Tuesday 5 July 2011

மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 07.06.2011 அன்று காணாமல் போன சதீஷ்குமாரை (காவல்துறையினரின் மெத்தனத்தின் காரணமாக) 13.06.2011 அன்று சென்னை ஐ.சி.எப் ஏரியிலிருந்து பிணமாகத்தான் மீட்க முடிந்தது. கைவிரல் வெட்டப்பட்டு, நகங்கள் பிடுங்கப்பட்டு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தை அறுத்து இக்கொலை செய்யப்பட்டுள்ளது என்றும் கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே ஏரியில் உடல் வீசப்பட்டுள்ளது என்றும் பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் கூறியுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது போன்றே இக்கொலை நடந்துள்ளது என பார்த்தவர்கள் அனைவரும் கூறுகின்றனர்.


தனது மகன் படுகொலைக்கு, திருமுல்லைவாயில் காவல்நிலைய ஆய்வாளர்களான ரியாசுதீனும், கண்ணனுமே காரணம் என தோழர் சங்கரசுப்பு கூறியுள்ளார். திருமுல்லைவாயிலைச் சார்ந்த அருண்குமாரை திருட்டு வழக்கில் கைது செய்து, காவல்நிலையத்தில் வைத்து சித்தரவதை செய்து, தொடர்ந்து இவர்கள் இருவரும் பணத்தையும், நகைகளையும் பிடுங்கியபடியே இருந்தனர். அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து, அருண்குமாரை விடுவித்தது மட்டுமின்றி இவ்விரு காவல் ஆய்வாளர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வைத்ததோடு தலா ரூ.25,000 நட்ட ஈடு வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பையும் பெற்றுத் தந்தார். இந்த வழக்கிலிருந்து சங்கரசுப்பு விலகாவிட்டால், பின்னர் கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டிவரும் என ஏற்கெனவே இவர்கள் இருவரும் மிரட்டினர். தற்போது தனது மகனைக் கொன்று பழிவாங்கியுள்ளனர் என்று தோழர் சங்கரசுப்பு கூறியுள்ளார். மாநிலப் போலீசார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதாலும், இக்கொலையை தற்கொலை என்று முடித்துவிட காவலதுறையினர் முயற்சி செய்ததாலும் மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணை தேவை என்று நீதிமன்ற உத்தரவை வாங்கி, தற்போது விசாரணை நடந்து வருகிறது. எனினும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

தோழர் சங்கரசுப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நீதிமன்றத்தில் நக்சல்பாரி புரட்சியாளர்கள், ஈழவிடுதலை ஆதரவாளர்கள், தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமை கோருபவர் மற்றும் உயர்சாதி ஆதிக்கத்திற்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், காவல்துறையினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வாதாடி, போராடி வந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாகத்தான் அருண்குமார் வழக்கிலும் மனித உரிமை அடிப்படையிலேயே தலையிட்டார். ஆனால் காவல்துறையினர் இவை அனைத்தையும் கணக்கில் கொண்டே தோழர் சங்கரசுப்புவை மிரட்டி வைக்கவே திட்டமிட்டு இக்கொலையை செய்துள்ளார்கள் என கருதவேண்டியுள்ளது. இதன் மூலம் வழக்கறிஞர் சமுதாயம் முழுவதையுமே ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதே இக்கொலையின் நோக்கமாக உள்ளது.

காவல் துறையின் பயங்கரவாதம்:

இந்தியா முழுவதுமே காவல்துறை, இராணுவம் மற்றும் துணைஇராணுவப் பிரிவினர் மக்களின் மீது கொடிய அரசுபயங்கரவாத அடக்குமுறைகளை ஏவிவருவதுடன், சட்டவிரோதமாக செயல்படுவது அதிகரித்துக்கொண்டே வருகின்றன. போலிமோதல்களும், காவல்நிலைய படுகொலைகளும், சித்திரவதைகளும், காவல்நிலையக் கற்பழிப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திவரும் தாக்குதல்கள் தொடருகின்றன என்பதை சதீஷ்குமாரின் கொலையும் நிரூபிக்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் காவல்துறையினர் நடத்திய “பிளாக் கோட் ஆபரேசன்” கொலைவெறித் தாக்குதல் அதன் உச்சபட்சமாகும். அதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தற்போது அமைந்துள்ள ஜெயலலிதா ஆட்சியும் நடவடிக்கை எடுக்குமா? ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது.

தமிழகத்தில், 01.01.2001 முதல் 31.03.2009 வரை மட்டுமே காவல்துறையினரால் போலி மோதல் மற்றும் காவல்நிலைய படுகொலைகள் மூலம் 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆசியாவிற்கான மனித உரிமைகள் மையத்தின் ஆவணம் கூறுகிறது. மாவோயிஸ்டு அமைப்பைச் சார்ந்த தோழர்கள் ரவீந்திரன், சிவா, நவீன்பிரசாத் போன்றவர்கள் போலி மோதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்நிலையக் கற்பழிப்புகள் தொடர்வதோடு காவல்துறையிலேயே பெண் காவலர்கள் மீது உயர் அதிகாரிகளின் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வதை அண்மையில் கோவையைச் சார்ந்த பெண் காவலர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தியுள்ளது. சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு முதல், தற்போதைய கேரள மாணவி வரை காவல்துறையினரின் காமக்களியாட்டங்கள் அப்பாவி மக்கள் மீது தொடர்வதை எடுத்துக்காட்டுகிறது.

காவல் நிலையமே கட்டப்பஞ்சாயத்து நிலையங்களாகவும், சித்தரவதைக் கூடங்களாகவும் திகழ்கின்றன என்பதற்கு ஏராளமான ஆதரங்கள் உள்ளன. அண்மையில் தியாகராய நகரில், காவல்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஆதரவாக தட்டிக் கட்டியதற்காக அதிமுக-வைச் சார்ந்தவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து நொறுக்கி சித்தரவதை செய்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் தலையிட்டு அவர்களை மீட்டுச் சென்றனர். அந்த அதிகாரி பின்னர் மாற்றப்பட்டார். ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே இந்தக்கதி என்றால் அப்பாவி மக்களின் நிலைமைகளை கூறவும் வேண்டுமா?

ஜெயலலிதா அம்மையார் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே தமது முதன்மையான பணி என்று அறிவித்துள்ளார். திருட்டு, கொள்ளை, கொலைகளை ஒழிப்பதே தமது முதன்மையான பணி என்று கூறுகிறார். அத்துடன் மக்களிடமிருந்து அரசுக்கு எதிராகவும், பிற எதிர்ப்புகளையும் அடக்குவதே அதன் உள்ளார்ந்த உண்மையாகும். ஆனால் காவல்துறையினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், போலி மோதல் மற்றும் காவல்நிலைய படுகொலைகள் சித்தரவதைகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கை எடுப்பது பற்றியும் அவர் கூறவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்று கூறினார். அவரது ஆட்சியில் காவல்துறையின் மூளையும் கெட்டுவிட்டது.

 தற்போது ஜெயலலிதா அரசாங்கம்; நடத்தும் காவல்துறையினரின் வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்தும், மக்கள் மீது நடத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், காவல்துறையில் நடக்கும் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும், மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்திடவும், காவல்துறையில் சீர்திருத்தம் செய்யவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே தமிழக அரசு அதற்கான ஒரு கமிட்டியை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்களின் சார்பாகக் கோருகிறோம். எனவே காவல்துறையினரின் பயங்கரவாதத்தை எதிர்த்து கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அறைகூவி அழைக்கிறோம்.

மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்!

தமிழக அரசே!

* படுகொலைக்கு காரணமென சந்தேகிக்கப்படும் காவல் ஆய்வாளர்கள் ரியாஸ்சுதின், கண்ணன் மீது விசாரணை நடத்து, குற்றவாளிகளைக் கண்டுபிடி!

* வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்தும், படுகொலைகள், சித்திரவதைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடு!

மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்துப் பொதுக்கூட்டம்
==============================================

வில்லிவாக்கம் பேருந்துநிலையம்
நாள்: 07.07.2011  நேரம்: மாலை 6 மணி

தலைமை : தோழர் டேவிட் செல்லப்பா, சென்னை மாவட்ட அமைப்பாளர், ம.ஜ.இ.க.

கண்டன உரை :

தோழர் ஞானம், மாநில அமைப்பாளர், ம.ஜ.இ.க.

தோழர் மார்க்சு, புரட்சிகர இளைஞர் முன்னணி.

தோழர் பாவேந்தன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

தோழர் ரஜினிகாந்த், வழக்கறிஞர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி

தோழர் சேல் முருகன், வழக்கறிஞர்

தோழர் குணாளன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர், ம.ஜ.இ.க

தோழர் தெய்வசந்திரன், கடலூர் மாவட்ட அமைப்பாளர், ம.ஜ.இ.க

தோழர் ஜீவா, ம.ஜ.இ.க., வேலூர் மாவட்டம்

தோழர் சோமு, ம.ஜ.இ.க., சேலம் மாவட்டம்

தோழர் மாயக்கண்ணன், தருமபுரி மாவட்ட அமைப்பாளர், ம.ஜ.இ.க

தோழர் மனோகரன், ம.ஜ.இ.க., சென்னை

நன்றி உரை : தோழர் மணி, ம.ஜ.இ.க.

மக்கள் கலைமன்ற கலைநிகழ்ச்சி நடைபெறும்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு
==========================================================================================
உலகத்தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!
சமரன் படியுங்கள்! பரப்புங்கள்!!
==========================================================================================

No comments:

Post a Comment