Tuesday 17 March 2009

சந்திரிக்கா ஆட்சியின் ஈழப்படுகொலையை எதிர்த்து!

சந்திரிக்கா ஆட்சியின் ஈழப்படுகொலையை எதிர்த்து!
ஈழப்படுகொலையை எதிர்ப்போம்!
இந்திய அரசே!
இலங்கை அரசுக்கு அளிக்கும் இராணுவ உதவியை நிறுத்து!
அன்பிற்குரிய தமிழக மக்களே, ஈழத் தமிழ் மக்கள் மீது இனவெறி இலங்கை அரசு முப்படைத் தாக்குதலை தொடுத்து உள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், கோவில்கள், மக்கள் வாழுமிடங்களென எல்லா இடங்களின் மீதும், விமானங்கள் குண்டு மழை பொழிந்துவருகின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த இனப்படுகொலைப் பாசிச யுத்தத்தை உலக மக்கள் அனைவரும் ஒரு மனதாகக் கண்டித்துள்ளனர். தமிழகத்திலும் இலங்கை அரசின் இந்த படுபாதகச் செயலைக் கண்டித்து ஜனநாயக உள்ளம் கொண்டோர் எதிர்ப்புக் குரல் எழுப்பிவருகின்றனர்.
இந்த யுத்தத்திற்கு யார் காரணம்? இலங்கையில் புதிதாகப் பொறுபேற்றுள்ள சந்திரிகா அரசு அமைதியை, ஏற்படுத்துவதே தன் நோக்கம் என அறிவித்தது. ஜனவரி 1 முதல் போர் நிறுத்தம் அமுலாகியது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கவில்லை. அதை ஒரு இனமாகக்கூட அங்கீகரிக்க தயாராக இல்லை. போர் ஓய்வு என்று சொல்லிக் கொண்டு ஈழத்தமிழினத் தேசிய விடுதலைப்போரை ஒடுக்குவதற்கு, இலங்கை அரசின் ராணுவ, அரசியல், பொருளாதார வலிமையைக் கூட்டிக் கொள்வதற்கான தாயாரிப்புகளில் ஈடுபடுவது என்று வழக்கமாக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே செயல்தந்திரத்தை சந்திரிகா அரசும் பின்பற்றியது. இடைப்பட்ட நாளில் ஏகாதிபத்திய நாடுகளை அணுகி புலிகளை ஒடுக்க தனக்கு உதவ வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தது. தமது படைகளையும் ஏகாதிபத்தியங்களின் உதவியோடு நவீனப் படுத்திக் கொண்டது. தான் மட்டும் 'அகிம்சா புத்திரி' போலவும், புலிகள்தான் இரத்தவெறி பிடித்தவர்கள் போலவும் வேடம் போட்டது. பிச்சை போல் போட்டதை வரம் எனப் பெற்று, மனநிறைவு அடைந்து அடிமை வாழ்வை அட்டியின்றி தொடரவேண்டுமென ஆதிக்க இனத்திற்கே உரிய ஆணவத்தோடு புலிகளை நிர்பந்தித்தது சந்திர்கா அரசு. அதன் சுயரூபத்தை உணர்ந்த புலிகள், ஏப்ரல் - 19க்குள் தமது நியாயமான கோரிக்கைகளை ஏற்கவேண்டுமெனக் கோரினர். ஆனால் அகிம்சா புத்திரி சந்திரிகாவுக்கோ பாரிசுக்கு பறந்து போவதில் இருந்த ஆர்வம் தனது உள்நாட்டுப் பிரச்சினையை முறையாகத் தீர்ப்பதில் இல்லை. எனவே தான் பயனற்ற பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவந்தனர் புலிகள். ஏப்ரல் இறுதியில் இரண்டு விமானங்கள் வீழ்த்தப்பட்ட செய்தியினைப் படித்த பின்புதான் பதறியபடி பாரிசிலிருந்து பறந்து வந்தார் சந்திரிகா. பேச்சுவார்த்தையை முறித்தது புலிகள்தான் என ஒப்பாரி வைத்தார். ஒடுக்கப்படும் இனத்தின் எந்தவொரு நியாயமான கோரிக்கையும் சந்திரிகாவிற்கு பேராசையாகவே படுகிறது. இப்படிப்பட்ட இவரா அமைதியை ஏற்படுத்தப்போகிறார்? மாறாக, இவர் போட்ட அமைதிவாத முகமூடி வெகு சீக்கிரமே கிழிந்து, உண்மையான முகமாகிய இனவெறிப் பாசிச முகம் பளிச்சென்று உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டு விட்டது புலிகளால். இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாத நிலையில்தான் பேச்சு வார்த்தை நாடகத்தை சந்திரிகா அரசு தானே முன்வந்து துவக்கியது. அப்படிப்பட்ட இலங்கை அரசுக்கு இப்போது மட்டும் யுத்தம் புரிய எப்படி துணிச்சல் வந்தது?
ஏகாதிபத்தியங்களின் ஆதரவில் துணிச்சல் பெற்ற சந்திரிகா "ஒன்றுக்கும் உதவாத படை சிங்களப் படை" என்று பேட்டிகொடுக்கும் அளவுக்கு நொந்துபோன சந்திரிகா, இன்று புலிகளை கூண்டோடு ஒழிக்காமல் இந்த யுத்தத்தை நிறுத்தப்போவதில்லை என்று முழங்குகிறார். ஏகாதிபத்தியங்கள் தொடுத்த உத்தரவாதத்தால் இவ்வாறு முழங்குகிறார். ஆஸ்திரேலியா நிதி உதவி தருகிறது. கனடா உதவிக்கரம் நீட்டுகிற்து. எல்லாவித உதவிகளையும் செய்யத் தயாரென ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அறிவிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக புலிகளை சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள் பட்டியலில் சேர்த்ததின் மூலம் தனிமைப் படுத்தி ஒடுக்க அமெரிக்கா உதவுகிறது. கூடவே ஆயுத உதவி செய்கிறேன் என்றும் அறிவித்து உள்ளது. இத்தனை பெரிய உதவிகள் புடைசூழ, சந்திரிகா ஈழத்தமிழினத்தின் மீது இனப்படுகொலைப் பாசிச யுத்தத்தைத் தொடுத்துள்ளார். ஒரு புறம் குண்டு குண்டு மழை பொழிந்துவதும், மறுபுறம் ஈழத் தமிழர் இனப் பிரச்சனைக்கு அமைதி தீர்வு காண இலங்கை அரசின் சமரசத்திட்டம் என்று அரசியல் மோசடி செய்வது என்பது சந்திரிகா அரசாங்கத்தின் இன்றைய தந்திரமாக இருக்கின்றது. எத்தகையது அந்தத் திட்டம். 'அசோசியட்டஸ் பிரஸ்' செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை கிடைத்துள்ள ஆவணம் கூறுகிறது, "கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்ல¦ம்களும் அண்மையில் உள்ள சிங்களர் பெருமபான்மையாக உள்ள மாகாணங்களுடன் இணைக்கப்படுவார்கள். தமிழர் பெரும்பான்மையாக உள்ளபகுதிகள் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்படும்.. எட்டு மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்" என்பதாக இத்திட்டம் உள்ளது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களை சிங்கள மக்களுடன் இணைக்கும் திட்டமாக, தமிழ் தேசிய இனத்தைப் பிரித்து, தேசிய இனம் என்ற ஜனநாயக கோட்பாட்டுக்குப் பதிலாக, பாசிச மதவாதக் கோட்பாட்டை பின்பற்றி ஈழத்தமிழ் தேசிய சுய நிர்ணய உரிமை போராட்டத்தை நசுக்கும் சந்திரிகாவின் தந்திரத்தையே இது காட்டுகின்றது. தமிழ்த் தேசிய இனத்தின் ஜனநாயகக் கோரிக்கையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு பதிலாக "அதிக அதிகாரம்" என்ற சமரசத் திட்டத்தை புகுத்துவதின் முலம் பாசிச அரசைக் கட்டிக்காக்க முயல்கின்றது. இத்திட்டமொன்றும் புதுமையானது அல்ல. இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் தேசிய இனப் பிரச்சினைக்கு, ஜனநாயக வழியில் தீர்வு காண மறுத்துக் கடைப்பிடித்த அதே பாசிச வழிமுறையைத்தான் சந்திரிகா அரசும் கடைப்பிடிக்கின்றது என்பதை இது தெளிவாகக் காட்டுகின்றது.
புலிகள் எதிர்த்துப் போராடுவது சந்திரிகா அரசை மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் சேர்த்துத்தான். ற தமிழ் ஈழத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஈழத் தமிழ் இனத்திற்கு தமிழ் ஈழமே சரியான தீர்வு, அதை அடையும் வரை ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டம் ஓயப் போவதில்லை. பௌத்த மதவாத சிங்கள இன வெறி அரசு, ஈழத் தமிழினத்தின் மீது காலம் காலமாக பாசிசத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இன்றுவரை ஈழத் தமிழினத்தின் வாளும், கேடயமுமாக களத்தில் உறுதியுடன் நின்று எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர் புலிகள். இதற்கு முன், இலங்கை அரசு தொடுத்த யுத்தங்களை விட, இப்பொழுது தொடுத்துள்ள யுத்தம் அளவிலும் பண்பிலும் வேறுபட்டது. முப்படைத் தாக்குதலுடன் பெரிய அளவில் படைகளைக் குவித்து நடத்தப்படும் யுத்தம் என்ற வகையிலும், ஏகாதிபத்தியங்களின் பூரண ஒத்துழைப்போடு நடத்தப்படும் யுத்தம் என்ற வகையிலும் வித்தியாசமானதுதான். இந்த பாசிசப் போரை எதிர்த்து, புலிகள் நடத்தும் நியாயமானவிடுதலைப் போர், சந்திகா அரசை எதிர்த்து மட்டுமல்ல ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துத்தான். உலகமே இன்று கூர்மையாக புலிகளின் தாக்குதலை கவனித்து வருகின்றது. இராணுவ ரீதியில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என புலிகள் நிரூபித்து வருகின்றனர். முப்படைத் தாக்குதல் என்றாலும் புலிகள் அசரவில்லை. கடுமையான பதிலடி தந்துகொண்டிருக்கிறார்கள். புலிகள் கொடுக்கும் இந்த அடி, சந்திரிகா அரசுக்கு மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களுக்கும் தான். குறிப்பாக, அமெரிக்காவின் தெற்காசிய நலன்கள் மீது விழும் அடி இது. நவீனகாலனிய மற்றும் அரைக்காலனிய நாடுகளில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை - அரசியல் சுதந்திரம் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக மட்டும் மறுக்கப்படவில்லை. அந்நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்காகவும் அது மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்நாடுகளில் நவகாலனிய மற்றும் அரைக் காலனிய அரசமைப்பை நில நிறுத்தும் பொருட்டு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு, அரசுகள் மேற்கொள்ளும் பாசிச ஒடுக்கு முறைக்கு ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரவு அளிக்கின்றது. இந்நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்திய ஆதரவு இல்லாமல் தேசிய ஒடுக்கு முறையில் இறங்குவதில்லை. தேசிய விடுதலைக்காகப் போராடுவோர் தனது நாட்டின் ஆளும் வர்க்கங்களை எதிர்த்த மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போரிட்டுத்தான் விடுதலையைப் பெற்வேண்டியுள்ளது என்பதை ஈழ விடுதலைப் போராட்டம் நிரூபித்துக் கொண்டுள்ளது.
இலங்கை அரசின் பாசிச யுத்தத்திற்கு துணை போகும் இந்திய அரசு இலங்கை அரசின் பாசிச யுத்தத்தை எதிர்த்து உலக மக்கள் அனைவருமே ஒருமித்து கண்டித்து வருகிறார்கள். ஆனால் இந்திய அரசோ தனது விஸ்தரிப்பு வாதக் கள்ளக்கனவுகளுடன், இலங்கை அரசின் பாசிச யுத்தத்திற்கு துணையாக பாக் ஜலசந்தியில் போர்க் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளது. தனது விமானங்கள் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளின் மீது பறந்து போய் புலிகளை வேவு பார்த்து சந்திரிகா அரசுக்கு தகவல் தருகிறது. இலங்கைப் படைக்கு ஆயுத பயிற்சி தர ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழகத்தின் தென் எல்லையில் இராணுவத்தை குவித்து வருகின்றது. ஆக இலங்கையின் முப்படைத்தாக்குதல் அங்கே! இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் இங்கே!! மேலாதிக்க வெறியுடன் இந்திய அரசு இலங்கை அரசின் பாசிசயுத்தத்திற்கு தரும் ஆதரவை முழு மூச்சுடன் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். உடனடியாக, குமரி எல்லையில் குவிக்கப்பட்டுள்ள முப்படைகளையும் வாபஸ் பெற வேண்டுமென குரல் கொடுப்போம். இலங்கை அரசுடனான அனைத்து அரசியல் பொருளாதார உறவுகளைத் துண்டிக்கும் படி நிர்ப்பந்திப்போம்.
நீண்ட மக்கள் யுத்தப்பாதையே விடுதலை போராட்டத்திற்கு வெற்றி ஈட்டித் தரும் பாதை இந்திய "அமைதிப்படைக்கே" தண்ணி காட்டிய புலிகள், இன்று இலங்கையின் முப்படைகளுக்கும் மரணஅடி தந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கைப் படையில் சேர்வதற்கு இளைஞர்கள் தயாராக இல்லை. அப்படியே சேர்ந்தாலும் பயிற்சிக்காலத்திலேயே ஓடி விடுகின்றார்களாம். புலிகளை எதிர்த்துச் சென்றால் மரணம் நிச்சயம் என்பதை இலங்கை படையினர் உணர்ந்துள்ளார்கள். ஏகாதிபத்தியங்கள் கொடுத்த நவீன ஆயுதங்களை ஏந்திக் கொண்டு 'யாழ்ப்பாணம்' நோக்கி முன்னேறப் போவதாக பிதற்றுகின்ற இலங்கைப் படையின் தளபதிகளைப் பார்த்து முன்னாள் தளபதி கூறுகிறார், "புலிகளின் தந்திரம் தெரியாதவர்கள் நீங்கள். புலிகளை சுற்றி வளைத்து நசுக்குவதாகக் கூறிக் கொண்டு, நீங்கள் புலிகளின் சுற்றி வளைப்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். முன்னேற விட்டு பின்னர் தீவிரத்தாக்குதல் தொடுப்பார்கள். தகுந்த ஏற்பாடுகள் இன்றியாழ்ப்பாணம் நோக்கி முன்னேற வேண்டாம்" என எச்சரிக்கின்றார். கடைசியாக கிடைத்த தகவல்படி முன்னேறிக் கைப்பற்றிய பகுதிகளையும் கைவிட்டு விட்டு கடுமையான அடி வாங்கி, மீண்டும் புறப்பட்ட இடமான பலாலி தளத்திற்கே இலங்கை படையினர் போய்ச் சேர்ந்ததாகத் தெரிகின்றது. இந்த ஒரு யுத்தம் மட்டுமல்ல இது போன்ற பலயுத்தங்களை இன்னும் ஈழத்தமிழினம் காண வேண்டி வரலாம். என்றாலும் இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே. நீண்ட மக்கள் யுத்தப் பாதைதான் விடுதலைப் போராட்டத்திற்கு உகந்த பாதை, வெற்றிக்கு உத்தரவாதமான பாதை என்பதை புலிகள் நடத்தும் இந்த நியாயமான விடுதலைப் போர் மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியுள்ளது.
இலங்கை அரசை எதிர்த்து குமுறி எழுகிறது தமிழகம் இலங்கை அரசின் முப்படைத்தாக்குதலை எதிர்த்தும், புலிகளின் தலைமையிலான ஈழ விடுதலைப் போரை ஆதரித்தும், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும், கொடும்பாவி எரிப்புகளும் கட்சி ரீதியாகவும், தன்னிச்சையாகவும் நடைபெற்றன. இதை, புலிகள் தடைச் சட்டத்தின் மூலமோ, தேசவிரோத சட்டங்கள் மூலமோ அடக்கி ஒடுக்கிவிட மத்திய, மாநில அரசுகள் சதி ஆலோசனை செய்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள தேசிய இன விடுதலை இயக்கத்தை ஆதரிப்போரும், ஜனநாயக சக்திகளும், குறிப்பாக இளைஞர்களும் இந்திய அரசின் சதிச் செயல்களுக்கு அடங்கிப் போவோர்களாக இல்லை. ஜனநாயக சக்திகளின் நிர்ப்பந்தம் காரணமாகவும், கட்சி அணிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவும், தமிழகத்திலுள்ள, தேசிய இன உரிமைக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சிகள், ஈழ மக்களின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் யுத்தத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் தமிழீழத்தை ஆதரித்தும், இந்திய தலையீட்டை எதிர்த்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாட்டாண்மையை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தூதரகத்துக்கு முன்னால் ம.தி.மு.க, பா.ம.க, தி.க போன்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி சந்திரிகா அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளன. அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் கூட கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது பா.மா.க ஈழ விசயத்தை எவ்வளவுதான் தவிர்க்க பார்த்தாலும் தவிர்க்க முடியாமல் இலங்கை அரசின் முப்படைத் தாக்குதலைக் கண்டித்து தி.மு.க கூட ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழகமெங்கும் நடத்தியது. இவையெல்லாம் நல்லதுதான். எனினும் நாடாளுமன்ற சந்தர்ப்ப வாதத்திலும் சீர்திருத்தவாதத்திலும் மூழ்கிக் கிடக்கும் இக்கட்சிகள், தனது சொந்த தேசிய இனமான தாய்த் தமிழகத்தின் சுய நிர்ணய உரிமையை அடைவதை நோக்கமாகக் கொள்ளாத இக்கட்சிகள், ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்தும், ஏகாதிபத்திய வாதிகளின் ஆக்கிரமிப்பு செயல்களை எதிர்த்தும் உறுதியாகத் தொடர்ந்து போராடுமென்று சொல்வதற்கில்லை. ஈழத்தமிழின பிரச்சினை குறித்து அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை வெளியிட்டுள்ள கருத்துக்கள் அது, தான் எப்போதும் பெரும் தேசிய வெறியின் காவலன் என்பதை உறுதிப்படுத்துகிறது. இலங்கை ஒற்றுமையின் அடிப்படையில்தான் ஈழத் தமிழின பிரச்சினை தீர்க்கப் படவேண்டும் என்று அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கூறுகிறார். எத்தகைய சூழ்நிலையிலும் ஒரு தேசிய இனம் தனிநாடு அமைத்துக்கொள்வதற்கு போராடக்கூடாது என மார்க்சியம் கூறுகிறதா? திருமணமான பிறகு கணவன் பெண்பித்தனாக, குடிகேடனாக, துன்புறுத்துபவனாக, ஒடுக்கு முறையாளனாக இருந்தாலும், எத்தகைய ஒரு நிலைமையிலும் ஒரு பெண் விவாகரத்து கோரக் கூடாது என்று சொல்வதுபோல்தான் அதன்வாதம் இருக்கிறது. நூறு ஆண்டுகளானாலும் ஈழத் தமிழினப்போர் வெல்லாது என்று வாதிடுகிறது. ஆனால் ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் நூறு ஆண்டுகளானாலும் பிரச்சினை தீராது. நூறு ஆண்டுகளானாலும் ஈழ விடுதலைப்போரை ஒடுக்க முடியாது. இதனால் அந்நாட்டில் வர்க்கப்போராட்டத்திற்கான சிறந்த நிலைமைகள் உருவாகாது என்பது மட்டுமல்ல, அது பின்னுக்குத் தள்ளப்படும். மார்க்சு காலத்தில் எழுந்த அயர்லாந்து விடுதலைப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. "ஈழத்தமிழின பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், பிரபாகரன் அழிக்கப்பட்டாலும் வேறு ஒருவர் தோன்றுவார், எனவே இதற்கு அரசியல் ரீதியில் தீர்வு கண்டாகவேண்டும்" என்று கூறும்படி சந்திரிகாவே நிர்பந்திக் கப்பட்டிருக்கிறார். இந்த வரலாற்று உண்மை 'மார்க்சிஸ்ட்' கட்சிக்கு எங்கே புரியப்போகிறது. திருத்தல்வாதிகளுக்கே உரிய 'வரலாற்றுக் கடமையை' ஆற்றி அது மடியவேண்டும் என்பது ஒரு நியதி. இந்த நியதியை 'மார்க்சிஸ்ட் கட்சி' யால் மீற முடியாது.ஈழத் தமிழினத்தின் சுய நிர்ணய உரிமையை நசுக்குவதற்கு துணைபோகும் இந்திய அரசையும், ஏகாதிபத்தியவாதிகளின் சதிச் செயலையும் எதிர்த்துப் போராடுவது தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளின் தவிர்க்க இயலாத கடமையாகும். புலிகளை ஆதரிப்பது துரோகம், ஈழ விடுதலையை ஆதரிப்பது பாவம் என மத்திய, மாநில அரசுகளும், அவைகளின் கைக்கூலிகளும் எழுப்பியிருக்கும் தடைச்சுவரை தூள்தூளாக்கிவிட்டு, ஈழமக்களின் விடுதலைப் போர் வெல்கவென்றும், இனவெறி அரசு ஒழிகவென்றும், தமிழீழம் மலர்கவென்றும் தமிழகமெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும். ஈழப் போருக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.ஈழ மக்களின் தேசிய விடுதலைக்கெதிரான ஏகாதிபத்தியவாதிகளின் சதிகளை முறியடிப்போம்!இந்திய அரசே! இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கு!பிரபாகரனை கைது செய்யும் நடவடிக்கையை கைவிடு!
என்ற முழக்கங்களின் பின் அணிதிரளுமாறு தமிழக மக்கள் அனைவரையும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அறைகூவி அழைக்கிறது.

No comments:

Post a Comment