போர்க்குற்றங்களை நியாயப்படுத்தும் காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

* தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்புக் கோரிக்கையை ஆதரிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர், 2013

No comments:

Post a Comment