Saturday 1 September 2012

கூடங்குளம் அணு உலை சமரன் வெளியீடு: பகுதி 1


அணுசக்திகாலாவதியாகிவிட்டதுஎன்று கூறி, அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!

அனல், புனல், காற்று,சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட  தேசிய மின் திட்டத்திற்காகப் போராடுவோம்!

 வெளியீடு : சமரன் வெளியீட்டகம்
========================================
பகுதி (1) கூடங்குளம் அணு உலையை மூடக்கோரும் அணுசக்தி எதிர்ப்பியக்கம்
கூடங்குளத்தில் சோவியத் ரசியாவின் உதவியோடு நிறுவப்படும் அணுமின் நிலையத்தைத் தொடங்கக்கூடாது என 80ஆம் ஆண்டுகளின் மத்தியிலேயே சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. கிறித்துவத் திருச்சபைகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், புதியஇடதுசிந்தனையாளர்கள், மா.லெ. இயக்கத்தைச் சார்ந்த ஒரு சிலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது ஆபத்தானது, அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான், அணு உலைகளால் மனித குலத்திற்கு ஆபத்து, மனிதகுலத்தை மீட்க உடனே அணுசக்தியை ஒழித்திட வேண்டும் என்றும்; இதுவே விஞ்ஞான பூர்வமாகச் சிந்திக்கும் யாவரும் எடுக்க வேண்டிய முடிவாகும் என்றும், இதற்கு மாறாக எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் மூடத்தனமானது என்றும், மனித நேயத்திற்கு எதிரானது என்றும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

அணுசக்தியை ஆக்கசக்தியாகப் பயன்படுத்தவே முடியாது என்பதுடன், அணு உலை விபத்து, கதிர்வீச்சு, பாதுகாப்பின்மை மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அணு உலைகள் உலகெங்கும் மூடப்பட்டு வருகின்றன என்றும் அணு உலைகள் கூடவே கூடாது என்றும் வாதிடுகின்றனர். அணுசக்தி விஞ்ஞானம் என்றாலே அது அணுகுண்டு விஞ்ஞானம்தான் என்றும், அணுசக்தியை மின்சக்தியாக மாற்றவே முடியாது என்றும் கூறி அணுவிஞ்ஞான எதிர்ப்பு இயக்கமாக இதை நடத்துகின்றனர். விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இனி மனிதகுலத்திற்கு நாசம்தான், நன்மை ஏதுமில்லை, விஞ்ஞானத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டிய கடமையை விஞ்ஞானம் நம்முன் வைத்துள்ளது என்று கூறிவிஞ்ஞான பூர்வமானவிஞ்ஞான எதிர்ப்பு இயக்கம் வளர்க்கப்படுகிறது. இன்றைய மனிதகுலம், வரும் தலைமுறைகள், இயற்கைச் சூழல் யாவும் பெரும் நாசத்திற்கு உள்ளாகும் என்ற வகையில்பீதியூட்டிவிஞ்ஞானத்திற்கு எதிரான இயக்கமாக இது நடத்தப்பட்டுவருகிறது.

அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான் என்று கூறி அணு விஞ்ஞானத்திற்கு எதிரான இயக்கத்தை அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகள்தான் முதன் முதலில் தொடங்கி வைத்தனர். அமெரிக்காவின் நிலைப்பாட்டையே அணு உலை எதிர்ப்பாளர்களும் முன்வைக்கின்றனர்.

1970ஆம் ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்கு முன் 1929இல் நிலவிய நெருக்கடியைவிட ஆழமானதும், அனைத்தும் தழுவிய தன்மை கொண்டதாகவும் அந்நெருக்கடி திகழ்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையிலும் நாடு பிடிக்கும் போர் வெறியிலும் இராணுவத் துறையில் முதலீடு செய்து இராணுவப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்தனர். ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகள் இனி விஞ்ஞான வளர்ச்சியைக் கட்டுப்படுத்தித் தனது மூலதனப் பெருக்கத்திற்குரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அதாவது விஞ்ஞானம் எனும் உற்பத்தி சக்திகளோடு மோதாவிட்டால், இனி ஏகபோகம் வாழமுடியாது என்ற நிலைமையைக் கண்டனர். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விலங்கிட்டு தமது பிற்போக்கு எதிர்ப்புரட்சியைப் பாதுகாக்க அமெரிக்காவைச் சார்ந்த பிற்போக்கு சக்திகள் விஞ்ஞான எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைத்தனர்.
அமெரிக்காவைச் சார்ந்த எஃப்.சிரிக்கா என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சமுதாயத்தில் விஞ்ஞானம் வகிக்கும் பாத்திரம் காலாவதியாகிவிட்டது என்றார். விஞ்ஞானத்திற்கான செலவு மிகவும் அதிகரித்துவிட்டது, அதில் போடும் முதலீட்டிற்கு உரிய பலன் இல்லை, விஞ்ஞானத்தில் ஆன்ம திருப்தி இல்லை, அதன் சாதனைகளோ சூழல் கேடுகளையே உருவாக்குகின்றன என்று விஞ்ஞானத்திற்கு எதிரான விசத்தைக் கக்கினார்.

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசகராக இருந்த பேராசிரியர் பிரைஸ், அமெரிக்காவில் வளர்ந்துவரும் விஞ்ஞான எதிர்ப்பிற்குக் காரணம், விஞ்ஞானமானதுவளர்ச்சியின் எல்லையைத் தொட்டுவிட்டதுதான்என்று கூறினார். விஞ்ஞானம்தானேகரைந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது என்றும், இனி விஞ்ஞானம் ஒரு சுமைதான் என்றும் கூறினார்.

இதனையொட்டி அமெரிக்காவின் சமூகவியலாளரான லூயிஸ் மம்போர்டுஎந்திரம் என்னும் மாயைஎன்ற நூலில் பின்வருமாறு கூறினார்:

...கெப்ளர், கோபர்நிகஸ் போன்ற விஞ்ஞானிகள், மானுடத்தை மறந்த விஞ்ஞான வளர்ச்சியின் பாதையைத் திறந்துவிட்ட குற்றத்தைச் செய்து விட்டனர். விஞ்ஞானிகளின் உண்மையைத் தேடும் முயற்சியின் காரணமாக மனித இனமே பெருத்த விலை கொடுக்க வேண்டியுள்ளது. விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தியதால் மனிதர்கள் சுவாசிக்கும் காற்றும், அருந்தும் நீரும், உண்ணும் உணவு உட்பட்ட யாவும் விஷமாக்கப்பட்டு விட்டது. விஞ்ஞான வளர்ச்சி மனிதகுல விடுதலைக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. மொத்தமாகப் பேரழிவு எனும் நிழலில் கோடிக்கணக்கான மனித உயிர்கள் வாழ வேண்டியுள்ளதுஎன்று கூறினார். இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் விஞ்ஞானத்திற்கு எதிராகப் பேசி மனிதகுல வளர்ச்சிக்குத் தடையாக மாறினர். அமெரிக்காவைச் சார்ந்த இராணுவ விஞ்ஞானிகளும், ஏகபோக நிதி மூலதனக் கும்பல்களும் மற்றும் கிறித்துவத் திருச்சபைகளும் இத்தகைய விஞ்ஞான எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்கின. இவர்களின் நிலைப்பாட்டையே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களும் தங்களது நிலைப்பாடாகக் கொண்டுள்ளனர்.
அணுசக்தி எதிர்ப்பாளர்கள் விஞ்ஞான எதிர்ப்போடு, அணு உலை பற்றிப் பீதியூட்டுவதன் மூலம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு வலுவூட்டுகின்றனர். அமெரிக்காவில்மூன்று மைல் தீவில்நடந்த அணு உலை விபத்து, ரசியாவில் செர்னோபில் விபத்து, தற்போது புகுஷிமா விபத்து போன்ற விபத்துக்களைப் பார்க்கும்போது, இன்று வரையிலான அணுத் தொழில் நுட்பத்தால், அணுக்கதிர்வீச்சு பிரச்சினைகள் மற்றும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றும் எனவே உலகில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும் என்று அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மூன்று மைல் தீவு விபத்து, செர்னோபில் விபத்து அண்மையில் நடந்த புகுஷிமா விபத்து என இதில் எந்த ஒரு விபத்தும் அணுத் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டது அல்ல என்றும், முதலாளித்துவ இலாப வெறியின் காரணமாக இந்தக் கம்பெனிகளின் நிர்வாகம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் போனதுதான் காரணம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரசியாவின் செர்னோபில் விபத்திற்கும் கூட சோவியத் இரசியாவில் ஏற்பட்ட மரபுவழி முதலாளித்துவ மீட்சியும், இலாப வெறியும் காரணமாக அமைந்ததுதான் உண்மை. எனவே இந்த விபத்துகள் யாவும் அணுசக்தி தொழில்நுட்பங்களால் ஏற்படவில்லை. மாறாக முதலாளித்துவ இலாப வெறியே இத்தகைய கோரவிபத்துக்களுக்குக் காரணமாக இருந்துள்ளது. அணுசக்தி எதிர்ப்பாளர்கள் இந்த உண்மையை மூடிமறைத்து விபத்து பற்றிப் பீதியூட்டி அணு உலையை மூடவேண்டும் என்கின்றனர்.
---------------------------------------------------------------------------------------- தொடரும்
கூடங்குளம் அணு உலை வரலாறும் அமெரிக்காவின் எதிர்ப்பும்

No comments:

Post a Comment