1992 ஈழ தேசிய ஒடுக்குமுறை இன அழிப்பு யுத்தம் குறித்து
இலங்கை அரசே, இனவெறி யுத்தத்தை உடனே நிறுத்து!
அன்பார்ந்த தோழர்களே!
இதற்கு முன் எப்போதுமில்லாத அளவிற்கு, மிக வெறித்தனமாக மே 28ஆம் தேதியன்று(1992) இலங்கை அரசின் முப்படைகள் யாழ் தீபகற்பத்தின் மீது ஒரு பெரும் தாக்குதலைத் தொடுத்தன. ஆயிரக்கணக்கான பட்டாளத்தினர் இத்தாக்குதல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக அன்னிய நாடுகளிடமிருந்து பெற்ற நவீன இராணுவத் தளவாடங்களையும் கொலைகார ஆயுதங்களையும், குண்டுகளையும் பயன்படுத்தி இலங்கைப் படை இந்த மிருகத்தனமானத் தாக்குதலை நடத்தி வருகிறது.நவீன டாங்கிகளுடன் தரைப்படையும்,ஹெலிகாப்டர் மற்றும் விமானப் படையும், கடற்படையும் இணைந்து புலிகளின் தளங்கள் மீது குண்டுமாறி பொழிக்கின்றன. ஆயுதம் தரித்தோர், ஆயுதம் தரிக்காத சாதாரண மக்கள் என்ற பாகுபாடின்றியும், எந்தவிதமான நெறிமுறையின்றியும் இலங்கை ராணுவம் ஈழத் தமிழ்மக்கள் மீது தொடுத்த இத்தாக்குதலில் ஏராளமான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர். பெரும் தொகையான மக்கள் காயமடைந்தனர். பல்லாயிரக் கணக்கானவர் தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைக்க தங்களின் வீடு வாசல்களை விட்டு வெளியேறினர். தமிழீழ விடுதலை இயக்கத்தை நசுக்கிவிட வேண்டும் என்று எண்ணி ஹிட்லரின் கொலை வெறியை விஞ்சும் விதத்தில் சிங்கள இனவெறியரசு விடுதலை புலிகளின் மீது இத்தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இராணுவத்திற்குக் கொலை வெறியைத் தூண்டுவதற்காக கபட நாடகதாரி பிரேமதாசா தானே நேரடியாகப் பங்குகொண்டு இத் தாக்குதலைத் துவக்கி வைத்தான். இந்திய அரசு விடுதலைபுலிகளைத் தடை செய்த சில நாட்களில் இலங்கை அரசு இத்தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இலங்கை அரசு புலிகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு இந்திய அரசு விடுதலை புலிகளின் மீது விதித்துள்ள தடை எவ்வளவு ஊக்கம் அளித்திருக்கிறது என்பதை ஊகித்துக் கொள்ளலாம். விடுதலைபுலிகள் இயக்கத்தின் தலைவர்கள் பிரதேசங்களில் முதலில் இலங்கைப் படையை இறக்கிவிடுவது; அதற்கு பிறகு, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இத்தாக்குதல்களில் இலங்கை படைக்கு ஆதரவாக இந்தியாவின் சிறப்புப் படைகளைப் பங்குகொள்ள வைப்பது என்பது இந்திய அரசாங்கத்தின் சதி திட்டம், இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இலங்கை கடற்கரைக்கு அருகாமையில் வங்கக்கடலில் இந்திய அரசு தனது இரண்டு கடற்படைக் கப்பல்களைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது. 1990 மே மாதம் இலங்கை இனவெறியரசு தமிழீழ விடுதலை இயக்கத்தையும், விடுதலை புலிகள் இயக்கத்தையும் நசுக்கு வதற்காக தமிழீழ மக்கள்மீது ஒரு இனப்படுகொலை யுத்தத்தை தொடுத்தது. இரண்டாண்டுகளாக இலங்கையரசு நடத்திவரும் இனப் படுகொலை யுத்தத்தால் தமிழீழ மக்கள் சொல்லொண்ணாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நிலமைகளில் இந்த மக்கள் எப்படித்தான் வாழ்கிறார்களோ என்று காண்போர் வேதனை அடையும் அளவிற்கு தமிழீழ மக்களின் வாழ்நிலைமைகள் தாழ்த்தப் பட்டுவிட்டது. சிங்கள இனவெறியரசு இந்த கொலை வெறி யுத்தத்தால் தமிழீழத்தின் சமூக வாழ்வை சிதைத்து விட்டது.கடந்த இரண்டாண்டுகளில் இலங்கை இராணுவம் யாழ்மக்கள் பெருமைப் படக்கூடிய சமூகச் செல்வங்கள் அனைத்தையும் அழித்துவிட்டது. இரவு நேரங்களில் தீவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளின் மீது தாக்குதல் தொடுப்பது பகலில் ஆகாய விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் தொடுப்பது இலங்கை ராணுவத்திற்கு வழக்கமான ஒன்றாகி விட்டது. இரண்டாண்டுகளாக இலங்கை அரசு யாழ் தீபகற்பத்தின் மீது அதிகாரப் பூர்வமல்லாத முறையில் பொருளாதாரத் தடைவிதித்துவருகிறது. விரும்பும்போதெல்லாம் இலங்கையரசும், இராணுவமும் யாழ் தீபகற்பத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வந்தன. ஒரு முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் அது பல நாட்களுக்கு நீடிக்கும், உயிர் காக்கும் மருந்துகள் உள்பட அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் பலபொருட்கள் இப்பகுதிக்கு விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டன. மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இப்பிரதேசத்துக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களில் 50 சதவீதம் கூட இலங்கை அரசு வினியோகம் செய்வதில்லை. பெட்ரோல், இரசாயன உரம் இப்பிரதேசத்திற்கு விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டன. ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு அத்தியாவசியப் பொருட்கள் யாழ்பாணத்திற்கு செல்வதை இந்திய அரசு தடைச் செய்துள்ளது. ஒரே ஒரு பெரிய மருத்துவமனை மட்டுமே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடத்தி வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறைத்தான் மருந்துகள் வருகிறது. பல சிறிய மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் படுக்கை வசதியோ, போதிய மருத்துவ வசதிகளோ கிடையாது. இவ்வாறு மக்களுக்கு மருத்துவ வசதிகள்கூட மறுக்கப்படுகின்றன. யாழ்பாணத்தை விட வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இங்கு சண்டை இடைவிடாது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்பிரதேசத்தின் மூலம்தான் யாழ்பாணத்திற்குச் செல்ல வேண்டும். இவ்வழியில்தான் யாழ்பிரதேசத்திலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். ஆகையால் இப்பிரதேசத்தின் வழியாகப் பயணம் செய்த சாதாரண மக்கள் ஆயிரக்கணக்கில் சண்டையில் பலியானார்கள். யாழ்பாணத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இரு இனங்களுக்கு மிடையில் சமூகப் பொருளாதார உறவுகள் அனைத்தையும் இலங்கை அரசு துண்டித்து விட்டது. இலங்கையில் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு அதிகாரப் பூர்வமல்லாத தகவலின்படி தற்போது 1.6 மில்லியன் அகதிகள் இருப்பதாக தெரிகிறது. தீவுகளை இலங்கை படை கைப்பற்றிய பிறகு பத்தாயிரம் மீனவர் குடுமபங்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறி அகதிகள் முகாமுக்குச் சென்று விட்டனர். சிங்கள இனவெறி அரசு இரண்டாண்டுகளாக தமிழீழ மக்கள் மீது ஒரு கொலை வெறி யுத்தம் நடத்திய பிறகும்கூட தமிழீழ மக்களை அடிப்பணியச் செய்ய முடியவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை நசுக்கவும் முடியவில்லை. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் இலங்கை இராணுவத்தைச் சேந்த 2300 சிப்பாய்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 7300 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 4000க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இராணுவத்திலிருந்து வெளியேறி இருக்கின்றனர். இவையனைத்தும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இருப்பினும் சிங்கள இனவெறி அரசு ஒரு கொலைவெறி யுத்தத்தின் மூலமே தமிழீழ இனப்பிரச்சனையை தீர்க்க முயல்கிறது. வட இலங்கையின் சில பகுதிகளில் புதன்கிழமை (15.7.92) முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் ஏற்கனவே கூறப்பட்ட இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கந்துளை டிவிஷனில் வசிக்கும் மக்கள் தர்மபுரம் என்ற இடத்திலுள்ள பள்ளிக்குச் செல்லவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியில் உள்ளவர்கள் விஸ்வமடுவில் கூட்டுறவு பால் சேகரிப்பு மையத்திற்குச் செல்லவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு அறிவிப்பு வரும்வரையில் மக்கள் புதுக்குடியிருப்பு - பரந்தன் பிரதான சாலையில் இரு பகுதிகளிலும் ஒரு கி.மீ. தூரத்திற்கு அப்பால் செல்லவேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது. யாழ்குடா பகுதிகளில் பல இடங்களுக்கு எவரும் செல்லக்கூடாது என ராணுவம் பிரகடனம் செய்துள்ளது. இது தமிழீழ போராளிகளுக்கு எதிராக மற்றொரு தாக்குதலை நடத்த சிங்கள இனவெறி அரசும் ராணுவமும் திட்டமிட்டிருக்கின்றன என்பதையே குறிப்பதாக உள்ளது. சிங்கள இனவெறி அரசு தமிழீழ தேசிய இன விடுதலைப் போரையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நசுக்கும் நோக்கத்துடன் தமிழீழ மக்கள் மீது முடிவில்லாமல் ஒரு கொலை வெறியுத்தம் தொடர்ந்து நடத்தப்படுவது உடனடியாய் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுப்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக வாதிகளின் கடமையாகும். இந்த தேசிய ஒடுக்குமுறை யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசு அங்கீகரிக்கவேண்டும். ஈழத்தமிழ் இனம் இலங்கை அரசுக்குள் இருப்பதா அல்லது பிரிந்து சென்று தனிநாடு அமைத்துக் கொள்வதா என்பது ஈழத் தமிழ் மக்களிடையில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரலெழுப்பவேண்டும் என தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். சிங்கள அரசுக்குத் துணை போவதை இந்திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் இந்திய அரசு சிங்கள இனவெறி அரசின் இன ஒடுக்கு முறை யுத்தத்தை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும் என இந்திய அரசிடம் கோர வேண்டும் என தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கை அரசே!
இனவெறி யுத்தத்தை உடனே நிறுத்து!
தமிழ் ஈழத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
தமிழீழ பிரச்சினைக்கு தீர்வுகாண கருத்து கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!
இந்திய அரசே!
இனவெறி அரசுடன் சேர்ந்து நடத்தும் கூட்டு ஒடுக்கு முறையை நிறுத்து!இலங்கையின் மீது பொருளாதாரத்தடை கொண்டுவா!
ஜூலை, 1992.
No comments:
Post a Comment