Monday, 24 October 2016

தமிழகம் - காவிரியின் வடிகால் அல்ல! காவிரியில் தமிழகத்தின் சம உரிமைக்காகப் போராடுவோம்!




தமிழகம் - காவிரியின் வடிகால் அல்ல!
காவிரியில் தமிழகத்தின் சம உரிமைக்காகப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

காவிரிப் பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் 30.9.2016 அன்று, மத்திய அரசு 4 நாட்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் 10 நாளைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்குமுறையாற்று ஆணையத்தையும் அமைக்க வேண்டும்,  என்ற உத்தரவை கர்நாடகா ஏற்க மறுத்ததுடன் தண்ணீரை திறக்க முடியாது என்று அறிவித்துவிட்டது. 

கர்நாடகம், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்த் தாவாச் சட்டம் என அனைத்தையும் தொடர்ந்து மீறி வருகிறது. காவிரியில் நிரம்பி வழிந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் என்கிறது. வறட்சிக் காலங்களில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுத்து அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக, தமிழகத்தை காவிரியின் வடிகாலாக மாற்றிட முயற்சிக்கிறது.

காவிரிப் பிரச்சினையில் மோடி அரசின் துரோகம்

காவிரிப் பிரச்சினையில், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தின் மார்பில் குத்துகிறது என்றால், மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியோ தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது. உச்ச நீதி மன்றத்தில் 30.9.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஒப்புக்கொண்டதோடு, மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால், 3.10.2016-ல் நடந்த வழக்கு விசாரணையில், “நடுவர்மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருக்கும் நிலையில், இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு செல்லாது, காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றச் சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும், இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறி பல்ட்டி அடித்து கர்நாடகத்திற்கு சாதகமான நிலை எடுத்து தமிழகத்தை வஞ்சித்தது. 40-ஆண்டுகால தமிழகத்தின் சட்டப் போராட்டத்தை நிர்மூலமாக்கியது. இதன் மூலம் மோடி ஆட்சி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. மாறாக, மாநிலங்களின் உரிமைகளையும் பறித்து, அனைத்து அதிகாரத்தையும் மத்தியில் குவித்து எதேச்சதிகார ஆட்சியின் மூலம் புதியகாலனியத்திற்கு சேவை செய்கிறது. இத்தகைய எதேச்சதிகாரப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.

தீராத காவிரிப் பிரச்சினை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்திற்கு ஆறுதல் அளிக்கின்ற தீர்ப்புதான். அந்தத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராடுவதும் அவசியம்தான். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மட்டுமே காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. காரணம் 2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் வறட்சிக் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வது எப்படி என்ற வரையறையை முன்வைக்கவில்லை, அதை நீதிமன்றத்தால் வரையறுக்கவும் முடியாது. எனவேதான் இரண்டாண்டுக்கு ஒரு முறை வறட்சி ஏற்படும் எல்லாக் காலங்களிலும் போராட்டத்திற்கான நிலைமைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

இவ்வாறு காவிரிப் பிரச்சினையில் நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாததற்கு காரணம் என்ன?

காவிரிப் பிரச்சினையில், காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் கர்நாடகத்தில் அக்கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால்தான், போட்டிப் போட்டுக் கொண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த மறுக்கின்றன என்பதில் பாதி உண்மைதான் உள்ளது. காவிரிப் பிரச்சினைத் தீராமல் தொடர்வதற்கு ஜனநாயக விரோத அரசியல் சட்டங்கள் மற்றும் ஆளும் வர்க்கக் கட்சிகள் கடைப்பிடிக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன.

நதிநீர்ச் சிக்கலை தீர்க்க வக்கற்ற அரசியல் சட்டம்

காவிரி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு சரியான, நியாயமான முறையில் தீர்வு காண்பது என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு தீர்வு காண்பதற்கு எளிமையான சட்டவிதிகள் எதுவும் இல்லை.

வரலாற்று ரீதியாகவே இந்தியாவில் ஆற்று நீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன. இந்தியாவில் ஓடும் 18 பெரிய ஆறுகளில் 17 ஆறுகள் மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆறுகள் ஆகும். இதில் எதில் ஒன்றிலும் இதுநாள் வரையில் சிக்கல்கள் தீர்க்கப்படவே இல்லை. இதற்கு ஜனநாயகமற்ற வரலாற்று ரீதியான காரணங்களுடன் அரசியல் சுயநலன்களும் காரணமாகும்.

ஆற்று நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண 1979ஆம் ஆண்டு உருவான நர்மதை ஆற்று நடுவர் மன்றம், 1980ஆம் ஆண்டு உருவான கோதாவரி நடுவர் மன்றம், 2010ஆம் ஆண்டு உருவான கிருஷ்ணா நடுவர் மன்றம் போன்ற நடுவர் மன்றங்கள் வெகு காலமாக இயங்கவே இல்லை. நர்மதை நடுவர் மன்றம் 37 ஆண்டுகள் கடந்தபின்பும் சர்தார் சரோவர் அணைக்கு தீர்வு காணவே இல்லை. குஜராத்தின் வறண்ட கட்ச் பகுதிக்கு நீர் வழங்கும் பிரச்சினையில் குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கிடையில் அடுத்தக் கட்ட மோதல் தயாராகி வருகிறது. கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்சினை தீராமல் இரண்டாவது நடுவர்மன்றம் அமைக்கும் வேலை நடந்து வருகிறது.

நதி நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 262வது பிரிவோ, அதனடிப்படையில் 1956ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட  நடுவர் மன்றம் அமைப்பதற்கான சட்டத் திருத்தங்களோ, விவசாயிகள் உள்ளிட்டு அனைவருக்கும் நீர் உட்பட அனைத்துக்கும் உத்திரவாதம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 19(a) பிரிவு உட்பட அனைத்துச் சட்டங்களும் சில நீர்ப் பகிர்வு, நீர்மின் திட்டம் அமைக்க பயன்பட்டிருந்தாலும் மொத்தத்தில் நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வுகாண முடியாததாகவே உள்ளன. விவசாயிகளின் பிரச்சினைகள் மட்டுமல்ல குடிநீர்ப் பிரச்சினையக் கூட, இருக்கும் சட்டங்களால் தீர்க்க முடியாது. எனவே நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க அரசியல் நிர்ணயச் சட்டமே மாற்றி எழுதப்பட வேண்டும். இவ்வாறு ஜனநாயகமற்ற அரசியல் சட்டங்களும், ஆளும் வர்க்கக் கட்சிகளின் அரசியல் சுயநலன்களும் காவிரிப் பிரச்சினைத் தீராததற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

காவிரிப் பிரச்சினைக்கு சரியான தீர்வு

காவிரிப் பிரச்சினையில் மேல் மடையைச் (Upper Riparian Rights) சார்ந்த கர்நாடகம், அதன் பகுதிக்குட்பட்ட ஆற்றுநீர் அதன் பயன்பாடு மீது முழு இறையாண்மையை உள்ளடக்கிய சட்ட அதிகாரம் கோருகின்ற ஹார்மன் கோட்பாட்டை முன்வைக்கிறது.

அதற்கு நேர் மாறாக கீழ் மடையைச் (Lower Riparian Rights) சார்ந்த தமிழகம், ஆற்றுப் படுகை உழவர்களின் அனுபவ பாத்தியதை உரிமையைக் (Prescreptive Rights) கோருகிறது. அதாவது 1924 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி நீர் விடவேண்டும் என்று கோருகிறது.

இவ்விரண்டு கோட்பாடுகளும் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்படாத, அநீதியான கோட்பாடுகளாகும். நாம் நிராகரிக்க வேண்டிய கோட்பாடுகளாகும். மாறாக, நிபுணர்களால் முன்வைக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமபங்கீட்டுக் கோட்பாடான ஹெல்சிங்கி கோட்பாடே (The Doctrine of Equitable Apportionment) நதி நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுகின்ற நியாயமான சரியான கோட்பாடாகும். இதன்படி, குறிப்பிட்ட பரப்பு அல்லது அமைப்பிற்குட்பட்ட ஆற்று நீரின் பயன்கள் அவ்வமைப்பு அல்லது பரப்பின் மீது சட்ட அதிகாரம் செலுத்தும் நாடுகள் தங்களுக்கிடையில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இத்தகைய சமபங்கீட்டுக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் காவிரி பிரச்சினைக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிர்ச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும். இதனை உடனடியாக அமல்படுத்த நாம் போராட வேண்டும்.

ஆனால், காவிரிப் பிரச்சினை தீராததற்கு, ஆளும் வர்க்கக் கட்சிகள் கடைப்பிடிக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றொரு முக்கியக் காரணமாகும். மத்திய மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் புதிய தாராளக் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்க்கையில் கடும் துன்பங்களைக் கொண்டு வந்துள்ளது. அதிலிருந்து அவர்களைத் திசைத்திருப்ப நதி நீர்ப் பிரச்சினைகளை ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்துகின்றன.

விவசாயிகளின் அவலங்களும் ஆளும் வர்க்கங்களின் சதியும்

தண்ணீர்ப் பிரச்சினைதான் விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் என்று இரண்டு மாநில ஆளும் வர்க்கக் கட்சிகளும் வாதிடுகின்றன.

ஒருபுறம் தமிழகத்தில், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு “இறுதியானது”; அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கூட கேள்வி எழுப்ப முடியாது; இதுவே சட்டத்தின் நிலை என்று வாதிடப்படுகிறது. மறுபுறம் கர்நாடகத்தில், வறட்சி நிலவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீர்ப்புதான் அவர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று அவர்களிடம் உரக்கக் கூறப்படுகிறது.

விவசாயிகளைப் பொறுத்தவரை, தங்களது வாழ்நிலை வீழ்ச்சியடைந்து வருகின்ற இன்றைய எதார்த்த சூழலில் இத்தீர்ப்புகள் என்பது மிகமிக சாதாரணமாகும். எந்த ஒரு நாடாளுமன்றவாதக் கட்சியும் விவசாயிகளின் துன்பத்திற்கான உண்மையான காரணம் எங்கே உள்ளது எனக் கூறத் தயாரில்லை. இன்று நாடு முழுவதும் விவசாயிகள் நம்பிக்கை இழந்து தவித்து வருகின்றனர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் விவசாய நெருக்கடிகளின் பன்முகத் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் விவசாயிகளின் துன்பங்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. வேளாண் துறை நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் நன்கறிந்ததுதான். அவை பின் வருமாறு:

1) புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்திய காலத்தின்போது விவசாய உற்பத்தி பாதியாக வீழ்ச்சியடைந்துவிட்டது; நபர் ரீதியான உணவுதானிய உற்பத்தி முழு அளவில் வீழ்ந்துவிட்டது;
2) விவசாயிகளுக்கு வங்கிகள் அளித்துவந்த கடன்கள் குறைந்து, கந்துவட்டிக் கொடுமையில் சிக்குவது அதிகரித்து வருகிறது; வேளாண்மைத் துறைக்கான அரசாங்க முதலீடுகள் குறைந்து வருவதோடு, தனியார் முதலீடுகள் அதனை ஈடு செய்யவில்லை. விளைவு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு செலவு குறைக்கப்பட்டு விட்டது;
3) ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை சீரழித்து - உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் சந்தை சக்திகளின் வர்த்தகச் சூதாட்டத்தில் தள்ளி வதைத்துவருவது;
4) மானியங்களை வெட்டியதன் விளைவாக உரம், பூச்சி மருந்துகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்து இடுபொருட்களின் விலை உயர்ந்து விட்டது. தனியார் நிறுவனங்களிடமிருந்து மரபணு நீக்கப்பட்ட விதைகள் அதிக விலைகொடுத்து வாங்குவது போன்ற காரணங்கள் உற்பத்திச் செலவை அதிகரித்து வருவது;
5) வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கான அளவு ரீதியான கட்டுப்பாடுகளை நீக்கி, சுங்க வரிகளைக்  குறைத்து, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுப் பொருட்களை மலிவான விலையில் கொட்டிக் குவிப்பது, விளை பொருட்களின் விலை குறைந்து உள்நாட்டு விவசாயிகளால் போட்டிப் போடமுடியாமல் விவசாயம் நலிவடைந்து வருவது;
6) விவசாயிகள் பணப்பயிர் உற்பத்திக்கு மாறுவதால் விவசாயிகளின் குடும்பத் தேவைக்கான உணவுப் பாதுகாப்பு அழிவதுடன், பல பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி சுற்றுச் சூழலை பாதித்து வருவது;
7) விவசாயிகளின் வருமானத்தைவிட செலவு அதிகரித்து, சொத்துக்களை விற்பதும், கடன்படுவதும், அடகுவைப்பதும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறுவதும் அதிகரித்து வருவதுடன், வேறு எந்த வேலையும் கிடைக்காமல் குடிபெயர்வு அதிகரிப்பதும், கடன் தொல்லையால் தற்கொலையால் மாள்வதும் தொடர்கிறது.

மேற்கண்ட புதிய காலனிய வேளாண்மைக் கொள்கைகள் வேளாண்மைத் துறையில் அடிப்படையான முரண்பாடுகளைத் தீவிரமாக்கி வருவதை எடுத்துக் காட்டுகின்றன. புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவதால் விவசாயிகள் வாழ்வு நலிவடைவதும், அதிருப்தியும் தீவிரப்பட்டுக்கொண்டே செல்கிறது. இரண்டு மாநில விவசாயிகளும் வறட்சிக்கும் பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இரண்டு மாநில ஆளும் வர்க்கக் கட்சிகள் வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளிலிருந்து காப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த மறுக்கின்றன. நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி பேசவும் மறுக்கின்றன. மாறாக விவசாயிகளின் துன்பங்கள் அனைத்திற்கும் ஆற்று நீர்ப் பிரச்சினை குறித்த தீர்ப்புகள்தான் காரணம் என்று கூறி இனவெறியைத் தூண்டி இரண்டு மாநில விவசாயிகளையும் மோத விடுகின்றனர்.

விவசாயிகள் (அமைப்பாக்கப் படாததாலும், பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை புரிந்து போராடததாலும்) ஆளும் வர்க்கக்  கட்சிகளின் திசைதிருப்பும் பிரச்சாரத்திற்கு இரையாகி வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் தங்களது துன்பங்களுக்கானக் காரணங்களைப் புரிந்துகொள்ள காது கொடுத்து கேட்கவும் தயாரில்லை.

ஆனால், ஆளும் வர்க்கக் கட்சிகளோ, விவசாயிகளின் வீழ்ச்சிக்கு மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர்ப் பிரச்சினைதான் முக்கியக் காரணம் என்று ஏமாற்றுகிறார்கள். ஏனென்றால் விவசாயிகளின் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கானத் திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அதிருப்தி அடைந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, சதியையும் திசைதிருப்புவதையும் தவிர வேறொன்றும் இல்லை. நதி நீரில் பெரும் பகுதியைப் பெறுவதுதான் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும், அதைப் பிற மாநில விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொள்வதுதான் தீர்வு என்றும் இன வெறியை ஊட்டி பகைமையை வளர்க்கின்றனர்.

இவ்வாறு மத்திய மாநில அரசுகள் புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் விவசாய நெருக்கடியிலிருந்து விவசாயிகளைத் திசைதிருப்பும் ஆளும்வர்க்கச் சதிகள் நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தடையாக மாறியுள்ளது.

மேலும் புதிய தாராளக் கொள்கையின்படி தண்ணீர் தனியார் மயமாக்கும் கொள்கைகள் நதிநீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண்பற்குத் தடையாக இருக்கிறது.


தண்ணீரில் பொது உரிமையை மறுக்கும் தனியார்மயம்


1991ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மின் துறையை தனியாருக்குத் திறந்துவிடும் கொள்கையை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக நீர் மின் உற்பத்தியும் கூட தனியாருக்குத் திறந்துவிடப்பட்டது. அதன் விளைவாக தனியார் நிறுவனங்கள் ஆற்று நீரைத் தேக்குவதற்கான அணைகளைக் கட்டவும், பராமரிக்கவும், இயக்கவும் உரிமை கொண்டாடவும் அனுமதிக்கப்பட்டது. ஆற்றின் மீது தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு அனுமதி அளித்தது. இந்தப் புதிய கொள்கைகள் தண்ணீர் தனியார் மயமாக்கலில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு ஆறுகள், குளங்கள், ஏரிகள் அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பொது உரிமையாகவும், தனியார் நிலங்களில் கிடைக்கும் நிலத்தடி நீர் தனியார் உடைமையின் கீழும் இருந்து வந்தது.

ஆனால், இன்றைய புதிய நிலைமைகளின் கீழ், மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பாக பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தண்ணீர் வணிகத்தில் கோக், பெப்சி, சூயெஸ், விவேண்டி, தேம்ஸ் வாட்டர் மற்றும்  பெக்டெல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை, தனி ஒரு விவசாயி பம்ப்செட் மூலம் நிலத்தடி நீரை எடுத்து விற்றதற்குப் பதிலாக, தற்போது பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் குளிர்பானங்கள் தயாரிப்பது, தண்ணீர் வியாபாரம் செய்வதற்காக கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெஹ்திகஞ்ச், தமிழகத்தில் தாமிரபரணி போன்ற இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்கின்ற நிலை உருவாகி உள்ளது.

இந்நிறுவனங்கள் ஏராளமான நிதி மற்றும் அரசியல் ரீதியில் மிகவும் வலிமை வாய்ந்தவைகளாகும். உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அதிகாரமிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள், அமெரிக்க ஏகதிபத்தியம் போன்றவை இவைகளின் பின்னணியில் உள்ளன. இவை எந்த ஒரு அரசாங்கத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தவும், அதன் கொள்கைகளை தீர்மானிக்கவும் வல்லமை மிக்க நிறுவனங்களாகும்.

பணம் மற்றும் கொள்ளை லாபமே தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கான பெரு இயக்கு சக்தியாக உள்ளன. மனிதகுலம் உள்ளவரை தண்ணீர் வியாபாரம் நெருக்கடி இன்றி வளர்ந்து கொண்டே இருக்கும். தண்ணீர் வியாபாரம் 400 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 3 டிரிலியன் டாலர் வரை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது வருடத்திற்கு ரூ.3,37,000 கோடியாக உள்ள முதலீடு வரும் காலத்தில் இது இரண்டரை மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.


தண்ணீர் தனியார் மயமாக்கல் மூலம் தண்ணீர்த் துறை சந்தையோடு இணைக்கப் படுகிறது. சந்தை விதிகளின்படி தண்ணீர் வழங்குவதற்கான முழு விலையையும் நுகர்வோர் கொடுக்க வேண்டும். காசில்லாத ஏழைகளுக்கு குடி தண்ணீரும் கிடையாது. ஏழைகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கங்களும் கூட ஓரம்கட்டப்பட்டுவிடும். விவசாயத்திற்கான தண்ணீரும் வியாபாரம் ஆகுமானால் நாட்டின் உணவுப் பொருள் விலையும் உயர்ந்து உணவுப் பாதுகாப்புக்கே குழி பறித்துவிடும்.


தண்ணீர் என்பது அடிப்படை மனித உரிமையாக ஆக்கப்படுவது ஒன்றுதான் அனைவருக்கும் தண்ணீர் என்ற உரிமையை நிலைநாட்ட வழியாகும். தண்ணீர் தனியார் மயத்தை ஒழித்து, அதன் மீதான நிலையான பொது உரிமையை நிலைநாட்டினால்தான் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த முடியும். உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தண்ணீருக்கான உரிமையை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாது, உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொது சொத்தாக மாற்ற வேண்டும். குடி நீர், விவசாயம்  உள்ளிட்ட அனைத்திற்கும்  அரசு பொறுப்பேற்க வேண்டும். அது ஒன்றுதான் அனைவருக்கும் தண்ணீரை உத்திரவாதப்படுத்தும்.


ஆனால் மத்திய மாநில அரசுகளும், ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளின் தண்ணீர் தனியார் மயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இக்கொள்கைகளால்தான் நீரின் மீது பொது உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. ஆற்று நீர் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை நிறுவ முடியவில்லை. இவ்வாறு தண்ணீரை தனியார் உடைமை ஆக்கி பொது உரிமையை மறுப்பதால்தான் ஆற்று நீர் மீது சட்ட ரீதியாக அரசாங்கக் கட்டுப்பாட்டை கொண்டுவர மறுக்கின்றனர். நதி நீரை முறையாகப் பகிர்ந்து கொள்வதற்கான சட்டத்தைக் கொண்டுவரவோ, நடுவர் மன்றங்களை அமைக்கவோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை செயல்படுத்தவோ மறுக்கின்றனர். தண்ணீர் தனியார் மயமாக்கும் கொள்கையிலிருந்துதான் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை ஏற்க மறுக்கும் மோடி அரசின் மோசடிகளை புரிந்து கொள்ள முடியும்.

உண்மையில் நதி நீர்ப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக காவிரிச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால் ஜனநாயகமற்ற அரசியல் சட்டங்களைத் தூக்கியெறிய வேண்டும். இந்திய அரசு அமல்படுத்தி வரும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை ஒழித்துக்கட்டி நிலத்தின் மீதும், நீரின் மீதும் இறையாண்மையையும், அரசுக் கட்டுப்பாட்டையும் கொண்டுவரும் திட்டங்களையும், தண்ணீரை அடிப்படை மனித உரிமையாக மாற்றும் சட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். ஆறு, குளங்கள், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டை நிறுவ வேண்டும். தேசிய இனங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தங்களுக்குள் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குத் தடையாக தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள இந்திய அரசிலிருந்து பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய கூட்டாட்சி அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் வறட்சியிலிருந்து நாட்டு மக்களை காக்க நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நான்கு மாநில விவசாயிகளையும், ஜனநாயகச் சக்திகளையும் உள்ளடக்கிய அதிகாரமுள்ள மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதை ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசுதான் சாதிக்கும்.


அதற்குத் தயாராகும் அதே வேளையில், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஹெல்சிங்கி சமபங்குக் கோட்பாட்டு அடிப்படையில் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், தண்ணீரைத் தனியார் மயமாக்கும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், கர்நாடகா தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும், கீழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.


* காவிரி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகள் தீராததற்குக் காரணம் இந்திய அரசு கடைப்பிடிக்கும் புதியகாலனிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளே!
 
* உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை எதிர்க்கும் மோடி ஆட்சியையும், கர்நாடக அரசையும் எதிர்ப்போம்!
 
* உடனடியாகக் காவிரி நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடு!
 
* நான்கு மாநில விவசாயிகளையும், ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் போராடுவோம்!
 
* அநீதியான நீர்ப் பகிர்வால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கு!
 
* கர்நாடகத்தில் தமிழர்களின் மீது தாக்குதல் தொடுக்கும் கன்னட இன வெறியர்கள் மீது நடவடிக்கை எடு! தமிழர்களுக்குப் பாதுகாப்பு கொடு!
 
* தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரசை தூக்கியெறிவோம்!
* பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனங்களின் கூட்டாட்சிக்காகப் போராடுவோம்!
 
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு அக்ரோபர்  2016
 
 

No comments:

Post a Comment