Thursday, 30 April 2015

2015 மே நாள் கழகச் சூளுரை!

மே நாள் வாழ்க, மே நாளில் நம் சூளுரைகள்!!



மே நாள் வாழ்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிரையும் கொடுத்த தியாகிகளின் நினைவைப் போற்றும் நாளே இம் மே நாள். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும், இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவதுதான் இம்மேநாளில் இந்திய மக்களின் சர்வதேசிய, தேசிய கடமையாகும்.

சரிந்துவரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம்

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின், தனது தலைமையின் கீழ் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பைக் கட்டியமைக்கும் அமெரிக்காவின் கனவு தகர்ந்துவிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பேரில் தனக்கு அடிபணியாத நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, பொம்மை ஆட்சிகளை நிறுவுவதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது கட்டுப்பாட்டை நிறுவுவது என்ற அமெரிக்காவின் திட்டம் தோல்வியை தழுவியுள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்கவில்லை.

அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டு வெடித்துக் கிளம்பிய பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அது உலகம் முழுவதும் பரவி இன்று உலக முதலாளித்துவ நெருக்கடி மீளமுடியாத மந்த நிலையை அடைந்துள்ளது. பிரான்ஸ் 0%, இத்தாலி 0.1%, போர்ச்சுகல் 0.7%, கிரீஸ் 2.5%, என ஐரோப்பிய பொருளாதாரம் சுருங்கிவிட்டது. ஜப்பான் பொருளாதாரம் பல ஆண்டுகளாக மந்த நிலையிலேயே தொடர்கிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன.

அமெரிக்காவின் பொருளாதாரம் 2.1 சதவீதமாக வீழ்ந்ததுடன் அந்நாட்டின் கடன் 16 டிரில்லியன்களுக்கும் அதிகமாக உயர்ந்து உலகின் மிகப்பெரும் கடன்கார நாடாக மாறியுள்ளது. வீழ்ந்துவரும் பொருளாதார வலிமையை ஈடுகட்ட அமெரிக்கா தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்துகிறது. ஆனால் அது படுதோல்வியில் முடிந்துள்ளது.

ரஷ்யாவைச் சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் திட்டத்தை எதிர்த்து இராணூவ ரீதியில் அமெரிக்காவிற்குச் சவாலாக ரஷ்யா உறுதியாக நிற்கிறது என்றால், சீனாவோ பொருளாதார ரீதியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குக் குழிபறிக்கிறது. அமெரிக்காவின் டாலருக்குப் போட்டியாக சீனா தனது “ரென்பின்” நாணயத்தை சர்வதேச நாணயமாக புழக்கத்தில் விடுவது; பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக “பிரிக்ஸ் வங்கியை” உருவாக்குவது; சீனாவின் தலைமையின் கீழ் “ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியை” (AIIB) உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சவால் விடுகிறது. இவ்வாறு உலகை மறுபங்கீடு செய்வதற்காக அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய அணிக்கும் – ரஷ்ய, சீன ஏகாதிபத்திய அணிக்கும் இடையிலான போட்டி தீவிரமடைகின்றது.

அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவைச் செய்யும் மோடி கும்பல்

அமெரிக்க ஏகாதிபத்தியம், சரிந்துவரும் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, தனக்குப் போட்டியாக எழுந்துவரும் சீனாவைக் கட்டுப்படுத்தி ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான தனது ஆசிய-பசிபிக் திட்டத்திற்கு மோடி தலைமையிலான இந்திய அரசைப் பணியவைப்பதில் வெற்றி பெற்றுள்ளது. ஆசியாவில் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு அமெரிக்காவின் தலைமையில் ஒரு இராணுவக் கூட்டணி அமைப்பது என்ற அமெரிக்காவின் திட்டத்திற்கு மோடி அரசாங்கம் பணிந்துவிட்டது. அத்துடன் அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்திற்காக நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு இந்திய இராணுவத்தை எடுபிடி இராணுவமாக மாற்றியமைக்கும் இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

மேலும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்ததன் மூலம், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையையும் ஏற்றுக் கொண்டுவிட்டது. இந்திய ஆளும் வர்க்கங்களின் தென்னாசிய மேலாதிக்க நலன்களிலிருந்து அமெரிக்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதன் மூலம் மோடி ஆட்சி, இந்தியா இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த கூட்டுசேராக் கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு சேவைச் செய்யும் நாடாக இந்தியாவை மாற்றிவிட்டது. இந்தியாவை அமெரிக்காவின் நாடுபிடிக்கும் கெடுபிடிப் போர் எனும் தேர்க்காலில் பிணைத்துவிட்டது. இது இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் மோடி கும்பல் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

அமெரிக்காவின் புதியகாலனிய களமாக இந்தியா

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் முன்வைத்த புதிய தாராளக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமல்படுத்திவருகிறது. நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் மன்மோகன்சிங் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தின் “கொள்கை முடக்கமே” என்று கூறி அந்நிய மூலதனத்திற்கு இதுவரை இருந்து வந்த கொஞ்சநஞ்சத் தடைகளையும் அகற்றி சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. வீழ்ச்சியடைந்துள்ள உற்பத்தித் துறையை மீட்பதற்குக் கட்டமைப்புத் துறையில் 1 டிரில்லியன் டாலர் அந்நிய மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்று கூறுகிறது. குறிப்பாக மோடி தனது அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்காவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முதலாளிகளுக்கு இந்தியாவில் முதலீடு செய்யவருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் எத்தகைய சூழலில் அந்நிய மூலதனத்தை உற்பத்தித் துறையில் ஈர்ப்பது என்று மோடி கூறுகிறார்?

உலக அளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை தொடர்கிறது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைவதன் விளைவாக ஊகவாணிபத்தின் மூலம் சொத்துக்களை ஊதிப் பெருக்குவதும் வரலாறு காணாத அளவிற்கு உச்சநிலையை எட்டியுள்ளன. ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை முதலீடுகள் போன்ற ஊகவாணிபத்தின் மூலம் நிதி மூலதனக் கும்பல்களின் சொத்துக்கள் பன்மடங்கு பெருகியுள்ளன. இன்று உலக அளவில் உயர்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரிடம் ஒட்டுமொத்த செல்வத்தில் 50 சதவீதம் குவிந்துள்ளன. மறுபுறம் உலக அளவில் வேலையின்மை பெருகுதல், ஊதியம் குறைக்கப்படுதல், வறுமை பெருகுதல் போன்ற காரணங்களால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து சந்தை சுருங்கி வருகிறது. இத்தகைய சூழலில் நிதி மூலதனம் உற்பத்தியில் அல்லாமல் ஊகவாணிபத் துறைகளில்தான் பெருமளவில் குவிகின்றன.

அண்மையில் இத்தகைய ஊக முதலீடுகள் என்று அழைக்கப்படும் “ஹாட் மணி” இந்திய பங்கு சந்தைகளிலிருந்து வெளியேறத் துவங்கிவிட்டன. இந்திய பங்குச் சந்தையில் 2014 வரை அந்நிய நிதிநிறுவன முதலீட்டாளர்கள் 22 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தனர். ஆனால் இத்தகைய ஊக முதலீடுகள் கடைசி 4 பருவங்களின் போது ரூ 2,140 கோடி அளவுக்கு வெளியேறிவிட்டது. ஏற்றுமதிக்கான சரக்கு உற்பத்தி வீழ்ச்சி, அரசின் வரிவருவாய் குறைந்துபோவது, கடந்தகால வர்த்தக நடவடிக்கைகள் மீது வரிவிதிப்பது போன்றவற்றைக் காரணம் காட்டி “ஹாட் மணி” வெளியேறுகிறது. இத்தகைய ஓடுகாலி மூலதனங்களை நம்பி பயணம் போகிறது மோடி கும்பல். அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரிவழங்குகிறது.

தொழிலாளர்கள் கொத்தடிமையாக்கப்படுதல்

அந்நிய முதலீடுகளைக் கவர்வதற்காக மலிவான கூலி உழைப்பை வழங்குவதாக மோடி கும்பல் வாக்குறுதி அளிக்கிறது. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றுகிறது. தொழிற்சாலைச் சட்டம், தொழில் தகராறு சட்டம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டம் ஆகியவற்றில் பா.ஜ.க. ஆளும் இராஜஸ்தான் மாநில அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அதே சட்டத்திருத்தங்களை மோடி அரசாங்கம் மேற்கொள்வதோடு பிற மாநில அரசுகளையும் செயல்படுத்துமாறு நிர்பந்திக்கிறது. நிரந்தர வேலையைப் பறிப்பது, எட்டுமணி நேர வேலை நேரத்தை ஒழிப்பது, தொழிற்சங்க உரிமைகளைப் பறிப்பது, வேலைப் பாதுகாப்பை ஒழிப்பது ஆகியவை இச்சட்டத்திருத்தங்களின் நோக்கமாக உள்ளன. “அதிகாரிகளின் இராஜ்ஜியத்தை ஒழிப்பது” என்ற பேரில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி கார்ப்பரேட்டுகளின் “காட்டுத் தர்பாரை” கட்டவிழ்த்துவிடுகிறது.

தொழிலாளர்களின் வைப்புநிதி, தொழிலாளர் மாநில காப்பீட்டு உறுதி, ஓய்வூதிய நிதி போன்ற சமூகப் பாதுக்காப்புத் திட்டங்கள் கைவிடப்படுகின்றன. தொழிலாளர்களின் வைப்பு நிதியை பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் ஈடுபடுத்துகிறது. குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 1,000 என்பதையும் மோடி அரசாங்கம் கைவிடுகிறது. இவ்வாறு தொழிலாளர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்தியாவில் 93 சதவீதம் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக - இந்த உரிமைகள் எதுவும் அற்றாவர்களாக உள்ளனர். இனி அனைத்துத் தொழிலாளர்களும் எந்தவித உரிமைகளுமின்றிக் கொத்தடிமைகளாக மாற்றப்படுவர்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம்

அன்னிய மூலதனத்திற்கு மலிவான விலையில் நிலங்களையும் மூலப்பொருட்களையும் வழங்குவதற்காகவே மோடி அரசாங்கம், பிரிட்டிஷ் ஆட்சியின் 1894 - நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் விட ஒரு கொடிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

1894 சட்டத்தின்படி அரசிற்கோ, அரசிற்கு வேண்டப்பட்டவர்களுக்கோ தேவைப்படும் நிலத்தை விவசாயிகளின் ஒப்புதல் இன்றியே கையகப்படுத்தலாம். 1947க்குப் பிறகும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் இந்திய அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றிவந்தது. 1990களுக்குப் பிறகு கார்ப்பரேட்டுகளின் நலன்களையே பொது நலனாகச் சித்தரித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தங்க நாற்கரச் சாலைகள், தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் 2004 வரை சுமார் 6 கோடிப் பேர் தங்களுடைய வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக உ.பி., மே.வங்கம், மகராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். தேர்தலில் தோற்றுப் போய்விடுவோம் என்ற பயத்தில்தான் மன்மோகன்சிங் அரசாங்கம் “நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை மற்றும் நியாயமான இழப்பீடு பெரும் உரிமை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டம், 2013”ஐ கொண்டுவந்து விவசாயிகளுக்கு சில சில்லரைச் சலுகைகளை வழங்கியது.

மோடி அரசாங்கம் அந்தச் சலுகைகளையும் பறித்து கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. இச்சட்டத்தின்படி தனியார்துறைத் திட்டங்களுக்கும் கூட விவசாயிகளின் ஒப்புதல் இன்றியே மூன்று போகம் பயிர்சாகுபடி நடக்கும் நிலங்களைக் கையகப்படுத்தலாம்; சமூக தாக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள் செய்யத் தேவை இல்லை; 5 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களை திருப்பித்தர வேண்டியதில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக நிலத்தை பறிகொடுத்தவர்கள் நீதிமன்றத்தை அணுகமுடியாது என்பவற்றின் மூலம் விவசாயிகள் மீது ஒரு கொடிய தாக்குதலை நடத்தியுள்ளது.
ஏற்கனவே இந்திய அரசாங்கம் அமல்படுத்திவரும் புதியகாலனிய “கார்ப்பரேட்” விவசாயத்தால் விவசாயம் அழிந்து விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. தற்கொலைகளும், பட்டினிச் சாவுகளும் தலைவிரித்தாடுகின்றன. தற்போது விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் மோடி ஆட்சி செயல்படுகிறது.

அனைத்தும் தனியார் மயம்

மோடி ஆட்சி அன்னிய மூலதனத்தைக் கவர்வது எனும் பேரில் வங்கிகள், இன்சூரன்ஸ், இரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் திறந்துவிடுகிறது. நாட்டின் 11 துறைமுகங்களை கார்ப்பரேட் மயமாக்கியுள்ளது. சுரங்கம் மற்றும் கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் ஏலம் எடுப்பதற்கு வசதியாக சட்டங்களைத் திருத்திவிட்டது. இவ்வாறு அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளைத் தனியாருக்கு தாரைவார்த்து அரசாங்க கஜானாவைக் காலிசெய்கிறது. நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுகிறது. மறுபுறம் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகளை வாரிவழங்குகிறது. அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டிய கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற திட்டங்களை எல்லாம் தனியார்மயம் வணிகமயமாக்குவதைத் தீவிரப்படுத்துகிறது. ஆதார் அட்டை மூலம் நேரடி மானியம் என்ற பேரில் நியாயவிலைக் கடைகளுக்கும், இந்திய உணவு கழகத்திற்கும் மூடுவிழா நடத்துகிறது. சுருங்கச் சொன்னால் மோடி ஆட்சி புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தி இந்திய நாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய சுரண்டல் களமாக மாற்றுகிறது. ஏகாதிபத்திய நெருக்கடியின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது சுமத்துகிறது. மோடி ஆட்சியின் தேசவிரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடுமுழுவதும் அனைத்துப் பிரிவு மக்களும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். இப்போராட்டங்களை நசுக்குவதற்காக மோடி ஆட்சி இந்துத்துவப் பாசிசத்தை கட்டவிழ்த்துவிடுகிறது.

இந்துத்துவப் பாசிசம்!

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. மதமாற்றத் தடைச்சட்டம், பசுவதைத் தடைச் சட்டம், இராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம், பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற மதவெறி கருத்துக்களை பிரச்சாரம் செய்வதன் மூலம் சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. அத்துடன் இந்து மதமொழியான சமஸ்கிருதத்தைக் கல்வியில் திணிப்பது, இந்தி மொழியை திணிப்பது ஆகியவற்றின் மூலம் பிற தேசிய இன மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

மோடி கும்பல் இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான காரணம் மோடி ஆட்சி இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதை மூடிமறைப்பது, ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை திசைதிருப்புவது, மக்களை மத ரீதியில் மோதவிட்டு பிரித்தாளுவது போன்ற சூழ்ச்சிகளேயாகும். எனவே மோடி கும்பலின் இந்துத்துவப் பாசிச ஆட்சியை எதிர்த்த போராட்டம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டமுமாகும். எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், இந்துத்துவப் பாசிச சக்திகள் சிறுபான்மை மதத்தினர் மீது தொடுக்கும் மதக்கலவரங்களை எதிர்த்தும், இந்தி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ்மொழியை ஆட்சிமொழி, பயிற்று மொழியாக்குவதற்காகவும் போராட வேண்டும்.

 பாலைவனமாகும் தமிழகம்!

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற தமிழகத்தின் முக்கிய ஆற்றுப் பிரச்சினைகளில் கர்நாடகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தமிழகத்தின் கடைமடை உரிமையை மறுத்துவருவதால் தமிழகம் விரைவில் பாலைவனமாக மாறும் அபாயத்தில் உள்ளது. அண்மையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் 48 டி.எம்.சி. நீரைத் தேக்குவதற்கு அணைகட்ட திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்துவருகிறது. தற்போது புதிய அணைகட்டுவதன் முலம் தன்னுடைய அணைகளில் நிரம்பி வழியும் உபரி நீரையும் தமிழகத்திற்குத் தரமறுத்து காவிரியில் கர்நாடகம் ஏகபோக உரிமை கொண்டாடுகிறது.

மத்திய அரசோ காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அதிகாரபூர்வமாக தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மறுக்கிறது. பற்றாக்குறைக் காலங்களில் நீரைப் பங்கிட்டுக் கொள்வதற்கு ஒரு சரியான தீர்வை முன்வைக்க மறுக்கிறது. நதிநீர்ப் பிரச்சினையில் “ஹெல்சிங்கி” கோட்பாட்டின் அடிப்படையில் தமிழகத்தின் கடைமடை உரிமையைப் பாதுகாக்கத் தவறுகிறது. மேலும் நதிகளை இணைப்பதன் மூலம் நீர்ப்பற்றாக்குறை மாநிலங்களின் தேவையை நிறைவேற்ற மறுக்கிறது. மாறாக மோடி அரசாங்கம் பட்ஜெட்டில் நீர்ப்பாசனத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, கங்கையைச் சுத்தப்படுத்த ஒரு லட்சம் கோடி ஒதுக்கி இந்துத்துவ புனிதத்தை மீட்கிறது. தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது.

ஊழல் மலிந்த ஜெயாவின் “பினாமி” கும்பலே தமிழக ஆட்சியைவிட்டு வெளியேறு!

தமிழகத்தை ஆளும், ஊழல் குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ள ஜெயாவின் “பினாமி” ஆட்சி, ஜெயாவைத் தண்டனையிலிருந்து மீட்பதற்காக மோடி கும்பலின் தேசவிரோத மக்கள் விரோத ஆட்சிக்குத் துணைபோகிறது. மோடி ஆட்சி கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆதரிப்பதுடன் தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை வரவேற்க மாநாடு நடத்துவதற்கு “ஜெயாவின்” விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அத்துடன் இந்தப் பினாமி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிரம்பி வழிகிறது. எனவே ஊழல் மலிந்த ஜெயாவின் பினாமி கும்பலை ஆட்சியை விட்டு வெளியேற்றுவது தமிழக மக்களின் தேவையாக உள்ளது.
எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கும், இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்து இம் மே நாளில் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்!

      *  மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
      *  அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும் இந்தியாவின் மீதான புதிய காலனி ஆதிக்கத்திற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்ப்போம்!
      *  அந்நிய மூலதன கொள்ளைக்காகத் தொழிலாளர்கள் மீது கொத்தடிமைத்தனத்தை திணிக்கும் சட்டத்திருத்தத்தை அனுமதியோம்!
      *  பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டத்தைக் கைவிடு!
      *  மோடி அரசே! காவிரியில் மேக தாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்து! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!
      *  கட்டாய ஆட்சி மொழியாக இந்தி மொழியைத் திணிப்பதை எதிர்ப்போம்! தமிழை ஆட்சி மொழியாக்கப் போராடுவோம்!
      *  பசுவதைத் தடைச் சட்டம், மத மாற்றத் தடைச் சட்டங்களை அனுமதியோம்!
      *  ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் இந்து ராஜ்ஜியக் கனவைத் தகர்த்தெறிவோம்!
      *  ஊழல் மலிந்த ஜெயாவின் பினாமி கும்பலே, தமிழக ஆட்சியை விட்டு வெளியேறு!
      *  உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு   மே 2015

No comments:

Post a Comment