ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாடுகளில் அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து : ஜே.வி.ஸ்டாலின்
பதிப்புரை
அந்நிய முதலீடுகளின் உதவியின்றி அதாவது ஏகாதிபத்திய நாடுகளின் முதலீடுகள் இன்றி எந்த ஒரு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாட்டிலும் தொழிற்துறை வளர்ச்சியை உருவாக்கவே முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, இது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது.
ஏகாதிபத்தியத்தியவாதிகளும், அவர்களின் தாசர்களான மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். தீவிர வலதுசாரி பிரிவினர் முதல், திருத்தல்வாத போலிக்கம்யூனிஸ்டுகள் வரை அந்நிய முதலீடுகளின் ஆதரவாளர்களாகவே செயல்பட்டுவருகின்றனர். பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இக்கருத்தையே ஓயாமல் பரப்பி வருகின்றன. ஆனால் சோவியத் யூனியனின் தலைவரும், தலைசிறந்த
மார்க்சியவாதிகளுள் ஒருவருமான தோழர் ஸ்டாலின் சோசலிச ரசியா உள்ளிட்டு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாடுகளில் அந்நிய முதலீடுகளின் உதவியின்றி சுயேட்சையான தொழிற்துறை வளர்ச்சிக்கான ஒரு புதிய மாற்றுப் பாதையை முன்வைத்தார். 1925ஆம் ஆண்டு ஜூன் - 9ல்
ஸ்லெர்ட்லாவ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் பாதையை முன்வைத்துள்ளார். இந்தப்பாதைதான் இரண்டாம்
உலக யுத்தத்திற்கு முன்பு, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளெல்லாம் கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டபோது, சோவியத் ரசியாவை அபரிமிதமான வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற ஒரு புதிய பாதையாகும்.
தொழிற்துறையில் மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகள் மூலதனத்தை எப்படி சேர்த்தன என்பதை வரலாற்று வழியில் தோழர் ஸ்டாலின் அதில் எடுத்துக் காட்டுகிறார். உலகத்தின் “தொழிற்கூடம்” என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து தனது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளிலிருந்து “உபரி மூலதனத்தை” உறிஞ்சுவதன் மூலம் வலிமை மிக்க தொழிற்துறையை கட்டி அமைத்தது. ஜெர்மனி, பிரான்ஸ் மீது போர்தொடுத்து, அந்நாட்டை தோற்கடித்து அதன் மீது
அபராதம் விதித்து பெரும் தொகையை திரட்டியது. அதைக் கொண்டு தனது நாட்டின் தொழிற்துறையில் முதலீடு செய்தது. ஜார் கால ரசியா, மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து, அடிமைத்தனமான ஒப்பந்தங்களை ஏற்று கடும் நிபந்தனைகளின் கீழ் மூலதனத்தை பெற்று தொழிற்துறை வளர்ச்சிக்கு திட்டமிட்டது. மேற்கண்ட அனைத்து வழிகளும் பின்னிப்பிணைந்த வழியில்தான் அமெரிக்கா தொழில்வள நாடாக மாறியது என்பதை தோழர்
ஸ்டாலின் விளக்கியுள்ளார். அத்துடன் மேற்கண்ட எந்த ஒரு பாதையும் சோசலிச ரசியாவிற்கு பொருந்தாது, அந்த வழிகளை ஏற்கவும் முடியாது என்று கூறி சுயேட்சையாக உள் நாட்டிலேயே மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்கும், அடிமைத்தனமான நிபந்தனைகள் இன்றி அந்நிய
முதலீடுகள் பெற்று தொழிற்துறை வளர்க்கவும் ஒரு புதிய பாதையை இதில் அவர் முன்வைத்துள்ளார்.
இன்று அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் அந்நிய மூலதனத்திற்கு தடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஆசிய ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தடையின்றி நுழைவதால் அந்நாடுகளில் தொழிற் வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக தொழிற்துறை சீரழிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக அந்நிய முதலீட்டிற்கான கதவை முழுவதுமாக திறந்துவிட்டதால் தொழிற்துறை
உற்பத்தி மைனஸ் 2 சதவீதமாகவும், விவசாயம் கடும் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. அந்நிய முதலீட்டிற்கு கதவை அகலக் திறந்ததால் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி என நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிட்டது. அந்நிய முதலீடுகள்
இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை. மாறாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை சீரழிப்பதோடு நாட்டின் இறையாண்மையையும் அழித்து நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக்கி வருகிறது.
அந்நிய முதலீடுகள், தாராளமயக் கொள்கைகள் இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளை மட்டும் சீரழிக்கவில்லை. முதலாளித்துவ மையங்களான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்கூட பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. இன்று ஏகாதிபத்திய நிதி மூலதனம் 98 சதவீதம் உற்பத்தியல்லாத ஊக வாணிபத்திலும், பங்கு சந்தை மற்றும் லேவாதேவி
மூலதனமானது செயல்படுகிறது. நிதி மூலதனம் என்றாலே பிற்போக்கு அழுகல் போக்கு என்ற லெனினின் கூற்றுக்கு சான்றாகவே திகழ்கிறது. வளர்ச்சி என்பதே ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் இனி சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய நிதி
மூலதனம் நாடுகளுக்கிடையிலும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தவண்ணம் உள்ளது. காலனிய நாட்டு மக்களும், முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் கடுமையாக சூறையாடப்படுவதால் மீள முடியாத மிகு உற்பத்தியின் நெருக்கடியில்
நிதிமூலதனம் சிக்கியுள்ள இந்தப் பொருளாதார முறைகளுக்கு மாற்றாக ஒரு புதிய பாதையை தோழர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை நோக்கிய, மானுடத்தை முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்து மீட்கவல்ல, அப்பாதையை கடைப்பிடிக்கக்கூடிய ஒரு சுதந்திர ஆட்சியை உருவாக்கும் திசையை நோக்கி அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டிய தருணம் இது. அதற்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும்.
சமரன் வெளியீட்டகம்
சமரன் வெளியீட்டகம் எண்:28/141, மாதவரம் நெடுஞ்சாலை,பெரம்பூர், சென்னை - 600 samaranpublisher@gmail.com
No comments:
Post a Comment