Saturday 1 September 2012

கூடங்குளம் அணு உலை சமரன் வெளியீடு: பகுதி (2)

பகுதி (2)

கூடங்குளம் அணு  உலை வரலாறும் அமெரிக்காவின் எதிர்ப்பும்
1974ஆம் ஆண்டு மே 18இல் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது இந்தியா முதன் முதலில் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதைக் கண்டித்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் அணுசக்தித் துறையில் இந்தியாவுக்கு அளித்துவந்த உதவிகளைத் திடீரென நிறுத்திக்கொண்டன. வெடிப்பரிசோதனையில் ஈடுபட்டு நம்மையே நாம் அழித்துக்கொண்டோமென வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் இந்தியாவைக் கண்டித்தன. இந்தியா என்றும் தமது கைக்குள் அடக்கமாக இருக்கவேண்டும் என்பதே இந்நாடுகளின் நோக்கமாகும். எனவே அணு உலைக்கு வேண்டிய உதிரிப்பாகங்கள், எரிபொருட்கள், கனநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு இந்தியா முகம் கொடுக்க நேரிட்டது. சுமார் 20 ஆண்டுகளாகத் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்க அமெரிக்கா மறுத்து வந்தது. அந்த அணுமின் உற்பத்தி ஆலை பல ஆண்டுகளாக உற்பத்தியையே நிறுத்திவிட்டது. இத்தகைய ஒரு சூழலில்தான் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், சோவியத் ரசிய அதிபராக இருந்த கோர்பச்சேவிற்கும் இடையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளம் அணு உலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதே அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அதை எதிர்த்தனர். ஆனால் சோவியத் சமூக ஏகாதிபத்திய ரசியாவில் ஏற்பட்ட மரபுவழி முதலாளித்துவ மீட்சியின் விளைவாக சோவியத் யூனியன் சிதறுண்டுபோனது. அதன் காரணமாகக் கூடங்குளம் அணு உலை வேலைகள் நின்றுபோயின.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, இந்தியா மீண்டும் பொக்ரானில் அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தியது. அதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்தச் சூழலில்தான் வாஜ்பாய் அரசாங்கம் ரசியாவுடன் பழைய கூடங்குளம் ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தது. தற்போது கூடங்குளம் அணு உலையும் கட்டி முடிக்கப்பட்டு முதற்கட்ட உற்பத்தியை தொடங்குவதற்கு ஆயத்தமானது.

 சுப.உதயகுமார் தலைமையிலானஅணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும் என்ற போராட்டத்தைத் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்குக் கிறித்துவத் திருச்சபைகளும், தொண்டு நிறுவனங்களும், தங்களை நக்சல்பாரிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் உள்ளிட்ட ஒரு சில மா.லெ. இயக்கங்களும் ஆதரவளித்து வருகின்றன. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மக்கள், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரங்கள் பறிபோவதை எதிர்த்தும், பாதுகாப்பு வேண்டியும் தன்னியல்பாகப் போராடிவருகின்றனர். தன்னியல்பான மக்களின் போராட்டத்தின் தலைமையை சுப.உதயகுமார் தலைமையிலான குழுவினர் எடுத்துக்கொண்டனர்.
அணு உலையை மூடவேண்டும் என்று இடிந்தக்கரையில் சுப.உதயகுமார் தலைமையில் ஏழு மாத காலமாக பல்வேறு போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் நடத்திவந்தனர். தற்போது மத்திய மாநில அரசுகளின் தலையீட்டால் அடிப்படைக் கோரிக்கையான உலை மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்து விட்டனர். கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடுவதாகவும், அணு சக்திக்கு எதிராக உலக அளவில் பொதுவான போராட்டம் தொடரும் என்றும் சுப.உதயகுமார் அறிவித்தார். அதே சமயம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும்; ரசியாவோடு செய்து கொண்டுள்ள அணு உலை விபத்து குறித்த நட்ட ஈடு பற்றிய ரகசிய ஒப்பந்தத்தை வெளியிடவேண்டும்; புவியியல், நீரியல், கடல்சார் வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழு கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த ஆய்வறிக்கையை முன்வைக்க வேண்டும்; கூடங்குளத்தைச் சுற்றி 30 கி.மீ. தூரத்தில் வாழும் மக்களுக்குப் பாதுகாப்புக் குறித்த பயிற்சி அளிக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடிவருகின்றனர். இதன் மூலம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தைத் தொடர்ந்து காப்பாற்றி வருகின்றனர்.
==================================================================== தொடரும்
அணு உலை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் அணுசக்தி அழிவுக்கானதே என்பது உண்மைதானா?

No comments:

Post a Comment