Wednesday, 27 July 2011

இந்திய அரசே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி!

* ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் தாக்குதல், ஈழத் தமிழின மக்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு
நடத்தப்பட்டதால், அது இனப் படுகொலை குற்றமாகும். இனப்படுகொலைகளுக்கு உள்ளான ஒரு தேசிய இனம், இன அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே வழியில்லை.

*  ஈழத்தமிழர்களின் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுத்து, அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு தமிழீழ இன அழிப்புப் போரை நடத்தியது. அதன் எதிர் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் படையாகத் தோன்றி 30 ஆண்டுகளாக இனத் தற்காப்புப் போரில் ஈடுபட்டனர். சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் ஒரு தேசிய இன விடுதலைப் போரே ஆகும்.



இராசபட்சேவுடன் இணைந்து ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது இந்திய அரசு


விடுதலைப் புலிகளுடன் (UPA) அரசாங்கம் செய்துகொண்ட 2002ஆம் ஆண்டு போர் ஓய்வு ஒப்பந்தத்தை இராசபட்சே எதிர்த்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும் இராசபட்சே அந்த போர் ஓய்வு ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக ரத்து செய்துவிட்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பாசிச இன ஒழிப்புப் போரில் முழு மூச்சாக ஈடுபட்டார். இந்த இனப் படுகொலை யுத்தத்தை நடத்துவதற்கு துணைக்கு வருமாறு இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளை அழைத்தார். இந்த போரை நடத்துவதில் இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு உற்ற நண்பனாகவும், முதன்மையான கூட்டாளியாகவும் செயல்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்து மீறி நடந்து கொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானிக்கப்படும் நிலைவந்தால், இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்றும் இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது


போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டில் ஏற்றும் போராட்டம் இலங்கையை எதிர்த்தது மட்டுமல்ல இந்திய அரசை எதிர்த்ததும்தான்.

ஏனெனில் இந்தப் போரை சிங்கள அரசுடன் இந்திய அரசும் சேர்ந்தே நடத்தியது. இத்தீர்மானம் பற்றிப் பேசும்போது ஜெயலலிதா அவர்கள் இலங்கையில் நடந்த அனைத்துப் போர்க் குற்றங்களையும் கருணாநிதி எதிர்த்துப் போராடவில்லை, துரோகம் செய்துவிட்டார் என்று கூறும் அதே வேளையில் போரை நடத்திய மத்தியில் ஆளும் காங்கிரசு கட்சியை விமர்சிக்கவே இல்லை. மேலும் தி.மு.க, அ.தி.மு.க இருக்கட்சிகளுமே இலங்கைப் பிரச்சினையை வாக்கு சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அணுகுகிறார்களே ஒழிய அதில் உளப்பூர்வமாக செயல்படவில்லை என்பதே வரலாறு. எனவே, இக்கட்சிகளின் தீர்மானங்களையும், வார்த்தைகளையும் நம்ப இயலாது. எனவே ஜெயலலிதா அரசாங்கம் மத்திய அரசோடு மேற்கொள்ளும் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை எதிர்த்துதான் போர்க்குற்றவாளி என்ற கோரிக்கையை வெல்ல முடியும்.

தமிழகத்தில்  ஈழ அகதிகளின் அரசியல் உரிமை

தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு ஜெயலலிதா இலங்கைப் பிரச்சினையில் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தத்தான் முடியுமே தவிர வேறு
எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருந்தார். மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதே அதன் பொருள். அது முடியாவிட்டாலும் கூட, தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளும் சிறை போன்ற வதைமுகாம்களில்தான் வசித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இப்பிரச்சினையில் அவர்களை சுதந்திரமாக அனுமதித்து பிற நாடுகளில் அகதிகளுக்கு உள்ளது போன்ற அரசியல் உரிமைகளை வழங்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு

இராசீவ் படுகொலை என்பது இந்திய ‘அமைதிப்படை’ ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களின் எதிர்விளைவாகும். இந்தியாவின் விஸ்தரிப்புவாத
நலன்களிலிருந்து, இலங்கை சிங்களப் பேரினவாத அரசை பாதுகாக்க இராசீவ் காந்தி இந்தியப் படையை அனுப்பி ஈழமக்கள் மீது ஒரு போரை
நடத்தினார். அந்த படை தமிழர்களுக்கு உதவி எனும் பேரில் ஈழத்தமிழ் மக்களை நரவேட்டையாடியது. ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை கொன்றொழித்தது. பெண்களை கற்பழித்ததுடன் ஈழத்தை சூரையாடியது. எனவேதான் இப்படையின் தலைவர் என்ற அடிப்படையில் இராசீவ் கொல்லப்பட்டார். எனவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். அம்மக்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும். இராசீவ் படுகொலையைக் காரணம் காட்டி, விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு துணை போவதேயாகும்.


விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து அகண்ட ஈழம் உருவாக்கத் திட்டம் வைத்துள்ளது என்று இந்திய அரசு கூறுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். இராசீவ்காந்தி கொலையை மட்டும் வைத்து அந்த அமைப்பைத் தடை செய்ய முடியாது என்பதால் இந்தியா கூறுகின்ற பொய்யேயாகும். அத்தகைய ஒரு திட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டிருக்கவில்லை என்பதோடு, தாங்கள் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றே கூறிவந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக எந்த ஒரு குற்றத்தையும் இதுவரை புரிந்ததில்லை. தமிழக முதல்வர் தாம்தான் விடுதலைப் புலிகளை தடை செய்யச் சொன்னேன் என்று தற்போதும் கூறுகிறார். இராசபட்சேவை போர்க்குற்றவாளி என்று கூறி தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீதான தடையை நியாயப்படுத்தி பேசியிருப்பது நியாயமற்றது. எனவே மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதானத் தடையை உடனடியாக நீக்கவேண்டும்.

ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய அரசும்  இராசபட்சே ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதை  எதிர்த்துப் போராடாமல் - இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், ஈழத்தமிழர்களின் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்வதை தடுத்து நிறுத்தவும், ஈழமக்களுடைய அரசியல் சுதந்திரம் (சுயர்நிர்ணய உரிமை) மற்றும் வாழ்வுரிமைகளை வெல்வதும் சாத்தியமில்லை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாட்டாளிவர்க்கத் தலைமையில் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்பது இன்றைய உடனடி தேவையாக உள்ளது.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக - உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு

No comments:

Post a Comment