Saturday, 23 July 2011

கருப்பு ஜுலை`28 (1983-2011) ம.ஜ.இ.கழக போல்சுவிக் போர்க்குரல்

இந்திய அரசே!

போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று!

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!

சிங்களப் பேரினவாத, புத்த மதவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அப்போர் மூள்வதற்கு மூல காரணமான தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. தேசிய இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் உலகச் சட்டங்கள் அனைத்தையும் மீறி வன்னி மக்களை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த இனப்படுகொலை பெரும் போர்க் குற்றமாகும். அது மட்டுமின்றி, போர் முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசின் இன ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது. தமிழீழ மக்களுக்கு அரசியல் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதுடன், போரின் கடைசிக் கட்டத்தில் வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேரக்குறைய 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாழ்விடங்களில் அமர்த்தப்படவில்லை.

இந்தச் சூழல், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி உலகமெங்கும் இராசபட்சே கும்பலை போர்க் குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஈழத் தமிழர்களின் அரசியல் சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை மீட்கப் படவேண்டும் என்பதற்கான இயக்கமும் வலுத்து வருகிறது.

எனவே, இன்று ஈழத்தமிழ் மக்களின் மூன்று அடிப்படைப் பிரச்சனைகள்
1) இலங்கை அரசும் இராசபட்சே கும்பலும் போர்க் குற்றவாளிகள் எனப் பிரகடனப்படுத்துதல்
2) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்தை மீட்டெடுத்தல்
3) ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமை மீட்டெடுத்தல்
ஆகியவற்றிற்கு உடனடியாக தீர்வு காண வேண்டியுள்ளது.

முதலாவதாக இலங்கையில் நடந்த முப்பதாண்டு போரையும் போர்க் குற்றங்களையும் எடுத்துக்கொள்வோம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கை ஆளும் வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்ட காலம் முதலே ஈழத்தமிழ் தேசிய இனச் சிக்கல் இருந்து வருகிறது. இலங்கையின் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ அரசு இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் மீது குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்திவரும் இன ஒடுக்குமுறையை தன் வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது. தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமையை பறித்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை தேசிய இனம் என ஏற்க மறுத்தல், தமிழினத்தின் மீது ஒரு திட்டமிட்ட பொருளாதார, சமூக, கலாச்சார ஒடுக்குமுறைகளைத் தொடுத்தல் என்ற சிங்கள பேரினவாத, புத்தமதவாத இலங்கை அரசு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கு எதிராகவும் ஈழத்தமிழ் மக்கள் போராடி வந்தனர். அவர்கள் தங்களது உரிமைகளைக் கோரி பல ஆண்டுகாலமாக இயக்கம் நடத்தினர்.

ஜீ.ஜி.பொன்னம்பலம் தொடங்கி அமிர்தலிங்கம் ஈறாக சமரசத் தலைவர்கள் தலைமையில் ஜனநாயக ரீதியில், அமைதி வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இனியும் இரு தேசிய இனங்களும் இலங்கை அரசமைப்புக்குள் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில்தான் ஈழத் தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்ற முடிவு வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்டது. அத் தீர்மானத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை, அடுத்து வந்த தேர்தல் மூலம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து “சுயாட்சி”, “தனி ஈழம்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980களிலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடின.

ஈழத்தமிழர்களின் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுத்து, அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு தமிழீழ இன அழிப்புப் போரை நடத்தியது. அதன் எதிர் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் படையாகத் தோன்றி 30 ஆண்டுகளாக இனத் தற்காப்புப் போரில் ஈடுபட்டனர். சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் ஒரு தேசிய இன விடுதலைப் போரே ஆகும்.

இரண்டாவதாக சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இராசபட்சே கும்பல் செய்த போர் குற்றங்களை எடுத்துக்கொள்வோம்.

ஈழத்தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண இலங்கையின் சிங்கள பேரினவாத அரசும், ஆளும் வர்க்கங்களும் எப்போதும் விரும்பியதில்லை. ஈழத் தமிழினத்தை ஒரு தேசிய இனமாகவோ அதன் சுயநிர்ணய உரிமையையோ அவர்கள் அங்கீகரித்து விடவில்லை.

விடுதலைப் புலிகளுடன் (UPA) அரசாங்கம் செய்துகொண்ட 2002ஆம் ஆண்டு போர் ஓய்வு ஒப்பந்தத்தை இராசபட்சே எதிர்த்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும் இராசபட்சே அந்த போர் ஓய்வு ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக ரத்து செய்துவிட்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பாசிச இன ஒழிப்புப் போரில் முழு மூச்சாக ஈடுபட்டார். இந்த இனப் படுகொலை யுத்தத்தை நடத்துவதற்கு துணைக்கு வருமாறு இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளை அழைத்தார். இந்த போரை நடத்துவதில் இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு உற்ற நண்பனாகவும், முதன்மையான கூட்டாளியாகவும் செயல்பட்டது.

2009ஆம் ஆண்டு இறுதியிலும் 2010 மே மாதம் வரையில் நடைபெற்ற கடைசிக் கட்ட ஈழப் போரில் ஏற்பட்ட இன அழிவு குறித்து உலகத் தமிழர்கள் எடுத்துக்காட்டிய சில அடிப்படை உண்மைகளை ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

1) இலங்கை அரசு நடத்திய விரிந்த அளவிலான தொடர் குண்டு வீச்சுக்கள் மூலம் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டனர்.

2) மருத்துவ மனைகள் மற்றும் மனித நேய நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சுகளுக்கு இறையாயின.

3) பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்க விடாமல் இலங்கை அரசு தடுத்தது.

4) போரில் உயிர் பிழைத்த மக்கள் குறிப்பாக உள்நாட்டில் இடம் பெயரவைக்கப்பட்ட மக்கள் மற்றும் போராளிகள் என்று சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

5) போர் களத்துக்கு அப்பால் இருந்து போரை எதிர்த்த ஊடகத்துறையினர் மற்றும் பிற திறனாய்வாளர்கள் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.


இலங்கையில் நடந்தது இனப் படுகொலையே:

“இனப் படுகொலை” என்பதற்கும் “மனித குலத்திற்கு எதிரானக் குற்றம்” என்பதற்கும் இடையே மயிரிழை வேறுபாடு உண்டு.

பொது மக்கள் மீது திட்டமிட்ட முறையிலோ விரிவான அளவிலோ தெரிந்தே நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானக் குற்றம் எனப்படும். இவ்வாறான படுகொலைத் தாக்குதல் ஒரு தேசிய இனமக்கள் மீதோ, ஒரு மரபினக் குழுவினர் மீதோ, ஒரு பண்பாட்டு இனத்தினர் மீதோ, ஒரு மத்தினர் மீதோ வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டால் அதுவும் அவர்களை முழுமையாகவோ அல்லது அவர்களில் ஒரு பகுதியினரையோ அழித்தொழிக்கும் வகையில் நடத்தப்பட்டால் அது இனப்படுகொலை குற்றமாகும். (இந்திய சூழலில் ஒரு சாதியின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டால் அதுவும் அவர்களை முழுமையாகவோ அல்லது அவர்களின் ஒரு பகுதியினரையோ அழித்தொழிக்கும் வகையில் நடத்தப்பட்டால் அதுவும் இனப்படுகொலை குற்றமாகும் என்பதையும் இனப்படுகொலை வகைப்பட்ட அழித்தொழிப்பு ஆகும் என ஏற்க வேண்டும்)

இங்கு இன அழித்தொழிப்பு என்பதற்கு யூகோஸ்லாவியா தீர்ப்பு குறிப்பான நிபந்தனையை வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இன மக்கள் உடலியல் ரீதியாகவோ கட்டமைப்பு வகையிலோ அழிக்கப்பட்டால் அந்த அழித்தொழிப்பு இனப்படுகொலை வகைப்பட்ட அழித்தொழிப்பு ஆகும்.

(மனிதகுலப் பகைவன் - கி.வெங்கட்ராமன், என்ற நூலிலிருந்து பக்கம் 21)

நான்காம் கட்ட ஈழப்போர் குறித்து ஐ.நா. பின்வருமாறு கூறுகிறது. “இலங்கைப் படையினர் நடத்திய இத்தாக்குதல் வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனவதை (persecution) நடவடிக்கையாகும்” என ஐ.நா. குழுவினர் வரையறுத்துள்ளனர். (மேற்கூறப்பட்ட நூல் பக்கம் 14)

எனவே ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் தாக்குதல், ஈழத் தமிழின மக்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதால், அது இனப் படுகொலை குற்றமாகும்.

இனப்படுகொலைகளுக்கு உள்ளான ஒரு தேசிய இனம், இன அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே வழியில்லை என்பது உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

இராசபட்சேவுடன் இணைந்து ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது இந்திய அரசு

போரை தீவிரப்படுத்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு 1000 கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக அளித்தது. ஏராளமான இராணுவத் தளவாடங்களை வழங்கியது. விடுதலைப் புலிகள் தாக்குதலால் சேதமடைந்த பலாலி இராணுவ விமானப் படைத்தளத்தை சீர்படுத்திக் கொடுத்தது. “சார்க்” மாநாட்டிற்கு ஏராளமான இராணுவத்தினருடன் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவுக்கு திரும்பும் போது பெரும்பாலான இந்திய இராணுவ வீரர்களை இலங்கையிலேயே விட்டுவிட்டு வந்தார். அந்த இராணுவ வீரர்கள் இலங்கை இராணுவத்தோடு இணைந்து இராசபட்சேவின் இன ஒழிப்புப் போரில் பங்கு கொண்டனர்.

இந்தியாவின் முப்படைத் தளபதிகள் அவ்வப்போது இலங்கைக்குச் சென்று இலங்கை இராணுவத்திற்கு ஆலோசனை வழங்கி வழிக்காட்டினர். போர் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் வழிக்காட்டவும் இந்திய உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை உயர் அதிகாரிகள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, ஆலோசனைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இராணுவத் தளவாடங்களை ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் கப்பலைத் தாக்கி கடலில் மூழ்கடித்தது. அத்தோடு இந்தோனிசியக் கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதத் தளவாடங்களை இந்திய கடற்படை தாக்கி அழித்தது.

பொருளாதார நிலைமைகள் காரணமாக வெளிநாட்டு வர்த்தக பற்று வரவின் பற்றாக் குறையால், இலங்கை அரசு தத்தளித்துக்கொண்டிருந்த போது, மேற்கொண்டு பண உதவி அளிக்க பன்னாட்டு செலவாணி நிதியம் (IMF) இழுத்தடித்துக் கொண்டிருந்த போது இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்குக் கடன் வழங்குங்கள் என்று வலுவாக பரிந்துரைத்து வாங்கித் தந்தது.

இவ்வாறு இலங்கை அரசின் கூட்டாளியாக செயல்பட்ட சோனியா மன்மோகன் கும்பல் போர் முடிந்த பின்பும் இராசபட்சேவை காப்பாற்ற சர்வதேச அளவில் முயற்சிகளை மேற்கொண்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளையும், ஜெனிவா உடன்பாட்டு கோட்பாடுகளையும் இலங்கை அரசு அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே அதைக் கண்டிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் 2009ல் முயற்சி நடந்தபோது அதை முறியடித்து காப்பாற்றியது இந்தியாதான். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியதாக இராசபட்சேவைப் பாராட்டி அதே மனித உரிமை பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற அரும்பாடுபட்டு வெற்றி பெற்றது இந்திய அரசு.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்து மீறி நடந்துகொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானிக்கப்படும் நிலைவந்தால், இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்றும் இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது.

போருக்குப் பின் இலங்கை அரசின் தமிழின ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது

இலங்கையில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஐ.நா. விசாரணை ஆணையம் கீழ்வருமாறு கூறுகிறது:

அ) தமிழ் பயங்கரவாதத்தை வீழ்த்தி விட்டதாக ஒரு வகை வெற்றி வெறஇலங்கை அரசால் தொடர்ந்து பரப்பப் படுகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டும் போரில் நிகழ்த்திய மனித அழிவு கூட வெற்றியின் அடையாளமாக காட்டப்படுகிறது.

ஆ) இன அடிப்படையில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளியல் ஒதுக்கல்தான் அங்கு நடைபெற்ற இன மோதலுக்கு மைய காரணமாக அமைகிறது. அது தொடர்கிறது.

இ) அவசர காலச் சட்டம், பங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகிய போர்காலச் சட்டங்கள் போர் முடிந்த பிறகும் தொடர்வது மட்டுமின்றி போர் நடந்த பகுதிகளில் படைக் குவிப்பு, தொடர்வதும் இராணுவ ஒட்டுக் குழுக்கள் வன்முறையிலும் அச்சுறுத்தலிலும் ஈடுபட்டு மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதும் தொடர்கிறது.

ஈ) ஊடகத்துறையின் மீது கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அங்கு அமைதியின்மை நீடித்துக்கொண்டிருக்கிறது.

சிங்களிரிடம் பேரினவாத சிந்தனை பின்வருமாறு வெளிப்படுகிறது. தமிழர்கள் அந்நியர்கள் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனை மேலோங்கி நிற்கிறது. அனைத்தும் சிங்கள மயமாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சிங்களரிடம் மேலோங்கி நிற்கிறது.

பலத்த இராணுவ காவலில் முகாம்களில் ஏறக்குறைய இரண்டு லட்சம் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். உணவுகளும், மருந்துகளும், குடிநீர், கழிப்பிட வசதிகள் கூட இல்லாமல் தமிழ் மக்கள் சீரழிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். தமிழர்களுடைய விளைநிலங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்படும் நிவாரண நிதிகளும் கட்டப்படும் வீடுகளும் டிராக்டர்களும் சிங்களருக்கு வழங்கப்படுகின்றன. ஈழத் தமிழ் மக்களின் சைவ திருக்கோவில்கள் புத்த கோவில்களாகவும், மடங்களாகவும் மாற்றப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய ஊர் பெயர்களெல்லாம் சிங்களப் பெயர்களாகவும் மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்கள் புதிது புதிதாக அமைக்கப்படுகின்றன. சிங்கள இராணுவ குடியிருப்புகளும் கட்டப்படுகின்றன.

மொத்தத்தில் ஈழத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதோடு, அவர்களது பகுதிகளெல்லாம் சிங்கள மயமாக்குவதன் மூலம் சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசு தனது இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இராசபட்சே கும்பல் போர்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும்

போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்தின் அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) உறுதிப்படுத்தபட வேண்டும்

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசுக்கும் ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கும் (தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்) இடையில் நடைபெற்ற போர் முடிவடைந்தபிறகு, போரில் இராசபட்சே கும்பல் நிகழ்த்திய போர் குற்றங்களுக்காகத் தண்டனை அளிக்க வேண்டிய பிரச்சனைக்கும்; போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கு அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படவேண்டும்.

முதலாவதாக, ஈழத்தமிழினப் போரில் இராசபட்சே கும்பலின் போர்க்குற்றங்கள் பற்றிய பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். இலங்கையில் இறுதிப் போர்க்கட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றம்தான் என்று ஐ.நா. விசாரனைக் குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கையின் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா. பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை. ஏதாவது ஒரு நாடு ஐ.நா. மனித உரிமை மன்றம் அல்லது பாதுகாப்பு குழுவில் இவ்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து, அது நிறைவேறினால்தான் செயலுக்குவரும்.

ஈழத்தமிழின ஒழிப்புப் போரை இலங்கை அரசு இந்தியாவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு நடத்தியதால் இந்திய அரசு இராசபட்சேயின் போர்க் குற்றங்களின் ஆதரவாளனாகவே இருந்துவருகிறது. போர்க்குற்றங்களைச் செய்த இலங்கை அரசுடனும் இராசபட்சேவுடன் இந்திய அரசு கூடிக்குலாவுகிறது. ஐ.நா.வின் மனித உரிமைப் பாதுகாப்பு மன்றத்தில் இலங்கை அரசைக் கண்டித்து “சுவிஸ் நாடு கொண்டுவந்த தீர்மானத்தை” தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் செய்தது.

இறுதிக் கட்ட ஈழப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டது போர் குற்றம்தான் என்று ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவித்திருப்பதை, அமெரிக்க ஏகாதிபத்தியம் இராசபட்சே கும்பல் போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனம் செய்வதற்கு மாறாக, இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் இராசபட்சே கும்பலைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்குப் பயன்படுத்த விரும்புகிறது.

‘ஜனநாயகம்’ ‘மனித உரிமை’ என்ற பெயரில் இராணுவ சர்வாதிகார லிபியா-கடாபி மீது தாக்குதல் நடத்துகிறதே தவிர ஈழத்தமிழினப் போரை நடத்திய இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி எனப் பிரகடனப் படுத்தவில்லை.

மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் இராசபட்சே கும்பல் போர்க்குற்றங்களை கண்டிக்காமல் இருந்தன. இராசபட்சே கும்பல் போர்க்குற்றவாளிதான் என்கிற உண்மை பல நாடுகளில் உணரத்தொடங்கிய நிலையில் அக்கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் விளைவாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன. பிரான்சு, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரானத் தீர்மானம் கொண்டுவரப்படும்.

தென்னாசியாவில் செல்வாக்கு மண்டலத்துக்கு அமெரிக்காவுடன் போட்டியிடவும், இலங்கையைத் தங்களுக்கு ஒரு தளமாக பயன்படுத்தவும் இலங்கை அரசுக்கு சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவளிக்கின்றன. ஆகையால் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி இராசபட்சேவிற்கு முட்டுக்கொடுத்து தாங்கிப் பிடிக்கின்றன.

இந்தியா இலங்கை மீது தனது துணை மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், இலங்கை அரசு சீன அணிக்குள் சென்றுவிடாமல் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசும் சோனியா-மன்மோகன் கும்பலும் போர்க்குற்றவாளி இராசபட்சேவை ஆதரிக்கின்றன.

அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ அணி நாடுகளுக்கும் சீனா, ரஷ்யா அணிக்கும் இடையிலான முரண்பாட்டையும், இலங்கையின் மீது தனது துணை மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் இந்தியாவுக்கும் இலங்கையைத் தனது தளமாக பயன்படுத்த விரும்பும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாட்டையும் பயன்படுத்திக்கொண்டு இராசபட்சே கும்பல் ஈழத்தமிழின அழிப்புப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களினால் வரும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறது.

இன்றுள்ள சர்வதேச சூழலில், உலக உழைக்கும் மக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும், தங்கள் சொந்த நாட்டு அரசு, இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கவும், இலங்கை மீது பொருளாதாரத் தடைவித்திக்கக் கோரியும் போராடவேண்டும்!

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு

போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்தின் அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) உறுதிப்படுத்தப்பட வேண்டும்

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் தாக்குதல் இனப்படுகொலை குற்றமாகும். இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனம் இந்த அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க தேசிய இனத்தோடு (ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்தோடு) ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே இடமில்லை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

ஆனால் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதற்கு மாறாக ஈழத்தமிழ் மக்களுக்கு, சிங்கள இனத்தவருக்கு இணையாக, சம உரிமை கிடைப்பதற்கு இலங்கை அரசமைப்புக்குள்ளேயே, இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஈழத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், அம்மக்களின் மறுவாழ்வுக்கு இலங்கை அரசை வலியுறுத்துவது என பசப்பிக்கொண்டிருக்கிறது சோனியா மன்மோகன் கும்பல். இதையே கிளிப்பிள்ளைப் போல் ஜெயலலிதாவும், திருத்தல்வாதிகளும் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இலங்கையில் நிலவிவரும் நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்க்க, அரசியல் அதிகாரம் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது, அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே அளிக்காது என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே திட்டவட்டமாக அறிவித்துள்ளது இலங்கை அரசு.

அண்மையில் இராசபட்சே, நிலம் மற்றும் காவல்துறையின் மீது மாநில அரசாங்கங்களுக்கு கட்டுப்பாட்டைத் தர இயலாது என்று கூறிவிட்டது. இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது தொடுத்த ஈழத்தமிழின ஒழிப்புப் போருக்குப் பிறகு சிங்களப் பேரினவாத புத்த மதவாத இலங்கை அரசின் அமைப்புக்குள் இரண்டு இனத்தவர்களும் சேர்ந்து வாழ வழியில்லை. ஈழத்தமிழ் மக்கள் சம உரிமை பெறுவது, என்றும் நடவாத காரியம். மேலும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் ஈழத்தமிழின ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்வது, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை கோருவது தவிர்க்க முடியாதது என்பது நிரூபணமாகிறது.

ஆகையால்தான் மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என கோருகிறோம்.
ஈழத்தமிழரின் வாழ்வுரிமை

“இன அழிப்புப் போர்” முடிந்து வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேரக்குறைய 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப் படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் தொடர்கிறது. அவர்களுடைய விளைநிலங்கள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும் பகுதியை இராணுவப் பகுதிகளாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழி ஏதுமின்றி ஈழத்தமிழினம் சிதறடிக்கப்பட்டு சின்னாப்பின்னமாக்கப்பட்டுள்ள இந்த அவலநிலைக்கு முடிவுகட்டப்படவேண்டும்.

ஈழத்தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முகாம்கள் கலைக்கப்பட்டு அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவேண்டும். தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். தமிழர் பகுதிகளில் குடியேறியுள்ள சிங்களர்கள் வெளியேற்றப்படவேண்டும். தமிழ் மக்களுடைய வேளாண் நிலங்கள் திரும்பவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை புனர்நிர்மானம் செய்துகொள்ள பொருளாதார உதவிகள் செய்யப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஈழமக்கள் இவையெல்லாம் பெறவேண்டுமானால், இராசபட்சே கும்பலின் இனவெறிப் பாசிச ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட வேண்டும். நெருக்கடிக் காலச்சட்டங்கள் மற்றும் பிற அடக்குமுறை சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும். ஈழமக்களின் ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லையேல் ஈழத்தமிழ் மக்களுக்கு செய்யும் உதவியெல்லாம், சிங்கள இனவெறிப் பாசிசத்திற்கே சேவை செய்யும். எனவே, ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கானப் போரட்டங்களை ஆதரிக்க வேண்டியது மிகமிக அவசர அவசியமாக மாறியுள்ளது.

இராசபட்சேவை போர்க்குற்றவளி என அறிவிக்கக் கோரியும், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரியும் தமிழக சட்டமன்றத் தீர்மானம்

இராசபட்சேக் கும்பலின் போர்க்குற்றங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்டு, அனைத்துக்கட்சித் தலைவர்களாலும் வழிமொழியப்பட்டு, தமிழக சட்டமன்றத்தால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் பின்வருமாறு:

“எனவே, மனிதாபிமான மற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லபடுவதற்குக் காரணமானவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்தவேண்டும் என்றும், இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மாற்று வாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி, சிங்களவர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி அரசு சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதா பேசினார்.

இத்தீர்மானத்தில் அடங்கியுள்ள முக்கியமான அம்சங்கள்.

1. மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐ.நா. சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்;

2. இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமறுவாழ்வு அளித்து அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்துவது;

3. சிங்களர்களுக்கு உரிய அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்க வேண்டும் என்பது;

4. அவ்வாறு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவது;

இத்தீர்மானத்தில் இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோருவது, அது ஏற்கப்படாவிட்டால் இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கக் கோருவதும் ஏற்கத்தகுந்தது. ஆனால், மத்திய அரசு இன்று வரை போருக்குப் பிறகும் கூட இராசபட்சேக் கும்பலுடன் கூடிக் குலாவுகிறது. இந்தச் சூழலில் மத்திய ஆட்சியின் கொள்கையை எதிர்த்துப் போராடாமல், இந்த ஆட்சியையே, ஐ.நா.வை வலியுறுத்தக் கோருவது சந்தர்ப்பவாதமே.

கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில், இலங்கையில் போர்நிறுத்தம் கோரி மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்த்ததைப் போன்றதுதான், தற்போது ஜெயலலிதா மத்திய அரசிடம் கோருவதும்.

போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டில் ஏற்றும் போராட்டம் இலங்கையை எதிர்த்தது மட்டுமல்ல இந்திய அரசை எதிர்த்தும்தான். ஏனெனில் இந்தப் போரை சிங்கள அரசுடன் இந்திய அரசும் சேர்ந்தே நடத்தியது. இத்தீர்மானம் பற்றிப் பேசும்போது ஜெயலலிதா அவர்கள் இலங்கையில் நடந்த அனைத்துப் போர்க் குற்றங்களையும் கருணாநிதி எதிர்த்துப் போராடவில்லை, துரோகம் செய்துவிட்டார் என்று கூறும் அதே வேளையில் போரை நடத்திய மத்தியில் ஆளும் காங்கிரசு கட்சியை விமர்சிக்கவே இல்லை. மேலும் தி.மு.க, அ.தி.மு.க இருக்கட்சிகளுமே இலங்கைப் பிரச்சினையை வாக்கு சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அணுகுகிறார்களே ஒழிய அதில் உளப்பூர்வமாக செயல்படவில்லை என்பதே வரலாறு. எனவே, இக்கட்சிகளின் தீர்மானங்களையும், வார்த்தைகளையும் நம்ப இயலாது. எனவே ஜெயலலிதா அரசாங்கம் மத்திய அரசோடு மேற்கொள்ளும் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை எதிர்த்துதான் போர்க்குற்றவாளி என்றக் கோரிக்கையை வெல்ல முடியும்.

இந்தத் தீர்மானம் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை கோரவில்லை. ஆனால் சிங்கள பேரினவாத புத்த மதவாத இலங்கை அரசமைப்பிற்குள்ளேயே “சிங்களர்க்குரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கவேண்டும்” என்று கோருவது நிறைவேறாதது. இன அழிப்புப் போருக்குப் பிறகும் கூட இராசபட்சே அரசு, ஈழத்தமிழ் மக்கள் மீது பாசிச ஒடுக்குமுறையைத் தொடர்வது, இலங்கையில் நிலவும் அரசு அமைப்பிற்குள்ளேயே இக்கோரிக்கை நிறைவேற்றப்பட முடியாதது என்பதை நிரூபிக்கிறது.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மாற்றுவாழ்வு வழங்கவேண்டும், அவர்களை சொந்த வாழ்விடங்களிலேயே குடியமர்த்த வேண்டும் என்றக் கோரிக்கையும் கூட, சிங்கள இனவெறிப் பாசிச இராசபட்சே கும்பலின் பாசிச அடக்குமுறைகள் தொடர்வதை எதிர்த்துப் போராடாமல் சாதிக்க முடியாது.

இந்தத் தீர்மானத்தின் அடிப்படை பலவீனம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இலங்கை அரசுடன் இந்திய அரசு கூடிக் குலாவுவதை எதிர்த்து ஒரு நிலை எடுக்காததும், இலங்கையில் ஈழத்தமிழனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுப்பதும்தான்.

ஈழ அகதிகளின் அரசியல் உரிமை

தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு ஜெயலலிதா இலங்கைப் பிரச்சினையில் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருந்தார். மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதே அதன் பொருள். அது முடியாவிட்டாலும் கூட, தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளும் சிறை போன்ற வதைமுகாம்களில்தான் வசித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இப்பிரச்சினையில் அவர்களை சுதந்திரமாக அனுமதித்து பிற நாடுகளில் அகதிகளுக்கு உள்ளது போன்ற அரசியல் உரிமைகளை வழங்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கு

இந்திய அரசு, விடுதலைப் புலிகள் அமைப்பை உலகிலேயே கொடிய பயங்கரவாத இயக்கம், இந்திய பிரதமர் இராசீவ் காந்தியை கொலை செய்த இயக்கம், இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரித்து அகண்ட ஈழம் அமைப்பதை திட்டமாக கொண்டுள்ள இயக்கம் எனவே அது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி தடைசெய்துள்ளது.

சிங்களப் பேரினவாத இலங்கை அரசு கடந்த 30 ஆண்டுகாலங்களுக்கு மேலாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போரை நடத்தி பல்லாயிரக்கணக்கான பேரை படுகொலைசெய்து வருகிறது. அதை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத்தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புப் போரையே நடத்தியது. எனவே விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேச விடுதலை இயக்கமே ஒழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல. தற்போது இராசபட்சே கும்பல் ஈழத்தமிழினத்தின் மீது இன அழிப்புப்போரை நடத்தி 40 ஆயிரத்திற்கும் மேலானவர்களை படுகொலை செய்துள்ளது. இராசபட்சே போர்க்குற்றவாளி என்று உலகம் முழுவதும் அம்பலப்பட்டப் பிறகும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடையை நீடிப்பது சிங்களப் பேரினவாதத்திற்கு துணைப்போகும் செயலே.

இராசீவ் படுகொலை என்பது இந்திய ‘அமைதிப்படை’ ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களின் எதிர்விளைவாகும். இந்தியாவின் விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்து, இலங்கை சிங்களப் பேரினவாத அரசை பாதுகாக்க இராசீவ் காந்தி இந்தியப் படையை அனுப்பி ஈழமக்கள் மீது ஒரு போரை நடத்தினார். அந்த படை தமிழர்களுக்கு உதவி எனும் பேரில் ஈழத்தமிழ் மக்களை நரவேட்டையாடியது. ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை கொன்றொழித்தது. பெண்களை கற்பழித்ததுடன் ஈழத்தை சூரையாடியது. எனவேதான் இப்படையின் தலைவர் என்ற அடிப்படையில் இராசீவ் கொல்லப்பட்டார். எனவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். அம்மக்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும். இராசீவ் படுகொலையைக் காரணம் காட்டி, விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு துணை போவதேயாகும்.

மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து அகண்ட ஈழம் உருவாக்கத் திட்டம் வைத்துள்ளது என்று இந்திய அரசு கூறுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். இராசீவ்காந்தி கொலையை மட்டும் வைத்து அந்த அமைப்பைத் தடை செய்ய முடியாது என்பதால் இந்தியா கூறுகின்ற பொய்யேயாகும். அத்தகைய ஒரு திட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டிருக்கவில்லை என்பதோடு, தாங்கள் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றே கூறிவந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக எந்த ஒருக் குற்றத்தையும் இதுவரை புரிந்ததில்லை. தமிழக முதல்வர் தாம்தான் விடுதலைப் புலிகளை தடை செய்யச் சொன்னேன் என்று தற்போதும் கூறுகிறார். இராசபட்சேவை போர்க்குற்றவாளி என்று கூறி தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நியாயப்படுத்தி பேசியிருப்பது நியாயமற்றது. எனவே மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதானத் தடையை உடனடியாக நீக்கவேண்டும்.


கச்சத் தீவை மீட்போம்

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1974, 76ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தோடு செய்துகொண்ட இருதரப்பு ஒப்பந்தங்களின்படி தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரைவார்க்கப்பட்டது.

இந்திய அரசின் விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்தே இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தார். 1971ஆம் ஆண்டு பங்களாதேசப் போருக்குப் பிறகு அண்டை நாடுகளோடு நட்புறவு கொள்ள இந்திராகாந்தி முயற்சித்தார். அதன் அடிப்படையில் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல், தமிழக அரசையும் கூட கலந்து கொள்ளாமல், அதன் அனுமதியின்றி எதேச்சாதிகாரமாக கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தார். 1960ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் “பெருவாரி” வழக்கில் நாடாளுமன்றத்தின் ஒப்பதலின்றி ஒரு அங்குல நிலத்தைக் கூட மத்திய அரசு எந்த ஒரு நாட்டிற்கும் வழங்க அதிகாரமில்லை என்று தீர்ப்பு வழங்கியது. அதற்குப் பின் தான் இந்திராகாந்தி சட்ட விரோதமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். எனவே சட்ட விரோதமாக கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது. எனவே, அதை உடனடியாக மீட்டு தமிழகத்திடம் ஒப்படைக்க கோருகிறோம்.

கச்சத்தீவை தாரைவார்ததன் விளைவாக இந்திய மீனவர்களின் மீன் பிடிப்பு உரிமை பறிபோனது மட்டுமல்ல, அப்பிராந்தியத்தில் உள்ள கடல் வளங்களின் மீதான நமது நலன்களும் பறிபோய்விட்டன. மேலும் கச்சத் தீவுப் பிரச்சினை இராணுவ ரீதியிலும் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எதிர்காலத்தில் சிங்கள அரசு வேறு ஒரு நாட்டுடன் உடன்பாடு செய்துகொண்டு அங்கு ஒரு இராணுவத் தளத்தை நிறுவுமானால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் எனவேதான் கச்சத்தீவை மீட்பதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம்.

எனவே சிங்கள இனவெறி இராசபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம், இராசபட்சேக் கும்பலின் பாசிச அடக்குமுறைகள் நிலவுகின்ற இக்காலத்தில் ஒருபடி முன்னேற்றமேயாகும். எனினும் சிங்களப் பேரினவாத அரசுடன் இந்திய அரசு கூடிக்குலாவுவதை முறியடிக்காமல், தமிழக ஜெயலலிதா ஆட்சி, மத்திய அரசு ஈழத்தமிழினத்திற்கு செய்யும் துரோகத்தை எதிர்த்துப் போராடாதவரை, எல்லாவற்றிற்கும் மேலாக ஏகாதிபத்தியவாதிகள் இராசபட்சே ஆட்சிக்கு ஆதரவு தருவதை எதிர்த்துப் போராடாமல் - இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், ஈழத்தமிழர்களின் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்வதை தடுத்து நிறுத்தவும், ஈழமக்களுடைய அரசியல் சுதந்திரம் (சுயர்நிர்ணய உரிமை) மற்றும் வாழ்வுரிமைகளை வெல்வதும் சாத்தியமில்லை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாட்டாளிவர்க்கத் தலைமையில் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்பது இன்றைய உடனடி தேவையாக உள்ளது. அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கு பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு ம.ஜ.இ.க மக்களை அறைகூவி அழைக்கிறது.


இந்திய அரசே!

* இராசபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி!

நடவடிக்கை எடு!

* இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!

* இலங்கை அரசுக்கு அளித்துவரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!

* தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தை உடனே நிறுத்து!



* கச்சத்தீவை மீட்கப்போராடுவோம்!

மத்திய, மாநில அரசுகளே!

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!

* விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

* அகதிமுகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்!

அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்கு!


* சிங்களக் கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதமேந்தும் உரிமை கொடு!


* தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக - உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு



1 comment:

  1. காலத்திற்கேற்ற சரியான தீர்வு. இந்திய அரசை இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோருகிறோம். ஆனால் அதை இந்திய அரசால் செய்ய முடியாது. காரணம் - போரையே இந்தியாதான் நடத்தியது. இதன் மூலம், இந்திய அரசின் சார்பை அம்பலப்படுத்தி அனைத்து ஜனநாயக மக்களையும், இனத்தையும் ஒன்றினைத்து, சோனியா மற்றும் மன்மோகன் போன்ற கருங்காலிகளை ஆட்சியிலிருந்து விரட்டியடிப்போம். சொந்த தமிழ் மீனவர்களின் வாழ்வையும், ஈழ தமிழர்களின் வாழ்வையும் பரிப்பதி பங்குக்கொண்ட அனைத்து இந்திய ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் அரசமைப்பிலிருந்து களைய முன்முயற்சியெடுப்போம். இந்திய கூட்டாளி இராஜபக்சேவை அகற்றி, ஈழ மக்களின் வாழ்வை மீட்கும் போராட்டத்தில் துணை நிற்போம்.

    ReplyDelete