Monday 16 March 2009

1983 ஈழத்தமிழினப் படுகொலையை அடுத்து

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்!

இந்திய அரசின் இராணுவத் தலையீட்டை எதிர்ப்போம்!!முன்னுரை: இலங்கையை ஆளும் ஜெயவர்த்தனேயின் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு இவ்வாண்டு ஜூலை மாதம் கடைசி வாரத்தில் அந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மீது ஒரு இனப் படுகொலைத் தாக்குதலை நடத்தியது. சிங்களப் பேரினவாதிகளும் அவர்களுடைய அரசும் இனக் கலவரம் நடத்தி தமிழ் பேசும் மக்களைத் தாக்குவது இதுதான் முதன் முறையல்ல; இது ஆறாவது பெரும் தாக்குதலாகும். இலங்கை ஒரு அரைக் காலனித்துவ நாடாக மாறிய பிறகு சிங்களப் பேரினவாதிகளும் அவர்களுடைய அரசும் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இனக் கலவரங்களை நடத்தி தமிழ் பேசும் மக்களைத் தாக்கிக்கொண்டு வருகின்றனர். சிங்கள இனத்திற்கும் தமிழ் இனத்திற்கும் இடையில் தொடர்ந்து பூசல்களும் மோதல்களுமாக இருந்து வருகின்றன. இப்பூசல்களுக்கும் மோதல்களுக்கும் காரணம் என்ன? இதன் வரலாற்று பின்னணி என்ன? என்பனவற்றை ஆய்ந்தறிவது இன்றைய எதார்த்த நிலைமையைப் புரிந்து கொள்வதற்கும், அந்நாட்டு தேசிய இனப் பிரச்சினையின் தனித் தன்மை வாய்ந்த கூறுகளை அறிவதற்கும் (SPECIFIC FEATURES) அவசியமானதாகும்.
1. இலங்கையின் வரலாற்றுப் பின்னணி இலங்கைத் தீவு முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆளுகைக்கு வருவதற்கு முன்னர் அது ஒரே அரசு நிர்வாகத்தின் கீழ் இருந்ததில்லை. ஐரோப்பியர் தலையிடுவதற்கு முன்னர் இலங்கைத் தீவின் வடக்கில் ஓர் அரசும் மத்தியில் ஓர் அரசும் தென்மேற்கில் ஓர் அரசும் ஆகமூன்று முக்கிய அரசுகளும் மற்றும் பல சிற்றரசுகளும் இருந்தன. தமிழ் பேசும் மக்கள் வடக்கில் இருந்த அரசிலும் மற்றும் பல சிற்றரசுகளிலும் வாழ்ந்தனர். யாழ்ப்பாணத்தைத் தமது தலைநகராகக்கொண்டு வடக்கு கிழக்கு பகுதிகளை தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர். இலங்கையில் ஏடறிந்த வரலாற்று காலந்தொட்டே தமிழ் பேசும் மக்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். சிங்கள மக்களின் வரலாறு எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ அந்த அளவிற்கு வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் பாரம்பரிய தமிழர்களின் வரலாறும் தொன்மையானதே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இலங்கைத் தீவில் 1820 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெருந்தோட்டப் பயிர் செய்யத்துவங்கினர். இப்பெருந் தோட்டங்களில் கூலிக்கு உழைப்பதற்காக தமிழகத்திலிருந்து எண்ணிலடங்காத தமிழர்களை அழைத்துச் சென்றனர். இவ்வாறு தோட்டங்களில் கூலிக்கு உழைக்க குடியமர்த்தப்பட்ட மக்கள்தான் மலையக மக்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்துவருபவர்கள்; இலங்கை தமிழ் பேசும் மக்கள் மூன்றில் ஒரு பகுதியினர் ஆவர். இவர்கள் வாழும் மலையக பகுதி சிங்களர் வாழும் பிரதேசங்களால் சூழப்பட்டு பாரம்பரிய தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில்லிருந்துப் பிரிந்து பூகோள ரீதியாக தொடர்ச்சியற்றதாக இருக்கிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த பாரம்பரிய தமிழர்களின் உயர் குடியினர் மலையக மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. மலையக மக்கள் பற்றி அவர்கள் கொண்டுருந்த கருத்துக்கள், மலையக மக்களும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்களும் ஐக்கியப் படுவதற்கு தடையாக இருந்தது. எனவே இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் ஒரு பிரிவினராக வடக்கு கிழக்கு பகுதிகளில்வாழும் பாரம்பரிய தமிழரும், மற்றொரு பிரிவினரான மலையகமக்களும்; ஆகிய இரு பிரிவினரும் தமிழ் பேசும் மக்களாயிருந்தும், இருவேறு வரலாற்று பின்னணியையும் தொடர்பற்று இரு பிரதேசங்களில் வாழ்பவராகவும் உள்ளனர். இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் மற்றொரு பிரிவினர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் கிழக்கு பகுதிகளில் வாழ்பவர். கணிசமானவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர் இவர்களின் பொருளியல் வாழ்வின் காரணத்தினாலும், இவர்களிடம் காணப்பட்ட மொழி இனப்பற்றினும் மிகுதியான மதப்பற்றை பயன்படுத்தியும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மேல்தட்டு பகுதியினர் இவர்களை பிற தமிழ் பேசும் மக்களுடன் ஐக்கியப்படுத்துவதற்குத் தடையாக இருந்தனர். மேற்கூறப்பட்ட பாரம்பரிய தமிழர்கள், மலையக மக்கள், இஸ்லாமிய தமிழர்கள் ஆகிய முப்பிரிவினரும் சேர்ந்துதான் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் ஆவர்.ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி இலங்கை ஒரு காலனித்துவ நாடாக இருந்த காலத்தில் அதனையாண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தங்களின் ஆதிக்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அடக்குமுறையை மட்டுமே நம்பியிருக்காமல் இனங்களை பிரித்தாளும் சூழ்ச்சியினை கையாண்டார்கள். அவர்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சி சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே முரண்பாட்டை வளர்ப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையே இருந்த வேறுபாடுகளையும் பயன்படுத்தி அவர்கள் ஐக்கியப்படாமல் இருக்க அனைத்தையும் செய்தார்கள். இலங்கை மக்களை பயிற்றுவிப்பதற்காக என பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகளால் புகுத்தப்பட்ட பாராளுமன்ற முறைகளும் கூட இரு இனங்களுக்கு இடையில் பூசல்களை ஏற்படுத்துவதற்காகவே அவர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. அரசாங்க உத்தியோகங்களில் பாரம்பரிய தமிழர்களை சேர்ந்த உயர்குடியினருக்கு அதிகமான இடங்களைத் தந்தும் இன்னும் பிற சில்லறை சலுகைகளை வழங்கியும் தமிழ்பேசும் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தி இனப் பகைமையை வளர்க்க முயன்றார்கள். சிங்களவரின் அவநம்பிக்கை இலங்கை ஒரு காலனித்துவ நாடாக இருந்த காலத்தில் அதன் பொருளாதாரம் - தோட்டங்கள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் யாவும் - பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகளின் கையில்தான் இருந்தது. இருப்பினும் அந்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் இந்திய பெருவணிக முதலாளிகள் (போரா நிறுவனங்கள் (bohra firmas) பார்சிகள் (parsies) (memons) ஆதிக்கம் செலுத்தினார்கள். சிங்கள வணிகர்களோ அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களை விற்கும் சிறு வியாபாரிகளாகவே (retailer of foreign goods) தான் இருந்தார்கள். சிங்களத்தவர்களால் அந்நாட்டின் ஏற்றுபதி, இறக்குமதி, மொத்த வர்த்தகத்தில் இருந்தபெரும் இந்திய வணிக முதலாளிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து முன்னேற முடியவில்லை. இதைத் தவிர சிறு வியாபார துறையில் தமிழர்களுடன் தமிழ் முஸ்ல¦ம் மதத்தவர்களும் போட்டியிட வேண்டியிருந்தது. தமிழகத்தில் இருந்து சென்ற நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் பிரத்தியேகமான ஆதிக்கத்திற்குள்தான் இலங்கையின் வட்டித் தொழில் இருந்தது. இந்நிலைமைகள் யாவும் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் மீது அதிலும் குறிப்பாக இந்திய வம்சாவழியினர் மீது சிங்களவர் அவநம்பிக்கை கொள்வதற்கான அடிப்படையாக அமைந்தது.
சிங்களரிடையே இரு போக்குகள் இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்த நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் சிங்களர் மத்தியில் இரு போக்குகள் தோன்றின. ஒன்று, இன மத வேறுபாடுகளை கடந்த ஒரு நாடு தழுவிய இயக்கம் கட்டப் படவேண்டும் என்பது. மற்றொன்று, இலங்கை சிங்களருக்கே உரியது. இங்கே தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவது அநீதி என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழர்களை இலங்கைக்கு அந்நியமாக கருதும்போக்கு. இரண்டாம்போக்கு மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. இது சிங்களரின் அரசியல், மதம், பண்பாடு ஆகிய சமூக வாழ்வுத் துறைகளில் வெளிப்படுத்திக் கொண்டது.
இலங்கை வாழ் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் இலங்கைவாழ் இரு இனங்களுக்கும் இடையில் பூசல்கள் இருந்த போதிலும் நாட்டின் விடுதலைக்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் இரு இனமக்களும் ஒன்றுபட்டார்கள். இலங்கை வாழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாகவும் சர்வதேசிய சூழ்நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினால் காலனித்துவ ஆட்சியை தொடர முடியவில்லை. காலனித்துவ நாடாக இருந்த இலங்கை ஒரு அரைக்காலனித்துவ அரைநிலப் பிரபுத்துவ நாடாக மாறிற்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரு இனங்களையும் பலவந்தமாக இணைத்து உருவாக்கிய இலங்கை நாட்டின் அரசு உரிமையை அக்காலனித்துவ அரசின் வாரிசாக வந்த இன்றைய அரைக்காலனித்துவ-அரைநிலப்பிரபுத்துவ அரசு பெற்றுக்கொண்டது. 1948ஆம் ஆண்டு இலங்கை ஒரு சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தியபோது அமைந்த இலங்கை அரசு இரு இனங்களுக்கும் சம உரிமையின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒன்றியம் அல்ல. (சிங்கள இன - தமிழின ஐக்கியம் மக்கள் விரும்பி தாங்களாகவே முன் வந்து செய்து கொண்டதல்ல)
சிங்களப் பேரினவாத வெறியின் வளர்ச்சியும் சூழ்ச்சியும் காலனித்துவ நாடாக இருந்த இலங்கை ஒரு அரைக் காலனித்துவ நாடாக மாறியபோது அந்நாட்டின் அதிகாரம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து சிங்கள - தமிழின தரகு முதலாளித்துவ அரை நிலப்பிரபுத்துவ கூட்டுத் தலைமையிடம் மாறிற்று. பேரினமாகிய சிங்கள இனத்தின் அதிகாரவர்க்க தரகு முதலாளித்துவமும் அரைநிலப்பிரபுத்துவ சக்திகளும் அந்நாட்டின் (அரசு இயந்திரத்தை தமது பிடிக்குள் கொண்டுவர விரும்பி) அதிகாரத்தை முழுவதுமாக அபகரித்துக் கொள்ள விரும்பியது இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும்பொருட்டு பல திட்டமிட்ட நடவடிக்கைகளை அவை மேற்கொண்டன. முதல் நடவடிக்கையாக இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் மூன்றில் ஒரு பகுதியினரான மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமையை பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. இலங்கையின் அரசியல் சட்டபடி பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் 39 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததை 16 சதவிகிதமாக குறைத்து அப்போலி பாராளுமன்றத்தையும் சிங்கள பேரினவாத அமைப்பாக மாற்றியமைத்துக் கொண்டனர். சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என சட்டமியற்றி தமிழ் மொழிக்கு சம உரிமையை மறுத்து இலங்கை அரசை ஓர் சிங்களப் பேரினவாத அரசாக ஆக்கிக்கொண்டனர். இலங்கைவாழ் மக்களில் இருபது சதவிகிதத்தினருக்கும் அதிகமானவராக உள்ள தமிழருக்கு அரசு நிறுவனத்திலும் எழுத்தர் மற்றும் சிவில் நிர்வாக உத்தியோகங்களிலும் 10%க்கும் குறைவான இடங்களும், போல¦ஸ், இராணுவத்தில் 4%க்கும் குறைவான இடங்களும் மட்டுமே தந்து அந்நாட்டு அரசு இயந்திரத்தை சிங்களப் பேரினவாத யந்திரமாக மாற்றியமைத்துக் கொண்டனர். இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கென ஒரு அரசு அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்ற ஒரு தேசிய இனமாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் பாரம்பரிய தமிழ் பிரதேசம் ஒன்றைக்கூட விட்டுவைக்கலாகாது என்று பேரினவெறிகொண்டு அப்பிரதேசங்களில் சிங்களவரை குடியேற்றும் திட்டத்தை மிக வேகமாக செயல்படுத்திக் கொண்டுள்ளனர். 1972 மே 29ல் பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் சட்டத்தின்படி புத்த மதமே அரசு மதமாகவும், சிங்கள மொழி மட்டுமே அரசு மொழியாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. இதுவரையில் சிறுபான்மை இனத்தவருக்கும் மதத்தினருக்கும் இருந்த அற்ப சொற்பமான உரிமைகளும்கூட இச்சட்டத்தின் மூலம் பறிபோயிற்று. இலங்கை அரசு சிங்கள மக்கள் உட்பட அந்நாட்டு மக்கள் அனைவரின் எதிரியாகவே உள்ளது. இருப்பினும் இவ்வரசு பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள விவசாயிகளை குடியேற்றும் திட்டத்தை செயல்படுத்தி தமிழ் விவசாயிகளை எதிர்த்து சிங்கள விவசாயிகளை மோத விடுகிறது. தமிழ் மீனவர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியேற ஊக்கமளித்து, அதற்கு இராணுவ பலத்தையும் அளித்து தமிழ் சிங்கள மீனவரிடையே ஒரு தொழிற் போட்டியை ஏற்படுத்தி அவர்களில் ஒரு இனத்தவரை எதிர்த்து மற்ற இனத்தவரை மோதவிடுகிறது. உயர் கல்வியில் சேர தகுதிக்கான மதிப்பெண்களை இனப் பாரபட்சத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்து தமிழ் சிங்கள மாணவருக்கு இடையில் அவநம்பிக்கையும் அதன் விளைவாக பகைமையையும் ஏற்படுத்துகிறது; அவர்களையும் ஒருவருக்கு எதிராக மற்றவரை மோதவிடுகிறது. நஷ்டத்தில் இயங்கும் தோட்டங்களில் மாற்றுப்பயிர் செய்ய கிராமங்களை உருவாக்கும் திட்டத்தில், அத்தோட்டங்களில் உழைத்து வந்த தமிழ் தோட்ட தொழிலாளிகளுக்கு நிலம் அளிக்காமல் சிங்களருக்கு பகிர்ந்தளித்து, தமிழ்தோட்ட தொழிலாளர்மீது அவர்களை ஏவிவிடுகின்றது. சுருங்கக்கூறின், இரு இன மக்களுக்கும் இடையில் முடிவற்ற பூசல்களுக்கும் மோதல்களுக்கும் சிங்கள பேரினவாதிகளும் அவர்களுடைய அரசும் வழி வகுத்து வைத்துள்ளனர். மீள முடியாத அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் தங்களது அரசைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதன்மூலம் அந்நாட்டு அரசியல் பொருளாதார வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தவும் ஏகாதிபத்தியங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தொண்டு செய்வதற்கே சிங்களப் பேரினவாதிகள் இவ்வாறு செய்கின்றனர். இன ஒடுக்கு முறையே இலங்கை அரசின் ஆதாரம் இன்றைய இலங்கை அரசு இன ஒடுக்குமுறையிலிருந்து பிரிக்க முடியாதவாறு அத்துடன் கட்டுண்டு கிடக்கிறது. உண்மையில் இலங்கையின் அரைக்காலனித்துவ, அரை- நிலப்பிரபுத்துவ அரசு சிறுபான்மை இனத்தவரின் மீது - தமிழ்பேசும் மக்கள் மீது - நடத்தப்படும் ஒடுக்கு முறையையே தனது வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ளது. ஆகையால் இன்றுள்ள இலங்கை அரசு அமைப்பிற்குள் இன மோதல்கள் தவிர்க்க இயலாதது இதன் விளைவாக, இரு இனங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் வர்க்கங்களும் ஒன்று சேர்ந்து வர்க்கப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை. இந்நிலைமைகளின் காரணமாக, இலங்கை நாட்டின் அரைக்காலனித்துவ, அரைநிலப்பிரபுத்துவ அரசின் வீழ்ச்சிக்கும் சிங்கள மக்களின் விடுதலைக்கும் கூட தமிழினம் சுய நிர்ணய உரிமையை பெறுவது ஒரு முன் நிபந்தனையாக ஆகிறது. தமிழர் மீதான இரட்டைத் தளைகள் தமிழ்பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் திட்டத்தால் ஏறத்தாழ 2500 சதுர மைல்கள் பறிபோயின. ஈழத்தமிழர்களின் நிலங்கள் அரசால் எடுக்கப்பட்டு சிங்கள விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு செய்வதின்மூலம் சிங்கள விவசாயிகளின் பிரச்சினையும் தீரப்போவதில்லை, நிலப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய ஒரு ஜனநாயகப் புரட்சியில் சிங்கள விவசாயிகளும் தமிழ் விவசாயிகளும் ஒன்றுபடாமல் தடுத்து நிறுத்துவதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது. எனவே இக்குடியேற்ற திட்டம் சிங்கள விவசாயிகளின் நலனுக்கானதுமல்ல; தமிழ் விவசாயிகளின் வாழ்வை சீர்குலைப்பதும் ஆகும். இது தமிழ் விவசாயிகளின் வாழ்வை சீர் குலைப்பது மட்டுமல்லாமல் தமிழ்மக்களின் சொந்த பிரதேசங்களையும் சிதைக்கின்றது. ஆகையால் தமிழ் விவசாயிகளின் நிலப் பிரச்சினையையும் தமிழ்மக்களின் இன பிரச்சினையையும் இத்திட்டம் ஒன்றாக இணைத்து விட்டது. புத்த மதவாத - சிங்களப் பேரினவாத அதிகார வர்க்க தரகு முதலாளித்துவ நில உடமை வர்க்கங்களின் ஆட்சியுடனான முடிவற்ற பூசல்களும் மோதல்களும் தமிழ்பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்கும் தடையாகவே விளங்குகிறது என்பது கடந்த முப்பதாண்டுகால இலங்கை அரசின் வரலாற்றை பரிசீலித்தோமானால் தெட்டத் தெளிவாக தெரிய வரும். தமிழ்ப் பிரதேசங்களின் தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, பிரதேச வளர்ச்சி ஆகியவற்றின் புறக்கணிப்பு அப்பிரதேசத்தின் தொழில் உற்பத்தி வளங்கள் பொருளாதார வளங்கள் ஆகியவற்றை சூறையாடுதல் என்பனவற்றுடன் ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கள பேரினவாதிகளாலும் அவர்களுடைய அரசாலும் நடத்தப்பட்ட இனக் கலவரங்களால் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் கடைகளும் தொழில் நிலையங்களும் சூறையாடப்படுகின்றன. மலையகத்தில் வாழும் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் நவீன அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். சிங்களப் பேரினவாத இலங்கை அரசும் பெரும் தேசிய வெறியில் அதற்கு சற்றும் குறைவில்லாத இந்திய அரசும் இவர்களுக்கு தெரியாமலே செய்துகொள்ளும் ஒப்பந்தங்களால் இவர்களின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகின்றது. இவ்வொப்பந்தங்களின்படி இந்தியாவிற்கு வந்துள்ள சுமார் ஐந்து லட்சம்பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் இருப்பவரோ நாடற்றவர்களாக நிம்மதி இழந்து எதிர்காலத்தைப் பற்றி எந்த உத்திரவாதமுமின்றி ஓர் இக்கட்டான நிலைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். எனவே இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வு இரட்டைத் தளைகளால் கட்டுண்டு கிடக்கிறது.
2. அரசியல் கட்சிகளின் நிலைபாடுகள் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் மீது தொடுக்கப்படும் இன ஒடுக்குமுறைகளைக் குறித்து அந்நாட்டு சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் அரசியல் கட்சிகளின் கொள்கை என்ன?
ஆளும் வர்க்கக் கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகள்தான் அந்நாட்டையாளும் அதிகாரவர்க்க தரகுமுதலாளித்துவ நில உடமை வர்க்கங்களின் இரு பெரும் கட்சிகளாகும். இவ்விரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி பீடத்திற்கு வந்தன. இவை இரண்டுமே ஆட்சிபீடத்தை கைப்பற்றவோ அல்லது தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவோ சிங்கள பேரினவாதத்தையும் புத்தமத வாதத்தையும் மிக வெறித்தனமாக கடைப்பிடிக்கின்றன. இவை இரண்டில் எது ஒன்று ஆட்சிப் பீடத்தில் இருக்கும் போதும் மலையகத் தொழிலாளிகளுக்கு குடியுரிமை மறுத்தல், தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமையை பறித்தல், பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களை சிங்கள குடியேற்ற திட்டங்கள் மூலம் பறித்தல், தமிழினத்தின் மீது ஒரு திட்டமிட்ட பொருளாதார சமூக கலாச்சார ஒடுக்குமுறையை தொடுத்தல் ஆகியவற்றை எவ்வித வேறுபாடின்றி கடைப்பிடிக்கின்றன. தமிழர்களின் அரசியல் கட்சிகள் இலங்கை வாழ் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் பாரம்பரிய தமிழர்கள், மற்றொரு பிரிவினர் மலையக மக்கள், இவ்விரு பிரிவினரும் இரு வேறுபட்ட அரசியல் கட்சிகளால் தலைமை தாங்கப்படுகின்றனர். அரைக் காலனித்துவ ஆட்சியின் ஆரம்பகாலத்தில் பாரம்பரிய தமிழர்களுக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமை தாங்கினார். அப்போதிலிருந்து தொண்டமான் மலையக மக்களின் தலைவராக இருந்து வருகிறார் பொன்னம்பலம் தலைமை இலங்கை அரசியலில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை முன்வைத்து குறுந்தேசியவாதத்தை வளர்த்தது. அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைத்ததும் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை கைவிட்டார். மலையக மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கு துணைபோனார் தொண்டமானும் மலையக மக்களின் குடியுரிமையைப் பெறுவதற்கான உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பிறகு தமிழரசு கட்சி அமைக்கப்பட்டது. தமிழரசு கட்சி இலங்கையின் இனப் பிரச்சனைக்கு ஓர் தீர்வாக 'சமஷ்டி அமைப்பை' முன்வைத்தது பண்டாரநாயக கட்சிகொண்டு வந்த சிங்களம் மட்டும் ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்ததின் விளைவாக பண்டா - செல்வா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சி இவ்வொப்பந்தத்தை கிழித்தெறியச்செய்தது. ஆயினும் அந்த ஐக்கிய தேசிய கட்சியுடன் 1965ல் கூட்டுசேர்ந்து அமைச்சரவையில் இடம் பிடித்தார்கள். இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டனி ஆட்சியில் அங்கம் வகித்த போதுதான் அந்த ஆட்சி திரிகோணமலையை சிங்களமயமாக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியது. பிறகு கூட்டணி ஆட்சியில் இருந்து தூக்கியெறியப் பட்டார்கள்.
தமிழ் விடுதலைக் கூட்டணியின் தோற்றம் 1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கள பேரினவாதிகளும் அவர்களுடைய அரசும் தமிழ் பேசும் மக்களின் மீது ஒடுக்கு முறையை அதிகரித்தது. அரசின் இந்த நடவடிக்கை தமிழ் பேசும் மக்களை கொதிப்படையச் செய்தது. இலங்கையில் நிலவுகின்ற அரசு அமைப்பிற்குள் சிங்கள இனத்தவரும் தமிழ் பேசும் மக்களும் சேர்ந்து வாழ்வது சகித்துக் கொள்ள முடியாது என தமிழ் இளைஞர்கள் உணர்ந்தனர். இதன் விளைவாக தனிநாடு முழக்கத்தை முன்வைத்தனர். இந்நிலையில் சரிந்து வரும் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள தமிழ் காங்கிரசும், தொண்டமான் காங்கிரசும் இணைந்து தமிழர் கூட்டணி என்ற அமைப்பு உருவானது. பின்னர் அது தமிழர் விடுதலை கூட்டணி என பெயர் மாற்றம் பெற்றது.
சமரசவாதத் தமிழ் தலைவர்களும் தமிழ் குறுந்தேசியவாதமும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளந்தெழுந்த தமிழ் தேசிய இயக்கத்தின் தலமையை சமரசவாத தமிழ் தலைவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இத்தலைமை தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லாமல் பிரதேச சுயாட்சி கோரிக்கையுடன் கட்டுப்படுத்தியது. பாரம்பரிய தமிழர்களின் தலைவர்கள் மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினையை உள்ளிட்ட தமிழ்பேசும் மக்கள் அனைவரின் ஜனநாயக உரிமைக்கான ஓர் ஒன்றுப்பட்ட இயக்கத்தை கட்டியமைப்பதில் அக்கறை காட்டவில்லை. தமிழர் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு தங்களின் தனி நலன்களை அடைவதற்கே அக்கறை காட்டினர். ஆரம்ப காலத்திலிருந்தே தமிழினத்தைச் சேர்ந்த உயர் குடியினர் சிங்கள பேரினவாதத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தமிழருக்குள் குறுந்தேசிய வாதத்தை வளர்த்தனர். இரு தேசிய இனங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவதற்கும் தொழிலாளிவர்க்கம் இயக்கம் வளர்வதற்கும் தடையாக இருந்தனர். இதன் விளைவாக தொழிலாளி வர்க்க இயக்கத்தை சீர்குலைத்து இனவாத சக்திகள் வளர உரமிட்டனர். மலையக மக்களுக்கு தலைமை தாங்கும் தொண்டமான் 1977 ஆம் ஆண்டு தேர்தலின் போது தனிநாடு கோரிக்கையை கைவிட்டார். 1977 ஆம் ஆண்டு தொண்டமான் ஜே.ஆரின் அமைச்சரவையில் சேர்ந்தார். 1983 ஜூலை மாத கடைசியில் நடந்த இன படுகொலை தாக்குதலுக்குப் பிறகு அமிர்தலிங்கமும் கூட்டணித்தலைமையும் இந்தியாவை ஆளும் இந்திரா ஆட்சியின் தலையீட்டுடன் ஜெயவர்த்தனேவிடம் சமரசம் காண முயல்கின்றனர். இச்சமரசம் தோல்வியுற்றால் இந்திய ராணுவம் கூட தலையிட வேண்டும் என கோருகின்றனர்.
திருத்தல்வாதக் கட்சிகள் இலங்கை நாட்டினுள் தொழிலாளிவர்க்கக் கட்சிகள் என்று கூறிக் கொள்பவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, ரோஹன விஜயவீராவின் தலைமையிலுள்ள மக்கள் விடுதலைமுன்னணி ஆகியவையே ஆகும் இதில் கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜ கட்சியும் தம்மை ஒரு அகில இலங்கை கட்சிகள் இரு இனங்களின் கட்சிகள் - என கூறிக்கொள்கின்றன. ஆனால் உண்மையில் இன்றுள்ள நிலைமையில் சிங்கள இனத்தில் மட்டுமே தமது அமைப்புகளைக் கொண்ட கட்சிகளாகவே அவை உள்ளன. அதுவும் தேய்ந்து மெலிந்து கிழடு தட்டிப்போன சிறு அமைப்புகளாகவே உள்ளன. மக்கள் விடுதலை முன்னணியும் சிங்கள இனத்தவரிடம்தான் தனது அமைப்புகளை உருவாக்கி கொண்டு இருக்கிறது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் சமூக ஏகாதிபத்திய வாதிகளின் தலைமையில் இயங்குகின்ற ஒரு திருத்தல்வாத கட்சியாகும். சமசமாஜக்கட்சி ஒரு ட்ராட்ஸ்கியவாத கட்சியாகும். மக்கள் விடுதலை முன்னணி தனதுஆரம்ப காலத்தில் சேகுவேராவின் கொள்கைகளைக் கடைப்பிடித்திருந்தாலும் இன்று அது ஒரு ட்ராட்ஸ்கியவாத கட்சியாகவே உள்ளது. இவ்விரு ட்ராட்ஸ்கியவாத கட்சிகளுங்கூட சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பவையாகவே உள்ளன.
திருத்தல் வாதிகளின் துரோகம் கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியவை ஆரம்ப காலத்தில் இரு இனங்களுக்கும் சம அந்தஸ்து கொள்கையை ஆதரித்தது. கம்யூனிஸ்ட் கட்சி 1955ல் பிரதேச சுயாட்சிக் கொள்கையை முன் வைத்தது. 1956ல் "சிங்களம் மட்டும்" கொள்கையை எதிர்த்து "இருமொழிக்கும் சம அந்தஸ்து" கொள்கையை ஆதரித்தது; இருப்பினும் இரு மொழிகளும் சம அந்தஸ்து பெறுவதற்கான எந்த உருப்படியான போராட்டத்தையும் நடத்தவில்லை. 1958ல் இனக் கலவரத்தின் போது சிங்கள இனவெறியர்களின் தாக்குதலை எதிர்த்து ஒடுக்கப்படும் தமிழருக்கு ஆதரவாக நின்றது. 1958க்குப் பிறகு திருத்தல்வாத சேற்றுக்குள் முழுவதுமாக புதைந்து தன்னை முற்றிலும் ஒரு பாராளுமன்றவாதக் கட்சியாக மாற்றியமைத்துக் கொண்டபிறகு இனப் பிரச்சினையிலும் ஒரு முழுமையான சந்தர்ப்பவாத நிலைக்கு சென்றுவிட்டது. அப்படியென்றால் அது அதற்குமுன் ஒரு சரியான மார்க்சிய கட்சியாக இருந்தது என பொருள் அல்ல. 1958க்குப் பிறகே பாராளுமன்ற பாதையில் மூழ்கி முற்றிலும் பேரினவாதத்திற்கு அடிபணிந்து விட்ட கட்சியாக ஆகிவிட்டது. 1962ல் கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கட்சியும் சுதந்திர கட்சியுடன் ஒரு இடதுசாரி ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்தபோது சிங்களம் மட்டும் அரசுமொழி என்ற சட்டத்தை ஏற்றுக் கொண்டே தேர்தல்களில் பங்குகொண்டன. தமிழ் விசேட மசோதாவிற்கு எதிராக 1968 ஜனவரியில் நடந்த வகுப்புவாத வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்கையும் வகித்தனர். புத்தமதத்தை அரசு மதமாக்கி, சிங்கள மொழியை மட்டுமே அரசு மொழியாக ஆக்குவதற்காகவும் அதுவரையில் சிறுபான்மையினருக்கு இருந்த அற்ப சொற்பமான உரிமைகளை பறிக்கவும் 1972 மே 29ல் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டம் இவர்களின் ஆதரவுடனேயே இயற்றப்பட்டது. ரோஹன விஜனவீராவின் தலைமையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தமிழர்களுக்கென பாரம்பரிய பிரதேசங்கள் இருப்பதைக்கூட ஏற்றுக்கொண்டது கிடையாது. குடியுரிமையற்ற தோட்ட தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்பு வாதிகளின் கையாட்கள் எனக் கூறி சிங்கள இளைஞர்களை அவர்களுக்கு எதிராக திருப்பிவிட்ட "பெரும் பாட்டாளிவர்க்க புரட்சியாளர்கள்" இவர்கள். சமீபகாலங்களில் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக கூறிக் கொண்டு இடத்திற்கேற்றார் போல் பேசிக்கொடிருப்பவர்கள். இக்கட்சிகளின் திருத்தலவாத சந்தர்ப்பவாத அரசியல் கொள்கையாலும் நடைமுறையினாலும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு சீரழிந்து வர்க்க போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டன. ஆளும் வர்க்கக் கட்சிகளின் பின்னால் தொழிலாளர்கள் சென்றனர். இதன் தவிர்க்க முடியாத விளைவாக சிங்களத் தொழிலாளர்கள் பேரினவாதத்திற்கு இரையானார்கள் தமிழ்த் தொழிலாளர்கள் திருத்தல்வாதிகளை ஒதுக்கித் தள்ளினார்கள். தொண்டைமான்கள தொழிலாளர்களின் பெருந்தலைவர்கள் ஆனார்கள்; தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஆளும் வர்க்கத்தினரை எதிர்த்துப் போராட வேண்டிய சிங்கள உழைக்கும் மக்கள் இன்று இனவாதத்திற்கு இரையாகித் தமிழ் மக்களை தாக்குகின்றனர். இதன் மூலம் ஆளும் வர்க்கங்கள் தங்களுக்கிட்ட விலங்கை தாமாகவே இறுக்கிக் கொண்டனர். பிற இனங்களை ஒடுக்கும் எந்த ஒரு இனமும் சுதந்திரமானதாக இருக்க முடியாது என்ற உண்மைக்கு இன்று சிங்கள மக்கள் நிரூபணமாக உள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகளின் தோற்றம் தமிழ்த் தலைமைகளின் பாராளுமன்றவாத வர்க்க சமரசவாத அரசியல், குட்டி முதலாளிய சிறு உடைமை வர்க்க இளைஞர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காட்டிக் கொடுத்தல்களால் அதிருப்தியுற்று ஒரு ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தனி நாடு காண முனைந்தவர்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகள். சிங்கள பேரினவாதத்தை எதிர்த்தும் தனி நாடு கோரிக்கையை அடையவும் இவர்கள் போரிடுகிறார்கள். தமிழ் ஈழ விடுதலை புலிகள் இன்று பல குழுக்களாகப் பிரிந்துள்ளனர். அதில் பின்வரும் குழுக்கள் குறிப்பிடத்தக்கவை. 1. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (பிரபாகரன் குழு). 2) தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (முகுந்தன் குழு). 3) தமிழ் ஈழ விடுதலை முன்னணி (ஈழவேந்தன் குழு). 4) ஈழ மாணவர் பொது மன்றம் (பத்மநாபன்) இன்னும் பிற. இவ்வமைப்புகள் பெருபாலும் குட்டி முதலாளித்துவ சிறு உடமை வர்க்கத்தினரையே கொண்டவையாக உள்ளன. வடக்குகிழக்குப் பகுதிகளில் வாழும் பாரம்பரியத் தமிழர்கள் இடையேதான் இக்குழுக்கள் உள்ளன. மலையக மக்களுக்கிடையில் இக்குழுக்களுக்கு அமைப்புக்கள் இல்லை.
விடுதலைபுலிகளின் தவறான பார்வை வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் மக்களிடையில் அமைப்பு ரீதியான பலம் பெற்றிருக்கவில்லை. இக்குழுக்கள் பாட்டாளி வர்க்கத் தலைமையையும், சோசலிசத்தையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறினாலும் இவை தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டத்தை அந்நாட்டு ஜனநாயகப்புரட்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கவில்லை. விடுதலைப் புரட்சிக்கான ஒரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை ஒரு அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாட்டின் விடுதலைப்புரட்சி ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாகும் என்பதைப் பார்க்கத் தவறுகின்றனர். இதன் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தையும் இந்திய ஆளும் வர்க்க விஸ்தரிப்புவாதத்தையும் எதிர்த்துதான் சுயநிர்ணய உரிமையை அடைய முடியும் என்பதை உணரவில்லை. எனவேதான் ரஷ்ய ஏகாதிபத்தியத்தையும் இந்திய அரசின் விஸ்தரிப்புப் போக்கையும் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அத்துடன் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினை, தமிழ் விவசாயிகளின் நிலப்பிரச்சனையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இது ஜனநாயகப் புரட்சி என்பதையும் இவர்களால் உணர முடியவில்லை. தமிழ் தலைமைகளின் சமரச சரணடைவு போக்கிற்கான வர்க்க அடிப்படையையும் இவர்கள் உணரவில்லை. இதன் விளைவாக சுயநிர்ணய உரிமைக்காகப் போராட்டத்திற்கு இன்றுள்ள தமிழ் தலைவர்கள் எனப்படும் அமிர்தலிங்கம், தொண்டமான் வகையறாவும் தலைமை தாங்க இயலாது என்பது மட்டுமல்ல; அவை சீர்குலைப்பதுவுமாகும் என்பதை உணர வேண்டும். இவர்கள் பாட்டாளிவர்க்கத் தலைமையை ஏற்பது உண்மையானால் இலங்கை நாட்டிலுள்ள வர்க்க முரண்பாடுகளைச் சரியாகக் கையாள முன்வர வேண்டும். இதன் பொருள் மலையகத் தமிழ் மக்களுடன் ஐக்கியப்படுவதற்கான அணுகுமுறையையும் சிங்கள உழைக்கும் மக்களை வென்றெடுப்பதற்கானக் கண்ணோட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும். இடதுசாரி மனோபாவம் கொண்டவர் சிலர் இப்போதுதான் மார்க்சிய லெனினியக் கட்சி ஒன்றின் இன்றியமையாமையை உணரத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தனித் தன்மைகளும் தீர்வும்! இலங்கையில் இன்றுள்ள அரசின் வரலாற்றூப் பின்னணியையும் தேசிய இனப் பிரச்சனையை பற்றி நாட்டிலுள்ள அந்த சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களின் கொள்கைகளையும் இவ்விஷயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளையும் பற்றிய ஆய்விலிருந்து இலங்கை நாட்டிலுள்ள தேசிய இனப்பிரச்சனையின் தனித் தன்மையான கூறுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.இன்றைய இலங்கை அரசு இரு இனங்களுக்கும் சம உரிமையின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒன்றியமல்ல. சிங்கள - தமிழ் இன ஐக்கியம் மக்கள் விரும்பி தாங்களாகவே செய்து கொண்டதல்ல. சிங்களப் பேரினம் சிறுபான்மை இனத்தினரான தமிழ் பேசும் மக்களை ஒடுக்கின்றது.இலங்கை ஒரு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாக மாறிய பிறகு, இரு இனங்களுக்குமிடையில் தொடர்ந்து பூசல்களும் மோதல்களுமாகவே இருந்து வருகிறது.இலங்கையை ஆளும் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ அரசு தவிர்க்க முடியாதவாறு சிங்களப் பேரினவாதத்துடன் கட்டுண்டு கிடக்கிறது. சிறுபான்மை மக்களின் மீது - "தமிழினத்தின்" மீது - நடத்தப்படும் ஒடுக்கலை இவ்வரசு தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது.இலங்கை நாட்டின் அரைக்காலனித்துவ அரசின் வீழ்ச்சிக்கும் சிங்கள மக்களின் விடுதலைக்கும்கூட தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறுவது ஒரு முன்னிபந்தயாகிறது.சிங்கள இனத் தொழிலாளி வர்க்கம் பெருந்தேசிய இனவாதத்திற்கு இரையாகி சிறுபான்மை இனங்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் அனைவருமே இவ்வரசின் இன ஒடுக்கலுக்கு ஆளாக்கப்பட்டாலும் இவர்களில் ஒரு பிரிவினரான வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பாரம்பரிய தமிழரும் மற்றொரு பிரிவினரும் மலையகத்தில் வாழும் தமிழரும் ஆகிய இரு பிரிவினரும் இரு வேறு வரலாற்று பின்னணியைக் கொண்டவராகவும் பூகோள ரீதியில் தொடர்பற்ற இருவேறு பிரதேசங்களில் வாழ்பவராகவும் உள்ளனர்.இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களும் இந்தியத்துணை கண்டத்திலுள்ள தமிழ் தேசிய இனமக்களும் இன்னும் பிறநாடுகளில் வாழும் தமிழரும், பிற நாடுகளில் வாழும் தமிழரும் ஆக உலகெங்கும் வாழும் ஏழரைக் கோடி தமிழர்கள் ஒரே தேசிய இனத்தவர் அல்லர். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் வாழும் தமிழர் ஒரு தனிதேசிய இனத்தினர் ஆவார்கள். இலங்கையின் மலையகத்தில் வாழும் தம்ழர்கள் அந்நாட்டின் இனச் சிறும்பான்மையினர் ஆவர். மேற்கூறப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கூறுகள் இலங்கவாழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கானத் தீர்வை நிர்ணயம் செய்கிறது.
தனிநாடுகோர வேண்டிய அவசியம்! இலங்கையின் அரைக்காலனித்துவ - அரைநிலப்பிரபுத்துவ அரசு சிறுபான்மை இனத்தவரை ஒடுக்குவதையே தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளதால் இன்றுள்ள இலங்கை அரசு அமைப்பிற்குள் இன மோதல் தவிர்க்க முடியாததாகிறது. இரு தேசிய இனங்களுக்கும் இடையில் அமைதியும் சாத்தியமற்றதாகிறது. சிங்களப் பேரினவாத அதிகார வர்க்கத் தரகு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களும் அவர்களது அரசும் இரு தேசிய இன மக்களிடையே உண்டாக்கும் முடிவற்றப் பூசல்களும் மோதல்களும் தமிழ் பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்குத் தடையாகவே இருக்கின்றது. இவை யாவற்றிற்கும் மேலாக ஈழத்தமிழினத்தை ஒழித்துக் கட்டவும் குடியுரிமை அற்ற மலையக மக்களை நவீன அடிமைகளாக நடத்தவும் தாங்கள் விரும்பினால் அவர்களை நாட்டை விட்டே விரட்டியடிப்பதற்காகவும் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன ஒடுக்குமுறைகள் தமிழீழ மக்கள் தனிநாடு கோர வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது, மலையக மக்கள் குடியுரிமை உள்ளீட்டு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் தேசிய அமைதியையும் கோருகிறார்கள். தமிழ் முஸ்ல¦ம்கள், மதஉரிமை உள்ளிட்டு அனைத்து ஜனநாயக கோரிக்கைகளையும் தேசிய அமைதியையும் கோருகிறார்கள். இலங்கை நாட்டிலுள்ள தேசிய இனங்கள்ளுக்கு சுயநிர்ணய உரிமையையும் தேசிய அமைதியையும் மக்கள் ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் உத்திரவாதம் செய்ய முடியும். ஆனால் இந்த மக்கள் ஜனநாயக புரட்ச்சியானது தமிழீழ தேசிய இனம் சிங்கள தேசிய இனத்திடமிருந்து பிரிந்து போவதில் முடியுமா? அல்லது சிங்கள தேசிய இனத்துடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா? என்பதுதான் இன்றுள்ள பிரச்சனை (பக்கம்-31). "சித்தாந்த ரீதியாகப் பார்த்தால் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியானது ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா? அல்லது அத்துடன் சமஅந்தஸ்து பெறுவதில் முடியுமா என்பதை முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாது".
லெனினியத்தின் வழி காட்டுதல்! எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையை ஒப்புக் கொள்வது; பிரிந்து போகிற பிரச்சனை எழுகிறபோது எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் எல்லா விசேச உரிமைகளையும் எல்லா தனித்துவப் போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்" (பக்கம் - 35) என்பது தான் லெனினின் வழிகாட்டுதல். இத்துடன் ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு லெனினியம் கூறும் கடமைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டே இப் பிரச்சனைக்கு நாம் ஒரு தீர்வு காண வேண்டும்."எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளிகள் கூட்டாக இணைத்திருப்பதை மிகவும் முதன்மையானதாகக் க்ருதிப்போற்றவேண்டும்; எந்தவொரு தேசிய இன கோரிக்கையையும் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்து மதிப்பிடவேண்டும் (பக்கம் 33)."மற்றொரு பக்கத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலாளர்களுக்கும் இடையிலான முழுமையான நிபந்தனையற்ற ஐக்கியத்தை - ஸ்தாபன ரீதியான ஐக்கியம் உட்பட - ஆதரித்துக் காத்து, நடைமுறையாகச் செயல்படுத்துவது ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த சோசலிஸ்டுகள் குறிப்பாகக் செய்ய வேண்டியது. அதைச் செய்யாமல் பாட்டாளிவர்க்கத்தின் சுயேட்சையான கொள்கையை ஆதரித்துக் காப்பது சாத்தியமில்லை. பூர்ஷ்வாக்களின் எல்லா விதமான சூழ்ச்சிகளையும், துரோகத்தையும், ஏமாற்று வார்த்தகளையும் எதிர்த்து மற்ற நாடுகளின் பாட்டாளி வர்க்கத்துடன் தங்களது வர்க்க ஒருமைப்பாட்டை ஆதரித்துக் காப்பதும் சாத்தியமில்லை.
உலக பாட்டாளிவர்க்கத்தின் அனுபவம்! மேற்கூறப்பட்ட பொதுக் கோட்பாடுகளை ஒரு தேசிய இனம் பிரிந்து போக வேண்டும் என்கிற பிரச்சனை எழுகிற நேரத்தில் மார்க்சியம், லெனினியம் எவ்வாறு கையாண்டது என்பதை உலகப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டே இன்று நம் முன்னுள்ள பிரச்சனையை பரிசீலனை செய்ய வேண்டும்.இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிவதை மார்க்ஸ் ஆதரித்தார். அப்பிரிவினையை ஆதரித்ததற்கு மார்க்ஸ் அளித்த விளக்கத்தைப் பார்ப்போம்.".......இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிவது சாத்தியமில்லை என்று முன்பு நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுபிரிவது தவிர்க்க முடியாதது என இப்பொழுது நினைக்கிறேன். ஆனால் ஒரு வேளை அப்பிரிவுக்குப் பிறகு ஒரு கூட்டாட்சி அமைந்தாலும் அமையலாம்". இது 1867 நவம்பர் 5ம் தேதி மார்க்ஸ் எங்கல்சுக்கு எழுதியது. மேலும் மற்றொரு கடிதத்தில் அப்பிரச்சனைக்கு அவர் அளித்த தீர்வு ".... ஐரிஷ் மக்களுக்கு வேண்டியதாவது, சுயாட்சியும் இங்கிலாந்தின் பிடிப்பிலிருந்து விடுதலையும்"
ஒரு விவசாயப் புரட்சி.மேற்கூறப்பட்ட முடிவை அடைந்ததற்கான காரணத்தை மார்க்ஸ் பின்வருமாறு கூறுகிறார் "...அயர்லாந்து நீதி காட்டுவது" பற்றிய 'சர்வதேச ரீதியான' 'மனிதாபிமான' வாய்சொற்களிலிருந்து முற்றிலும் வேறாக - அவை எப்பொழுதுமே இருப்பவைதான் என்பது இன்டர்நேஷனலின் கவுன்சிலுக்குத் தெரியும். ஆங்கிலேய தொழிலாளி வர்க்கத்தின் நேரடியான நிச்சயமான நலன்களூக்கு ஏற்றது அயர்லாந்துடன் தனது இன்றைய தொடர்பை அது அறுத்துக் கொள்வதுதான்...ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் கை ஓங்கி வந்தால் ஐரிஷ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவது சாத்தியம் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன்...... உண்மை இதற்கு நேரெதிரானதென்று ஆழ்ந்த ஆராய்ச்சி இப்பொழுது என்னை திடமாக நம்பச் செய்துவிட்டது. அயர்லாந்தை விட்டுத் தொலைக்கும் வரை ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது. ....இங்கிலாந்தின் ஆங்கிலேய பிற்போக்குவாதத்திற்கு மூலகாரணம், அயர்லாந்தை அடிமைப்படுத்தியதுதான்". இப்பிரச்சனையில் மார்க்சின் நிலையை தெளிவுபடுத்தும் பொருட்டு லெனின் பின்வருமாறு கூற்னார். "மார்க்ஸின் கொள்கைக்குக் காரணமென்ன? அது தவாறானதா? ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலாளி வர்க்க இயக்கத்தினால்தான் அயர்லாந்து விடுதலை அடையும். ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய இயக்கத்தினால் அல்ல என்றும் மார்க்ஸ் முதலில் நினைத்தார். தேசிய இயக்கங்களை சார்பற்ற முழுமையாக மார்க்ஸ் கருதவில்லை; ஏனென்றால் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிதான் எல்லா சிறுதேசிய இனங்களுக்கும் பூரணவிடுதலையைத்தரும் என்பது நன்கு அவருக்குத் தெரியும். ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பூர்ஷ்வா விடுதலை இயக்கங்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்க விடுதலை இயக்கத்திற்கும் இடையில் என்னென்ன விதமான உறவுகள் சாத்தியம் என்பதைமுன் கூட்டியே மதிப்பிட முடியாது. (இந்தப் பிரச்சனைதான், இன்று ரஷ்யாவில் தேசிய பிரச்சனையை கடினமாகத் தாக்குகிறது). ஆனாலும் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கமானது கணிசமான காலம் மிதவாதிகளுடைய செல்வாக்கின் கீழ் இருந்தது. மிதவாதிகளுக்கு வால் பிடித்து, மிதவாதத் தொழிலாளர் கொள்கையை கடை பிடித்ததன்மூலம் அது தலைமையற்று நின்று விட்டது. அயர்லாந்தின் பூர்ஷ்வா விடுதலை இயக்கமானது வலுப்பெற்று புரட்சிகர வடிவங்களை எடுத்தது. மார்க்ஸ் தனது கருத்துக்களை மறுபரிசீலனை செய்து திருத்தினார். "ஒரு தேசிய இனத்தை அடிமைப்படுத்துவது இன்னொரு தேசிய இனத்துக்கு எவ்வளவு துர்பாக்கியம்" அயர்லாந்து இங்கிலாந்தின் தளையிலிருந்து விடுபடும் வரை ஆங்கிலேய தொழிலாளிவர்க்கம் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. அயர்லாந்தை இங்கிலாந்து அடிமைப்படுத்தியதால் இங்கிலாந்தில் பிற்போக்கு வலுப்பெற்று ஊட்டம் பெற்று விட்டது. (பல தேசிய இனங்களை ரஷ்யா அடிமைப் படுத்தியதால் அங்கு எவ்வாறு பிற்போக்கு ஊட்டம் பெற்றிருக்கிறதோ அதே போல் தான்)" (பக்கம்-79,80, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை-லெனின்).நமது படிப்பினை இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன? ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலாளி வர்க்கம் மிதவாதத்திற்கு வால் பிடித்து அது தலைமையற்று நிற்கும்போது, ஒடுக்கப்படும் தேசிய இனம், ஒடுக்கும் தேசிய இனத்தின் தளையிலிருந்து விடுபடும் வரை ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலாளி வர்க்கம் சுதந்திரம் பெற முடியாது என்கிற நிலைமைகளில் ஒடுக்குப்படும் பூர்ஷ்வா விடுதலை இயக்கம் வலுப்பெற்று புரட்ச்சிகர வடிவங்களை எடுத்தால் அதை ஆதரிப்பது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகிறது. ஸ்வீட்னிலிருந்து நார்வே பிரிந்ததைப் பற்றி லெனின் ஆய்வு செய்த போது பின்வருமாறு கூறினார்; "ஆனால் நார்வே - ஸ்வீடனின் ஐக்கியம் மக்கள் விரும்பி தாங்களாகவே மனமுவந்து செய்து கொண்டதல்ல" "நார்வேக்கு மிக விரிவான சுய நிர்வாக உரிமை கொடுக்கப்பட்டிருந்த போதிலும் (அது தனக்கே சொந்தமாக ஒரு பாராளுமன்றம் முதலியவற்றைப் பெற்றிருந்தது) கூட்டுச் சேர்ந்தபிறகு பல ஆண்டுகள் நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் தகராறுகள், மோதல்கள் இருந்து வந்தன; ஸ்வீடிஷ் உயர் குடியினரின் ஆட்சியை உதறியெறிவதற்கு நார்வே மக்கள் தீவிரமாக முயன்றார்கள்". "பிரிதல் பிரச்சனைப் பற்றி நார்வேயின் சோஷல் டெமாக்ரட்டுகள் குறிப்பிட்ட கருத்துக்களைத்தான் கொண்டிருக்க வேண்டுமென்று நார்வே சோசலிஸ்டுகள் செயல் திட்டம் வலியுறுத்தியதா என்பது நமக்குத் தெரியவில்லை. அது அவ்வாறு செய்யவில்லை என்று நாம் வைத்துக்கொள்வோம் வர்க்கப் போராட்டத்தைத் தடையின்றி நடத்துவதற்கு நார்வேயின் சுய நிர்வாக உரிமையானது எந்த அளவுக்கு வகைசெய்தது என்பது பற்றியும், அல்லது ஸ்வீடிஷ் உயர்குடி மக்களாட்சியுடனான முடிவற்ற மோதல்களும் பூசல்களும் எந்தளவுக்குப் பொருளாதார வாழ்வில் சுதந்திரத்திற்குத் தடையாக விளங்கின என்பதுபற்றியும் அது ஒன்றும் கூறவில்லை என்றும் நாம் வைத்துக்கொள்வோம். ஆனால் நார்வேயின் பாட்டாளி வர்க்கம் உயர்குடியினரின் ஆட்சியை எதிர்த்து, நார்வேயின் குடியானவர் ஜனநாயகத்தை (அதிலுள்ள பிலிஸ்டைன் வாதக் குறைபாடுகளுடன்) ஆதரிக்க வேண்டியிருந்தது என்பதையும் மறுக்க முடியாது" (தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை, பக்கம் 60-61) "ஐரோப்பிய மன்னர்களாலும் ஸ்வீடிஷ் உயர் குடியினராலும் நார்வேயின் மீது திணிக்கிப்பட்ட உறவுகள் கலைந்ததால் நார்வே + ஸ்வீடன் தொழிலாளர்களின் உறவுகள் வலுவடைந்தன" (மேற்கூறிய நூல் பக்கம் - 62)மேற்கூறப்பட்டவையிலிருந்து பிரிவினை என்கிற பிரச்சனை எழும்போது நாம் கணக்கில் கொள்ளவேண்டியது என்ன? ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது ஒடுக்கும் இனத்தின் ஆளும் வர்க்கமும் மற்றும் பிற ஆதிக்க சக்திகளும் திணிக்கின்ற உறவுகள் கலைவதால் ஒடுக்கப்படும் ஒடுக்கும் இனங்களின் தொழிலாளர்களின் உறவுகள் வலுவடைகின்றன.2. இரு இனங்களின் ஐக்கியம் மக்கள் விரும்பித் தாமாகவே மனமுவந்து செய்து கொண்டதா?அந்த நாட்டில் நிலவும் அரசமைப்பு முறை (ஒடுக்கப்பட்ட இனத்தவர்) வர்க்கப் போராட்டம் தடையின்றி நடத்துவதற்கு வகை செய்கிறதா?ஒடுக்கப்படும் இனத்தினருக்கும் ஒடுக்கும் இனத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய ஆட்சிக்கும் இடையிலான முடிவற்றப் பூசல்களும் மோதலகளும் எந்தளவிற்கு அவர்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கிறது? என்பனவற்றை ஒரு தேசிய இனம் பிரிந்து செல்ல வேண்டும் என்ற பிரச்சனை எழும்போது அதன் தீர்விற்கு அடிப்படையாக கொள்ள வேண்டும்.
தொழிலாளி வர்க்கத்தின் இனப் பிரச்சனையும் ஒற்றுமையும் நாம் அடுத்தபடியாக பரிசீலிக்க வேண்டியது எல்லா தேசிய இனங்களின் தொழிலாளர் ஒற்றுமை பற்றிய, ஒடுக்கும் தேசிய இனத் தொழிலாளருக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தொழிலாளருக்கும் இடையிலான ஒற்றுமையைப் பற்றிய மார்க்சிய - லெனினிய பொதுக் கோட்பாடுகளை ஓர் தேசிய இனம் பிரிந்து போக வேண்டுமென்கிற பிரச்சனை எழும்போது அல்லது ஒரு தேசிய இனம் தனிநாடு அமைத்துக் கொள்ளும் பிரச்சனை எழும்போது பருண்மையான நிலையில் எவ்வாறு கடைபிடிப்பது என்பதாகும். இவ்விஷயத்தைப் பற்றி மார்க்சிய - லெனினியம் நமக்கு என்ன வழி காட்டுதலை வழங்குகிறது? அயர்லாந்து பிரச்சனையில் ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கத்தின் நிலையைப்பற்றி மார்க்ஸ் சொன்ன கருத்திலிருந்து, ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து சென்றபோது ஸ்வீடன் தொழிலாளிவர்க்கம் ஆற்றிய பங்கினைப் பற்றி லெனின் எடுத்துக்காட்டியதிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக அறியலாம். ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தொழிலாளிவர்க்கம் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலாளி வர்க்கத்துடன் ஒற்றுமை கண்டு அதைப் போற்றிக்காப்பாற்ற வேண்டுமானால் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலாளி வர்க்கம் மிதவாததிற்கு வால் பிடிக்கக்கூடாது. சுவீடன் தொழிலாளி வர்க்கத்தைப் போல் தன் தேசிய இனத்து ஆளும் வர்க்கத்தின் இன ஒடுக்கு முறைகளையும் தன் தேசிய இனத்து ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் மீது திணிக்கும் உறவுகளையும் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலாளி வர்க்கம் எதிர்த்துப் போரிட வேண்டும். பேரின வாதத்திற்கு இரையாகி ஒடுக்கப்படும் இன மக்களை அது தடிகொண்டு தாக்க வரக்கூடாது.
கட்டாய தேசிய இணைப்பு போலந்து சமூக ஜனநாயக வாதிகள் கட்டாய தேசிய இணைப்பை எதிர்க்க மறுத்தனர். இப்பிரச்சனையில் அவர்கள் ஒரு சந்தர்ப்பவாத நிலையை மேற்கொண்டனர். கட்டாய தேசிய இணைப்பை எதிர்ப்போமானால் ஒடுக்கப்படும் தேசிய இனத்தில் பாட்டாளி வர்க்கம் தனது பூர்ஷ்வாக்களுடன் சேர்ந்து கொண்டு ஆளும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தை தனது பகைவனாக கருதும் எனவாதிட்டனர். இச் சந்தர்ப்பத்தில் போலந்து சமூக ஜனநாயகவாதிகள் எழுப்பிய வாதம்: "கட்டாய பிரதேச இணைப்புகள்" ஆளும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளிவர்க்கத்துக்கும் இடையில் ஒரு பெரும் இடைவெளியைத் (gulf) தோற்றுவிக்கின்றன. .....ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளிவர்க்கம் தனது பூர்ஷ்வாக்களுடன் சேர்ந்து கொண்டு ஆளூம் தேசிய இனத்தின் பாட்டாளிவர்க்கத்தை தனது பகைவனாகக் கருதும் சர்வதேசிய பூர்ஷ்வா வர்க்கத்துக்கு எதிராக பாட்டாளிகளின் சர்வதேச வர்க்கப் போராட்டம் என்பதற்கு பதிலாக பாட்டாளிவர்க்கம் பிளவுண்டுவிடும். அது கொள்கைவாதத் துறையில் சீர்கேட்டடைந்துவிடும். இவ்வாதத்தை விமர்சனம் செய்து லெனின் பின்வருமாறு மறுத்துரைத்தார்: .....இவ்வாதங்களை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒரேப் பிரச்சனை பற்றி ஒரே சமயத்தில் ஒன்றையொன்று விலக்கும் இருவாதங்களை எழுப்புவது முறையானதா? ஆய்வுகளின் முதல் பகுதி 3ல், கட்டாயப்பிரதேச இணைப்புகளால் பாட்டாளி வர்க்கம் பிளவுண்டுவிடும் என்கிற மேலே குறிப்பிட்ட வாதத்தைக் காண்கிறோம். அதற்கு அடுத்தப் பகுதி 4ல், ஐரோப்பாவில் ஏற்கனவே நடைபெற்றுவிட்ட கட்டயப் பிரதேச இணைப்புகளை இரத்து செய்வதை நாம் எதிர்க்க வேண்டுமென்றும், "போராட்டத்தில் ஒற்றுமை" என்கிற உணர்வை ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் ஒடுக்கும் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் போதிக்க வேண்டியதை நாம் ஆதரிக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது. கட்டாய பிரதேச இணைப்புகளை ரத்து செய்ய வேண்டுமென்று கே'ருவது பிற்போக்குத் தனமான "உள்ளங் குமையும் உணர்ச்சி என்றால் "பாட்டாளி வர்க்கத்தின்" பகுதிகளுக்கிடையில் கட்டிய பிரதேச இணைப்புகள் ஒரு 'இடை வெளியை' தோற்றுவிக்கின்றன என்றும் பிளவை உண்டு பண்ணுகின்றன என்றும் வாதிடக்கூடாது. அதற்கு மாறாக பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி மக்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அவ்வாறு ரத்து செய்ய வேண்டுமென்று கோருவதை ஒரு நிபந்தனையாக கருத வேண்டும். "நாம் சொல்கிறோம்: சோசலிசப் புரட்சியை நிறைவேற்றுவதற்கான, பூர்சுவாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான வலிமையை நாம் பெறுவதற்கு தொழிலாளர்கள் இன்னும் அதிக நெருக்கமாக ஒன்றுபட வேண்டும். இந்த நெருங்கிய ஐக்கியமானது சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தினால் அதாவது கட்டாய பிரதேச இணைப்புக்கு எதிரான போராட்டத்தினால் வளர்க்கப்படுகிறது. நாம் முரண்பாடுகள் இன்றி இருப்போம்."
பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி மக்களிடையில் - ஒடுக்கும் இன, ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளி மக்களிடையில் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவதற்கு ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையைக் கோர வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும் என லெனினியம் கூறுகின்றது. என்பது தெளிவாக தெரிய வில்லையா? இந்நிபந்தனையை ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் நிறைவேற்றத் தவறினால் எப்படி ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமை சாத்தியமாகும்? ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் தங்கள் கடமையை செய்யத் தவறுவதோடு மட்டுமல்லாமல் பேரினவாதத்திற்கு இரையாகி ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்களை ஒடுக்கவதற்கு தன் தேசிய இனத்தைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களுக்கு துணை போனால் அதை ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் எதிர்க்க மறுப்பது பிற்போக்கையும் எதிர் புரட்சியையும் பலப்படுத்தாதா? ஆகையால்தான் வர்க்க போராட்டம் என்கிற கோணத்தில் இருந்து மதிப்பிடும் போதும்கூட, ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளி வர்க்க ஒற்றுமை நிபந்தனைக்குட்பட்டதே ஆகும். இதைத்தான் மார்க்சியம் - லெனினியம் தொகுத்துதந்த வரலாற்று அனுபவங்கள் நமக்கு போதிக்கிறது.
தமிழ் பேசும் மக்களது போராட்டம் நியாயமானதே!இன்றைய சிங்கள பேரினவாத, புத்தமதவாத அரசு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை ஒடுக்குவதையே தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இவ்வரசின் பேரினவாதக் கொள்கையால் சிங்கள இனத்திற்கும் ஈழத்தமிழ் இனத்திற்கும் மற்றும் பிற தமிழ் பேசும் மக்களுக்கிடையில் பூசல்களும், மோதல்களுமாக இருக்கிறது. இன்றுள்ள நிலைமைகளில் வர்க்கப் போராட்டம் தடையின்றி நடப்பதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப் படுகிறது ஈழத் தமிழ் இனம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. சிங்கள தேசிய இனத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் பேரினவாதத்திற்கு இரையாகி ஈழத் தமிழ் இனம், மற்றும் பிற தமிழ் பேசும் மக்களின் மீதும் சிங்கள ஆளும் வர்க்கம் நடத்தும் இன ஒடுக்கு முறைகளுக்கு துணை போகிறது. இந்நிலையில் தமிழ் ஈழத் தனி நாட்டுக்கான போராட்டமும், மலையக மக்களின் ஜனநாயக உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டமும் தமிழ் பேசும் முஸ்ல¦ம் மக்களின் ஜனநாயகப் போராட்டமும் நீதியானதும் உலகப் பாட்டாளி வர்க்க இயக்கம் ஆதரிக்கத் தகுந்ததாகும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சியும் தேசிய இனப் பிரச்சினையும் மேலும் தமிழ் இனம் சுயநிர்ணயம் பெறுவது இலங்கையின் அரைக் காலனித்துவ அரசின் வீழ்ச்சிக்கு ஒரு நிபந்தனையாக இருப்பதாலும் தமிழ் விவசாயிகளின் நிலப் பிரச்சினையுடன் தமிழ் பேசும் மக்களின் தேசிய இன பிரச்சனை இணைக்கப் பட்டிருப்பதாலும் இத் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தமிழ் ஈழ விடுதலை போராட்டம் ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியன் தன்மை உடையதாகும். எனவே பாட்டாளி வர்க்கம் ஒரு ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்துடன் இந்த சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்க கடமைப்பட்டிருக்கிறது. இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களில் ஒரு பிரிவினரான பாரம்பரிய தமிழர்களும் (தமிழ் - ஈழம்) மற்றொரு பிரிவினரான மலையக மக்களும் இரு வேறு வரலாற்றுப் பின்னணியை உடையவர்களாகவும் பூகோளரீதியில் தொடர்பற்ற இருவேறு பிரதேசங்களில் வாழ்பவராகவும் உள்ளனர். பாரம்பரிய பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்ல¦ம் மக்களுக்கென பிரத்யேக நலன்கள் காரணமாகவும் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு மிகச் சிக்கலானதாக உள்ளது. இப்பிரச்சினைக்கான தீர்வு பின்வருமாறு அமையலாம்.
தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள்பாரம்பரிய தமிழர்கள் தமிழ் ஈழ தனிநாடு காண்பது.மலையக மக்களுக்குக் குடியுரிமை அளிப்பதுடன் ஒரு சுயாட்சி உரிமை கொண்ட மாநிலமாக்குவதும் அவர்கள் தமிழ் ஈழத்துடன் இணைவதா அல்லது சிங்கள தேசிய இனத்துடன் இருப்பதா என்பதை தீர்மானிக்கும் உரிமையை அளிப்பது. அவர்கள் தமிழ்ஈழத்துடன் இணைய விரும்புவது இயல்பானதாகும். அவ்வாறு அவர்கள் இணைய விரும்பினால் இரு பகுதியினரும் தொடர்புகொள்ள சிங்கள தேசிய இனம் உத்தரவாதம் செய்வது. தமிழ் முஸ்ல¦ம்கள் வாழும் பிரதேசம் அமைய இருக்கும் தமிழ்ஈழ நாட்டிற்குள் ஒரு சுயாட்சி பெற்ற மாநிலமாக அமைவது முப்பிரிவினரின் பிரச்சனையும் அவர்களின் ஒன்றிணைந்த மக்கள் ஜனநாயகப் புரட்சியினால் மட்டுமே சாதிக்க கூடியதாகும். இலங்கைவாழ் தமிழ் பாட்டாளி வர்க்கம் இன்று இப்போராட்டத்தின் தலைமையை கைப்பற்றி கொண்டுள்ள தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளை அமிர்தலிங்கம் தலைமையில் உள்ள சமரசவாதிகளை தனிமை படுத்தி விட்டு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் வென்றெடுப்பதின் மூலமே இப் போராட்டத்தில் வெற்றி கொள்ள முடியும். சிங்கள தேசிய இனத்து பாட்டாளி மக்களையும் உண்மையான ஜனநாயகவாதிகளையும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக திரட்டுவது இவ்வெற்றியை உத்தரவாதம் செய்யும். இலங்கையில் இன்றுள்ள சூழ்நிலமைகளில் மாற்றம் ஏற்படுமானால் அரசியல் தந்திரத்திலும் மாற்றம் ஏற்படலாம். சிங்களத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் இரு இனங்களுக்கிடையிலான பூசல்களுக்கும், மோதல்களுக்கும் முடிவுகட்டி தமிழ் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் திட்டத்துடன் இலங்கையின் மக்கள் ஜனநாயக புரட்சியை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டத்தை முன்வைத்து அதை நிறைவேற்றும் சக்தியுடனும் நேர்மையுடனும் போராட முன் வருவார்களானால் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான தந்திரத்திலும் மாற்றம் ஏற்படலாம்.
தமிழகத்தைப் போராட்டப் பின்புலமாக்குவோம் இந்திய மக்களும், தமிழ் இன மக்களும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். இன்று நம் முன்னுள்ள கடமை இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு; அனைத்து உதவிகளைச் செய்வதாகும். தமிழகத்தை இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு பின்புலம் ஆக்குவோம் என்பதே நமது முழக்கமாகும். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களும், இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மக்களும் ஓர் தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் என்கிற பொருளில் அல்லஇம்முழக்கத்தை நாம் முன்வைப்பது. ஏனெனில் இருவரும் ஒரே தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல. உலகெங்கும் உள்ள ஏழரை கோடி தமிழ் மொழி பேசுவோருக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்கிற காரணத்தினாலும் அல்ல. ஏனெனில் உலகெங்கிலும் உள்ள ஏழரை கோடி தமிழ் பேசும் மக்கள் ஒரு மொழி பேசினாலும் ஒரே தேசிய இனத்தை சேர்ந்தவர் ஆகமாட்டார்கள். பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதிகள் என்கிற முறையிலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமக்கான போராட்டம் உலக சோசலிச புரட்சியின் ஒரு பகுதி என்கிற முறையிலும்தான் இப்போராட்டத்தை நாம் ஆதரிக்கின்றோம். தமிழகத்தை பின்புலமாக்குவோம் என்கிற முழக்கத்தையும் முன்வைக்கின்றோம். ஒடுக்கப்படும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை பாதுக்காக்க இந்திய அரசு இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது. ஜனநாயக சக்திகளே! முற்போக்குவாதிகளே! தமிழின பற்றாளர்களே! தமிழினம் உட்பட நாகா, மிசோ, அஸ்ஸாம், பஞ்சாப், காஷ்மீர் மற்றும் பலவேறு இனங்களை அடிமைப் படுத்தி வைத்துள்ள இந்திய அரசா இலங்கை தமிழர்களுக்கு விடுதலை பெற்று தரும்? 1971ல் இலங்கை அரசை கலகத்தினால் வீழ்ச்சியுறாமல் காப்பாற்றிய இந்திய இராணுவமா தமிழர்களை பாதுகாக்கும்? இந்திய படையின் தலையீடு இரு பெரும் வல்லரசுகள் இலங்கை, இந்திய ஆகிய இரு நாடுகளில் தலையிடவும் இந்நாடுகளை தங்களது ஆதிக்க மண்டலத்திற்குள் கொண்டு வருவதற்காக செய்யும் முயற்சிகளுக்கும் பயன்படுமேயொழிய ஈழத் தமிழரின் விடுதலைக்கு பயன்படாது. இந்திய படையெடுப்பாலோ(அ)வேறு எந்த அந்நிய படையின் தலையீட்டாலோ இலங்கை இரண்டாக பிரிக்கப்பட்டு ஈழத்தமிழ் நாட்டரசு அமைக்கப் பட்டாலும் அது ஈழத் தமிழரின் சுதந்திர அரசாக அமையாது. இந்திய படை தலையிட்டு அமைத்து தந்த வங்காள தேச அரசை போன்று அந்நியருக்கு அடிமைப்பட்டு அல்லல்படும் நாடாகவே இருக்கும். ஈழத்தமிழ்ருக்கு வேண்டுவது வெறும் பிரிவினை அல்ல. அவர்களுக்குத் தேவை ஒரு விடுதலை பெற்ற மக்கள் குடியரசு. அந்நிய சக்திகளைச் சார்ந்திருக்காமல் சொந்த பலத்தில் நம்பிக்கை கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நீண்ட மக்கள் யுத்தம் முலமாக தமிழ் இன விடுதலைக்கான போராட்டமே இதற்கு தீர்வாகும். ஈழத் தமிழரின் விடுதலையையும் அவர்களின் துயர்துடைக்கவும் விடும்புவோர் அனைவரின் கடமை இவ்விடுதலை இயக்கத்தினரின் போராட்டத்திற்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதே ஆகும் எனவேதான் இந்திய அரசு பாலஸ்தீன தனிநாடு போராட்டத்தை அங்கீகரித்தது போல், தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுடனான உறவை துண்டித்து கொண்டதுபோல் இந்திய அரசு ஈழத் தனிநாடுக் கோரிக்கையை அங்கிகரிப்பதோடு தமிழனத்தைப் படுகொலை செய்யும் இலங்கை அரசுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டுமென்று இங்கு போராட வேண்டும். ஈழத் தமிழர் நடத்தும் நீதியான உள்நாட்டுப் போரை இந்திய அரசு அங்கிகரிக்க வேண்டும். ஈழத் தமிழரின் விடுதலை போருக்கு தமிழகமும், இந்திய துணைக் கண்டமும் பின்வாங்கும் பிரதேசமாக அவர்களின் தளமாக மாற்றப்பட வேண்டியது தமிழக மக்களது கடமையாகும். இதுவே ஈழத் தமிழரின் விடுதலை போர் வெற்றி பெற ஒரு சரியான வழி. ஆயினும் இந்திய ஆளும் வர்க்கங்களும், ஆளும் காங்கிரஸ் கட்சியினரும் இன வெறியர்களாகவும் ஒடுக்கு முறையாளர்களாகவுமே இருக்கின்றனர். இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக் கூடமாகவே வைத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய கழகங்கள், ஆட்ச்சியில் இருக்கும்போது மத்திய அரசின் கொள்கையை நடைமுறை படுத்துவதும் ஆட்சியில் இல்லாதபோது மத்திய அரசின் இன ஒடுக்குதலை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வதும் என்ற கொள்கையை கடைபிடிப்பதை இனங்கண்டு கொள்வோம். வலது, இடது கம்யூனிஸ்ட்டுகளோ தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை எதிர்ப்பவாராகவே விளங்குகின்றனர் (உ-ம்) நாகர்கள், மிஜோக்கள், அசாமியர்களின் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை ஆதரிப்பதன் மூலமாக அவர்களது சுயரூபத்தை காட்டி விட்டனர். ஆகையால் போலி கம்யூனிஸ்டுகள் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு பயன்படப் போவதில்லை. எனவே ஈழத் தமிழரின் விடுதலைப் போர் வெற்றிவாகைசூட விரும்பும் அனைவரும், ஆளும் வர்க்க கட்சிகளையும், போலி கம்யூனிஸ்ட்டுகளையும் நம்பியிராமல் தமிழகத்தை ஈழத தமிழர்களின் விடுதலைப் போருக்கான தளமாக மாற்றுவோம். இந்திய ராணுவ தலையீட்டை எதிர்ப்போம்.
இரு வகைப் புரட்டல்கள் தமிழ்ஈழப் பிரிவினையை ஆதரிப்போர் சிலர் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றிய மார்க்ஸிய-லெனினிய கொள்கைகளைத் திரித்துப் புரட்டுகின்றனர். அந்நிய உதவியுடன் இயங்கும் தன்னார்வக் குழு ஒன்று அமைத்துத் தந்த அரண் (FORT) மீது ஏறி நின்று மார்க்ஸியத்தை நையாண்டி செய்யும் குணாளரும் இவ்வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவராவார். 29-10-1983ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட "சிந்தனையாளன்" எனும் கிழமை ஏட்டில் இவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். வழக்கம்போல் இக்கட்டுரையில் அவர் மார்க்ஸியத்தை எள்ளி நகையாடுகிறார் மார்க்ஸ் எங்கல்ஸ் மீது அவர் தொடுத்துள்ள தாக்குதல்களை முறியடிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இருப்பினும் இக்கட்டுரையில் அவை அனைத்தையும் மறுத்துரைக்க இடமில்லாத காரணத்தால் லெனினின் பேரால் அவர் செய்யும் மோசடியை மட்டுமே இங்கே எடுத்துக் காட்டுகிறோம். குணாளர் இப்படித்தான் அரண் (FORT) மீது நின்று கூவுகிறார். "தன்னாட்டுரிமை (Right of self determination) வேறு, பிரிந்துபோகும் உரிமை வேறு; பிரிந்து போகும் உரிமையை ஆதரிக்கிறோம். ஆனால் பிரிவினையை ஆதரிக்கமாட்டோம்' ஈழத்துப் பொது உடமையர் சிலரும் தமிழகத்துப் பொதுவுடமையர் சிலரும் சயாமிய ஒட்டுப் பிறவிகளைப் போல் கட்டைக்குரலில் ஒலிப்பார்களா?" எனவே குணாளருக்கு சுயநிர்ணய உரிமையும் (right of self determination), பிரிவினையும் வெவ்வேறானது அல்ல; இரண்டும் ஒன்றே. ஆயினும் லெனின் எவ்வாறு கூறினார்? இப்பிரச்சனையைப் பற்றி லெனினின் கூற்றைப் பாருங்கள்; "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது பிரத்தியேகமாக அரசியல் ரீதியில் சுயேச்சை பெறும் உரிமையை, ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து அரசியல் ரீதியில் சுதந்திரமாக எவ்வித நிபந்தனையும் தடையும் இல்லாமல் பிரிந்து போகும் உரிமையை குறிக்கிறது. ஸ்தூலமாக, அரசியல் ஜனநாயகம் என்ற இந்தக் கோரிக்கையின் உட்பொருள், பிரிந்து போவதற்காகக் கிளர்ச்சி செய்ய முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதும், பிரிந்து போகும் தேசிய இனத்தின் பொது வாக்கெடுப்பு மூலமாகப் பிரிந்து போவது பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பதும்தான், எனவே இந்த கோரிக்கையும், பிரிய வேண்டும் - துண்டாக வேண்டும் - சிறு அரசுகள் அமைய வேண்டும் - என்ற கோரிக்கையும் ஒன்றல்ல; எல்லா தேசிய ஒடுக்கு முறைக்கும் எதிராக இடைவிடாத, ஒத்தியைந்த போராட்ட உணர்வை மட்டுமே அது உள்ளடக்கியது. ஒரு ஜனநாயக அமைப்பு பரிபூரணமாகப் பிரிந்து போகும் சுதந்திரத்தை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அளிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாக, குறைந்த ஆர்வத்துடன் இவ்விருப்பம் எழுப்பப்படும்; ஏனென்றால் பொருளாதார முன்னேற்றம் பொதுமக்களது நலன்கள் என்ற இரு நோக்கு நிலைகளினின்று பார்த்தாலும் பெரிய அரசுகளில் மறுக்க முடியாத அனுகூலங்கள் இருக்கின்றன; மேலும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு இந்த அனுகூலங்களும் அதிகரிக்கின்றன".( லெனின் - சோசலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்) குணாளர் சுயநிர்ணய உரிமையைப்பற்றி திரித்து புரட்டுகிறார் என்பதை மேற்கூறப்பட்ட மேற்கோள்கள் தெளிவாக எடுத்துக் காட்ட வில்லையா? தேசிய இனத்தைப் பற்றி அக்கட்டுரையில் அவர் அளித்துள்ள விளக்கம்; ஒரு பொது மொழியையும் பொதுவான பொருளியல் வாழ்வியலையும் பொதுவான பண்பாட்டையும் பொதுவான வரலாற்றையும் பொதுவான தேசிய உளப்பாட்டையும் கொண்டு வரலாற்றடிப்படையில் உருவாகிய நிலையான சமுகமே நாடு என்றாகும் என்னும் விளக்கத்தை மார்க்சியம் தருகின்றது." இவ்வாறு தேசிய இனத்திற்கு விளக்கத்தைத் தந்த அவர் பின்வருமாறு கூறுகிறார்: "உலகெங்கணும் பரவிக் கிடக்கின்ற எட்டு கோடித்தமிழர்களுக்கு முழு இறைமை உரிமையுடன் கூடிய ஒரு தனிநாடு எங்காவது ஒரு மூலையில் கிடைக்காதா என்கின்ற "ஏக்கத்தை" வெளியிடுகிறார். ஒரே மொழி பேசும் - ஆங்கில மொழி பேசும், பிரட்டானியர்களும், அமெரிக்கர்களும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவரா? ஒரே நாட்டினராக முடியுமா? அப்படியிருக்க, ஏன் உலகெங்கணும் வாழும் எட்டு கோடி தமிழருக்கும் ஒரு நாடு கோருகிறார்? ஏகாதிபத்தியங்களால் ஒடுக்கப்படும் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் அவரவர் வாழும் நாட்டு மக்களுடன் சேர்ந்து, அவ்வந்நாட்டு விடுதலைக்குப் போராட வேண்டிய அவசியத்தை உணரவில்லை போலும். என்ன செய்வது? மத நிறுவனங்கள் தரும் "உதவி" மதத்தைவிட போதைதரக் கூடியதாயிற்றே. இனவாத போதை ஏறியவர்களால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வேறாகவும் பிரிவினையை வேறாகவும் பார்க்க முடியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றல்ல என்பதுதான் லெனினியம் என மேற்கூறப்பட்ட லெனினின் வார்த்தைகள் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது.
சுயநிர்ணய உரிமையைப் பற்றி வேறு ஒரு வகையிலும் திரித்து புரட்டுகின்றனர். சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து போகும் உரிமை, தனிநாடு அமைத்துக்கொள்ளும் உரிமை என்பதற்கு மாறாக அதை சுயநிர்வாக உரிமை என்றும் அல்லது அதிக அதிகாரம் என்றும் திரித்து புரட்டுகிறார்கள். இவ்வாறு கூறுவது ஒரு சீர்த்திருத்தவாதமேயாகும். "ஆளும் வர்க்கத்தின் அதிகார அடிப்படையைச் சிதைக்காமல் எது விட்டு வைக்கிறதோ அது சீர்திருத்த மாறுதலாகும்; அந்த அதிகாரத்தை சிறிதும் குறைக்காமல் வைத்திருக்கும் வெறும் விட்டுக் கொடுத்தலாகும். புரட்சிகர மாறுதல், என்பது அதிகாரத்தின் அடிப்படையையே பறித்து விடுகிறது. சீர்திருத்த தேசிய திட்டம் ஆளும் தேசிய இனத்தின் விசேஷ உரிமைகள் அனைத்தையும் அகற்றுவதில்லை; அது பூரணசமத்துவத்தை ஏற்படுத்துவதில்லை; தேசிய ஒடுக்கல் முறையை அதன் எல்லா வடிவங்களிலும் அது ஒழிப்பதில்லை. "சுய நிர்வாகம்" பெற்ற ஒரு தேசிய இனம் "ஆளும்" தேசிய இனத்துக்குச் சமமான உரிமைகளைப் பெற்றிருக்காது என்பதே லெனினியமாகும். நம்நாட்டு திருத்தல்வாதிகள் மட்டுமல்ல, இலங்கை நாட்டு திருத்தல்வாதிகள் உள்ளிட்டு அனைத்து நாட்டு திருத்தல்வாதிகளும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை எனபது பிரிந்துபோகும் உரிமை அல்லது தனிநாடு அமைத்துக்கொள்ளும் உரிமையாகும் என்பதை மறைத்து அதை வெறும் சுயநிர்வாக உரிமையாக தாழ்த்தி விடுகின்றனர். எனவே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை இருவகைகளில் திரித்துப் புரட்டுகின்றனர். சுயநிர்ணய உரிமை என்றாலே பிரிவினைதான் என்பது முதல்வகை புரட்டல். சுயநிர்ணய உரிமையின் உயிராதாரமான பிரிந்துபோகும் உரிமை அல்லது தனிநாடு அமைத்துக்கொள்ளும் உரிமையை மறுத்து அதை வெறும் சுயநிர்வாக உரிமையாக தாழ்த்திவிடுவது இரண்டாவது வகையான புரட்டல். முதல்வகைப் புரட்டல் ஒடுக்கப்படும் தேசிய இனத்து முதலாளித்துவத்திற்கும் சுரண்டும் வர்க்கங்களுக்கும் சேவை செய்கிறதென்றால் இரண்டாவது வகை புரட்டல் ஒடுக்கும் தேசிய இனத்தின் முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவைசெய்யக் கூடியதாகும்.
ஈழ விடுதலைப் புரட்சி வெற்றிபெற ஆதரிப்போம்! இருவகைப் புரட்டலும் தேசிய இனங்களுக்கு சம உரிமையை மறுக்கிறது. இரண்டுமே பாட்டாளி வர்க்கத்திற்கு அந்நியமானது. எனவேதான் நாம் இவ்விருவகைப் புரட்டல்களையும் நிராகரித்துவிட்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றிய மார்க்சிய லெனினிய கொள்கைகளை உறுதியாக பற்றி நிற்கிறோம். ஏற்கனவே கூறப்பட்ட இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையின் தனித்தன்மை வாய்ந்த கூறுகளை கணக்கில் கொண்டும் இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை நாட்டில் இரு இனங்களைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கமும் உழைப்பாளி மக்களும் ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அணியில் நின்று ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கு சாத்தியமற்றுள்ள இன்றைய சூழ்நிலைமையின் காரணமாகவும், இலங்கையின் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு வெற்றி வாகை சூட தமிழ்ஈழ விடுதலைப் புரட்சிதான் வழி என அதனை ஆதரிக்கின்றோம். இந்திய ராணுவத்தின் தலையீட்டை உறுதியாக எதிர்க்கின்றோம்.டிசம்பர் - 1983

No comments:

Post a Comment