Monday, 8 September 2014

தியாகிகள் தின கழகப் பிரசுரம்




செப்டம்பர் – 12, தியாகிகள் நினைவு நாள்!

தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

மோடி அரசே,
நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!


நக்சல்பாரிப் புரட்சி இயக்கத் தோழர் பாலன் தர்மபுரி மாவட்டத்தில் ஜனநாயகப் புரட்சிகரப் போரட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில் முன்னணித் தோழராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்திய நரவேட்டையில் 1980 செப்.12ல் தோழர் பாலன் கொல்லப்பட்டார். தோழர் பாலனின் நினைவு நாளை நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூரும் நாளாகவும், அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் நாளாகவும் கடைப்பிடித்து வருகிறோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மோடியின் தலைமையிலான இந்துத்துவப் பாசிச பா.ஜ.க., தேர்தலில் வென்று  அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன?

புதிய தாராளக் கொள்கையின் தோல்வியும் காங்கிரசின் வீழ்ச்சியும்

மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கடைப்பிடித்த புதிய தாராளக் கொள்கைகளின் விளைவாக நாடு ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அந்நெருக்கடியின் விளைவாகவே காங்கிரஸ் கட்சி தோற்றது. 90ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்தே நரசிம்மராவ், மன்மோகன் கும்பல் புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்தி வந்தது. நாடாளுமன்றவாத ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்தின. அந்நிய மூலதனத்திற்கு விதித்திருந்த அரைகுறையான கட்டுப்பாடுகளும், தடைகளும் அகற்றப்பட்டன. அந்நிய மூலதனம் வந்தால் புதிய தொழில்நுட்பம் வரும்; இந்தியாவின் போட்டியிடும் திறன் அதிகரிக்கும்; நாட்டின் ஏற்றுமதி பெருகி அந்நியக் கடன் நெருக்கடி ஒழியும் என்று அதை நியாயப்படுத்தினர். ஆனால் அந்நிய மூலதன வருகை அதிகரிக்க அதிகரிக்க நாட்டின் அந்நியக் கடன் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அந்நிய முதலீடுகளும் வளர்ச்சியின் தன்மையும்

2004ஆம் ஆண்டு மன்மோகன் கும்பலின் தலைமையில் அமைந்த ஐ.மு. கூட்டணி ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக புதிய தாரளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தியது. அதுவே கடும் பொருளாதார நெருக்கடியைக் கொண்டு வந்தது. அந்த ஆட்சியின் முதற்காலப் பகுதியில் தற்காலிகமாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற உயர் வளர்ச்சியை எட்டியது. அதற்கு அந்நிய முதலீடுகள் ஏராளமாக குவிந்ததே காரணமாகும். 2008ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு நிறுவனங்களுக்கு மலிவான வட்டிக்கு கடன் வழங்கியது. அவ்வாறு குறைந்த வட்டிக்குக் கடன் பெற்ற அமெரிக்காவின் ஊகமூலதனம் அதிக இலாபங்களைத் தேடி இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை நோக்கிக் குவிந்தன.

அத்தகைய சூழலில்தான் மன்மோகன் கும்பல் அந்நிய மூலதனத்தைக் கவர்வது எனும் பேரில் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கியது. அத்தகைய சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய நிதி மூலதனம் இரண்டு வழிகளில் வந்தது. ஒன்று, இந்திய நாட்டின் விலை மதிக்க முடியாத மூலப்பொருட்களை (சுரங்கம், காடுகள், நிலம் மற்றும் ஆறுகள்) கைப்பற்றுவதற்கு அந்நியமூலதனம் குவிந்தன. இதன் மூலம் இயற்கை மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றிக்கொண்டன.

இரண்டு, 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நிய மூலதனத்தின் வருகை உற்பத்தித் துறையில் உயர் வளர்ச்சியைத் தூண்டியது. நுகர்வோர் கடன் பெற இதன் மூலம் வழி ஏற்பட்டதால் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வு பல்கிப் பெருகியது. வியத்தகு விஷயம் என்னவெனில் 1947ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்தக்காலம் முழுமையும் இந்த வளர்ச்சியானது தேசிய வருமானத்திலோ அல்லது வேலை வாய்ப்புகள் போன்றவற்றிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சேவைத் துறை (ஐ.டி.) போன்ற துறைகள் ஒரு திரிந்த நிலை (distorted) வளர்ச்சியையே எட்டின.

2003-08ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உற்பத்தியின் உயர்வளர்ச்சியை, உயர் இறக்குமதி வளர்ச்சி என்றும் கூறலாம். ஏற்றுமதியைவிட இறக்குமதி ஏற்றங்கண்டது. வேறு வகையில் சொன்னால் ஏற்றுமதி வளர்ச்சி வீழ்ந்தபோதும் இறக்குமதி அதிகரிப்பானது ஏறுமுகமாகவே தொடர்ந்தது. விளைவு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (CAD) இட்டு நிரப்ப பெருமளவில் அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), அந்நிய நிதிநிறுவன முதலீடுகள் (FII), அந்நியக் கடன்கள் தாராளமாகப் பெறப்பட்டன. இது நாட்டின் அந்நியக் கடன் சுமையை மேலும் கூட்டியது. இக்கடனுக்குச் செலுத்தும் வட்டியும் கடுமையாக உயர்ந்தது.

உயர்வளர்ச்சியால் பயனடைந்தவர்கள் யார்?

துரிதமாக வளர்ந்த இந்த உயர் வளர்ச்சியின் பயன்கள் விசாலமானதாக பரந்த அளவில் இல்லை. இது தொலைக்காட்சி, மகிழுந்து, குளிர்சாதனப் பொருட்கள் முதலான விலை உயர்ந்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியை அதாவது புதிதாக உருவாகியிருந்த நடுத்தர வர்க்கத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் உற்பத்தியையே பெருக்கியது. இந்த வளர்ச்சியின் பயனாய் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகள்தான் மிகவும் வளர்ச்சியடைந்தன. கடந்த 20 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் 20,000 புள்ளிகள் என்ற உச்சபட்ச வளர்ச்சியின் விளைவாகப் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு ரூ. 96 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையோ 2004-05லிருந்து 2010-11 காலப் பகுதியில் நாட்டின் ஒட்டுமொத்தமாக 67 சதவீதம் உயர்ந்தது. அந்நிய மூலதனம் ஒருபுறம் ஊகவாணிபத்தை வளர்த்தது. மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளில் 2400 கலோரி உணவுகளை வாங்கும் சக்தியற்ற மக்களின் தொகை 30 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக அதிகரித்தது. பெரும்பகுதி மக்கள் வறுமை நிலைக்குக்குத் தள்ளப்பட்டனர். நகர்ப்புறங்களிலும் இதே நிலைதான்.

பொருளாதார வீழ்ச்சி

அந்நிய மூலதனத்தின் வருகையால் ஏற்பட்ட இந்த உயர்வளர்ச்சி விகிதம் நீடிக்கவில்லை. 2008ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு 9 சதவீதம் என்ற உயர்வளர்ச்சி விகிதம் வெறும் 4.7 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதற்குக் காரணம் 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்துக்கிளம்பிய பெரும் பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் பொருளாதாரம் முழுமையும் பாதித்ததுதான். அதன் விளைவாக உலகச் சந்தை சுருங்கியது. இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு, இறக்குமதிப் பொருட்களின் விலை உயர்வுகள், அந்நிய முதலீடுகளின் வருகையில் ஏற்பட்ட சுணக்கம் போன்ற பாதிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்தது. இவ்வாறு நம் நாட்டின் பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்படும் நெருக்கடிகளே காரணங்களாக உள்ளன. இத்தகைய உலக முதலாளித்துவ நெருக்கடிச் சூழ்நிலையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நெருக்கடிக்கும் காரணமாகும். அத்துடன் உள்நாட்டு நிலைமைகளும் சேர்ந்து கொண்டன. இதன் விளைவு இந்தியாவில் உற்பத்தி வீழ்ச்சி, நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உயர் பணவீக்க விகிதம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகள் என நாட்டு மக்கள் மீது நெருக்கடியின் சுமைகள் சுமத்தப்பட்டன. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் இத்தகைய தோல்விதான் காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

வளர்ச்சிக்கான தடைகள்

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இந்த உயர் வளர்ச்சியின் வீழ்ச்சிக்கு மூன்று முக்கியத் தடைகள் காரணங்களாக உள்ளன.

முதலாவதாக 

தொழிற்துறை வளர்ச்சியின் வெற்றிக்கு வேளாண்துறையில் நிலவும் பிற்போக்கான அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் தடைகளாக அமைகின்றன. வேளாண்துறைதான் இயந்திரத் தொழிற்துறைக்கான மிக முக்கியமான மூலப் பொருட்களான பஞ்சு, சணல், கரும்பு போன்றவைகளையும், தொழிலாளர்கள் நுகருகின்ற உணவு தானியப் பொருட்களையும் வழங்குகின்றன. அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளால் வேளாண்மைத் துறையில் நிலவும் உற்பத்தித் திறன் குறைந்து, இப்பொருட்களின் விலை உயர்வுகள் வளர்ச்சிக்குத் தடையேயாகும். அரைநிலப்பிரபுத்துவ முறைகளான கந்துவட்டி, ஊகவாணிபம் விவசாயிகளைப் பெருமளவில் வறுமையில் ஆழ்த்தியுள்ளன. அது தொழில்துறை உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையை மிகவும் குறுக்கிவிடுகின்றன. அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் சாதிய அமைப்பு முறை நீடிப்பதற்குச் செழுமையான விளைநிலமாகத் திகழ்கிறது. பிணத்தைச் சுமந்து திரிவது போன்று ஒழித்துக்கட்டப்பட வேண்டிய இந்த பண்பாட்டுச் சுமை, பல ஆற்றல் மிக்க, துடிப்பான சமூக சக்திகள் உருவாகி வளர்ந்து வருவதை தடைசெய்கிறது.

நிலச் சீர்திருத்தத்தை மறுத்து இந்திய அரசு வேளாண்மைத் துறையில் அமல்படுத்திவரும் வேளாண்மைக் குழுமமயம் பன்னாட்டு, உள்நாட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் பெருமளவு நிலத்தைக் குவிக்கின்றன. அத்துடன் வேளாண் உற்பத்தி, ஆராய்ச்சி, வணிகம் என அனைத்துத் துறைகளிலும் மான்சாண்டோ, கார்கில் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளின் ஆதிக்கம் திணிக்கப்படுகிறது. அதன் விளைவாக தடைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு வேளாண் விளை பொருட்கள் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவு விலையில் இந்தியச் சந்தையில் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக இந்திய விவசாயிகள் போட்டி போட முடியாமல் நிலத்தைவிட்டு விரட்டப்படுகின்றனர். விவசாயிகள் திவாலாகி தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படுகின்றனர். இதுவும் நாட்டின் உயர் வளர்ச்சிக்கு ஒரு தடையாகவே உள்ளது.

இரண்டாவதாக, 

புதிய தாராளக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் அந்நியக் கடன் அதிகரித்து வட்டி, அசல் என திருப்பி செலுத்தும் தொகை என்ற வடிவத்தில் நாட்டின் செல்வம் உறிஞ்சப்படுகின்றன. அந்நியக் கடனை அடைப்பதற்காக அந்நிய மூலதனம் தேவை என்றார்கள். ஆனால் அத்தகைய அந்நிய மூலதனம் நாட்டின் கடனை அதிகரித்துவிட்டது. 2009 மார்ச்சில் 22,500 கோடி டாலராக இருந்த அந்நியக் கடன் சுமைகள் 2012 டிசம்பரில் 72,390 கோடி டாலராக மலைபோல் உயர்ந்துள்ளது. மேலும் பன்னாட்டுக் கம்பெனிகளால் முதலீட்டிற்கான லாபம், பங்குகளுக்கான டிவிடெண்ட், தொழில் நுட்பத்திற்கான ராயல்டி, உயர் அதிகாரிகளின் சம்பளம் என பல லட்சம் கோடி ரூபாய்கள் நாட்டிலிருந்து உறிஞ்சப்படுகின்றன. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்களின் விலைகளை மோசடியாக நிர்ணயிப்பது, வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் 2011ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 4 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய நாட்டின் செல்வம் வெளியேறியுள்ளது. 2002லிருந்து கடந்த 10 ஆண்டுகளில் இந்த வகையில் வெளியேறிய செல்வம் மட்டும் ரூ. 15.7 லட்சம் கோடியாகும். உண்மையில் சட்டவிரோதமாகப் பல லட்சம் கோடிகள் அந்நிய நாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியாவின் வளங்களை உறிஞ்சிக்கொண்டு போகும் புதிய காலனிய பொருளாதார உறவுகள் உயர் வளர்ச்சிக்கான மற்றொரு தடையாகும்.

மூன்றாவதாக,

புதிய தாராளக் கொள்கைகளை இந்திய அரசு அமல்படுத்திய கடந்த இருபது ஆண்டுகளில் கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதைக் குறைத்துக் கொண்டு மின்சாரம், சாலைகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளை தனியார்மயமாக்கி வருகிறது. ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடியை ஆளும் வர்க்கங்களுக்கு சலுகைகளாக அளித்துவிட்டு, நாட்டின் கஜானா காலி என்று கூறி அரசின் முதலீடுகள் குறைக்கப்பட்டு இத்துறைகள் தனியார் மயமாக்கப்படுகின்றன. இத்தகைய துறைகளில் நிலவும் போதாக்குறையும் நாட்டின் உயர் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது.

மேலே சொன்ன இந்த மூன்று தடைகளையும் அகற்றாமல் நாட்டின் உயர்வளர்ச்சி சாத்தியமல்ல. இது அனைத்து மக்களுக்கும் பயன்படுகின்ற நீடித்தத் தன்மை கொண்டதாகவும் இருக்காது. மாறாக அந்நிய முதலீடுகளுக்கு நாட்டின் அனைத்துத் துறைகளையும் திறந்துவிடுவதால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களுக்கு எதிரான உள்நாட்டுப் போட்டியாளர்களை அகற்றிவிட்டு இந்தியாவின் பெருந்தொழில் நிறுவனங்களை விழுங்கிவிடுகின்றனர். மென்மேலும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களைக் கைப்பற்றுவதும் தொடர்கின்றன. இவ்வாறு இந்தியாவின் சொத்துக்களும், உற்பத்தித் துறைகளும் பெருமளவில் அந்நியர்களின் கைகளுக்கு மாறுவது என்பது அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்துகிறது. இத்தகைய ஒரு அடிமைநிலையில் நாட்டின் வளர்ச்சி என்பது நிலையற்றதும், நாட்டுமக்களுக்கு பயன்படாத கானல் நீராகவுமே இருக்கும்.

புதிய தாராளக் கொள்கைகள் உலகில் எந்த ஒரு நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவில்லை என்பதே உலக அனுபவமாகும். எனவே ஏகாதிபத்திய புதிய தாராளக் கொள்கைகள் நாட்டிற்கு நெருக்கடியையே கொண்டுவரும்; வளர்ச்சியை அல்ல.

பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிவருடியாக மோடி கும்பலின் ஆட்சி,
நாடு இன்று சந்தித்துக்கொண்டிருக்கிற நெருக்கடிகளுக்குக் காரணம் புதியதாரளக் கொள்கைகளின் தோல்விதான் என்பதை திட்டமிட்டு மூடிமறைக்கிறது. காங்கிரஸ் கட்சி புதிய தாராளக் கொள்கைகளை உறுதியாகச் செயல்படுத்தாதுதான் அதாவது காங்கிரஸ் ஆட்சியின் ‘கொள்கை முடக்கம்தான்’ (policy paralices) நெருக்கடிக்குக் காரணம் என்று மோசடியான வாதங்களை மோடி கும்பல் முன்வைக்கிறது. இது கடைந்தெடுத்த புதிய காலனிய தாசர்களின், ஏகாதிபத்திய ஆதரவுப் பிற்போக்கு வாதமேயாகும். அந்நிய மூலதனமே வளர்ச்சிக்கு வழி என்று வக்காலத்து வாங்குவதன் மூலம் ஏகாதிபத்திய கரசேவையில் வெறித்தனமாக ஈடுபடுகிறது.

மோடி அரசாங்கம் வீழ்ந்து விட்ட உற்பத்தித்துறையை தூக்கி நிறுத்துவதற்கு கட்டமைப்புத் துறையை (மின்சாரம், சாலைகள், போக்குவரத்து) வளர்க்க வேண்டும் என்றும், அதற்கு வரும் 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்கள் அந்நிய நேரடி முதலீடுகளை வரவேற்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டிலிருந்துதான் மோடி கும்பல் அனைத்துத் துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்குத் திறந்துவிடுகிறது.

அந்நிய முதலீட்டை ஆயுள் காப்பீட்டில் 26 சதவீதத்தை 49 சதவீதமாகவும் வங்கித்துறைகள் உள்ளிட்ட நிதித் துறைகளில் திறந்துவிட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறையில் 49 சதவீதத்தை திறந்துவிட்டுள்ளது. அத்துடன் இரயில்வேத் துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்பதுடன் இரயில் கட்டணங்களை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது. திட்டக் கமிஷனையும் கலைத்துவிட்டு திட்டமிடுதலையே ஏகாதிபத்திய தரநிர்ணய நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் தனியார்வசம் ஒப்படைக்கிறது.

வளர்ச்சி என்ற பேரால் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடியை பட்ஜட் மூலம் வாரிவழங்கிவிட்டு, மறுபுறம் ‘கசப்பு மருந்து’ என்று கூறி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான நிதியையும், மானியங்களையும் வெட்டுகிறது. இரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு, கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை சீரழிப்பது என மக்கள் மீது நெருக்கடிகளின் சுமைகளைச் சுமத்துகிறது.

மோடி கும்பல் அமல்படுத்திவரும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவான இத்தகைய புதிய தாராளக் கொள்கைகள் நாட்டில் ஒரு கடும் பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்துதான் மோடி கும்பல் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.

அதன் மூலம் மக்களின் எதிர்ப்புகளை நசுக்கத் துடிக்கிறது. சமஸ்கிருத வாரம் கடைப்பிடிப்பது, இந்தியைத் திணிப்பது, ஆசிரியர் தினத்தை ‘குரு உத்சவ்’ தினமாகக் கடைப்பிடிப்பது என்ற ஆணைகளின் மூலம் இந்து மதவாதத்தைத் திணிக்கிறது. மோடி கும்பலின் சமஸ்கிருதத் திணிப்பு, இந்தி மொழித் திணிப்பு போன்ற இந்து மத பாசிசக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது மிகவும் அவசியமானதே. ஆனால் இன்று ஆங்கில மொழி ஆதிக்கம்தான் தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும் ஒடுக்குகிறது. எனவே ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளையும் திணிப்பதை எதிர்த்தும் தாய்த் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்கப் போராடுவதே முதன்மையானதாகும்.

மேலும், மோடிக் கும்பல் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நாடு முழுவதும் சிறுபான்மை இசுலாமியர்கள் மீது இந்து மதவெறியர்கள் 600 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மோடி கும்பல் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகக் கலவரம் செய்து மக்களை மத ரீதியாக மோதவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் புதிய காலனியத்திற்கு சேவை செய்யத் துடிக்கிறது.

மோடி கும்பல் அயலுறவுக் கொள்கைகளிலும் காங்கிரஸ் கடைப்பிடித்த கொள்கைகளையே கடைப்பிடிக்கிறது.

குறிப்பாக இலங்கைப் பிரச்சினையில் தமது விரிவாதிக்க நலன்களுக்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததை நியாயப்படுத்துகிறது. கச்சத்தீவு இந்தியாவின் பகுதியே அல்ல என்றும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிப்பு உரிமையில்லை எனவும் இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் துரோகமிழைக்கிறது. ஈழத் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தையும், இராணுவமயமாக்கத்தையும் எதிர்க்காமல் 13வது சட்டத்திருத்தம் பேசி ஈழத் தமிழர்களின் விடுதலைக்குத் துரோகம் இழைக்கிறது.

மோடி ஆட்சியைப் பின்பற்றும் தமிழக அரசு

அன்னபூரணியாக, அங்காள பரமேஸ்வரியாக இலவசத் திட்டங்கள் மூலம் தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா, அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் தேச விரோதக் கொள்கைகளையே அமல்படுத்துகிறார். மோடியா? லேடியா? என்று அன்று கேட்டவர் இன்று மோடியோடு சேர்ந்துகொண்டு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தமிழகத்தைத் தாரைவார்க்கிறார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்றதை எதிர்த்து காங்கிரசை விமர்சித்த ஜெயலலிதா இன்று அனைத்துறைகளையும் அந்நியருக்குத் திறந்துவிடும் மோடி கும்பலின் ஆட்சியை ஆதரிக்கிறார். சமஸ்கிருதத்தையும், இந்தியையும் எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பரப்புகிறார். மேலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறிக் கலவரங்களைத் தூண்டும் உயர்சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு ஜெயலலிதா அரசாங்கம் ஆதரவளிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான எதிர்ப்புகளைக் கூட இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி ‘சமூக அமைதி’ பேசுகிறது.

இத்தகைய சூழலில் சென்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தை திருத்தியுள்ளது. இதன்படி முதன்முறையாகக் குற்றம் இழைப்பவர்களையும், குற்றம் இழைப்பார் என்று காவல்துறையினர் சந்தேகித்தாலும்கூட ஒருவரை விசாரணையின்றிச் சிறையிலடைக்க முடியும். இச்சட்டம் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தையும் பறித்துவிடுகிறது.

புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், சாதி, மத மோதல்களை எதிர்த்தும் மக்கள் நடத்தும் நியாயமான போராட்டங்களை நசுக்கி, அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்வதற்காகவே ஜெயலலிதா இத்தகைய பாசிசச் சட்டத்தை கொண்டுவந்துள்ளார்.

எனவே நாட்டின் அனைத்துத் துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும், இந்துமதவாதப் பிற்போக்குப் பாசிசத்தை கட்டவிழ்த்துவிடும் இந்துத்துவப் பாசிச மோடி கும்பலின் ஆட்சிக்கு எதிராகவும், மோடி கும்பலின் மத்திய ஆட்சியை பின்பற்றும் ஜெயலலிதா அரசாங்கத்தை எதிர்த்தும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுக்க இவ்வாண்டு தியாகிகளின் நினைவுநாளில் அறைகூவி அழைக்கிறோம்.

மோடி அரசே,

« நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!

« அநியாய அந்நியக் கடன்களை இரத்து செய்!

« ‘வளர்ச்சி’ என்ற பெயரால் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்காதே!

« ‘கசப்பு மருந்து’ என்ற பேரால் மக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்களை வெட்டாதே!

« இரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!

« விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடுவோம்!

« வேளாண்மைத் துறையைக் குழும மயமாக்குவதை எதிர்ப்போம்!

« நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

« விவசாயிகளை தற்கொலைக்கும் பட்டினிச் சாவிற்கும் தள்ளுவதை எதிர்த்துப் போராடுவோம்!

« நிலப்பிரபுத்துவ சாதி, தீண்டாமை கொடுமைகளை ஒழிக்கப் போராடுவோம்!

« ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக இராஜபட்சே கும்பலுக்கு அடிவருடியாகச் செயல்படுவதை அனுமதியோம்!

« கச்சத் தீவை மீட்போம்! தமிழர் நலனையும், மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!

« ஆங்கிலம், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!

« தாய்த் தமிழை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

« இந்து மதவாத ஆதிக்கத்திற்கு மக்களை அடிமைப்படுத்தும் சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து நீக்கு!

ஜெயா அரசே!

« மோடியின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றாதே!

« பாசிச குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு                                                             செப்டம்பர், 2014

No comments:

Post a Comment