Saturday 18 April 2015

20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை: ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக வாதிகளே!

செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திராவின் அதிரடிப்படை (08-04-2015 அன்று) சுட்டுப் படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது.

“சரண் அடையாததாலும், திருப்பி எங்களைத் தாக்கியதாலும் என்கவுண்ட்டர் நடத்தவேண்டிய சூழ்நிலை” என்று ஆந்திர போலீசும், சந்திரபாபுநாயுடு அரசாங்கமும் இந்தப் படுகொலையை நியாயப்படுத்துகின்றனர். 

ஆனால் பேரூந்தில் பயணம் சென்றவர்களைக் கைது செய்து சித்திரவதை செய்துதான் கொன்றார்கள் என்பதை “தோல் உரிக்கப்பட்ட கைகள், கருக்கப்பட்ட உடல்கள், அடித்துத் துன்புறுத்திய காயங்கள், என்று தமிழ்த் தொழிலாளர்கள் உடலில் இருந்த அத்தனை ரணங்களையும்” நேரடியான சாட்சிகளையும் கொண்டு தடய அறிவியல் அறிஞர்களும், ஆந்திரப்பிரதேச சிவில் உரிமை அமைப்புகளும் நிரூபித்துள்ளன.

எனவே தமிழ்த் தொழிலாளர்கள் 20 பேர்களின் பச்சைப் படுகொலை சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தின் “அரச பயங்கரவாதம்தான்” என்பது அம்பலப்பட்டுவிட்டது.

20 தமிழ்த் தொழிலாளர்களைச் சந்திரபாபுநாயுடு அரசாங்கம் சுட்டுக் கொன்றதற்கான காரணம் என்ன?

ஆந்திராவில் செம்மரக் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான போட்டியில் அதிகாரத்தின் கொடுங்கரங்கள் தமிழ்த் தொழிலாளர்களின் உயிர்களைப் பறித்திருக்கின்றன. செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுவரும் கெங்கி ரெட்டி மற்றும் பாஸ்கர நாயுடு போன்ற மாஃபியா கும்பல்களைக் காப்பாற்றவும், ஆந்திர அரசிற்கும் இந்த மாஃபியா கும்பல்களுக்கும் இடையிலான கள்ள உறவுகளை மூடிமறைக்கவும் இப்படுகொலைகளை சந்திரபாபுநாயுடு அரசாங்கம் திட்டம்போட்டு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்தான் செம்மரக் கடத்தலுக்குக் காரணம் என்று காட்டி உண்மையான குற்றவாளிகளை மூடிமறைக்கவே 20 தமிழ்த் தொழிலாளர்கள் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். அதற்காகத்தான் திட்டமிட்டே தமிழ்த் தொழிலாளர்களைக் கொன்று அதற்கு இனவாத வடிவத்தைக் கொடுக்கிறது.

ஆனால் செம்மரக் கடத்தலில் தண்டிக்கப்பட வேண்டிய உண்மையான குற்றவாளிகள் யார்?

ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தொழில் என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்துவருகிறது. இந்த கடத்தல் தொழில் ஆட்சியாளர்களின் ஆசியோடும் கூட்டோடும்தான் நடந்துவருகிறது. கடந்த ராஜசேகர ரெட்டியின் ஆட்சியின்போது கெங்கி ரெட்டி கும்பல் இத்தொழிலை சிறப்பாக நடத்திவந்தது. தற்போது சந்திரபாபு கூட்டணியின் பாஸ்கர நாயுடு கும்பல் சிறையிலிருந்து கொண்டே கடத்தல் தொழிலைக் கன கச்சிதமாகச் செய்துவருகிறது. முன்பு, “கெங்கி ரெட்டியால் எனக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது; துபாயில் தங்கி இருக்கும் அவனை கைது செய்து, அவனது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவேண்டும்; எனக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று கவர்னரிடம் மனுகொடுத்தவர் சந்திரபாபு நாயுடு. தற்போது “தான்” ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு நெருக்கமான பாஸ்கர நாயுடு செம்மரக் கடத்தல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவாக கெங்கி ரெட்டி ஆட்களின் மீது தனது அரசியல் பழிவாங்கலை நடத்தி முடித்துள்ளது. அதற்கு தமிழக கூலித் தொழிலாளர்களைப் பகடைக் காயாக்கிப் பலிவாங்கியுள்ளது சந்திரபாபு நாயுடு அரசாங்கம்.

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையிடும் மாஃபியா கும்பல்கள்

இயற்கை வளங்கள், கனிம வளங்கள், காட்டுவளங்கள் போன்ற இந்திய நாட்டின் பொதுச் சொத்துக்களைச் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் கடத்திக் கொள்ளையடிப்பது என்பது, இந்திய அரசாங்கம் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கிய பின்பு தீவிரமடைந்துள்ளது. ஆந்திராவின் விலை மதிக்க முடியாத செம்மரங்கள் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. செம்மரக் கடத்தலின் தூண்களாகத் திகழ்கின்ற வெளிநாட்டுக் கடத்தல்காரர்கள், மரம் கடத்தும் மாஃபியாக்கள், ஏஜெண்டுகள் போன்ற இவர்கள் யாருமே காட்டுக்குள் போகமாட்டார்கள். ஆனால் இவர்கள்தான் மரக்கடத்தலில் முன்வரிசையில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கின்றனர்.

செம்மரம் கடத்துவதில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் துவங்கி தமிழகத்தின் திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் வரை ஒரு மாபெரும் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.

செம்மரங்களைக் கடத்துவது பெரும்பாலும் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் மூலமாகவும், ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மூலமாகவும், சாலை வழிகள் மூலமாகவும் கடத்தப்படுகின்றன. மாஃபியா கும்பல்கள் செம்மரக் கட்டைகளைத் துறைமுகத்திற்குக் கொண்டுச் செல்வதற்கு, சென்னைத் துறைமுகத்தில் அதிகாரம் செலுத்தும் ஒருவரிடம் பேரம் பேசப்படுகிறது.

வேலூர் காங்கிரஸ் பிரமுகர், அணைக்கட்டு அரசியல் பிரமுகர், திருத்தணியைச் சேர்ந்த மற்றொரு அரசியல் பிரமுகர், தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆகியோர் சென்னைத் துறைமுகத்தில் கோலோச்சுகின்ற கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்தான்.

செம்மரக் கடத்தல் மாஃபியா கூட்டத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடத்தல்காரர்கள், முதலாளிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என சமூகத்தில் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள் உள்ளனர். இவர்களின் கீழ் சிலரை ஏஜெண்டுகளாக நியமித்து 1 டன் செம்மரத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் தருகிறார்கள். ஏஜெண்டுகள் தங்களுக்குக் கீழ் 10, 20 புரோக்கர்களை நியமிக்கிறார்கள். அந்த புரோக்கர்கள் தலா நூறு தொழிலாளர்கள் வரை மரம் வெட்ட அழைத்துச் செல்கின்றனர்.

வறுமையில் சிக்குண்டவர்களை - கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, கல்வராயன் மலைப்பகுதி மக்களையும், ஈரோடு பர்கூர் மலைப் பகுதியினரையும் - குறிவைத்து இந்தச் சமூக விரோதிகள் அணுகி ஆசைகாட்டி “கூலித்தொழிலாளர்களாக” செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இம்மக்களுக்கு முன்கடன் கொடுத்தும், குறிப்பிட்ட அளவு மரத்தை வெட்டித்தர வேண்டும் என நிர்ப்பந்தப் படுத்தியும் கொத்தடிமைகளாக அவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த வருடம் இதுபோன்று மரம் வெட்டிய விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியின் சிவா, விஜயகாந்த், வெங்கடேசன் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2010 முதல் சுமார் 1500க்கும் மேற்பட்ட வழக்குகள் செம்மரக் கடத்தல் தொடர்பாகத் தொடுக்கப்பட்டு 2000க்கும் மேற்பட்ட தமிழ்க் கூலித் தொழிலாளர்கள் ஜாமீன் மறுக்கப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களை தனி சிறையில் வைத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் மாஃபியா கும்பல்களால் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டவர்கள். நிர்ப்பந்தத்தால் இத்தொழிலில் தள்ளப்பட்டவர்கள். இவர்கள் உண்மையில் குற்றவாளிகள் அல்லர். திட்டமிட்டு அரசாங்கத்தின் உதவியோடு மரக் கடத்தலில் ஈடுபடும் மாஃபியா கும்பல்கள்தான் உண்மையான குற்றவாளிகள். ஆனால் ஆந்திர அரசாங்கமோ, தமிழக அரசாங்கமோ செம்மரக் கடத்தலுக்கு மூலகாரணமாகவும், முதன்மைப் புள்ளிகளாகவும் திகழ்கின்ற இந்த மாஃபியா கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன. ஆந்திர அரசாங்கம் கூலித் தொழிலாளர்களைச் சுட்டுக் கொல்கிறது என்றால், தமிழக அரசோ அவர்களுக்கு வாய்க்கரிசி போடுவதுடன் நிறுத்திக் கொள்கிறது. தமிழகத்தில் செயல்படும் மரக்கடத்தல் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்த் தொழிலாளர்களை சுட்டுக் கொல்வதாலோ சிறை பிடிப்பதாலோ செம்மரக்கடத்தல் ஒழியாது

எனவே தமிழ் மக்கள் 20 தமிழ்த் தொழிலாளர்களைப் படுகொலை செய்த சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவேண்டும். என்கவுண்ட்டரில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும். கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் மாஃபியா கும்பல்களை கைது செய்து சிறையிலடைப்பதோடு, கூலித் தொழிலாளர்கள் அனைவரையும் ஆந்திரச் சிறைகளிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என கோருகிறோம்.

தமிழகத்தில் மணல், கிரானைட் கொள்ளை

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது என்பது ஆந்திராவில் மட்டும் நடக்கவில்லை. தமிழகத்தில் தாதுமணல், ஆற்று மணலைக் கொள்ளையடிப்பதும், கிரானைட் கல்லுக்காக மலைகளையே திருடுவதும் கனஜோராக நடந்துவருகிறது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவின் பினாமி ஆட்சி இந்தக் கொள்ளைகளுக்குப் பக்கபலமாகச் செயல்படுவது நாடே அறிந்ததுதான். மணல் கொள்ளையன் வைகுண்டராசனுக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ள உறவுகளும், மணல், கிரானைட் கொள்ளையர்களுக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் உள்ள உறவுகளும் அனைவரும் அறிந்ததுதான். கிரானைட் கொள்ளை பற்றி விசாரித்த உயர்நீதிமன்றம் அமைத்த சகாயம் குழுவைச் சார்ந்த பார்த்தசாரதி மர்மமான முறையில் விபத்தில் இறந்துள்ளார். சகாயம் குழு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஜெயலலிதாவின் பினாமி ஆட்சி பொதுச் சொத்துக்களைக் கொள்ளையிடும் மாஃபியாக்களின் பினாமி ஆட்சியாக மாறியுள்ளது. செம்மரக் கடத்தல் கும்பல் உள்ளிட்ட மாஃபியாக்களின் களமாக தமிழகம் மாறிவருகிறது.

மாஃபியா கும்பல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!

பொதுச் சொத்துக்களைச் சூறையாடிக் கடத்துகின்ற மாஃபியா கும்பல்களை எதிர்த்து இருமாநில மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம்தான் முறியடிக்கமுடியும். செம்மரக் கடத்தலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தமிழர் தெலுங்கர்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல. மாறாக இருமாநில மக்களுக்கும் எதிரான மாஃபியாக்களை எதிர்க்கும் பிரச்சினையாகும். ஆந்திராவிலும் இந்தப் படுகொலைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராடிவருகின்றன. வனம், மண், மரம், கிரானைட் என இயற்கை வளங்களைச் சூறையாடி லாபம் பார்க்கும் மாஃபியா கும்பல்களுக்கு தமிழன், தெலுங்கன் என்ற வேறுபாடுகள் இல்லை. ஆனால் சில தமிழ்த் தேசியம் பேசுகின்ற அமைப்புகள் இப்பிரச்சினையை இருமாநில மக்களுக்கும் இடையிலான மோதலாக மாற்ற விரும்புகின்றன. இது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவும், சந்திரபாபு நாயுடு அரசிற்குச் சாதகமான நிலைமையைத்தான் உருவாக்கும்.

இராமதாசு தலைமையிலான பா.ம.க. கட்சியோ 20 தமிழ்த் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தையும் சாதிவாத அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. தற்போது 20 பேரில் வன்னிய சாதியைச் சேர்ந்த ஆறு பிணங்களை மட்டும் தனியாக பாதுகாத்துச் சட்டரீதியான மேல்நடவடிக்கைகள் எடுப்பதும், அன்புமணி ராமதாசு அந்த ஆறு குடும்பங்களுக்கு மட்டும் நேரில் சென்று ஆறுதல் கூறுவதும் சாதிவெறி அரசியலின் வெளிப்பாடேயாகும். இது தமிழ் மக்களுக்கோ அல்லது வன்னிய சாதி மக்களுக்கோ நன்மை பயக்காது. மாறாக, போராடும் மக்களைச் சாதிய ரீதியில் பிளவுபடுத்துவது, மாஃபியா கும்பல்களையும் சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தையும்தான் பலப்படுத்தும்.

எனவே இனவாதம், சாதிவாதம் என தமிழ் மக்கள் பிளவுபடாமல் 20 தமிழ்த் தொழிலாளர்களைக் கொன்றொழித்த சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” எதிர்த்தும், பொதுச் சொத்துக்களைக் கொள்ளையிடும் மாஃபியா கும்பல்களை எதிர்த்தும் போராடி முறியடிக்க வேண்டும். இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கொள்ளையடிப்பதைத் தடுத்து நிறுத்த மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவ வேண்டும். எனவே, கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அனைத்து உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஓர் அணியில் திரளுமாறு அறை கூவி அழைக்கின்றோம்.

 ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!

 ஆந்திர-தமிழக அரசுகளே,
செம்மரக் கடத்தல் மாஃபியா கும்பல்களைக் கைது செய்!

சிறைப்படுத்தப்பட்ட மாஃபியாக்களின் கொத்தடிமைத் தொழிலாளிகளை விடுதலை செய்!

பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவது ஆந்திரத்தில் மட்டுமல்ல – தமிழகத்தின் மணல், கிரானைட் மாஃபியா கும்பல்களைக் கைது செய்!

ஆளும் வர்க்க அரசியல் வாதிகள், காவல் துறை அதிகாரிகள், முதலாளித்துவக் கொள்ளையர்களை உள்ளடக்கிய மாஃபியா கும்பல்களின் அதிகாரத்தை எதிர்ப்போம்!

மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்திற்காகப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல் 2015

No comments:

Post a Comment