இந்திய அரசின் இலங்கை மீதான அரசியல், ராணுவத் தலையீட்டை முறியடிப்போம்!
தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்போம்!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!அறிவுத்துறையினரே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!
இலங்கை அரசின் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்த ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக நாடகமாடிய பாசிச ராஜீவ் கும்பல், ஈழத்தமிழ்ப் போராளிகளுக்கிடையிலிருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி, அப்போராளிகளில் ஒரு பிரிவினரைத் தனது அடிவருடிகளாக மாற்றிக் கொண்டது. மறுபுறம், இலங்கை அரசை நிர்பந்தித்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்கச் செய்து தனது மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ராணுவத் தலையீட்டைச் செய்தது. ஈழத்தமிழருக்கு தனி மாநிலம் அமைத்து அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பதின் மூலம் அரசியல் தீர்வு காண்பதாகக் கூறி, விடுதலைபுலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமெனக் கட்டளை இட்டது இந்திய அரசு. ஆனால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததுடன், இந்திய ஆக்கிரமிப்புப் படையிடம் ஆயுதங்களை ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தனர். இந்திய இராணுவம் தமிழீழத்தில் போலித்தேர்தல் ஒன்றை நடத்தி "மாகாணக் கவுன்சில்" என்ற ஒரு பொம்மை மாநில அரசாங்கத்தை அமைத்தது. விடுதலைபுலிகளோ, இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்து ஒரு நீண்ட யுத்தத்தை மேற்கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய ஆக்கிரமிப்புபடைகளால் நசுக்க முடியவில்லை. இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தில், இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், என்ற கோரிக்கையின் அடிப்படையில் விடுதலைபுலிகள் பிரேமதாசா அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். இந்திய படை திரும்பப் பெறப்படவேண்டும் என்று சிங்கள மக்களிடமிருந்தும், ஈழத்தமிழர்களிடமிருந்தும் வந்த நிர்பந்தத்தின் காரணமாக பிரேமதாசா அரசு இந்தியப் படையைத் திரும்பப் பெறுமாறு இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இந்திய ஆக்கிரமிப்புப் படையால் விடுதலைபுலிகளை நசுக்க முடியவில்லை. இலங்கை மக்களின் எதிர்ப்பு சர்வதேசிய நிர்ப்பந்தம், ஆகியவற்றின் காரணமாக பாசிச ராஜீவ் அரசு படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டது. என்றாலும், இந்திய அரசு தனது அடிவருடிகளையும், ஈழத் தமிழினத் துரோகிகளையும் உள்ளடக்கி தமிழர் விடுதலைப் படை என்ற ஒரு படையை கட்டியமைத்தது. இத் துரோகப் படையை, விடுதலைபுலிகளுடன் மோதச் செய்வதின் மூலம், ஈழத் தமிழர்களுக்கிடையில் ஓர் உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏறப்டுத்த முயன்றது. இதையே ஒரு காரணமாகக் கூறி, இந்திய ஆக்கிரமிப்புப் படையை இலங்கையில் தொடர்ந்து இருப்பதற்கு நியாயம் கற்பித்தது. ஈழத் தமிழ் தேசிய இனத்திற்கு நிலையான அமைதியும், நீடித்த பாதுகாப்பும் கிடைக்கும்வரை, இந்தியப் படை இலங்கையில் தொடர்ந்து இருப்பது அவசியம் என்று பாசிச ராஜீவ் கும்பல் வாதாடியது.எனினும் வேறு வழியின்றி தனது படைகளை சில பிரதேசங்களிலிருந்து திரும்பப்பெற்றது. ஆனால், மறுபுறம் தமிழர் விடுதலைப் படை என்ற தனது அடிவருடிகளின் படையை விடுதலைப் புலிகளுடன் மோதவிட்டது. ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில், 'தமிழ் தேசிய ராணுவம்' என்ற துரோகப் படையை எதிர்த்துப் போராடும் கட்டத்திற்கு விடுதலைபுலிகள் நுழைந்தனர். அனைத்துத் துரோகப் படைகளுக்கும் ஏற்படக் கூடிய நிலைதான் இந்தத் தமிழத் தேசிய ராணுவத்திற்கும் நேர்ந்த்து. விடுதலை புலிகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் முன்னால் தமிழ்த் தேசிய ராணுவம் என்ற அந்த கருங்காலிப்படை புறமுதுகு காட்டி ஓடத் துவங்கியது. இந்திய ஆட்சிப் பீடத்திலிருந்து பாசிச ராஜீவ் கும்பல் தூக்கியெறியப்பட்டது. தேசிய முன்னணி ஆட்சி பீடமேறியது தான் ஆட்சிக்கு வருமுன்பு தேசிய முன்னணி, பாசிச ராஜீவ் கும்பலின் இலங்கைக் கொள்கையைக் கண்டித்து வந்தது. நேபாளம், இலங்கை உள்ளிட்டு தனது அண்டை நாடுகளுடனான உறவை சீரமைக்கப் போவதாகக் கூறிவந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு, பாசிச ராஜீவ் கும்பல் பின்பற்றி வந்த, உள்நாட்டு தேசிய இனக் கொள்கையையும், அண்டை நாடுகளின்பால் பின்பற்றிய விஸ்தரிப்புவாதக் கொள்கைகளையும் தொடரவே விரும்புவதாக அதனுடைய அண்மைக் காலச் செயல்கள் காட்டுகின்றன. இராணுவ ரீதியில், ஈழத்தில் தோல்வியடைந்துவிட்ட ஒரு சூழ்நிலையில், தனது விஸ்தரிப்புவாத நலனுக்கு உகந்த ஒரு புதிய உத்தியைக் கையாள விரும்புகின்றது. இந்திய - இலங்கை நட்புறவு ஒப்பந்தம் என்ற பேரில், தனது நலன்களுக்கு ஏற்ற ஒரு ஒப்பந்தத்தை இலங்கையின் மீது திணிக்க முயல்கிறது. இந்நோக்கத்திற்காக, இந்தியப்படைகள் உடனடியாகத் திரும்பப் பெறாமல் காலங்கடத்துவதற்கும், படைகள் அங்கேயே தொடர்ந்து இருக்கச் செய்வதற்கும் முயல்கிறது. ஈழத்தமிழர்க்கு 'நிலையான அமைதி', 'நீடித்த பாதுகாப்பு' ஏற்படுத்துதல் தனது நோக்கம் என்று கூறி, படைகள் தொடர்வதை நியாயப்படுத்துகின்றது. இதற்கேற்ற வகையில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தனது பொய்ப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழினம் சுயநிர்ணய உரிமையை பெறுவதுதான் அதன் நிலையான அமைதிக்கும், நீடித்த பாதுகாப்புக்கும் உத்திரவாதத்தை அளிக்கும் ஒரே வழி! ஆனால், பாசிச ராஜீவ் கும்பல் மட்டுமல்ல, தேசிய முன்னணி ஆட்சியும் ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை. ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை என்பது, ஈழத்தமிழ் மக்களே போராடிப் பெறவேண்டிய ஒன்று. வேறுயாரோ அவர்களுக்குப் பெற்றுத்தரும் சன்மானம் அல்ல. எந்தவொரு நாட்டின் விடுதலையும், அந்த நாட்டு மக்கள் மட்டுமே சாதிக்க கூடிய ஒன்று. அந்நியரின் தலையீட்டாலோ, ஆக்கிரமிப்புப் படைகளாலோ வழங்கப்படக்கூடியது அல்ல. ஆகையால் இந்திய மக்களும், தமிழக மக்களும் இந்திய ஆட்சியாளர்களின் நரித்தனமான வாதங்களுக்கு செவிசாய்க்கக் கூடாது. ஈழத்தமிழருக்குப் 'பாதுகாப்பு' 'நிலையான அமைதி' என்ற வாதத்தைக் கூறி கருணாநிதி, தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு பல்லக்குத் தூக்கும் பணியைச் செய்கிறார். பாசிச ராஜீவ் அரசாங்கத்திற்கு 'ஒத்து' ஊதியவர்தான் கருணாநிதி. அதற்காக ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்டவரும் கூட தமிழர் நலம் பேசி, அவர் நடிக்கும் நாடகங்களைக் கண்டு மதிமயங்காமல் அவரது வாதங்களை மறுதலிக்குமாறு தமிழக மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். மார்க்சிய - லெனினியத்தை காற்றில் பறக்க விட்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்து உள்நாட்டில் ஒருமைப்பாட்டு பஜனையும், இந்திய ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்புக்கு துதி பாடும் பணியினையும் செவ்வனே செய்துவரும் இடது - வலது போலிக் கம்யூனிஸ்டுகளின் திருத்தல்வாதங்களைப் புறக்கணிப்பதும் நமது கடமையாகும். தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளே...! ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளையும் ஒன்றுபடுத்துவதற்கும், அனைத்து மக்களையும் ஒன்று படுத்துவதற்கும், தமிழீழ விடுதலைக்காகப் போராடும் அமைப்புகளின் ஜனநாயக மற்ற அணுகுமுறை தடையாக இருந்து வருகிறது. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் விடுதலை என்ற அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டு 'ஜனநாயகம்' என்ற அம்சம் புறக்கணிக்கபடுமானால், எவராலும் தங்களின் லட்சியத்தை அடைய முடியாது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில், இதுவரை விடுதலைபுலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விடுதலை இயக்கத்தின் வெற்றிக்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. ஈழத் தமிழினத்திற்கு துரோகம் செய்யும் இந்திய அடிவருடிகளை எதிர்த்த அவர்களது ராணுவ நடவடிக்கைகளும் ஏற்கத்தக்கதே! எனினும், சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் பிற அமைப்புகளை எதிர்த்த அவர்களின் ஜனநாயக விரோதப்போக்கும் ராணுவ நடவடிக்கைகளும், தங்களின் லட்சியத்தை அடைவதற்குத் தடையாகவே இருந்திருக்கிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அவர்களின் தாகமான தமிழ் ஈழத்தை அடைவது அவர்களின் விட்டுகொடுக்க முடியாத லட்சியமாக இருக்க வேண்டுமானால், ஒரு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைத்து, சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அமைப்புகளையும் ஒன்றுபடுத்த முன்வரவேண்டும். இல்லாவிட்டால், இந்த ராணுவ வெற்றிகள் மட்டுமே அவர்களது லட்சியத்தை அடைவதற்கு உத்திரவாதம் அளிக்காது எனச் சுட்டிகாட்ட விரும்புகிறோம். சுயநிர்ணய உரிமை என்ற முழக்கத்தின் பின்னால், அனைத்துப் போராளிகளும் ஒன்றுபடுமாறு அறைகூவி அழைக்கிறோம். தமிழக மக்களே, ஜனநாயகச் சக்திகளே! ஈழத்தில் நிலையாக அமைதியும், ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பும் ஈழத்தமிழினம் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும்போதே சாதிக்க முடியும். அத்தகைய உன்னத லட்சியத்திற்குத் தடையாக உள்ள இந்திய அரசின், அரசியல் - இராணுவ தலையீட்டை முறியடிக்க அணி திரளுமாறு அறை கூவி அழைக்கிறோம். இந்திய அரசே!இலங்கையிலிருந்து இந்தியப்படையை உடனே திரும்பப்பெறு!தமிழ் தேசிய ராணுவம் என்ற கருங்காலிப் படையை கலை!தொலைக்காட்சி, ரேடியோவில் செய்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை உடனே நிறுத்து!தென் ஆசிய மேலாதிக்க விஸ்தரிப்புவாதத்தைக் கைவிடு!அண்டை நாடுகளை அச்சுறுத்தாதே!
தமிழக மக்களே!
இலங்கையின் மீதான இந்திய அரசின் இராணுவ அரசியல் தலையீட்டை முறியடிப்போம்!
தி.மு.க தலைவர் கருணாநிதியே!
ராஜீவின் விஸ்தரிப்புவாதத்தைத் தொடரும் வி.பி.சிங்கிற்கு பல்லக்குத் தூக்காதே!
ஈழப்போராளிகளே!சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்பீர்!
ஜனவரி, 1990.
No comments:
Post a Comment